Thursday, January 5, 2017

ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு பயணம்




'ஏ.ஆர்.ரஹ்மான் : இந்திய திரையிசையின் நவீன அடையாளம்' புத்தகம் புத்தகக்கண்காட்சிக்கு வருகிறது. மின்னம்பலம்.காமில் தொடராக எழுதியதன் புத்தக வடிவம்.

லியோ காபிக்கான விளம்பர இசையும், கார்டன் சேலைகளுக்கான விளம்பர இசையும் சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதில் பாரம்பரிய இசையும், மேற்கத்திய இசையும் கலந்து நவீன வடிவத்தில் வெளிப்பட்டிருக்கும். அதற்கு இசையமைப்பது யார்? என, எனக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்தபோது ‘திலீப்’ என்ற பெயரைச் சொன்னார்கள். முக்கிய விளம்பரங்களில் ரசிக்கத்தகுந்த இசை வந்தால் அது, இவருடையதாக இருக்கும் என்றார்கள். அப்போது, தூர்தர்ஷனில் ‘நேஷனல் யூனைட்டி ஆப் கான்சர்ட்ஸ்’ என்ற இசைபற்றிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒளிபரப்பாகும். இதன் தலைப்பு இசையும், அந்த நிகழ்ச்சி முடிந்தபின் போடும் ரோலிங் டைட்டில் இசையும் கேட்பதற்கே அந்த நிகழ்ச்சியை முழுவதும் பார்ப்பேன். இப்படி,ஆங்காங்கே  ரசித்துக்கொண்டிருந்த திலீப் என்ற இளம் இசையமைப்பாளர்தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் பெயர் மாற்றத்தோடு ‘ரோஜா’ படத்துக்கு இசையமைத்திருக்கிறார் என்ற செய்தியைப் படித்தபோது நானும் நண்பர்களும் சந்தோஷமடைந்தோம். நண்பர் கல்யாண்குமார், ரஹ்மானை எடுத்த முதல் நேர்காணலை (அதுதான் ரஹ்மான் பத்திரிகையுலகுக்கு அளித்த முதல் நேர்காணல்)‘இந்தியா டுடே’யில் படித்திருக்கிறேன். அந்த நேர்காணலில், ‘தமிழ் இசையை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல ஆசை’ இருப்பதாகத் தெரிவித்திருப்பார். சொன்னதுபோலவே, இன்று உலகம் முழுவதும் கொண்டு சென்றுவிட்டார்.


முதல் படத்திலேயே அவ்வளவு பெயர், புகழ், தேசிய விருது எல்லாம் கிடைத்தாலும், அதுகுறித்த பெருமையை  பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவர் மேற்கொண்ட நிதானமான இசைப் பயணம், இசையை விரும்பும் இளைஞர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியதாகும். ரோஜா வரும்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்றுமுதல் அவர், ஏதாவது பத்திரிகைக்கு பேட்டியளித்தால் வாங்கிவிடுவேன். எந்த தொலைக்காட்சியில் பேசினாலும் தவறவிடாமல் பார்ப்பேன். அவருடைய இசையும் ஆளுமையும் அந்தளவு எனக்குள் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. என்னையறியாமலே அவர் பற்றிய பல தகவல்களை சேர்த்துவைத்திருந்திருக்கிறேன் என்பதை இதை எழுதும்போது உணர்ந்தேன்.


சிறு வயதில் அப்பாவை இழந்து, படிப்பைத் துறந்து, குடும்பப் பொறுப்புகளுக்கென சிந்தசைசர் போன்ற எலெக்டரானிக் இசைக்கருவிகளை சுமந்து ரிக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்கு அலைந்த  பத்து வயது சிறுபையனின் சித்திரம், ரஹ்மான்  பல்வேறு உயரங்களை அடையும்போதெல்லாம் என் நினைவுக்கு வரும். அந்தவிதத்தில், இளைஞர்களுக்கான பெரிய ஊக்கசக்தியாக அவர் விளங்குகிறார். எந்தத் துறையிலும் இருக்கக்கூடிய இளைஞர்கள், ரஹ்மானை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டவர்கள் அவர்கள் துறையில் முன்னேறுவதை கண்ணால் கண்டிருக்கிறேன்.

அவர் படங்களின் கேசட் வரும்போதெல்லாம் கடைகளுக்கு ஓடிச்சென்று வாங்கி அதை ஆர்வமாகக் கேட்டு ரசிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன். இப்படி, ஒரு ரசிகனாக அவரது பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன், அவரைப்பற்றி இப்படி ஒரு தொடர் எழுதமுடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ரஹ்மானை ஒரே ஒருமுறை நேரில் பார்த்தும் இருக்கிறேன். 'விண்ணைத்தாண்டி வருவாயா'படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொட்டுவிடும் தூரத்தில் அவர் நின்றிருந்தார். அப்போது, அவர் ஆஸ்கார் வாங்கிய புதிது. அவரைச் சுற்றியிருந்த செக்யூரிட்டிகளால், அவரைப் பார்த்தும் பேச முடியாமல்போனது.


பின்பு, ரஹ்மான் பற்றி ஒரு கட்டுரை எழுத முயற்சி செய்துகொண்டிருந்தேன். ஏனோ, அந்த விஷயம் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. மின்னம்பலம்.காமில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ரஹ்மான் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரை எழுதுவதாக ஒத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். அந்தக் கட்டுரை முடியாமல் நீண்டபடியிருந்தது. இரண்டாவது பகுதியை அடுத்த நாள் எழுதினேன். அப்படியும் முடியவில்லை.

பிரசுரமாகியிருந்த அந்த இரண்டு பகுதிகளுக்கும், பல இடங்களிலிருந்து வந்த வரவேற்பு எங்களை வியப்படையச் செய்தது. நண்பர் அரவிந்த் யுவராஜ், முதல் பகுதி வந்த நாளன்றே எனக்கு போன் செய்து, இதை தொடராக எழுதுங்கள் என்றார். உங்களால் முடியும் என நம்பிக்கையும் கொடுத்தார். நண்பர்கள் விநாயகமுருகன், ஜீவ கரிகாலன், விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் எனப் பலரும்,ரஹ்மான் தொடரை விரிவாக எழுதச் சொன்னார்கள். என்னால் முடியுமா? என்று உள்ளுக்குள் குரல் கேட்டாலும் பொருட்படுத்தாமல் எழுத ஆரம்பித்தேன். ரஹ்மான் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் வந்திருக்கின்றன. முடிந்தளவு தெரியாத விஷயங்களை, அபூர்வ நிகழ்வுகளை அதிகம் எழுத வேண்டும் என முடிவு செய்தேன். எழுதினேன். கடலில் ஒரு கைப்பிடியளவு எடுத்த நீர் மட்டுமே இந்தப் புத்தகம். அவர் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களையும் எழுதுவது இந்தத் தொடரின் நோக்கமல்ல. இதை ஏன் விட்டுவீட்டீர்கள் எனக் கேட்பவர்களுக்கு இந்த விளக்கம்.


இந்த தொடர் எழுதிக்கொண்டிருக்கும் போது  இசை பற்றிய எந்த சந்தேகங்கள் வந்தாலும், ஏதாவது தகவல் என்றாலும் போன் செய்து  இசையமைப்பாளர் சி. சத்யா அவர்களை கேட்பேன். சரியான விஷயங்களை சொல்லி தெளிவு படுத்துவார். அவரும் இந்த தொடரை  தொடர்ந்து படித்து 'நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க' என்று அவரது பல இசைப்பணிகளிடையே எனக்கும் நேரம் ஒதுக்கியுள்ளார். அவருக்கு இந்த புத்தகம் வரும் வேளையில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருடங்களை உறுதிப்படுத்திக்கொள்ள, சில தகவல்களை சேர்ப்பதற்கு நண்பர் அரவிந்த் யுவராஜ் உடனான உரையாடல் மிகவும் கைகொடுத்தது. காமராஜ் திரைப்படத்தின் இயக்குநர் அ.பாலகிருஷ்ணன் ரஹ்மானின் ஆங்கில சுயசரிதை புத்தகத்தை கொடுத்து உதவினார். அவர் கொடுத்த புத்தகத்தை ஓர் இரவே முழித்த படித்த பின் ரஹ்மான் பற்றிய தொடரை எழுதியே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவருக்கும் நன்றி.


புதன்கிழமை தோறும் மின்னம்பலம்.காமின் காலைப் பதிப்பில் ரஹ்மான் தொடர் வெளிவந்தது. வெளிவந்த சில மணிகளில் படித்துவிட்டு வாசகர்களிடமிருந்து உற்சாக அழைப்புகள் வரும். எங்கேயாவது பார்க்கும் நண்பர்கள் ரஹ்மான் தொடர்பற்றி பேசாமல் இருக்கமாட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

மின்னம்பலம்.காமில் என்னை இணைத்த மின்னம்பலம்.காமின் இணை ஆசிரியர் டி.அருள் எழிலனுக்கு அன்பான நன்றி. ரஹ்மான் தொடருக்கு பொருத்தமான படங்களைத் தேர்வுசெய்து இணைத்த கலை பகுதியின் இணை ஆசிரியர் சிவா, ரஹ்மான் தொடரை எழுதும்போது என்னுடன் விவாதித்தும், அதற்கான மெய்ப்பு பார்த்தும், தொடர்களை சரி செய்து, எளிதாக வாசகர்கள் படிக்கும்வண்ணம் செய்த ஸ்ரீஷங்கர் ஆகிய இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இந்தத் தொடரை முழு சுதந்திரத்தோடு மின்னம்பலம்.காமில் எழுத அனுமதித்ததோடல்லாமல், சிறப்பாக புத்தகமாகவும் கொண்டுவரும் மின்னம்பலம் குழுமத்தின் தலைவரும், ஆசிரியருமான திரு. அ.காமராஜ் அவர்களுக்கு என் பிரத்யேக நன்றி.

என்றும் அன்புடன்

விஜய் மகேந்திரன்

மிகுந்த மகிழ்ச்சியுடன் இதை பகிர்கிறேன் .சென்னை புத்தக கண்காட்சியில் ஸ்டால் எண் 81 மின்னம்பலம்.காமில் 'ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்திய திரையிசையின் அடையாளம்' புத்தகம் கிடைக்கும்.
சென்னை புத்தக கண்காட்சி
சனவரி 6 - 19, 2017
செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகம்
(பச்சையப்பா கல்லாரி எதிரில்)
பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை,
அமைந்தகரை (செனாய் நகர்),
சென்னை 600030