Monday, May 31, 2010

கே.என்.செந்தில் - துல்லிய காட்சிகளின் பதிவாளர்


சசி


நம் சிறுகதைகளின் பல்வேறு வெளிப்பாடுகளில் நகல் எடுத்தது போன்ற வகைப்பாட்டுக்கு முன்பு நல்ல வரவேற்பு இருந்தது.ஆனால் இப்போது பேசப்படுகின்ற படைப்புகளில் யதார்த்தவாதத்தை கடந்த புனைவுத்தன்மை கொண்ட படைப்புகளே அதிக இடம்பெறுகின்றன.முழுமையான யதார்த்தவாத கதைகளுக்கு இனி இடமில்லை என்றொரு கருத்து பரப்பப்படுகிறது.இச்சூழலில் யதார்த்தவாதத்தை தன் சொல்முறையாக கொள்பவர்கள் கொஞ்சம் பின்னால் நிற்பவர்களாக கருதப்படுகிறார்கள்.அவர்கள் அப்டேடட் [UPDATED] ஆக இல்லை என்று கட்டமைக்கப்படுகிறது.இயல்பான நடைமுறை சம்பவங்களை கருக்களாக தேர்வு கொள்கிறவர்கள் கூட வேண்டுமென்றே சொல்முறையில் குழப்பியடிக்கிறார்கள் [இதற்கு சரியான உதாரணம் எஸ்.செந்தில்குமாரின் கதைகள்].
இந்நிலையில் இன்று யதார்த்தமான கதைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்ன ? என்ற கேள்வியோடு கே.என்.செந்திலின் ' இரவுக்காட்சி ' யை அணுகலாம்.
தொகுப்பில் நல்ல கதைகளாக நான் கருதுவது தலைப்பு கதையான இரவுக்காட்சி,காத்திருத்தல்,வருகை,கிளைகளிலிருந்து ஆகியவைகளைத்தான்.


முதலில் இரவுக்காட்சி :
நகரத்தின் ஒரு இரவை அதன் இயல்போடும் ,கோரங்களோடும் மிக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.அந்த களத்தில் நின்று கொண்டிருக்கும் மனநிலையை நமக்கு ஏற்படுத்துவதான நடை.எங்கும் ஒரு தடையோ,மொழியை சுற்றி இழுத்துச்செல்வதோ வளைத்து சொல்வதோ இல்லாமல் நேர்த்தியாய் விவரிக்கப்பட்டிருக்கிறது.கதையின் மூடுக்கு தகுந்தபடி வாக்கிய அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்.ஒரு விஷயத்தை மிகச்சரியாக உணர்த்துவது என்பது இந்த கதையில் முதல் வரியிலேயே புலப்படுகிறது.

'ராட்சதக் கண்ணாடியொன்று தரையில் விழுந்து நொறுங்குவது போன்ற சப்தம் கேட்டதும் மின்சாரம் தடைபட்டது.' நானும் கூட சில சமயங்களில் அடைமழை நாளில் ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்து தீப்பொறி பறக்கும் காட்சியை அவதானித்ததுண்டு.அந்த சத்தத்தை வாசகனுக்கு கடத்தும் சரியான வாக்கியத்தை,எந்த உதாரணத்தை கொண்டு சொல்வது என்று யோசித்ததுண்டு. ' ராட்சதக் கண்ணாடியொன்று தரையில் விழுந்து நொறுங்குவது' என்னும் உவமானம் கூர்மையான வெளிப்பாடு.இங்கு இவர் தேர்ந்து கொண்ட இரவு கூட நிலவொளியுள்ள இரவு அல்ல.ஒருவேளை விளிம்பு நிலையாளர்களை சந்திக்கும் நமக்கு அவர்களின் இருள்நிலையை காண,அந்த சூழலின் தாக்கத்தை உள்வாங்க நிலவொளி இடையூறாக இருக்கும் என்று தோன்றியதாலோ என்னவோ அமாவாசைக்கு பிந்தைய இரவையே தேர்ந்து கொண்டிருக்கிறார்.நான் எப்பொழுதும் வலியுறுத்தும் ஒன்று இந்த கதையில் மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.


கதையின் மூடுக்கு தகுந்த மொழி மற்றும் பிற TOOLS ஐ சரியான இடத்தில் அவசியம் கையாள வேண்டுமென்பதே அது.இங்கே அமாவாசைக்கு அடுத்த இரவு சரியான TOOL என்றே கருதுகிறேன்.இங்கே எல்லாமே துல்லியமாக உணர்த்தப்படுகிறது.இரவு நேர கடை,மது விடுதி,காவல்துறையினரின் ரோந்து,விசாரிப்பு,வசூலான பணத்தை பிரிக்கும் பிச்சைக்காரர்கள்,பணம் பறிப்பவர்கள்,சினிமா நாயக ஆராதகர்கள் தங்களுடைய தலைவனின் கட் அவுட் நிறுவுவது,பாலத்திற்கு அடியில் நடக்கும் விபச்சாரம் - இந்த இடத்தில் புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நபர்களின் சப்தங்களை துல்லியமாக பின்வருமாறு பதிவு செய்கிறார்,'கழிப்பறையில் மலச்சிக்கல்காரனிடமிருந்து எழும் முக்கல்போல ஆணிடமிருந்தும் பிரம்மாண்டமான அருவியின் அடியில் குளிக்கும்போது உண்டாகும் திணறல்போலப் பெண்ணிடமிருந்தும் மூச்சுக் காற்று வெளிப்பட்டது.' பலரும் சொல்லியது போல பாலியலை கையாளும்பொழுது கவனமும் நுட்பமும் தேவை.செந்தில் நுட்பமாகவே பதிவு செய்திருக்கிறார்.காட்சி என்று மட்டுமில்லை,மனித மனத்தின் இயல்பு மேற்கூறிய வாக்கியத்தை தொடர்ந்து வருகிறது.அது 'அவன் என்னைக் கூட்டிக்கொண்டு நடந்தான். இருவரும் நிர்வாணமாக இருந்தார்களா எனக்கேட்டுவிட்டு ஆவலில் மீண்டும் அந்தப் பக்கம் போக எத்தனித்தேன். இன்னும் பெண்ணின் நிர்வாணத்தைக் காணாத எனக்கு அது தரும் கிளர்ச்சியைக் கற்பனை செய்துகொண்டேன் '. இன்னொரு இடத்தில் 'வழியில் இருட்டுக்குள்ளிருந்து சலங்கைபோலக் கொலுசுகளின் முத்துகள் குலுங்குவதைக் கேட்டோம். நான்கைந்து மல்லிகைப் பூக்கள் மேலே வந்து விழுந்தன. அவ்வளவு பதற்றத்திலும் அவனுக்குச் சபலம் தட்டிற்று. அந்தப் பக்கமாகத் திரும்பினேன். சற்றுமுன் தவறவிட்ட நிர்வாணக் காட்சியில் மனம் கிடந்து புரண்டது '.அதனை தொடர்ந்து கதையில் இருக்க வேண்டிய பதட்டமும் வேகமும் நடையிலும் சரியாக விவரிக்கப்பட்டிருக்கிறது.இங்கே கதை சொல்பவனுடைய மனநெருக்கடியும் அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது.நண்பனை தவறவிட்டவன் தான் தப்பித்து தன் அறைக்குள் காணும் கனவும்,கதை இறுதியில் வரும் ட்விஸ்ட்டும் கொஞ்சம் பிசகியிருந்தால் ஒரு மோசமான ஒரு சினிமா காட்சியாகியிருக்கும்,கவனமாக சொல்லப்பட்டிருப்பதால் தப்பித்துவிட்டது.


அடுத்து காத்திருத்தல் :
ஒரு நீண்ட நாவலுக்கான களத்தை கொண்டு ஒருவனுடைய முழுவாழ்க்கையையும் ஒரு சிறுகதைக்குள் சொல்லமுற்படும்போது இருக்க கூடிய நெருக்கடியையும்,வரலாற்றுத்தன்மையையும் ,கதாபாத்திர எண்ணிக்கைகளையும் இன்ன பிறவற்றையும் செந்தில் கூர்மையான,இயல்பான,நம்பகத்தன்மை கூடிய மொழி நடை மற்றும் உத்தியை கொண்டு கடந்து இந்த கதையை ஒரு அனுபவமாக மாற்றிக்காட்டியிருக்கிறார். இது இவ்வாறு இல்லாமலிருந்தால் சர்வ நிச்சயமாக ஒரு தொலைகாட்சி மெகா சீரியல் போல் ஆகியிருக்கும்.
வரப்போகும் நிமிடங்களில் முற்று பெற காத்திருக்கும் ராயப்பன் வாழ்கையே 'காத்திருத்தல்'.இந்த ஒரு கதையில் செந்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கும் வாழ்கை அற்புதம்.ராயப்பன் அவருடைய மகன்கள்,மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் என பெரிய குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி இரண்டும் நன்றாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இந்த குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு குணாம்சங்கள்,ஒரே குடும்பத்தினரானாலும் எந்த ஒருவரும் மற்றவர் போலில்லை.

இந்த கதையில் ராயப்பனின் குழந்தை பருவம் குறித்த பகுதி அவர் மிக மோசமான வறுமைச்சூழலில் இருந்து வந்தவர் என்றுணர்த்த வேண்டி செருகப்பட்டிருக்கிறது.மற்றபடி அந்த பகுதி இல்லையென்றாலும் இந்த கதை எவ்விதத்திலும் குறைந்துபோயிருக்காது. ஒன்றன் பின் ஒன்றாக கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். அது சலிப்பை ஏற்படுத்துவதில்லை.ஒரு நல்ல உத்தியில் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.ஒரு பாத்திரம் அறிமுகமானவுடன் கதை அவருடைய பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது.
மேலோட்டமாக பார்த்தால் இது சொத்து பிரச்சனை குறித்த கதைதான்.ஆனால் அப்படி மட்டுமே சொல்லமுடியாது.பிரச்னையை அந்த கதாபாத்திரங்கள் தங்களது குணத்தால் அணுகுவது மேலும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.
அவர்களது குணங்களை கொஞ்சம் வகைப்படுத்தலாம்.
ருக்குமணி: அம்மாவின் நகைகள் மேல் கண்ணாய் இருப்பவள்.ராயப்பன் இறந்ததும் அதை தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள காத்திருப்பவள்.
சக்திவேல் : மிகவும் பொறுப்பும் கஞ்சத்தனமும் உள்ளவன்.
ஆனந்தன் : கொஞ்சமும் பொறுப்பில்லாத குடிகாரன்
மகேஸ்வரி :அப்பாவின் மேல் முதலில் வெறுப்பும் பின் அன்புமாக மாறுபவள்.
ராதா: உறவு பெண்ணாக இருந்து சூழ்நிலையால் ராயப்பனோடு கூடிக்கலந்து அவருடைய இரண்டாவது மனைவி ஆகிவிட்டவள்.
இன்னும் பலருக்கும் பலவித குணங்கள்,எல்லோரும் நாம் காணக்கூடிய நபர்கள்தான்.மரணப்படுக்கையில் இருப்பவரோடு தனக்குள்ள நல்லுறவை மட்டுமே நீட்டி முழக்கி சொல்பவர்கள்.இங்கே மட்டுமின்றி கதை முழுக்கவும்,ஏன் எல்லா கதைகளிலும் உரையாடலை மிகச்சிறப்பாக எழுதிச்செல்கிறார் செந்தில். ஒவ்வொரு வார்த்தைகளும் மிகையற்றவை... யதார்த்தமானவை...மரணத்தை நெருங்கியிருப்பவர்களின் வீட்டில் கேட்கக்கூடியவை..
மீண்டும் ஒருமுறை அந்த க்ளிஷே வை பயன்படுத்திக் கொள்கிறேன்.எல்லா மனிதர்களும் ரத்தமும் சதையுமாய் நடமாடுகிறார்கள்.ஒரு குடும்பத்தின் வரலாறை அச்சு அசலாக அப்படியே பார்த்தது போன்ற பிரமிப்பை எனக்கு இக்கதை தருகிறது.வேறு எப்படி இதை சொல்ல முடியும்.


இதுபோன்றே வருகை, மிக எளிய விஷயங்களை எளிமையாகவே முழுமையுடன் சொல்வது ஆச்சரியப்படுத்துகிறது.இந்த கதையில் நாம் காணும் இயல்பு வண்ணநிலவன்,வண்ணதாசன் போன்றவர்களிடத்து மட்டுமே காணக்கிடைக்கிறது.இந்த கதையின் பெரும்பலம் இதன் உரையாடல்களே.குழந்தைகளின் விளையாட்டில் துவங்கும் கதை அப்பா குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து செய்யும் கலாட்டாவாகவும் மாறுவதை சேகரின் பார்வையில் சொல்கிறது.சேகரின் அப்பா போதையில் புலம்புவது நான் முன்பே சொன்னமாதிரி நேரில் பார்ப்பது போன்று சொல்லப்பட்டிருக்கிறது.அந்த புலம்பல்கள் எல்லாமே யதார்த்தபூர்வமானது.கொஞ்சமும் மிகையற்றது.கதாபாத்திரத்தின் அறிவுக்கு தகுந்தபடியான உரையாடல்களை எப்படி கையாளலாம் என்பதை இந்த கதையில் என்னால் உணரமுடிகிறது. போதையில் பேசும் கெட்டவார்த்தை உள்பட எல்லாமே மிக நுட்பமான அவதானிப்பு.நேர்கோட்டு முறையிலான கதை சொல்லல் இங்கே சரியாகத்தான் பயன்பட்டிருக்கிறது.

குழந்தைகளின் உலகம் என்பது எப்பொழுதுமே எனக்கு பிடித்தமானது.நம் அறிவுஜீவித்தனங்களை அவர்களுக்குள் செலுத்தி அந்த வயதை கொன்று கொண்டிருப்பதான விழிப்பை இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருக்கிறது நம் சமூகம்.நம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைவிட வேறு உதாரணமே தேவை இல்லை.ஏழெட்டு வயதுள்ள சிறுவன் பிரபல நடிகர்களை போல மிமிக்ரி செய்ய முயற்சி செய்வதை காணும்போது எனக்கு கோபம் வரும் .அந்த வயதுக்கு உண்டான விளையாட்டுகளில் கவனம் செலுத்தாமல் அவன் தன் வீட்டில் குரல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பான் என நினைக்கும்போது இன்றைய குழந்தைகளுக்கு அவர்களுடைய உலகமே அறிமுகமாகவில்லை என்பது வாழ்வில் ஒரு பேரிழப்புதான். இது என்னுடைய ஆதங்கம் மட்டுமல்லாது ஒரு சமூக பிரச்சனையும் கூட. இப்போது செந்திலின் கிளைகளிலிருந்து ... என்னும் கதையில் காட்டப்பட்ட உலகமானது அதி அற்புதமானது. சம்பத் என்னும் சிறுவன்தான் இந்த கதையின் நாயகன்.அவனுடைய முக்கியமான பிரச்சனை என்ன தெரியுமா? தனது சகாக்களை போல லாவகமாக பம்பரத்தை சுழற்றி விட தெரியவில்லை.அதற்காக அவன் கடும் முயற்சி செய்கிறான். கதையின் எனக்கு பிடித்த ஓரிடத்தை விரிவாக சொல்லியே ஆக வேண்டும். அது நண்பர்கள் ஒன்றாக பம்பரம் விடும் பகுதி.[பக்க எண் 34, இறுதி பத்தி]' நான்கு பெரும் வட்டத்தைச் சுற்றி நின்ற நொடியில் ஐயப்பன் ஜூட் என்றான்.மடமடவென அவரவர் பம்பரங்களுக்கு சாட்டையை சுற்ற தொடங்கினார்கள்.அதற்குள்ளாகவே அமானும் விஸ்வமும் விட்டெறிந்த பம்பரங்கள் அழகாக சுற்ற தொடங்கின.சொல்லிவைத்தார்போல ஐயப்பனுக்கும் சம்பத்துக்கும் 'எலி' பிடித்து சாட்டையின் நுனியில் பம்பரம் தலைகீழாக தொங்கி ஆடிக்கொண்டிருந்தது.சாட்டையால் சுழி போட்டு 'அபீட்' என்றார்கள் இருவரும் ஒரு சேராக....தொடர்ந்து அந்த பத்தி முழுவதும் இப்படித்தான் அவர்களுடைய உலகம் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இறுதியில் ஒரு இடம் : அடுத்த நொடியில் இரண்டு துண்டுகளாக பிளந்து,உள்ளேயும் வெளியேயும் கிடக்கும் தன் பம்பரத்தை சம்பத் ஆற்றாமையோடு வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.கதையின் இறுதி வரியை படித்து முடித்ததும் சொல்ல முடியாத ஒரு மனஅவஸ்தைக்கு உள்ளாகியிருந்தேன்.சம்பத் அடக்க முடியாமல் கேவிக்கேவி அழுதபடியே வீட்டைநோக்கி நடக்க தொடங்கும்போது அவனுடைய சோகம் வாசகனுக்கும் தொற்றிக்கொள்கிறது.


இங்கே எனக்கு பிடித்த நல்ல கதைகளை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.மோசமான கதைகளும் இதே தொகுப்பில் உண்டென்பதை மறுப்பதற்கில்லை.அவை ஏதோ கிரீடத்தை தாங்க பிரயத்தனப்படும் முயற்சிகளாகத்தான் எனக்கு தோன்றுகிறது.அவை குறித்து எதுவும் அதிகம் பேச தோன்றவில்லை.உதாரணம் மேய்ப்பர்கள்,மதிலுகள் போன்றவை.முதல் கதையான கதவு எண் 13/78 ல் எடுத்துக்கொண்ட கதைக்கு அதன் முதல் அத்தியாயம் தேவையே இல்லையென்றுதான் படுகிறது.மொத்தம் ஐந்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்ட இக்கதையில் அதன் முதல் அத்தியாயத்தில் மூத்திரசந்தை குறித்து இவ்வளவு நீண்ட விவரணைகள் வாசிக்க துவங்கும்போதே சலிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி கதையின் வாசித்து முடித்ததும் இந்த கதைக்கும் ஆரம்ப விவரணைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று உணரும்போது எரிச்சலே மிஞ்சுகிறது.இதே போல வேறு பல கதைகளிலும் தென்படும் கூடுதல் விவரணைகள் பக்க அளவை கூட்ட மட்டுமே பயன்படுகிறது. மதிலுகள் ஏறக்குறைய நாடகம்தான்.வாக்குமூலம் கதையில் சம்பவங்கள் தேவைக்கு மேல் நீட்டப்பட்டிருக்கிறது.இதில் கதையை முன்னும் பின்னுமாக நகர்த்திய உத்தி குழப்பத்தையே ஏற்படுத்துகிறது.நல்ல கதையை நூலிழையில் தவறவிட்ட ஏமாற்றம் எனக்கு இந்த கதையில் ஏற்படுகிறது.எல்லா எழுத்தாளர்களுக்கும் சினிமாத்தனமாக ஒரு கதையை எழுதிப்பார்க்கும் ஆவல் இருக்கும் போல..செந்தில் மேய்ப்பர்களில் முயற்சித்திருக்கிறார்.

மிக சரியான யதார்த்தபூர்வமான முழுமையான உரையாடல்கள்,இயல்பான சொல்முறைகள்,நம்பகத்தன்மையுள்ள கதைக்களங்கள்,நகலெடுக்கும் தன்மைக்கு மேலே புனைவை தாங்கியிருக்கும் இலகுவான யதார்த்த மொழிநடைகளை கொண்ட இந்த தொகுப்பை குறித்து சொல்லவேண்டுமென்றால் மிகவும் நம்பிக்கையூட்டும் நபராகத்தான் செந்திலை மதிப்பிடமுடிகிறது.யதார்த்தவாதத்தின் தேவையை இந்த கதைகள் பலமாக நிறுவுவதால் சரியான அங்கீகாரம் கிடைக்குமென்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான்.

இரவுக்காட்சி
காலச்சுவடு பதிப்பகம்
விலை 90
சிறுகதைகள்

No comments:

Post a Comment