Wednesday, July 9, 2014

அவன் அவள் மற்றும் மணற்குன்றுஜப்பானிய எழுத்தாளரான கோபோ ஏப் எழுதிய'' மணற்குன்று பெண் ''உலகம் முழுவதும் பிரபலமான செவ்வியல்தன்மையுள்ள நாவல் .தற்போது அதன் தமிழ் பதிப்பை எதிர் வெளியீடு பதிப்பித்துள்ளது .தொடர்ந்து உலகமொழிகளில் உள்ள செவ்வியல் நாவல்களை தரமாக வெளியிட்டு வருகிறது.இப்பதிப்பகம்.அவ்வகையில் '' மணற்குன்று பெண் ''தமிழில் மிக முக்கிய வரவாகும்.இதன் மொழிப்பெயர்ப்பை எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான ஜி.விஜயபத்மா செய்துள்ளார்.

தற்சமயம் தமிழில் வெளிவரும் சில நாவல்களுக்கே தமிழ்-தமிழ் மொழிப்பெயர்ப்பு வேண்டியிருக்கிறது.ஆனால் ஜப்பானிய நாவலான மணற்குன்று பெண்ணை அதன் கவித்துவம் குறையாமல் சரளமான மொழிநடையில் மொழிப்பெயர்த்து உள்ளார்.மிகுந்த உயிரோட்டத்துடன் மொழிநடை உள்ளதால் எவ்வித தங்கு தடையின்றி நாவலை படிக்க முடிகிறது.இத்தகைய மொழியாக்கம் செய்துள்ள விஜயபத்மா பாராட்டிற்கு உரியவர்.

நாவலாசிரியர் கோபோ ஏப் அடிப்படையில் மருத்துவப்பட்டதாரி.நாவல் ,திரைப்படம் ,நாடகம் ,இசை ,புகைப்படம் என்று பன்முகத்தளத்தில் இயங்கியவர். 1962ல் வெளியான இந்நாவல் 'ஹிரோஷி தோரிகாஹா' எனும் ஜப்பானிய திரைப்பட இயக்குனரால் படமாக எடுக்கப்பட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை பெற்றுள்ளது.20 மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் பென்சில்வேனிய பல்கலைகழகத்தின் ஜப்பானிய மொழி ஆராய்ச்சித்துறைக்கான பேராசிரியர் 'ஈடேல் சாண்டர்ஸ்' சால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ஜப்பானின் மிகப்பின்தங்கிய கடற்கரையோரம் மணற்குன்றுகள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு பூச்சியியல் ஆய்வாளன் புதுவிதமான பூச்சிகள் கிடைக்கும் என ஆர்வத்துடன் செல்கிறான்.அந்த கிராமம் அளிக்கும் வியப்பில் களத்தை மறந்து கடைசி பேருந்தை தவறவிடுகிறான் .அந்த கிராமத்திலேயே இரவு தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.அங்கு இருக்கும் முதியவன் ஒருவனின் உதவியால்ஒரு பெரிய மணற்குன்றுக்கு கிழே உள்ள வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.ஒரு இரவைக் கழித்துவிட்டு அந்த கிராமத்தில் இருந்து சென்று விடுவதுதான் ஆய்வாளனின் திட்டம். காலத்தின் விளையாட்டு வேறு மாதிரி இருக்கிறது.அவன் தங்க வைக்கப்படும் மணற்குன்றுக்கு அடியில் உள்ள வீட்டிலேயே நிரந்தரமாக சிறைவைத்து விடுகிறார்கள் அந்த கிராமவாசிகள் .அவனால் அங்கிருந்து வெளியேற முடியாதபடி கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு சூழ்நிலைக்கைதியாக இருக்க நேருகிறது.அன்றாடம் அவன் மணல் தூர் வாரும் பணியை செய்யவேண்டும்.அப்போது தான் அவனுக்கு உணவும் ,தண்ணீரும் வழங்கப்படும்.வேலை செய்யவில்லை எனில் தண்ணிர் கூட தராமல் அவனை கொடுமைப்படுத்துவார்கள்.அவன் தங்கவைக்கப்பட்டு இருக்கும் வீட்டில் ஏற்கனவே முப்பது வயது மதிக்கத்தக்க விதவைப்பெண் ஒருத்தியும் ஏற்கனவே வாழ்ந்துவருகிறாள்.கணவனையும் ,தனது ஒரே மகளையும் ஒரு மணல் புயலில் இழந்தவள் அவள்.அவள் வாழ்கையில் இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிர்கதியான நிலையில் இருக்கிறாள். மணற்குன்றுகளை தூர் வாரும் பணிகளையும் ,அவள் குடியிருக்கும் வீட்டில் அன்றாடம் படியும் மணற்துகள்களையும் அகற்றுவதிலும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வாழ்கிறாள்.

அவனும் அவளும் இனி அந்த சிறிய வீட்டினுள் தான் வாழ்ந்தாக வேண்டும்.அவனுக்கு அவள் செய்யும் அன்பான பணிவிடைகளும் ,அருமையான இயற்கை சமையலும் திருப்தியடையச் செய்கிறது.இருப்பினும் அவன் தன்னை முற்றிலும் சுகந்திரம் இழந்தவனாக உணர்கிறான். பலமுறை தப்பிக்க முயல்கிறான்..ஆனால் அந்த கிராமத்தின் சூழலியல் மாறுபடும்,பரந்து கிடக்கும் மணற்குன்றுகளும் ,உக்கிரமான வெயிலும் அவனது முயற்சிகளை நிலைகுலையச் செய்கிறது.ஒரு வெம்மையான நாளில் அவனுக்கும் அவளுக்கும் உள்ள ஈர்ப்பு இறுகி உடல்ரீதியான பங்களிப்பை அவனுக்கு அளிக்கிறாள்.ஆனாலும் அவன் தொடர்ந்து தப்பிப்பதற்கு காரணத்தைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறான். எளிய சிரிப்புடன் ஒரு நாள் அவனிடம் சொல்கிறாள்.''இங்கிருந்து யாராலும் தப்பிக்க முடியாது,
தப்பித்து யாராலும் போகவும் முடியவில்லை ''என இது அவனை மேலும் அமைதியிழக்கச் செய்கிறது.நாவலின் இறுதியில் அவள் கர்ப்பம் அடைகிறாள்..அவன் அவளுடனே வாழ முடிவு செய்ய ,கிராமவாசிகள் அவளை பிரசவத்திற்கு அருகே உள்ள ஒரு நகரத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.தனிமையில் அவனை நினைத்து அவன் ஏங்குவதோடு நாவல் முடிகிறது.

மணற்குன்றுகள் நிறைந்த கிராமத்தை ,இயற்கையின் சீற்றத்தை ,சுழற்றி அடிக்கும் மணல்துகள்களை ,மாறுபடும் காலநிலை மாற்றத்தை மிகுந்த துல்லியத்துடன் சித்தரிக்கிறார் கோபோ ஏப்.இருத்தல் சார்ந்த பல கேள்விகளையும் ,ஆண் பெண் உறவின் உச்சபட்ச நுட்பங்களையும் ,சூழலுக்கு ஏற்ப மாறும் மனிதமனகளையும் வெகுநுட்பமாக முன்வைக்கிறார் ஏப்.

கோபோ ஏப்பின் மொழி எளிமையோடு அடர்த்தியான மௌனங்களை கொண்டிருக்கிறது .மணல் குறித்து அவர் விவரிக்கும் இடங்கள் அசாத்தியமான கவித்துவ மொழியை கொண்டிருக்கிறது.பெண் எவ்வளவு பொறுமைசாலியாக இருந்தாலும் ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் அவள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறாள்,காலம்காலமாக யாருக்காவது அடிமையாக வாழவேண்டிய நிலை போன்றவற்றை இந்நாவலில் வரும் பல கூர்மையான உரையாடல்கள் தீவிரமாக எடுத்துரைக்கின்றன. ஜப்பானில் வாழ்ந்த இந்த பெண் மட்டுமல்ல ,உலகம் முழுவதும் பின்தங்கிய பகுதிகளில் பெண்கள் இப்படித்தான் ஒரு அடிமைத்தளத்தில் கிடந்தது உழல்கிறார்கள்.
அவ்வகையில் இந்நாவல் பல தீர்க்கமான கேள்விகளை நம்முள் எழுப்புகிறது.இதில் வரும் சம்பவங்கள் நம் மனத்தை கனக்கச் செய்து இருத்தலியல் குறித்து ஆழ்ந்த சிந்தனைகளை தூண்டுகிறது.

''மணற்குன்று பெண் ''தீவிர இலக்கிய வாசகர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய முக்கியமான செவ்வியல் நாவல் ஆகும்.

மணற்குன்று பெண்

பக்:351 | விலை:220/-

வெளியீடு:எதிர் வெளியீடு.

கோபோ ஏப்

தமிழில்: ஜி.விஜயபத்மா
பக்:351 | விலை:220/-

வெளியீடு:எதிர் வெளியீடு.
நன்றி தீராநதி ஜூலை 2014

Tuesday, July 1, 2014

அதிகாரத்திற்கு எதிராக செலுத்தப்படும் அழுத்துவிசைநவீனக்கவிதைகளில் தற்போது பல்வேறு விதமான வடிவச்சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.இத்தகைய தற்கால நவீன கவிதைகளின் நல்ல கூறுகளை உள்வாங்கி அதை தனது கவிதைகளில் புதிதாய் வெளிப்படுத்தும் கவிஞர்களில் முக்கியமானவர் நரன்.வெற்றிகரமான கவிஞர்களின் கவிதைகளைப் ''போலச்செய்தல் ''குவிந்து கிடக்கும்  இலக்கியச் சூழலில் நரனின் புதிய வடிவக்கவிதைகள் வரவேற்கத்தக்கவை.இவரது முதல் தொகுப்பான ''உப்புநீர் முதலை ''தொகுப்பிலும் இத்தகைய புதியவடிவக் கவிதைகளின் மூலம் தனித்த குரலாக தெரிந்தவர் .தற்போது நரனின் ''ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் ''இரண்டாவது தொகுப்பாக வந்திருக்கிறது.
நரனுடைய கவிதைகளின் முக்கிய அம்சமாக கருதுவது உரைநடைக்கு வெகு அருகாமையில் இலகுவான மொழியில் அதேநேரம் கவிதைகளின் கவித்துவ நேர்த்தி குறையாமல் கவிதைகளை எழுதுகிறார்.தொகுப்பின் முதல் கவிதையான ''சிறிய தோட்டா ''கவிதையே அவரது நேர்த்தியை சொல்லிவிடுகிறது.

''கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைகளுக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை அவளுக்கு
உள்நாட்டு போரின் போது
அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென''

வளரும் நாடுகளின் ஆயுதப்போட்டியை ,போரின் போது அப்பாவிக்குழந்தைகள் கொல்லப்படுவதன் வலிமிகு உணர்வை இந்தக்கவிதையில் நுட்பமாக முன்வைக்கிறார்.இவரது கவிதையின் பாடுபொருட்கள் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது ,நிலங்கள் தவறான முறையில் கையகப்படுத்தப் படுவது ,கனிமவளங்கள் திருட்டுப்போவது ,கார்ப்பரேட்களின் ஆதிக்கததிற்க்கு எதிரான குரல் ,கருத்துரிமையை சிதைக்கும் காரணிகள் என பின் காலனிய நாடுகளில் வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் அத்தனை அபத்தங்களையும் பகடி செய்வதாக அமைந்திருக்கிறது.

சூழலியல் சார்ந்து மிகுந்த அக்கறை கொண்டவாராக தெரிகிறார்  நரன்.'' மஞ்சள்நிற கோதுமை''  என்ற கவிதையில்

''இவ்விகார குழந்தையை
நேற்று அணுக்கழிவாகக் கூடத்தான் கண்டேன்.
இனிப்பு பாலைத்தான் இன்று தயிராய் அருந்தினீர் புளிப்பு மனிதரே
போபாலில் ஓராயிரம் மண்டைஓட்டை அடுக்கி வைத்தீரே
விருந்து ஓடும்.தென்கோடிக்கரைக்கு சாக்குப்பையோடு.''


சூழலியல் சார்ந்த பயத்தையும் அவரது அக்கறையை வலுவாக இக்கவிதை வெளிப்படுத்துகிறது.இன்னொரு கவிதையான ''பக்க விளைவுகள் '' கருத்து சுகந்திரம்  அரசு இயந்திரத்தால் நசுக்கப்படுவதை மிகவும் பகடி செய்யும் கவிதையாக இருக்கிறது.
''இந்நிலத்திற்கும் அதன் மேல் வாழும் மக்களுக்கும்
வழங்கவென சில ஆன்டி  பயாடிக் மாத்திரைகள்
பேச்சுரிமைக்கும் எழுத்துரிமைக்கும் கருத்துரிமைக்கும்

எதிராய் வேலை செய்யுமாம்
ஆலோசனையும் மாத்திரையும் ஆரம்ப சுகாதார மையங்களில்
இலவசமாக அரசு வழங்குகிறது ''

என்று ஆரம்பிக்கும் கவிதை ''பக்க விளைவுகள் நிச்சயம் இருக்கத்தான் செய்யுமாம் ''என பகடியுடன் முடிகிறது.பின் நவீனத்துவ கவிதைகளுக்கு இருக்கும் பொதுவான கூரான பகடியை (satire),அதிகாரமையங்களை கேள்விக்குள்ளாக்க பயன்படுத்துகிறார்  நரன் .இவ்வகை பகடியின் உச்சமாக ''2 பாயிண்ட் தீவிரம் ''கவிதை அமைந்திருக்கிறது.இக்கவிதையில் வரும் திரு.எம் அடையாளச்சிக்கலினால் அல்லல்படும் நபராகவே இருக்கிறார்.என்னவாவது செய்து புகழ் பெற வேண்டும் எனநினைக்கும் பொதுப்புத்தியினரின் அடையாளச்சிக்கலை பகடி செய்வதாக கவிதை உள்ளது.

''விற்பனைப் பிரதிநிதி நண்பனொருவன்
தன் கழுத்து டையினாலேயே கழுதை இறுக்கி
சுய கொலை செய்து பிரபலமானதை
செய்திதாள்களில் படித்த நாள் முதல்

தானும் டை அணிய பழகிக் கொண்டிருக்கிறார்.''

என்ற வரிகளில்
பொதுப்புத்தியினரின்''போலச்செய்தல் ''அடையாளச் சிக்கல் தீவிரமாக வெளிப்படுகிறது.ஓவியங்களை விவரிப்பது போலவும்,சில கவிதைகள் தொகுப்பில் உள்ளன.இவ்வகையில் முக்கிய கவிதையாக ''பசியோடிருக்கும் கரையான்கள் ''இருக்கிறது.

''அங்கே பாருங்கள் ,சில கரையான்கள் அவள் உதட்டிலிருந்து
அழுகையை மட்டும்தனியே பிரித்துப் போய்
உண்டு கொண்டிருக்கின்றன ''

இவ்வரிகளில் இருப்பது ஓவிய விவரிப்பு முறை கவித்துவ கட்டமைப்புக்களே ,இவ்வகைகட்டமைப்புகளை தொகுப்பில் பலவேறு இடங்களில் சிறப்பாய் பயன்படுத்தி  இருக்கிறார் நரன். அதே போல ''லீ கூப்பர் ஷூ ''என்னும் படிமத்தை கார்ப்பரேட்களின் ஆதிக்கததிற்க்கு எதிரான குரலாக பயன்படுத்தி இருக்கிறார் தொகுப்பில் சில இடங்களில்.உலகமய மாதலின் விளைவாக நடைபெறும் கார்ப்பரேட்  நிறுவனங்களின் தொழிலாளர்களை கிட்டத்தட்ட அடிமை முறையில் வேலை வாங்கி விட்டு அதை நல்லதொரு வாழ்க்கை வாழ்வதாக அரசு நம்பிக்கை தருவதையே ''இங்கே ''என்னும் கவிதை கலைத்துப் போட்டு மறு பரிசிலனை செய்ய சொல்கிறது.ஆற்று மணலும் மலைகளும் டெண்டர் விடப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு  வருவதற்கு எதிரான அரசியலை ''காதை மூடிக் கொள் '' கவிதை முன் வைக்கிறது.

இம்மலையை டெண்டர் எடுத்த குவாரிக்காரன் .
ஜெலட்டின் குச்சி ;கரி மருந்து ; அழுத்த்துவிசை
காதை மூடிக்கொள் .
பலத்த ஓசை பொடி பொடிந்து …………
மூனறாம் நூற்றாண்டு சமண படுக்கையது .
புடைப்பு சிற்பத்தின் கையில் கூம்பு தாமரையை
சுமந்து நிற்க்கும் ரூப சுந்தரி
கை தனியாய் ;மலர் தனியாய் ;மார்பு தனியாய் - யெல்லாம்
இந்நூற்றாண்டின் ஜெலட்டின் குண்டு வெடித்து .
குவாரி லாரிகளில் எற்றப்பட்டு
அவள் பிருஷ்டமும் ,மார்பும் சமதாளமாக்கப்பட்டு வழவழப்பாக்கப்படும் .
இந்நகரெங்கிலும் வீற்றிருக்கும் அரசு பூங்காக்களின்
கற்பெஞ்சுகளில்
ஜோடிஜோடியாய் வந்தமர்கின்றன. புடைத்த பிருஷ்டங்கள்.

தனித்துவமான மொழி கட்டமைப்பு,அபூர்வமான பகடிகள் ,புதிய பாடுப் பொருட்கள்  ,என நரனின் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுப்பு சிறப்பாக வந்துள்ளது.கொம்பு பதிப்பகம்,புத்தகத்தை அழகான முறையில் பொருத்தமான ஓவியங்களுடன் கொண்டுவந்து  இருக்கிறது.கவிதைகளின் உள்ளடக்கத்தை இவ் ஓவியங்கள் இன்னும் ஒருபடி தீவிரப்படுத்துகின்றன.

நன்றி தீராநதி ஜூலை 2014

வெளியிடு

கொம்பு பதிப்பகம்,
எண் 11.பப்ளிக் ஆபிஸ் ரோடு ,
தேவி திரையரங்கு அருகில்,நாகப்பட்டினம் 611001
போன் 9952326742
விலை ரூபாய் 60
Friday, June 6, 2014

இயற்கையை கண்டடையும் கவிதைகள் – நிலாரசிகனின் “கடலில் வசிக்கும் பறவை”

பெருகிவரும் கவிதைத் தொகுப்புகளில் எது நல்ல தொகுப்பு எனத் தேடிப்பிடிப்பதற்குள் பெரும் ஆயாசம் ஏற்பட்டுவிடுகிறது. தமிழ்க்கவிதைகள் ஆயிரக்கணக்கானவை ஆண்டுதோறும் சிற்றிதழ்கள் தவிர வார,மாத இதழ்களிலும் வெளியாகின்றன.இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 30 கவிதைத்தொகுப்புகள் தீவிர இலக்கியதளத்தில் மட்டும் வெளிவந்திருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில்தான் எனக்கு வாசிக்க கிடைத்த தொகுப்புதான் நிலாரசிகனின் “கடலில் வசிக்கும் பறவை”. இவர் ஏற்கனவே “வெயில் தின்ற மழை”,”மீன்கள் துள்ளும் நிசி” என இரண்டு தொகுப்புகளை வெளியிட்டு கவனம் பெற்றவர்.

இவரது முந்தைய தொகுப்பான “மீன்கள் துள்ளும் நிசி”யில் பல கவிதைகளை அடர்த்தியான படிம மொழியில் எழுதியிருந்தார். அதில் ஜூலி என்னும் சிறுமியை உருவகமாக கொண்டு எழுதப்பட்ட கவிதைகள் பெரும்பான்மையான கவனத்திற்குள்ளானது.
“கடலில் வசிக்கும் பறவை” கவிதைத் தொகுப்பு முந்தையை தொகுப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிய மொழியில் குறைந்த வரிகளில் மிக அடர்த்தியான உருவகங்களுடன் பன்முக அர்த்தங்களை பேசுவதாக இருக்கிறது.

இத்தொகுப்பு முழுவதும் இயற்கை பொருட்களான நீர்நிலைகள்,பறவைகள்,மறைந்து போன விலங்குகள் என இயற்கை புறகாரணிகளால் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதை எவ்வித பிரச்சாரமுமின்றி படிமமொழியில் சிறந்த உருவகங்களைப் பயன்படுத்தி இத்தொகுப்பிலுள்ள கவிதைகளை எழுதியிருக்கிறார் நிலாரசிகன். “ஜென்” மனநிலையும் இவர் கவிதைகளில் தென்படுவதாக தோன்றினாலும் அதுவும் இவரது புதுமையான உருவகத்தால் தனக்கென்று ஒரு தனி இயல்பை உருவாக்கி தனித்து நிற்கிறது. இதை இவரது தனிச்சிறப்பென்று கூறுவேன்.

“கிணற்றுக்குள் மறைந்துகொள்வது
எவ்வளவு எளிதானது.
அதற்கு முன் செய்யவேண்டியது
ஒன்றே ஒன்றுதான்.
பழுத்த இலையாக மாறும்
வித்தை தெரிந்திருக்கவேண்டும்.“

ஜென் மனநிலையை கட்டாயமாக கவிதைக்குள் புகுத்துவதில்லை. கோட்பாடாக விளக்குவதில்லை.வாழ்ந்து காட்டுவது அதைக் கடைபிடிப்பது எனும் முடிவில் இருப்பவர்களால்தான் இத்தகைய கவிதைகளை எழுத முடியும். அதனால்தான் நிலாரசிகனால்,

“கடலுக்குள் கூடுகட்டியிருக்கும்
பறவையை நானறிவேன்.
அதன் ஈரச்சிறகின் மேலமர்ந்து
இச்சிறு உலகை
காணும்பொழுதெல்லாம்.“

என மிகுபுனைவில் கரையும் மனம் வாய்த்திருக்கிறது. கவிதையின் மறை பொருளாக அவர் அழிந்து கொண்டிருக்கும் ஈழத்தைப் பற்றிய இரண்டு கவிதைகளில் மிக அழகாய் எழுதிச்செல்கிறார்.

“மிக அழகான தீவு.
அதன் கரைகளை தின்று தீர்க்கும்
மீன்களிடையே நான்.
எவ்வளவு நீந்தியும் மாறவில்லை
கடல் நீலமும்
வான் நீலமும்.

இவ்வாறு அஃறிணைப் பொருட்கள் மூலம் நடப்பு காலத்தில் அழியும் இயற்கையை அற்புதமாக காட்சிப்படுத்துகிறார் நிலாரசிகன். அழிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ்மக்கள் பற்றி இன்னொரு கவிதையும் சிறப்பான தொனியில் எழுதப்பட்டிருக்கிறது.
அதன் சிலவரிகள்,

“மிக அருகிலிருக்கிறது
தீவு.
அங்கே குறைந்துகொண்டே இருக்கிறார்கள்
குழந்தைகள்”

என ஒரு கவிஞனின் ஏக்கம் அழிதல் குறித்து மிக நுட்பமாய் வந்திருக்கிறது. கடினமான சொற்களை பயன்படுத்தாமல் முடிந்தவரை இலகுவான மொழியில் அனைத்து கவிதைகளையும் எழுதியிருப்பது தொகுப்பின் வாசிப்பு சுவாரஸ்யத்தைக் கூட்டி நல்லதொரு மனநிலையைத் தருகிறது. சிறு சொற்கள் மூலம் பன்முக அர்த்தம் கொடுக்கும் ஒரு பரப்பை உருவாக்கும் வித்தை எல்லோர்க்கும் அமைவதல்ல. கவிதையின் பாடுபொருட்கள் இயற்கையை கண்டடைவதிலும், இயற்கை அழிவதை மீள் உருவாக்கம் செய்து கவிதைக்குள் கொண்டு வருவதிலும் பெரிதும் வெற்றி அடைந்திருக்கிறது நிலாரசிகனின் “கடலில் வசிக்கும் பறவை”.
நவீன வாழ்க்கையின் மூலம் நாம் இழந்துபோன சுத்தமான காற்று, நீர், அதனால் மறையும் சிறு உயிரினங்கள் என்றுமே கவிஞனை அலைக்கழிப்பவை.

“கழிவுகள் தின்று மிதக்கின்றன
மீன் பிள்ளைகள்.
கடைசி மீன்குஞ்சு கழிவை நோக்கி
நீந்துகிறது வேகமாய்”

என்று பதைப்புடன் ஒரு கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
சூழலியல் மாசுபடுவதற்கு மறைமுக காரணிகளாக இருப்பவர்களை குற்றவுணர்வு அடையவைக்கும் கவிதையாகவும் இது இருக்கிறது. கூடங்குளம் அணுமின்நிலைய தடுப்புப் போராட்டம், திருப்பூர் சாயப்பட்டறைகளின் கழிவுகள் நதி சென்று சேருவதால் நீராதாரம் பாதிக்கப்படுவது தொடர்பான நிகழ்வுகளை நினைவுப்படுத்தி சூழலியலுக்கு பலமான ஓர் ஆதரவுக் குரலை இவரின் பல கவிதைகள் அடங்கிய தொனியில் கொடுக்கின்றன.
இரண்டாயிரத்தை ஒட்டிய ஆண்டுகளில் சென்னை போன்ற பெருநகரங்களிலேயே சிட்டுக்குருவி,தவிட்டுக்குருவி,தூக்கணாங் குருவி போன்றவற்றைக் காண முடியும். இப்போது சென்னையை தாண்டியுள்ள சிறுகிராமங்களில் கூட இக்குருவிகளை பார்ப்பது அரிதாகிவிட்டது. அலைபேசி கதிர்வீச்சின் பெருக்கம் குருவி இனத்தையே அரிய இனமாக்கிவிட்டது.இத்தகைய அரிய பறவையினங்கள் அழிவதை மிகச்சிறிய கவிதையின் மூலம் அற்புதமாகச் சொல்கிறார் நிலாரசிகன்.

“கடலருகே விரிந்திருக்கும்
பாறைகளில் வந்து விழுகிறது
கடைசிப் பறவை.
மனிதர்கள் மனிதர்களென்று
முனகியபடி.
இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்களின் அழிதலுக்கு மனிதனே காரணம் என்று பறவை முனகுவதாக இக்கவிதை இருக்கிறது.
இத்தகைய சிறப்புகள் நிறைந்த இக்கவிதைத் தொகுப்பு இலக்கிய வாசகர்களின் மத்தியில் நல்ல பெயரையே நிலாரசிகனுக்கு கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இன்னும் தரமான கவிதைகளை,கவிதையின் உச்ச சாத்தியங்களை இனிவரும் தொகுப்புகளில் நிலாரசிகனிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
-
 கடலில் வசிக்கும் பறவை. கவிதைகள். நிலாரசிகன். புது எழுத்து வெளியீடு. 2/205, அண்ணா நகர், காவேரிப்பட்டினம் – 635 112. விலை.ரூ.60)
நன்றி மலைகள் .காம்

Monday, May 5, 2014

முகநூல் குறிப்புகளில் விரியும் பன்முகப்பார்வை

சமூகத்தளங்கள் ஆன  பேஸ்புக் ,ட்விட்டர்  போன்றவை மக்களிடையே பெரும்பாலும் இளைஞர்கள் இடையே பிரபலமான பின்,தனது கருத்துக்களை ,எதிர்ப்புகளை பதிவு செய்ய இத்தகைய இணையதளங்களை பயன்படுத்துகிறார்கள் .தமிழ் இலக்கிய சூழலில் இலக்கிய ஆளுமைகள் .திரையுலக ஆளுமைகள் ,பத்திரிகையாளர்கள்  பலரும் தாங்கள் படித்த புத்தகங்கள் ,பார்த்த உலக  சினிமாக்கள் ,சமகால அரசியல் பற்றி தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தங்கள் முகநூல் பக்கங்களில் எழுதுகின்றனர்.

இப்படி எழுதும் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்கள் உள்ளவர்கள் அதையும் எழுதி விவாதிப்பதற்கான சூழலும் முகநூளில் இருக்கிறது.துரதிர்ஷ்டவசமாக சிலசமயம் இந்த விவாதங்கள் அத்துமீறி தனிப்பட்ட சண்டையாக மாறி விடும் அபாயமும்   இருக்கிறது.  இதை எல்லாம் மீறி தொடர்ந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் ,கட்டுரைகள் ,பத்திகள்  தீராத படைப்புச்சக்தியுடன் இயங்கும் பல ஆளுமைகள் முகநூளில் இயங்கிவருகிறார்கள் .

  இவ்வாறு தொடர்ந்து படைப்புத்திறனுடன் இயங்கிவரும் ஆளுமைகளில் ஒருவர்தான் ப்ரியாதம்பி .இவரது சில பத்திகளை முகநூலில் படித்தபோது யாரும் எழுதத்துணியாத சில விஷயங்களைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார் .நவீனப்பள்ளிகள் குழந்தைகளை பொதுபுத்தியில் வளர்த்தெடுக்க முயல்கின்றன என்பதில் தொடங்கி பெற்றோர்களும் குழந்தைகளுடன் சென்று பாடம் படிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் எனவும் அந்த பத்தியை எழுதியிருந்தார் .மாதவிடாய் பற்றிய ஆவணப்படம் ஒன்றின் பதிவில் பெண்களுக்கு  ஏற்படும்  சாதாரண இயற்கைப்பிரச்சினையை கூட வெளியே சொல்ல இச்சமூகம் தடைவிதித்திருக்கிறது .கடையில் சென்று நாப்கின் வாங்கக்கூட அவள் நாலைந்துமுறை யோசித்து சுற்றும் முற்றும் பார்க்கவேண்டி இருக்கிறது.அந்த நேரத்தில் பெண்கள் படும் அவஸ்தைகளை விவரித்து எழுதியிருந்தார் .அதற்கு எதிர்வினையில் சில நண்பர்கள்  
  இதைப்போல அவர் முகநூலில் எழுதும் குறிப்புகளை தொகுத்து புத்தகமாக கொண்டுவரலாமே என கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.அதற்கு ப்ரியாதம்பி ''இவை புத்தகமாக கொண்டுவரும் அளவுக்கு தரமுள்ளவையா த,தெரியவில்லை?எனக்  கேள்வி எழுப்பியிருந்தார்.இறுதியாக கயல்கவின் புக்ஸ் முகநூலில் ப்ரியாதம்பி எழுதியுள்ள முக்கியமான பத்திகளை தொகுத்து ''மின்னுவும் அம்மாவும் ''என்ற புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார்கள் .இது பாராட்டிற்குரிய முயற்சி.

ப்ரியா தான் சந்தித்த ,கடந்து வந்த மனிதர்கள்,அன்றாடம் பெண்ணாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ,அவருக்கும் மகள் மின்னுவுக்கும் நடக்கும் உரையாடல்கள்,படித்த நல்ல புத்தகங்கள் ,பார்த்த நல்ல படங்கள்,சந்திக்கும் அபூர்வ மனிதர்கள் மீதான  நேசம் எல்லாவற்றையும் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி மெல்லிய அங்கதத்துடன் பதிவு செய்கிறார் .லேசான ரொமண்டிசம் இவர் எழுத்துக்களில் தென்பட்டாலும் அது இந்தப் பத்திகளை அழகாகத்தான் காட்டுகிறது.

சிறந்த மலையாள படங்களின் டிவிடிகள் வாங்க ஒருமுறை கடைக்குச் செல்கிறார்.மலையாளப்  படம் என்றதும் கடைக்காரர் கேலியாகச் சிரிக்கிறார்.பெண்கள் டிவிடிகள் சுகந்திரமாக வங்கக் கூடிய நிலைமை கூடவா இங்கில்லை என்கிறார்.மேலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து வாங்கி பில் போடும் போது ,''அவள் பறையும்  கதா ''என்ற படம் கண்ணுக்கு படுகிறது.அதையும் வாங்கிவிடுகிறார்..கடைக்காரர் ''இதுவும் வேணுமா மேடம் ''என்கிறார்.இருக்கட்டும் ஏதோ பெண்ணியப்படம் என வாங்கி வந்துவிடுகிறார்.வீட்டிற்கு   வந்து குடும்பத்துடன் பார்க்க அந்த படத்தை போடும் போது தான்  தெரிகிறது அது ''அந்த'' மாதிரியான படம் என்கிற விஷயம்.உடனே அதை நிறுத்திவிட்டு பதிவில் எழுதுகிறார்.,இந்த மாதிரியான மட்டரக படங்களில் என்ன கிலேசம் கிடைக்கிறது என்று பார்க்கிறார்களோ ''பாவம்  ஆண்கள் !!!அவ்வளவு காய்ந்துபோயா கிடக்கிறார்கள் என அங்கதத்துடன் வெளிப்படையாக சில விஷயங்களை முன்வைக்கும் எழுத்துக்களாக இவரது பத்தி எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன .

தான் சந்தித்த பெரிய பேருந்து விபத்து குறித்த பத்தி ,மிகவும் முக்கியமானதாக புத்தகத்தில் இருக்கிறது.தனியார் பேருந்து ஓட்டுனரின் தவறால் வண்டி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகிறது.விபத்து காட்சிகளை நேரடியாக நாமே பார்ப்பது மாதிரி விவரித்து இருக்கிறார்.

ப்ரியாவின் பக்கத்து இருக்கைப்பெண் இறந்து  போகிறாள் .திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஒரு இளைஞனின் கை துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.ப்ரியாவுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் உறைந்துவிடுகிறது. நிறைய உயிரிழப்புகள் அந்த விபத்தில் ஏற்படுகிறது.விபத்தில்  இருந்து 
மீண்டு  எழவே  இரண்டு மாதம் பிடிக்கிறது.கை துண்டிக்கப்பட்ட இளைஞனின் கையை மீண்டும் பொருத்த முடிவதில்லை. ப்ரியா தலையில் 
ஏற்பட்ட அடியால் நுகர்வுத்திறனை இழக்கிறார் .அந்த  விபத்து ஒவ்வொருவரின் வாழ்க்கை யிலும் மறையாத தழும்புகளை ஏற்படுத்தி விட்டுப் போய் விடுகிறது.கையை இழந்த இளைஞனும் ,ப்ரியாவும் இணைந்து  நிறுவனத்தின் மீது வழக்குகளை தொடுக்கிறார்கள்.ஆனாலும் அவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை.பேருந்து நிறுவனத்தார் பணத்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடுகிறார்கள்.விபத்தால் கை போன இளைஞனின் குடும்பத்தாரின் நட்பு கிடைத்தது மட்டுமே விபத்தால் ஏற்பட்ட ஒரே நற்பலன் என்று எழுதியிருக்கிறார்.

சகமனிதர்கள் மீதான நேசம் தொனிக்கும் பத்திகள் இப்புத்தகத்தில் நிறைய இடங்களில் இருக்கிறது.முதல் காதல் அனுபவம் குறித்து எழுதியிருக்கும் ஒரு பத்தி மிகுந்த கவித்துவம் நிரம்பியதாக அமைந்திருக்கிறது.அவருக்கும் மகள் மின்னுவுக்கும் நடக்கும் உரையாடல்கள் ,அம்மா மகள் பேசிக்கொள்வது மாதிரி இல்லாமல் இரு நண்பர்களுக்கிடையே நடப்பது மாதிரி உள்ளது.இது பெற்றோர்கள் இடையே ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்த கூடிய பதிவுகளாக இருக்கிறது.

பெண்ணியம் பற்றி இவர் கூறியிருக்கும் கருத்துக்களும் சலசலப்பை உண்டுபண்ணக்கூடியதாக இருக்கிறது.உதரணமாக''பெண்களை விலக்கிய கூட்டங்களும் ,இயக்கங்களும் எவ்வளவு அபத்தமானதோ ,அதே அளவு அபத்தமானது ஆண்களை விலக்கி  வைத்து பெண்ணியம் பேசுவதும்''!என்று ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்.புத்தகம் முழுவதும்பெரிதும் சிறிதுமான பத்திகள் ஆகவும் ,குறிப்புகளாகவும் இருப்பதால் தடையின்றி வாசிக்க கூடியதாக  இருக்கிறது .மேலும் ப்ரியாவின் பத்திரிக்கையாளர்களுக்கு ரிய   'ரிப்போர்டிங்''நடை வாசிப்பு சுவாரஸ்யத்தை அதிகமாக்குகிறது.பின்னால்  புத்தகமாக வரப்போகிறது எனஅறியாமல் தான் விரும்பியதையெல்லாம் எழுதியிருப்பதால் சிலமுக்கிய விஷயங்களை  விரிவாக எழுதாமல் குறிப்புகளாக நிறுத்தியிருப்பது மட்டும் இப்புத்தகத்தில் குறையாகத் தெரிகிறது.மற்றபடி ப்ரியாவின் முகநூல் குறிப்புகள்  அடங்கிய இப்புத்தகம் பெண்கள் மட்டுமல்ல அனைவரும் வாசிக்க  வேண்டிய பன்முகப்பிரதியே ஆகும்.

மின்னுவும் அம்மாவும் -ப்ரியாதம்பி 
வெளியீடு கயல்கவின் புக்ஸ் 
விலை 120ரூ 


தீராநதி ஏப்ரல் 2014 இதழில் வந்த கட்டுரை 

Sunday, May 4, 2014

கடவுளும் மனநோயாளியும் ஒரே அடுக்ககத்தில் !

இந்நகரத்தில் மனநோயாளி கிளம்புறான் 
வெளுத்த உடைகள் துடைத்த சப்பாத்துகள் 
நேர்த்தியான கழுத்துப்பட்டை அணிந்து 
நகரத்தின் சாலைகளில் இறங்குகிறான் 

சிக்னலின் சிவப்பு தான்  
முதலாக காட்டிக்கொடுத்து நிறுத்துகிறது 
மனநோய் அவனுக்குள் கொப்பளிக்கிறது 
எரியும் பச்சை அவனை சிறிதே 
ஆசுவாசப்படுத்துகிறது !

மஞ்சள் வெயில் பீறிட்டு கிளம்பும் 
மதிய நேரத்தில் தன் கீழ்  பணியாளனின் 
முகத்தில் கோப்பால் எறிகிறான் 
கீழ் பணியாளன் என்னும் இன்னொரு 
மன நோயாளி கைகட்டி சிரித்த படியே 
கோப்புகளில் இருந்து சிதறிய காகிதங்களை 
கோப்புகளுக்கே திருப்புகிறான் 

மாலைநேரக் காற்று சகப்பெண் 
பணியாளியிடம் சமிஞ்சை 
செய்ய தூண்டுகிறது 
புறக்கணிக்கும் அவளிடம் இருந்து 
அந்த சனிக்கிழமை 
விடைபெறுகிறது 

மனநோயாளிக் கணவனின் 
தலையை தனது கைப்பள்ளத்தில் 
இருக்கும் எண்ணையை விட்டு 
உச்சிக்குளிர அரக்கத்  தேய்த்து 
இளவெந்நீர் குளியாட்டி ,
தலைநீவி மனநோயை 
மெல்ல உறங்கச் செய்கிறாள் 
அவனின் இல்லாள் 

அதே அடுக்ககத்தின் வாயிலில் 
வாயில் காப்போனிடம் 
கடவுள் உரையாடிக்கொண்டு இருக்கிறார் 
கையில் ஒரு பால் பாக்கெட் இருக்கிறது.

குழந்தை அழுகிறது என பால் 
வாங்கி வர இந்நகரத்தின் 
சாலைக்கு வந்தாராம் 
உயர்ந்து நிற்கும் இவ்வடுக்கு 
மாடி கட்டிடத்தில் தான் தனது வீடும் 
இருக்கிறது என 
காப்போனிடம் கூறுகிறார் 

மேலும் இவ்வடுக்கு மாடி 
கட்டப்படுவதற்கு முன்பே 
கிளம்பிச் சென்றுவிட்டாராம் 
பால் வாங்க ,
கடவுளின் கையில் 
பதினோரு மாதங்களுக்கு 
முன்தேதியிட்ட பால் பாக்கெட் !!!

(தீராநதி மே 2014 இதழில் வெளிவந்து இருக்கும்  கவிதை )

Thursday, March 20, 2014

நரனின் ''ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் ''

நரனின் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுப்பு சமீபத்தில் நான் வாசித்த தொகுப்புகளில் மிகவும் வித்தியாசமாக உள்ளது .இவரது கவிதைகள் கார்ப்பரேட்களின் ஆதிக்கததிற்க்கு எதிரான குரலை மிக வன்மையாக முன் வைக்கிறது . கார்ப்பரேட்களின் சூழ்ச்சியால் கையககப்படுத்தப்படும் நிலங்கள் ,கனிமங்கள், இயற்க்கை வளங்கள் இவற்றுக்கான எதிர் வினையை ஒவ்வொரு கவிதையும் எவ்வித பிரச்சார நெடியுமின்றி முன் நிறுத்துகின்றன .இவரது கவிதைகளுக்கான மொழி எவ்வித சிக்கலும்,சிடுக்குகளும் இல்லாமல் எளிய ,நேர்த்தியான ,உரைநடையின் மிக அருகில் பயணம் செய்வது இந்த தொகுப்பின் வெற்றி. இத்தகைய நல்ல தொகுப்பை நல்ல வடிவமைப்பில் செறிவான ஓவியங்களோடு கொம்பு வெளியீடாக கொண்டு வந்த நண்பர் ,வெயில் பாராட்டிற்கு உரியவர் .இந்ததொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு கவிதைகள் ....

1
கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை
அவளுக்கு
உள்நாட்டு போரின் போது
அரசின் ஆயுத தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென

2

இம்மலையை டெண்டர் எடுத்த குவாரிக்காரன் .
ஜெலட்டின் குச்சி ;கரி மருந்து ; அழுத்த்துவிசை
காதை மூடிக்கொள் .
பலத்த ஓசை பொடி பொடிந்து …………
மூனறாம் நூற்றாண்டு சமண படுக்கையது .
புடைப்பு சிற்பத்தின் கையில் கூம்பு தாமரையை
சுமந்து நிற்க்கும் ரூப சுந்தரி
கை தனியாய் ;மலர் தனியாய் ;மார்பு தனியாய் - யெல்லாம்
இந்நூற்றாண்டின் ஜெலட்டின் குண்டு வெடித்து .
குவாரி லாரிகளில் எற்றப்பட்டு
அவள் பிருஷ்டமும் ,மார்பும் சமதாளமாக்கப்பட்டு வழவழப்பாக்கப்படும் .
இந்நகரெங்கிலும் வீற்றிருக்கும் அரசு பூங்காக்களின்
கற்பெஞ்சுகளில்
ஜோடிஜோடியாய் வந்தமர்கின்றன. புடைத்த பிருஷ்டங்கள்.

Sunday, March 16, 2014

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014

நான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2013 ஆம் ஆண்டு ( ஜனவரி 2013 முதல் திசம்பர் 2013 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம்.
*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை
ரூ 10,000 வழங்கப்படும்.
*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.
*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 30-04-2014
*அனுப்ப வேண்டிய முகவரி


தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051


Thursday, March 13, 2014

அனிதாவின் ''கனவு கலையாத கடற்கன்னி''


அனிதாவின் ''கனவு கலையாத கடற்கன்னி'' கவிதை தொகுப்பு மீள்வாசிப்பு செய்தேன் இன்று.அனிதாவின் கவிதைகளில் முக்கிய விஷயமாக நான் கருதுவது நுட்பமான வாழ்வின் தருணங்களை எளிய அழகியலுடன் சொல்லி செல்கிறார்.ஒவ்வொரு கவிதைக்குள்ளும் குட்டி கதை ஒன்று ஒளிந்து கிடக்கிறது..எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் இரண்டு ......

தங்கத்தோடு

பத்து வருடம் முன்பிருந்த ஊருக்கு மீண்டும் சென்றேன்.
வருடக்கணக்கில் பயணித்துப் பழகிய
புறந‌கர் ரயிலில் அமர்ந்திருந்தேன்
இங்கே மஞ்சள் சுண்ணாம்படித்த கட்டிடம் இருக்குமென்றும்
இந்த ஆற்றைக் கடக்கையில் துர்வாடை வீசுமென்றும்
இந்த இடத்தில் தண்டவாளம் வளையுமென்றும்
இங்கே சிலுவைகள் நிறைந்த மயானம் இருக்குமென்றும்
நினைத்தபடி சென்று கொண்டிருந்தேன்.
அவ்வாறே எல்லாம் இருந்தது.

தங்கத் தோடு தொலைந்துவிட‌
வீடு போகப் பயந்து இருள் படரும் வரை
பித்துப்பிடித்தாற்போல முன்பு தேடிய அதே இடத்தில்
மீண்டும் ஒருமுறை தேடினேன்.
தொலைத்த இடத்திலேயே கிடந்தது தோடு.

அன்பின் விலைகள்

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்.

சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்துத் தயங்கி
அழாதீங்க என்றான்.

என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்


Saturday, March 8, 2014

Tea Time

Tea Time
*********

Son adds
cubes of sugar
to the morning tea

A hot one, avec newspaper
Rusks for the sides
and a tv channel
for Dad

A flowery
little cup
for daughter

Mommy Sips off
this life
however it may be...


Tamil poem by Vijay mahindran
 English translation by Anitha jayakumar

Friday, March 7, 2014

தேநீர் வேளை

தேநீர் வேளை

காலையில் தேநீர் அருந்துகையில்
சீனி குறைவாய் இருக்கிறதென
இனிப்பை அள்ளிப் போட்டு
கரண்டியால் கலக்கிகொள்கிறான்
மகன்.

சூடாய் இருக்க வேண்டும்
செய்தித்தாள் வேண்டும்
கொஞ்சம் வர்க்கி ரொட்டிகளும்
தொலைக்காட்சியும்
அப்பாவுக்கு.

பூ வேலைப்பாடுடன் கூடிய
தேநீர்க் குவளை
மகளுக்கு.

எப்படி இருந்தாலும்
அருந்திக்கொள்வாள் அம்மா
இந்த வாழ்க்கையை!


விஜய் மகேந்திரன் (ஆனந்த விகடன் - 23/03/11 இதழில்)


நன்றி: ஆனந்த விகடன்

நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்

எழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
‘காவ்யா,’ பதிப்பக உரிமையாளர் சண்முகசுந்தரம் அறிமுக உரை ஆற்றினார். ‘என் பெயர்,’ நாவல் ஒரு மையம் உடைந்த எழுத்தின் வகையில் அமைந்த நாவல் என்று அவர் கூறினார். இது போன்ற மையம் உடைந்த எழுத்துக்கள் நமது சங்க காலப் பாடல்களிலும் உள்ளன என்றார் அவர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், நிஜந்தனின் ஆறு நாவல்களை ஆய்வு செய்து எழுதிய கட்டுரையையும் அவர் வாசித்தார். அதில், ‘நகரம் சார்ந்த மனிதர்களின் வாழ்வை நிஜந்தன் பின்நவீனத்துவ பாணியில் பதிவு செய்திருக்கிறார்,’ என்று சுப்ரபாரதிமணியன் கூறியிருக்கிறார்.
கவிஞர் அமிர்தம் சூர்யா, ‘என் பெயர்,’ நாவலைப் பற்றிய மதிப்புரை வழங்கினார். அதில் அவர், ‘நிஜந்தன் எனும் கதைசொல்லியை nijanthan book release 2எதிர்கொள்ளும் நிஜந்தன் எனும் இளைஞனின் தற்கொலைக்குப் பின்னால் பார்வையற்றவன் ஒருவனை மறுமணம் புரியும் அவனுடைய மனைவி, கருவில் இருக்கும் குழந்தைக்கு நிஜந்தன் என்று பெயரிட நினைக்கும்போது அது கருவில் கலையும் அவலத்தைக் காட்டுகிறது இந்த நாவல். செயற்கைக் கருத்தரிப்பு மூலம் பிறந்த குழந்தைக்கு, இறந்துபோன மகனின் நினைவாக நிஜந்தன் என்று பெயர் வைக்கும் அவனுடைய பெற்றோரும் இறந்துபோய்விட, காணாமல் போகிறான் குழந்தை நிஜந்தன். அவன் கிடைப்பானா, கிடைப்பது என்பது என்ன என்பது போல் கதை விரிகிறது. ‘என் பெயர்,’ எனும் நாவல், பல தளங்களை முன் வைக்கிறது. ஒரே பெயர் கொண்ட மனிதர்களின் உளவியலை அலசி ஆராய்கிறது. தற்கொலை உணர்வின் அடித்தளத்தை இந்தக் கதை ஆய்கிறது. ஒரே கதையில் பல கதைகள் இருக்கும் உத்தி புதியதாக இருக்கிறது. இந்தக் கதையின் கட்டமைப்பு புதியதாக இருக்கிறது. உடல் அரசியல் இந்தக் கதையில் முன் வைக்கப்படுகிறது. கதையின் இறுதியில், நிஜந்தன்கள் சாவதில்லை என்று கதைசொல்லி கூறுவதன் மூலம் என்ன சொல்லப்படுகிறது? உயிர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்படுகிறதா? ஆண்கள் தீர்வதில்லை, ஆணாதிக்கம் தீர்வதில்லை, உடல் மேலாண்மை முடிவதில்லை என்று சொல்லப்படுகிறதா? இந்தக் கதை, எனக்கு கவிதை எழுதும் உற்சாகத்தை அளித்தது,’ என்று பல கருத்துக்களை முன்வைத்தார்.

மதிப்புரை வழங்கிய, எழுத்தாளர் விஜய மகேந்திரன், ‘சுயசார்பு கொண்ட பெண்கள், கணவனால் அழுத்தப்படும்போது அடங்கிப்போவார்களா, எதிர்த்து நிற்பார்களா என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது. பிரம்மஸ்ரீ சுரேஷ் என்ற பாத்திரம் பின்நவீனத்துவ நாவலின் படிமங்களைக் காட்டுகிறது. இந்த நாவலில் புறவய விவரணைகள் இடம்பெறவில்லை. பல இடங்களில் ஊடகங்களில் செய்தி சொல்லும் நடை கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது கணவனால் தள்ளப்பட்டு கரு கலைவது கொஞ்சம் நாடகத்தனமாக இருக்கிறது. இது ஒரு நல்ல நாவல். தமிழில் நல்ல நாவல்கள் பல கவனிக்கப்படுவதில்லை போலவே இருக்கிறது,’ என்று கூறினார்.


‘என் பெயர்,’ நாவலை ஆய்வு செய்து பேசிய கவிஞர் உமா சக்தி, ‘பல நூல்களின் பிரதிகள் இந்த நாவலில் இடம்பெற்றிருப்பது பலம் சேர்க்கிறது. முந்தைய நாவல்களின் சுருக்கம் இடம்பெற்றிருப்பது புதிய உத்தி. கதை சொல்லிக்கு நபீலா என்ற பாத்திரத்தின் மீது தனி கவனம் இருந்தாலும், பக்குவத்துடன் அதை அணுகியிருப்பது பாராட்டுக்குரியது. இரண்டாவது கணவன் மூலமான குழந்தைக்கும் ஏன் முதல் கணவனின் பெயரான நிஜந்தன் என்பதையே வைக்க ப்ரியா நினைக்க வேண்டும்? கரப்பான் பூச்சி இந்த நாவல் முழுக்க ஒரு படிமமாக இடம்பெறுகிறது. அது முதலில் வந்த உயிர், அது அழியாது, எனவே நிஜந்தன் என்ற பிம்பத்திற்கும் அழிவில்லை. நான் யார், நாம் யார் என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது. வேகமாக சில பாத்திரங்கள் வந்து போகின்றன. அவை அதிக தாக்கம் கொடுக்கும்படி இருந்திருக்கலாம்,’ என்று கூறினார்.

ஊடகவியலாளர் புருஷோத்தமன் தனது மதிப்புரையில், ‘பெயர்களும், நிகழ்வுகளும் இந்த நாவலில் திரும்பத் திரும்ப வருகின்றன. பல மரணங்கள் கதையில் நிகழ்கின்றன. ஆனால் அது கதையோட்டத்தைப் பாதிப்பதில்லை. மழை ஒரு குறியீடாக நாவல் முழுக்க வந்து போகிறது. அதே போல் கரப்பான் பூச்சிகளும் முக்கியப் பாத்திரம் ஏற்றிருக்கின்றன. நித்யஸ்ரீ கணவனின் தற்கொலை, இளவரசனின் தற்கொலை, உயிரியல் பூங்காவின் புலிகள் என்று பல்வேறு சமூகப் பிரச்னைகள் கதையின் ஓட்டத்திற்குப் பயன்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளை அதிகக் கவனம் கொண்டு அணுக வேண்டாம் என்று இந்த நாவல் ஓரிடத்தில் பலமாகக் கூறுகிறது,’ என்று கூறினார்.

இறுதியில் நன்றியுரை வழங்கிய எழுத்தாளர் நிஜந்தன், ‘இந்த அறிமுகக் கூட்டம், எனக்கே என்னை அறிமுகம் செய்து வைத்தது. நிஜந்தன்கள் சாவதில்லை என்று கூறியதன் மூலம் அதிகாரப் பரம்பரை சாகாது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இறுதியில் கரு கலைவது மட்டும் நாடகத்தனம் கொண்டது என்று கூற முடியாது. முழு நாவலே நாடகப் புனைவு கொண்டதாகத்தான் இருக்கிறது. வாழ்வில் இருக்கும் புனைவை புரிந்துகொண்டால்தான், புனைவில் இருக்கும் வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும். புறவய விவரணை என்னுடைய நாவல்களில் குறைவு என்பதை ஏற்றுக்கொள்கிறேன்,’ என்று கூறினார்.

டிஸ்கவரி புக் பேலசைச் சேர்ந்த வேடியப்பன் நிறைவுரை வழங்கினார். ‘விவரம் தெரிந்த வாசகர்கள், நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள். அமிர்தம் சூர்யாவின் பேச்சு ஒரு மேஜிக் போல இருந்தது. நாவலைப் படிக்கத் தூண்டியது,’ என்று கூறினார்.
தொலைக்காட்சித் தொகுப்பாளர் ராமகிருஷ்ணன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
http://nadappu.com/nijanthans-en-peyar-novel/
-நன்றி நடப்பு.காம்

Wednesday, February 26, 2014

அலைபேசி அழைப்புகள் வந்துகொண்டே இருக்கிறது

அதிகாலையில் வரும் காதலியின் அலைபேசி அழைப்பு 
மெல்லிய சிணுங்கலுடன் கொஞ்சுகிறது சிலசமயம் கெஞ்சுகிறது 

 அகாலத்தில் வரும் மனம் கலங்கிய நண்பனின்  அழைப்பு 
துயர்  கொள்ள வைக்கிறது ஒரு முழு பொழுதையும் 
  
கடன் கொடுத்த நண்பனுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு பண்பலை வானொலி போல் ஒரே பாடலை திரும்ப திரும்ப போடுகிறது.

தற்கொலைக்கு முயல்பவனின் கடைசி அழைப்பு யாராலும் 
நீண்ட நேரத்திற்கு எடுக்கப்படுவதில்லை .

முன்னாள் காதலனின் அழைப்பை  நிராகரிக்கும்  காதலி 
ஒரு ஐந்து நிமிடத்தில் கூப்பிடுகிறேன் என்கிறாள் .

தொடர்ந்து அடிக்கும் அழைப்புகள் உங்கள் மீதும் என் மீதும் 
வீண் அதிகாரத்தையே கட்டமைகின்றன .

மிரட்டல் அழைப்புக்கள் பெரும்பாலும் ஒரு ரூபாய் 
போன் பூத்துகளில் இருந்தே வருகின்றன 

அரிதாக வேலை பற்றிய அழைப்புகள் மதிய நேர 
தூக்கத்திலேயே வருகிறது .

எப்போதாவது இனிய செய்தியை கொண்டுவரும் 
மாலைநேர அழைப்புகள் சூழலை ரம்மியமாக்குகின்றன .

இரவு நேர மனைவியின் அழைப்புக்கு , கோடம்பாக்கம் மேம்பாலம் 
தாண்டிவிட்டேன் என  கே கே  நகரிலேயே நிற்கிறேன் 

 ஆகவே அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறது 
Saturday, February 22, 2014

என் பெயர்.' நாவல். அறிமுகக் கூட்டம்.


என் பெயர்.' நாவல். அறிமுகக் கூட்டம்.

மார்ச் 2, 2014, ஞாயிறு மாலை 6 மணிக்கு.

டிஸ்கவரி புக் பேலஸ்
மகாவீர் வளாகம், முதல் மாடி
எண் 6, முனுசாமி சாலை
கேகே நகர் மேற்கு
சென்னை 600 078
(புதுச்சேரி விருந்தினர் இல்லம் அருகில்)
தொலைபேசி: 044-65157525

அறிமுக உரை
'காவ்யா' சண்முகசுந்தரம்

மதிப்புரை
விஜய மகேந்திரன்
அமிர்தம் சூர்யா
உமா சக்தி
புருஷோத்தமன்
 ஏற்புரை
நிஜந்தன்

நிறைவுரை
வேடியப்பன்

Friday, February 21, 2014

மணிரத்னத்தின் திரை அழகியல்

மணிரத்னம் இயக்கிய படங்கள் அனைத்தை பற்றியும் விரிவான அலசலுடன் ஒரு புத்தகம்.தோழமை வெளியீட இருக்கிறது ....மணிரத்னம் குறித்து தமிழில் வெளியாகும் முக்கிய புத்தகமாக இது இருக்கும்...மணிரத்னத்தின் திரை அழகியல் நூலின் பெயர்.....எழுதியவர் கோவை எழுத்தாளர் செந்தமிழ் தேனீ ...புத்தகத்தை முதல் பிரதி படித்தவன் என்ற முறையில் இதை சொல்லுகிறேன்....பாலு மகேந்திரா குறித்தும் இவ்வகை புத்தகம் எழுத வேண்டி உள்ளது....செந்தமிழ் தேனீ  அவர்களிடம் கூறி இருக்கிறேன்...கண்டிப்பாக எழுத முயல்வதாய்  கூறினார்..

Wednesday, February 19, 2014

நிஜந்தனின் ''என் பெயர் ''நாவல்

'அப்போதெல்லாம் அரசு டிவி மட்டும் தான் அதில் செய்தி வாசிப்பாளர்கள் நட்சத்திர அந்தஸ்துடன் இருந்தனர்.ஒரு நாள் டிவி யில் செய்தி வாசித்து விட்டு மறுநாள் ரோடில் நடக்க முடியாது''....என் பெயர் நாவலில் நிஜந்தன் ....இந்த ஒரு வரி என்னை எண்பதுகளின் இறுதிக்கு நினைவுகளில் அழைத்து சென்றது...ஷோபனாரவி ,பாத்திமா பாபு ,சந்தியா ராஜகோபால் ,இனியன் சம்பத் ,ஈரோடு தமிழன்பன் ,நிஜந்தன் என்று எத்தனை  முகங்கள்!!!!....அவர்களில் நிஜந்தன் மட்டுமே இதை இன்று பதிவு செய்து இருக்கிறார் ....அது ஒரு பொற்காலம் !!!!

நிஜந்தனின் ''என் பெயர் ''நாவல் படித்துவிட்டேன்...பல சர்ச்சைக்குரிய கருத்துகள் ,உறவுகள் நாவலில் உள்ளன.இந்நாவல் குறித்த விமர்சன கருத்துகளை டிஸ்கவரி புத்தக கடையில் மார்ச் 2 நடக்கும் விமர்சனகூட்டத்தில் பேச இருக்கிறேன்

Saturday, February 15, 2014

சிவக்குமார் முத்தையாவின் குறுநாவல் தொகுப்பு “ஆத்தோர கிராமம்”.

சிவக்குமார் முத்தையாவின் குறுநாவல் தொகுப்பு “ஆத்தோர கிராமம்”. அவரது சொந்த முயற்சியால் புத்தகமாக கொண்டுவரப்பட்டு சரியாக விநியோகப்படாமல் முடங்கி இருந்தது. இதன் சில பிரதிகளை சிவக்குமார் எனக்கு அனுப்பி இருந்தார் . முழுமையாக படித்துமுடித்தேன். கிராமம் சார்ந்த அற்புதமான பதிவுகளைக்கொண்ட குறுநாவல்கள் அடங்கிய நல்ல புத்தகமான, இதுபோன்ற புத்தகங்கள் வாசகர்களை சென்றடையாமல் இருக்கிறதே என்று நண்பர் வேடியப்பனிடம் Vediyappan Discovery Book Palace கவலைப்பட்டேன். உடனே அந்த கவலையை என்னிடம் விடுங்கள் என்று அவர் புத்தகத்தை அதிகமான பிரதிகள் வாங்கிக் கொண்டதோடு , அவற்றை விற்பனை செய்துகொடுக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இதுபோன்ற கவனிக்காமல் கிடக்கும், சிறிய பதிப்பகங்களின் நல்ல புத்தகங்களை கண்டுபிடித்துக் கொண்டுவந்தால் அவற்றை டிஸ்கவரி புக் பேலஸ் விற்பனை செய்துகொடுக்க தேவையான உதவியை செய்யுமென்று சொன்னார். நண்பர்கள் இந்த சந்தர்பத்தை பயன் படுத்திக்கொள்ளவும். குறிப்பு : நல்ல புத்தகங்கள் மட்டும்

“ஆற்றோர கிராமம்” புத்தகத்தை ஆன்லைனில் வாங்க கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.

http://discoverybookpalace.com/products.php?product=ஆற்றோர-கிராமம்

Tuesday, February 11, 2014

எனக்கு பிடித்த நூறு புத்தகங்கள்

நன்றி தோழர் !!!
விநாயக முருகன்
இரண்டாயிரத்துக்கு பிறகு தமிழில் பல்வேறு பிரிவுகளில் வெளிவந்த எனக்கு பிடித்த நூறு புத்தகங்கள். இவை எல்லாம் இரண்டாயிரத்துக்கு பிறகு முதல் பதிப்பில் எழுதப்பட்டவை அல்லது தொகுக்கப்பட்டவை.. (சே.பிருந்தாவின் மழை பற்றிய பகிர்தல் தவிர) இந்த வருட புத்தக கண்காட்சிக்காக தனிப்பட்ட ரசனையில் தேர்வு செய்த பரிந்துரை. 

1. காடு (நாவல்) - ஜெயமோகன் 
2. ராஸ லீலா (நாவல்) - சாரு நிவேதிதா
3. ஆழி சூழ் உலகு (நாவல்) - ஜோடி குரூஸ்
4. வெட்டுப்புலி (நாவல்) - தமிழ்மகன் 
5. காவல் கோட்டம் (நாவல்) - சு.வெங்கடேசன்
6. சோளகர் தொட்டி (நாவல்) - ச.பாலமுருகன் 
7. கால்கள் (நாவல்) - ஆர்.அபிலாஷ் 
8. யாமம் (நாவல்) - எஸ்.ரா 
9. உப்பு நாய்கள் (நாவல்) - லட்சுமி சரவணக்குமார்
10. களவு காமம் காதல் (குறுநாவல்) - சாம் நாதன்
11. அழிக்க பிறந்தவன் (குறுநாவல்) - யுவகிருஷ்ணா 
12. 6174 (நாவல்) - க.சுதாகர் 
13. கொரில்லா (நாவல்) - (ஷோபா சக்தி) 
14. இரண்டாம் ஜாமங்களின் கதை (நாவல்) - சல்மா 
15. தூப்புக்காரி (நாவல்) - மலர்வதி 
16. மங்கலத்து தேவதைகள் - வா.மு.கோமு 

17. பட்சியின் சரிதம் (கவிதை) - இளங்கோ கிருஷ்ணன்
18. மீன்கள் துள்ளும் நிசி (கவிதை) - நிலா ரசிகன் 
19. என்னைக் கடவுளாக்கியத் தவிட்டுக் குருவி 
(கவிதை) - வா. மணிகண்டன் 
20. உறுமீன்களற்ற நதி (கவிதை) - இசை 
21. சிவாஜி கணேசனின் முத்தங்கள் (கவிதை) - இசை 
22. உப்பு நீர் முதலை (கவிதை) - நரன் 
23. ஞாயிற்றுக்கிழமை மதியப் பூனை (கவிதை) - 
அகநாழிகை பொன்.வாசுதேவன் 
24. மயிரு (கவிதை) - யாத்ரா
25. பரத்தையருள் ராணி (கவிதை) - லீனாமணிமேகலை
26. நீர்க்கோல வாழ்வை நச்சி - (கவிதை) - 
லாவண்யா சுந்தரராஜன் 
27. கருவேல நிழல் (கவிதை) - பா.ராஜாராம் 
28. அகி (கவிதை) - முகுந்த் நாகராஜன் 
29. ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது 
(கவிதை) - முகுந்த் நாகராஜன்
30. சூரியன் தனித்தலையும் பகல் (கவிதை) - தமிழ்நதி 
31. காந்தியை கொன்றது தவறுதான் (கவிதை) - 
ரமேஷ் பிரேதன் 
32. வனப்பேச்சி (கவிதை) - தமிழச்சி தங்கபாண்டியன் 
33. மஞ்சணத்தி (கவிதை) - தமிழச்சி தங்கபாண்டியன்
34. அதீதத்தின் ருசி (கவிதை) - மனுஷ்யபுத்திரன் 
35. பசித்த பொழுது (கவிதை) - மனுஷ்யபுத்திரன் 
36. கடைசி டைனோசர் (கவிதை) - தேவதச்சன் 
37. அந்தரங்கம் (கவிதை) - செல்வராஜ் ஜெகதீசன் 
38. இரவு மிருகம் (கவிதை) - சுகிர்தராணி 
39. அவளை மொழிபெயர்த்தல் (கவிதை) - சுகிர்தராணி 
40. பரத்தையர் கூற்று - சி. சரவண கார்த்திகேயன் 
41. ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் (கவிதை) - செல்வராஜ் ஜெகதீசன் 
42. பூமியை வாசிக்கும் சிறுமி (கவிதை) - சுகுமாரன் 
43. நகுலன் கவிதைகள் (கவிதை) - நகுலன்
44. விருட்சம் கவிதைகள் (முழுக்கவிதைகள் கவிதை) - (தொகுப்பு நவீன விருட்சம் அழகிய சிங்கர்)
45. கல்யாண்ஜி கவிதைகள் (கவிதை) - (கல்யாண்ஜி)
46. ஞானக்கூத்தன் கவிதைகள் (கவிதை) - (ஞானக்கூத்தன்)
47. ஆத்மாநாம் படைப்புகள் (கவிதை) - ஆத்மாநாம் 
48. வேட்கையின் நிறம் (கவிதை) - உமாஷக்தி 
49. முலைகள் (கவிதை) - குட்டிரேவதி 
50. வீடு முழுக்க வானம் (கவிதை) - சே. பிருந்தா 
51. மழை பற்றிய பகிர்தல் (கவிதை) - சே. பிருந்தா 
52. நீரில் அலையும் முகம் (கவிதை) - அ.வெண்ணிலா 
53. பச்சை தேவதை (கவிதை) - சல்மா 
54. காதலியர் மேன்மை (கவிதை) - தபசி 

55. நகரத்திற்கு வெளியே (சிறுகதைத்தொகுப்பு) - 
விஜய மகேந்திரன் 
56. காட்டின் பெருங்கனவு (சிறுகதைத்தொகுப்பு) - 
சந்திரா
57. பூனைகள் இல்லாத வீடு (சிறுகதைத்தொகுப்பு) - 
சந்திரா
58. கடவுளைக்கண்டுபிடிப்பவன் (சிறுகதைத்தொகுப்பு) - 
அமிர்தம் சூர்யா 
59. என் வீட்டின் வரைபடம் (சிறுகதைத்தொகுப்பு) - ஜே.பி.சாணக்யா 
60. கனவு புத்தகம் (சிறுகதைத்தொகுப்பு) - ஜே.பி.சாணக்யா
61. அய்யனார் கம்மா (சிறுகதைத்தொகுப்பு) - நர்சிம்
62. பதினெட்டாம் நூற்றாண்டு மழை (சிறுகதைத்தொகுப்பு) - எஸ்.ரா 
63. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - எஸ்.ரா
64. சுஜாதா தேர்ந்தெடுத்த கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - சுஜாதா 
65. யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் (சிறுகதைத்தொகுப்பு) - நிலா ரசிகன் 
66. வெய்யில் உலர்த்திய வீடு (சிறுகதைத்தொகுப்பு) - எஸ்.செந்தில்குமார் 
67. ஊமைசெந்நாய் (சிறுகதைத்தொகுப்பு) - (ஜெயமோகன்)
68. மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - (சாரு நிவேதிதா) 
69. ஒளிவிலகல் (சிறுகதைத்தொகுப்பு) - (யுவன் சந்திரசேகர்) 
70. ஜி.நாகராஜன் ஆக்கங்கள் (சிறுகதைத்தொகுப்பு+இரண்டு குறுநாவல்கள்+கட்டுரை) - ஜி.நாகராஜன் 
71. நீர் விளையாட்டு (சிறுகதைத்தொகுப்பு) - (பெருமாள் முருகன்) 
72. இருள் விலகும் கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - (வா.மு.கோமு, சுதேசமித்ரன், ஷாராஜ், கே.என்.செந்தில், ஹரன் பிரசன்னா, எஸ். செந்தில்குமார், பாலை நிலவன், லட்சுமி சரவணக்குமார், சிவக்குமார் முத்தய்யா, விஜய மகேந்திரன், புகழ், என். ஸ்ரீராம்) தொகுத்தவர் விஜய மகேந்திரன்
73. தவளைகள் குதிக்கும் வயிறு (சிறுகதைத்தொகுப்பு) - (வா.மு.கோமு)
74. மகாராஜாவின் ரயில் வண்டி (சிறுகதைத்தொகுப்பு) - அ.முத்துலிங்கம்
75. அமெரிக்காகாரி (சிறுகதைத்தொகுப்பு) - அ.முத்துலிங்கம்
76. வீடியோ மாரியம்மன் (சிறுகதைத்தொகுப்பு) - இமையம் 
77. லிபரல் பாளையத்து கதைகள் (சிறுகதைத்தொகுப்பு) - ஆதவன் தீட்சண்யா 
78. ஐந்நூறு கோப்பை தட்டுகள் (சிறுகதைத்தொகுப்பு) - அசோகமித்திரன் 
79. இரவுக்காட்சி (சிறுகதைத்தொகுப்பு) - கே.என்.செந்தில்

80. என் பெயர் சிவப்பு (மொழிபெயர்ப்பு-நாவல்) - ஜி. குப்புசாமி (தமிழில்)
81. ஓநாய் குலச்சின்னம் (மொழிபெயர்ப்பு-நாவல்) - சி. மோகன் (தமிழில்)
82. பனி (மொழிபெயர்ப்பு-நாவல்) - ஜி. குப்புசாமி (தமிழில்) 
83. ஆடு ஜீவிதம் (மொழிபெயர்ப்பு-நாவல்) -எஸ்.ராமன் (தமிழில்)
84. தனிமையின் நூறு ஆண்டுகள் - சுகுமாரன் (தமிழில்)
85. ஹாருகி முரகாமி (மொழிபெயர்ப்பு- சிறுகதைகள்) ஜி. குப்புசாமி (தமிழில்)
86.நான் மடிந்து போவதை காணவே அவர்கள் விரும்புவர் (மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்) யமுனா ராஜேந்திரன் (தமிழில்) 
87.சம்ஸ்காரா (மொழிபெயர்ப்பு-நாவல்) சதாசிவம் (தமிழில்)
88.க ராபர்ட்டோ கலாஸ்ஸோ (மொழிபெயர்ப்பு-நாவல்) ஆனந்த் (தமிழில்)

89. நினைவின் தாழ்வாரங்கள் (கட்டுரைத்தொகுப்பு) - கலாப்ரியா 
90.ஓடும் நதி (கட்டுரைத்தொகுப்பு) - கலாப்ரியா
91.கிராமத்து தெருக்களின் வழியே (கட்டுரைத்தொகுப்பு) - ந.முருகேசன் பாண்டியன்
92. கோணல் பக்கங்கள் (கட்டுரைத்தொகுப்பு) - சாரு நிவேதிதா 
93. கலகம் காதல் இசை (கட்டுரைத்தொகுப்பு) - சாரு நிவேதிதா 
94. நிழல்கள் நடந்த பாதை (கட்டுரைத்தொகுப்பு) - மனுஷ்யபுத்திரன்
95. பல நேரங்களில் பல மனிதர்கள் (கட்டுரைத்தொகுப்பு) - பாரதி மணி 
96. அறியப்படாத தமிழகம் - தொ.பரமசிவன் 

97. பென்சில்களின் அட்டகாசம் (குழந்தை இலக்கியம்) - விழியன் 
98. டாலும் ழீயும் (குழந்தை இலக்கியம்) - விழியன்
99. காசுக் கள்ளன் (குழந்தை இலக்கியம்) - எஸ்.ரா 
100. நீளநாக்கு (குழந்தை இலக்கியம்) - எஸ்.ரா