Monday, January 12, 2015

அதிநவீனப் பெண்களை மையமிடும் கதைகள் - நிலாரசிகனின் "ஜூலி யட்சி" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்


நிலாரசிகன் சரளமான தனது கவிதைகளின் மூலம் தமிழிலக்கிய சூழலில் கவனம் பெற்றவர். ஒரு கவிஞன் கதைகள் எழுத ஆரம்பிக்கும் போது அவனையறியாமலே கவித்துவச்செறிவு கதைகளுக்கும் வந்துவிடும். இவரது முதல் சிறுகதை தொகுப்பான "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" வாசித்து இருக்கிறேன். அதிலும் பெண்களை மையமாகக் கொண்ட பல கதைகள் உண்டு. தற்போது "ஜூலி யட்சி" என்ற புதிய தொகுப்புடன் வந்திருக்கிறார். 

வனதேவதைக்கதைகள், மேஜிக்கல் ரியலிசக் கதைகள்,எது கனவு? எது நிஜம்? என்றே பிரித்தறிய முடியாதபடி வித்தியாசமான கதைகளால் நிரம்பியிருக்கிறது இத்தொகுப்பு.பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இன்றைய மாடர்ன் பெண்கள் இவரது கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். ராகினி, ப்ரியம்வதா,ஜூலி,வதனா,மிதா என்ற அழகிய நவீன பெயர்களில் கதைகளுக்குள் நடமாடுகிறார்கள். யதார்த்த கதை போல ஆரம்பிக்கும் கதைகள் மிகுபுனைவிற்குள் நுழைந்து மீண்டு திரும்புகின்றன. இவரது அபார கற்பனையுலகம் பல கதைகளில் வாசகனை பிரமிக்க வைக்கிறது.


எனக்கு இந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்த கதை "ப்ரியம்வதாவின் பகல்". இந்தக் கதையின் தலைப்பு தவிர வேறெங்கும் அவளது பெயர் வருவதில்லை. காரணம் அவள் பெயரை மறந்துவிடுகிறாள். அல்லது யாரும் அவளைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவளது காதலன் இந்திரன். இருந்தாலும் நகரத்தனிமை அவளை வாட்டுகிறது. தேவலோக இந்திரனே அவளிடம் "டியர் ஜில்ஸ்" என்று குறுஞ்செய்தி அனுப்புவதாக இந்தக் கதையை அமைத்து இருக்கிறார் நிலாரசிகன். இறுதியில் அவள் ஒரு முடிவை எடுக்கும் போது அவளது பெயர் நினைவுக்கு வருகிறது. நகரத்தில் தன்னை தொலைத்து தேடுபவர்கள் அதிகம் என்பதை இக்கதை குறியீடாக சொல்கிறது. 'அதிகாலையில்  படுக்கையறை யன்னலை கொத்துகிற காகம்தான் அவளுக்கு அலாரம்'  என்று கவித்துவத்துடன் ஆரம்பித்து  மலை அவள் பெயரைச் சொல்லி அழைத்தபடி ஓடிவந்தது என முடிகிறது. இம்மாதிரி கதைகள் எழுதுவதற்கு கொஞ்சம் திறமையும் கற்பனையும் இருந்தாக வேண்டும். "ப்ரியம்வதாவின் பகல்" நிலாரசிகன் எழுதிய கதைகளில் மிக முக்கியமானது என படிப்பவர்களும் உணர்ந்து கொள்வார்கள். விவரணைகளில் பல இடங்களில் கவிதைக்கும் சிறுகதைக்குமான இடைவெளியை நிரப்புகிறார்.


"கேவல்" என்ற கதை காணாமல் போகும் அப்பாவை தேடும் மகளுடையது போல எழுதப்பட்டிருந்தாலும் முடிவில் கதையின் திசை தலைகீழாக மாறிவிடுகிறது. இந்தக்கதையில் கதை எது? உண்மைச் சம்பவமா? கற்பனையா என்று எளிதாக கண்டு கொள்ள முடியாதபடி அருமையாக எழுதியிருக்கிறார்.


பாலியல் அத்துமீறல்கள் நடத்தும் ஆண்களை பழிவாங்க, ஜூலி என்ற நவீனப் பெண் ஜூலி யட்சியாக உருமாறுகிறாள்.தேவதைக்கதை வகையைச் சேர்ந்தது "ஜூலி யட்சி" சிறுகதை. ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள் இவரது கதைகளில் வீட்டுக்குள் முடங்கிவிடுவதில்லை. எதிர்த்து நிற்கிறார்கள்.சண்டை இடுகிறார்கள். பழிக்கு பழியும் வாங்குகிறார்கள். இவரது பல கதைகள் அதிநவீனப் பெண்களின் உலகை தெளிவாக காட்டுகிறது.


தொகுப்பில் முதல் கதையான "தர்ஷிணிப்பூ" மரத்தினுள் இருந்து வெளிவரும் தேவதையைப் பற்றியது. கானகம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறதா, அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறையை சொல்கிறதா என்றால் இரண்டையும் வலியுறுத்துகிறது. சூழலியல் மீது நிலாரசிகனுக்கு எப்போதும் அக்கறை உண்டு. அவரது கவிதைகளில் வரும் எண்ணற்ற பறவைகளும் மீன்களும் இதற்கு சாட்சி. "தர்ஷிணிப்பூ" கதையிலும் அதை செய்திருக்கிறார்.


"குறளியின் டிராகன்" கதையில் குள்ளமாக இருப்பதற்காக சமூகத்தால் ஒதுக்கப்படும் பெண், குன்றாத  இளமையையும், அழகையும் வரமாக பெற்ற பின் அவளுக்கு பின் அலையும் இளைஞர்களையும் பெண்களே அவளைப் பார்த்து பொறாமைப்படுவதாலும் தனிமை நிறைந்ததாய் மாறிப் போகிறது அவளது வாழ்க்கை.

"ஜூலியட்சி" தொகுப்பு முழுவதும் உள்ள கதைகள் சரளமான எளியமொழிநடையிலும் அதே நேரத்தில் அதீத கற்பனைத்திறனுடனும் எழுதப்பட்டிருக்கிறது. படிப்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை தரிசிக்க செய்யும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. நிலாரசிகனுக்கு முழுநீளநாவல் எழுதும் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவங்கள் உண்டு.

அதை இந்த ஆண்டு அவர் செய்ய வேண்டும். புத்தகத்தை வெளியிட்டுள்ள "பொள்ளாச்சி இலக்கிய வட்டம்" அமைப்பினருக்கு நிறைய நல்ல புத்தகங்களை கொண்டு வர என்னுடைய வாழ்த்துகள்.

நூல்: ஜூலி யட்சி
ஆசிரியர் : நிலாரசிகன்
விலை: ரூ.80
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
இணையத்தில் வாங்க:
http://www.wecanshopping.com/products/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html

Saturday, January 10, 2015

சாமானிய மனிதனின் எதிர்குரல்- இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள்

எனது நண்பரும், தமிழின் தற்கால கவிஞர்களில் முக்கியமானவருமான இளங்கோ கிருஷ்ணனுக்கு சென்னை இலக்கியத் திருவிழா அமைப்பின்சார்பில் 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் எழுத்தாளர் விருது கிடைத்துள்ளது. நடுவர்களாக இருந்து ரவி சுப்ரமணியனும், தமிழச்சி தங்கபாண்டியனும் மிகச்சரியாக தேர்வு செய்துள்ளனர்.

எனக்கு தெரிந்து 2005 ஆம் ஆண்டு முதல் இளங்கோவின் கவிதைகளை சிற்றிதழ்களில் படிக்க ஆரம்பித்தேன். இன்று பெரிய இதழ்கள், இணைய இதழ்கள் என்று பரவலாக இயங்கிவருகிறார் இளங்கோ. கவிதைகள் தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் சென்று இலக்கிய கூட்டங்களில் விமர்சன உரைகளும் ஆற்றியுள்ளார். அந்த விமர்சனக் கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுவது அவசியம். நாவல், சிறுகதை, கவிதை, பத்திகள் என்று பல்வகைப்பட்ட புத்தகங்கள் பற்றி இளங்கோ எழுதியுள்ளவை இலக்கிய ரசனையையும், புரிதலையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வாசகர்களுக்கு உதவும். இளங்கோ கிருஷ்ணனின் கவிதை குறுங்கதைகள் அடிப்படையில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளன் என்ற முறையில் அதிகம் கவர்பவை. அவர் கவிதை தவிர்த்து சிறுகதைகளும் வருங்காலத்தில் எழுதவேண்டும் என்ற ஆசையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இளங்கோவின் கவிதைகள் உரைநடைக்கு அருகில் இயங்குபவை. அடர்த்தியான கவித்துவ மொழியில் எழுதப்பட்டிருக்கும். அதிகாரத்தை எண்ணி பகடி செய்யும் கவிதைகளும் அவரிடம் அதிகமுண்டு. அவரது காயச்சண்டிகை தொகுப்பில் உள்ள ஹிட்லர் கவிதை இதற்கு சிறந்த உதாரணம். ஜெர்மனியில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஹிட்லரின் முகம் ஒருநாள் கண்ணாடியில் பார்க்கும் போது பார்த்தவுடன் சிரிக்கத்தூண்டும் சாப்ளினின் முகமாக மாறிப்போகிறது. நான் தான் ஹிட்லர் என்று சொல்லியும் கேளாமல் மக்களும், குழந்தைகளும் அவரைப்பார்த்து சிரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கேலியும்,கிண்டலும் தாங்க முடியாமல் ஹிட்லர் ஓட ஆரம்பிக்கிறார். அப்போது அவரது நடை சாப்ளினைப் போலவே மாறிப்போயிருந்தது என கவிதையை முடிக்கிறார் இளங்கோ. ஒரு அதி நவீனக் கதை போல தோன்றும் விஷயத்தை அற்புதமான கவிதையாகவே எழுதியிருக்கிறார். பட்சியன் சரிதம் தொகுப்பில் உள்ள முதல் கவிதையான 'ஆர்க்கிமிடிஸ் பூமியை படித்துக்கொண்டிருக்கிறான்' சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான கவிதை. நாடு முழுவதும் நடக்கும் பாலியல் பலாத்காரங்களையும், அரசியல் வன்முறைகளையும் நினைவுப்படுத்தி படிப்பவர்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது. இளங்கோவின் கவிதைகளில் தத்துவங்களும் அதிகமாக தென்படும். சமகால கவிஞர்களில் பலவேறு தத்துவ சிக்கல்கள், பின்நவீனத்துவ பகடி, கவிதையை வழக்கமான தொனியில் இருந்து கலைத்துப்போட்டு  புதிய மொழியில் கவிதையை எழுப்ப முனைவது போன்ற சிறந்த நவீனக் கவிஞனுக்கு இருக்க வேண்டிய எல்லா திறமைகளும் இவருக்கு இருக்கிறது. பரந்துபட்ட வாசிப்பனுபவமும், வாழ்க்கை பாடங்களும் அதற்கு துணை நிற்கிறது.' ஒரு சாமானியன் என்ன செய்ய முடியும்? கரப்பானையோ, சிறு செடியையோ இம்சிப்பதன்றி' என்ற அவரது வரிகளை அவரது கவிதை உலகிற்கு எளிதாக பொருத்தலாம். சாமானியன் கேட்கமுடியாத கேள்விகளை, செய்யமுடியாத விஷயங்களை தன்  கவிதைகளின் மூலம் எதிர்குரலாக ஒலிக்கவிடுகிறார் இளங்கோ. அதனால் தான் அவரால் உன் கவிதையால் எதை தடுக்க முடியும்? உன் இனம் நசுக்கப்படுவதை, உன் கடவுள்கள் கொல்லப்படுவதை , உன் நிலம் சிதைக்கபடுவதை ,போ போய் வேலையைப் பார், பொருளீட்டு, புணர், சிரி,மரி கவிதையாம் மயிராம்...என்று எழுத முடிகிறது.

இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ள இளங்கோ விரைவில் தனது நாவலையும் முடித்து வெளியிடுவார் என்று நினைக்கிறேன். பொருளாதார நிர்பந்தங்கள் அற்ற வாழ்வு அவருக்கு அமைந்தால் அவரது எழுத்துக்களின் அளவையும் கூட்டும். தற்போது சென்னையில் பத்திரிக்கை பணியை துவங்கியுள்ள இளங்கோ கிருஷ்ணனுக்கு இது மிகவும் உகந்த நேரம். ஆட்டத்தின் விதிமுறைகள் அவருக்கு தெரியும். ஆடுகளமும் தயாராக உள்ளது. அவர் சிறப்புடன் ஆடி இதில் ஜெயிக்க வேண்டும். இந்த உரைக்கு தார்மீக பலமாக இருந்த நண்பர்கள் கவின் மலர், சாம்ராஜ் இருவருக்கும் என் நன்றிகள். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.