Monday, May 31, 2010

கே.என்.செந்தில் - துல்லிய காட்சிகளின் பதிவாளர்


சசி


நம் சிறுகதைகளின் பல்வேறு வெளிப்பாடுகளில் நகல் எடுத்தது போன்ற வகைப்பாட்டுக்கு முன்பு நல்ல வரவேற்பு இருந்தது.ஆனால் இப்போது பேசப்படுகின்ற படைப்புகளில் யதார்த்தவாதத்தை கடந்த புனைவுத்தன்மை கொண்ட படைப்புகளே அதிக இடம்பெறுகின்றன.முழுமையான யதார்த்தவாத கதைகளுக்கு இனி இடமில்லை என்றொரு கருத்து பரப்பப்படுகிறது.இச்சூழலில் யதார்த்தவாதத்தை தன் சொல்முறையாக கொள்பவர்கள் கொஞ்சம் பின்னால் நிற்பவர்களாக கருதப்படுகிறார்கள்.அவர்கள் அப்டேடட் [UPDATED] ஆக இல்லை என்று கட்டமைக்கப்படுகிறது.இயல்பான நடைமுறை சம்பவங்களை கருக்களாக தேர்வு கொள்கிறவர்கள் கூட வேண்டுமென்றே சொல்முறையில் குழப்பியடிக்கிறார்கள் [இதற்கு சரியான உதாரணம் எஸ்.செந்தில்குமாரின் கதைகள்].
இந்நிலையில் இன்று யதார்த்தமான கதைகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்ன ? என்ற கேள்வியோடு கே.என்.செந்திலின் ' இரவுக்காட்சி ' யை அணுகலாம்.
தொகுப்பில் நல்ல கதைகளாக நான் கருதுவது தலைப்பு கதையான இரவுக்காட்சி,காத்திருத்தல்,வருகை,கிளைகளிலிருந்து ஆகியவைகளைத்தான்.


முதலில் இரவுக்காட்சி :
நகரத்தின் ஒரு இரவை அதன் இயல்போடும் ,கோரங்களோடும் மிக சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.அந்த களத்தில் நின்று கொண்டிருக்கும் மனநிலையை நமக்கு ஏற்படுத்துவதான நடை.எங்கும் ஒரு தடையோ,மொழியை சுற்றி இழுத்துச்செல்வதோ வளைத்து சொல்வதோ இல்லாமல் நேர்த்தியாய் விவரிக்கப்பட்டிருக்கிறது.கதையின் மூடுக்கு தகுந்தபடி வாக்கிய அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்.ஒரு விஷயத்தை மிகச்சரியாக உணர்த்துவது என்பது இந்த கதையில் முதல் வரியிலேயே புலப்படுகிறது.

'ராட்சதக் கண்ணாடியொன்று தரையில் விழுந்து நொறுங்குவது போன்ற சப்தம் கேட்டதும் மின்சாரம் தடைபட்டது.' நானும் கூட சில சமயங்களில் அடைமழை நாளில் ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்து தீப்பொறி பறக்கும் காட்சியை அவதானித்ததுண்டு.அந்த சத்தத்தை வாசகனுக்கு கடத்தும் சரியான வாக்கியத்தை,எந்த உதாரணத்தை கொண்டு சொல்வது என்று யோசித்ததுண்டு. ' ராட்சதக் கண்ணாடியொன்று தரையில் விழுந்து நொறுங்குவது' என்னும் உவமானம் கூர்மையான வெளிப்பாடு.இங்கு இவர் தேர்ந்து கொண்ட இரவு கூட நிலவொளியுள்ள இரவு அல்ல.ஒருவேளை விளிம்பு நிலையாளர்களை சந்திக்கும் நமக்கு அவர்களின் இருள்நிலையை காண,அந்த சூழலின் தாக்கத்தை உள்வாங்க நிலவொளி இடையூறாக இருக்கும் என்று தோன்றியதாலோ என்னவோ அமாவாசைக்கு பிந்தைய இரவையே தேர்ந்து கொண்டிருக்கிறார்.நான் எப்பொழுதும் வலியுறுத்தும் ஒன்று இந்த கதையில் மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.


கதையின் மூடுக்கு தகுந்த மொழி மற்றும் பிற TOOLS ஐ சரியான இடத்தில் அவசியம் கையாள வேண்டுமென்பதே அது.இங்கே அமாவாசைக்கு அடுத்த இரவு சரியான TOOL என்றே கருதுகிறேன்.இங்கே எல்லாமே துல்லியமாக உணர்த்தப்படுகிறது.இரவு நேர கடை,மது விடுதி,காவல்துறையினரின் ரோந்து,விசாரிப்பு,வசூலான பணத்தை பிரிக்கும் பிச்சைக்காரர்கள்,பணம் பறிப்பவர்கள்,சினிமா நாயக ஆராதகர்கள் தங்களுடைய தலைவனின் கட் அவுட் நிறுவுவது,பாலத்திற்கு அடியில் நடக்கும் விபச்சாரம் - இந்த இடத்தில் புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நபர்களின் சப்தங்களை துல்லியமாக பின்வருமாறு பதிவு செய்கிறார்,'கழிப்பறையில் மலச்சிக்கல்காரனிடமிருந்து எழும் முக்கல்போல ஆணிடமிருந்தும் பிரம்மாண்டமான அருவியின் அடியில் குளிக்கும்போது உண்டாகும் திணறல்போலப் பெண்ணிடமிருந்தும் மூச்சுக் காற்று வெளிப்பட்டது.' பலரும் சொல்லியது போல பாலியலை கையாளும்பொழுது கவனமும் நுட்பமும் தேவை.செந்தில் நுட்பமாகவே பதிவு செய்திருக்கிறார்.காட்சி என்று மட்டுமில்லை,மனித மனத்தின் இயல்பு மேற்கூறிய வாக்கியத்தை தொடர்ந்து வருகிறது.அது 'அவன் என்னைக் கூட்டிக்கொண்டு நடந்தான். இருவரும் நிர்வாணமாக இருந்தார்களா எனக்கேட்டுவிட்டு ஆவலில் மீண்டும் அந்தப் பக்கம் போக எத்தனித்தேன். இன்னும் பெண்ணின் நிர்வாணத்தைக் காணாத எனக்கு அது தரும் கிளர்ச்சியைக் கற்பனை செய்துகொண்டேன் '. இன்னொரு இடத்தில் 'வழியில் இருட்டுக்குள்ளிருந்து சலங்கைபோலக் கொலுசுகளின் முத்துகள் குலுங்குவதைக் கேட்டோம். நான்கைந்து மல்லிகைப் பூக்கள் மேலே வந்து விழுந்தன. அவ்வளவு பதற்றத்திலும் அவனுக்குச் சபலம் தட்டிற்று. அந்தப் பக்கமாகத் திரும்பினேன். சற்றுமுன் தவறவிட்ட நிர்வாணக் காட்சியில் மனம் கிடந்து புரண்டது '.அதனை தொடர்ந்து கதையில் இருக்க வேண்டிய பதட்டமும் வேகமும் நடையிலும் சரியாக விவரிக்கப்பட்டிருக்கிறது.இங்கே கதை சொல்பவனுடைய மனநெருக்கடியும் அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது.நண்பனை தவறவிட்டவன் தான் தப்பித்து தன் அறைக்குள் காணும் கனவும்,கதை இறுதியில் வரும் ட்விஸ்ட்டும் கொஞ்சம் பிசகியிருந்தால் ஒரு மோசமான ஒரு சினிமா காட்சியாகியிருக்கும்,கவனமாக சொல்லப்பட்டிருப்பதால் தப்பித்துவிட்டது.


அடுத்து காத்திருத்தல் :
ஒரு நீண்ட நாவலுக்கான களத்தை கொண்டு ஒருவனுடைய முழுவாழ்க்கையையும் ஒரு சிறுகதைக்குள் சொல்லமுற்படும்போது இருக்க கூடிய நெருக்கடியையும்,வரலாற்றுத்தன்மையையும் ,கதாபாத்திர எண்ணிக்கைகளையும் இன்ன பிறவற்றையும் செந்தில் கூர்மையான,இயல்பான,நம்பகத்தன்மை கூடிய மொழி நடை மற்றும் உத்தியை கொண்டு கடந்து இந்த கதையை ஒரு அனுபவமாக மாற்றிக்காட்டியிருக்கிறார். இது இவ்வாறு இல்லாமலிருந்தால் சர்வ நிச்சயமாக ஒரு தொலைகாட்சி மெகா சீரியல் போல் ஆகியிருக்கும்.
வரப்போகும் நிமிடங்களில் முற்று பெற காத்திருக்கும் ராயப்பன் வாழ்கையே 'காத்திருத்தல்'.இந்த ஒரு கதையில் செந்தில் நிகழ்த்திக் காட்டியிருக்கும் வாழ்கை அற்புதம்.ராயப்பன் அவருடைய மகன்கள்,மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் என பெரிய குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி இரண்டும் நன்றாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.இந்த குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு குணாம்சங்கள்,ஒரே குடும்பத்தினரானாலும் எந்த ஒருவரும் மற்றவர் போலில்லை.

இந்த கதையில் ராயப்பனின் குழந்தை பருவம் குறித்த பகுதி அவர் மிக மோசமான வறுமைச்சூழலில் இருந்து வந்தவர் என்றுணர்த்த வேண்டி செருகப்பட்டிருக்கிறது.மற்றபடி அந்த பகுதி இல்லையென்றாலும் இந்த கதை எவ்விதத்திலும் குறைந்துபோயிருக்காது. ஒன்றன் பின் ஒன்றாக கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறார். அது சலிப்பை ஏற்படுத்துவதில்லை.ஒரு நல்ல உத்தியில் கதை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.ஒரு பாத்திரம் அறிமுகமானவுடன் கதை அவருடைய பார்வையில் இருந்து சொல்லப்படுகிறது.
மேலோட்டமாக பார்த்தால் இது சொத்து பிரச்சனை குறித்த கதைதான்.ஆனால் அப்படி மட்டுமே சொல்லமுடியாது.பிரச்னையை அந்த கதாபாத்திரங்கள் தங்களது குணத்தால் அணுகுவது மேலும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.
அவர்களது குணங்களை கொஞ்சம் வகைப்படுத்தலாம்.
ருக்குமணி: அம்மாவின் நகைகள் மேல் கண்ணாய் இருப்பவள்.ராயப்பன் இறந்ததும் அதை தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள காத்திருப்பவள்.
சக்திவேல் : மிகவும் பொறுப்பும் கஞ்சத்தனமும் உள்ளவன்.
ஆனந்தன் : கொஞ்சமும் பொறுப்பில்லாத குடிகாரன்
மகேஸ்வரி :அப்பாவின் மேல் முதலில் வெறுப்பும் பின் அன்புமாக மாறுபவள்.
ராதா: உறவு பெண்ணாக இருந்து சூழ்நிலையால் ராயப்பனோடு கூடிக்கலந்து அவருடைய இரண்டாவது மனைவி ஆகிவிட்டவள்.
இன்னும் பலருக்கும் பலவித குணங்கள்,எல்லோரும் நாம் காணக்கூடிய நபர்கள்தான்.மரணப்படுக்கையில் இருப்பவரோடு தனக்குள்ள நல்லுறவை மட்டுமே நீட்டி முழக்கி சொல்பவர்கள்.இங்கே மட்டுமின்றி கதை முழுக்கவும்,ஏன் எல்லா கதைகளிலும் உரையாடலை மிகச்சிறப்பாக எழுதிச்செல்கிறார் செந்தில். ஒவ்வொரு வார்த்தைகளும் மிகையற்றவை... யதார்த்தமானவை...மரணத்தை நெருங்கியிருப்பவர்களின் வீட்டில் கேட்கக்கூடியவை..
மீண்டும் ஒருமுறை அந்த க்ளிஷே வை பயன்படுத்திக் கொள்கிறேன்.எல்லா மனிதர்களும் ரத்தமும் சதையுமாய் நடமாடுகிறார்கள்.ஒரு குடும்பத்தின் வரலாறை அச்சு அசலாக அப்படியே பார்த்தது போன்ற பிரமிப்பை எனக்கு இக்கதை தருகிறது.வேறு எப்படி இதை சொல்ல முடியும்.


இதுபோன்றே வருகை, மிக எளிய விஷயங்களை எளிமையாகவே முழுமையுடன் சொல்வது ஆச்சரியப்படுத்துகிறது.இந்த கதையில் நாம் காணும் இயல்பு வண்ணநிலவன்,வண்ணதாசன் போன்றவர்களிடத்து மட்டுமே காணக்கிடைக்கிறது.இந்த கதையின் பெரும்பலம் இதன் உரையாடல்களே.குழந்தைகளின் விளையாட்டில் துவங்கும் கதை அப்பா குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து செய்யும் கலாட்டாவாகவும் மாறுவதை சேகரின் பார்வையில் சொல்கிறது.சேகரின் அப்பா போதையில் புலம்புவது நான் முன்பே சொன்னமாதிரி நேரில் பார்ப்பது போன்று சொல்லப்பட்டிருக்கிறது.அந்த புலம்பல்கள் எல்லாமே யதார்த்தபூர்வமானது.கொஞ்சமும் மிகையற்றது.கதாபாத்திரத்தின் அறிவுக்கு தகுந்தபடியான உரையாடல்களை எப்படி கையாளலாம் என்பதை இந்த கதையில் என்னால் உணரமுடிகிறது. போதையில் பேசும் கெட்டவார்த்தை உள்பட எல்லாமே மிக நுட்பமான அவதானிப்பு.நேர்கோட்டு முறையிலான கதை சொல்லல் இங்கே சரியாகத்தான் பயன்பட்டிருக்கிறது.

குழந்தைகளின் உலகம் என்பது எப்பொழுதுமே எனக்கு பிடித்தமானது.நம் அறிவுஜீவித்தனங்களை அவர்களுக்குள் செலுத்தி அந்த வயதை கொன்று கொண்டிருப்பதான விழிப்பை இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருக்கிறது நம் சமூகம்.நம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைவிட வேறு உதாரணமே தேவை இல்லை.ஏழெட்டு வயதுள்ள சிறுவன் பிரபல நடிகர்களை போல மிமிக்ரி செய்ய முயற்சி செய்வதை காணும்போது எனக்கு கோபம் வரும் .அந்த வயதுக்கு உண்டான விளையாட்டுகளில் கவனம் செலுத்தாமல் அவன் தன் வீட்டில் குரல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பான் என நினைக்கும்போது இன்றைய குழந்தைகளுக்கு அவர்களுடைய உலகமே அறிமுகமாகவில்லை என்பது வாழ்வில் ஒரு பேரிழப்புதான். இது என்னுடைய ஆதங்கம் மட்டுமல்லாது ஒரு சமூக பிரச்சனையும் கூட. இப்போது செந்திலின் கிளைகளிலிருந்து ... என்னும் கதையில் காட்டப்பட்ட உலகமானது அதி அற்புதமானது. சம்பத் என்னும் சிறுவன்தான் இந்த கதையின் நாயகன்.அவனுடைய முக்கியமான பிரச்சனை என்ன தெரியுமா? தனது சகாக்களை போல லாவகமாக பம்பரத்தை சுழற்றி விட தெரியவில்லை.அதற்காக அவன் கடும் முயற்சி செய்கிறான். கதையின் எனக்கு பிடித்த ஓரிடத்தை விரிவாக சொல்லியே ஆக வேண்டும். அது நண்பர்கள் ஒன்றாக பம்பரம் விடும் பகுதி.[பக்க எண் 34, இறுதி பத்தி]' நான்கு பெரும் வட்டத்தைச் சுற்றி நின்ற நொடியில் ஐயப்பன் ஜூட் என்றான்.மடமடவென அவரவர் பம்பரங்களுக்கு சாட்டையை சுற்ற தொடங்கினார்கள்.அதற்குள்ளாகவே அமானும் விஸ்வமும் விட்டெறிந்த பம்பரங்கள் அழகாக சுற்ற தொடங்கின.சொல்லிவைத்தார்போல ஐயப்பனுக்கும் சம்பத்துக்கும் 'எலி' பிடித்து சாட்டையின் நுனியில் பம்பரம் தலைகீழாக தொங்கி ஆடிக்கொண்டிருந்தது.சாட்டையால் சுழி போட்டு 'அபீட்' என்றார்கள் இருவரும் ஒரு சேராக....தொடர்ந்து அந்த பத்தி முழுவதும் இப்படித்தான் அவர்களுடைய உலகம் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இறுதியில் ஒரு இடம் : அடுத்த நொடியில் இரண்டு துண்டுகளாக பிளந்து,உள்ளேயும் வெளியேயும் கிடக்கும் தன் பம்பரத்தை சம்பத் ஆற்றாமையோடு வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்.கதையின் இறுதி வரியை படித்து முடித்ததும் சொல்ல முடியாத ஒரு மனஅவஸ்தைக்கு உள்ளாகியிருந்தேன்.சம்பத் அடக்க முடியாமல் கேவிக்கேவி அழுதபடியே வீட்டைநோக்கி நடக்க தொடங்கும்போது அவனுடைய சோகம் வாசகனுக்கும் தொற்றிக்கொள்கிறது.


இங்கே எனக்கு பிடித்த நல்ல கதைகளை மட்டுமே சொல்லியிருக்கிறேன்.மோசமான கதைகளும் இதே தொகுப்பில் உண்டென்பதை மறுப்பதற்கில்லை.அவை ஏதோ கிரீடத்தை தாங்க பிரயத்தனப்படும் முயற்சிகளாகத்தான் எனக்கு தோன்றுகிறது.அவை குறித்து எதுவும் அதிகம் பேச தோன்றவில்லை.உதாரணம் மேய்ப்பர்கள்,மதிலுகள் போன்றவை.முதல் கதையான கதவு எண் 13/78 ல் எடுத்துக்கொண்ட கதைக்கு அதன் முதல் அத்தியாயம் தேவையே இல்லையென்றுதான் படுகிறது.மொத்தம் ஐந்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்ட இக்கதையில் அதன் முதல் அத்தியாயத்தில் மூத்திரசந்தை குறித்து இவ்வளவு நீண்ட விவரணைகள் வாசிக்க துவங்கும்போதே சலிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி கதையின் வாசித்து முடித்ததும் இந்த கதைக்கும் ஆரம்ப விவரணைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று உணரும்போது எரிச்சலே மிஞ்சுகிறது.இதே போல வேறு பல கதைகளிலும் தென்படும் கூடுதல் விவரணைகள் பக்க அளவை கூட்ட மட்டுமே பயன்படுகிறது. மதிலுகள் ஏறக்குறைய நாடகம்தான்.வாக்குமூலம் கதையில் சம்பவங்கள் தேவைக்கு மேல் நீட்டப்பட்டிருக்கிறது.இதில் கதையை முன்னும் பின்னுமாக நகர்த்திய உத்தி குழப்பத்தையே ஏற்படுத்துகிறது.நல்ல கதையை நூலிழையில் தவறவிட்ட ஏமாற்றம் எனக்கு இந்த கதையில் ஏற்படுகிறது.எல்லா எழுத்தாளர்களுக்கும் சினிமாத்தனமாக ஒரு கதையை எழுதிப்பார்க்கும் ஆவல் இருக்கும் போல..செந்தில் மேய்ப்பர்களில் முயற்சித்திருக்கிறார்.

மிக சரியான யதார்த்தபூர்வமான முழுமையான உரையாடல்கள்,இயல்பான சொல்முறைகள்,நம்பகத்தன்மையுள்ள கதைக்களங்கள்,நகலெடுக்கும் தன்மைக்கு மேலே புனைவை தாங்கியிருக்கும் இலகுவான யதார்த்த மொழிநடைகளை கொண்ட இந்த தொகுப்பை குறித்து சொல்லவேண்டுமென்றால் மிகவும் நம்பிக்கையூட்டும் நபராகத்தான் செந்திலை மதிப்பிடமுடிகிறது.யதார்த்தவாதத்தின் தேவையை இந்த கதைகள் பலமாக நிறுவுவதால் சரியான அங்கீகாரம் கிடைக்குமென்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான்.

இரவுக்காட்சி
காலச்சுவடு பதிப்பகம்
விலை 90
சிறுகதைகள்

Thursday, May 27, 2010

ஷோபாசக்தி


ஷோபாசக்தி

தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மிமணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். "காண்டாமிருகம்","அபாயம்"(க்ரியா வெளியிட்டவை) போன்றசிறு நூல்கள் செய்த இலக்கிய மாற்றங்களைக் கூட இப்பெரியநூல்கள் செய்வதில்லை என்று எழுதியிருக்கிறார்.பெரியநாவல்களைப் படைப்பது இன்று இலக்கிய மோஸ்தர்ஆகிவிட்டது. இந்நூல்களில் பாதியை தாண்டுவதற்குள் நமக்குமூச்சு வாங்கிவிடுகிறது. இவ்வாறு பெரிய நூல்களில் நான்மலைத்து வாசிப்பதையே நிறுத்தியிருந்த சமயம் அது. அப்போதுவாசிக்க கிடைத்த புத்தகம்தான் ஷோபாசக்தியின் "ம்". அவர்ஆணா,பெண்ணா என்பது கூட அப்போது தெரியாது. வாசிக்கஆரம்பித்தவுடன் தெரிந்துவிட்டது இவரது எழுத்து சர்வதேச தரம்வாய்ந்தது என்று. ஒரே மூச்சில் ஒரே இரவில் படித்துமுடிக்கப்பட்ட 150 பக்க புத்தகம் "ம்". அடுத்த இரண்டுநாட்களுக்கு அந்நாவல் பற்றிய காட்சிப்படிமங்களே மனதில்ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் "வெலிகட சிறை உடைப்பு" பற்றிஅவர் எழுதியுள்ள இடங்கள் எந்தப் பேரிலக்கியத்துக்கும்ஒப்பானது. அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிசாரித்தேன்.

அவர் ப்ரான்சில் வசித்துவருகிறார் எப்போதாவதுதான் இந்தியாவருவார் என்றும் கூறினார்கள். அவருக்கு ஒரு கடிதம்மின்னஞ்சல் செய்தேன். எப்பதிலும் இல்லை. பிறகு அவரின்நூல்களான "கொரில்லா","தேசத்துரோகி" போன்றவற்றைப்படித்தேன். "தேசத்துரோகி" சிறுகதைத் தொகுப்பில் "சூக்குமம்"என்றொரு கதை உள்ளது. அவரது அபூர்வமான பகடிக்குஅக்கதையை சான்றாக கூறலாம். அவரைச் சந்தித்து ஒருநாள்பேச வேண்டும் என்று ஆவல் கூடிக்கொண்டே போனது

அவருடைய நேர்காணல்களை அவ்வப்போது சிற்றிதழ்களில்படிப்பதுண்டு. போனமாதம் அம்ருதாவில் வந்த நேர்காணல்வரைக்கும் படித்துவிட்டேன். அவரது மேற்சொன்ன மூன்றுநூல்களும் தீவிர இலக்கிய வாசகர்களிடையே பெரும்கவனத்தைப் பெற்றவை.

அதன்பிறகு "வேலைக்காரிகளின் புத்தகம்" என்ற அவரதுகட்டுரைத் தொகுப்பு வெளிவந்தது,அதுவும் 150 பக்கம்தான்.அதில் பல செறிவுள்ள கட்டுரைகள் இருந்தபோதும் "மதுக்குரல்மன்னன்" என்ற இலங்கை வானொலி அறிவிப்பாளர்கே.எஸ்.ராஜாவை பற்றிய கட்டுரை,சிறந்த சிறுகதைக்குஒப்பானது. இலங்கையில் எண்பதுகளில் இருந்த இளைஞர்களின்மனநிலையின் சாட்சியாக இருந்து இக்கட்டுரையைஎழுதியுள்ளார் ஷோபா சக்தி.

அதேபோல இலங்கை திரைப்பட இயக்குனர் பிரச்சன விதானகேபற்றிய கட்டுரையும் முக்கியமானது. பிரச்சன விதானேகவுக்கு"செவ்வகம்" சிற்றிதழ் மூலம் சிறப்பிதழ் தயாரித்த எனது நண்பர்விஸ்வாமித்திரன் பெயரையும் கட்டுரையின் அடியில்குறிப்பிட்டிருந்தார்.

சமகால இலக்கியங்களையும்,திரைப்படங்களையும் பிரான்ஸில்இருந்தபடியே நுட்பமாக கவனித்து வருபவர் ஷோபாசக்தி என்றஎண்ணம் எனக்கு வலுப்பட்டது. நானும்,விஸ்வாமித்திரனும்சந்திக்கும் போது அவரைப் பற்றி விவாதிப்போம். ஆனால்திடீரென ஒரு நாள் எதிர்பாராதவாறு சென்னையில் சந்திக்கும்வாய்ப்பு கிட்டியது. அதை சொல்கிறேன்..

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு சென்னையில் அப்போது நடந்துகொண்டிருந்தது. அதில்தான் ஷோபா சக்தியின் நூல்களை பதிப்பித்து வருபவரான நீலகண்டனை சந்தித்தேன். அவர் கடை போட்டிருந்தார். “அநிச்சி” மற்றும் “இன்மை” போன்ற சிற்றிதழ்களை வாங்கிக்கொண்டேன். நான் கேட்ட சில புத்தகங்கள் இப்போது இல்லை உங்களுக்கு விரைவில் தருகிறேன் என்று கூறினார். பிறகு அவரை போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு ஒருமுறை வாருங்கள் என்று அழைத்தேன்.அப்புறம் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. “கருப்புப்பிரதிகள்” நீலகண்டன் குறித்து இவ்விடத்தில் சொல்ல வேண்டும். கடும் பொருளாதார நெரிக்கடிகளின் நடுவேயும்,தேர்ந்தெடுத்த புத்தகங்களை உரிய நேர்த்தியுடனும் தரத்துடனும் பதிப்பிப்பவர். அதோடு நின்று விடாமல் இலக்கியக்கூட்டங்கள் பலவற்றில் அவரே சுமந்து கொண்டு போய் விற்று வருவார். கடுமையான உழைப்பாளி. இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஷோபாசக்தியின் சிறுகதைத் தொகுப்பான “எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு” கருப்புப் பிரதிகள் வெளியீடாக வருவதை அறிந்து நீலகண்டனை தொடர்பு கொண்டேன். புத்தகம் தயாரானவுடன் பிரதி தருவதாகக் கூறினார். சிலநாட்களுக்குப் பிறகு மதியம் 12 மணியளவில் எனக்கு போன் செய்து தி.நகர் வருகிறேன் என்றார். பிறகு என் வீட்டில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். “எம்.ஜி.ஆர் கொலைவழக்கு” சிறுகதைத் தொகுப்பையும்,அழகிய பெரியவனின் கட்டுரைத்தொகுப்பான “மீள்கோணம்” புத்தகத்தையும் கொடுத்தார்

ஷோபாசக்தி பற்றி அவரிடம் விசாரித்தேஎன். அடுத்த வாரம் சென்னைக்கு வருகிறார் என்றும் வரும்போது உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன் என்றார். அதன் பிறகு நீலகண்டனைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இது அவரின் இயல்பு. இந்த இடைவெளியில் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து இரண்டு நாட்களில் முடித்தும் விட்டேன். ஷோபாசக்தியின் எழுத்தின் வசீகரம் இத்தொகுப்பை படித்ததும் கூடியதே தவிர குறையவில்லை. “வெள்ளிக்கிழமை” என்றொரு கதை இதில் உள்ளது. பாரிஸின் மெத்ரோ ரயிலில் இறங்கி பிச்சையெடுக்கும் ஈழத்துக்கிழவரைப் பற்றிய இக்கதையை அபாரமான மொழிவீச்சில் எழுதி இருக்கிறார். கதை அவலச்சுவையை கொண்டிருந்தாலும் அங்கதம் நிறைந்துள்ள இக்கதையின் முடிவுப் பகுதி கண்ணீரை வரவழைத்து விட்டது.

அதேபோல எம்.ஜி.ஆர் கொலைவழக்கு என்ற கதையும் எழுபது,எண்பதுகளில் ஈழத்து இளைஞர்களின் வாழ்க்கை மாற்றங்களையும்,போராளிகளாக மாறி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதையும் எம்.ஜி.ஆரை படிமமாக்கி எழுதி இருக்கிறார். இந்தக் கதையிலும் முடிவுப்பகுதி பலமடங்கு வீச்சுடையதாக இருக்கிறதுஅவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது "சூக்குமம்" என்ற கதை.பிரான்சில் அகதி கார்டு கிடைக்காமல் அல்லல்படும் ஈழத்தமிழனின் நிலையை அங்கதத்துடன் சொல்வதாகும். போராளில் குழுக்களில் இருந்துள்ளேன்,எனது உயிருக்கு உத்திரவாதமில்லை என்றேல்லாம் சொல்லி அகதி கார்டு விண்ணப்பிக்கிறான்.மனோரஞ்சன் என்ற கதாபாத்திரம். பிரான்ஸ் நீதிமன்றம் அவனுக்கு அகதி கார்டு தர மறுத்துவிடுகிறது. கடைசியாக ரம் மாஸ்டர் என்பவரின் உதவியோடு விண்ணப்ப கடித்தத்தை எழுதுகிறான். இந்த முறை நீதிமன்றத்தில் அவனுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து அகதி கார்டு கிடைத்துவிடுகிறது. அவன் கூறியுள்ள காரணம் மிலிட்டரிகாரன் எனது வீட்டு நாயை சுட்டுக்கொன்று விட்டு என்னையும் ஒருநாள் இதுபோல சுடுவேன் என்று சொல்லிச் சென்றான் என்பது.பிரான்ஸ் அரசாங்கம் பிராணிகளுக்கு தரும் மரியாதையை கூட அகதிகளுக்கு தருவதில்லை,என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் இக்கதையில் ஷோபாசக்தி.அவருடைய கதைகளின் வடிவமும்,கதாபாத்திர வார்ப்பும் துல்லியமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக எந்த வார்த்தைகளும் கதையில் சேர்ப்பதில்லை.செய் நேர்த்தி மிகுந்த கலைஞர்.

“கொரில்லா” நாவலை “Random House” பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகம் ஒரு தமிழ்நாவலை மொழிபெயர்ப்பது இதுவே முதல்முறை. மேலை நாடுகளில் புகழ் பெற்ற பெருமை வாய்ந்த பதிப்பகம் இது. அவருடைய முக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில் மேலும் வெளியாகி உள்ளன.வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள நியூபுக் லேண்டிற்கு வாரம் ஒருமுறை போவது எனது வழக்கம். அவ்வாறு ஒருநாள் மதியம் மருத்துவமனையில் வேலையை முடித்துவிட்டு அங்கு சென்றேன். கருப்புப் பிரதிகள் நீலகண்டன் புத்தககடையின் முகப்பில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சில வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தேன். ஷோபாசக்தியைப் பற்றி வழக்கம்போல பேச ஆரம்பிக்க,”அதோ இருக்கிறார் ஷோபா சக்தி” என்று அவர் கையை எதிர்புறமாக காண்பிக்க “எங்கே” என்று ஆவலுடன் நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். நாங்கள் நின்றிருந்த ரேக்கிற்கு எதிர்ப்புறம் கீழே அமர்ந்து புத்தகம் தேடிக்கொண்டிருந்த ஒரு இளைஞர், சத்தம்கேட்டு என்னை நோக்கி ஓடி வர நான் அவரை நோக்கிப்போக எனது கையை இறுகப்பற்றிக் கொண்டார். நான் மதிக்கும் எழுத்தாளரான நண்பர் ஷோபாசக்தி.

வாழ்வில் நானோ அவரோ மறக்கமுடியாத தருணம் அது. ஏதோ பல ஆண்டுகள் பழக்கப்பட்டவர்கள் போல நாங்கள் பேச ஆரம்பித்தோம்.


எழுதுகிறீர்களா? Blog ஒண்ணு ஆரம்பிங்க” என்று சொன்னார். அதற்குப்பிறகுதான் இந்த ப்ளாக் ஆரம்பிக்கும் எண்ணமே எனக்கு ஏற்பட்டது. “பேஸ்புக்” என்ற நண்பர்கள் இணையதளத்துக்கும் அழைப்புக் கொடுத்து கூட்டிப் போனவரும் அவர்தான். புத்தககடைக்கு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றோம்.அங்கு கிட்டதட்ட அரைமணிநேரம் பேசினோம்.பிறகு அவருடன் நீலகண்டனும் சேர்ந்து கிளம்பிச் சென்றார்.“உங்களை சந்திச்சதுல சந்தோஷம்,என் நம்பர் தேவைப்பட்டா நீலகண்டன்கிட்ட வாங்கிக்கங்க,நாம வாய்ப்பு இருந்தா பிரான்ஸ் போறதுக்குள்ள மறுபடியும் சந்திப்போம்” என்றபடியே விடைபெற்றார்.

பெரிய கலைஞர்கள் சிலரிடம் மட்டும் இந்த அன்பையும்,அரவணைப்பையும் கண்டிருக்கிறேன்.இலங்கை திரைப்பட இயக்குனர் பிரச்சன்ன விதானேகயை ஒருமுறை விஸ்வாமித்திரன் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவருடைய திரைப்படங்கள் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. அதன்பின் “இரமத்தியமா” “புரவந்த களுவரே” போன்ற படங்களை பார்த்துவிட்டேன். சரியாக ஒருவருடம் கழித்து பிரச்சன விதானகேயை ஒரு திரைப்படவிழாவில் பார்த்தபோது எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. அவ்வளவு பெரிய கலைஞரா இவ்வளவு எளிமையுடன் இருக்கிறார் என்று. ஆனால் அவரோ என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டவராக தோளில் கைபோட்டபடி பேச ஆரம்பித்தார். வாழ்வியல் அறமும் முடிவற்ற நேசமும் தோழமையும் உண்மை கலைஞர்களுக்கு மட்டுமே உரித்தானது. அத்தகையவர்கள் இருவரை என் வாழ்க்கையில் சந்தித்தது குறித்து மகிழ்ச்சியே.ஷோபாசக்தியின் நூல்கள

1.கொரில்லா – நாவல் – அடையாளம் வெளியீடு

2.”ம்” – நாவல் – கருப்புப்பிரதிகள் வெளியீடு

3.எம்.ஜி.ஆர் கொலைவழக்கு – சிறுகதைகள் – கறுப்புப்பிரதிகள்

4.வேலைக்காரிகளின் புத்தகம் – கட்டுரைகள் – கறுப்புப்பிரதிகள்

5.தேசத்துரோகி – சிறுகதைகள் – அடையாளம்

5.Gorilla – Randam House Edition – Novel

6. இன்றெமக்கு வேண்டுவது சமாதானமே – பயணி வெளியீடு

7.ஷோபாசக்தி –தோழர் தியாகுவுடன் கலந்துரையாடல் – வடலிவெளியீடு-கொலைநிலம்.

Tuesday, May 25, 2010

அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்

அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்


பொய்த்தேவு க.நா.சு.
வாடிவாசல் சி.சு.செல்லப்பா.
அபிதா லா.ச.ர.
பசித்த மானுடம் கரிச்சான் குஞ்சு
வாசவேஸ்வரம் கிருத்திகா
தந்திர பூமி இந்திரா பார்த்தசாரதி
சுந்தர காண்டம் ஜெயகாந்தன்
புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம்.
நினைவு பாதை நகுலன்
ஜே.ஜே.சிலகுறிப்புகள் சுந்தர ராமசாமி
கோபல்லகிராமம் கி,ராஜநாராயணன்.
நாளை மற்றுமொரு நாளே ஜி.நாகராஜன்.
சாயாவனம் ச,கந்தசாமி
புத்தம் வீடு - ஹெப்சிபா ஜேசுதாசன்.
பதினெட்டாம் அட்சகோடு அசோகமித்திரன்
பள்ளி கொண்ட புரம் -நீல.பத்மநாதன்
கிருஷ்ணபருந்து -ஆ.மாதவன்.
நிலக்கிளி அ.பால மனோகரன்
இடைவெளி சம்பத்
கம்பாநதி,கடல்புரத்தில் வண்ண நிலவன்.
பிறகு,வெக்கை-பூமணி.
நாஞ்சில் நாடன் .அனைத்து நாவல்களும்.
ஒரு கடலோர கிராமத்தின் கதை. தோப்பில் முஹம்மது மீரான்.
.காகித மலர்கள் ஆதவன்.
வாடா மல்லி சு.சமுத்திரம்.
கழிசடை-அறிவழகன். சாக்கடை பணியாளர்கள் பற்றிய மிக முக்கிய நாவல். [அலைகள்
வெளியீட்டகம்]
மற்றும் சிலர் சுப்ரபாரதி மணியன்.
கோவேறு கழுதைகள் இமையம்.
ஏழாம் உலகம் ஜெயமோகன்.
உறுபசி எஸ்.ராமகிருஷ்ணன்.
கொரில்லா,ம்-ஷோபாசக்தி.
ஆழிசூழ் உலகு ஜோ.டி.குரூஸ்.
37'' M.G.சுரேஷ்.
அஞ்சலை கண்மணி குணசேகரன்
நிழல் முற்றம் பெருமாள்முருகன்.
நுண்வெளி கிரணங்கள் சு.வேணு கோபால்.
ஆஸ்பத்திரி சுதேசமித்திரன்,
புதிய வெயிலும் நீலக்கடலும்- நிஜந்தன்
வட்டத்துள் வத்சலா
மரம் ஜி.முருகன்,
துருக்கி தொப்பி கீரனூர் ஜாகிர் ராஜா.
கள்ளி வாமு.கோமு.
முன்றாவது சிலுவை உமா வரதராஜன்.
கன்னி பிரான்சிஸ் கிருபா.
ரத்த உறவு யூமா.வாசுகி.
வேருலகு மெலிஞ்சி முத்தன்.

Monday, May 24, 2010

பாரடி நீ மோகினி ! - ஸ்ரீபதி பத்மநாபா

பாடலாசிரியர் ஆவது எப்படி என்னும் 'dummies' பாடம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன். நானும் ஒரு 'dummy' தான் என்றபோதிலும்.

கட்டுரையின் தலைப்பில் உள்ள முதல் வார்த்தை தமிழ் 'பாரடி' அல்ல. ஆங்கில parody. தமிழில் பகடி என்று எளிமையாக மொழிபெயர்க்கலாம். ஏற்கனவே வெளிவந்து பிரபலமான ஒரு பாடலை பகடி செய்து எழுதி பார்ப்பதுதான் parody. அங்கதமே அதன் அடிப்படை அலகு.
கேரளத்தில் 'பாரடி' ஒரு நல்ல குடிசை தொழிலாகவே வளர்ந்து வந்திருக்கிறது - மிமிக்ரியை போல. எந்த ஒரு புது பாடலையும் உடனே 'பாரடி' செய்து ஒரு கேசட்டை இறக்கி விடுவார்கள்.

இதுதான் பாடலாசிரியன் ஆவதற்கான பயிற்சியின் முதல் படி! உதாரணமாக 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலை ஒரு 'dummy' பகடி செய்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்போமா?

காலங்களில் அவள் கோடை / கலைகளிலே அவள் கராத்தே / மாதங்களில் அவள் சித்திரை / மலர்களிலே அவள் ஊமத்தை!

பறவைகளில் அவள் கௌதாரி / பாடல்களில் அவள் ஒப்பாரி / கனிகளிலே அவள் பப்பாளி / காற்றினிலே அவள் சூறாவளி /
பேய் போல் சிரிப்பதில் வில்லி / அவள் சனி போல் அணைப்பதில் கில்லி / நெருப்பை வளர்ப்பதில் எண்ணெய் / அவள் கிறுக்கன் ஆக்கினாள் என்னை !

கல்லூரி காலங்களில் பலர் அவரவர்களின் காதல் வளர்வதற்காக 'பாரடி' பாடல் புனைந்துதவ என்னை அணுகுவதுண்டு. நானும் நிறைய எழுதி கொடுப்பேன், பெரும்பாலும் காதலியின் பெயரை பதிலீடு செய்து கொடுத்தால் போதுமானதாயிருக்கும். சேது ராமசாமிதான் அவர்களிலிருந்து வேறுபட்டு காதல் தோல்விக்காக என்னிடம் 'பாரடி' எழுதி தர சொல்லி கேட்டவன். அப்போது 'மண்ணில் இந்த காதலன்றி' பாடல் காதலர்களின் தேசிய கீதமாக இருந்தது. 'பாவலர் வரதராசன்' என்ற புனை பெயரில் கங்கை அமரன் எழுதிய பாடல் அது என்று கேள்விபட்டிருக்கிறேன். கங்கை அமரனின் பாடல் திறமை மீது மேலும் நம்பிக்கை வந்த காலம் அது.
சேது ராமசாமி ஒரு நாள் என்னிடம் வந்து 'எனக்கு இந்த பாட்டை மாத்தி குடு' என்றான் முழு போதையில். 'எல்லாமே ஆப்போசிட்டா இருக்கணும். எனக்கு இந்த காதலை பத்தியும் பொண்ணுகள பத்தியும் நெனச்சாலே கொமட்டீட்டு வருது' என்று கல்லூரி வாசலில் வாந்தி எடுத்தான். அவன் ஒரு நல்ல பாடகன் கூட. காதலை பற்றியும் பெண்களை பற்றியும் என் கருத்தியல் வேறானது என்றாலும் அவனுக்காக எழுதி கொடுத்தேன். (ஒரு பாடல் ஆசிரியன் ஆவதற்கு இந்த குவாலிட்டி மிக அவசியம்.)

அன்று இரவு நண்பர்கள் சபையில் அவன் அந்த பாடலை பாடினான்.
மண்ணில் இந்த காதல் என்னும் போதை என்று தீருமோ / என்று கன்னிப் பாவை என்னும் பேயின் ஆட்டம் ஓயுமோ / பெண்மை என்னும் சாத்தான் வேதம் ஓதுது / உண்மை என்று நம்பி கூட்டம் கூடுது

வெட்டிப்பயல் வேலையத்தவன் தின்னுட்டு ஊரைச்சுத்தும் சொத்தைப்பயல் சோம்பல் உள்ளவன் அத்தனை நபர்களும் பித்தம் தலைக்கேரியிறங்க சிந்தனை மழுங்கிட சுத்தி வந்து சொல்லும் ஒரு சொல் பெண் எனும் ஒரு விஷம் / கன்னியிவள் இருந்தால் சனி தான் பிடிக்கும் / கன்னித்துணை இழந்தால் அதுவும் விலகும் / முடி முதல் அடி வரை முழுவதும் விஷம் தரும் ஒரு பெரும் புதிரினை படைத்தது அவன் தவறே....

(மூன்று முறை மூச்சு வாங்குவது போல் நடித்தான்)

கத்தியென குத்தும் விழிகள் கட்டிலில் விழுந்ததும் கட்டியவன் காதில் மந்திரம் ஓதிடும் இதழ்களும் புற்றிடையும் புன்னகையுமே புத்தியை மயக்கிடும் கற்றிருந்த கல்வி முழுதும் கணத்தில் மறந்திடும் / இதை எண்ணுவதர்கா உனக்கோர் பிறவி? / இவளிடம் பணிந்தான் அவனா துறவி?
...


பாடலை அவன் முடிக்க முடியவில்லை! தர்ம அடி! பெரும்பாலும் அப்போதுதான் காதலில் விழுந்தவர்களின் சபையில் இப்படியொரு பாடலை பாடலாமா? ரணகளம்! அதிலிருந்து இந்த 'பாரடி'யை மறந்துவிட்டேன்.


சில ஆண்டுகளுக்கு பிறகு இசைத்தொகுப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சங்கரின் (சுதேசமித்திரன்) உத்தி ஒன்று எனக்கு பிடித்தமானதாயிருந்தது. சங்கரும் இரண்டு இசைதொகுப்புகள் எழுதியிருந்தான். 'கண்களில் நாணேற்றி அம்பு எய்து காவியம் பாடும் என் காதல் தேவி' என்ற பாடல் எனக்கு பிடித்திருந்தது. அப்போது பிரபலமாயிருந்த யேசுதாசின் மலையாள பாடலான 'சிந்துவில் நீராடி ஈறனாயி' என்ற பாடலின் மெட்டை எடுத்து அதற்கு புதிய வரிகளை எழுதி இசை அமைக்கும் சுரேஷிடம் மூல மெட்டை கூறாமல் புதிய இசை அமைக்க சொன்னபோது ஒரு நல்ல புதிய பாடல் கிடைத்துவிட்டது.

என் சகோதர உறவுமுறையினரும் மலையாளத்தின் பிரபலமான பாடல் ஆசிரியரும் இசைக்கலைஞருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரியின் சில பாடல்களை எடுத்துக்கொண்டு அதே மெட்டில் வேறொரு சூழ்நிலையை யோசித்து அதற்கு வரிகளை எழுதி சுரேஷிடம் கொடுத்து புது மெட்டு அமைக்க சொன்ன போது நல்ல பாடல்கள் உருவாக ஆரம்பித்தன. அந்த வரிகளை மலையாளத்தில் கைதப்ரத்திடம் சொல்லிக்காட்டுவேன். அவருக்கு மிகப்பிடித்த என்னுடைய சில வரிகள்:

மலைச்சாலை போகும் வரை போகும் மனதில்
இன்னும் உள்ளது இரவின் மிச்சங்கள்
எது பாதை புரியாத போதும்
எதிர்பார்ப்பு எதுவானபோதும்
எனை மூடும் பனிமூட்டம் எல்லாம்
விலகும் உன் விழி வீசும் ஒளியால்...

அது மட்டுமல்லாமல் எனக்கு பிடித்த அவருடைய சில வரிகளை தமிழ்படுத்தி அவருடைய அனுமதியுடன் உபயோகித்ததும் பாடல் எழுதும் பயிற்சியின் ஒரு அங்கமாயிற்று. 'குஞ்சி கிடாவின்னு நல்கான் அம்ம நெஞ்சில் பாலாழி ஏந்தி' என்னும் அவருடைய புகழ் பெற்ற வரியை தமிழில் வேறொரு மெட்டில் இப்படி மாற்றி எழுதியிருந்தேன்: 'பசிக்கின்ற போது அமுதினை ஊட்ட பாற்கடல் நெஞ்சில் ஏந்திய தாயே'
இவை மட்டுமல்லாமல் இலக்கணப் பயிற்சி, மரபு கவிதைகளில் பயிற்சி போன்ற மொழி சார்ந்த அறிவுகளும் கூடவே கொஞ்சம் அந்நிய மொழி தேர்ச்சியும் பொது அறிவும் அறிவியல் மற்றும் புள்ளியியல் அறிவும் தமிழ் சினிமா பாடல் ஆசிரியன் ஆவதற்கு மிக மிக அவசியம். பியூட்டிக்கு சமமாக டியூட்டியோ ஸ்வீட்டியோ போட தெரிய வேண்டும். டூயட் பாடலில் 'செவ்வாயில் காற்றே கிடையாது... அது யாருக்கும் தெரியாது... காதலர்களின் கண்ணீரும் அது போல யாருக்கும் தெரியாது...' என்று எழுத தெரிய வேண்டும்.

மிக முக்கியமானது எழுத போகும் பாடலின் பாத்திரத்தின் தன்மை என்ன, அதை ஏற்று நடிப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வது.

உதாரணமாக, உங்களுக்கு சினிமா பாடல் ஆசிரியனாக ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம். இயக்குனர் கதையை விவரித்து, குறிப்பிட்ட பாடலின் சிச்சுவேஷனையும் சொல்லிவிட்டார்.
சிச்சுவேஷன் இதுதான்:

நாயகி தன் சோகச்சுமைகளை நெஞ்சுக்குள் தாங்கியபடி ஊமைக்குயிலாய் பாடும் ஒரு பாடல்.

இசை அமைப்பாளர் 'தத்தகாரத்தை' சிடியில் கீபோர்ட் ட்ராக் கொடுத்துவிட்டார். நீங்களும் ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து ஒரு பாடல் எழுதி விட்டீர்கள். நன்றாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இயக்குனரும் இசை அமைப்பாளரும் நமட்டு சிரிப்பு சிரித்தபடி வேறு வரிகள் எழுதிகொண்டுவாருங்கள் என்கிறார்கள். வரிகளில் என்ன குறை என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது.
'சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்' என்று நன்றாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். சோக ரசம் நன்றாகவே தளும்புகிறது. ஆனால் கதாநாயகியாக அபினயிப்பவர் யாரென்று நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை!நமீதா!

Sunday, May 23, 2010

தி போலீஸ் ஸ்டோரி- ஸ்ரீபதி பத்மநாபா

ஆரண்யம் இலக்கிய இதழை நடத்தி கையை சுட்டுக்கொண்டு, அதற்கு தீனி போட்டுக் கொண்டிருந்த மஹாகவி வரைகலை நிலையத்தை நடத்த முடியாதபடிக்கு ஒரு விபத்தில் சிக்கி ஆறு மாதங்கள் பணிகள் எதுவும் செய்யாமலிருந்து, முதல் குழந்தையை இழந்து நின்றுகொண்டிருந்த சோதனைக் காலம்.

எப்படியாவது ஆரண்யத்தை திரும்பவும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று தீவிரமாக யோசித்து வரைகலைப் பணிகளில் மீண்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் நெடுங்கால நண்பன் இளமாறன் ஒரு திட்டத்தோடு வந்தான். கேரளாவில் அவன் செய்யப்போகும் வியாபாரத்தில் உறுதுணையாக இருக்கவேண்டும். ஆறே மாதத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிடலாம். ஒரு நல்ல பங்கு எனக்கும் கொடுப்பான்.
அப்படி என்ன தொழில்? லாட்டரித் தொழில். தெருத்தெருவாக 'நாளெ.. நாளெ.. பூட்டான் பூட்டான்' என்று லாட்டரி விற்பதல்ல; அந்த லாட்டரிச் சீட்டுகளை உற்பத்தி செய்து நடத்தும் நிறுவனம் தொடங்குவது. தமிழ்நாட்டில் தொழில் செய்த அனுபவம் அவனுக்கு இருந்தது. ஒரு நல்ல தொகை கைக்கு வந்தால் மீண்டும் ஆரண்யம் துவங்கலாமே என்றொரு நப்பாசை எனக்கு. சம்மதித்தேன். புலவர்க்கழகு புரவலருடன் சேர்ந்தொழுகல் தானே?
தமிழ்நாட்டில் லாட்டரி தடைசெய்யப்பட்ட பிறகு இங்கு அந்தத் தொழில் நடத்திக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் கேரளாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். அங்கே லாட்டரித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான். அரசாங்கத்துக்கு எப்படி தண்ணி காட்டுவது என்பதில் அவர்களுக்கு இருக்கும் நிபுணத்துவம் பிரமிக்கவைப்பது.
ஒரு நம்பர் லாட்டரியை நீங்கள் வாங்கிப் பழகிவிட்டீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவது நெம்ப கஷ்டம். அந்த அளவுக்கு போதை வஸ்து அது. லாட்டரி சீட்டில் இருக்கும் எண்ணின் கடைசி இலக்கத்தை வைத்து விளையாடும் லாட்டரி அது. அதன் பயங்கரத்தை உணர்ந்த அரசு அதை இந்தியா முழுக்க தடை செய்துவிட்டது.

நமக்கா வழி தெயாது? கடைசி இரண்டு இலக்கங்களை வைத்து பரிசு கொடுக்க ஆரம்பிக்கிறோம். அரசு அதிகாரிகளும் இது பிரச்சினையில்லாத லாட்டரி என்று அனுமதி கொடுத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு பாவம் அந்த அளவுக்கு படிப்பறிவில்லை - இதுவும் ஒரு நம்பர் போன்றதுதான் என்று. ஒவ்வொரு கடையிலும் அரை மணிக்கொரு முறை வரும் லாட்டரி முடிவுகளுக்காக கடைகளின் அறைகளில் கூட்டம்கூட்டமாக அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்... ஒவ்வொருவர் கையிலும் அடித்துத் திருத்தி எழுதப்பட்ட எண்கள் எழுதிய அட்டவணைகள் கொண்ட கசங்கிய நோட்டுப்புத்தகங்கள்... எளிமையானவர்களின் லலிதமான புரோபபிலிட்டி அன்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ்..! சிஸ்டம் அனாலிசிஸ் அன்ட் ரிசர்ச்...!
இளமாறன் ஆரம்பிக்கப் போகும் லாட்டரி நிறுவனத்தின் மேலாளராக நான் பொறுப்பெடுத்துக் கொண்டேன். அலுவலகம் பாலக்காட்டில் என்றாலும் பதிவு செய்யப்பட்டது கேரளத்தின் வடகோடியில் உள்ள காசர்கோட்டில். எல்லா லாட்டரி நிறுவனங்களும் அங்கேதான் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏனென்றால் மிக பின்தங்கிய மாவட்டம் அது. அங்கு பதிவு செய்தால் அதிக தொந்தரவு இருக்காது. விற்பனை வரியை மிகக்குறைந்த கையூட்டில் விழுங்கிவிடலாம்.

விற்பனையைத் துவங்குவதற்கு முன் கேரளத்திலிருக்கும் எல்லா ஏஜென்டுகளையும் சென்று பார்த்து அறிமுகம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. நானும் இளமாறனும் காரில் காசர்கோடு துவங்கி கண்ணூர் மலப்புறம் கோழிக்கோடு பாலக்காடு திருச்சூர் எரணாகுளம் ஆலப்புழை பத்தனம்திட்டா திருவனந்தபுரம் என ஒரு நீண்டதூரப் பயணம் சென்றோம் ...

அப்போதுதான் தெரிந்தது... எப்படிப்பட்ட ஒரு தாதா சாம்ராஜ்யத்துக்குள் நுழைந்திருக்கிறோம் என்பது. பெரும்பாலும் தமிழர்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் வியாபாரம். படிப்பறிவைவிட பட்டறிவின் ஆளுமை அவசியம். கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழில் என்பதால் உயிருக்கு விலையில்லை. போட்டியாளன் எப்போது வேண்டுமானாலும் போட்டுத் தள்ளிவிடுவான்.

ஆரண்யத்துக்காக கேரளத்தின் எல்லா மாவட்டங்களையும் சுற்றிப் பார்த்து பாரம்பர்ய அடிப்படையிலான ஒரு கட்டுரைத் தொடர் எழுதவேண்டும் என்றொரு ஆதர்சம் எனக்கு இருந்தது. இப்போதைய பயணத்தில் எண்களுடனும் தொகைகளுடனும் அலைபேசி அழைப்புகளுடனும் சேர்ந்து கலந்து அது ஒரு ஏக்கக் கனவாகவே கரைந்துவிட்டிருந்தது.

லாட்டரி துவங்க வேண்டிய நாளும் நெருங்கிவிட்டது. நான் திருச்சூரில் இருந்தேன். ஒரு வாரத்துக்கான 21 லட்சம் லாட்டரி சீட்டுகள் இன்று பாலக்காட்டுக்கு வந்திருக்கும். நாளையிலிருந்து எல்லா ஊர்களுக்கும் விநியோகம் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்களில் முதல் குலுக்கல். பாலக்காடு அலுவலகத்திலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு.

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து எல்லா லாட்டரி சீட்டுகளையும் கைப்பற்றி அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டு முதலாளி இளமாறனையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். நான் உடனே செல்ல வேண்டும். டிரைவரை அழுத்திப் பிடிக்கச் சொல்லி மாலை நேரத்தில் பாலக்காடு வந்து சேர்ந்தோம்.

அலுவலக ஊழியர்கள் தெருவில் நின்றுகொண்டிருந்தார்கள். இளமாறனின் அலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. உடனடியாக காவல்துறை உயரதிகாரியின் அலுவலகத்துக்குப் போகச் சொன்னார்கள். அங்கே கீழ்தளத்தில் ஒரு மூலையில் இளமாறன் நிற்கவைக்கப்பட்டிருந்தான். அருகில் சென்றேன். ஏற்கனவே லாட்டரி நடத்திக் கொண்டிருக்கும் நான்கு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் முதலாளி செய்த வேலையாம் இது. எங்கள் நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் காசர்கோட்டிலிருந்து மறுநாள்தான் வந்து சேரும். இன்றைக்கே லாட்டரி சீட்டுகள் வந்துவிட்டதைத் தெந்து கொண்ட எதிராளி போலீஸ் செல்வாக்கைப் பயன்படுத்திவிட்டான். அனுமதியில்லாத லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. இன்னும் இளமாறன் மீது எஃப்ஐஆர் போடவில்லை. நான் மேல்தளத்தில் உயரதிகாரியின் அறைக்குச் சென்றேன். வெளியே காத்திருக்கச் சொன்னார்கள்.

காத்திருந்தேன். என் அம்மா சரசுவதி டீச்சர் என் முன்னால் வந்து நின்று, 'எவ்வளவு பதவிசா இலக்கிய இதழெல்லாம் நடத்தி மரியாதையோட வாழ்ந்திட்டிருந்த... இங்க வந்து நின்னுட்டிருக்கியே... வெக்கமா இல்ல?' என்றார். மனைவி சரிதாவும் முன் வந்து நின்று, 'கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு அமேரிக்கயிலோ அபுதாபியிலோ போயி சம்பாதிக்கான் நோக்காதெ இவிட வந்நு நில்கான் நாணமில்லே ஸ்ரீயேட்டா?' என்றாள். பெல் அடித்தவுடன் தலையைக் குனிந்தபடி உயரதிகாரியின் அறைக்குள் சென்றேன்.

மலையாள நடிகர் திலகனை போலீஸ் சீருடையில் பார்த்திருக்கிறீர்களா? அவரையே வார்த்து வைத்ததைப் போல கம்பீரமாக அமர்ந்திருந்தார் அந்த உயரதிகாரி. ஐம்பது வயதைக் கடந்தவர். 'பாண்டிகளெல்லாம் இவிடெ வந்நு லோட்டரி என்னு பேரும் பறஞ்ஞு நம்முடெ கவண்மென்டின்டெ பைசயும் ஜனங்களுடெ பைஸயும் கட்டுகொண்டு போகுந்நு. அதினு நீயெல்லாம் கூட்டு. அல்லேடோ?' என்று 'கலிதுள்ளி'னார். 'இல்ல சார். இது கவர்மென்ட் அங்கீகிருதம் உள்ளதாணு சார். நாளெ ராவிலே சர்டிபிகேட் எத்தும் சார்.' என்றேன். 'இந்நு இல்லல்லோ... அதினு எந்து செய்யும்' என்றார். 'சார் வேண்டது எந்தாந்நு வெச்சா செய்யாம் சார்' என்றேன். 'ஓ... மற்றேது... அல்லே...?' என்றார். 'ஞான் பைச மேடிக்குமெந்நு ஆராடோ பறஞ்ஞது?' என்றபடி கோபமாக எழுந்து முன்னால் வந்தார். 'என்னெ கண்டா அத் தரக் காரனாணு எந்நு தோனுந்நுண்டோ?' என்றபடி என் தாடையில் கைவைத்து நிமிர்த்தினார். 'இல்ல சார், குறே பைச செலவு செய்தாணு ஈ பிசினஸ் துடங்கியிட்டுள்ளது. சார் ஒந்நு சஹாயிக்கணம்' என்றேன். 'ம்... ரோபர்ட்டே...' என்று உள்ளே பாத்து கூப்பிட்டார். உளளே இருந்து ரோபர்ட் வந்தான். எதிர் லாட்டரி நிறுவனத்தின் ஆள். 'ஈயாள் மாசம் மூணு லட்சம் ஆணு தருந்நது. தான் எந்து தரும்?' என்று கேட்டார். 'சார் இப்பழாணு துடங்கியிட்டுள்ளது. என்டெ 'போஸி'னோடு சம்சாரிச்சு பறயாம் சார்' என்றேன். 'வில பேசல் ஒன்னும் வேண்டா. மாசம் ரண்டு லட்சம். இந்நு தன்னே வீட்டில் கொண்டு வந்து தரணம். காசு தந்நிட்டு ஆ பாண்டியெ விளிச்சிட்டு போய்க்கோ. அல்லெங்கில் இந்நு லோக் அப்பில் கிடக்கட்டெ' என்றார். 'ஞான் இப்பம் வராம் சார்' என்றபடி கீழே ஓடினேன்.

(அடுத்த மூன்று மணி நேரங்களுக்குள் இரண்டு லட்ச ரூபாயை இளமாறனின் வீட்டிலிருந்து வரவழைத்து அவரிடம் ஒப்படைத்துவிட்டு இளமாறனையும் அழைத்துக்கொண்டு அலுவலகம் வந்தேன். அடுத்த ஒரு மாதத்திலேயே கேரள அரசு தனியார் லாட்டரிகளை தடை செய்து விட்டது. அறுபது லட்ச ரூபாய் நஷ்டம் இளமாறனுக்கு. செய்த வேலையும் ஆரண்யம் கனவும் எனக்கு நஷ்டம்.)

அதற்கடுத்த இரண்டாம் நாள் நான் கோவைக்கு வரவேண்டியிருந்தது. இளமாறன் பாலக்காட்டிலேயே இருந்தான். பஸ்ஸில் வந்து இளமாறனின் வீட்டுக்குச் சென்று அவனுடைய பைக்கை எடுத்து என் வீட்டுக்கு சென்றேன். வழியில் 'ஒந்நு பூசிக் களயாம்' என்று தோன்றியதால் பாரில் நிறுத்தினேன். இரவு 10 மணியாகி விட்டது. கம்பெனிக்கு யாரும் இல்லை. காழ் ழிட்டர் பிழாந்தியும் காழ் கிழோ சிக்கனையும் அகத்தில் ஆக்கிவிட்டு வெளியே வந்தேன். காந்திபார்க்கில் வளைவில் போலீசில் மாட்டிக் கொண்டேன்.

டிரங்க் அன்ட் டிரைவன் !

ஒரு வார்த்தை கூட கேட்காமல் சார்ஜ்ஷீட் எழுதிவிட்டார் சார்ஜன்ட். 1200 ரூபாய் அபராதம். 'சார் எதாவது செய்யறதுன்னா செஞ்சுடலாம் சார்...' என்றேன். நிமிர்ந்து பார்த்தார். 'ஓ... லஞ்சம்... இல்லியா?' என்றார். 'என்னப் பாத்தா காசு வாங்குறவன்மாதி தெரியுதா?' என்றார். 'ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா...' என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் நினைத்தது போல இல்லை. உண்மையிலேயே உண்மையான போலீஸ்காரர்தான் அவர். 'காலையில ஸ்டேஷனுக்கு வந்து ஃபைனைக் கட்டிட்டு வண்டி எடுத்திட்டு போங்க' என்றார். 'இப்பவே கட்டிடறேனே' என்றேன். 'முடியாது. குடிச்சிட்டு வண்டி ஓட்ட விடமாட்டேன். வேணும்னா ஒண்ணு செய்ங்க... உங்க ஃப்ரண்ட்ஸ் யாரையாவது வரச் சொல்லுங்க... அவங்க ஓட்டிட்டுப் போலாம்... ஐ மீன் குடிக்காதவங்க...' நானும் யோசித்து யோசித்து பார்த்து அந்த கசப்பான உண்மையை எதிர்கொண்டேன். குடிக்காத நண்பர்களே எனக்குக் கிடையாது.... சரிதாவை வேண்டுமானால் வரச் சொல்லலாம். ஆனால் அவளுக்கு வண்டி ஓட்டத் தெயாது. இதற்காகவாவது அவளுக்கு பைக் ஓட்டக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்த நாள் போய் பைக்கை மீட்டு விட்டு மதியம் அதே பைக்கில் ஒரு சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன். பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் வெள்ளை பைக் வெள்ளை சீருடையில் அதே சார்ஜன்ட். புன்னகைத்தார். நானும் புன்னகைத்தேன். 'அப்புறம்... இன்னிக்கு எப்படி? குடிச்சிட்டு அந்தப் பக்கம் வருவீங்களா?' என்றார் இளக்காரமாக. 'நிச்சயமா வருவேன் சார். குடிச்சிட்டுத்தான் வருவேன். ஆனா உங்களால என்னைப் பிடிக்க முடியாது.' என்றேன் நானும் இளக்காரமாக. சிக்னல் விழுந்தது.

அன்று இரவு காந்திபார்க்கில் அவர் நின்றுகொண்டிருந்தார். நானும் குடித்துவிட்டுத்தான் போனேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்து தோளைத் தட்டிக்கொடுத்தார். இப்போது அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்.

அன்று 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின்' மெட்டில் 'மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்' என்ற வரிகளைப் பாடியபடி நடந்து சென்றேன். .

Friday, May 21, 2010

யோத்தி மாசி!

யோத்தி மாசி!
ஸ்ரீபதி பத்மநாபாஆங்கிலத்தில் ஸ்பூனரிசம் (Spoonerism) என்றொன்றுண்டு. வார்த்தைகளுக்கிடையே நாக்குழறி வேறு வார்த்தைகளாக வெளிப்படுதல். வில்லியம் ஆர்ச்சிபால்ட் ஸ்பூனர் (1844-1930) என்பவருக்கு இது ஒரு வியாதியாகவே இருந்திருக்கிறது. ஆனால் அவருக்குப் பிறகு பெரும்பாலும் இது ஒரு வார்த்தை விளையாட்டாகவே வழக்கத்திலிருக்கிறது.

ஒரு உதாரணம்: you have very mad banners.

இதன் மூல வாக்கியம்: you have very bad manners.

இன்னொன்று: bedding wells அதாவது wedding bells

இப்படி சாதாரண வாக்கியங்களில் ஆரம்பித்து பெரும்பாலும் 'நல்ல' வாக்கியங்களாக மாறிவிடும் இந்த வார்த்தை விளையாட்டு. உதாரணத்துக்கு இரண்டு:

1. Have you seen her sick duck?

2. She showed me her tool kits.

தமிழில் இப்படியொரு வார்த்தை விளையாட்டை நான் அறிந்ததில்லை. ஆனால் மலையாளத்தில் இது ஒரு மாபெரும் 'இயக்க'மாகவே இருக்கிறது என்று சொல்லலாம்; 'சொறிச்சு மல்லல்' என்பது மலையாளிக்கு என்றைக்கும் 'இஷ்டப்பட்ட ஒரு வினோதம்' ஆகவே இருக்கிறது. 'மறிச்சு சொல்லல்' (மாற்றிச் சொல்லுதல்) என்பதை மாற்றிப் போட்ட பிரயோகம் இது. இளைஞர்கள் முதியவர்கள் என்றில்லாமல் யாரிடமிருந்து வேண்டுமானாலும் ஒரு சொறிச்சு மல்லல் பிரயோகத்தை நீங்கள் எந்தக் கணமும் எதிர்பார்க்கலாம். அதை நீங்கள் சொறிச்சு மல்லிப் பார்ப்பதற்குள் அவர் இடத்தைக் காலி செய்திருப்பார். அந்தப் பிரயோகத்தை அதிர்ச்சியுடன் வாயிலிட்டு மென்று வெளியே துப்புவதற்குள் நீங்கள் படாத பாடுபடவேண்டியிருக்கும்.
அந்த நாட்களில் எங்கள் தறவாட்டு இல்லத்தில் ஒரு காரணவர் இருந்தார். முற்றத்திலோ அஞ்சாம்புரையிலோ குளக்கரையிலோ எங்கிருந்தாலும் சரி, அவரைச் சுற்றி எப்போதும் ஒரு இளைஞர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அந்தப் பக்கம் செல்ல பெண்கள் தயங்குவதுபோல் நடிக்கவாவது செய்வார்கள். தொந்தியைத் தடவியபடி அல்லது பூணூலால் முதுகைச் சொறிந்தபடி அல்லது மூக்குப்பொடியை உறிஞ்சி தும்மியபடி என்று பல சேஷ்டைகளுடன் அவர் நல்ல வார்த்தைகள்தான் பேசிக்கொண்டிருப்பார். அதற்கு எதற்கு இந்த இளைஞர்கள் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் என்று - தமிழ்நாட்டிலிருந்து எப்போதாவது அங்கு செல்லும் - எனக்குப் புரியவே புரியாது; எரிச்சல்தான் வரும். சில பேரிடம் கேட்டபோது சிரித்தபடியே போய்விட்டார்கள்.

ஒருநாள் என் முறைப்பெண்ணிடம் இதைப் பற்றி ரகசியமாகக் கேட்டேன்: ஸ்ரீக்குட்டீ, இந்த கேசவப்பன் சொல்வதற்கெல்லாம் எதற்காக இவர்கள் இப்படி கேணத்தனமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. அவள் ஆர்வத்துடன், இன்று என்ன சொன்னார் என்று கேட்டாள். 'வாதி குடிச்சிட்டுண்டோ?' என்று கேட்டார்; எல்லோரும் சிரிக்கத் துவங்கிவிட்டார்கள் என்றேன். அவள் ஒரு நொடி யோசித்து முகத்தை அஷ்டகோணலாக்கி 'அய்யே...' என்றபடி ஓடிவிட்டாள்.

பலநாட்கள் அவளிடம் கெஞ்சிய பிறகுதான் இந்த 'பாவம் பாண்டி'க்கு சொறிச்சு மல்லல் குறித்து சொல்லிக் கொடுத்தாள்: முறைப்பையனுக்குக் கெட்ட வார்த்தை சொல்லிக்கொடுக்கும் குறும்பு கொப்பளிக்கும் ஆர்வத்துடனும் நாணத்துடனும். இரண்டு வார்த்தைகளில் முதல் எழுத்தை மாற்றிப் போடவேண்டுமாம்; நெடிலையும் குறிலையும் மாற்றிவிட வேண்டுமாம்.
தொடர்ந்து ரகசியமாய் என் காதில் 'மதமேதாயாலும் குணமுண்டாயால் மதி' என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.

அதிலிருந்து யார் எது சொன்னாலும் எது கேட்டாலும் ஒரு நிமிடத்துக்கு என்னிடமிருந்து பதில் வருவதில்லை. ஒரு நிமிடம் யோசித்து அதில் சொறிச்சு மல்லல் எதுவும் இல்லை என்று உறுதியானபிறகுதான் பேசவே துவங்குவேன். இப்போதும் இந்த வியாதி தொடர்கிறதோ என்னவோ?

அன்று நான் போயிருந்தது ஒரு திருமணத்துக்காக. அடுத்த நாள் திருமண விருந்துப் பந்தி. நாலைந்து இலைகள் தள்ளி காரணவர் உட்கார்ந்திருந்தார். எதிர்ப் பந்தியில் பெண்கள். எரிசேரி, புளிசேரி, காளன், பப்படம், கூச்சல்... பரபரப்பு கூடிக்கொண்டே இருந்தது. திடீரென்று காரணவர் சத்தமாகக் கத்தினார்: 'உண்ணீ... சாம்பாருண்டோ ?'... திடீரென நிசப்தம் நிலவியது. ஒரு நொடி விட்டு 'சொறிச்சு மல்லல்லே...' என்றார். சில நொடிகள் கழிந்து ஆண்கள் வரிசையில் அட்டகாசச் சிரிப்பு; எதிர்ப்புறமிருந்து 'அய்யே...' என்ற கூக்குரல்கள்.

ரொம்ப யோத்தி மாசிக்கிறாய்ங்களோ என்று நினைத்துக்கொண்டேன்.

Thursday, May 20, 2010

மணிரத்னத்தின் ராவணன் கதை சுருக்கம் மற்றும் படம் பற்றி
1987 ஆம் ஆண்டு நாயகன் ரிலீஸ் ஆனது.அந்த படம் போஸ்டர் டிசைன் முதல் எடுக்கப்பட்ட முறையிலும் கமலின் நடிப்பையும் வித்யாசப்படுத்தி காட்டிய படம். அந்த படம் வந்த போது ,நான் நன்காம் வகுப்பு மாணவன்.அந்த படத்தில் இருந்து மணிரத்னம் படங்களை எதிர்பார்த்து காத்திருக்கும் எண்ணற்ற ரசிகர்களில் நானும் ஒருவனாகி போனேன்.

ராவணன் படம் பல எதிர்பார்புகளுடன் வெளிவர இருக்கிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் மற்றும் இந்தியில் உருவாகியிருக்கும் படம் ராவணா. இந்தி படத்தில் அபிஷேக் பச்சனும், தமிழ் படத்தில் விக்ரமும் நாயகனாக நடித்துள்ளார்கள். நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். ப்ரியாமணியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, டிரைலரும் வெளியாகி விட்ட நிலையில் கதை ராமாயணத்தின் தழுவலா, அல்லது வேறு மாதிரியானதா? என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்காமல் இருந்தது. இப்போது ஒருவழியாக ராவணா படத்தின் கதை கசியத் தொடங்கியிருக்கிறது. ராவணா படம் ராமாயணத்தின் தழுவல் என்றெல்லாம் கூறப்பட்டாலும்,

அதை நேரடியாக அர்த்தம் பண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் கதை அப்படி வித்தியாசமாக செல்கிறது. கதைப்படி போலீஸ் தேடுகிற குற்றவாளிதான் நாயகன் விக்ரம். அவருக்கு வைக்கப்படும் குறியில் அவரது தங்கை ப்ரியாமணி கொல்லப்படுகிறார். அந்த வெறித்தனமான கொலையை அரங்கேற்றியது போலீஸ் அதிகாரி பிருத்விராஜ். இதனால் கோபம் கொள்ளும் விக்ரம், ப்ருத்விராஜின் மனைவி ஐஸ்வர்யா ராயை கடத்திக் கொண்டு காட்டுக்குள் பதுங்குகிறார். அவரிடம் இருந்து தப்பித்து, காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்து ஒருவழியாக போலீஸ் கைக்கு கிடைக்கிறார் ஐஸ்வர்யா ராய். மனைவி கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட வேண்டிய பிருத்விராஜ், ஐஸ்வர்யா ராயை சந்தேகப்படுகிறார். அவனும், நீயும் ஒண்ணா காட்டுக்குள்ள சுத்துனீங்க. நீ சுத்தமா இருக்கியான்னு தெரியணும்... என்று கேள்வி கேட்டு டார்ச்சர் செய்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் ஐஸ்வர்யா ராய் எடுக்கும் முடிவுதான் கதையின் இறுதிக்காட்சி. படத்தின் பெரும்பாலான பகுதி காட்டுக்குள்தான் படமாக்கப்பட்டிருக்கிறது என்பது ஏற்கெனவே தெரிந்த விஷயமாக இருந்தாலும், இப்போது வெளியாகியிருக்கும் கதையுடன் சேர்த்துப் பார்த்தால், மணிரத்னம் தனது ஸ்டைலில் இருந்து துளிகூட மாறாமல் படம் எடுத்திருப்பது உறுதியாகிறது.

a.r.ரகுமானின் பின்னணி இசை படத்தில் மிரட்டி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.வால்பாறை சுற்றியுள்ள காட்டு பகுதிகளில் படபிடிப்பு நடந்துள்ளது.
பிரபுவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஐஸ்வர்யா ராய் முதன்முதலாக தமிழில் டப்பிங் பேசி நடித்துள்ளார்.விக்ரம் ஹிந்தி படத்திலும் சொந்த குரலில் பேசி உள்ளார்.தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் விக்ரம் இந்த படத்தை பெரிதாக நம்பி இருக்கிறார்.

படத்தில் மூன்றே பாடல்கள்தான்.உசிரே போகுது பாடல் இப்போதே டீ கடைகள் எங்கும் ஒலிக்க துவங்கி
இருக்கின்றது.ராவணன் வெற்றி பெற மணிரத்னம் மற்றும் அவர் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

Wednesday, May 19, 2010

சொற்கப்பல் தக்கை கடைசிப் பதிவு

லைலா புயல் மையம்கொண்டிருந்த காலையில் மின்சாரம் தடைப்பட்டுவிடுமோ என்ற அச்சுறுத்தலுடன் இந்தக் கட்டுரையை மனதுக்குள் மழை நிரம்ப எழுதத் தலைப்படுகிறேன். சேலத்தில் கடைசிப்பொழுதில் தொக்கி நின்றபோது வாமுகோமுவின் காமக்கதை குறித்தும் தமிழ்மகனின் வெட்டுப்புலி குறித்தும் பேசும் முறை வந்தது. இவ்விசயங்களை பேசுபவர்களின் பட்டியலை நான் நடந்ததுமாதிரியாய்ப் பதிவுசெய்யவில்லை. அவர்கள் பேசியது அனைத்தையும் எழுதவுமில்லை. என்ன காதில் விழுந்ததோ அதை மட்டுமே எழுதியுள்ளேன். அதற்குக் காரணம் சிலர் எழுதிவந்து சுதியில்லாமல் கடகடவென்று எவ்வித உணர்ச்சி பெருக்குமற்று கடமையைச் வெகு சிறப்பாக செய்ததுதான் என்று சொல்லவேண்டும். ஒரு படைப்பைப் படித்து அது மோசமானது சிறப்பானதோ அதை உண்மையான உள் உணர்ச்சிகளிலிருந்து பேசியிருக்க வேண்டும். கவிஞர் நேசன் அவ்வாறு பேசினாரென்றால் அது மிகையாகாது.

மூளைப்பதிவுகள் அவ்வளவு நேர்த்தியானதாக அமையவில்லை என நினைக்கிறேன். பேசியவர்களின் வரிசைமுறையை கலைத்துப்போட்டிருக்கிறேன்.

வாமுகோமுவின் காமமும் காதலும் ஊற்றெடுத்த நீண்ட கதையைக் கடைசியாய் எழுதவேண்டுமென்று தோன்றியது. கோமு நல்ல சிறுகதைகளும் நல்லாயில்லாத சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் என்கிறார்கள். ....... மையில் வந்த சிறுகதையொன்றைத்தான் நீண்ட கதையாகத் திரித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அது சிறுகதையாக இருந்தபோது நன்றாக இருந்ததாகவும் நீண்ட கதையாக மாற்றப்பட்டபோது வெறும் காமச்சரக்காய் மட்டுமே மாறிவிட்டதாயும் ஒரு நண்பன் சொல்லக் கேள்விப்பட்டேன். அந்தப் பதிப்பகத்தாரும் எழுத்தாளரும் ஒன்று கூடி அமர்ந்து சின்னக்கதையைப் பேசிப் பேசி பெரிதாக ஊதினார்களென்றும் கூறுகிறார்கள். அமோக விற்பனையை மட்டுமே ஒரு சில பதிப்பாளர்கள் மனதில் ஆழப்பதித்துக்கொண்டு ஆபாசங்களை நூல்களின் வாயிலாய் அள்ளி இறைக்கின்றார்கள். ஆபாசம் மட்டுமே இலக்கியமாகிவிடாதென்று தெரிந்திருந்தும் இலக்கியமென்ற பெயரில் பொறுப்பற்ற நெறியற்ற செயல்களை செய்வதில் அவர்களுக்கு அளப்பரிய ஆனந்தம் கிடைக்கின்றதுபோலும். சந்தோச வானில் நீந்திக் களிக்கட்டும்.

தக்கையின் ஆசிரியர் சாகிப் கிரான் வாமுகோமுவின் நாவலைப் பற்றி சத்தமற்ற குரலில் படித்தார். அவர் பேசியதைவிட கவிஞர் தமிழ்நதியும் எழுத்தாளர் சந்திராவும் வாமுவின் பெண்களை விகாரப்படுத்தும் அந்த நாவலை நாவலே இல்லையெனவும் பெண்கள் மட்டுமே காமத்திற்காய் அலைவதாய்ச் சித்தரித்து பெண்களைக் கொச்சைப்படுத்திவிட்டாரெனவும் அதிக சூட்டில் கொத்திதெழுந்த நீராவியின் மூடியைப் போல ஆகி அமைதியடைந்தார்கள் குளிர்ந்த காற்று பட்டதும். வாமு முன்வரிசையில் பாக்கைப் போட்டபடி நிதானமாய் உள்ளுக்குள் புகைந்தவராய் உட்கார்ந்திருந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எப்படியெல்லாம் புகைந்தாரோ இல்லை புகைவில்லையோ தெரியாது. சின்ன கலக்கமிருந்திருக்கலாமில்லையா

தமிழ்நதி மேடையின் முன் நின்று நாவலின் ஊடாய் வரும் கதாபாத்திரங்களை விவரித்து அப்படி எப்படி ஒரு பெண்ணிருப்பாளென்று கேட்டார். இதெல்லாம் அதிகப்படியானதென்றார். சந்திராவும் இது வெற்று போர்னோ இலக்கியமென்று அடித்துக் கத்திக் கூறினார். இப்படியே வாமுகோமு சொற்களில் பந்தாடப்பட்டார். இந்தப் பேச்சுக்கு என்ன மறுமொழி பேசுவாரென்று ஆவல் எழுந்தது. இந்தச் சத்தங்கள் ஒருவழியாய் ஒழிந்தபின் வாமு மேடைக்கு வந்து நாவலை இப்படி எழுதிக்கொண்டுவருவோமென்று அவரும் பதிப்பாளரும் முடிவுசெய்து திட்டமிட்டுக் கொண்டுவந்ததாக உண்மையைச் சொன்னார். இந்த உண்மையைச் சொல்வதில் வாமு எந்தத் தடையையும் கொண்டிருக்கவில்லையென்பது புரிந்தது.

வாமுகோமு 15 நாட்களில் ஒரு நாவலை எழுதிவிடுவதாக ஒரு இலக்கிய நண்பர் சொல்லி பொறாமைப் பட்டுக்கொண்டார் அல்லது அவரால் எழுத முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் சொன்னாராவென்று தெரியவில்லை. ஏன் இவ்வளவு அடிதடியாய் வாமு எழுதவேண்டுமென்று தெரியவில்லை. அதற்கான சிறப்புக்காரணங்கள் எதாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. வாமுவிடமிருந்து இன்னும் நல்ல நாவல்களையும் சிறுகதைகளையும் நிறுத்தி நிதானமாக எதிர்பார்க்கலாம்.

படைப்பாளியை இப்படி எழுது அப்படி எழுது என்று யாரும் சொல்வதற்கில்லை. எழுதுவது எதுவாகினும் அது கலையாய் மாறவேண்டுமென்பதுதான் முக்கியமேதவிர எழுத்தாளரை கட்டளையிடும் வேளை நம்முடையதல்ல என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. எழுதி வெளியிடுவது இலக்கியமாகவில்லையெனில் அதை விமர்சித்தோ விமர்சிக்காமலோ குப்பையில் எறிந்துவிடலாம்தான். அந்த உரிமை வாசகனுக்கு உள்ளதென்பதை ஆணித்தரமாய்ச் சொல்வேன். அதைப்பற்றி எழுத்தாளன் என்ன செய்யவியலும். இலக்கியம் வரவில்லையெனில் வேறு எதாவது பணி செய்து காலத்தை கடந்து மரணத்தை அடையலாம்.

வாமு நாவலின் பெயர் கனகாம்பரமும் இன்ன பிற காதல் கதைகளும் என்று நினைக்கிறேன். சரியாய்ச் சொல்கிறேனா என்று தெரியவில்லை. தமிழ்மகனின் வெட்டுப்புலி நாவல் பற்றி சிவராமன் கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தார். அதை தக்கைபாபு வாசிக்க கூட்டம் அத்துடன் முடிந்ததென்று நினைக்கிறேன். நாட்கள் ஆகிவிட்டதால் நினைவிலிந்ததை இதுவரை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.

சேலத்திலிருந்து கிளம்பும் நேரம் வாய்க்கப்பெற்று தக்கைபாபுவை நச்சரித்து இரண்டு பயண இருக்கைகளை கே.பி.என் பேருந்தில் முன்பதிவு செய்துவிட்டேன். சிவா வாடகை அறையில் அங்கங்கு இலக்கியவாதிகள் கூடி கூடி உரையாற்றிக்கொண்டிருந்தனர். நானும் பால்நிலவனும் நேசனும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானோம். பேருந்திற்குள் ஏறுவதற்கு முன் நன்றாக சாப்பிட்டோம் சாலையோர வண்டிக்கடையில். வண்டிக்கடைக்காரன் இலக்கியம் தெரியாதவன். இட்லிகளை தோசைகளைச் சுட்டு சுட்டு ஒழுங்காய் குடும்பதை ஓட்டிக்கொண்டிருக்கிறான்போலும். இலக்கியம் இந்த ஊரில் சின்ன சின்ன உதவிகள் செய்யுமே ஒழிய வாழ்வின் ஆதாரங்களை ஒரு போதும் தந்துவிடப் போவதில்லை என்பதை அறிந்தவனாகவும் இருக்கிறேன். ஆனால் அவற்றின் போதைக்குள் குதித்துவிட்ட நான் மீள்வதற்கெல்லாம் வழியொன்றமில்லையென்றே தோன்றிவிட்டது. வாழ்வோ சாவோ எழுத்தாளனாய் மரித்துவிடுவோமென்றாகிவிட்டது.

Monday, May 17, 2010

சொற்கப்பல் – தக்கை இணைந்து நடத்திய தமிழ்நாவல்கள் விமர்சனக் கூட்டதிற்கு

ஏற்காடு மலை ஒருவழியாய் எங்களை மேலிருந்து உருட்டிவிட்டபோது இரவு இமைகளைத் திறக்கத் தொடங்கியிருந்தது. மலைக்குன்றுகள் மேலிருந்து சேலம் நகரம் ஒளிப்புள்ளிகளாய்த் தெரிந்தன. மனிதர்களும் அந்தப் புள்ளிகளுக்குள்தான் இருக்கிறார்கள். புள்ளியைப் போன்ற மானுடர்கள் நிலத்தில் போடும் ஆட்டம்தான் பூமியின் உருண்டையைவிடப் பெரிதானது. சொல்லித் திருந்துவதில்லை மானுடம். அவனவன் அவனுக்கு பிடித்தமான ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கிறான். நான் எழுத்தாளனாய் ஆடிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் சேலம் என்னை அழைத்திருக்கிறது. ஆம் சொற்கப்பல் அஜயன்பாலா தக்கைபாபு இலக்கிய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் கூட்டணியில் இன்னும் நிறையப்பேர் பங்கெடுத்துள்ளார்கள். அகநாழிகை வாசுதேவன் தடாகம் இணைய இதழின் ஆசிரியர் முகுந்த் ஆகியோர்தான். சேலத்திலும் அந்த மாதிரி ஒரு நிகழ்வொன்று நடக்கவிருந்தது. தமிழில் ஆறு நீண்ட கதைகள் பற்றிய விமர்சனக்கூட்டம் அது. அந்தக் கூட்டத்தின் விளைவுதான் இவ்வளவு எழுத்துகளும் என்னிலிருந்து கிளம்பியுள்ளதற்கு காரணமென்றால் மிகையாகாது.

சேலம் எங்களுக்கு இரவானது. புதுப்புது நண்பர்கள் யார் யாரோ வந்திருந்தார்கள். தக்கைபாபு எங்கள் தேவைக்கேற்ப வசதிகளை உருவாக்கிக்கொண்டிருந்தார் சத்தமில்லாமல். அவர் சத்தமின்மையை வேறு எவரிடத்திலும் நான் கண்டதில்லை என்று சொன்னால் தற்பெருமையாகாது. அவ்வளவு மெல்லிய மனமுள்ள மனிதர். அவர் இதயம் துளிர்க்கும் இலையைவிட மீன்களின் தவிட்டுக்குஞ்சுகளைவிட மிருதுவானதென்று சொன்னால் அதுவும் தற்பெருமையாகாது.

நான் பேசபேச அவர் வார்த்தைகளை உள்ளுக்குள்ளேயே பூட்டியிருந்தார். இப்படியே போக நான் ஒரு மூலையில் படுத்துறங்கள் அவர் ஒரு மூலையில் படுத்துறங்க சேலத்தில் விடியல் கண்களைக் கசக்கியபடி எழுந்து நடமாட ஆரம்பித்திருந்தது. நானும் தக்கைபாபுவும் நித்திரையின் படிக்கட்டுகளில் கால் வைத்தபோது எதிர்பார்த்திருந்த கவிஞர் கண்டராதித்தனும் கவிஞர் பொன். வாசுதேவனும் முகுந்தும் வந்திருங்கினார்கள். சிறிது உரையாடலுக்குப்பின் சேலத்தில் ஞாயிற்றின் ஒளி காட்டு வெள்ளமெனக் கிளம்பி நகரெங்கும் பிரவகித்துக்கொண்டிருந்தது.
மூன்றாவது மாடி நீண்ட அறை மாறி மாறி நீராபிஷேகம் செய்து ஆடைகள் உடுத்தி கூட்டம் கூட்டமாய்ப் படியிறங்கி காலை உணவு உண்டு வெறுத்து கூட்டம் நடக்கும் பள்ளிக்கூடவளாகத்திற்குள் நுழைந்தோம்.

நிறைய மரங்கள் தாழ்வரங்களாயிருந்தன. அதற்கு கீழ் இருக்கைகள் போட பார்த்த நண்பர்கள் இதுவரை பார்த்திராத நண்பர்கள் பழகிய நண்பர்களென கூடி அமர்ந்திருந்தனர். பழகியவருக்கு பழகியவர் அந்நியோன்யத்தைக் காட்டிக்கொண்டிருந்தனர். புதிது புதிதானவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகங்களில் மூழ்கிக்கொண்டிருந்தனர். எனக்கும் நெருங்கிய நண்பர்களும் நெருங்கமுடியாத நண்பர்களும் அறிமுகமேயில்லாத பெண்களும் வந்திருந்தனர்.

அஜயன் பாலா விழாவைத் தொடங்கினார். சுப்ரபாரதி மணியன் விழாவிற்கு தலைமையெனப் போட்டிருந்தனர். அவரும் முன்னிருக்கையில் சத்தமின்றி அமர்ந்திருந்தார். கையில் கிடைத்த புத்தகங்களைப் புரட்டியபடியே இருந்தார்.

கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவலைப் பற்றி ச.முத்துவேல் பேசினார். அவர் விமர்சித்ததைவிட நாவலசிரியர் தன் நாவல் அனுபவம் பற்றிப் பேசியவிதம் மனிதமூளைகளை மயக்கும்விதமாக இருந்தது. அரசு போக்குவரத்துத் துறையில் வேலை செய்யும் தொழிலாளியின் வாழ்க்கையைப் பற்றி அவர் அப்படி அழகாக நகைச்சுவையாக வலியாக எழுதியிருப்பாரென்று அவர் பேச்சின் சுவராஸ்யத்திலிருந்தே தெரிந்தது. அந்தக் கிராமத்துக்காரரின் மொழி கேட்பதற்கு தேனாகவும் ரசித்து மகிழ்வதாகவும் இருந்தது.

ஜாகிர்ராஜாவின் துருக்கித் தொப்பியைப் பற்றி இளங்கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் அக்கறையோடு எழுதி வந்து நிறுத்தி நிதானமாக வாசித்தார். அவர் வாசித்தது பற்றி எல்லோரும் வியந்தார்கள். நல்ல கட்டுரை என்றார்கள். அகடமிக்காக இருப்பதாகவும் சொன்னார்கள். எனக்கும் அதை ஆமோதிக்க வேண்டும்போல்தானிருந்தது. ஜாகிர்ராஜா எழுதி வருபவர்களில் முக்கியமானவர் என்பதைச் சபையின் பேச்சுக்களிலிருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் இன்னும் அவர் தோப்பி முகமது மீரான் அளவிற்கு எழுதவில்லையென்றார்கள். எப்படியோ தமிழில் உரைநடை எழுத்தாளர்கள் அருகிக்கொண்டிருக்கும் காலத்தில் ஜாகிர்ராஜா இன்னும் நல்ல நீண்ட கதைகளைப் படைப்பாராகுக.

கவிஞர் கரிகாலனின் நிலாவை வரைபவன் பற்றி கவிஞர் அசதா எழுதி வந்து படித்தார். சுருக்கமாக நிதானமாக தன் வசீகரிக்கும் குரலால் வாசித்தார். நிலாவை வரைபவன் கவிஞர் கரிகாலனின் கவிதைகளின் நீட்சியாக இருப்பதாகச் சொன்னார். உதாரணமாய் சில வாக்கியங்களை அந்த படைப்பிலிருந்து வாசித்துக்காட்டினார். கரிகாலனை நல்ல கவிஞராக இவ்வுலகம் அறிந்திருக்கிறது.


கவிஞர் நேசன் ஆழி வெளியீடான தாண்டவராயன் கதை பற்றி மெய்மறந்து பேசினார். அவர் அந்த கதைகளைப் படித்து அவர் எவ்வாறு அதில் மூழ்கிப்போனார் என்பது பற்றி அதில் வரும் காட்சிகளின் ஊடாய்ச் சொல்லி சொல்லி வியந்துகொண்டே போனார். மொத்தத்தில் இந்த நூற்றாண்டின் மகத்தான நாவலெனச் சொல்லி தன் உண்மையான நெகிழ்த்தும் உணர்வுகளைப் பதிவு செய்தார். அதற்கு தூரன் குணா கவிஞர் நேசன் சொல்வதுபோல அது மகத்தான நாவலில்லை. பிரமாதமான நாவலென்று சொல்லலாமென்றார். உம்பர்டோ ஈகோவின் த நேம் ஆஃப் த ரோஸ் என்ற நீண்ட கதையின் பாதிப்புகளுடன் சில பகுதிகள் எழுதப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் அந்த நாவலையும் படிக்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. அதற்கு அதைப் படிக்கவேண்டும். அதைப் படிக்கும் காலத்தை இந்தக் காலம் கருணையுடன் வழங்கவேண்டும்.

அய்யப்ப மாதவன்.- சொற்கப்பல்-தக்கை இணைந்து நடத்திய நீண்ட கதைகள் விமர்சனம் ஒரு பதிவு 4

படகுகள் மிதக்கும் நீர் பரப்பின் முன் பாபு எங்களை நிறுத்திவைத்தார். இதுதான் படகுச் சவாரி செய்யுமிடம். சிறு இயந்திரப் படகுகளுமுண்டு. கால்களால் மிதித்தோட்டும் படகுகளுமுண்டெனச் சொன்னார். என் விழிகளில் நீரில் மொய்க்கும் படகுகள் பற்பல திசைகளில் ஊரியவண்ணமிருந்தன. கணவன் மனைவி குழந்தை மற்றும் மாமியாவென ஒரே படகில் உட்கார்ந்திருந்தனர். மனைவி ஒரு புறம் மாமியா எதிர்ப்புறம் போன்ற காட்சிகளைக் கண்டதும் மனதுக்குள் சிரிப்பு ஊற்றெடுத்தது. திரைப்படத்தில் மாமியாவோ மருமகளோ யாரையாவது ஒருத்தரை நீருக்குள் தள்ளி கொன்றுவிட்டால் எப்படியிருக்குமென நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். நண்பனின் உதடுகளில் யோசித்த சிரிப்பு கசிந்து என்முன் மறைந்தது.

பாபுவின் பையன் எதோ விளையாட்டுப்பொருளைக் காட்டி அதைவாங்கித் தருமாறு அடம்பிடித்துக்கொண்டிருந்தான். ஆனாலும் அவரும் அதற்குப் பதில் இனிக்கும் பனிக்கட்டிகளை வாங்கிக்கொடுத்து கெட்டிக்கார அப்பாவாகயிருந்தார். அப்புறம் எங்களையும் எதாவது சாப்பிடுவோமா என்று சொல்லி பஜ்ஜிக்கடைக்கு கூட்டிப்போனார். மிளகாய் வெங்காயம் உருளையென பஜ்ஜிகளை கொஞ்ச நேரம் புகுந்து விளையாடிவிட்டு ஏற்காட்டைச் சுற்றிப் பார்க்க உருளியைக் கிளப்பினோம்.

பச்சைபச்சையாய் மரங்கள் நீர்நிலையினைச் சுற்றியிருந்தன. அந்த மரங்கள் எப்போதும் உலகை அழகுபடுத்துகின்றன. அதற்குத்தான் எவ்வளவு ஈடுபாடு இந்த உலகை அவ்வளவு அழகாய் வைத்துக்கொள்வதில். நாமும்தான் இருக்கிறமே தெண்டமாய் தேமே என்று இவ்வுலகில் என்று மனதுக்குள் மலையில் ஏறிக்கொண்டிருக்கும் உருளியின் சக்கரங்கள் போல நல்ல நல்ல விசயங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

சமதளத்தின் மீதான மலையின் மேலோட்டில் சிறு சிறு சாலைகளின் குறுகிய வளைவுகளில் போய்ச் சேருமிடம் மரணப்பள்ளத்தாக்கு என்று சொன்னார் பாபு. அவ்விடத்திற்குப் பெயர் லேடீஸ் சீட்டென்று சொன்னார். ஏன் அப்படி வைத்தார்கள் முன்பிருந்த ஆங்கிலேயர்கள் என யோசிக்க முடியவில்லை. எப்படியோ வைத்துவிட்டார்கள் என சிந்தித்த போது பால்நிலவன் லேடீஸ் சீட் போல மலையின் எதாவது ஒரு பகுதி அந்த வடிவிலிருக்குமோ என்று சந்தேகித்து கடகடவென்ற சிரிப்புடன் சொன்னார். நானும் கற்பனை செய்து அவருடன் கலந்து சிரித்தேன்.

மரணப்பள்ளத்தாக்கைப் பார்ப்பதற்கென்று காசு வசூலிக்கிறார்கள். பெரிதாக காட்டும் பெரிய பைனாகுழல்களை வைத்திருக்கின்றன சிறிய உயரக் கூண்டில். இரண்டு பெண்கள் நின்று கொண்டு அவற்றைச் சுழற்றி சுழற்றி ஒரு பெரிய நிறுவனத்தின் பொட்டல் ஒன்றைக் காட்டி அங்கு கனிமம் எடுப்பதாகக் கூறினார்கள். வளைவு வளைவு கோடுகளாய்த் தெரிந்தது அவ்விடம். மொத்தத்தில் விமானத்திலிருந்து பார்ப்பதுபோல் பூமி தெரிந்ததென்று சொல்லவேண்டும்.

நிறையப்பேர் குதித்து தற்கொலை செய்திருந்ததாக பாபு கூறினார். தற்கொலை செய்துகொள்ளாமலிருக்க அவ்விடத்தைச் சுற்றி இரும்புக்கூரையால் வேய்ந்திருந்தார்கள். என்னதான் இறுக்கமாய் வேய்ந்திருந்தாலும் இவ்வாழ்வை வெறுத்து சாக முடிவெடுத்தவன் பாதுகாப்பு வளையத்தை உடைத்தாவது குதித்து செத்துப்போவான். சாகாமலிருக்கத்தான் முடிவெடுக்க வேண்டுமென்பது என் விருப்பம். நாம் ஏன் வந்திருக்கிறோமென்று தெரியவில்லை. ஆனால் வந்திருக்கிறோம். வாழ்ந்துவிட்டுத்தான் போவோமே என்று வாழ்வோடு இயந்து மரணத்தை அது வரும்போது ஏற்றுக்கொள்ளலாம். இது மாதிரியான மலைக்குன்றுகளுக்கு வரும்போது இயற்கையின் மீதான தீராத காதல் மேலும் மேலும் அதிகரித்துவிடுகிறது. இவற்றின் எல்லையில்லா அழகில்தான் வாழ்வின் அர்த்தம் புதைந்திருக்கிறது. இதைப் பார்த்தே பார்த்த நினைவுகளிலேயே வாழ்வது அளப்பரியது.
இந்தப் பள்ளத்தாக்குகளில் குரங்கள் சூழ்ந்திருந்தன. அவை கர்ணம் தப்பினால் மரணம் போன்ற இடங்களில் சர்வசாதாரணமாய் அமர்ந்துகொண்டு வருவோரிடம் உணவுகளை சாகவாசமாய் வாங்கிச் சாப்பிட்டபடியிருந்தது. அதற்கு குடும்பப் பிரச்னை காதல் பிரச்னை எதுவும் இருக்காது போலிருக்கும். அதற்கு மரணப்பள்ளத்தாக்குதான் வாழுமிடமாகயிருக்கிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அப்புறம் அங்கிருந்து சேதுவராயன் மலைக்குச் செல்ல முடிவெடுத்து அங்கு போய்விட்டோம். சேலத்தின் வெயில் அங்கு ஒரு துளியளவுகூட இல்லாமலிருந்தது. ஆனால் பனிக்கட்டிகள் காற்றில் கரைந்துவிட்டதுபோல் ஜில்லென்ற காற்று எங்கள் உடலுக்குள் புகுந்து எங்களை குதூகலப்படுத்தியது. அதீத உற்சாக மனநிலைக்குச் சென்றோம். வெண்சுருட்டை குளிருக்கு புகைப்பதுபோல் நானும் பாவும் மாறி மாறிப் புகைத்தோம். அப்புறம் ஒரு சுரங்கப்பாதைக்கு கூட்டிபோனார் பாபு. அதற்குள் கூனல் மனிதனைபோலத்தான் செல்ல முடிகிறது. ஒரு பூசாரி அந்த இருட்டுக் குகைக்குள் இரு சாமி சிலைகளின் முன் நின்றுகொண்டிருக்கிறார். சிலைகளின் பெயர் ஆண் பெருமாளென்றும் பெண் காவேரியென்றும் கூறினார் பூசாரி. பெருமாளுக்கும் காவிரிக்கும் என்ன தொடர்பென்று தெரியவில்லை. முன்பொரு காலத்தில் தலைக்காவிரி பாய்ந்து இந்தக் குகை பிறந்ததாகவும் இன்னமும் தலைக்காவிரி நீர் குகையினடியில் வருவதாகவும் என்ற தகவலையும் சொன்னார். அவர் சொன்னதுபோல் குகையின் தரைகளில் அப்படியொரு சீதளத்தை உணரமுடிந்தது. இன்னமும்கூட அதை நினைத்துவிட்டால் பாதங்கள் ஜில்லிடுகின்றன.

மனைவி ஞாயிற்றுக்கிழமையும் எழுத வேண்டுமா என்கிறாள். எழுத்தாளரென்றால் எழுதத்தான் வேண்டுமென்றேன்.ஞாயிறாயிருதாலென்ன திங்களாயிருந்தாலென்ன நாளை மற்றொருமொரு நாளே என்பது அவளுக்கு எங்கு தெரியப்போகிறது.சீக்கிரம் முடியுங்களென்றாள். மின்விசிறியின் சுழற்சியில் வெப்பக்காற்றை அனுபவிக்க முடியவில்லையென்கிறாள்.

Sunday, May 16, 2010

வரிப்புலிகள் ஸ்ரீபதி பத்மநாபா

வரிப்புலிகள்

ஸ்ரீபதி பத்மநாபா

(தமிழ் மற்றும் மலையாள திரைப்படப்பாடல்களை முன்வைத்து)


திரைப்படங்கள் காட்சி ஊடகங்கள். நல்ல வசனம் உள்ள திரைப்படம், நல்ல பாடல் உள்ள திரைப்படம் என்று சொல்பவர்கள் நல்ல திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்று அர்த்தம். நம் மூதாதையர் வழியாக நம் திரைப் படங்களிலும் பாடல் என்ற ஒன்று நிகழ்ந்துவிட்டது. எதார்த்தமான இந்தியத் திரைப்படங்களில் கூட பாடலும் ஒரு பொருட்டாகத்தான் இருக்கிறது. ஒரு திரைப்படத்துக்கு பாடல் தேவையில்லை அல்லது ஒரு திரைப்படத்துக்கு பாடல் என்பது ஒரு மாந்திரீக யதார்த்தவாதப் பரிமாணத்தைக் கொடுக்கிறது என்கிற சாகித்திய விசாரங்களை எல்லாம் விட்டுவிடுவோம்.

உங்களுக்கும் எனக்கும் தினமும் காலையில் எழுந்தவுடன் ஏதோவொரு பாட்டு அனிச்சையாக மனதில் தோன்றி மதியம் வரை விடாது வாய்க்குள் சுழன்று கொண்டிருக்கும். நேற்று காலை எழுந்ததிலிருந்து ஒரு பாடல் வாய்க்குள் சுழன்று கொண்டிருந்தது:
‘கொஞ்சும் புறாவே, நெஞ்சோடு நெஞ்சம், ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமிதேதோ...’
இந்தப் பாடல் எப்போது எனக்குள் புகுந்தது என்று தெரியவில்லை. மதியம் வரை அதை நாக்கிலிருந்து பிடுங்கி வெளியேற்ற முயன்றும் முடியவில்லை. மதியத்துக்குப் பிறகு தானாகவே வெளியேறி விட்டது.

இப்படியாக திரைப்படப்பாடல் என்பது நம் அன்றாட வாழ்வின் அனிச்சைச் செயலாகி விட்ட நிலையில், இந்த எழுத்துரையும் திரைப்படப் பாடல்கள் பற்றியதாகவே இருக்கட்டுமே. திரைப்படப் பாடல்களின் இசை குறித்து நிறைய எழுதப்பட்டுவிட்ட நிலையில் வரிகள் குறித்ததான என்னுடைய பார்வை இந்த எழுத்து என்பதை தலைப்பைப் பார்த்தவுடனேயே புரிந்துகொண்டிருப்பீர்கள்.
(இந்தத் தலைப்பைப் படித்துவிட்டு நண்பரொருவர் சொன்னார்: நம் பாடலாசிரியர்களுக்கு இதை ஒரு பட்டமாகவே வழங்கலாமே; வரிப்புலி வைரமுத்து, வரிப்புலி வாலி.... அடடா! கேட்கவே எவ்வளவு லயமாக இருக்கிறது!)

ஊர் மக்கள் உறங்கி விட்டார்கள், ஊதைக் காற்று அடித்து விட்டது என்று பல்வேறு காரணங்களை அடுக்கி, ஆகவே, மாமா, உடனே, வா, உடலுறவு கொள்ளலாம் என்னும் சுயமைதுனப் பாடல்களையும் விட்டுவிடுவோம். திரைப்படப் பாடல்கள் எவ்வளவு ஆபாசமாய் இருக்கின்றன, ஆங்கிலக் கலப்பு எவ்வளவு சதமானம் இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தோழர் பாமரன் நிறைய எழுதிச் சலித்து விட்டார்.

துரதிஷ்டவசமாக அல்லது அதற்கு எதிர்மறையாக, இரண்டு மொழிகள், இரண்டு கலாச்சாரங்களில் வளர்ந்தவன் நான். (மலையாளக் கரையோரம் என்னை ‘பாண்டி’ என்று அழைக்கிறார்கள்; தமிழ் கூறும் நல்லுலகத்தில் என்னை ‘கஞ்சி’ என்று அழைக்கிறார்கள்.) கள்ளப் பாளையத்தின் கருவேலங் காடுகளிலும் கண்ணூரின் முந்திரித் தோப்புகளிலும் மாறி மாறி வளர்ந்ததால் நினைவுகளில் இருமொழிப் பாடல்கள் உள்ள மிருகமானேன் நான்.
பிஞ்சுப்பருவத்தில் பாடல்கள் என்பவை E=MC2 என்பதுபோல் தாளலயத்தில் மனதில் பதிந்துபோன அர்த்தம் தெரியா சூத்திரங்கள் மட்டுமே. ஆனால், பதின்பருவங்களிலேயே பாடல் வரிகளின் அர்த்தத்தைத் புரிந்துகொள்ளும் அளவு பேரிளம்பையன் ஆனபோதுதான் வரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டேன்.

நான் அர்த்தம் புரிந்து ரசித்த முதல் பாடல் என்று இதைச் சொல்லலாம்: தமிழ்நாட்டில் அவளுடைய Braவுகள் என்று பரவலாக அறியப்பட்ட அவளுடெ ராவுகள் படத்தில் ஒரு பாடல். ஒரு பாலியல் தொழிலாளியின் இரவுகளைப் பற்றிய பாடல். அதுவரை வெறுமனே நாக்குக்குள் சுழன்று கொண்டிருந்த அந்தப் பாடல் அர்த்தம் புரிந்த பிறகு மூளைக்குள் ஒரு துளையைப் போட்டு விட்டது.

‘நிலவின் கிரணங்கள் ஒளி வீசுவதில்லை
இரவின் விண்மீன்கள் கண் சிமிட்டுவதில்லை
மதன உற்சவங்களுக்கு வண்ண மாலைகள் இட்டு இட்டு
மனமும் மார்பும் பாலைவனமானது
நித்திரையின் ஊனங்களன்றோ
என்றும் அவளது இரவுகள்...’

அன்றிலிருந்து வரிகளைப் பிடித்துக்கொண்டேன்.

மருதகாசி, கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துக்குமார், தாமரை.... வயலார் ராமவர்மா, பிச்சு திருமலா, ஓ.என்.வி, ஸ்ரீகுமாரன் தம்பி, கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரி, ரமேசன் நாயர், கிரீஷ் புத்தஞ்சேரி, வயலார் சரத்சந்திர வர்மா.... என்று இவர்களின் வரி விழுதுகளில் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடிப் பயணமாகும் வனங்கள் ரம்மியமானவை.

மேற்கண்ட பாடலை எழுதியவர் பிச்சு திருமலா.

மலையாளத்தின் கண்ணதாசன் என்று கருதப்படும் வயலார் ராமவர்மா என் பதின்பருவங்களில் அதிர்ச்சிகளைத் தந்தவர்.

காதலி வேறொருவனுடன் திருமணமாகிச் செல்கிறாள். அவளுக்காகக் காதலன் பாடும் பாடல்:
‘சுமங்கலீ... நீ நினைத்துக் கொள்வாயா/ கனவிலாவது இந்த கானத்தை...’ என்று தொடஙகும் அந்தப் பாடலின் அனுபல்லவி இப்படிப் போகிறது:

‘பிரிந்து போகும் உன்னால் இனி இந்தக் கதையை மறக்கத்தானே முடியும்
நிறைந்த மார்பின் முதல் நகக் குறியை மறைக்கத்தானே முடியும்
கூந்தலால் மறைக்கத்தானே முடியும்!’

இதற்கு இணையான தமிழ்ப் பாடலும் ஒன்று உள்ளது. இதே சூழ்நிலைக்கு வைரமுத்து எழுதிய அந்தப் பாடலும் கவனிக்கத்தக்கது. திருடா திருடா படத்தில் வரும் ‘ராசாத்தி என் உசிரு என்னுதில்ல...’ கிராமத்துக் காதலின் ஒரு மீஅண்மைக் காட்சியை (Extreme Close/up) வரிகளிலேயே காணலாம்.

‘அந்தக் கழுத்துத் தேமலையும் காதோர மச்சத்தையும் பார்ப்பதெப்போ...’

வைரமுத்துவைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் என் மனதில் உடனே நினைவுக்கு வருபவர் எனக்கு பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் எடுத்த திரு. அரங்கநாதன்தான். இலக்கணம் கசந்து விடக்கூடாது என்பதற்காக அப்போதைய திரைப்படப் பாடல்களின் பாட்டுப் புத்தகங்களை வாங்கிப் படித்து, பாடல்கள் மூலமாக அணிகளையும் வினைகளையும் விளக்குவார் அவர். கூடவே அந்தப் பாடல்களையும் திறனாய்வு செய்து சொல்லுவார். மிக உற்சாகமான வகுப்பறை அவருடையது. பிறிது மொழிதலணியை எங்களுக்குப் புரியவைக்க அவர் வகுப்பெடுத்த விதம் வருமாறு:

டேய் திருப்பதி அந்த இந்தப் படத்தில ஒரு பாட்டு வந்திருக்கில்ல, அதப் பாடு.

எந்தப் படத்திலீங்க ஐயா?

அதாண்டா நம்ம மைக் மோகர் நடிச்சிருக்காருல்ல? ஈரமான...?

இளமைக் காலங்களாய்யா?

அந்தக் கெரகம்தான். பாடு.

நான் தொண்டையை சரி செய்துகொண்டேன்.

பெரிய ஏசுதாசுன்னு நெனப்பாடா? பாட்டு வகுப்பா எடுத்துட்டிருக்கேன்? அட சும்மா பாடுறா...

‘ஈரமான ரோஜாவே... என்னைப் பார்த்து மூடாதே...’ என்று பாட ஆரம்பித்தேன். ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து, என்னோடு நீ பாடி வா சிந்து...’ என்ற வரிகள் முடிந்தபோது நிறுத்தச் சொன்னார்.

அதென்னடாது தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து, என்னோடு நீ பாடி வா சிந்து.. ரெண்டு வரிக்கும் என்னடா சம்மந்தம்?

தெரீலீங்கய்யா...

ழெழீழீழ்ழழ்ழா... அப்பறம் என்னத்தடா பாட்டைக் கேக்கறீங்க! அதாவது...
காத்துள்ள பந்து தண்ணிக்குள்ள மூழ்காது, அது மாதிரி அறிவுள்ள கதாநாயகியா இருந்தா கண்ணீர்ல மூழ்கி வருத்தப்படக் கூடாது. அதனால பிரச்னையெல்லாம் மறந்துட்டு எங்கூட வந்து டூயட் பாடுங்கறாரு மைக் மோகரு. புரிஞ்சுதா? இப்புடி உண்மையச் சொல்லாம உவமையை மட்டும் சொல்லிப் புரிய வக்கிறதுதான் பிறிதுமொழிதலணி, புரிஞ்சுதா?

இன்று வரை எனக்கு பிறிது மொழிதலணி மறக்கவில்லை.

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவைப் பற்றி மணிக்கணக்கில் விவரிப்பார் அரங்கநாதர். உண்மையான காதல் என்றால் என்னவென்று இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம் என்பார்: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்; இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்.

அன்று முதல் இன்று வரை பாடல்வரிகளில் வைரமுத்துவின் கவிதை ரசனை ரசம் மிகுந்ததாகவே இருக்கிறது. சமீபத்தில் அவர் எழுதியதில் இந்த வரிகள் எனக்குப் பிடித்தவை :
லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க ஒத்தைச் சொல்லு சிக்கவில்லை எதனாலே?
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிட்டு பட்டினியாக் கெடப்பாளே அதுபோல... (நெஞ்சாங்கூட்டில்)

அன்றெல்லாம் அரங்கநாதருக்கு ஒரு ஐம்பது வயது இருக்கும். கண்ணதாசனை ரசிக்கிற அதே மனதால் வாலியையும் வைரமுத்துவையும் ரசிக்கிறவராய் இருந்தார் அவர். கண்ணதாசனு டையவை என்று நான் நினைத்துக்கொண்டிருந்த பல வரிகளை அவை வாலியின் வரிகள் என்று பதைபதைத்துப்போய் திருத்துவார். மாதவிப் பொன்மயிலாள் கண்ணதாசன எழுதியது என்றுதான் நினைத்திருந்தேன். அட மகா பாதகத் திருப்பதீ... அது வாலியோடதுடா... என்று கொந்தளித்துப்போவார். அங்கீகாரம் இடம்பெயர்வதில் அவருக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை.

அவரிடம் ‘ஒரு பெரிய இவனாட்டம்’ கண்ணதாசன் தவறு செய்து விட்டார் என்று சுட்டிக் காட்டப் போய் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

ஐயா கண்ணதாசன் ஒரு பாட்டுல தப்பா எழுதியிருக்காருங்கய்யா.

டேய்.டேய்... அடங்குடா... கண்ணதாசனைக் குத்தம் சொல்ற அளவு வந்துட்டியா... பெரிய இவனா நீ.

நீங்க கத்துக் குடுத்த இலக்கணந்தாங்கய்யா....

பார்றா... சரி சொல்லு.

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன?

காதல்.

நீங்க எனக்கு கைக் கிளைன்னுதானே சொல்லிக் கொடுத்தீங்க.

அரங்கநாதர் முறைத்தார்.

ஒருத்தி மடடும் ஒருவனை நினைத்தால்தான் கைக்கிளை. அவனும் அவளை நினைக்கிறான்கறது அடுத்த வரியிலேயே சூசகமா தெரியுதுல்ல. அதப் பாக்கலியா அறிவுக் கொழுந்து... அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்....

நான் வெளிறிய முகத்துடன் வெளியேறினேன்.

தற்கால மலையாளப் பாடலாசிரியர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரி. முக்கியமான இசைக் கலைஞரும் கூட. ‘குஞ்ஞிக் கிடாவின்னு நல்கான் அம்ம நெஞ்சில் பாலாழி ஏந்தி’ எழுதியவரும் அவர்தான்; ‘லஜ்ஜாவதியே நின்டே கள்ளக் கடக் கண்ணில்’ எழுதியவரும் அவர்தான்.

என்னுடைய ‘வண்ணங்கள்’ எனும் இசை ஆல்பத்தில் அவருடைய அனுமதியுடன் நான் சேர்த்துக் கொண்ட வரி இது:

பசிக்கின்ற போது அமுதினை ஊட்ட பாற்கடல் நெஞ்சில் ஏந்திய தாயே...

அவருடன் உரையாடிக் கொண்டிருப்பது என்பது ஒரு அற்புதமான அனுபவம். ஒரே மனிதருக்குள்ளிருந்து சங்கீதமும் சாகித்தியமும் ஒரு சேர பிரவாகமாய் கிளம்புவது அனுபவித்து ரசிக்க வேண்டிய விஷயம். அவருக்கோ தமிழ் பாடலாசிரியர்களைப் பார்த்து ஆச்சர்யம். கண்ணதாசன் முதல் முத்துக்குமார் வரை அலசுவார்.

அவர் மலையாளத்தில் எழுதிய ‘லஜ்ஜாவதியே நின்டே கள்ளக் கடக் கண்ணில்’ என்ற பாடலை தமிழில் முத்துக்குமார் எழுதினார். கைதப்புறத்துக்கு தமிழ்ப் பாடலை விளக்கினேன். ‘லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே’ என்பதற்கு பதிலாக ‘லஜ்ஜாவதியே உன் கள்ளுக்கடைக் கண்கள்’ என்று ஆரம்பித்திருக்கலாமே என்றார். ஆனாலும் மற்ற வரிகளையெல்லாம் மிகவும் ரசித்தார். குறிப்பாக ‘கட்ட வண்டி மையினால் கட்டபொம்மன் மீசையை கண்ணே நீ வரைந்து விட்டு ராஜராஜன் என்றதும்’ மிக அருமை என்றார்.

அவரே இசையமைத்து எழுதி ஜேசுதாஸ் பாடிய மறக்க முடியாத பாடல் ‘தேசாடனம்’ என்ற திரைப்படத்தில் இருக்கிறது. பெற்றோர்களுடன், தாத்தாவுடன், தோழர்களுடன் விளையாடித் திரிந்த மகனை மடத்திலிருந்து வந்து அடுத்த ‘பெரியவாளாக’ ஆக்குவதற்கு தேர்வு செய்கிறார்கள். பெரும் மனப் போராட்டங்களுக்கிடையே அவனை மடத்தில் விட்டு விட்டு திரும்பும் தகப்பனின் உணர்வுகளாக ஒலிக்கும் ‘களி வீடுறங்கியல்லோ...’ என்ற அந்தப் பாடலின் அதே சந்தத்தில் வரிகளின் என்னுடைய தமிழ் வடிவம் இது:

விளையாட்டு வீடுறங்க
விளையாட்டுப் பேச்சுறங்க
ஒரு பார்வை பார்ப்பதற்கே என்னுள்ளம் தானும் ஏங்க
அலைகின்ற அலையே, கடலே
சிரிக்கின்ற பூக்களே
அறிவீர்களா என் நெஞ்சின்
அடங்காத ஜென்ம துக்கம்?

தாலாட்டு பாடினால்தான் கண் மூடுவான்
நான் பொன் முத்தம் சிந்தினால்தான் கண் மலர்வான்
கதை சொல்லிக் கேட்டால்தான் அமுதுண்ணுவான்
என் கைவிரல் நுனியைப் பிடித்தே நடைபோடுவான்... அவன்
நடை போடுவான்...

கண்களில் நீர் மல்க அவர் பாடுவதைக் கேட்பது பரமசுகம், அவரோ... தமிழ் பாடலாசிரியர்கள் போல அவ்வளவு எளிமையா எங்களுக்கு எழுத வராது.
நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்... வைரமுத்து எவ்வளவு எளிமையா அழகா எழுதறார். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிற கீதை வாசகத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு அழகாக, காலங்களில் அவள் வசந்தம்னு காலத்தால் அழியாத ஒரு காதல் பாடலை எழுதுனார் உங்க கண்ணதாசன், என்றெல்லாம் சிலாகித்துப் பேசுவார்.

நானும் அதை யோசிப்பதுண்டு - மலையாளப் பாடல் வரிகளின் பாண்டித்தியத்தைப் பற்றி. சமஸ்கிருத அகராதி இருந்தால்தான் பல வார்த்தைகளின் அர்த்தம் புரியும். பாடலகள் பெரும்பாலும் பண்டிதர்களுக்கே என்ற நிலைமை இன்னும் அங்கே இருக்கிறது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான, அவர்களுடைய எளிமையான மொழியைப் பாடுகிற பாடல்கள் இல்லை என்றே சொல்லலாம்.

மலையாளக் கரையோர மீனவன்கூட, கடலின் அக்கரைக்குச் செல்பவர்களே, பதினாலாம் இரவின் பாற்கடல் அலையின் கடல்கன்னிகள் உதிர்க்கும் மாணிக்கத்தைக் கொண்டு வருவீர்களா என்று ஒரு ஃபேன்டஸி கனவைத்தான் பாடுகிறான். தமிழ் மீனவனோ, வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திமிங்கிலம் தலைமையில் நடக்கும் எளிமையான காதல் திருமணத்தை தன் எளிமையான மொழியில் பாடுகிறான். தமிழின் மிக முக்கியமான அம்சம் சாதாரண மக்களின் பாடல்கள்தான். அதிலும் கானாப் பாடல்கள் தரும் மனவெழுச்சி வார்த்தைகளில் அடக்க முடியாதது. கானாப் பாட்டெல்லாம் ஒரு பாட்டா என்று முகம் சுளிக்கும் பண்டிதர்களுக்கு நேராக நாமும் முகத்தைச் சுளிக்கத்தான் வேண்டியிருக்கிறது. காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் என்று பாரதி எழுதினால்தான் இலக்கியமா? டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா என்பது சாதாரண மனிதனின் இலக்கியம். அதுதான் உண்மையான இலக்கியமும்கூட.

வாலியின் வாலிபம் இப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம். மாதவிப் பொன்மயிலாளுக்கு முன்னமே தொடங்கி அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வைத்த குப்பையாக வந்த உடம்பில் தொடர்ந்து நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் வரைக்கும் அவருடைய இளமை இனிமையானது. இந்த வயதிலும் அவர் எழுதிய நியூயார்க் நகரம் சமீபத்தில் வந்தவற்றில் மிக அழகான பல்லவி:

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்ததே
பனியும் படர்ந்ததே
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் அலைந்ததே
நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்!
தனிமை தனிமை ஓ!
கொடுமை கொடுமை ஓ!

தமிழ்ப் பாடல் வரிகளின் பரிமாணத்தை மாற்றியவர் என்று முத்துக்குமாரைச் சொல்லலாம். நவீன கவிதைக்கு நெருக்கமானதாகவும் ஜென் கவிதைகளின் பாதிப்புடனும் ஹைக்கூபாணியிலும் பல பரீட்சார்த்த முயற்சிகளை பாடல் வரிகளில் அவர் செய்திருக்கிறார். மிக சாதாரணமான, இளைஞர்களின் கேலிப் பாடலான ‘தேரடி வீதியில்’ பாடலை எடுத்துக் கொண்டால் கூட, மூன்று மூன்று வரிகளின் தொகுப்பாக ஹைக்கூவைப் போல் எழுதியிருப்பார். ‘தெரிஞ்சுக்கோ’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டுப் பாருங்கள்...

தேரடிவீதியில்
தேவதை வந்தா
திருவிழா,

அய்யனாரைத்தான்
ஆடு கும்பிட்டா
சைவம் ஆயிட்டாரு

அய்யரு பொண்ணு
மீன் வாங்க வந்தா
லவ் மேரேஜ்

கோயிலுக்குள்ள
காதலைச் சொல்லு
செருப்பிருக்காது...

கண்ணதாசனின் ‘நந்தா நீ என் நிலா நிலா...’ பாடலுக்குப் பிறகு தமிழின் மிக நீண்ட பல்லவியை எழுதியவர் முத்துக்குமார்தான் என்று நினைக்கிறேன். மிக நீண்ட அழகான பல்லவி அது:

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கை மூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதனால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை.

நான் எழுதிய ‘வண்ணங்கள்’ இசைத்தொகுப்பில் சில வரிகள்:

மழை நின்றபின்னே மரம் மேகமாகும்
நீ சென்ற பின்னே உன் நினைவே மரமாகும்...

இதே போல ‘காதல்’ படத்தில் முத்துக்குமாரின் வரிகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ‘தொட்டுத் தொட்டு என்னை வெற்றுக் களிமண்ணை சிற்பமாக யார் செய்ததோ’ பாடலில் வரும் வரிகள்:

முதல் முறை உன்னைப்
பார்த்தது எங்கே
மனதும் தேடும்
மழை நின்ற பின்னும்
மரக்கிளை உள்ளே
மெதுவாய்த் தூறும்...

மனிதர் ஆயிரக்கணக்கில் காதல் வரிகளை எழுதித் தள்ளினாலும் ஒவ்வொரு வரியும் தனித்தன்மையோடு இருப்பதுதான் அவருடைய தனித்தன்மை.

வரிகளின் மீதான பித்து ஒரு காலத்தில் முற்றிப் போயிருந்தது எனக்கு. எந்த எழுத்தைச் சொன்னாலும் ஒரு பாடல் சொல்வது, எந்த வார்த்தையைச் சொன்னாலும் ஒரு பாடல் சொல்வது என்று ஆரம்பித்து நண்பர்களுடன் போட்டி போட்டிருந்த கல்லூரிக் காலத்தில் ஒரு கட்டத்தில் இப்படி ஒரு பாட்டு உருவாகிவிட்டிருந்தது. முடிந்தால் நீங்களும் பாடிப் பார்க்கலாம்:

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா சொல்லித் தந்த வானம் அருகில் ஒரு வானம் தரையில் வந்த மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டுப் பாட வா பார்த்துப் பேச வா பாடம் சொல்லவா பறந்து செல்ல வா பால் நிலவு காய்ந்ததே பார் முழுதும் ஓய்ந்ததே ஏன் ஏன் ஏன் ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன் ஒரு கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகின்றேன் எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் உன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா மேகமே மேகமே பால்நிலா தேயுதே ....

இப்படி ஒரு மணி நேரத்துக்கு மேல் போய்க் கொண்டிருக்கும் இந்தப் பாடல்.

மீண்டும் மலையாளத்துக்கு வருவோம்.ஆழமும் செறிவும் மிகுந்த பன்னூறு வரிகள் இன்னும் மனதுக்குள் சிற்றலையாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் எழுத இடமில்லை. சில வரிகள் மட்டும்:

வாழ்வமுதத்தின் மையம் மதுரமானது (கைதப்புறம்)

பலா இலைப் பாத்திரங்களில் பொம்மைக்குப் பால் கொடுக்கும் குழந்தையாய் மீண்டும் என் அருகில் வந்துநில் (ஓ.என்.வி.)

மீண்டும் மீண்டும் யாரோ கனாவின் படி ஏறி வருகின்ற காலோசைகள்/ மீண்டும் மீண்டும் யாரோ நிலாவில் புல்லாங்குழல் ஊதும் தேனோசைகள் (கிரீஷ் புத்தஞ்சேரி)

ஒரு நிமிடம் தா உனக்குள் கரைய
ஒரு யுகம் தா உன்னை அறிய (சத்யன் அந்திக்காடு)

கண்ணாடி முதன்முதலாய் என்
வெளித் தோற்றத்தைக் கவர்ந்து கொண்டது
பாடகனே... உன் குரல் என்
உள்மனதைக் கவர்ந்து கொண்டது. (கைதப்புறம்)

விரலில் இருந்து வழுக்கி விழுந்தது
விரகம் நிறைந்த ஓர் ஆதி தாளம் (பிச்சு திருமலா)

இவ்வளவு செழுமையும் செறிவும் நிறைந்த மலையாளப் பாடல்களுக்கு ஏன் ஒரு முறை கூட தேசிய விருது கிடைக்கவில்லை என்பது புதிர்தான். பல்லவியின் முதல் வரியிலேயே ஒருமை பன்மையில் கூட இலக்கணப் பிழைகளோடு எழுதி தேசிய விருது ‘வாங்கும்’ அளவுக்கு பா...வம் மலையாள வரிப்புலிகளுக்கு வித்தகம் இல்லை போலும்!


--

Saturday, May 15, 2010

அய்யப்ப மாதவன் : சொற்கப்பல்- தக்கை தமிழ் நீண்ட கதைகள் விமர்சனம் பதிவு 3

நிரம்பிச் சூழ்ந்திருந்த வெயிலின் ஊடாய் வளைந்து நெளிந்து முபாரக் தன் கை வித்தைகளால் ஒரு பழையவீட்டின் முன்பு நிறுத்தினார். உள்ளே கூட்டிபோனார். அமரச்சொன்னார். அந்த வீட்டினுள் தங்கப்போகிறோமென ஆவல் மிகுதியிலிருந்தேன். வீட்டைச் சுற்றிலும் நோட்டமிட்டேன். மேற்கூரை மூங்கில்களால் அடைக்கப்பட்டிருந்தது. அதனால்தான் என்னவோ வெயிலில் காய்ந்த வீடும் குளிர்ந்திருந்தது. மூங்கில்கள் அரக்குநிறத்தில் தெரிந்ததினால் கண்கள் பரவசத்தில் ஆழ்ந்தன. அந்த நிறம் என்னவோ என்னை அவ்வளவு வசீகரித்தது. நண்பனுக்கு எப்படியோ தெரியவில்லை. அவனும் அறிமுகமில்லாத புதிய வீட்டினுள் மனம் ஒவ்வாத நிலையில் உட்கார்ந்திருந்தான். புதிய வீடு புதிய நட்பு புதிய தொடர்பென்றாலே இவ்வாறான் ஒவ்வாமை வருவது சகஜம்தான்.

எனை நோக்கி ஒரு மனிதர் ஐந்து அடிக்கு சற்று கூடுதலான சற்றே குண்டான உருவில் வந்தார். அவர் வரும்பொழுதே கணித்துவிட்டேன் அவர்தான் தக்கைபாபுவாக இருக்கவேண்டுமென. தன்னை பாபுவென அறிமுகம் செய்துகொண்டார். நான் அய்யப்பமாதவன் என்றேன். அவனை பால்நிலவன் என அறிமுகம் செய்தேன். நீங்கள் எந்தப் பால்நிலவன் என்று ஆழ்ந்த வியப்பில் கேட்டார். அவனும் எழுத்தாளர் பால்நிலவன் எனச் சொன்னார். உங்கள் பெயரில் ஒருவர் எழுத்தாளர் எனச் சொல்லி ஒரு பெண்ணிடம் பழகியதாகவும் அதனால் அந்தப் பெண்ணிற்கு இடைஞ்சல்கள் ஏற்பட்டதாகவும் கூறினார். அந்தப் பெண் பாவுவைத் தொடர்புகொண்டு பால்நிலவனின் கைபேசி எண்ணைக் கேட்டபோது பாபுவும் என்னுடன் வந்திருக்கும் நண்பன் பால்நிலவனின் எண்ணைக் கொடுத்திருக்கிறார் விவரம் அறிந்திராமல்.

அந்தப் பெண்ணும் உண்மையான பால்நிலவனும் பேசி முடித்ததும் அந்தப் பெண் இந்தப் பால்நிலவன் வேறு என்றும் பால்நிலவன் என்ற எழுத்தாளர் பெயரை மட்டும் பயன்படுத்தி அந்தப் பெண்ணை வசியப்படுத்த முயன்றவனின் கீழ்த்தரமான எண்ணங்களையும் புரிந்துகொண்டாள். ஒருவரின் பெயரை அந்தப் பெயரின் புகழை இன்னொருவர் பயன்படுத்தி பலனைடையும் கொச்சையான செயல்களை என்னவென்று சொல்வது. அவனைப் போன்ற கேவலமான மனிதர்களால் நல்ல உள்ளம்கொண்ட பால்நிலவன் போன்ற எழுத்தாளர்கள் பாதிக்கப்படுவது சகித்துக்கொள்ளமுடியாததாகத்தானிருக்கிறது.
இந்தக் கதையாடல் முடிந்து சாப்பிட கூப்பிட்டுபோனார். சிக்கனா மட்டனா என்றார். சிக்கன் என்றோம். பசியாறிவிட்டு மலையேறும் திட்டத்தை பாவுவிடம் சொல்ல பாபுவும் அதற்கான முன் ஏற்பாடுகளை எவ்வித தடங்களுமில்லாமல் சத்தமின்றி செய்தார். சிவா என்கிற தங்கும் விடுதிக்கு அழைத்துப்போய் சற்று ஓய்வெடுங்கள் எனச் சொல்லிவிட்டு அவர் போய் ஒரு நண்பரை ஏற்காடு மலைக்கு அனுப்புவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.

நானும் படுத்தவுடன் தூங்கிப்போனேன். ஏற்காடு மலைபோகும் ஆசையிருந்தும் தூக்கத்தின் முன் அது தவிடுபொடியாகிவிட்டது. நன்றாக தூங்கிக்கொண்டிருந்த சமயம் நண்பன் எழுப்பினான். அவன் மலைக்குப் போவதில் திண்ணமாக இருந்திருக்கிறான். அவன் எழுப்பியிருக்காவிட்டால் நானும் ஏற்காடை தவறவிட்டிருப்பேன்.

பாபு அனுப்பிய இன்னொரு பாபு வந்திருந்தார். கூடவே அவருடைய பையன் வந்திருந்தான். அவனும் மொழுமொழுவென்று துருதுருவென்றிருந்தான். நால்வரும் ஓட்டுநரும் ஊர்தியில் ஏறி பயணமானோம். அடங்காத அபிலாஷையில் எப்போது மலையின் தொடக்கம் ஆரம்பிக்குமென்று பாவுவை கேட்டேன். இன்னும் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் என்றார். போகின்ற வழியில் இளநீர் வேண்டுமென்றேன். அப்புறம் நொங்கு வேண்டுமென்றேன். கேட்டதெல்லாம் வாங்கித் தரும் நல் மனிதராக இருந்தார் பாபு. இப்படியெல்லாம்கூட மனிதர்கள் இருக்கிறார்களென்றால் என்னால் புளகாங்கிதமடையாமல் இருக்கமுடியாது. ஆனால் ஊர்தியிலிருந்து எரிவாய் திடீரென காலியாக ஊர்தியை எரிவாயு நிலையத்திற்கு ஓட்டினார்கள்.

ஊர்தியின் சாளரத்தின் வழியே பற்பல வாகனங்கள் ஓடிச் செல்வதைப் பார்த்தேன். எதிரே இருந்த சிறுவன் அப்பாவின் கைபேசியை வாங்கி அதை நோண்டிக்கொண்டிருந்தான். அந்தச் சிறுவனிடம் நானும் பால்நிலவனும் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்தோம். அந்தச் சிறுவனும் எங்களுக்கு சிறுகச் சிறுக நண்பனாகிக்கொண்டிருந்தான்.


எரிசக்தி நிரப்பபட்டு நீண்ட பெருமூச்சுடன் ஊர்தி மலைகளின் அடிவாரத்தை சீறித் தொட்டது. மலை தொடங்கியதுமே மலை என் கண்களில் வளர ஆரம்பித்தது. வானை நோக்கி சீறிப் பாயும் மரங்களை வியப்பில் தத்தளித்து கண்ணுற்றேன். மலைக்காடுகளைப் பார்த்து பல வருடங்களாயிற்று. மலைகளில் நுழைவதே ஒரு சாகசம்தான் மற்றும் மலைக்குள்ளிருப்பது உலக சுகதுக்கங்களிலிருந்து மறைந்துபோவதாகவும் உணர்வேன். வளைந்து வளைந்து மலையின் ஆகிருதியின் உடலுக்குள் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறோம். மலையின் உள்ளீடான தரிசனத்தில் அமைதியின் சலனமற்ற இதயத்தைக் காண்கிறேன். மலையின் தியானத்தில் பிறந்த அமைதியினிடையே என் மனம் மட்டும் என்னைவிட்டு பறந்திருந்தது. உள்ளிருப்பவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எதை எதையோ. நான் மலைக் கனவிலிருந்து மீள உள் உரையாடலுக்குள் வந்தேன். சேலம் பாபு ஏற்காடின் பெருமைகளை விவரித்துக்கொண்டு வந்தார். ஏழைகளின் ஊட்டி இதுதானென உலகம் சொல்வதைச் சொல்லிவந்தார். எங்களுடைய கோடை வாசஸ்தலமென்றார். வாரமொருமுறை மலை ஏறிவிடுவோமென்றார். இங்குவருவதுதான் அவர்களுடைய தீர்ந்துவிடாத ஆவலென்றார். இப்படியே பேசி பேசி ஏற்காடின் சமதளத்தை அடைந்துவிட்டோம்

Thursday, May 13, 2010

சொற்கப்பல் - தக்கை இணைந்து நடத்திய தமிழ்நாவல்கள் விமர்சனம் ஒரு பதிவு- பகுதி 2


அய்யப்ப மாதவன்

.கிளம்புவதற்கு முன்பே சுட்டெரிக்கும் சூரியனைச் சமாளிக்க நெகிழிக் குவளையில் அடைக்கப்பட்ட ஐம்பூதங்களில் ஒன்றான நீரினை இரண்டு லிட்டர் அளவில் வாங்கிக்கொண்டோம். நான் மூவுருளிக்கு வாடகைப் பணம் கொடுத்துவிட்டதால் நண்பன் தண்ணீருக்கு செலவு செய்தான். ஒருத்தருக்கு ஒருத்தர் நன்றாக உள்ளுக்குள்ளேயே புரிந்திருந்தோம். அதனால்தான் எவ்வித சச்சரவுகளில்லாமல் பயணத்தை நிம்மதியாகத் தொடர முடிந்தது.

இருவரின் இருக்கை எண்களும் தாறுமாறாயிருந்ததால் 104 இருக்கை எண்ணுக்கு சொந்தக் காரரை தாறுமாறாய் மாறியிருந்த இருக்கையில் அமரச் சொல்லி தயவு கூர்ந்து கேட்டுக்கொண்டோம். அவரும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் அவ்விருக்கையில் செவ்வனே உட்கார்ந்து கொண்டு எங்கள் தொடர்வண்டி பேச்சுக்கு வழிவகுத்தார்.

எதிரே ஒரு வயதான கிழவி மற்றும் ஒரு பெண் அவளின் குழந்தை அவள் கணவனென உட்கார்ந்திருந்தனர். அவர்கள் தமிழ்மொழி பேசத் தெரியாதவர்கள் என்பதை அவர்கள் முகங்களிலிருந்தும் உரையாடல்களிலிருந்தும் தெரிந்துகொண்டோம். அந்தக் கிழவியும் அந்தக் குழந்தையும் தூங்கிக்கொண்டிருந்தனர். குழந்தையும் கிழவியும் ஒன்று போலவேயிருந்தார்கள். கிழவிக்கு பல்லுப்போன குழந்தை வாய். குழந்தைக்கு பல்லில்லாத கிழவி வாய். வயதானவர்கள் மீண்டுமொருமுறை குழந்தையாய் மாறுவார்கள் என்பதற்கு இந்தக் காட்சியை எடுத்துக்காட்டாய் இயம்பலாம். நண்பன் குழந்தையை ஒரு பிரபஞ்சமென்று இயம்பினான். நானும் ஆழ்ந்து சிந்திக்காமல் ஆமோதித்தேன். குழந்தையைப் பற்றிய நானெழுதிய கவிதையொன்றை சொல்லிக் காண்பித்தேன். அவரும் அருமையாய் ரசித்து மகிழ்ந்தார்.

அந்தக் கவிதை

**
யாருடைய கைகளிலோ
ஒரு குழந்தை துளிர்க்கிறது
அதன் துள்ளலில் ஒரு மொட்டின் இதழ்கள்
எந்த மாயமுமில்லாது எளிமையில்
இயல்பில் விரிந்து மலர்கினறன.

**
அவன் கையில் தொகுப்பாய் வரக்கூடிய கவிதைகளைப் படிக்கக் கொடுத்தேன். அவனும் ஆர்வம் கொப்பளிக்க வாங்கிக்கொண்டு படிக்கத் தொடங்கினான். அவன் பதிலுக்கு படிக்க அவனுடை நேர்காணலைப் படிக்கத் தந்தான். அதில் அவனின் புகைப்படம் போட்டு வந்திருந்ததைப் பார்த்து உள்ளுக்குள் சிறிதாய் பரவசமடைந்தேன். நான் படிக்க அவனும் படித்தான். இடையிடையே கவிதையைப் பற்றி உணர்ச்சிகள் மோலோங்கப் பேசினான். நானும் அவன் அந்தப் புத்தகத்தில் கொடுத்திருந்த பதில்களில் அவன் சொல்லியிருந்த குட்டிக்கதைகள் பற்றி அவாவினேன். அவனும் சிறு புன்முறுவலுடன் மகிழ்ச்சி நீரோடையில் நனைந்துகொண்டான். மகிழ்ச்சி வெள்ளமென்றாலும் சொல்லமுடியாது. அது அடக்கமான சிரிப்பாக மகிழ்வாகயிருந்தது. அதான் நீரோடையென்று எழுதினேன்.

சேலம் போய்ச் சேரும் நேரம் பற்றி அறிய இருவரும் அதிக ஆவலில் நிரம்பி வழிந்தோம். அருகிலிருந்தவனைக் கேட்டபோது அவனுக்கு சரிவரச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இதைக் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு பயணி பதினொரு மணியெனச் சொன்னார். ஆக இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் சேலத்தில் காலெடுத்து வைத்துவிடலாம். இதற்கிடையில் இறங்கியதும் எங்கு தங்குவது யாரைக் கேட்பது என்ற குழப்பமிருந்தது. நல்லவேளை இந்நிகழ்வை ஏற்பாடு செய்யும் தக்கை பாபுவின் கைபேசி எண் என்னிடமிருந்தது. கிளம்பும் முன் அவருக்கும் வருவதாகக் கைபேசியில் பேசியிருந்தேன். அவரும் காலை எட்டு மணிக்கு எங்களை அழைப்பதாயும் அப்போது தங்கும் விவரங்கள் கூறுவதாகவும் கூறினார். ஆனால் பாபு எட்டு மணிக்கு அழைக்கத் தவறிவிட்டார் அல்லது மறந்துவிட்டார். அவருக்கும் இதுவொன்றதானா வேலை. அவரை உண்மையில் போற்றிப் புகழவேண்டும். பின்னால் வரும் வரிகளில் அவருக்கான புகழாரங்களை அடுக்கவிருக்கிறேன். பிறகு நானே அவரை அழைத்து தொடர்வண்டியில் இருப்பதாகவும் மொரப்பூர் வந்துவிட்டதாகவும் சொன்னேன். அவரும் நல்லது. இறங்கியதும் பேசுங்கள் என்றார்.

நானும் நண்பனும் கவிதைகளையும் அவருடைய நேர்காணலையும் பேசி பேசிச் சேலத்தை நெருங்கிவிட்டோம். நண்பன் பாதிவரை கவிதைகள் படித்து மண்டை காய்ந்துவிட்டான். சூரியன் ஒரு பக்கம் தொடர்வண்டியின் வழியாய் அவனின் தலையைக் காய்ச்சியதுபோக பற்றாக்குறைக்கு நானும் என் கவிதைகளைக் கொடுத்து காய்ச்சிக்கொண்டிருந்தேன். ஒரு வேக்காடையே தாங்க முடியவில்லை. இரண்டு வேக்காடென்றால் என்னாவானென யோசித்துப்பாருங்கள். முற்றிலும் அவன் மூளையும் முகமும் சோர்ந்து தொங்கிப் போயிருந்த்ததைக் கண்ணுற்றேன். மீதியைச் சேலம் சென்று படிக்காலாமென்று மரியாதையாகக் கவிதைகளைத் திருப்பித் தந்துவிட்டான். நானும் அவனின் கடும்வெட்கையைப் புரிந்துகொண்டு வாங்கி வைத்துக்கொண்டேன்.

சேலம் சந்திப்பை அடைவதற்கான அறிகுறிகள் தென்பட நானும் நண்பனும் இறங்கிச் செல்லத் தயாரானோம். தொடர்வண்டியின் வேகம் மிதமாக மிதமாக சேலத்தின் வாயில்கள் மெல்லத் திறந்தன. ஒரு விசயம் சொல்லத் தவறவிட்டேன். நான் நீள்சதுர பெட்டியினுள்ளிருந்தபோது அதன் கழிவறைக்கு இருமுறை சென்றேன் ஒன்றுக்கிருக்க. ஆனால் நண்பன் அந்தப் பிரக்ஞையே இல்லாதிருந்தான். இவ்வளவுக்கும் இருவரும் மாறி மாறி நெகிழிக் குவளையைக் காலி செய்திருந்தோம். இப்படித்தான் ஒரு சிலபேர் ஒரு நாளக்கு ஒருமுறைதான் உடலின் உப்பு நீரை வெளியேற்றுகிறார்கள். அதற்கும் ஒரு பொறுமை வேண்டும்போலும்.

சேலம் எனக்குப் பழக்கப்பட்ட ஊர்தானென நண்பனிடம் சொல்லிவந்தேன். இதற்குமுன்பு ஜவுளித்துறை சம்பந்தமான தொழில் செய்ததாகச் சொன்னேன். ஆனால் தொடர்வண்டியில் சேலத்திற்கு மிகக் குறைந்த அளவே வந்ததாகக் கூறினேன். ஆனால் இறங்கியதும் ரயில்நிலையத்தில் பழைய பதிவுகளை மனம் சரிபார்க்கத் தொடங்கியது. அவ்விடங்களெல்லாம் மூளையில் பழைய நினைவுகளிலிருந்து மீண்டன. ஒரு கணத்தில் முழுக்க ஞாபகம் வந்துவிட்டது. என்றோ பார்த்த அதே சேலம்தான் என்று நினைத்தவாறு பாவுவை கைபேசியில் அழைத்தேன். பாபுவும் பக்காவாக நான்கு சக்கர உருளியை ஏற்பாடு செய்திருந்தார். வந்திருந்த ஓட்டுநர் முபாரக் எங்களைக் கண்டுபிடித்து அள்ளிப்போட்டுக்கொண்டு போனார். சேலத்தின் சாலைகள் வெயிலில் வெள்ளை வைரங்களென ஒளிர்ந்தன. ஊர்தியின் சாளரங்களைத் திறந்துவைத்துக்கொண்டு அனல்காற்றை அனுபவித்தபடி போய்க்கொண்டிருந்தோம்.

நிகழ்வுக்கு முதல்நாளே வந்துவிட்டதால் நானும் நண்பனு ஒரு குளிர்ச்சியான திட்டமொன்று வைத்திருந்தோம். அந்தத் திட்டத்தை பாவுவிடம் போனதும் சொல்லிவிட எத்தனித்திருந்தோம். அடுத்தவற்றை நாளை பார்ப்போம் என்று தோன்றிவிட்டது நண்பர்களே... முகமெல்லாம் பிசுபிசுக்க கைகளால் துடைத்தவண்ணமெழுதிக்கொண்டிருக்கிறேன்.

அய்யப்ப மாதவன்: சொற்கப்பல் - தக்கை இணைந்து நடத்திய தமிழ்நாவல்கள் விமர்சனம் ஒரு பதிவு


சொற்கப்பல் – தக்கை இணைந்து நடத்திய தமிழ்நாவல்கள் விமர்சனக் கூட்டதிற்கு சென்றுவந்தேன். சேலத்தில் நடந்தேறிய ஒரு நாள் நிகழ்வில் பல்வேறு அனுபவங்கள் நாவல் விமர்சனம் படிக்கப்பட்டதின் வழியாகவும் கலந்துகொண்டவர்களின் வழியாகவும் அடையப் பெற்றேன்.

அதிகாலையில் கண்விழித்தேன். விடியலுக்கு சற்று முன்பாக விழித்தலென்பது இதுமாதிரியான பயணங்கள் நிகழும்போதுதான் நடந்தேறுகிறது. அதுவும் அதிகாலை ரயிலுக்கு முன்பதிவு செய்வதின் வழியாகத்தான் இது சாசுவதமாகிறது.

என்கூட அந்நேரத்தில் என் மனைவியும் அவள் திட்டமிட்டபடி விழித்துக்கொண்டாள். அவள் மாங்காடு மாரியம்மனைத் தரிசிப்பதாகத் திட்டம் போட்டிருந்தாள். நான் பல் துலக்க அவள் பல் துலக்க விடியலைப் போல சுறுசுறுப்பாகிக்கொண்டிருந்தோம். கொட்டை வடிநீரை அந்நேரத்தில் சூடாகப் பருக காலை இன்னும் விருவிருப்பானது.

தேவையானவற்றை அடைத்து ஒரு தோள்பையைத் தயாராக வைத்திருந்தேன். ஆடையுடுத்தி வெளிக்கிளம்பியபோது நண்பன் எனக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருப்பதாகவும் அவ்விடத்தின் அடையாளங்களையும் கூறினான். நானும் கிளம்பிவிட்டதாகவும் இன்னும் ஏறக்குறைய பதினைந்து நிமிடங்களில் அங்கு வந்துவிடுவதாகவும் அவனுக்குப் பதிலளித்தேன்.

மாடிப்படிகளில் இறங்கி வெளியேறியபோது மனைவி மாடியிலிருந்து பிரியா விடை கொடுத்துக்கொண்டிருந்தாள். எனக்கோ விருப்பமான பிரிவாக இருந்தது. எப்பொழுதும் அவளுடன் இருந்து ஒருவித சங்கோஜம் ஏற்பட்டுவிட்டது. அதிலிருந்து இரு நாட்களுக்கு விடுதலையென நினைத்தபோது மனம் அல்லோல கல்லோலப்பட்டது.
முதுகில் வலியுடன் கொண்டு சென்ற சுமையைத் தோள்களில் தொங்கவிட்டுக்கொண்டேன். இடதுபக்கம் அது என்னை ஒரு பக்கமாகச் சாய்த்து சுமையின் வலியை உணரச் செய்தது. போகின்ற வழிகளில் அன்றைக்கு நடக்கவிருக்கும் நிகழ்வுகளை முன்னமே ஓட்டிப்பார்த்துக்கொண்டே சென்றேன். நண்பனும் சொன்னவிடத்தில் நின்றுகொண்டிருந்தான் எழுத்தாளரின் பாவனையுடன் அதாவது ஒரு ஜோல்னா பையுடன். அவனை நான் விசாரிக்க என்னை அவன் விசாரிக்க அப்பொழுதின் தேவைக்கான சொற்றொடர்களை உதிர்த்துக்கொண்டோம்.

அரசாட்சி புரியும் முதல்வனைப் போல சரியான நேரத்திற்கு அரசு பேருந்து வரவில்லை. அரசனே அப்படியிருக்கும்போது அரசு பேருந்து அவ்வாறு திமிர்கொண்டு நடந்துகொள்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ரயில் போய்விடும் பயத்தில் ஒரு மூவுருளியை வாடைக்கு அமர்த்திக்கொண்டு சென்னை ரயில்நிலையத்தை அடைந்தோம். நண்பனிடம் ஒரு தேநீர் அருந்தவேண்டுமென்றும் ஒரு வெண்சுருட்டைப் புகைக்கவேண்டுமென்றும் கூறி இருவரும் ஒரு தேநீரைக் கடையைக் கண்டுபிடித்து பருகினோம். இல்லை இல்லை. அவன் கொட்டை வடிநீரைப் பருகினான். நான் தேநீரைப் பருகினேன். இப்படித்தான் எழுதும்போது நிறைய விசயங்கள் பொய்யாகிவிடுகின்றன. பொய்க்கு இடம்கொடுக்க விரும்பாமல் இந்தக் கட்டுரையை முடிந்தவரை பதிவுசெய்வதென ஊர்ஜிதம் செய்துகொண்டேன்.

அப்புறம் நான் ஒரு வெண்சுருட்டை ரயில்நிலையத்தின் அருகில் வந்து பிடித்தேன் ரயிலை விட்டுவிடக்கூடாதென்ற முன் ஜாக்கிரதை உணர்வில். ஒருவழியாய் நாங்கள் போகும் ரயில் பெயரைச் சுமைதூக்கும் தொழிலாளியிடம் சொல்லி நடைமேடை எண்ணை பதினொன்று என்று அறிந்துகொண்டு அம்மேடையை நோக்கி மனித நெரிசலுக்குள் புகுந்து அடைந்தோம். ரயிலும் பயணிகளின் சுமையுடன் நின்றுகொண்டிருந்தது. ரயிலின் வெற்றுடலுக்குள் இருவரும் ஏறிக்கொண்டோம். ரயிலுக்கு இதயம் தோன்றியது. ஏனெனில் ஏறிய நாங்களிருவரும் கவிஞர்கள் இல்லையா. ரயிலின் வெற்றுடலுக்கு இதயத்தைத் தோற்றுவித்தோம்.

ரயில்பெட்டிகள் சரியான நேரத்திலிருந்து பிசாகமல் தங்களை அசைத்துக்கொண்டு இரைதேடும் பாம்பின் உடலென புறப்பட்டது. நாங்கள் ஒரு மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருப்பதைப்போல இருந்தோம். ஆனாலும் நாங்கள் சென்ற பாம்பின் உடலில் சாளரங்களிருந்தன. அதன் வழியே வெளியுலகின் பரவசத்தோடும் அருகிருக்கும் மனிதர்களின் அரவத்தோடும் சேலம் மாநகரை நோக்கிய எங்கள் பயணம் அவ்வளவு அருமையாய் எவ்வித சஞ்சலங்களுமற்று தொடங்கியிருந்தது.

இந்தக் கட்டுரையை எழுதுகிறபோது இன்றைய மதியம் குறுக்கிட்டுவிட்டது. மீதியை நாளை தொடரலாமென மனம் இயம்பிவிட்டது.

Tuesday, May 11, 2010

லீனா மணிமேகலை தொடர்பாக நடந்த கூட்டத்தில்


லீனா மணிமேகலை தொடர்பாக நடந்த கூட்டத்தில் நான் பேசியதையும் மற்ற நண்பர்கள் பேசிய முழு உரை யும் லும்பினி இணைய தளம் வெளியிட்டு உள்ளது. நான் பேசியவற்றை இங்கு போட்டிருக்கிறேன்.

விஜய் மகேந்திரன்
ஒரு ஒன்றரை மணிநேரம் நமக்கு விரயமாகிவிட்டது. நிறைய சண்டை காட்சிகள் பார்த்தோம். என் நண்பர் ஒருவர் என்னிடம் இந்தக்கூட்டத்திற்கு போக வேண்டாம் என்றார்.

காரணம் கேட்டதற்கு ம.க.இ.க.வினர் கூட்டத்தில் பிரச்சனை செய்யவுள்ளார்கள் என்றார். அவருக்குத் தெரிந்திருக்கிறது. இதுபோல பலபேருக்குத் தெரியும்.

கூட்ட ஏற்பாட்டாளர்கள் கூட்டத்திற்கு திட்டமிடுவதைப் போல் அவர்களும் திட்டமிட்டார்கள். இது ஏதோ யதேச்சையாக வந்து செய்துவிட்டுப்போன விஷயமில்லை. ”உங்களுக்கு எதற்கு வீண் வம்பு. பேசாம கதையை எழுதிவிட்டு உட்காரவேண்டியதுதானே. இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள்” என்றார் என் நண்பர்.

யாருக்கு என்ன நடந்தால் என்ன. நாம் நம் வேலையைப் பார்ப்போம் என்பது தான் இன்றைக்கு பொதுபுத்தியில் இருக்கிறது. லீனாவின் கவிதைத் தொகுப்பு வந்த முதல்நாளே நான் வாங்கி விட்டேன். அதன் பின் நான் பார்க்கும் எல்லோர் வீட்டிலும் அந்த புத்தகம் இருக்கிறது. யாரும் இது குறித்து எதுவும் கடந்த ஒன்றிரண்டு ஆண்டுகளாக பேசவில்லை. இந்தப் புத்தகத்தை வாங்கி யாருக்கும் தெரியாமல் உயரமான இடத்தில் வீட்டில் ஒளித்து வைத்திருப்பதாகச் சொன்னார் ஒருவர். நான் கேட்டேன்.

அரசு சார்ந்த தொலைக்காட்சியில்கூட இரவு 11 மணிக்கு மேல் இதை விட ஆபாசமான நிகழ்ச்சிகள் வருகின்றன. அதோடு ஒப்பிட்டால் இவையெல்லாம் ஒன்றுமில்லை என்றேன். அந்த தொலைக்காட்சி நிலையத்தின் முன் யாராவது ஆர்ப்பாட்டம் செய்தார்களா? ஒரு ஆயிரம் பிரதிகள் விற்கக்கூடிய ஒரு கவிதை தொகுதியை எதிர்க்க வேண்டும் என்ற நினைப்பு எப்படி வருகிறது? இவர்களெல்லாம் ஒன்று கூடி விட்டால் நம் வெற்று அரசியல் எடுபடாது என்ற நினைப்பில்தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தோடு நாம் நின்றுவிடக்கூடாது. தொடர்ந்து கருத்துக்களை அ.மார்க்ஸ் போன்றவர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

லும்பினி இணைய தளம்


சமூகநீதிக்கு குரல் கொடுக்கக்கூடிய இன்னொரு இணையத்தளம் தோழர்களால் தொடங்கப் பட்டிருக்கிறது :http://www.lumpini.in/

நமக்கு உவப்பானதா, உவப்பற்றதா என்பது முக்கியமில்லை. ஆயினும் பொதுப்புத்திக்கு எதிரான மாற்று சிந்தனைகளுக்கு நல்ல களமாக லும்பினி அமையும் என்பதை எதிர்ப்பார்க்கலாம். வரும் காலத்தில் மிக முக்கியமான ஆக்கங்களை இத்தளத்தில் எதிர்ப்பார்க்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு இயக்கமாக இயங்கிய இலக்கியப் பத்திரிகையான நிறப்பிரிகையின் சில இதழ்கள் இந்த இணையத்தளத்தில் வாசிக்க கிடைக்கிறது.

பத்து நிமிடத்தில் பார்த்த பறவைப் பார்வையில் பார்த்ததில், தளத்தின் வடிவம் மிக சிறப்பாக, வாசிப்புக்கு ஏதுவாக இருப்பதை உணரமுடிகிறது. அடுத்தடுத்து இத்தளம் செயல்படும் விதத்தை வைத்தே எதையும் தீர்மானிக்க முடியும்.

லும்பினி ஆசிரியர் குழுவினருக்கு வாழ்த்துகள்!

http://www.lumpini.in/

Monday, May 10, 2010

எல்லைக்கோட்டையொட்டி பயணிக்கும் கதைகள்

விஜய் மகேந்திரனின் '" நகரத்திற்கு வெளியே " தொகுப்பிலுள்ள பத்து கதைகளையும் வாசிக்கும்போது பல்வேறு விதமான எண்ணங்கள் தோன்றுகின்றது.அவற்றில் சில:

1. இவர் தன்னுடைய வாசகர்கள் யார் என்பதில் மிகத்தெளிவாகவே இருக்கிறார்.

2. நவீன எழுத்துக்களில் எளிமைக்கு கொடுக்கவேண்டிய இடத்தை முன்னிறுத்துகிறார்.

3. தன்னுடைய கதைகளின் சொல்முறையில் பெரும்பாலும் ஒற்றைத்தன்மையையே [ஒரே மாதிரியான என்றும் கொள்ளலாம்] கையாள்கிறார்.

4. கதைக்களங்களும் நகரத்து வாழ்வின்,அம்மனிதர்களின் அக,புற நெருக்கடிக்கு நெருக்கமாக தேர்வுகொள்கிறார்.

5. உள்ளார்ந்து ஒரு தொடர்ச்சியை தனது எல்லா கதைகளிலும் இழுத்துச்செல்கிறார்.
6.பரீட்சார்த்தங்களிலோ,மொழியை கூடுதல் கவனமுடன் கையாள்வதிலோ அக்கறை எதுவும் இருப்பதாக இந்த கதைகளில் வெளிப்படவில்லை.

7. கதைகளை சொல்லுவதில் காட்சித்தன்மையும்,திரைக்கதை போன்ற விவரணைகளும் கூடிய மொழி இவருக்கு கைவந்திருக்கிறது.

8. எந்த எழுத்தாளனின் கதைத்தொகுப்பையும் ஒரு சேர வாசிக்கும்போது சில கதைகள் எரிச்சலூட்டும்.அதற்கு " நகரத்திற்கு வெளியே "வும் தப்பவில்லை.

9. இவரது கதைகளில் பெருநகரத்து பெண்கள் எதிர்கொள்ளும் உடல் சார்ந்த நெருக்கடி கவனம் பெறுகிறது.

இப்படியாக இன்னும் சில .....

இருத்தலின் விதிகள் : எந்தவொரு நவீன எழுத்தாளனுக்கும்,ஏன் அதன் வாசகனுக்கும் கூட நேர்கின்ற ஒரு சிக்கலே கதையின் அடிப்படை.அது இங்கே சிறப்பாக பதிவாகியிருக்கிறது.இதே போன்ற அனுபவங்களை வேறு வேறு எழுத்தாளர்களிடம் படித்ததாக நினைவு.இந்த கதையின் பின்குறிப்பும்,பேசப்படும் இயல்பான உரையாடலுமே இதனை வேறுபடுத்துகிறது.

[இங்கே ஒரு செய்தி : சமீபத்தில் நான் திருச்சிக்கு சென்றபோது பயணத்துணையாக விஜய் மகேந்திரனின் இந்த தொகுப்பை எடுத்துக்கொண்டேன்.முழுக்க வாசித்து முடிக்கையில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தேன்.நான் போனவேலை முடிந்ததும் நான் தேடிசென்றது பழைய புத்தக கடைகளை. இந்த கதையின் நாயகனுக்கு சலித்து தேடியும் கிடைக்காத எஸ்.சம்பத்தின் "இடைவெளி" யும்,அவனுக்கு அதிசயமாய் கிடைத்த சுந்தர ராமசாமியின் " பள்ளம் " சிறுகதை தொகுப்பும் எனக்கு கிடைத்தன.இந்த தற்செயலில் நான் அடைந்த சந்தோஷத்தை உடனே யாருடனாவது பகிர நினைத்து அழைத்தது குமாரநந்தனை..அவரும் சரியாக அதனை அடையாளம் கண்டார் ].

இதில் பழைய புத்தகக்காரன் சொல்வதாக ஒரு தகவல் வரும் ,அந்த உரையாடல் " இவ்வளவு புத்தகம் படிச்ச அந்தாளு ,பிள்ளைகளுக்கு அதன் அருமை தெரியாமலா வளர்த்திருப்பான் ! காசு கூட வேணான்னுட்டாங்க "

" சும்மாவா கொடுத்தாங்க "

"நீ வந்ததுனால உங்கிட்ட போடுறோம்.இல்லாட்டி இதையெல்லாம் சேத்து வச்சு எரிச்சிருப்போம்னு சொல்றாங்க ..முட்டாப்பசங்க "

அந்த பழைய புத்தகக்கடைக்காரனுக்குக்கூட அது கொஞ்சம் விலை அதிகம் கிடைக்கும் வியாபாரப்பொருள்தான்.

ஆனால் நம்மைப்போன்ற இலக்கிய தொடர்புள்ளவர்களுக்கு நேரும் மனஅயர்ச்சியை மீண்டும் மீண்டும் இந்த கதை எனக்கு நினைவூட்டுகிறது.அவ்விதத்தில் இது முக்கியமான சிறுகதையாகப்படுகிறது.

மழை புயல் சின்னம்: இன்றைய உலகில் நிறுவனங்கள் தங்களுடைய நற்பெயரை காப்பாற்ற எப்படியெல்லாம் நிர்வாகத்தில் இறுக்கத்தை காட்டுகிறது என்பது இந்த கதையில் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.கூடவே ஒரு காதலும்.

மழையோ புயலோ ஏன் இதற்கும் அதிகமான இயற்கை சீற்றங்களே நிகழ்ந்தாலும் வேலைக்கு சரியாக வரவேண்டும் என்றே எதிர்பார்க்கிறது நிர்வாகம்.இதே போன்ற நிகழ்வு நான் களப்பணியாளனாக இருந்தபோது எனக்கும் நிகழ்ந்திருக்கிறது. பெருமழையில் நகரமே ஸ்தம்பித்து நின்றபோதும் என்னை வேலைக்கு வரசொல்லி அழைப்புவந்து அதனால் சண்டை உருவாகியிருக்கிறது.வேலைக்கு செல்லும் நம்மில் பலருக்கு இது போன்ற அனுபவங்கள் நேர்ந்திருக்கும்.எவருக்கும் நிகழக்கூடிய அல்லது நிகழ்ந்திருக்ககூடிய இதுபோன்ற சம்பவங்களே விஜய் மகேந்திரனின் படைப்புகளில் காணக்கிடக்கிறது

.இதில் மழை துவங்கி பலம் கூடும் காட்சியை மிகச்சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்,அந்த பத்தி இப்படி துவங்குகிறது, " காற்று அதிகமாக வீசியது.செய்தித்தாள்கள் பறந்தன.கடையில் தொங்கிய போஸ்டர்கள் கிழிந்து விழுந்தன.தேநீர் குடித்து முடித்தபோது மழை பெய்ய தொடங்கியது...................ஜன்னல் வழியாக பார்த்தபோது எதிரேயிருந்த கடைகளின் தகரக்கொட்டகை தனியாக பிய்ந்து காற்றில் இரண்டு மூன்று அடி தள்ளி பறந்து விழுந்தது ".


இதற்கு அடுத்த பத்தியிலும் சிறப்பாக விவரித்திருக்கிறார்.இந்த கதை மட்டுமல்லாது மேலும் சில கதைகளிலும் எப்படியாவது காதல் இடம்பெற்று விடுகிறது.நல்லவேளை அது நகரத்து மனிதர்களின் மனஇயல்பை தொட்டுச்செல்கிறது.காதலை தவிர்க்க முடியாத ஒன்றாகவும் அதே சமயம் உடல் மூலமே எளிதில் கடக்கக்கூடியதாகவும் இருக்கிறார்கள் விஜய் மகேந்திரனின் மனிதர்கள்.

இந்த கதையின் முதல் பத்தியில் உள்ள வாக்கியங்களை திரும்ப படித்து ரசித்தேன்.அந்த முதல் வரி," என்னுடைய அறையை பார்ப்பதற்கும் எனது துயரம் கூடுவதற்கும் ஏதோ தொடர்பிருக்கிறது "

நகரத்திற்கு வெளியே: இந்த கதையின் முக்கியத்துவம் என்று சொன்னால் இது பெருநகரத்தின் மத்திய மற்றும் மேட்டுக்குடியினரின் மிகமுக்கியமான உளப்பிரச்சனையாகியிருக்கிற Pre Marital Sex என்னும் சிக்கலை கொண்டிருக்கிறது.


.சொல்லப்பட்ட முறையில் இயல்பாக இருக்கிற அதே சமயம் இது முழுக்கவும் புறத்திலிருந்தே அணுகப்பட்டிருக்கிறது. அவளுக்கும் அவனுக்கும் எவ்வித குற்ற உணர்ச்சியுமில்லை. கருவை கலைத்து விடுகிறாள்.அவன் ஆதிக்கம் அதிகமாகி கட்டாயப்படுத்தும்போது அவனை கழட்டிவிடலாமா என்று யோசித்து அவ்விதமே செய்கிறாள்.ஆனால் அவனுடைய தேவை என்பது இவள் ஒருத்தியிடம் மட்டும்தான் என்பதில்லை.ப்ரியா இல்லையேல் பாக்கியம்.அவளுக்கும் அதே பிரச்சனையில் குற்றஉணர்வுகொண்டு, தனித்திருக்கையில் ப்ரியாவும் கேத்ரீனும் ஆறுதலளித்து தன்னுடைய வழியிலியே " பழைய பாக்கியமாக " மாற்றுகின்றார்கள். இதுவே இன்றைய பெருநகரத்து இளைஞர்களின்,யுவதிகளின் ஆழ்மனம் கொண்டிருக்கும் நிஜம்.இந்த நிஜத்தை விஜய் ஆழமாக கவனித்திருக்கிறார்.வெளியே யாருக்கும் தெரியாத வரை எல்லாம் சரியாகவே இருப்பதான கற்பிதம் .இந்த கதையில் எனக்கு ஒரு ஆறுதலும், ஆதங்கமும் இருக்கிறது.

ஆறுதல் : நிஜத்தை அப்படியே சொல்கிறோம் என்று பாலியல் சொற்களை வாரி இறைத்து கிளர்ச்சியடைய செய்யவில்லை.அந்த முறை இந்த கதைக்கு பொருந்தாது என்னும் ஆசிரியரின் பிரக்ஞை குறிப்பிடவேண்டியது.

.
ஆதங்கம் : நிச்சயமாக இன்னும் ஆழமான தளத்திற்கு அந்த சிக்கலின் தன்மையை கொண்டுபோயிருக்கமுடியும். எந்த தளமாற்றமும் நிகழாது ஒரு சாதாரணமான வாசிப்பையே கோருகிறது.

அடைபடும் காற்று : கஷ்டப்பட்டு படிக்கவைத்து பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிய பின் உணரும் தனிமையை இந்த கதை சொல்லமுயற்சிக்கிறது.


இரண்டு வயதானவர்களின் கடிதமும்,இடையே ஆசிரியனுடைய விளக்கமுமான ஒரு வடிவம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.இந்த முறையும் பலகதைகளில் படித்திருக்கிறோம் என்றாலும் இந்த கதை எனக்கு எரிச்சலடைய செய்யவில்லை. தனிமையிலுள்ள வயதானோரின் கடிதம் அவர்களுடைய வாக்கியங்களிலேயே அருமையாக பதிவாகியிருக்கிறது.இதில் காணும் உளவியல் நெருக்கடியும் - நகரத்து இன்றைய தலைமுறையினர் முந்தைய தலைமுறையினருக்கு கொடுக்கும் இடைவெளி - நன்றாகவே உணர்த்துகிறது.ஆனால் இறுதிப்பகுதி அமெச்சூர் நாடக பாணியில் ,' திடீரென்று ஒரு பெருமூச்சுடன் "அடைபடும் காற்று "என சொல்லிக்கொண்டார் ' என்று முடிவது கதையின் தலைப்பை கதையோடு இணைக்கவேண்டி செயற்கையாக எழுதப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.

இந்த தொகுப்பில் மோசமான கதைகளும் இருக்கின்றன.ஆசியா மேன்ஷன்,சனிப்பெயர்ச்சி,சிரிப்பு ஆகிய கதைகளைத்தான் குறிப்பிட்டு சொல்கிறேன். ' சிரிப்பு ' கதையில் எதுவும் என்னை ஈர்க்கவேயில்லை.சம்பவங்களோ ,கதாப்பாத்திரமோ,மொழியோ ,விவரணைகளோ எதுவுமே சரிவரவில்லை என்றே தோன்றுகிறது.பூங்காவில் சந்திக்கும் நபர் கடவுளா? அவர் சொன்னதும் எல்லாமே மாறிவிடுகிறது.இது பேண்டசியாகவும் இல்லை,யதார்த்தமாகவும் இல்லை, அந்த நபர் வந்து சந்திப்பது ஒரு தற்செயல் என்றும் கூட எடுத்துக்கொள்ள முடியவில்லை.
ஆசியா மேன்ஷன் - சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்று நகரத்திற்கு வருபவனின் சோகப்பகுதியை கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.
சனிப்பெயர்ச்சி,ராமநேசன் எனது நண்பன் கதைகளில் மெல்லிய நகைச்சுவை இருந்தாலும் சொன்ன முறைகள் எவ்வித கவனமும் கோருவதில்லை

.ஊர் நலன், காதுகள் உள்ளவன் கேட்கக்கடவன் ஆகியவை ஏதோ பார்த்து சலித்த திரைப்படத்தையே மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வையே தருகிறது.இத்தனைக்கும் இந்த இரண்டு கதைகளிலும் விவரணைகள் கூர்மையான தொனியில் இருக்கிறது.

மொத்தமாக சொன்னால் விஜய் மகேந்திரன் சிறந்த கதைகளை தரக்கூடிய தடயங்கள் இந்த தொகுப்பில் பல இடங்களில் தென்படுகிறது.
நகரத்து வாழ்வை அவர் மிக கூர்மையாக கவனிக்கிறார்.ஆனால் மொழியும் சொல்முறையும் இன்னும் வலுவாக வேண்டும்.இப்போதைய மொழியும்,சொல்முறையும்,கதைகளும் எளிமையின் துவக்க எல்லைக்கோட்டையொட்டியே பயணித்துக்கொண்டிருக்கிறது.தொகுப்பின் பின்னட்டையில் விஜய் மகேந்திரன் குறித்தும்,அவரது கதைகள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கும் முழுமைக்கும் நான் உடன்படுகிறேன்.

அன்புடன்,
சசி


--