Tuesday, March 16, 2010

'டுங்களே' சதாசிவம்-ஸ்ரீபதி பத்மநாபா


மலையாளத்தில் 'அடிபொளி' என்றால் 'கலக்கல்', 'தூள் கிளப்புதல்' இன்ன பிற. தமிழ்நாட்டில் மலையாளத் திரைப்படப் பாடல்களைப் பெரும்பாலும் கேட்பது அரிது. திரைப்படப் பாடல்கள் அறிமுகமான காலந்தொட்டு இங்கு அறிமுகமாகியிருக்கும் மலையாளப் பாடல்கள் சொற்பமே. பழசில் 'ஒரு கடலினக்கரெ போணோரே' புதுசில் ஒரு 'லஜ்ஜாவதியே'.

ஆனால் மலையாளக் கரையோரம் அப்படியல்ல. அந்தக் காலத்து 'காலங்களில் அவள் வசந்தம்' தொடங்கி இன்றைய 'நாக்க முக்க' வரைக்கும் அவர்களுக்கு ஜீவனாணு. சோகமான 'போனால் போகட்டும் போடா'வாகட்டும், மென்மையான ஒரு 'வெள்ளை மழை'யாகட்டும் அதிரடியான 'கண்ணதாசன் காரைக்குடி'யாகட்டும் எல்லாமே அங்கு 'அடிபொளி'தான்.

அதற்கு முக்கியமான காரணம் மலையாளத் திரைப்பாடல்களின் மேதாவித்தனம் என்றுதான் சொல்லவேண்டும். திரைப்படப்பாடல் என்பது இலக்கியக் களமல்ல என்பதையும் கவிமேதைமையைக் காட்டும் இடமல்ல என்பதையும் வரிகளின் எளிமையே பிரம்மாண்டம் என்பதையும் அறியாது எழுதப்படுவதுதான் மலையாளப் பாடல்கள் பரவலாக மக்களை சென்றடையாமலிருப்பதன் காரணம் என்று சொல்லலாம். ஒரு பாடல் அடிபொளியாக வேண்டுமென்றால் செறிவான கவித்துவம் அல்ல அவசியம்; ஓசை நயமும் அங்கங்கே மின்னலெனத் தெறிக்கும் புதுப்புது 'ஐடியா'க்களும்தான்.

முன்னமே வேறொரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும் இங்கு திரும்பச் சொல்லலாம்:
மலையாளக் கரையோர மீனவன்கூட, 'கடலின் அக்கரைக்குச் செல்பவர்களே, பதினாலாம் இரவின் பாற்கடல் அலையின் கடல் கன்னிகள் உதிர்க்கும் மாணிக்கத்தைக் கொண்டுவருவீர்களா' என்று ஒரு ஃபேன்டஸி கனவைத்தான் பாடுகிறான். தமிழ் மீனவனோ வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திமிங்கிலம் தலைமையில் நடக்கும் காதல் திருமணத்தை தன் எளிமையான மொழியில் பாடுகிறான். 'காதல், காதல், காதல், காதல் போயின் சாதல்' என்பதல்ல திரைப் பாடல்; 'டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா' இதுதான் திரைப்பாடல்.

குத்துப்பாட்டில்கூட மென்மையான கவிதை தளும்பும் வரிகளைத்தான் மலையாளப் பாடல்களில் காணமுடியும். சமீபத்தில் பெரு வெற்றி பெற்ற லஜ்ஜாவதியே பாடலில் கூட காதலியுடன் பிள்ளைப்பிராயத்தில் ஈடுபட்ட ரசனையான நினைவுகள்தான் சொல்லப்பட்டிருக்கும். மலையாளப் பாடலாசிரியர்களுக்கு அந்தக்காலத்திலிருந்தே காதல் என்றால் அது கண்ணனும் ராதையும்தான். சமீபத்தில்கூட 'ஓடக்குழல் விளி கேட்டோ ராதே என் ராதே' என்று பாடல் எழுதப்படுகிறது. அதனாலேயே சாதாரண மலையாள ரசிகனுக்கு தமிழ்ப்பாடல்கள் நெருக்கமானவையாகத் தோன்றுகின்றன. எந்த மலையாள சேனலை எடுத்துக்கொண்டாலும் எந்த டேலன்ட் ஷோவை எடுத்துக்கொண்டாலும் அதில் இரண்டு தமிழ்ப்பாடல்களையாவது கேட்க முடியும்.

தமிழகம் போலவே கேரளாவின் கோவில் திருவிழாக்களிலும் 'கானமேளா' ஆர்க்கெஸ்ட்ரா இன்றியமையாதது. இருபது தமிழ்ப்பாடல்கள், பத்து இந்திப்பாடல்கள், ஐந்து மலையாளப் பாடல்கள் இதுதான் அந்த மேடைகளின் சூத்திரமாக இருக்கும். பெரும்பாலும் தமிழகத்திலிருந்துதான் இசைக்குழுக்கள் வரவழைக்கப்படும். ஏழெட்டு வருடங்களுக்கு முன் நான் இதுபோன்ற மேடைக்கச்சேரிகளுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். நான் ஒரு மேடைப்பாடகன் என்று நினைத்துவிடவேண்டாம். கோவையிலிருந்த பல இசைக்குழுக்களிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் வேலை 'அதிகமில்லாத' நாட்களில் நானும் அவர்களுடன் செல்வதுண்டு. யாராவது கேட்டால் இசைக்குழுவின் மேலாளர் என்று அறிமுகப்படுத்துவார்கள். சிலசமயம் 'இவர்தாங்க எங்க லிரிசிஸ்ட்' என்று அறிமுகப்படுத்துவார்கள். ஏற்கனவே எழுதப்பட்ட பாடல்களைப் பாடும் இசைக்குழுவில் லிரிசிஸ்ட்டுக்கு என்ன வேலை என்று யாரும் கேட்டதில்லை.

அன்று கேரளாவில் ஷோரணூர் என்ற இடத்தில் கச்சேரி. வாளையார் செக்போஸ்ட்டில் நிற்கிறதோ இல்லையோ எல்லை கடந்தவுடன் 'பெவரேஜஸ் கார்ப்பரேஷனின்' முதல் கடையிலேயே டெம்போ டிராவலரை நிறுத்திவிடவேண்டும் என்பது ஒரு விதி. கச்சேரிக்கு முன் ஒரு 'கட்டிங்', கச்சேரி முடிந்தபின் அரையோ முழுசோ என்பதும் ஒரு விதி.

ஷோரணூரில் கச்சேரி துவங்கியது. நான் இசைக்குழுவின் வேனிலேயே அமர்ந்துகொண்டேன். முதலில் சில பக்திப் பாடல்கள். ஒரு பாடகர் ஒட்டடைக்குச்சி போல் நெடுநெடுவென்று இருப்பார். சதாசிவம். சதா கிருஷ்ணனின் பாடலைப் பாடுவதுதான் அவருக்கு வாய்த்தது. டி.எம்.சௌந்தரராஜனின் குரலைப் பிரதியெடுத்துப் பாடுபவர். இந்த சரீரத்திலிருந்து இப்படி ஒரு சாரீரமா என்று வியக்க வைப்பார். முதல் சில பக்திப் பாடல்களில் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' இல்லாமல் இருந்ததே இல்லை. அனுபவித்துப் பாடுவார். அதுவும் பாடலின் இறுதியில் நிறுத்தி நிதானமாக புருஷோத்தமன் குரல் பா............ என்று அந்த 'பா' வின் 'ஆ'காரத்தை 'தம்' பிடித்து இழுத்து 'டுங்களே' என்று முடிப்பார். எவ்வளவு நேரம் ஆகாரத்தை நீட்டுகிறாரோ அவ்வளவு கைதட்டல் கிடைக்கும் என்பது அவரது விசுவாசம். அவரது விசுவாசம் எப்போதும் அவரை ரட்சித்தே வந்திருக்கிறது. இன்றைக்கு 'கட்டிங்' கொஞ்சம் அதிகம் போல. ஆலாபனை நீண்டுகொண்டே போனது. இதுவரை கேட்டதிலியே மிக நீளமான பா.

நான் வேனிலிருந்து இறங்கி வேனின் பின்னால் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு நின்றேன். என்னை நோக்கி ஒருவர் வந்தார். பக்திப் பாடல்கள் முடிந்து அந்த அரபிக்கடலோரம் துவங்கிவிட்டது. 'ட்ரூப்பிலே ஆளாணு அல்லே?' என்று கேட்டார். 'அதெ' என்றேன். நல்ல வாசம். ஸ்டெடியாக இருப்பதாக தள்ளாடிக் காண்பித்தார். 'மலையாளமும் தமிழும் அறியாம் அல்லே' என்று கேட்டார். 'அதெ' என்றேன். 'ஆ பாட்டுகாரியோடு மலையாளம் சம்சாரிக்குன்னதும் மற்றுள்ளவரோடு தமிழ் சம்சாரிக்குன்னதும் ஞான் கேட்டு' என்றார். ஆசுவாசமாக வேனில் சாய்ந்து நின்று கொண்டார். 'எனிக்கொரு காரியம் மனசிலாயில்லா' என்றார். 'எந்து கார்யம்' என்றேன். குரல் குழற ஆரம்பித்திருந்தது. 'காரியம் அல்ல, ஒரு வாக்கு' என்றார். 'எந்து வாக்கு' என்றேன். வாக்கு, சொல், வார்த்தை. 'மாஷே, ஒரு தமிழ் வாக்காணு, அதின்டெ அர்த்தம் பறயாமோ' என்றபடி அப்படியே தரையில் குந்தி உட்கார்ந்தார். நான் கீழே பார்த்து 'எந்து வாக்கு' என்றேன் மறுபடியும். அவர் மேலே பார்த்து 'ஆ... ஆ... பாட்டு கேட்டில்லே? புள்ளாங்குழல்..? அதிலெ ஒரு வாக்கு...' என்று சொல்லச் சொல்ல தலை தொங்கியது.

அரபிக்கடலின் ஓசையில் பொறுமையிழந்து 'எந்து வாக்கு?' என்று அலறினேன்.

'டுங்களே' என்றபடி நிலம் பதிந்தார்.

Monday, March 1, 2010

தேவை உடனடி விளம்பரம்

தேவை உடனடி விளம்பரம்


விஜய் மகேந்திரன்


சமீபகாலமாக சில எழுத்தாளர்களிடையே ஒரு விதி தொற்றிக் கொண்டு வருகிறது. மேடைகளில் பேச வேண்டிய தலைப்பை விட்டு, அதற்கு சம்பந்தமில்லாத செய்திகளை பேசுவது பெரும்பாலும் யாரையேனும் தனிப்பட்ட முறையில் தாக்குவது. இதனால் அவர்களுக்கு உடனடி விளம்பரம் கிடைப்பதே காரணமாகும். கொஞ்ச நாள் அவர்கள் பெயரே செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கும். அது தொடர்பாக சில சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

ஜூன் 2009, 28, 27 தேதிகளில் கடவு அமைப்பு நடத்திய கருத்தரங்கு கூட்டம். இதில் கௌதம சித்தார்த்தன் கதைகள் பற்றிய கட்டுரை படிப்பதற்காக பங்கேற்பாளனாக நான் அழைக்கப்பட்டிருந்தேன். இக்கூட்டத்தை ஸ்ரீ ஷங்கர் என்பவர்தான் ஒருங்கிணைத்தார். புத்தகம் வந்து விட்டதா? கட்டுரை எழுதத்தொடங்கிவிட்டீர்களா? என்று போன் செய்து நினைவுப்படுத்திக்கொண்டே இருந்தார். இது மற்ற பங்கேற்பாளர்களுக்கும் பொருந்தும் சென்னையில் இருந்து செல்வபுவியரசன், அரவிந்தன் போன்றவர்களும் இதில் கட்டுரை வாசிக்க அழைக்கப்பட்டிருந்தனர். சென்னையில் இருந்து மதுரை சென்று வருவதற்கான பயணத்தொகை கொடுப்பர்களா என்ற எந்த தகவலும் இல்லை.

கட்டளைகள் மட்டும் வந்துகொண்டே இருந்தன. மதுரை கிளம்புவதற்கு இரண்டு நாட்கள் முன், ஸ்ரீ ஷங்கர் போன் செய்து கட்டுரை எழுதிமுடித்து விட்டால் எங்களுக்கு முன்னரே அனுப்பி விடுங்கள் என்றார். நீ வராவிட்டாலும் உன் கட்டுரையை வேறு ஆளை வைத்துப் படித்துக்கொள்வோம் என்பதே அதன் அர்த்தம். கவலைப்படாதீர்கள் கட்டயமா வந்துவிடுவேன் என்றேன். கௌதம சித்தார்த்தின் நூல்கள் கூட்டத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போதுதான் கிடைத்தது. அவற்றில் இரண்டு இப்போது அச்சில் இல்லை. ஒரு வாரம் மிகுந்த சிரமத்துடன் பிரயாசைப்பட்டு கதைகளைப் படித்து உள்வாங்கினேன். கூட்டம் நடக்கும் தினத்திற்கு முந்தைய நாள் தான் கட்டுரையை எழுதி முடிக்க முடிந்தது. அடுத்த நாள் கூட்டத்திற்கு செல்லும் அவசரத்தில் பிரதி எடுக்க மறந்துவிட்டேன். மதியம் மூன்று மணிக்கு மேல் தான் நான், அரவிந்தன் (ஜே.பி.சாணக்ய கதைகள்), செல்வா.புவியரசன் (காலபைரவன் கதைகள்) கே.என்.செந்தில் போன்றவர்கள் பேச அழைக்கப்பட்டோம். கட்டுரையைப் படிக்க வேண்டாம் சாராம்சத்தை பேசினால் போதுமானது என்று அமைப்பாளர்கள் கூறியதால், அதிலுள்ள விஷயங்களை 20 நிமிடம் பேசிவிட்டு அமர்ந்து விட்டேன். நேரமில்லை எனக் கூறி மற்றவர்களும் குறைந்த நிமிடங்களே பேச அனுமதிக்கப்பட்டனர். பிறகு ஐந்து மணியளவில் சிறுகதைக் கலந்துரையாடல் கூட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இது நிகழ்ச்சிநிரலில் இல்லை. பிரபஞ்சன், எஸ்.ரா.நாஞ்சில்நாடன், ப.வெங்கடேசன் ஆதவன் தீட்சண்யா, என்று அமர்ந்த கூட்டத்தில் தமிழ் நதியும் திடீரென அழைக்கப்பட்டார். இதற்கு யார் காரணம் எனத் தெரியவில்லை. மற்ற நிகழ்வுகளிலும் பங்கேற்பாளராக தமிழ் நதி பெயர் கிடையாது. பார்வையாளராக அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர் தமிழ் நதி. அவரும் தனக்கு கிடைத்த கடைசி பந்தில் சிக்ஸர் அடிப்பவரைப் போல பேசத்தொடங்கினார். எந்த தமிழ் எழுத்தாளர்களும் ஈழமக்களுக்கு குரல் கொடுத்து எழுதவில்லை என. ஏதோ அவரின் புதிய கண்டுபிடிப்பு போல பேசத் தொடங்கினார். நான் இந்த இடத்தில் கேட்கிறேன். நீங்கள் ஏன் தமிழ் நதி உங்கள் புதிய குறு நாவலில் ஈழமக்களின் பிரச்சினைகளை எழுதாமல் காதல் கதையை எழுதினீர்கள். அது படைப்பாளியின் சுதந்திரம் என்று பதில் சொல்வீர்கள் என்றே நினைக்கிறேன். அதற்கு ஆதவன் எழுந்து பதில் சொல்லிப்போக, கூட்டம் இரண்டாக பிரிந்து சண்டையிடத் துவங்கியது. இலக்கியக் கூட்டத்தில் இரு பிரிவினையை உண்டு பண்ணிய பெருமை தமிழ் நதியையே சாரும்.
அப்புறம் என்ன வழக்கம் போல நாங்கள் இலக்கியம் பற்றிய பேசிய பேச்சுக்கள் காற்றோடு போனது. தமிழ் நதியே அடுத்த சில மாதங்களுக்கு மீடியாவில் ஹீரோயினாக உலா வந்தார். இன்று விகடனில் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் போடுகிறார். குமுதத்தில் காபி ஷாப்பிற்கு சென்று வந்ததைப் பற்றி பேட்டி கொடுக்கிறார்.
மறுபடி என் கதைக்கு வருகிறேன். கட்டுரை வாசித்தவர்கள் அனைவரும் அக்கட்டுரைகளின் பிரதிகளை வெவ்வேறு இதழ்களுக்கு கொடுத்துவிட்டார்கள். தன் கதைகளைப் பற்றிய பதிவுகள் வந்து வெகுகாலம் ஆகிவிட்டது எனக் கூறி கௌதம சித்தார்த்தன் என்னிடம் கட்டுரை பிரதியை அனுப்பி வைக்குமாறும், அதை உன்னதத்தில் பிரசுரிப்பதகவும் கேட்டார். நான் ஸ்ரீ ஷங்கருக்கு போன் செய்து பிரதி எடுத்து கட்டுரையை அனுப்புமாறு கேட்டேன். கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை நூலாக்கம் செய்யப் போவதாகவும் அதனால் எந்த இதழ்களுக்கும் அனுப்பக் கூடாது எனக் கறாராகப் பேசினார். சித்தார்தனும் கேட்டுப் பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. நான் தேவேந்திர பூபதியிடம் பேசினேன். ஷங்கரிடம் சொல்லி இரண்டு நாட்களில் அனுப்பி வைப்பதாக கூறினார். இன்று வரை வரவில்லை.

நானும் விட்டுவிட்டேன். அரவிந்தன் சாணக்யாவின் கதைகளைப்பற்றிப் பேசிய கட்டுரை காலச்சுவடில் வந்தது. ரமேஷ்-பிரேம் பற்றிய கட்டுரை மணல் வீட்டில் வந்துள்ளது. கோணங்கி பற்றிய கட்டுரை கல்குதிரை இதழில் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ஷங்கர் இன்று வரை நான் எழுதிய கட்டுரையை முடக்கி வைத்துள்ளார்., இந்த அதிகாரத்தை அவருக்கு கொடுத்தது யார்? எனத்தெரியவில்லை.

சொந்தச்செலவில், கூட்டத்திற்கு சென்றும் ஒரு வாரம் உழைத்தும் ஒரு கட்டுரையை உருவாக்கி அது எங்கோ கிடைக்கிறது. எவ்விடத்திலும் கூட்டத்தில் பங்களிக்காத சிலரின் சட்டைப்பைகள் பணத்தினால் நிரம்பி வழிந்தன. அது எவ்வாறு எனவும் தெரியவில்லை.
சு.வேணுகோபால் இது மாதிரி பல கூட்டங்களில் பார்த்துவிட்டேன் என என்னிடம் குறைபட்டுக் கொண்டார்.

எனது புத்தக வெளியீடு நடத்த கூட்டத்திலும் என் புத்தகத்தை பேச வந்தவர், சில வரிகள் பேசிவிட்டு கீழே இறங்கிவிட்டார். நேரத்தின் அவசியம் கருதி. மீதமான அந்த நேரம் தான் புத்தகத்தை கிழித்து வீரவசனம் பேச இன்னொருவருக்கு வழி வகை செய்தது.

பேச வருகிறார்கள் இப்போதெல்லாம் புத்தகத்தைப் பற்றியோ, படைப்பாளி பட்டியோ பேச ஆர்வம் காட்டுவதில்லை. வீண்வம்புதான். காட்ட குஸ்தி தான். சமீபத்தில் தொடர்ந்து எழுதிவரும் வாமு.கோமு. எஸ்.செந்தில்குமார், இசை, இவர்கள் படைப்புகள் பற்றியெல்லாம் ஒரு குறிப்பிடத்தக்க கட்டுரையாவது வெளிவந்துள்ளதா? படைப்புகள், பற்றியும் படைப்பாளர்கள் பற்றியும் விவாதிப்பதை விட்டுவிட்டு எத்தனை காலங்களுக்கு வம்பளந்து கொண்டு திரியப்போகிறார்கள் என்பதே நான் வைக்கும் ஒரே கேள்வி.