Showing posts with label மனுஷ்யபுத்திரன். Show all posts
Showing posts with label மனுஷ்யபுத்திரன். Show all posts

Thursday, June 30, 2011

கனிமொழி என் நண்பர்-மனுஷ்யபுத்திரன்




சமீபத்தில் சண்டே இந்தியன் இதழில் வெளிவந்துள்ள பேட்டியில் சாரு நிவேதிதா கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அவரது புத்தக வெளியீட்டு விழாவிற்கு கனிமொழி அழைக்கபட்டதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது முழுக்க முழுக்க பதிப்பாளரின் விருப்பம். இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா தன்னலம் இல்லாதவர் என்று ஜெயலலிதாவையே அதிர்ச்சியடையச் செய்யும் ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். கொஞ்ச நாளுக்கு முன்புதான் ஒரு தமிழ் எழுத்தாளர் கருணாநிதியை ’கடவுள்’ என்று அழைத்து பெரும் புகழ் பெற்றார். அவருக்கான பரிசு கடந்த தேர்தலில் அவருக்குக் கிடைத்தது. சீசருக்கு உரியது சீசருக்குக் கிடைக்கும்.



இந்தக் கருத்தின் மூலம் என்னை தி.மு.க காரனாகவும் அவரை அ.தி.மு.க காரராகவும் நிறுவுவதற்கு சாரு விரும்புகிறார். என்னுடைய நட்பை இழப்பதன் வாயிலாக அவர் அதன் நஷ்டத்தை எப்படி உடனடியாக சந்திக்கிறார் பாருங்கள். அவரை இவ்வளவு பலவீனமாக கருத்துச்சொல்ல நான் அனுமதித்ததே இல்லை. இப்படி சொன்னால் ஜெயலலிதா என்னை உடனே ஜெயில் தூக்கிப் போட்டுவிடுவார் என்று யோசிக்கிறார். இவ்வளவு எளிமையாக சாருவைத் தவிர யாரும் யோசிக்க முடியாது. தமிழ் எழுத்தாளர்களைவிட ஜெயலலிதாவும் கருணாநிதியும் எவ்வளவோ ஜனநாயக பண்புகள் கொண்டவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜெயமோகன் கருணாநிதியின் மீது செய்த விமர்சனங்களுக்காக கருணாநிதி அவரை ஒரு ட்ரான்ஸ்பருக்கு கூட முயற்சி செய்யவில்லை. முரசொலியில் கவிதை எழுதினார். ’அரசி’ கவிதை எழுதிதற்காக ஜெயலலிதா என்மேல் என்ன கஞ்சா கேஸா போட்டார்?



ஆனால் ஜெயலலிதாவை தன்னலம் அற்றவர் என எழுதுவது சுயமுன்னேற்றதிற்கான ஒரு செயல். ரவிபெர்னாட் இந்த வேலையை பத்து வருடமாக செய்ததன் விளைவாக இன்று அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்திருக்கிறது. சாருவுக்கு உரியது சாருவுக்கு கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஜெயலலிதா தன்னலமற்றவராக இருக்கவேண்டும் என்றுதான் நானும் உளமாற விரும்புகிறேன். அப்படி இருந்தால் அடுத்த தேர்தலில் நான் அவருக்கு வாக்களிப்பேன். ஆகவே சாரு அ.தி.மு.கவிலோ பஜ்ரங்தள் ளிலோ இருப்பது அவரது தேர்வு. நாம் அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் எனது நிர்ப்பந்தத்தினாலேயே கனிமொழி அழைக்கப்பட்டார் என்று அவர் சொல்வது தொடர்பாக ஒரு சிறு விளக்கம்.



கடந்த ஆண்டு டிசம்பர் 13 புத்தக வெளியீட்டு விழாவில் சாரு தான் கனிமொழியை அழைத்தது தொடர்பாக கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.



’’கனிமொழிக்கு நன்றி சொல்லணும். அவங்க கிளம்பிப் போயிட்டதால என் நன்றியை வீடியோவில பார்த்துப்பாங்கிறதால விளக்கமா சொல்லிடுறேன். அவங்க ஹிந்துலே வேலை பார்த்துட்டு இருந்தப்போ அடிக்கடி அவங்கள ஃப்லிம் சேம்பரில பார்ப்பேன். அவங்க கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க எனக்கு ரொம்ப பிடிச்ச கவிஞர் என்பதால தயக்கத்தோடு போய் ஹலோ சொன்னேன். அவங்களும் ரொம்ப எளிமையா ஹலோ சொன்னாங்க. என் ரைட்டிங் படிச்சிருக்கீங்களான்னு கேட்டன். இல்லை. கேள்விப்பட்டிருக்கேன்னாங்க. உடனே அவங்களுக்கு என்னோட முதல் நாவலை அனுப்புறதா சொன்னேன். 15 நாள் கழித்து பார்த்தப்ப புக் கிடைக்கலைன்னாங்க. நான் அனுப்பினாத்தானே கிடைக்கும். நேரிலேயே கொடுத்தேன். ஒரு கூட்டத்தில கனிமொழி சொன்னாங்க, சாரு என்னை adopt பண்ணிக்கிட்டாருன்னு. நிறைய சண்டை போட்ருக்கோம். நிறைய டிஸ்கஸ் பண்ணியிருக்கோம். கனிமொழி ரொம்ப down to earth. அவங்க normal politician கிடையாது. இவங்க punch ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை சுப்ரமணியசுவாமி எதிர்ல வந்தப்பா ஹலோ சொல்லியிருக்காங்க. உடனே அவர் உங்க அப்பா கோவிச்சுக்கப் போறார்னு சொல்லியிருக்கார். அதுக்கு கனிமொழி, எங்க அப்பா கோவிச்சுக்க மாட்டார். உங்க அம்மா கோவிச்சுக்காம இருக்கணும் சொல்லியிருக்காங்க. அம்மான்னு சொன்னது ஜெயலலிதாவ.

இந்த கூட்டத்துக்கு நான் கனிமொழிய கூப்டத்துக்கு ஏகப்பட்ட விமர்சனம். சாரு தி.மு.க.ல சேரப் போறான், அதிகாரத்தின் பக்கம் போறான்னு. அதெல்லாம் கிடையாது, கனிமொழி ஒரு ஃப்ரெண்ட். கனிமொழி, தமிழச்சி எல்லாம் எங்க வீட்டு உறுப்பினர்கள் மாதிரி. கனிமொழிய பற்றி ஒரு நாவலே எழுதலாம். ஒரு முறை ஒவ்வொரு எழுத்தாளருக்கும் நான் ஒரு சினிமா தலைப்பை பட்டபெயராகக் கொடுத்தேன். அப்போது நான் கனிமொழிக்குக் கொடுத்த பெயர் ‘அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது’இந்த மாதிரி நிறைய எபிஸோட்ஸ்.’’



இந்த இடத்தில் சாரு இன்று தன்னை அழிக்க, ஒடுக்க நினைப்பததாக பிரச்சரம் செய்துவரும் ஒரு நிறுவனம் பற்றி 6 மாததிற்கு முன்பு குறிப்பிடும் கருத்துக்களையும் சேர்த்துப் படியுங்கள்.

’’உயிர்மைதான் என்னை வளர்த்தது என்று சொல்வேன்..ஒவ்வொரு ப்ரஸ்ஸாக என்னுடைய புத்தகங்களைப் பதிப்பிக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்போது காலச்சுவடிலிருந்து மனுஷ்ய புத்திரன் வெளியே வந்து உயிர்மை ஆரம்பித்ததன் மூலம் எனக்கு ஒரு விடிவுகாலம் பிறந்தது. உயிர்மை இல்லையென்றால் நான் இல்லை. உயிர்மை என்னை வளர்த்தது. நான் இல்லையென்றால் எஸ்.ராமகிருஷ்ணனோ வேறு ஏதோ ஒரு ராமகிருஷ்ணனோ எழுதியிருப்பார்கள். உயிர்மையில் நான் ஒரு கடைநிலை ஊழியன் மாதிரி. உயிர்மையில் எனக்கு ஃபோரம் கிடைத்தது. ஸ்பேஸ் கிடைத்தது. உயிர்மைக்கு நான் என்றைக்கும் நன்றியுடையவனா இருப்பேன். நல்லி செட்டியார் மாதிரி உயிர்மை ஒரு பெரும் passion னோடு இலக்கியத்திற்கு சேவை செய்துகொண்டு இருக்கிறது.’’



உணர்ச்சி பாவங்களோடு இந்தக் கருத்துக்களை பார்க்க விரும்புகிறவர்கள் இந்த வீடியோ இணைப்பிற்குச் செல்லலாம்

http://www.dailymotion.com/video/xhen2c_charu-2010-charu-speechvideo_creation



உயிர்மையின் அனைத்து நூல் வெளியீட்டுக் கூட்டங்களிலும் அதன் பேச்சாளர்கள் சமபந்தப்பட்ட நூலாசிரியர்களின் விருப்பப்படியே இதுவரை தேர்வு செய்யப்பட்டிருகிறார்கள். அவர்களைத் தொடர்புகொண்டு அழைக்கும் பொறுப்பைக்கூட அவர்கள்தான் செய்திருகிறார்கள். உயிர்மை கூட்டங்களில் கமல்ஹாசன், மணிரத்தினம், வைகோ, ஸ்டாலின், சீமான், திருமாவளவன், வைரமுத்து என்று ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத எத்தனையோ பேர் வந்து பேசியிருக்கிறார்கள். அவை அனைத்தும் அந்தந்த நூலாசிரியர்களின் தேர்வு மட்டுமே. சாரு, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், தமிழச்சி தங்கபாண்டியன் இன்னும் பல படைப்பாளிகளின் கூட்டங்கள் அப்படித்தான் ஒழுங்கு செய்யபட்டிருக்கின்றன. இவ்வளவு ஏன் பொன். வாசுதேவன், நிலா ரசிகன், முகுந்த் நாகராஜன் போன்ற இளம் படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு விழாக்களின்போதுகூட பேச்சாளர்களை பரிந்துரைக்கும்படி அவர்களுக்கு பல முறை ஃபோன் செய்வேன்.( அவர்கள் ’நீங்களே பேசினால் நல்லா இருக்கும்’ என்று சொல்லி என்னை சித்தரவதை செய்வது வேறு கதை) உதாரணமாக கடந்த டிசம்பரில் சாருவின் கூட்டதிற்கு அழைக்கபட்ட குஷ்புவின் மொபல் நம்பர் சாருவுக்குதான் தெரியும், எனக்குத் தெரியாது.( கடைசி நேரத்தில் குஷ்பு வரவில்லை). எனது நிர்ப்பந்தத்தால் அழைக்கப்பட்ட ஒருவருடன் நடந்து கொண்டது போலவா சாரு அன்று நடந்துகொண்டார்? அவர் கனிமொழியிடம் காட்டிய இணக்கத்தை அன்று கூட்டத்தில் இருந்த அத்தனை பேரும் புன் சிரிப்புடன் பார்த்துக்கொண்ருந்தார்கள்.. ஆனந்த விகடனின் சாரு கனிமொழி கூட்டதிற்கு வருவது பற்றி அவ்வளவு புளாகாங்கிதத்துடன் எழுதினார்.

இதையெல்லாம் சொல்வதற்கு காரணம் கனிமொழிக்கும் எனக்கும் எந்த நட்பும் இல்லை என்று சொல்வதற்காக அல்ல. அப்படிச் சொலவதற்கான அவசியம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. நான் எனது புத்தகத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்தபோது தி.மு.க ஆட்சியில் இல்லை. இப்போது மிக இக்கட்டான நிலையில் அவர் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவரை என் நண்பர் என்று குறிப்பிட விரும்புகிறேன்.



இன்று 2 ஜி விவகாரத்தில் அவரது பங்கு தொடர்பாக எனது விமர்சங்களை முன்வைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சமீபத்தில் 2 ஜி விவகாரத்தில் கனிமொழி-ஆ.ராசாவுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் வினியோகித்தற்காக எழுத்தாளர் இமையத்தை திட்டி உயிர்மையில் எழுதினேன். ஆனால் ஒரு நண்பனாக கனிமொழியின் இன்றைய நிலை எனக்கு ஏற்படுத்தும் துயரத்திற்கும் அவல உணர்ச்சிக்கும் அளவேதும் இல்லை



கனிமொழியை தங்கள் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் வலியப் போய் சேர்த்துக்கொண்டவர்கள், அவரது முதல் பாராளுமன்ற உரையை வரிக்கு வரி அச்சிட்டு புளகாங்கிதம் அடைந்தவர்கள் இன்று கனிமொழி கணவனுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார் என்று எழுதுகிறார்கள். கணவர் அதற்கேற்ற உடல் பருமன் கொண்டவர் என்று எழுதுகிறார்கள்.



கனிமொழியின் பேட்டியை மாதம் ஒருமுறையேனும் வெளியிட்டுக்கொண்டிருந்த பத்திரிகைகள் இப்போது அவரது கவிதைகளின் இலக்கியத் தரமின்மை பற்றி விவாதம் நடத்துகின்றன



கனிமொழி யாரை நோக்கி ’அவர் எனது தந்தையைப் போன்றவர் ’என்றுநெகிழ்ச்சியுடன் அழைத்தாரோ அவர் இன்று கனிமொழி ஜெயிலில் எப்படிக் குளிப்பார், அவரது கணவருக்கு ஃபீஸ் எவ்வளவு என்று எழுதுகிறார்.



இது என்ன மாதிரியான காலம்? இவ்வளவு பெரிய இழிவை நோக்கி மனிதர்கள் எப்படி வந்து சேருகிறார்கள் என்பதை நம்பக்கூட முடியவில்லை.



கனிமொழியின் கவிதைகள் உலகத் தரமானவை என்று எழுதியவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் வந்ததில்லை. நான் பேட்டிகளில் நம்பிக்கைக்குரிய கவிஞர்களின் பெயர்களை சொன்ன சந்தர்ப்பதில்கூட அவரது பெயரைச் சொன்னதில்லை என்று அவருக்கு என்மேல் மிகுந்த வருத்தம் உணடு. கடந்த ஐந்தாண்டுகளில் அவரிடம் இரண்டு முறை சிறு உதவிக்காக போயிருக்கிறேன். இரண்டு முறையும் அதை அவர் மறுத்திருக்கிறார். அதைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நானும் அவரும் பங்கேற்ற மேடைகளில் அவர் பல முறை நான் பேசியதை கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறார். குட்டி ரேவதி தொடர்பான சர்ச்சையில் அவர் என்னை திட்டியே எழுதினார். அவர் உயிர்மையில் ஒரு வரிகூட எழுதியதில்லை. அதனால் என்ன? ஒரு நண்பராக அவர் எனக்களித்த அன்பும் மதிப்பும் கூடிய கணங்கள் இதனால் எல்லாம் இல்லாமல் ஆகிவிடுமா? அவரது நல்லியல்புகளைக் கண்டு வியந்த கணங்கள் பொய் என்று ஆகுமா? நான் மகாபாரதம் படித்து வளர்ந்தவன். பொது நீதிக்கும் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கும் நடுவே உள்ள போராட்டத்தை அதுபோல சொன்ன ஒரு காப்பியம் இந்த உலகில் இல்லை. எவ்வளவு நீதியுணர்ச்சியுள்ள கர்ணன் துரியோதனை ஆதரித்து நின்ற தருணத்தை கவித்துவ நீதியால்தான் விளக்க முடியுமே தவிர உலகியல் நீதியால் அல்ல.



எனக்கு கனிமொழியிடம் எப்போதும் எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. நாளை அவரை நான் எனது ஒரு புத்தக வெளியீட்டுக் கூடத்திற்கு எந்தத் தயக்கமும் இன்றி அழைப்பேன். 2 ஜி விவகாரம் நிரூபிக்கப்பட்டு அவர் தண்டனையடைந்தால் கூட அவர் எனது நண்பர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. திருட்டுக் குற்றத்த்தின் சந்தேகத்தின் பேரில் மரத்தை கட்டிவைக்கப்பட்ட ஒருவரை போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் நாலு அடி அடிப்பதுபோல நமது பத்திரிகையாளர்கள் , எழுத்தாளர்கள் நடந்துகொள்கிறார்கள். அவரது பெயரைச் சொல்லி பொது இடங்களில் சிறு மதிப்பு தேட முயன்றவர்கள் இன்று அவரை மானபங்கம் செய்ய முற்படுகிறார்கள். நமது தார்மீக எழுச்சியின் அளவுகோல்கள் எவ்வளவு கபடத் தன்மை வாய்ந்தது என்பதை பார்ப்பதற்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் வரப்போவதில்லை



எதிர்பார்புகளோடும் ஆதாயங்கள் குறித்த கனவுகளோடும் உறவுகளை பராமரிக்க விரும்கிறவர்கள் அவை நிறைவேறாதபோது தடுமாறிப் போகிறார்கள்.



சாருவை கொண்டாடிய நண்பர்கள், அவரை பாதுகாத்த நண்பர்கள் அனைவருக்கும் என்ன நடந்தததோ அதுதான் எனக்கும் நடக்கும் என்பது நன்கு அறிந்ததுதான். ஆனால் எனது முறை இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் நினைக்கவில்லை. அடுத்தது யார் என்பதும் ஏற்கனெவே முடிவாகி விட்டது.



நான் ஒரு எழுத்தாளன். பத்திரிகையாளன், புத்தகங்களை அச்சிட்டு ஊர் ஊராகச் சென்று விற்பவன். எனக்கு கனிமொழியாலோ ஜெயலலிதாவாலோ ஆகவேண்டியது எதுவுமே இல்லை. யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக் கொள்ளாத ஒருவர் பொய்களைக் கண்டு அஞ்ச வேண்டியதுமில்லை.



நாமார்கும் குடியல்லோம்

நமனையஞ்சோம்.

Tuesday, October 12, 2010

மனுஷ்யபுத்திரன் குரலை நம்பும் ஜெயமோகன்

அக்டோபர் மாத உயிர்மையில் மனுஷ்யபுத்திரன் எழுதி இருக்கும்
'தேனீர் கோப்பையில் பெய்த மழை'
என்ற கட்டுரை தான் இம்மாதம் ஹாட் டாபிக்.வெறும் வாய்க்கு அவல் போட்டால் போல வெல்லத்தை போட்டுள்ளார்.ஜெயமோகன் குறித்த பகடிதான் கட்டுரையின் மையம்.அதனால் என்ன என்பவர்களுக்கு எனக்கு தேவையில்லாத நவீன இலக்கியத்தின் கொள்கை பரப்பு செயலாளர். என்ற பட்டத்தையும் கட்டுரையின் நடுவே கொடுத்துள்ளார்.

விஷயம் இதுதான் அடுத்த நாள் நடக்க போகும் ஷாஜியின் விமர்சன கூட்டத்திற்கு இளையராஜாவின் ரசிகர்கள் சிலர் வந்து கலாட்டா செய்ய போவதாக குறிப்பிட்டார்.அப்புறம் ரிஸ்க் எடுப்பது எல்லாம் மனுஷ்யபுத்திரனுக்கு ரஸ்க் சாப்பிடவது மாதிரி.. சண்டைகோழி விசயத்தில் இருந்து அவர்தான் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து வருகிறார்.சும்மா என்னை போல நண்பர்கள் சிலருக்கு சொல்லுவார் அவ்வளவுதான்...ஆக்சன் ப்ளாக் எல்லாம் அவர் முடிவுபடித்தான் நடக்கும்....

என்ன வித்தியாசமென்றால் இந்த முறை அந்த விஷயத்தை அறிவித்துள்ளார்.

ஜெயமோகன் தலைமையில் இளையராஜா ரசிகர்கள் ஷாஜியை கேரோ செய்யபோகிறார்கள்...என்றாராம்..எனக்கு அடி விழலாம் எனவே நான் வரமாட்டேன் ...என்று என்னிடம் பதற்றத்துடன் கூறியதாகவும்..ஒருமணி நேரம் கழித்து அவருக்கு வரிசையாக போன்கள் அவர் நினைத்தபடி வந்ததாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.அதற்கு முந்தைய நாள் ஷாஜி யும் ஜெயமோகனும் துளசி பார்க் ஹோட்டலில் தங்கி இருந்ததை நான் அறிவேன்.இந்த துளசி பார்க் ஹோட்டல் என் வீட்டுக்கு வெகு அருகில் உள்ளது.. ஜெயமோகன் பிரதாப் பிளாசா,துளசி பார்க் போன்ற ஹோட்டல்களில் தங்கினால் எனக்கு தகவல் வரும்...அதன் வெகு நாளைய கஸ்டமர் நான். ஜெயமோகனோடு நட்புடன் இருந்த காலங்களில் பார்த்து பேசியது உண்டு..இப்போது எந்த தொடர்பும் இல்லை.அவரும் சினிமா சம்பந்தமான நண்பர்களை பார்பதையே விரும்புகிறார்.
.
அதாவது இம்மாதிரியான விசயங்களை என்னிடம் சொன்னால் நான் நண்பர்களுக்கு எல்லாம் பரப்பி விடுவேனாம் ..அதற்குத்தான் இந்த கொள்கை பரப்பு செயலாளர் பட்டம் வேறு..அன்று என்னிடம் மனுஸ் சொன்ன மாதிரியே வேறு பலரிடமும் சொல்லி இருக்கிறார்.என்பதை பின்னால் அறிந்தேன்.இது ஒன்னும் புதிது அல்ல.அதை அவரே பொய் என்றும் அந்த கட்டுரையில் ஒத்து கொள்கிறார்.இப்போது பரப்பிலக்கிய செயலாளர் நவீன இலக்கிய உலகத்தில் யார் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும்...இதை புரிந்து கொள்ளாத நண்பர்கள் சிலர் என்னிடம் போன் செய்து கேட்கவே இதை எழுத வேண்டியாகி விட்டது.

தொடர்பில்லாமல் இருக்கும் ஒருவரின் விசயத்தில் நம்மையும் சேர்த்து எழுதினால் என்ன ஆகும்..அவரின் தேவையில்லாத கோபத்திற்கு நம்ம பலியாக வேண்டி வரும். ஜெயமோகனை கேட்கவா வேண்டும்...பத்து வருடம் பின்னால் உருவாகும் எதிரியை இன்றே அழிக்க முயலும் வசிஷ்டர்.சரி அவருக்கு போன் செய்து நடந்ததை கூறி விடலாம் என்று போன் செய்தேன்...

என் பெயரை கேட்டதும் நீங்கள் .ஏன் எனக்கு போன் செய்ய வேண்டும் என்றார்..விஷயத்தை விளக்கும் முன்னர் non sense முதல்ல போனை வைங்க என்றார் கோபத்துடன் [அறசீற்றம் ].

இது போக ஏன் இப்படி எழுதிருக்கிறார் மனுஷ்ய புத்திரன் உங்களுக்கும் அவருக்கும் பிரச்சனையா என்று பல போன் கால்கள் .பல யூகங்கள்.
சும்மா ஜாலிக்கு எழுதி இருப்பதாகவும் வேறுமாதிரி எடுத்து கொள்ள வேண்டாமென்றும் மனுஸ் எளிதாக சொல்லிவிட்டார்.
இருவரும் நாளையே இணையலாம். ஜெயமோகன் பேசியதை வைத்து பார்க்கும் போதுஅவர் மனுஷ்ய புத்திரனின் குரலையே நம்புகிறார்.என்பது தெளிவாகிறது.

என்ன மாதிரியான காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்..?.

Monday, July 26, 2010

சாரு நிவேதிதாவின் சான்றிதழ்


சாரு நிவேதிதாவின் சான்றிதழ்.

''இந்த இட்த்தில் எனக்கு விஜய் மகேந்திரன் என்ற நண்பரின் பெயர் ஞாபகம் வருகிறது. அவருடைய ’நகரத்திற்கு வெளியே’ என்ற சிறுகதைத் தொகுதி உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. அதில் உள்ள ஒரு கதையைக் கூட இலக்கியம் என்று சொல்ல மாட்டேன். உங்கள் வீட்டுக் குழந்தை ஏதோ ஒன்றைக் கிறுக்கிக் கொண்டு வந்து உங்களிடம் காண்பித்தால் அதை வாங்கி “வான் கோவைச் நீ அவமானப்படுத்தி விட்டாய்” என்று சொல்லி குப்பைக் கூடையிலா போடுவீர்கள்? அந்த மாதிரி சிறுகதைகள் அவை. இது பற்றி விஜய் மகேந்திரனை பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன். இந்தக் கிண்டலை மற்றவர்களாக இருந்தால் அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொண்டு என்னைப் பகைவனாக நினைத்துத் தூக்கம் வராமல் அவதிப்பட்டிருப்பார்கள். இருந்தாலும் விஜய் மகேந்திரன் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப வந்து கதவைத் தட்டுகிறார். காரணம் என்ன? அவர் ஒரு டாக்டர். இளைஞர். ஏன் அவர் மாலை நேரங்களில் பெண்களை ஒதுக்கிக் கொண்டு டென்.டி போன்ற ப்ப்களில் ஒதுங்காமல் என்னையும் ஹமீதையும் வந்து பார்க்கிறார்? இலக்கியம் என்ற விஷயத்தின் மீது அவருக்கு இருக்கும் தீராத காதல். அதனால்தான் நானும் ஹமீதும் எவ்வளவு கிண்டல் செய்தாலும் திரும்பத் திரும்ப வந்து நிற்கிறார். என்றாவது ஒருநாள் – இன்னும் பத்து ஆண்டுகள் சென்றாவது – அவர் ஒரு நல்ல கதையை எழுதுவார். அதற்காக இப்போதே அவருக்கு ஒரு முத்தம் கொடுக்க நான் தயார்.''

மேற்கண்ட பத்தி சாரு ப்ளோகில் அவர் என்னை பற்றி எழுதியது .பொதுவா எந்த இலக்கிய அரசியல் மற்றும் அக்கபோர்களில் நான் கலந்து கொள்ள விருப்பம் அற்றவன்.மேற்கண்ட பத்தியை முன்னிட்டு நிறைய நண்பர்கள் நான் சாருவுக்கு பதில் சொல்லி எழுத வேண்டும் என போன் செய்தனர்.கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பதில் சொல்லுவதே வேலையாக போய் விட்டது.

அதற்கான விளக்கத்தை இங்கே சொல்லிவிடுகிறேன்..சாரு என்னை நேரடியாக கிண்டல் செய்து ஒருபோதும் பேசியது இல்லை.என் கதைகள் குறித்து ஒருபோதும் அவரிடம் ஒருபோதும் உரையாடியது இல்லை.மாலை வேளைகளில் நான் ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறேன்...மனுஷ்ய புத்திரனை சனி,அல்லது ஞாயிறு தான் சந்திப்பேன்.அவரது வேலைபளு அப்படி.டென் டி பப்ப்களில் ஒதுங்க கூடிய அளவில் எனக்கு வசதி இல்லை.அல்லது ஸ்பான்சர்களும் இல்லை.அன்றாடம் எட்டுமணி நேரம் வேலை பார்த்து கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை மற்றும் எழுத்து பணிகளை செய்து வருபவன் நான்.

அப்புறம் யாருடைய சான்றிதழ் பெறுவதற்காகவும் நான் எழுதுவது இல்லை.அதே போல் சாரு கடந்த சில வருடங்களாக யாரையும் பாராட்டி எழுதியதும் இல்லை.மனுஷ்யபுத்திரனை நான் ஒரு வாசகனாக இருந்த காலத்தில் இருந்து அறிவேன்...அவர் ஒரு போதும் என் மனம் புண்படுமாறு என் கதைகள் குறித்து எந்த அபிப்ராயமும் சொன்னதில்லை...
சாரு அவர் என்னை கிண்டல் செய்து வந்ததாக குறிப்பிடுகிறார்.எழுத்தை விட்டு விலகி குடும்ப பிரச்சனைகள் சிலவற்றில் அல்லாடி இருந்த போது 2007 இல் எனக்கு போதிய மன தெம்பையும் தைரியத்தையும் அளித்து எழுத சொன்னது மனுஷ்ய புத்திரன்தான்.எனது முதல் தொகுப்பை சிறப்பான முறையில் வெளியிட்டு இன்று நாலு பேர் அறிய காரணமாகவும் இருந்தவரை இப்படி என்னை கிண்டல் செய்தார் என்று குறிப்பிடுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது.அல்லது இதுதான் வேலையா?அவருக்கு ஆயிரம் பணிகள் இருக்கிறது .

புத்தக கண்காட்சியில் எனது புத்தகத்தை ஆர்வத்தோடு இரண்டு இளம்பெண்கள் வாங்கி போனதாக தெரிவித்து ஊக்கம் அளித்தவர் சாரு...தொடர்ந்து எழுதுமாறும் விகடன் போன்ற வெகு ஜன இதழ்களில் கூட பங்களிக்குமாறும் சொன்னார்.இது ஜனவரி 2010 இல்.உண்மை இப்படி இருக்க இதற்கு என்ன பதில் சொல்லுவது.

கடைசியில்
என்றாவது ஒருநாள் – இன்னும் பத்து ஆண்டுகள் சென்றாவது – அவர் ஒரு நல்ல கதையை எழுதுவார். அதற்காக இப்போதே அவருக்கு ஒரு முத்தம் கொடுக்க நான் தயார்.''
இந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு இளம் எழுத்தாளனும் எழுதிக்கொண்டு இருக்கிறான்.
என்.எஸ்.மாதவனின் ஹிக்விட்டா போன்ற ஒருகதையை நான் எழுதிவிட்டால் என்னோடைய எழுத்து பயணத்தை நிறுத்திவிட கூடும்...நண்பர்களே இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன்....

பின்குறிப்பு
கடந்த சனி கிழமை காலையில் சாரு என்னிடம்தான் போன் செய்து எனது தொகுப்பின் பேரை கேட்டார்.மாலையில் எழுதிவிட்டார்.இரண்டுக்கும் நடுவே அவர் கூர்க் வேறு சென்றுகொண்டு இருந்தார்!!!!