Showing posts with label தமிழவன் .. Show all posts
Showing posts with label தமிழவன் .. Show all posts

Sunday, December 19, 2010

அடையாளம் புத்தக கண்காட்சிக்கு வெளியிடும் தமிழவனின் நூல்கள்.


சரித்திரத்தில் படிந்த நிழல்கள்
தமிழில் எழுதப்பட்ட முதல் தொடர் உருவக நாவலான இது, ஒன்றைச் சொல்லி வேறு ஒன்றை உணர்த்துகிறது. இதனாலேயே இது தமிழில் ஒரு புதிய புனைகதை மரபைத் தொடங்கி வைக்கிறது. புனைவு நாடான தொகிமொலா, ராணி பாக்கியத்தாய், அரசன் பச்சைராஜன் போன்ற கதாபாத்திரங்கள் நமது நினைவின் அடுக்குகளில் சஞ்சரிக்கின்றன. ஒரு கற்பனை தேசத்தின் கதை மாந்தர்களாக உலவும் இந்தப் பாத்திரங்கள், நமது நிஜவாழ்வில் இரத்தமும் சதையுமாய் உலவும் உண்மை மனிதர்களை நினைவு படுத்துகின்றன என்பது ஒரு நூதன அம்சம். இந்த அம்சமே வாசகனின் நனவிலி மனத்தைத் தட்டி எழுப்பும் சாகசத்தைச் சாத்தியமாக்குகிறது

2. ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்

தமிழின் முதல் மேஜிகல் ரியலிஸ நாவலான இது தன்னுள் பல படிம அடுக்குகளைக் கொண்டுள்ளது. மரபான நாவலில் காணப்படும் கதை சொல்லலுக்கு முற்றிலும் மாறான கதை சொல்லலில் இந்த நாவல் இயங்குகிறது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் கதை வழி செல்லாமல் படிம வழி செல்கிறார்கள் என்பது முக்கியமானது. ஜானின் உடலில் சிலந்திகள் கூடு கட்டுவது; நிழலோடு சீட்டாடுவது; கிழிந்த சட்டையினரைப் புரட்சிக்குத் தயார் செய்வது; அசையாமல் பச்சையம் பிடித்துக் கிடக்கும் தெய்வமூர்த்தி போன்ற படிமங்களால் இந்த நாவல் வாசகனை ஒரு புதிய தளத்துக்கு அழைத்துச் செல்கிறது.

3அவஸ்தை

ஒரு மனிதனின் உள்ளங்கையில் இந்த உலகமே வந்து விழத் தயாராக இருக்கிறது. ஆனால் அதை அவன் நிராகரிக்கிறான். இந்த இருத்தலியல் அபத்தம் குறித்து இந்த நாவல் பேசுகிறது. கிருஷ்ணப்ப கௌடா சொல்வது பலிக்கிறது. இதுபோன்ற பல செயல்களால் ஏற்படும் செல்வாக்கு அவனை முதலமைச்சர் ஆகும் அளவுக்கு உயர்த்துகிறது. ஆனால், அவன் முதலமைச்சர் ஆக விரும்புவதில்லை. ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால் திருமணம் செய்துகொள்வதோ வேறு ஒரு பெண்ணுடன். இறுதியில் இணைவதோ முன்னாள் காதலியுடன். கிருஷ்ணப்ப கௌடா ஏககாலத்தில் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையான அரசியல்வாதியாகவும் இருக்கிறான். நேர்மையற்ற மனிதர்களுடன் சமத்காரமாகப் பழகவும் செய்கிறான். நவீன மனிதனின் பிளவு பட்ட சுயத்தையும் அதன் விளைவான அவலத்தையும் இந்த நாவல் விரித்துரைக்கிறது.

4இரட்டைச் சொற்கள்

இத்தொகுப்பில் உள்ள கதைகள் நூதனத் தன்மை வாய்ந்தவை. கதை என்ற நிகழ்ச்சியை மீறிச் சென்று ஒருவித பன்முகத்தன்மையை எய்துபவை. இவை அர்த்தங்களை ஒத்திப் போடுவதன் மூலம் மொழியைக் கடந்து செல்கின்றன. நிகழ்ச்சிகளைக் கதையாக்குதல், உருவகக் கதை சொல்லல், பழைமையை நினைவு கூரல், புதுமையை வரவேற்றல் போன்ற கதைக் கலையின் அனைத்து சாத்தியங்களையும் இவை கையாள்கின்றன. அர்த்தங்களை வெளியேற்றுதல், ஒரு பாத்திரத்தில் தொடங்கி, இரட்டை பாத்திரமாக மாற்றி பின்பு பழைய பாத்திரத்தை மங்கச் செய்யும் உத்தி என்று பலவிதமான கதையாடல்களை இத்தொகுப்பு முன்வைப்பதன் மூலம் நமக்கு புதிய வெளிச்சத்தை அளிக்கிறது

தொடர்புக்கு,
info@adaiyaalam.net