Friday, June 6, 2014

இயற்கையை கண்டடையும் கவிதைகள் – நிலாரசிகனின் “கடலில் வசிக்கும் பறவை”

பெருகிவரும் கவிதைத் தொகுப்புகளில் எது நல்ல தொகுப்பு எனத் தேடிப்பிடிப்பதற்குள் பெரும் ஆயாசம் ஏற்பட்டுவிடுகிறது. தமிழ்க்கவிதைகள் ஆயிரக்கணக்கானவை ஆண்டுதோறும் சிற்றிதழ்கள் தவிர வார,மாத இதழ்களிலும் வெளியாகின்றன.இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 30 கவிதைத்தொகுப்புகள் தீவிர இலக்கியதளத்தில் மட்டும் வெளிவந்திருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு வாசிக்க கிடைத்த தொகுப்புதான் நிலாரசிகனின் “கடலில் வசிக்கும் பறவை”. இவர் ஏற்கனவே “வெயில் தின்ற மழை”,”மீன்கள் துள்ளும் நிசி” என இரண்டு தொகுப்புகளை வெளியிட்டு கவனம் பெற்றவர்.

இவரது முந்தைய தொகுப்பான “மீன்கள் துள்ளும் நிசி”யில் பல கவிதைகளை அடர்த்தியான படிம மொழியில் எழுதியிருந்தார். அதில் ஜூலி என்னும் சிறுமியை உருவகமாக கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் பெரும்பான்மையான கவனத்திற்குள்ளானது.
“கடலில் வசிக்கும் பறவை” கவிதைத் தொகுப்பு முந்தையை தொகுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிய மொழியில் குறைந்த வரிகளில் மிக அடர்த்தியான உருவகங்களுடன் பன்முக அர்த்தங்களை பேசுவதாக இருக்கிறது.

இத்தொகுப்பு முழுவதும் இயற்கை பொருட்களான நீர்நிலைகள்,பறவைகள்,மறைந்து போன விலங்குகள் என இயற்கை புறகாரணிகளால் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதை எவ்வித பிரச்சாரமுமின்றி படிமமொழியில் சிறந்த உருவகங்களைப் பயன்படுத்தி இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதியிருக்கிறார் நிலாரசிகன். “ஜென்” மனநிலையும் இவர் கவிதைகளில் தென்படுவதாக தோன்றினாலும் அதுவும் இவரது புதுமையான உருவகத்தால் தனக்கென்று ஒரு தனி இயல்பை உருவாக்கி தனித்து நிற்கிறது. இதை இவரது தனிச்சிறப்பென்று கூறுவேன்.

“கிணற்றுக்குள் மறைந்துகொள்வது
எவ்வளவு எளிதானது.
அதற்கு முன் செய்யவேண்டியது
ஒன்றே ஒன்றுதான்.
பழுத்த இலையாக மாறும்
வித்தை தெரிந்திருக்கவேண்டும்.“

ஜென் மனநிலையை கட்டாயமாக கவிதைக்குள் புகுத்துவதில்லை. கோட்பாடாக விளக்குவதில்லை.வாழ்ந்து காட்டுவது அதைக் கடைபிடிப்பது எனும் முடிவில் இருப்பவர்களால்தான் இத்தகைய கவிதைகளை எழுத முடியும். அதனால்தான் நிலாரசிகனால்,

“கடலுக்குள் கூடுகட்டியிருக்கும்
பறவையை நானறிவேன்.
அதன் ஈரச்சிறகின் மேலமர்ந்து
இச்சிறு உலகை
காணும்பொழுதெல்லாம்.“

என மிகுபுனைவில் கரையும் மனம் வாய்த்திருக்கிறது. கவிதையின் மறை பொருளாக அவர் அழிந்து கொண்டிருக்கும் ஈழத்தைப் பற்றிய இரண்டு கவிதைகளில் மிக அழகாய் எழுதிச்செல்கிறார்.

“மிக அழகான தீவு.
அதன் கரைகளை தின்று தீர்க்கும்
மீன்களிடையே நான்.
எவ்வளவு நீந்தியும் மாறவில்லை
கடல் நீலமும்
வான் நீலமும்.

இவ்வாறு அஃறிணைப் பொருட்கள் மூலம் நடப்பு காலத்தில் அழியும் இயற்கையை அற்புதமாக காட்சிப்படுத்துகிறார் நிலாரசிகன். அழிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ்மக்கள் பற்றி இன்னொரு கவிதையும் சிறப்பான தொனியில் எழுதப்பட்டிருக்கிறது.
அதன் சிலவரிகள்,

“மிக அருகிலிருக்கிறது
தீவு.
அங்கே குறைந்துகொண்டே இருக்கிறார்கள்
குழந்தைகள்”

என ஒரு கவிஞனின் ஏக்கம் அழிதல் குறித்து மிக நுட்பமாய் வந்திருக்கிறது. கடினமான சொற்களை பயன்படுத்தாமல் முடிந்தவரை இலகுவான மொழியில் அனைத்து கவிதைகளையும் எழுதியிருப்பது தொகுப்பின் வாசிப்பு சுவாரஸ்யத்தைக் கூட்டி நல்லதொரு மனநிலையைத் தருகிறது. சிறு சொற்கள் மூலம் பன்முக அர்த்தம் கொடுக்கும் ஒரு பரப்பை உருவாக்கும் வித்தை எல்லோர்க்கும் அமைவதல்ல. கவிதையின் பாடுபொருட்கள் இயற்கையை கண்டடைவதிலும், இயற்கை அழிவதை மீள் உருவாக்கம் செய்து கவிதைக்குள் கொண்டு வருவதிலும் பெரிதும் வெற்றி அடைந்திருக்கிறது நிலாரசிகனின் “கடலில் வசிக்கும் பறவை”.
நவீன வாழ்க்கையின் மூலம் நாம் இழந்துபோன சுத்தமான காற்று, நீர், அதனால் மறையும் சிறு உயிரினங்கள் என்றுமே கவிஞனை அலைக்கழிப்பவை.

“கழிவுகள் தின்று மிதக்கின்றன
மீன் பிள்ளைகள்.
கடைசி மீன்குஞ்சு கழிவை நோக்கி
நீந்துகிறது வேகமாய்”

என்று பதைப்புடன் ஒரு கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
சூழலியல் மாசுபடுவதற்கு மறைமுக காரணிகளாக இருப்பவர்களை குற்றவுணர்வு அடையவைக்கும் கவிதையாகவும் இது இருக்கிறது. கூடங்குளம் அணுமின்நிலைய தடுப்புப் போராட்டம், திருப்பூர் சாயப்பட்டறைகளின் கழிவுகள் நதி சென்று சேருவதால் நீராதாரம் பாதிக்கப்படுவது தொடர்பான நிகழ்வுகளை நினைவுப்படுத்தி சூழலியலுக்கு பலமான ஓர் ஆதரவுக் குரலை இவரின் பல கவிதைகள் அடங்கிய தொனியில் கொடுக்கின்றன.
இரண்டாயிரத்தை ஒட்டிய ஆண்டுகளில் சென்னை போன்ற பெருநகரங்களிலேயே சிட்டுக்குருவி,தவிட்டுக்குருவி,தூக்கணாங் குருவி போன்றவற்றைக் காண முடியும். இப்போது சென்னையை தாண்டியுள்ள சிறுகிராமங்களில் கூட இக்குருவிகளை பார்ப்பது அரிதாகிவிட்டது. அலைபேசி கதிர்வீச்சின் பெருக்கம் குருவி இனத்தையே அரிய இனமாக்கிவிட்டது.இத்தகைய அரிய பறவையினங்கள் அழிவதை மிகச்சிறிய கவிதையின் மூலம் அற்புதமாகச் சொல்கிறார் நிலாரசிகன்.

“கடலருகே விரிந்திருக்கும்
பாறைகளில் வந்து விழுகிறது
கடைசிப் பறவை.
மனிதர்கள் மனிதர்களென்று
முனகியபடி.
இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்களின் அழிதலுக்கு மனிதனே காரணம் என்று பறவை முனகுவதாக இக்கவிதை இருக்கிறது.
இத்தகைய சிறப்புகள் நிறைந்த இக்கவிதைத் தொகுப்பு இலக்கிய வாசகர்களின் மத்தியில் நல்ல பெயரையே நிலாரசிகனுக்கு கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இன்னும் தரமான கவிதைகளை,கவிதையின் உச்ச சாத்தியங்களை இனிவரும் தொகுப்புகளில் நிலாரசிகனிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
-
 கடலில் வசிக்கும் பறவை. கவிதைகள். நிலாரசிகன். புது எழுத்து வெளியீடு. 2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டினம் – 635 112. விலை.ரூ.60)
நன்றி மலைகள் .காம்