Tuesday, March 16, 2010

'டுங்களே' சதாசிவம்-ஸ்ரீபதி பத்மநாபா


மலையாளத்தில் 'அடிபொளி' என்றால் 'கலக்கல்', 'தூள் கிளப்புதல்' இன்ன பிற. தமிழ்நாட்டில் மலையாளத் திரைப்படப் பாடல்களைப் பெரும்பாலும் கேட்பது அரிது. திரைப்படப் பாடல்கள் அறிமுகமான காலந்தொட்டு இங்கு அறிமுகமாகியிருக்கும் மலையாளப் பாடல்கள் சொற்பமே. பழசில் 'ஒரு கடலினக்கரெ போணோரே' புதுசில் ஒரு 'லஜ்ஜாவதியே'.

ஆனால் மலையாளக் கரையோரம் அப்படியல்ல. அந்தக் காலத்து 'காலங்களில் அவள் வசந்தம்' தொடங்கி இன்றைய 'நாக்க முக்க' வரைக்கும் அவர்களுக்கு ஜீவனாணு. சோகமான 'போனால் போகட்டும் போடா'வாகட்டும், மென்மையான ஒரு 'வெள்ளை மழை'யாகட்டும் அதிரடியான 'கண்ணதாசன் காரைக்குடி'யாகட்டும் எல்லாமே அங்கு 'அடிபொளி'தான்.

அதற்கு முக்கியமான காரணம் மலையாளத் திரைப்பாடல்களின் மேதாவித்தனம் என்றுதான் சொல்லவேண்டும். திரைப்படப்பாடல் என்பது இலக்கியக் களமல்ல என்பதையும் கவிமேதைமையைக் காட்டும் இடமல்ல என்பதையும் வரிகளின் எளிமையே பிரம்மாண்டம் என்பதையும் அறியாது எழுதப்படுவதுதான் மலையாளப் பாடல்கள் பரவலாக மக்களை சென்றடையாமலிருப்பதன் காரணம் என்று சொல்லலாம். ஒரு பாடல் அடிபொளியாக வேண்டுமென்றால் செறிவான கவித்துவம் அல்ல அவசியம்; ஓசை நயமும் அங்கங்கே மின்னலெனத் தெறிக்கும் புதுப்புது 'ஐடியா'க்களும்தான்.

முன்னமே வேறொரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும் இங்கு திரும்பச் சொல்லலாம்:
மலையாளக் கரையோர மீனவன்கூட, 'கடலின் அக்கரைக்குச் செல்பவர்களே, பதினாலாம் இரவின் பாற்கடல் அலையின் கடல் கன்னிகள் உதிர்க்கும் மாணிக்கத்தைக் கொண்டுவருவீர்களா' என்று ஒரு ஃபேன்டஸி கனவைத்தான் பாடுகிறான். தமிழ் மீனவனோ வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திமிங்கிலம் தலைமையில் நடக்கும் காதல் திருமணத்தை தன் எளிமையான மொழியில் பாடுகிறான். 'காதல், காதல், காதல், காதல் போயின் சாதல்' என்பதல்ல திரைப் பாடல்; 'டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா' இதுதான் திரைப்பாடல்.

குத்துப்பாட்டில்கூட மென்மையான கவிதை தளும்பும் வரிகளைத்தான் மலையாளப் பாடல்களில் காணமுடியும். சமீபத்தில் பெரு வெற்றி பெற்ற லஜ்ஜாவதியே பாடலில் கூட காதலியுடன் பிள்ளைப்பிராயத்தில் ஈடுபட்ட ரசனையான நினைவுகள்தான் சொல்லப்பட்டிருக்கும். மலையாளப் பாடலாசிரியர்களுக்கு அந்தக்காலத்திலிருந்தே காதல் என்றால் அது கண்ணனும் ராதையும்தான். சமீபத்தில்கூட 'ஓடக்குழல் விளி கேட்டோ ராதே என் ராதே' என்று பாடல் எழுதப்படுகிறது. அதனாலேயே சாதாரண மலையாள ரசிகனுக்கு தமிழ்ப்பாடல்கள் நெருக்கமானவையாகத் தோன்றுகின்றன. எந்த மலையாள சேனலை எடுத்துக்கொண்டாலும் எந்த டேலன்ட் ஷோவை எடுத்துக்கொண்டாலும் அதில் இரண்டு தமிழ்ப்பாடல்களையாவது கேட்க முடியும்.

தமிழகம் போலவே கேரளாவின் கோவில் திருவிழாக்களிலும் 'கானமேளா' ஆர்க்கெஸ்ட்ரா இன்றியமையாதது. இருபது தமிழ்ப்பாடல்கள், பத்து இந்திப்பாடல்கள், ஐந்து மலையாளப் பாடல்கள் இதுதான் அந்த மேடைகளின் சூத்திரமாக இருக்கும். பெரும்பாலும் தமிழகத்திலிருந்துதான் இசைக்குழுக்கள் வரவழைக்கப்படும். ஏழெட்டு வருடங்களுக்கு முன் நான் இதுபோன்ற மேடைக்கச்சேரிகளுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். நான் ஒரு மேடைப்பாடகன் என்று நினைத்துவிடவேண்டாம். கோவையிலிருந்த பல இசைக்குழுக்களிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் வேலை 'அதிகமில்லாத' நாட்களில் நானும் அவர்களுடன் செல்வதுண்டு. யாராவது கேட்டால் இசைக்குழுவின் மேலாளர் என்று அறிமுகப்படுத்துவார்கள். சிலசமயம் 'இவர்தாங்க எங்க லிரிசிஸ்ட்' என்று அறிமுகப்படுத்துவார்கள். ஏற்கனவே எழுதப்பட்ட பாடல்களைப் பாடும் இசைக்குழுவில் லிரிசிஸ்ட்டுக்கு என்ன வேலை என்று யாரும் கேட்டதில்லை.

அன்று கேரளாவில் ஷோரணூர் என்ற இடத்தில் கச்சேரி. வாளையார் செக்போஸ்ட்டில் நிற்கிறதோ இல்லையோ எல்லை கடந்தவுடன் 'பெவரேஜஸ் கார்ப்பரேஷனின்' முதல் கடையிலேயே டெம்போ டிராவலரை நிறுத்திவிடவேண்டும் என்பது ஒரு விதி. கச்சேரிக்கு முன் ஒரு 'கட்டிங்', கச்சேரி முடிந்தபின் அரையோ முழுசோ என்பதும் ஒரு விதி.

ஷோரணூரில் கச்சேரி துவங்கியது. நான் இசைக்குழுவின் வேனிலேயே அமர்ந்துகொண்டேன். முதலில் சில பக்திப் பாடல்கள். ஒரு பாடகர் ஒட்டடைக்குச்சி போல் நெடுநெடுவென்று இருப்பார். சதாசிவம். சதா கிருஷ்ணனின் பாடலைப் பாடுவதுதான் அவருக்கு வாய்த்தது. டி.எம்.சௌந்தரராஜனின் குரலைப் பிரதியெடுத்துப் பாடுபவர். இந்த சரீரத்திலிருந்து இப்படி ஒரு சாரீரமா என்று வியக்க வைப்பார். முதல் சில பக்திப் பாடல்களில் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' இல்லாமல் இருந்ததே இல்லை. அனுபவித்துப் பாடுவார். அதுவும் பாடலின் இறுதியில் நிறுத்தி நிதானமாக புருஷோத்தமன் குரல் பா............ என்று அந்த 'பா' வின் 'ஆ'காரத்தை 'தம்' பிடித்து இழுத்து 'டுங்களே' என்று முடிப்பார். எவ்வளவு நேரம் ஆகாரத்தை நீட்டுகிறாரோ அவ்வளவு கைதட்டல் கிடைக்கும் என்பது அவரது விசுவாசம். அவரது விசுவாசம் எப்போதும் அவரை ரட்சித்தே வந்திருக்கிறது. இன்றைக்கு 'கட்டிங்' கொஞ்சம் அதிகம் போல. ஆலாபனை நீண்டுகொண்டே போனது. இதுவரை கேட்டதிலியே மிக நீளமான பா.

நான் வேனிலிருந்து இறங்கி வேனின் பின்னால் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு நின்றேன். என்னை நோக்கி ஒருவர் வந்தார். பக்திப் பாடல்கள் முடிந்து அந்த அரபிக்கடலோரம் துவங்கிவிட்டது. 'ட்ரூப்பிலே ஆளாணு அல்லே?' என்று கேட்டார். 'அதெ' என்றேன். நல்ல வாசம். ஸ்டெடியாக இருப்பதாக தள்ளாடிக் காண்பித்தார். 'மலையாளமும் தமிழும் அறியாம் அல்லே' என்று கேட்டார். 'அதெ' என்றேன். 'ஆ பாட்டுகாரியோடு மலையாளம் சம்சாரிக்குன்னதும் மற்றுள்ளவரோடு தமிழ் சம்சாரிக்குன்னதும் ஞான் கேட்டு' என்றார். ஆசுவாசமாக வேனில் சாய்ந்து நின்று கொண்டார். 'எனிக்கொரு காரியம் மனசிலாயில்லா' என்றார். 'எந்து கார்யம்' என்றேன். குரல் குழற ஆரம்பித்திருந்தது. 'காரியம் அல்ல, ஒரு வாக்கு' என்றார். 'எந்து வாக்கு' என்றேன். வாக்கு, சொல், வார்த்தை. 'மாஷே, ஒரு தமிழ் வாக்காணு, அதின்டெ அர்த்தம் பறயாமோ' என்றபடி அப்படியே தரையில் குந்தி உட்கார்ந்தார். நான் கீழே பார்த்து 'எந்து வாக்கு' என்றேன் மறுபடியும். அவர் மேலே பார்த்து 'ஆ... ஆ... பாட்டு கேட்டில்லே? புள்ளாங்குழல்..? அதிலெ ஒரு வாக்கு...' என்று சொல்லச் சொல்ல தலை தொங்கியது.

அரபிக்கடலின் ஓசையில் பொறுமையிழந்து 'எந்து வாக்கு?' என்று அலறினேன்.

'டுங்களே' என்றபடி நிலம் பதிந்தார்.

2 comments:

  1. எந்தா சேட்டன்.........மலையாளப் பதிவு அடிபொளியாயிட்டு உண்டு......என்னாச்சு உங்க கேரளா பயணக் கட்டுரை........சீக்கிரம் எல்லாத்தையும் எழுதுங்க.நன்றி.

    ReplyDelete