Showing posts with label சுப்ரபாரதிமணியன். Show all posts
Showing posts with label சுப்ரபாரதிமணியன். Show all posts

Sunday, November 14, 2010

” ஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்

11-11-10 தேதிய “ தி இந்து “ தினசரியில் திருமதி ஜானகிவிஸ்வநாதனின் இயக்கத்திலான “ ஓம் ஒபாமா “ திரைபட முன்னோட்டம் பற்றியக் கட்டுரையைப்படித்ததும் அப்படத்துடனான என் அனுபவப்பகிர்வை எழுத வேண்டும் என்றுத் தோன்றியது.

2009 பிப்ரவரியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் அவர்கள் தொடர்பு கொண்டு திருமதி ஜானகி விஸ்வநாதனுடன் சேர்ந்து ஒரு திரைப்பட கதைப்பணியில் ஈடுபடக் கேட்டுக் கொண்டார்.அவரின் ” குட்டி” , ”கனவுகள் மெய்ப்படவேண்டும் ” படங்களைப் பார்த்திருக்கிறேன். ராஜ்குமார் இரண்டிலும் ஒளிப்பதிவு பணியில் இருந்தவர்,ஒத்துக் கொண்டபின்பு திருமதி ஜானகி தொலைபேசியில் பேசினார். தொடர்ந்து பேசிக்கொண்டேஇருந்தார். மின்னஞ்சலில் சில தகவல்களை தர நானும் அக்கதைக்கான சம்பவங்களை தொடர்ந்து தந்து கொண்டிருந்தேன். தினமும் பெரும் பேச்சுசுதான். பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் என் துறையில் ஒருவாரப் பயிற்சிஒன்றுக்கு சென்னையில் இருந்த போது அவரைச் சந்திக்க பிப்ரவரி 15 மாலை தேதி தந்திருந்தேன். பிப்ரவரி 14 என் மனைவி கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் மாரடைப்பால் காலமானதால் நான் பயிற்சியின் இடையிலேயே திருப்பூர் திரும்பி விட்டேன். திருமதி ஜானகியிடம் குறுஞ்செய்தியாக தெரிவித்தேன்.
பத்து நாள் இடைவேளைக்குப் பின் அவர்கள் தொடர்பு கொண்ட போது சுகந்தியின் மரணம் தந்திருந்த சோர்விலிருந்து விடுபட வேண்டியிருந்த்தால் அக்கதைபற்றித் தொடர்ந்து தொலைபேசியில் கலந்தாலோசித்தோம் . தபாலில் சம்பவங்கள் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தேன். 40 காட்சிகளை வடிவமைத்திருந்தேன். ஒரு மாத இடைவெளியில் சாகித்திய அக்காதமியின் நிகழ்ச்சிக்குச் சென்றபோது அவர்கள் வீட்டில் ஒரு முழு நாள் நான் எழுதிய திரைக்கதை சம்பவங்களை முறைப்படுத்தினோம். .
பின்னர் தொடர்பு கொண்ட பலமுறை சற்று தாமதமாகும் என்றார். பிறகு ஒருமுறை திரைக்கதை முயற்சிக்கு சன்மானம் கேட்டு கடிதம் எழுதியபோது தொடர்பு கொள்வதாக குறுஞ்செய்தி அனுப்பினார். அவ்வளவுதான். பிறகு நாலைந்து முறை அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் அதே பதில் குறுஞ்செயதிதான்.
“ காஞ்சீபுரம் “ திரைக்கதைவிசயத்தில் நடந்ததைப் பற்றிய என் அபிப்ராயங்களை ” கனவு “ இதழிலும், திண்ணை, இனியொரு இணைய இதழ்களிலும் எழுதி இருந்த போது இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்.
”கனவு” 63 ம் இதழ் அக்டோபர் 2009 இதழில் பக்கம் 24லில் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்:
“ எனது சாயத்திரை நாவலை நான் திரைக்கதையாக்கி வைத்திருந்ததை பெற்றுக் கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போது 5 பேர் உள்ளனர். சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்ட்தினால் “ ஆன்லைனில் ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன். பிளீஸ், பிளிஸ் என்று தொலைபேசியிலெயே தொடர்ந்து கேட்டுக்கொடிருந்தார். 15 நாளில் முழுத் திரைக்கதையை ஆன்லைனில் எழுதி முடித்தேன். அது என்ன பாடு படப்போகிறதோ. திரைப்படத்துறையைச்சார்ந்த ஒரு நண்பர் சொன்னார்: பத்து குயர் பேப்பர் வாங்கிக்குடுத்து இதுதான் சன்மானமுன்னு அனுப்பிசிருவாங்க “
சினிமாவுலே இதெல்லாம் சகஜமப்பா”

“ ஓம் ஒபாமா” விசயத்தில் பத்து குயர் பேப்பரும் கிடைக்கவில்லை. ஒரு பைசா சன்மானமும் கிடைக்கவில்லை.

நான் எழுதிய ” ஓம் ஒபாமா ‘ திரைக்கதையில் சில சம்பவங்கள்.:
திருப்பூரை ஒட்டிய ஒரு கிராமம். பின்னலாடைத்துறை தொழிலுக்கு அந்த கிராமத்திலிருந்து வரும் சிலரின் வாழ்க்கை. அதில் காதல் வயப்பட்ட ஒரு ஜோடிபிரதானமாய். அந்த கிராமத்து அம்மன் கோவிலில் பூஜையின்போது நாதஸ்வரம் வாசிக்கும் ஒரு குடும்பம். அந்த ஊர் பண்ணையரின் மகன் நிர்வாகத்திற்கு வரும்போது நாதஸ்வரத்திற்கு பதிலாக கோவில் பூஜையின்போது சிடி போட்டு நாதஸ்வர ஓசை வந்தால் போதும் என்று அக்குடும்பத்திற்கு வேலை போய்விடுகிறது.
இதில் வரும் பிரதான சிறுவன் பாத்திரத்தின் அண்ணன் பனியன் கம்பனி வேலைக்குப் போய்விடும்போது பள்ளியில் படிக்கும் சிறுவன் விடியற்காலையில் எழுந்து கோவிலுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் அப்பாவுடன் செல்லும் தொந்தரவில் திரைக்கதை ஆரம்பிக்கிறது. பையன் குடும்பம் நாத்ஸ்வரம் ஓதி கடவுளை எழுப்புவதால் பையனுக்கு பள்ளியில் மவிசு அதிகம். தங்கள் குறைகளை பையன் துயிலெழும் கடவுளிடம் சொல்லி அருள் பாவிக்க தலைமை ஆசிரியர் முதற்கொண்டு பலர் வேண்டுகிறார்கள்,
பனியன் உற்பத்தி பாதிப்பு, அமெரிக்க இரட்டை கோபுர வீழ்ச்சி , பொருளாதார தடுமாற்றம் திருப்பூர் பனியன் ஏற்றுமதி பாதிப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் அமெரிக்காவில் ஒபாமா வெற்றி பெற்றால் நிலைமை சீராகும். என்று வேண்டிக்கொள்கிறார்கள் . ஓம் லாபம், எழுதுவதைப்போல் பலர்
; ஓம் ஒபாமா ; நாமம் எழுதுகிறார்கள். கிராம வாழ்க்கை, பனியன் உற்பத்தி பாதித்ததால் கிராம மக்களின் மனநிலை, பையனின் பள்ளி அனுபங்கள்..பையனும் ஓம் ஒபாமா எழுதுகிறான். பலன் கிடைத்ததா என்பதை வெள்ளித்திரையில் காண்க.

நானும் வெள்ளித்திரையில் பார்த்துவிட்டு, அல்லது சிடி கிடைத்தால் பார்த்துவிட்டு அடுத்த அங்கலாய்ப்பிற்குப் போகவேண்டும்.

==சுப்ரபாரதிமணியன்
subrabharathi@gmail.com

Friday, August 13, 2010

நகரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களுள் விஜய் மகேந்திரன் - சுப்ரபாரதிமணியன்

நகரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களுள் விஜய் மகேந்திரன்
- சுப்ரபாரதிமணியன்

தற்போதைய வெகுஜன ஊடகங்களில் திரைப்படங்களும் இதழ்களும் இளைஞர்களையே
மையமாகக் கொண்டிருக்கின்றன. திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என்பதால் திரைப்படங்கள் அவர்களை மையமாகக் கொண்ட காதல் அம்சத்தையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் கேளிக்கை சார்ந்த விடயங்களிலும், நுகர்வு கலாச்சாரத்தன்மை கொண்டும் அமைந்திருக்கின்றன. வெகுஜன இதழ்கள் இளைஞர்களை கவர்கிற வகையில் திரைப்பட நடிக, நடிகைகளின் வாழ்க்கை செய்திகளையே மையமாக கொண்டு இயங்குகின்றன. இன்றைய இளைஞர்களின் உள்ளார்ந்த சிக்கல்களையும், பிரச்சனைகளையும் இவைகள் வெகு குறைந்த சதவீதத்திலேயே முன் வைக்கின்றன.

இலக்கிய இதழ்கள் சார்ந்து எழுதும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளில் அவர்களின் பிரத்யேக வாழ்கை சார்ந்த சிக்கல்கள் வெகுவாக வெளிப்படுவதில்லை. அவர்களில் பெரும்பான்மையோர் பெரியவர்களின் உலகில் தென்படும் சிக்கல்களையும், அனுபவங்களையுமே, அவரின் வயது சார்ந்தோரின் பிரச்சினைகளையும் படைப்புலகில் கொண்டு வந்து இயங்குவது விசேஷ தன்மையாக இருக்கிறது. இதுவே அவரின் பிரத்யேக எழுத்தின் இயல்பு அன்று தொனிக்கிற விதமாய் அவரின் ''நகரத்திற்கு வெளியே'' முதல் தொகுப்பில் இருக்கும் கதைகள் அமைந்திருக்கின்றன. பொதுத்தலைப்பு நகரத்திற்கு வெளியே என்றிருந்தாலும், நகரம் சார்ந்து இயங்குகிற இளைஞர்களையே இக்கதைகள் மையமாக கொண்டிருக்கின்றன. கணிசமான இளைஞர்கள் கவிதா உலகில் தங்களை ஆட்படுத்திக் கொண்டு தீவிரமாய் இயங்குவதைப் போல சிறுகதைத் தளத்தில் இயங்கவில்லை. அவ்வாறு இயங்குகிரவர்களில் குறிப்பிடதக்கவராயும் விஜய் மகேந்திரன் இருக்கிறார்.

நகரம் சார்ந்த உதிரி இளைஞர்கள் இவரின் கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். நகர கல்லூரியில் விரிவுரையலர்களாக கொத்தடிமை போல அவர்கள் இயங்குகிறார்கள். குடிகார இளைஞர்களாய் இருக்கிறார்கள். பழைய புத்தகக் கடைகளைத் தேடிப்போய் அலைகிறவர்களும் இருக்கிறார்கள். வேலை இல்லாமல் மன உலைச்சல்களில் அல்லல்படும் இளைஞர்கள் மத்தியில் ஆறுதல் சொல்லவும் மன பிரதிபலிப்பை இளைஞர்கள் இன்னொரு தளத்தில் காணக் கிடைக்கின்றார்கள். கல்லூரி வாழ்க்கை முடிந்து திருமணத்தின் போது சந்தித்து தங்களின் கல்லூரி வாழ்க்கையை எண்ணி ஏங்கிக் கொள்கிறவர்களையும் இருக்கிறார்கள். ''ஏதோ குழாய் வரி கட்டாத வீட்டின் குழாய் இணைப்பைத் துண்டிக்கச் சொல்வது போல'' காதலைத் துண்டித்துக் கொண்டு புது காதல் உலகத்திற்குள் நுழைந்து கொள்ளும் இளைஞர்களும் இருக்கிறார்கள். பாலியல் தேவைகள் இளம் பெண்களை கருக்கலைப்பிற்கு கொண்டு செல்கின்றன. இதன் பொருட்டு அவமானம் அடைகிறார்கள். சாகசச் செயல்களும், அத்து மீறல்களும் சில இளைஞர்களை தாதாக்களாக மாறி அவர்கள் வன்முறையின் கூரிய நகங்களுக்குள் அடைபட்டு சாவையும் சந்தித்து கொள்கிறார்கள். வீட்டிற்கு தெரியாமல் காதலில் ஈடுபட்டு பின் குடும்பச் சூழலை விட்டு ஓடிப்போகிற இளம் பெண்களும் அவலமும் மூத்தகுடி உறுப்பினர்களை முன் வைத்து அலசப்படுகிறது.

நகரம் சார்ந்து இயங்கும் இளைஞர்களின் சிக்கல்களை, வீட்டுச்சூழலிலும், அலுவலக சூழலிலும், அவதானித்து அவற்றை விஜய் மகேந்திரன் கதைகளுக்குள் கொண்டு வருகிறார். உதிரிகளாய் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் உலகம் நுட்பமாய் வெளிப்படுகிறது. இந்த குரூரங்களுக்குள் இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை எவ்வித துவேசமும் இன்றி வெளியே நின்று அவதானித்து பதிவு செய்கிறார். அவர் இளைஞர் என்பதாலேயே துவேஷம் இக்கதைகளில் படியவில்லை.

முதியவர் ஒருவர் தனது சமவயது நண்பருக்கு எழுதும் கடிதங்களை மையமாகக் கொண்டிருக்கும் ''அடைபடும் கற்று'' என்ற கதையில் டிரைவ் இன் உணவு விடுதி இருந்த இடம் ஒரு தொழிற்சாலைக்காக காலி செய்யப்பட்டுவிட்டது பற்றியதாக இருக்கிறது. அதில் இடம் பெரும் ஒரு பகுதியில் ருசியான உணவின் மேன்மை பற்றிச் சொல்லப்படும்போது ''எப்படியோ உமக்கு வேதனையிலும் நாக்கில் நீர் சொட்டுகிறது'' என்ற கேள்வி இருக்கிறது. இளைஞர்களின் இயல்பான வாழ்வை மீறி குரூரங்கள் தென்படும் பகுதிகளில் கூட விஜய் மகேந்திரன் மெல்லிய கேலி பல கேள்விகளை முன் வைக்கிறது.

ஆனால் குரூரமனத்தின் வெளிப்பாடாக இல்லாமல் அக்கறை சார்ந்த கவலையாகவும் இருக்கிறது.

இக்கதைகள் சொல்லப்பட்டிருக்கும் தொனியில் இருக்கும் யதார்த்தமும், எளிமையும் ஏமாற்றக்கூடியது. எளிமையான சொற்களை மீறிய தீர்க்கமான இளைஞர்களின் அனுபவங்கள் கவனத்திற்குரியவை. கதைகளின் தலைப்புகள் கவித்துவமாய் அமைக்கப்பட்டிருப்பது அவற்றின் உள்ளடக்கத்தை இன்னும் தீவிரமானதாக்குகிறது .

நகரத்திற்கு வெளியே
சிறுகதைகள்
விஜய் மகேந்திரன்
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-18.
விலை ரூ.50/-