Sunday, January 30, 2011

ஒரு மனிதனின் ஒரு நகரம்

சிங்கப்பூரில் இருந்து வரும் தங்கமீன் இணையதளத்தில் தமிழகம் பகுதியில் எனது கட்டுரை இடம் பெறுகிறது.அவற்றின் சில பகுதிகளை இங்கு பகிர்கிறேன் .முழு கட்டுரையை இணையதளத்தில் வெளிவந்தவுடன் நண்பர்கள் படிக்கவும்.

ஒரு மனிதனின் ஒரு நகரம் – சென்னை


விஜய் மகேந்திரன்


சென்னையை பல்வேறு ஊர்களில் இருந்தபடி, சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த தலைநகரில் வசிக்க நேருமென்று ஒரு நாளும் நினைத்ததில்லை. தொண்ணூறுகளின் துவக்கத்தில் அப்பாவிற்கு அரக்கோணம் மாற்றியபோது சென்னை மிக அருகாமை ஊராக இருந்தது. தமிழநாட்டில் முதல் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. சென்னைக்கும் அரக்கோணத்திற்கும் தான் தொண்ணூறுகளில் பார்த்த சென்னையின் மனிதர்களின இயல்பு இப்போது ஏதோ ஒரு விதத்தில் தலைகீழாக மாறியிருக்கிறது. அசோக்நகரில் சித்தி வீடு இருந்தது. விடுமுறைக்கு அவர்கள் அரக்கோணத்திற்கு வருவது அல்லது நாங்கள் சென்னைக்கு செல்வது வழக்கமாயிருந்தது.

சென்னை என்பது புதிய சினிமாக்கள் பார்க்கும் இடமாகவே அப்போது எனக்கு இருந்தது. ஆல்பர்ட், உதயம் அப்போது அருமையாக பராமரிக்கப்பட்ட திரையரங்குகளாகும். உதயம் தியேட்டரில் அதிக திரைப்படங்கள் பார்க்க நேர்ந்திருக்கிறது. அஞ்சலி, சத்ரியன், மைக்கல் மதனகாமராஜன், கோபுர வாசலிலே.. போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடியவை அந்த ஆண்டுகளில்.

அப்பாவிற்கு மத்திய அரசில் வேலை என்பதால் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பெட்டித்தூக்கி வேறு ஊர் செல்ல வேண்டியிருக்கும். ஒரு வழியாக கல்லூரிப் படிப்புக்காக மதுரைக்கு மாற்றல் வாங்கி வந்தார், அப்பா. படிப்பு முடிந்ததும் சென்னை சென்று செட்டிலாகி விட வேண்டும் என்ற அப்பார்ட்மெண்ட்வாசி கனவுதான் எனக்கும் இருந்தது. அந்த சாதாரண கனவு அவ்வளவு எளிதானதல்ல என்பது சென்னைக்கு வந்த பிறகுதான் புரிந்தது. 2005-ல் அப்பாவிற்கு ஓய்வு பெற மூன்று வருடங்கள் இருக்கும்போதுதான் சென்னைக்கு மாற்றினார்கள். அதுவரை அடிக்கடி வந்து செல்லும் ஊராகவும், ஒரு சுற்றுலா பயணியின் மன நிலையோடுதான் வந்து சென்று கொண்டிருந்தேன். 2000 முதல் 2005 வரை சென்னையில் தங்கி பணியாற்ற என் வீட்டினர் ஒத்துக்கொள்ளவேயில்லை.

ஒரு கட்டத்தில் மதுரையில் வேலையில் முன்னேற வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. நான் பணியாற்றும் பிஸியோதெரபிதுறையின் வேலைகளும் மிகக்குறைவாக மதுரையில் இருந்தன. நானே சென்னைக்கு வர வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த போது தான் இந்த மாற்றல் வந்து தலைநகருக்கு கொண்டு வந்து சேர்த்தது.

குவார்ட்டர்ஸ் கிடைத்த இடம் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை. இங்கு வந்து இறங்கிய போது எனக்கும் இந்தப் பகுதிக்கும் ஏதோ ஒரு தொடர்பு முன்னரே இருப்பது போல உணர்ந்தேன்.

வேலையில்லாமல் ஓரிரு மாதங்கள் இருக்க நேர்ந்தது. சாதாரணமாக ஒருவர் சென்னையில் வேலை தேட ஆரம்பித்தால் நல்ல இடத்தில் வேலை கிடைப்பதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம் என்பது என் கணிப்பு. நகரம் பிடிபடவே இரண்டு மாதங்கள் ஆகிவிடும்.

அந்த காலத்தில் எழுத்தாளர்களை நோக்கிய பயணங்கள் ஆரம்பமாகிறது. எஸ்.ராமகிருஷ்ணனை அடிக்கடி சந்திப்பேன். சென்னை குறித்து நிறைய விஷயங்களை அவர் எனக்கு சொல்லித்தருவார். புத்தக வெளியீட்டு கூட்டம் நடக்கும் இடங்கள், பிலிம் சேம்பர், புக் பாயிண்ட், ருஷ்யன் கலாச்சாரமையம், தேவநேயப்பாவணர் நூலக அரங்கம் என உரையாடலின் வழியே அறிமுகப்படுத்தினார். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடும் பழைய புத்தகக் கடைகள் பற்றியும் அறிந்து கொண்டேன். அங்கேதான் சம்பத்தின் “இடைவெளி” போன்ற மறுபதிப்புக் காணாத புத்தகங்களை வாங்கினேன். கிடைப்பதற்கரிய, தற்போது பதிப்பில் இல்லாத புத்தகங்களை அங்குதான் காண முடிந்தது. “குட்டி இளவரசன்”, “கரம் சேவ் சகோதரர்கள்”, சார்த்தர் எழுதிய புத்தகங்கள் என்று பல அரிய நூல்கள் மலிவான விலையில் கிடைத்தன.

உயிர்மை நடத்தும் பெரும்பாலான கூட்டங்களுக்கு மனுஷ்யபுத்திரன் அழைப்பு விடுப்பார். இத்தனைக்கும் அப்போது நான் இலக்கிய வாசகன் மட்டுமே, பல நண்பர்களை அறிமுகப்படுத்தினார். நேரம் கிடைக்கும் போது அவர் வீட்டிற்கு செல்வேன். பெரும் வேலைகளுக்கிடையேயும் எனக்காக நேரம் ஒதுக்கி இலக்கியம் குறித்தும், புதியதாய் உயிர்மையில் வரப்போகும் புத்தகங்களை குறித்தும் பேசுவார்.

இப்போதைய சென்னையின் வெறுமைத் தோற்றத்தை நினைத்துப் பார்க்கிறேன். எந்த நண்பரின் வீட்டுக்குள்ளும் நுழையவே முடியவில்லை. அப்படி நுழைந்தாலும் இலக்கியம் குறித்து பேச முடியாது. பொது இடங்களில் சந்திப்பதோடு சரி. ஆனால் மனுஷ்யபுத்திரனும், ராமகிருஷ்ணனும், அவர்கள் வீட்டிற்கு சென்ற போது அமரவைத்து மணிக்கணக்கில் பேசியது எங்ஙனம் என யோசிக்கையில் வியப்பே மேலோங்கியது. இன்று வரைக்கும் இலக்கியம் தேடி வரும் இளைஞர்களுக்கு அவர்களின் வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றது.

http://www.thangameen.com/

Friday, January 28, 2011

இருள் விலகும் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)


நன்றி உயிரோசை இணைய இதழ்
இன்று எழுதிவரும் இளம் சிறுகதையாளர்களை மையப்படுத்தி, கொண்டு வந்த தொகுப்பு இது.

இத்தொகுப்பின் முக்கியச் சிறப்பு என்று ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும். இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அனைத்தும் இத்தொகுப்புக்கெனவே எழுதப்பட்ட சிறுகதைகள். வேறு எந்தப் பத்திரிகைகளிலும் (இணையத் தளங்களில்கூட) வெளிவராதவை.

வடிவம், உள்ளடக்கம், கதை சொல்லல் முறை, ஆகிய அனைத்திலும் பல்வேறு சோதனை முயற்சிகள் இக்கதைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வா.மு.கோமு, சுதேசமித்திரன், ஷாராஜ், கே.என்.செந்தில், ஹரன் பிரசன்னா, எஸ்.செந்தில்குமார், பாலை நிலவன், லஷ்மி சரவணக்குமார், சிவக்குமார் முத்தய்யா, விஜய் மகேந்திரன், புகழ், என்.ஸ்ரீராம் ஆகியோரின் சிறுகதைகள் இதில் இடம் பெற்றுள்ளன.

படைப்பாளிகளின் பிரபலத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் படைப்புகளுக்கே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு இது.

இக்காலகட்டத்தின் சிறந்த பதிவாகவும், சிறுகதையாளர்கள் எதிர்காலத்தில் சிறுகதைகளின் திசைகளை தீர்மானிக்கப் போகிறார்கள் என்பதையும் இத்தொகுப்பைப் படிக்கும் நீங்கள் உணர்வீர்கள்.

இத்தகைய புதிய முயற்சிகள் தொடர்வது தமிழுக்கு நல்லது.

பாண்டியன்

நூல் : இருள் விலகும் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)

தொகுப்பாசிரியர் : விஜய் மகேந்திரன்

வெளியீடு : சோழன் படைப்பகம்,
5-டி, பொன்னம்பலம் சாலை,
கே,கே.நகர், சென்னை-78.
கைப்பேசி: 9444302967, 9940165767

பக்கங்கள் : 144 விலை : ரூ.90

Friday, January 21, 2011

இரவுக்காக காத்திருப்பவன்


நம் இருவருக்குமான

இந்த இரவு

ஆவியாகிவிடக்கூடதென

பிரார்த்திக்கிறேன்.தயவு செய்து

உணவு மேஜையில்

உருகிக்கொண்டிருக்கும் -இந்த

மெழுகுக்கரைசலை

அணைத்து விடு

அது இந்த இரவை

கரைத்து கொண்டிருக்கிறது.கடிகாரங்களை

உயிரிழக்கச் செய்

காலம் அப்படியே

உறைந்து போகட்டும்.உள்ளாடைகள் ,ஆடைகள்

படுக்கை விரிப்பு ,மருந்துக்குப்பிகள்,

தலையணைகள்,புத்தகங்கள்,

கலைந்தே கிடக்கட்டும்,

இந்த இரவின் மீது

வேறெதையும்

அடுக்க வேண்டாம்.முன்னெப்போதையும்

விட இக்கணம்

பாதுகாப்பாய் இருக்கிறது.முன்னாள் காதலியின் அவமதிப்பு,

உயிர் நண்பனின் துரோகம்,

பணி நீக்க நாட்களின் துயரம்,

கடந்த வாரத்தின்

இவையனைத்தும்

நினைவுகளில் இருந்து

வெகு தூரம்

சென்றுவிட்டுருக்கிறது.உனது அருகாமை,

உனது கரம் பற்றல்,

உனது எனது கண்ணீர்,

தேற்றல் ,ஆற்றுபடுத்துதல்,

இத்தியாதி,இத்தியாதி..எனது கையிருப்பில்

இருக்கும் இந்நாளை

ஒருபோதும் செலவழிக்காமல்

குழந்தையை போல

ஓடி ஓடி

ஒளித்துவைக்க முயல்கிறேன்.துயரம்.

மெல்லிய மஸ்லின் திரைச்சீலையின்

பின்னிருந்து வருமிந்த

பெருவெளிச்சம்.எங்கிருந்தோ ஒரு காலைவேளை,

என் வீட்டை நெருங்கிக்கொண்டு

இருக்கிறது.

வேகமாக எதிர்வரும் ரயிலில்

நொறுங்க காத்திருப்பவனை

போல உணர்கிறேன்

இக்கணம்.பகல்...பகல்...பகல்..

எங்கும் பகல்..

கடக்க இயலாத

முற்பகல்.-விஜய் மகேந்திரன்.

--

Tuesday, January 18, 2011

எனக்கு பிடித்த கவிதை...

ஐரின் பாப்பா

லிவி என்ற பூனை
ஐரின் குட்டியின்
எல்லா க‌தைக‌ளிலும் வ‌ரும்
லிவி இல்லாம‌ல் அவ‌ளால்
க‌தைக‌ள் சொல்ல‌ முடியாது
என்னுடைய‌ எல்லா க‌தைக‌ளிலும்
லிவி பூனைக்குட்டி
க‌ண்டிப்பாக‌ இட‌ம் பெற‌ வேண்டும்
லிவி பூனைக்குட்டி அவ‌ளுக்கு
முறுக்கு வாங்கி த‌ரும்
வாக்கிங் கூட்டிச்செல்லும் என்றாள்
லிவி பூனைக்குட்டி
க‌த‌வின் பின்னாடி ஒளிந்திருப்ப‌தாக‌
சொல்லி க‌த‌வை திற‌க்க
“மியாவ்” என்ற‌ ச‌த்த‌த்துட‌ன்
வெளிவ‌ந்தார்
லிவி பூனைக்குட்டியாய்
மாறிப்போன‌ அவள்
தாத்தா

எழுதியவர் அடலேறு சதீஷ்.

Friday, January 14, 2011

சாருவின் புதிய நூல்.

தமிழ் சினிமா மீது தனது காட்டமான கருத்துக்களால் உலக சினிமா அளவுக்கு உயர்த்தப்பாடுபடும் சாருவின் புதிய நூல் .''உள்ளே வராதே மிஷ்கின்''.மிஷ்கின் என்ற தனிமனிதன் மேல் வைக்கப்படும் விமர்சனங்கள் மட்டுமல்ல பொலிவிய சினிமா,செக் சினிமா முதல் அருகாமை கேரளா சினிமா வரை வளர்கையில் தமிழ் சினிமா வளராததிற்கு தன் புத்தகத்தை படிக்காத மிஷ்கின் தான் காரணம் என ஆணித்தரமாக சாரு நிறுவுகிறார்.இணையத்தில் வந்த போதே பல விவாதங்களை கிளப்பிய சினிமா ஆர்வலர்கள் படிக்க வேண்டிய நூல்.
விலை ரூபாய் 100.
இப்போதே முன்பதிவு செய்யவும்..

Sunday, January 9, 2011

சென்னை புத்தக கண்காட்சியில் எனது புத்தகங்கள்சென்னை புத்தக கண்காட்சியில் எனது புத்தகம்'' நகரத்திற்கு வெளியே'' உயிர்மை ஸ்டாலில் கிடைக்கிறது.வரிசை எண் F3.
''இருள் விலகும் கதைகள்'' தொகுப்பு நூல் தோழமை ஸ்டால் வரிசை எண் 417.இல் கிடைக்கிறது

Tuesday, January 4, 2011

புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்.

புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்....
உயிர் எழுத்து கதைகள்-உயிர் எழுத்து [அடியேனின் கதை ஒன்றும் இதில் உள்ளது]
சுகுணாவின் காலை பொழுது -மனோஜ்-உயிர்மை..
வெண்ணிலை -சு.வேணுகோபால் -தமிழினி.
உழைப்பை ஒழிப்போம்-அடையாளம்.
அனுபவ சித்தனின் குறிப்புகள் -ராஜா சந்திரசேகர்.-ஆழி பதிப்பகம்
.அப்பாவை புனிதப்படுதுதல்.-லக்ஷ்மி மணிவண்ணன்.-அனன்யா
வெள்ளை பல்லி விவகாரம்-லஷ்மி மணிவண்ணன்.-உயிர்மை.
முக வீதி-ராஜ சுந்தர்ராஜன்-தமிழினி.
சுவை மணம் திடம்-நிஜந்தன் -உயிர்மை
கான் சாஹிப் -நாஞ்சில் நாடன்.-தமிழினி.

பட்டியல் தொடரும் நண்பர்களே.
.