விஜய் மகேந்திரன்

vijay mahendran

Monday, November 2, 2015

கிளாப் போர்டு

கிளாப் போர்டு
சிறுகதை: விஜய் மகேந்திரன்

காட்சி 1 பகல் நேரம்
இரண்டு மணி நேரத்திற்கு மேலான காத்திருப்பு கருணாகரனுக்கு வெளியில் சொல்லமுடியாத கோபத்தை உருவாக்கியது. கார்ப்பரேட் அலுவலகம் போல உள்ள இதுவரை சினிமாவில் ஹிட் மட்டும் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குநரின் அலுவலகத்திற்கு வந்திருக்கக் கூடாது என நினைத்தார். எல்லாம் தன்னிடம் இருந்த ஒரே உதவியாளனால் வந்த வினை. 12 மணிக்கு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. வடநாட்டு முகங்கள் நிறைய தென்பட்டது. மாடல்களின் ஏஜெண்ட் ஒருவன் மும்பையில் இருந்து வந்திருந்தான். அவனே பார்ப்பதற்கு மிகவும் பகட்டாக காணப்பட்டான். அவர் படத்தில் பின்னால் நிற்கும் ரிச் கேர்ள்ஸ் கூட மும்பையில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவார்கள். அப்படி நிற்க வந்த பெண் ஒருத்தியை சில காட்சிகளிலும் பாடலிலும் கவர்ச்சியாக நடிக்க வைத்தார். சில காட்சிகள் தான் படத்தில் வந்தாலும் அவள் நடித்த பாடல் ஹிட்டாகி திரையரங்கில் கைத்தட்டலை பெற்றது. அவள் இன்று முன்னணி கவர்ச்சி நடிகையாகி தமிழ், தெலுங்கு, இந்தி என ஒடி ஒடி நடித்து கொண்டிருக்கிறாள். இது மும்பையில் உள்ள மாடல்களிடம் பரவி விட்டது. இந்த இயக்குநரின் படத்தில் ஒரிரு காட்சிகளில் வந்தால் கூட கவனிக்கப்படுவோம் என்ற நம்பிக்கையோடு அவரது அலுவலகத்தை படையெடுத்த படி உள்ளார்கள். அந்த இயக்குநரின் உதவியாளர்கள் டிஸ்கஸன் அறைக்குள் உள்ளே செல்வதும், வெளியே வந்து காத்திருப்பவர்களை கூப்பிடுவதுமாக இருந்தனர். கருணாகரனை யாருமே கண்டு கொள்ளவில்லை.
இயக்குநர் அறையில் இருந்து வெளியே வந்த கண்ணாடி அணிந்த உதவியாளனை கருணாகரன் கூப்பிட்டார்.
''தம்பி, என் பெயர் கருணாகரன்.. உங்க டைரக்டரோட பழைய நண்பன். அவரை சந்திக்கணும்னு சொல்லு, என் பெயரை சொன்னா அவருக்கு தெரியும்''
'' சார் உங்கள தெரியும். 'அமுதன்' படம் எடுத்த டைரக்டர் கருணா சார் தானே! ஒரு டூயட் சாங் கூட அதில் ரொம்ப ஹிட்டாச்சே... சொல்றேன் சார்! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. டைரக்டர் அடுத்த படத்தில் எந்தந்த நடிகருக்கு என்ன கதாபாத்திரம் கொடுக்கலாம்னு விவாதத்துல இருக்கார்'' என்று சொல்லியபடி ஆபிஸ் பையனிடம் இவருக்கு டீ கொடுக்கும் படி சைகை காட்டினான்.
கருணாகரன் கொஞ்சம் நிம்மதியானார். படம் எடுத்து மூன்று வருடம் ஆகியும் இன்னும் சிலர் அவரது படத்தையும், அவரையும் நினைவு வைத்திருந்தது சின்ன மகிழ்ச்சியை கொடுத்தது. அந்த படம் நன்றாக ஒடியிருந்தால் இந்த நிலைமை தனக்கு ஏற்பட்டிருக்குமா என எண்ணினார். அவரது மனைவியும், பையனும் அவரை விட்டு சொந்த ஊருக்கு போய் ஒருவருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது. இவருக்கு இனிமேல் படம் கிடைக்கும் என்று நம்பிக்கை அவரது குடும்பத்தாருக்கு போய்விட்டது. முதல் படம் ஓடாமல் போன பிறகு பல நண்பர்கள் அவரது போனை கூட எடுப்பதில்லை. அது தான் சினிமா. இங்கு ஜெயித்தால் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். தோற்றால் எதிரே வந்தால் கூட முகத்தை திருப்பிக் கொண்டு போய்விடுவார்கள். நடுவே ஒரு தெலுங்குப் பட வாய்ப்பு என அழைத்தார்கள். இவரும் போய் பார்த்தார். பெரிய ஹீரோ, ஹீரோயின் என்று பல கோடி ரூபாய்க்கான புராஜக்ட். இயக்குநருக்கான எல்லா வேலையும் கருணா செய்யவேண்டும். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தனது பெயரை இயக்குநராக போட்டுக் கொள்வார். சில லட்சங்களை அவருக்கு சம்பளமாக கொடுக்கவும் தயாராக இருந்தார். கருணாவுக்கு அன்று இருந்த பொருளாதார பிரச்னைகளில் பணம் தேவையாக இருந்தது. ஆனால் சினிமாவில் மறைமுக டைரக்டராக பணிபுரிந்தால் கடைசி வரை அந்த வேலைக்கு மட்டுமே அழைப்பார்கள் என்ற பயமும் இருந்தது. நமது உழைப்பில் அடுத்தவர் பெயர் போட்டுக் கொள்வதா என்று அந்த வாய்ப்பை மறுத்து விட்டார். வந்த பணத்தை வாங்கிப் போட்டுக் கொண்டு எடுத்துக் கொடுத்திருக்கலாம்? என்று தான் பலரும் சொன்னார்கள்.
முதல் படத்தில் பெரிய ஹீரோ கால்ஷீட் கிடைத்ததால் எல்லாம் அவருக்கு எளிதாக நடந்தது. உலக அழகியாக அந்த வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டவரையே கதாநாயகியாக போட வேண்டும் என்று தயாரிப்பு தரப்பில் வேண்டுகோள் வைத்தார்கள். பல லட்சம் செலவு பண்ணி அந்த பெண்ணை கூட்டி வந்தால் நடிப்பே வரவில்லை. 'நடிகையை மாற்றுங்கள் இது கனமான கதாபாத்திரம் இந்த பெண்ணால் நடிக்க முடியாது' என சொல்லி பார்த்தார். நிறைய செலவு செய்துவிட்டோம். கதாநாயகியின் ஆடைகள், அணிகலன்கள் அனைத்தும் மும்பை, பெங்களூர் என வாங்கியிருக்கிறோம். இவரை வைத்தே எடுங்கள். ஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் படி காட்சிகள் அமைந்தால் போதும். பாடல் காட்சிகளில் ஏக்தாவை கிளமராக நடிக்க வைத்து ரசிகர்களை ஏமாற்றி விடலாம் என முட்டாள்தனமான யோசனையை சொன்னார்கள். ஹீரோவும் உலக அழகியுடன் நடிப்பதை பெருமையாக பேட்டிகளில் அறிவித்து வந்தார். படம் எடுக்கும் போது, ஆயிரம் தலையீடுகள் இருந்தன. இரண்டு பாடல்களை அழகி ஏக்தாவுக்காக எடுக்க வைத்து கதைக்கு தேவையில்லாத இடங்களில் சேர்க்கச் சொன்னார்கள். ஹீரோ சண்டைக்காட்சியில் தான் அறிமுகம் ஆக வேண்டும் என்றார்கள். வழக்கமாக எல்லா வணிக படங்களிலும் செய்யும் விஷயங்களை கருணாவை செய்ய சொன்னதில் படத்தின் தீவிரமான பல காட்சிகளை அவரால் படம் எடுக்க முடியவில்லை. ஷுட்டிங் நிறைவடைந்து படமும் எடிட்டிங் முடிந்து ரெடியானது. பின்னணி இசையில் தான் சில விஷயங்களை தூக்கி நிறுத்த முடியும் என இசை சூறாவளி இசையமைப்பாளரை நம்பி இருந்தார். அவரும் கடைசி நேரத்தில் கைவிட்டார். இந்தி படம் ஒன்றுக்கு பாடல்களை கம்போஸிங் செய்ய லண்டன் சென்றுவிட்டார். அவரது உதவியாளர் பின்னணி இசையை செய்தார். உதவியாளரின் இசை மேஜிக்கையும் உருவாக்கவில்லை. குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் எல்லா வேலைகளையும் முடிக்க சொன்னார். தான் நினைத்ததை படமாக்க முடியவில்லை. படம் வெற்றி பெறாது என்பது கருணாவுக்கு தெரிந்து விட்டது. அவர் நினைத்தது தான் நடந்தது. கடந்த கால நினைவுகளை அசை போட்டவர் நினைவுகளில் இருந்து மீண்டு சுவரில் மாட்டியிருக்கும் கடிகாரத்தை பார்த்தார். நேரம் மணி இரண்டை கடந்திருந்தது. வெற்றிப்பட இயக்குநர் ஷண்முக சுப்ரமணியன் உள்ளே கூப்பிடும் அறிகுறியே தெரியவில்லை. மீண்டும் உதவி இயக்குநரை அழைத்து நினைவுபடுத்தினார்.
''சார் சொல்லியாச்சு கூப்பிடுறேன்னு சொன்னார். அடிக்கடி சொன்னா டென்சன் ஆகி திட்டுவார்'' என சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.
'படமும் பண்ணாம சும்மா இருக்கிறதுக்கு ஷண்முகம் சார் உங்க ஆரம்ப கால நண்பர்தானே, அவரை போய் பார்க்கலாம், அவரொட கூட்டணியில் நீங்கள் இருந்தாலே பல தயாரிப்பாளர்கள் தேடி வருவாங்க'' என கருணாவின் படத்தில் வேலை பார்த்த உதவியாளன் ராம் தான் அந்த யோசனையை கூறினான்.
''அவன் பல சக்சஸ் கொடுத்து உச்சத்துல இருக்கான், நான் தோற்று போய் நிற்கிறேன், எனக்கு நம்பிக்கையில்லை''
மறுத்து பார்த்தார் கருணாகரன்.
''சார், யார் யாரையோ பார்க்கிறதுக்கு அவரை தான் ஒருமுறை போய் பார்க்கலாம். சொந்தமா படம் தயாரிக்கிற கம்பெனியும் வைச்சு இருக்கார். நினைச்சா அவரே உங்க படத்தை தயாரிக்கலாம்.'' என ராம் தான் சமாதானப்படுத்தி அழைத்து வந்தான். ஆனால் இப்படி காத்திருப்பது அவரது தன்மானத்தை சோதித்தது.

காட்சி 2 பிளாஷ்பேக் கட் 1990
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் 1990 களில் கலக்கி கொண்டிருந்தவர். சி.ஏ. பிரவீன் பாபு. கருணாகரன் அவரிடம் 3 படங்கள் இணை இயக்குநராக வேலை பார்த்திருந்தான். அப்போது ஏதோ ஒரு நாடக குழுவில் நடித்து கொண்டிருந்த சண்முகத்தின் நடிப்பு பிடித்து போய் உதவி இயக்குநராக சேர்த்து கொண்டார். சண்முகத்துக்கு சினிமாவின் அரிச்சுவடியே அப்போது தெரியாது. படப்பிடிப்பின் போது கிளாப் போர்டு அடிக்க தெரியாமல் அடிக்கடி டைரக்டரிடம் திட்டுவாங்குவான். கருணாகரன் தான் எப்படி கிளாப் போர்டு அடிக்க வேண்டும். காட்சிகளை எவ்வாறு பிரித்து எழுதி படப்பிடிப்பின் போது கொடுக்க வேண்டும் என அடிப்படை விஷயங்கள் அனைத்தையும் சொல்லிக் கொடுத்தார். அப்படியும் சண்முகம் இயக்குநரிடம் திட்டு வாங்குவதும், அடி வாங்குவதும் தொடர்ந்து நடந்தது. ஒருநாள் தண்ணியடித்து விட்டு கருணாவிடம் புலம்பினான்.
‘‘எனக்கு சினிமா சரிவராது சார் நான் டைரக்டர்கிட்ட சொல்லிட்டு கிளம்புறேன்‘‘
''பிரவீன் பாபு சார்கிட்ட உன்னால வேலை பார்க்க முடியலன்னா, யார்கிட்டயும் பார்க்க முடியாது. உன்கிட்ட ஏதோ ஒரு திறமை இருக்க போய் தான் அவரோட அஸிஸ்டென்டா சேர்த்துருக்கார். இவர்கிட்ட தொழில் கத்துக்க பணக்கார பசங்க எவ்வளவு பேரு முயற்சி பண்றாங்க தெரியுமா? யாரையும் பக்கத்துல விட மாட்டார். இன்னும் கொஞ்ச நாள் அதுக்கப்புறமும் உனக்கு சரிப்படலைன்னா நீ இங்கிருந்து கிளம்பிடலாம்''
அதன் பிறகு சண்முகத்துக்கு சினிமா புரிபட ஆரம்பித்தது. கதை விவாவதத்தில் கலக்கினான். புதிய யோசனைகள் பல சொன்னான். கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பது பற்றிய சீன் விவாதிக்கும் போது சண்முகம் சொன்ன விஷயங்களை கேட்டு பிரவீன் பாபுவே வியந்தார். எப்படி உனக்கு இந்த விஷயங்கள் தெரியும் எனக் கேட்ட போது '' நான் கொஞ்ச நாள் சாராய வியாபாரம் செஞ்சுருக்கேன் '' என்றான். சண்முகம் இருபதுக்கும் மேற்பட்ட வேலைகளை செய்து தோற்று இருந்தான். அதனால் பலதரப்பு மக்களை கண்டு பழகியிருந்த அனுபவ அறிவு கதை, திரைக்கதை எழுதும் போது பெருமளவு உதவியது. சில படங்கள் வேலை பார்த்தவுடனே ஒரு தயாரிப்பாளர் சண்முகத்தை கூப்பிட்டனுப்பி படம் இயக்க சொன்னார். அவனும் தைரியமாக ஒத்துக்கொண்டான். முதல் படத்திலேயே தரம் வாய்ந்த கலைஞர்கள் அனைவரையும் ஒப்பந்தம் செய்து கொடுத்தார் அவனுடைய தயாரிப்பாளர். கருணாவை இணை இயக்குநராக பணியாற்ற அழைத்தான். தனது குருநாதர் பிரவீன் பாபுவை விட்டு வர மனம் இல்லை. அவர் எப்போது சொல்கிறாறோ அப்போது மட்டுமே படம் இயக்க செல்வேன் என படம் இயக்க வந்த வாய்ப்புகளை கூட பிடிவாதமாக மறுத்துவிட்டார். சண்முகத்தின் முதல் படம் ஆக்‌ஷன் திரில்லர். படத்தின் பாடல்கள் வேறு பட்டையை கிளப்பின. திரையரங்கங்கள் திருவிழா கோலம் பூண்டன. சூப்பர் டூப்பர் ஹிட் ஷண்முகத்தின் படம். இயக்குநர் ஷண்முகத்தின் கிராப் எகிற ஆரம்பித்தது. பெரிய நடிகர்கள் அவனது படத்தில் நடிக்க க்யூ கட்டி நின்றனர். ஒரு கட்டத்தில் குருநாதர் பிரவீன் பாபுவே ஷண்முகத்தை சிஷ்யன் என சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன் என ஒரு பேட்டியில் சொல்ல வேண்டி வந்தது. இரண்டாவது படத்திலும் தன்னிடம் பணியாற்றுமாறு கருணாகரனை அழைத்தான் சண்முகம். கருணா மறுத்து விட்டான். அதன் பிறகு இருவருக்கு தொடர்பே இல்லாமல் போய் விட்டது. அவனது இயக்குநர் பிரவீன் பாபுவே ஒரு பெரிய நடிகரின் கால்ஷீட்டை வாங்கி கருணாவுக்கு படம் இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார். அந்த படம் அடைந்த தோல்வி தான் இன்று ஷண்முகத்தின் அலுவலகத்தில் காத்திருப்பது வரை கொண்டுவிட்டு விட்டது. கருணாகரனின் அந்த அட்வைஸ் இல்லையெனில் என்றோ சினிமாவக்க்கு முழுக்கு போட்டு கிளம்பியிருப்பான். இன்று அதே சண்முகம் தான் ஷண்முக சுப்ரமணியனாகி மணிக்கணக்கில் காக்க வைக்கிறான்.

காட்சி 3 மாலை நேரம் 6 மணி
ஷண்முகத்தின் உதவியாளன் அவசரமாக வெளிவந்து ''சார் டைரக்டருக்கு மூட் சரியில்லைன்னு கிளம்பிட்டார். இன்னொரு நாள் பாருங்க, சாரி சார்னு'' அவசரமாக உள்ளே கிளம்பி போனான். ''இதை முழுநாள் காக்க வைச்சு தான் சொல்வாரா உங்க டைரக்டர்'' என்று டென்ஷன் ஆனவரை அவரது உதவியாளன் ராம் கைப்பிடித்து இழுத்து வெளியே கூட்டிவந்தான். நேராக ஒரு மதுபான கடைக்கு வண்டியை விடச் சொன்னார். வரும் வழியெல்லாம் ஷண்முகத்தை ஏகமாக திட்டி வந்தார். கடை வாசலுக்கு வரும் போது அவருக்கு ஒரு போன் வந்தது. பெரும் தயாரிப்பாளர் ஒருவர் பேசினார். நாளை அலுவலகம் வந்து பாருங்கள் என்று செய்தி சொல்லி கட் செய்தார். ''இதுக்குதான் சொன்னேன், இவன் ஆபீஸ்ல வேலை கேட்டு வந்தா கூப்பிடுற தயாரிப்பாளர்கள் கூப்பிட மாட்டாங்க, திரும்பவும் இவன் கிட்ட அஸிஸ்டென்டா சேர்ந்துட்டேன்னு நினைப்பாங்க'' என்று புலம்பிய கருணாகரனை ''சார் அதான் நாளைக்கு பெரிய தயாரிப்பாளரை பார்க்க போறோம், உங்களுக்கு அடுத்த படம் கிடைக்கப் போகுது'' என்று ஆற்றுப் படுத்தினான்.

காட்சி 4 இரவு எட்டுமணி சவேரா ஹோட்டல் உணவு விடுதி

ஷண்முக சுப்ரமணியன் கண்ணாடி அணிந்த உதவியாளனோடு ரூப் டாப் உணவுவிடுதியில் அமைதியாக அமர்ந்திருந்தான்.
'' சார் உங்களுக்கு தொழில் கற்றுக்கொடுத்தவர்னு சொல்றீங்க, அவரை நினைச்சு பீல் பண்றீங்க அப்புறம் ஏன் அவரை காத்திருக்க சொல்லி பார்க்காம அனுப்புனீங்க''
'' நான் இந்த அளவுக்கு வளர விதை போட்டது கருணாகரன் தான். கிளாப் போர்டு அடிக்க சொல்லி கொடுத்தது முதல் ஸ்க்ரிப்ட் எழுதற வரைக்கும். சொல்லாபோனா வாழ்க்கை முழுக்க அவருக்கு நான் கடன் பட்டிருக்கேன். நான் அவரை பார்த்து இருந்தா கேட்கற உதவியை செய்ய வேண்டியது கடமை. நம்மகிட்ட நல்ல இணை இயக்குநரா வேலை பார்த்தே காலம் கழிஞ்சுரும். நான் கருணாவை வெற்றி பெற்ற இயக்குநரா பார்க்க விரும்புறேன்.''
'' அது எப்படி முடியும். அவருக்கு யார் படம் கொடுப்பாங்க''
'' நான் இன்னிக்கு நெம்பர் ஓன் இயக்குநர், நான் சொன்னா தயாரிப்பாளர்கள் கொடுப்பாங்க, அதுவும் இந்த ஸ்தானம் இருக்கிற வரைக்கும் தான் நம்ம பேச்சு எடுபடும்''
உதவியாளன் புரியாமல் ஷண்முகத்தை குழப்பப் பார்வை பார்த்தான்.
''தயாரிப்பாளர் காளீஸ் நடிகர் விகாஷ் கால்ஷீட் வாங்கி வைச்சுட்டு நம்மள படம் பண்ண சொல்லி கேட்டுட்டு இருந்தார் இல்லையா? அந்த படத்தை கருணாகரனுக்கு தர சொல்லிட்டேன். விகாஷ்க்கும் போன் பண்ணி சொல்லிட்டேன்.''
''அவர் ஒத்துக்கிட்டாரா?''
'' பின்ன அடுத்த படம் அவனுக்கு பண்றேன்னு சொன்னேன் , ஒத்துக்கிட்டான்''
உதவியாளனுக்கு தனது இயக்குநர் ஷண்முகத்தின் மீதுள்ள மரியாதை பலமடங்கு கூடிய இரவு அது.

சில நாட்களுக்கு பிறகு...
காட்சி 5 காலை 9 மணி ஏவிஎம் படப்பிடிப்பு தளம்

நடிகர் விகாஷ் பட்டு வேட்டி, சட்டை கட்டி நின்றிந்தார். நடிகை பன்ஸிகா வடகத்தி பட்டு புடவையில் தயாராக இருந்தார். படத்தின் முதல் காட்சி படமாக்கப் பட வேண்டும்.
தயாரிப்பாளர் காளீஸ்சிடம் சென்று சார் ''யாருக்காக வெயிட் பண்றீங்க'' கேட்டார் கருணா.
''இந்த படத்தை நீங்கதான் டைரக்ட் பண்ணனும்னு ஆசைப்பட்டாரே அந்த நல்ல மனிதருக்கு தான் சார்''

புரியாமல் விழித்தார் கருணாகரன்.

இயக்குநர் ஷண்முக சுப்ரமணியனின் கார் உள்ளே நுழைந்தது. எல்லோரும் வரவேற்க ஓடினார்கள். கிளாப் போர்டு அடித்து முதல் காட்சியை ஷண்முகத்தை துவக்கி வைக்க சொன்னார்கள். விகாஷையும், பன்ஸிகாவையும் நிறுத்தி காட்சியை விளக்கிவிட்டு வந்தார் கருணா. சரியான இடத்தில் கிளாப் போர்டை அடித்து காட்சியை துவக்கி வைத்தார் ஷண்முகம். அவருக்கு  முதன் முதலாக கருணா கிளாப் அடிக்க கற்றுக்கொடுத்தது இப்போது நினைவுக்கு வந்தது. குழுமியிருந்தவர்கள் கை தட்டல் ஒலி காதைப் பிளக்க, கருணாவை கட்டி அணைத்தார் ஷண்முகம்...

--------------------------------------------------------------------------------------------------------------------------
Posted by விஜய் மகேந்திரன் at 7:32 PM 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: சிறுகதை

Tuesday, April 21, 2015

செவ்வி இலக்கிய அமைப்பு நான்காம் நிகழ்வு

செவ்வி இலக்கிய அமைப்பு
நான்காம் நிகழ்வு
ஃ பிரான்ஸ் காப்காவின் ''உருமாற்றம் ''
 உரை
இளங்கோகிருஷ்ணன்
இடாலோ கால்வினோவின் ''புலப்படாத நகரங்கள்''
 உரை
செல்வ புவியரசன்
இடம் டிஸ்கவரி புக் பேலஸ்
நேரம் மாலை 6 மணி
தேதி 9/5/ 2015 சனிக்கிழமை

Posted by விஜய் மகேந்திரன் at 11:43 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Monday, April 6, 2015

செவ்வி அமைப்பின் மூன்றாவது நிகழ்வு


. ஃபெர்னான்டோ ஸோரன்டினோவின் “ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை” சிறுகதை தொகுப்பு- விஜய் மகேந்திரன்

''ஹாருகி முரகாமியின் சிறுகதைகள்''-, விநாயக முருகன்

தொகுப்புரை - வேல்கண்ணன்

இடம் டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் 12/4/2015 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5.30 மணி

Posted by விஜய் மகேந்திரன் at 10:46 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Sunday, February 1, 2015

செவ்வி இலக்கிய அமைப்பு

செவ்வி - அறிவிப்பு
------------------------------
 நானும் நண்பர் விநாயக முருகனும் இணைந்து "செவ்வி" என்ற அமைப்பு ஆரம்பித்துள்ளோம். "செவ்வி" அமைப்பின் சார்பாக அவ்வளவாக கவனம் பெறாத ஆனால் சிறந்த நூல்களை ஒவ்வொரு மாதமும் அறிமுகம் செய்கிறோம். பெரும்பாலும் இளம் எழுத்தாளர்கள் அல்லது மொழிப்பெயர்ப்பு நூல்கள் அல்லது தமிழில் அவ்வளவாக கவனம்பெறாத உலக புனைவு எழுத்தாளர்களை மட்டும் முதன்மைப்படுத்த போகிறோம்.
முதல் கூட்டம் வரும் பிப்ரவரி எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணி அளவில் மேற்கு கே.கே.நகர் டிஸ்கவரி புக் பேலசில் நடைபெறும். முதல் கூட்டத்தில் மூன்று நூல்களை பற்றி வாசகர்களுடன் கலந்துரையாடல் நடைபெறும். மூன்று நூல்களை பற்றி சிறு அறிமுகத்தை இங்கு தருகிறோம்.

நாவல்:- சூர்ய ரத்னாவின் "பரமபதம்" என்ற நாவல் - அறிமுகப்படுத்தி பேசுபவர் விஜய் மகேந்திரன். சிங்கப்பூரின் பப் கலாச்சாரம் பற்றியும் ஆண் பெண் உறவின் நுட்பங்களையும் விவரிக்கிறது இந்த நாவல்

கட்டுரைத்தொகுப்பு:- வெ. நீலகண்டனின் "எமக்குத் தொழில் எழுத்து" - அறிமுகப்படுத்தி கே.என் .சிவராமன். எழுத்தை தொழிலாக கொள்ளாமல் உயிராக நினைக்கும் எழுத்தாளர்களை பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு

மொழிப்பெயர்ப்பு நாவல்:- ஸ்டீஃபான் ஜ்யேஸ்வேக் Stefan Zweig எழுதிய Royal Game என்ற நாவல் தமிழில் லதா ராமகிருஷ்ணன் மொழிப்பெயர்ப்பில்ராஜ விளையாட்டு என்று வெளிவந்துள்ளது. - அறிமுகப்படுத்தி பேசுபவர் விநாயக முருகன். அரசியல் ,அதிகாரம் நெருக்கடிக்குள்ளாகும்போது ஒரு மனிதன் எப்படி தனிமைச்சிறையில் தனக்கான ஒரு புனைவு உலகை சித்தரித்து கற்பனையில் வாழுகிறான் என்பதையும், புனைவுக்கும், அசலுக்குமான போராட்டங்களையும் நுட்பமாக சித்தரித்து எழுதப்பட்ட ஒரு நவீனத்துவ நாவல்.

செவ்வி இலக்கிய அமைப்பு
இடம் டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் 8/2/2015  ஞாயிறு நேரம் மாலை 4 மணி

அமைப்பை துவக்கி
வாழ்த்துரை
திரு. ரவி சுப்பிரமணியன்,கவிஞர், ஆவணப்பட இயக்குநர்
திரு இந்திரன்,கவிஞர், கலை இலக்கிய விமர்சகர்

அறிமுக உரை
விஜய் மகேந்திரன் -விநாயக முருகன்

விவாதிக்கப்படும் நூல்கள்
பரமபதம் - நாவல் - சூர்ய ரத்னா (தங்கமீன் பதிப்பகம்)
நூல் அறிமுகம் செய்பவர் -விஜய் மகேந்திரன்

எமக்குத் தொழில் எழுத்து -கட்டுரைகள் -வெ.நீலகண்டன்(சூரியன் பதிப்பகம்)
நூல் அறிமுகம் செய்பவர் - கே.என்.சிவராமன்

ராஜ விளையாட்டு -மொழிப்பெயர்ப்பு நாவல்:- ஸ்டீஃபான் ஜ்யேஸ்வேக்(புதுப்புனல் பதிப்பகம்)
நூல் அறிமுகம் செய்பவர் -விநாயக முருகன்

நூல் அறிமுகம் முடிந்தவுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறும்.
நிகழ்வு ஒருங்கிணைப்பு - மு.வேடியப்பன்
Posted by விஜய் மகேந்திரன் at 8:54 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Monday, January 12, 2015

அதிநவீனப் பெண்களை மையமிடும் கதைகள் - நிலாரசிகனின் "ஜூலி யட்சி" சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து - விஜய் மகேந்திரன்


நிலாரசிகன் சரளமான தனது கவிதைகளின் மூலம் தமிழிலக்கிய சூழலில் கவனம் பெற்றவர். ஒரு கவிஞன் கதைகள் எழுத ஆரம்பிக்கும் போது அவனையறியாமலே கவித்துவச்செறிவு கதைகளுக்கும் வந்துவிடும். இவரது முதல் சிறுகதை தொகுப்பான "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" வாசித்து இருக்கிறேன். அதிலும் பெண்களை மையமாகக் கொண்ட பல கதைகள் உண்டு. தற்போது "ஜூலி யட்சி" என்ற புதிய தொகுப்புடன் வந்திருக்கிறார். 

வனதேவதைக்கதைகள், மேஜிக்கல் ரியலிசக் கதைகள்,எது கனவு? எது நிஜம்? என்றே பிரித்தறிய முடியாதபடி வித்தியாசமான கதைகளால் நிரம்பியிருக்கிறது இத்தொகுப்பு.பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் இன்றைய மாடர்ன் பெண்கள் இவரது கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். ராகினி, ப்ரியம்வதா,ஜூலி,வதனா,மிதா என்ற அழகிய நவீன பெயர்களில் கதைகளுக்குள் நடமாடுகிறார்கள். யதார்த்த கதை போல ஆரம்பிக்கும் கதைகள் மிகுபுனைவிற்குள் நுழைந்து மீண்டு திரும்புகின்றன. இவரது அபார கற்பனையுலகம் பல கதைகளில் வாசகனை பிரமிக்க வைக்கிறது.


எனக்கு இந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்த கதை "ப்ரியம்வதாவின் பகல்". இந்தக் கதையின் தலைப்பு தவிர வேறெங்கும் அவளது பெயர் வருவதில்லை. காரணம் அவள் பெயரை மறந்துவிடுகிறாள். அல்லது யாரும் அவளைப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. அவளது காதலன் இந்திரன். இருந்தாலும் நகரத்தனிமை அவளை வாட்டுகிறது. தேவலோக இந்திரனே அவளிடம் "டியர் ஜில்ஸ்" என்று குறுஞ்செய்தி அனுப்புவதாக இந்தக் கதையை அமைத்து இருக்கிறார் நிலாரசிகன். இறுதியில் அவள் ஒரு முடிவை எடுக்கும் போது அவளது பெயர் நினைவுக்கு வருகிறது. நகரத்தில் தன்னை தொலைத்து தேடுபவர்கள் அதிகம் என்பதை இக்கதை குறியீடாக சொல்கிறது. 'அதிகாலையில்  படுக்கையறை யன்னலை கொத்துகிற காகம்தான் அவளுக்கு அலாரம்'  என்று கவித்துவத்துடன் ஆரம்பித்து  மலை அவள் பெயரைச் சொல்லி அழைத்தபடி ஓடிவந்தது என முடிகிறது. இம்மாதிரி கதைகள் எழுதுவதற்கு கொஞ்சம் திறமையும் கற்பனையும் இருந்தாக வேண்டும். "ப்ரியம்வதாவின் பகல்" நிலாரசிகன் எழுதிய கதைகளில் மிக முக்கியமானது என படிப்பவர்களும் உணர்ந்து கொள்வார்கள். விவரணைகளில் பல இடங்களில் கவிதைக்கும் சிறுகதைக்குமான இடைவெளியை நிரப்புகிறார்.


"கேவல்" என்ற கதை காணாமல் போகும் அப்பாவை தேடும் மகளுடையது போல எழுதப்பட்டிருந்தாலும் முடிவில் கதையின் திசை தலைகீழாக மாறிவிடுகிறது. இந்தக்கதையில் கதை எது? உண்மைச் சம்பவமா? கற்பனையா என்று எளிதாக கண்டு கொள்ள முடியாதபடி அருமையாக எழுதியிருக்கிறார்.


பாலியல் அத்துமீறல்கள் நடத்தும் ஆண்களை பழிவாங்க, ஜூலி என்ற நவீனப் பெண் ஜூலி யட்சியாக உருமாறுகிறாள்.தேவதைக்கதை வகையைச் சேர்ந்தது "ஜூலி யட்சி" சிறுகதை. ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்கள் இவரது கதைகளில் வீட்டுக்குள் முடங்கிவிடுவதில்லை. எதிர்த்து நிற்கிறார்கள்.சண்டை இடுகிறார்கள். பழிக்கு பழியும் வாங்குகிறார்கள். இவரது பல கதைகள் அதிநவீனப் பெண்களின் உலகை தெளிவாக காட்டுகிறது.


தொகுப்பில் முதல் கதையான "தர்ஷிணிப்பூ" மரத்தினுள் இருந்து வெளிவரும் தேவதையைப் பற்றியது. கானகம் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகளை சொல்கிறதா, அல்லது பெண்களுக்கு எதிரான வன்முறையை சொல்கிறதா என்றால் இரண்டையும் வலியுறுத்துகிறது. சூழலியல் மீது நிலாரசிகனுக்கு எப்போதும் அக்கறை உண்டு. அவரது கவிதைகளில் வரும் எண்ணற்ற பறவைகளும் மீன்களும் இதற்கு சாட்சி. "தர்ஷிணிப்பூ" கதையிலும் அதை செய்திருக்கிறார்.


"குறளியின் டிராகன்" கதையில் குள்ளமாக இருப்பதற்காக சமூகத்தால் ஒதுக்கப்படும் பெண், குன்றாத  இளமையையும், அழகையும் வரமாக பெற்ற பின் அவளுக்கு பின் அலையும் இளைஞர்களையும் பெண்களே அவளைப் பார்த்து பொறாமைப்படுவதாலும் தனிமை நிறைந்ததாய் மாறிப் போகிறது அவளது வாழ்க்கை.

"ஜூலியட்சி" தொகுப்பு முழுவதும் உள்ள கதைகள் சரளமான எளியமொழிநடையிலும் அதே நேரத்தில் அதீத கற்பனைத்திறனுடனும் எழுதப்பட்டிருக்கிறது. படிப்பவர்களுக்கு ஒரு புதிய உலகத்தை தரிசிக்க செய்யும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. நிலாரசிகனுக்கு முழுநீளநாவல் எழுதும் அளவுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அனுபவங்கள் உண்டு.

அதை இந்த ஆண்டு அவர் செய்ய வேண்டும். புத்தகத்தை வெளியிட்டுள்ள "பொள்ளாச்சி இலக்கிய வட்டம்" அமைப்பினருக்கு நிறைய நல்ல புத்தகங்களை கொண்டு வர என்னுடைய வாழ்த்துகள்.

நூல்: ஜூலி யட்சி
ஆசிரியர் : நிலாரசிகன்
விலை: ரூ.80
வெளியீடு: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
இணையத்தில் வாங்க:
http://www.wecanshopping.com/products/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html

Posted by விஜய் மகேந்திரன் at 8:35 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

Saturday, January 10, 2015

சாமானிய மனிதனின் எதிர்குரல்- இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள்

எனது நண்பரும், தமிழின் தற்கால கவிஞர்களில் முக்கியமானவருமான இளங்கோ கிருஷ்ணனுக்கு சென்னை இலக்கியத் திருவிழா அமைப்பின்சார்பில் 2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் எழுத்தாளர் விருது கிடைத்துள்ளது. நடுவர்களாக இருந்து ரவி சுப்ரமணியனும், தமிழச்சி தங்கபாண்டியனும் மிகச்சரியாக தேர்வு செய்துள்ளனர்.

எனக்கு தெரிந்து 2005 ஆம் ஆண்டு முதல் இளங்கோவின் கவிதைகளை சிற்றிதழ்களில் படிக்க ஆரம்பித்தேன். இன்று பெரிய இதழ்கள், இணைய இதழ்கள் என்று பரவலாக இயங்கிவருகிறார் இளங்கோ. கவிதைகள் தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் சென்று இலக்கிய கூட்டங்களில் விமர்சன உரைகளும் ஆற்றியுள்ளார். அந்த விமர்சனக் கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுவது அவசியம். நாவல், சிறுகதை, கவிதை, பத்திகள் என்று பல்வகைப்பட்ட புத்தகங்கள் பற்றி இளங்கோ எழுதியுள்ளவை இலக்கிய ரசனையையும், புரிதலையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வாசகர்களுக்கு உதவும். இளங்கோ கிருஷ்ணனின் கவிதை குறுங்கதைகள் அடிப்படையில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளன் என்ற முறையில் அதிகம் கவர்பவை. அவர் கவிதை தவிர்த்து சிறுகதைகளும் வருங்காலத்தில் எழுதவேண்டும் என்ற ஆசையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இளங்கோவின் கவிதைகள் உரைநடைக்கு அருகில் இயங்குபவை. அடர்த்தியான கவித்துவ மொழியில் எழுதப்பட்டிருக்கும். அதிகாரத்தை எண்ணி பகடி செய்யும் கவிதைகளும் அவரிடம் அதிகமுண்டு. அவரது காயச்சண்டிகை தொகுப்பில் உள்ள ஹிட்லர் கவிதை இதற்கு சிறந்த உதாரணம். ஜெர்மனியில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஹிட்லரின் முகம் ஒருநாள் கண்ணாடியில் பார்க்கும் போது பார்த்தவுடன் சிரிக்கத்தூண்டும் சாப்ளினின் முகமாக மாறிப்போகிறது. நான் தான் ஹிட்லர் என்று சொல்லியும் கேளாமல் மக்களும், குழந்தைகளும் அவரைப்பார்த்து சிரிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கேலியும்,கிண்டலும் தாங்க முடியாமல் ஹிட்லர் ஓட ஆரம்பிக்கிறார். அப்போது அவரது நடை சாப்ளினைப் போலவே மாறிப்போயிருந்தது என கவிதையை முடிக்கிறார் இளங்கோ. ஒரு அதி நவீனக் கதை போல தோன்றும் விஷயத்தை அற்புதமான கவிதையாகவே எழுதியிருக்கிறார். பட்சியன் சரிதம் தொகுப்பில் உள்ள முதல் கவிதையான 'ஆர்க்கிமிடிஸ் பூமியை படித்துக்கொண்டிருக்கிறான்' சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான கவிதை. நாடு முழுவதும் நடக்கும் பாலியல் பலாத்காரங்களையும், அரசியல் வன்முறைகளையும் நினைவுப்படுத்தி படிப்பவர்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது. இளங்கோவின் கவிதைகளில் தத்துவங்களும் அதிகமாக தென்படும். சமகால கவிஞர்களில் பலவேறு தத்துவ சிக்கல்கள், பின்நவீனத்துவ பகடி, கவிதையை வழக்கமான தொனியில் இருந்து கலைத்துப்போட்டு  புதிய மொழியில் கவிதையை எழுப்ப முனைவது போன்ற சிறந்த நவீனக் கவிஞனுக்கு இருக்க வேண்டிய எல்லா திறமைகளும் இவருக்கு இருக்கிறது. பரந்துபட்ட வாசிப்பனுபவமும், வாழ்க்கை பாடங்களும் அதற்கு துணை நிற்கிறது.' ஒரு சாமானியன் என்ன செய்ய முடியும்? கரப்பானையோ, சிறு செடியையோ இம்சிப்பதன்றி' என்ற அவரது வரிகளை அவரது கவிதை உலகிற்கு எளிதாக பொருத்தலாம். சாமானியன் கேட்கமுடியாத கேள்விகளை, செய்யமுடியாத விஷயங்களை தன்  கவிதைகளின் மூலம் எதிர்குரலாக ஒலிக்கவிடுகிறார் இளங்கோ. அதனால் தான் அவரால் உன் கவிதையால் எதை தடுக்க முடியும்? உன் இனம் நசுக்கப்படுவதை, உன் கடவுள்கள் கொல்லப்படுவதை , உன் நிலம் சிதைக்கபடுவதை ,போ போய் வேலையைப் பார், பொருளீட்டு, புணர், சிரி,மரி கவிதையாம் மயிராம்...என்று எழுத முடிகிறது.

இரண்டு கவிதை தொகுப்புகள் வெளியிட்டுள்ள இளங்கோ விரைவில் தனது நாவலையும் முடித்து வெளியிடுவார் என்று நினைக்கிறேன். பொருளாதார நிர்பந்தங்கள் அற்ற வாழ்வு அவருக்கு அமைந்தால் அவரது எழுத்துக்களின் அளவையும் கூட்டும். தற்போது சென்னையில் பத்திரிக்கை பணியை துவங்கியுள்ள இளங்கோ கிருஷ்ணனுக்கு இது மிகவும் உகந்த நேரம். ஆட்டத்தின் விதிமுறைகள் அவருக்கு தெரியும். ஆடுகளமும் தயாராக உள்ளது. அவர் சிறப்புடன் ஆடி இதில் ஜெயிக்க வேண்டும். இந்த உரைக்கு தார்மீக பலமாக இருந்த நண்பர்கள் கவின் மலர், சாம்ராஜ் இருவருக்கும் என் நன்றிகள். அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Posted by விஜய் மகேந்திரன் at 7:30 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)
Vijay Mahindran

Create your badge

Popular Posts

  • RAMANESAN_ My Friend
    RAMANESAN_ My Friend By Vijay Mahendran. Ramanesan is one of my friends. It is different whether he admires Lord Rama.or not. He doesn’t ...
  • கைவிடப்பட்டவர்களின் கூடாரம்
      வெளிவரக் காத்திருக்கும் எழுத்தாளர், நண்பர் விஜய் மகேந்திரன் அவர்களின் நாவல் "கைவிடப்பட்டவர்களின் கூடாரம்"... சில நாட்களுக்கு முன...
  • இரவுக்காக காத்திருப்பவன்
    நம் இருவருக்குமான இந்த இரவு ஆவியாகிவிடக்கூடதென பிரார்த்திக்கிறேன். தயவு செய்து உணவு மேஜையில் உருகிக்கொண்டிருக்கும் -இந்த மெழுகுக்கரைசலை அணைத...
  • நகரத்திற்கு வெளியே - விமர்சனம்
    எதார்த்தங்களை பதிவு செய்யவும், தமது தவறுகளை ஏற்றுக்கொள்ளவும், அதை மனத்துணிவோடு வெளியில் கூறவும் ஒரு படைப்பாளியால் மட்டுமே முடியும்... ஒர...
  • சாமானிய மனிதனின் எதிர்க்குரல்
      விஜய் மகேந்திரனின் இத்தொகுப்பு விதவிதமான கதைகளை சுமந்து அலையும் மனிதர்களை நமக்கு பரிச்சயப்படுத்துகிறது. ஐந்து நிமிட வாசிப்பினில் அவர் வெ...
  • அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள்
    அவசியம் படிக்க வேண்டிய நாவல்கள் பொய்த்தேவு க.நா.சு. வாடிவாசல் சி.சு.செல்லப்பா. அபிதா லா.ச.ர. பசித்த மானுடம் கரிச்சான் குஞ்சு வாசவேஸ்வரம் கிர...
  • சாஹித்ய அகதமி மொழிதல் நிகழ்வு புகைப்படங்கள்.
  • ஏ. ஆர் .ரஹ்மான் நவீன இந்திய திரை இசையின் அடையாளம்
    வணக்கம் ... இயக்குனர் விஜய் மகேந்திரன் அவர்கள் எழுதிய ஏ. ஆர் .ரஹ்மான் நவீன இந்திய திரை இசையின் அடையாளம் என்ற நூல் குறித்து ... இந்த ந...
  • லீனா மணிமேகலையின்'' தீர்ந்து போயிருந்தது காதல் ''
    லீனா மணிமேகலையின்'' தீர்ந்து போயிருந்தது காதல் '' நான் படித்த கவிதைகளில் எனக்கு பிடித்த கவிதைகளை அறிமுகம் செய்து அது தந்த உண...
  • குற்றமும் தண்டனையும்
    அருணா ஷண்பக். 20 வயது. மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். அவருக்கும் ஒரு டாக்டருக்கும் விரைவில் திருமணம் நடக்க...

online purchase

online purchase
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்

இருள் விலகும் கதைகள்

இருள் விலகும் கதைகள்
புத்தகத்தை ஆன்லைனில் வாங்க மேலே உள்ள படத்தை சொடுக்கவும்

TWITTER இல் பின்தொடர கிழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  • http://twitter.com/#!/vijaymahindran
  • http://twitter.com/#!/vijaymahindran

Feedjit

Blog Archive

  • ►  2021 (3)
    • ►  June (3)
  • ►  2020 (3)
    • ►  May (3)
  • ►  2017 (9)
    • ►  November (7)
    • ►  May (1)
    • ►  January (1)
  • ►  2016 (9)
    • ►  December (2)
    • ►  September (1)
    • ►  July (1)
    • ►  June (3)
    • ►  May (1)
    • ►  January (1)
  • ▼  2015 (6)
    • ▼  November (1)
      • கிளாப் போர்டு
    • ►  April (2)
      • செவ்வி இலக்கிய அமைப்பு நான்காம் நிகழ்வு
      • செவ்வி அமைப்பின் மூன்றாவது நிகழ்வு
    • ►  February (1)
      • செவ்வி இலக்கிய அமைப்பு
    • ►  January (2)
      • அதிநவீனப் பெண்களை மையமிடும் கதைகள் - நிலாரசிகனின் ...
      • சாமானிய மனிதனின் எதிர்குரல்- இளங்கோ கிருஷ்ணனின் கவ...
  • ►  2014 (20)
    • ►  July (2)
    • ►  June (1)
    • ►  May (2)
    • ►  March (6)
    • ►  February (7)
    • ►  January (2)
  • ►  2012 (1)
    • ►  March (1)
  • ►  2011 (43)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (1)
    • ►  June (3)
    • ►  May (5)
    • ►  April (7)
    • ►  March (10)
    • ►  February (7)
    • ►  January (7)
  • ►  2010 (110)
    • ►  December (10)
    • ►  November (7)
    • ►  October (7)
    • ►  September (11)
    • ►  August (15)
    • ►  July (9)
    • ►  June (8)
    • ►  May (19)
    • ►  April (13)
    • ►  March (2)
    • ►  February (6)
    • ►  January (3)
  • ►  2009 (11)
    • ►  December (11)

About Me

My photo
விஜய் மகேந்திரன்
சென்னை, 9444658131, India
1978ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். 2006ஆம் ஆண்டிலிருந்து சிற்றிதழ்களில் கதைகள் எழுதிவருகிறார். இளம் படைப்பாளிகளை மையமாகக் கொண்டு Ôஇருள் விலகும் கதைகள்Õ என்ற தொகுப்பினை தொகுப்பாசிரியராக இருந்து உருவாக்கியிருக்கிறார். பிஸியோதெரபி துறையில் பணியாற்றி வரும் இவர், அயர்லாந்து நாட்டின் பிஸியோதெரபி கவுன்சிலில் உறுப்பினராகவும் உள்ளார். இப்போது சென்னையில வசித்து வருகிறார்.நகரத்திற்கு வெளியே இவரது சிறுகதை தொகுப்பு உயிர்மை வெளியிட்டு உள்ளது
View my complete profile
Counter Stats

Myspace Layouts

Followers

Labels

  • ''நீயா நானா'' நிகழ்ச்சி (1)
  • 'நகரத்திற்கு வெளியே'நூல் விமர்சனக் கூட்டம் (1)
  • 100 வது பதிவு (1)
  • a.r. ரெஹ்மான் (1)
  • facebook.twitter (1)
  • Great Quotes (1)
  • IT sector (1)
  • M.G.சுரேஷ் (1)
  • sakitya akademy (1)
  • SIDE EFFECTS (1)
  • story (2)
  • twitter (1)
  • vijay mahendran (2)
  • அடையாளம் . (1)
  • அய்யப்ப மாதவன் (6)
  • அனுபவம் (1)
  • அனுபவம் 50 வது பதிவு (1)
  • ஆரண்யகாண்டம்-ஒரு கலந்துரையாடல் (1)
  • ஆர்.அபிலாஷ் (1)
  • இணையத்தளம் (1)
  • இணையம் (1)
  • இருள் விலகும் கதைகள் (1)
  • ஈழம் (4)
  • உயிரோசை (1)
  • உயிர் எழுத்து (1)
  • உயிர்மை சுஜாதா விருதுகள் (1)
  • ஊடுருவல் (1)
  • எடிட்டர் லெனின் (1)
  • எம்.ஜி.சுரேஷ் (4)
  • ஒரு மனிதனின் ஒரு நகரம் (1)
  • கடிதம் (1)
  • கட்டுரை (7)
  • கதை (3)
  • கவிதை (3)
  • கனவு புதிய இதழ் (1)
  • சாரு நிவேதிதா (3)
  • சாருநிவேதிதா (1)
  • சிக்கி முக்கி (1)
  • சிறுகதை (3)
  • சிறுகதை புத்தகம் (2)
  • சிற்றிதழ் (1)
  • சீனு ராமசாமி (1)
  • சுந்தர ராமசாமி (1)
  • சுப்ரபாரதிமணியன் (2)
  • தகவல் (1)
  • தமிழவன் . (1)
  • தென்மேற்கு பருவக்காற்று (1)
  • ந. முருகேசபாண்டியன் (1)
  • நகரத்திற்கு வெளியே (2)
  • நகரத்திற்கு வெளியே’ விஜய மகேந்திரன் சிறுகதைகள் (1)
  • நகைச்சுவை (1)
  • நாவல் (5)
  • நிகழ்வு (3)
  • நீயா நானா நிகழ்ச்சி (1)
  • படித்ததில் பிடித்தது (1)
  • பாரதி மணி (4)
  • பாலியல் பலாத்காரம் (1)
  • பாலு மகேந்திரா (1)
  • பிரியா தம்பி (1)
  • பிரியா விஜயராகவன் (1)
  • புகைப்படங்கள் (1)
  • புகைப்படம் (1)
  • புத்தகம் (2)
  • பெருவனத்தின் வேட்கை (1)
  • மணிரத்னம் (1)
  • மற்றும் கலந்துரையாடல் கூட்டம். (1)
  • மனுஷ்யபுத்திரன் (3)
  • மாமல்லன் கார்த்தி (4)
  • லீனா மணிமேகலை (4)
  • வண்ணதாசன் (1)
  • வரலாறு (1)
  • வலைபதிவு (1)
  • வா.மு. கோமு நேர்காணல் (1)
  • வாமு கோமு (1)
  • விமர்சன கூட்டம் (1)
  • விமர்சனம் (7)
  • விளக்கம்.. (1)
  • விளம்பரம் (1)
  • விஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் (1)
  • விஜய் மகேந்திரன் (1)
  • விஜய் மகேந்திரன் ஊடுருவல் (1)
  • ஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு (1)
  • ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் (1)
  • ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் விழா அழைப்பிதழ் (1)
  • ஜெயமோகன் (1)
  • ஷோபாசக்தி (4)
  • ஸ்ரீபதி பத்மநாபா (12)
:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines
Simple theme. Powered by Blogger.