Showing posts with label இருள் விலகும் கதைகள். Show all posts
Showing posts with label இருள் விலகும் கதைகள். Show all posts

Wednesday, April 28, 2010

இருள் விலகும் கதைகள்-நிலாரசிகன் விமர்சனம்


-----------------------------------------
நூலி்ன் பெயர்: இருள் விலகும் கதைகள்

பகுப்பு: சிறுகதைகள்

புத்தகத்தின் விலை: ரூ.90

பதிப்பகம்: .தோழமை,5D,பொன்னம்பலம் சாலை,K.K நகர்,சென்னை 78.
CELL:9444302967.

தொகுப்பாசிரியர்: விஜய் மகேந்திரன்

-----------------------------------------

நவீன சிறுகதைகளின் காலகட்டமான இக்காலத்தில் தமிழ்ச்சிறுகதைகளின் பங்கு மிக முக்கியமானது. வெவ்வேறு விதமான பரிசோதனை முயற்சிகள்,தனித்து நிற்கும் கதைசொல்லல்,கற்பனைவீச்சின் உச்சத்தில் நிற்கும் கதைகள் என பல சிறுகதைகள் தமிழில் வந்த வண்ணம் உள்ளன.


இன்றைய இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து தோழமை வெளியீடாக
வெளியிட்டிருக்கிறார் சிறுகதையாளர் விஜய் மகேந்திரன்.

வா.மு.கோமு ,சுதேசமித்திரன்,ஷாராஜ்,கே.என்.செந்தில்,ஹரன் பிரசன்னா,எஸ்.செந்தில்குமார்,பாலைநிலவன்,லஷ்மி சரவணக்குமார்,சிவக்குமார் முத்தையா,விஜய் மகேந்திரன்,புகழ் மற்றும் என்.ஸ்ரீராம்
மொத்தம் 12 சிறுகதையாளர்களின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.


ஒவ்வொரு கதைகளும் வெவ்வேறு முகம்கொண்டவையாக இருப்பது வாசகனுக்கு புதியதோர் அனுபவமாக இருக்கிறது. கதை சொல்லும் உத்திகளாலும்,கதைக்களத்தின் புதுமையாலும் அனைத்து கதைகளுமே ரசிக்கும்படி இருப்பது இத்தொகுப்பின் பலம்.இந்த தொகுப்பிற்காகவே எழுதப்பட்ட கதைகள் என்பதும் கூடுதல் பலம்.
இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள 12 கதைகளில் மூன்று கதைகளை பற்றிய குறிப்புகள் மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.


செறவிகளின் வருகை:


சிவக்குமார் முத்தையா எழுதியிருக்கும் இந்தக்கதையின் களம் புதிது.செறவி எனும் பறவைகளால் ஒரு மலையடிவார கிராமம் அல்லல்படுகிறது.கூட்டமாக வரும் அப்பறவைகள் விளைந்திருக்கும் நெல்மணிகளை தின்று மொத்த வயலையும் அழித்துவிட்டு போகின்றன. அந்த பறவைகளிடமிருந்து தங்கள் வயலை பாதுக்காக்க போராடும் கிராம மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது.கதையின் நாயகன் கலியனின் வாழ்க்கையை

செறவிகள் எப்படி கலைத்துப்போடுகின்றன என்பதை கதையின் முடிவு அற்புதமாய் எடுத்துரைக்கிறது.செறவிகளின் வருகை குறித்த விவரணைகள் அருமை. இந்த தொகுப்பிலிருக்கும் மிகச்சிறந்த கதை இது.


நகரத்திற்கு வெளியே:


விஜய மகேந்திரன் கணையாழியில் தனது முதல் படைப்பிலேயே அதிக கவனம் பெற்றவர். நகரத்திற்கு வெளியே கதை இளம் யுவதி ஒருத்தியை பற்றியது. அவளது காதலனால் அவள் படும் தவிப்பை சொல்லியிருக்கிறார்.நகரத்தில் நடக்கும் அவலங்களை முகத்தில் அறைந்தாற் போல் விவரிக்கிறது ஒவ்வொரு வரியும்.காதல் என்கிற பெயரில் நடக்கும் விஷம செயல்களை நகர பெண்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதே இக்கதையின் மூலக்கருவாக உணரமுடிகிறது.


காலவாயனின் காடு:

திரைப்படத் துறையில் பணிபுரியும் எழுத்தாளர் புகழின் கதையிது. மற்ற கதைகளிலிருந்து இதனை வேறுபடுத்தி காட்டுவது இதன் மொழி. சொல்கதை என்றபோதும் இதன் நுட்பமான விவரிப்பு ஆச்சர்யமூட்டுகிறது.வட்டார வழக்கில் வாசகனும் சங்கமித்துவிடுகிறான். காலவாயன் என்கிற விவசாயியின் மனவோட்டமாக கதை நீள்கிறது.நல்லதொரு கதை.

இருள் விலகும் கதைகள் நூலின் அட்டைப்படத்தின் வசீகரிப்பில்தான் இந்நூலை வாங்கினேன். இவை போன்ற தொகுப்பு நூல்கள் பல வெளிவர வேண்டும்.பல சிறுகதையாளர்களின் கதையை ஒரே நூலில் வாசிப்பது புதுவித வாசிப்பனுபவத்தை தருகிறது.ஒவ்வொரு கதையும் வெவ்வேறு பின்புலத்தை கொண்டிருப்பதால் வாசிப்பில் சலிப்பேற்படுத்தவில்லை.தொகுப்பாசிரியர் விஜய மகேந்திரன் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்.