Monday, June 14, 2010

நிலாரசிகனின் டைரிக்குறிப்புகள்



அன்புள்ள நிலாரசிகனுக்கு,

விஜய் மகேந்திரன் எழுதிக்கொள்வது. நலமாக இருக்கிறாயா? உன் புது வேலை எவ்வாறு உள்ளது? உன்னை முன்பு போல புத்தக கடைகளிலோ,இலக்கிய விழாக்களிலோ பார்க்க முடிவதில்லை.வலைப்பூவிலும் குறைவாகத்தான் இப்பொழுதெல்லாம் எழுதுகிறாய். அலுவலகம் உன் நேரங்களை எல்லாம் விழுங்கிக்கொள்கிறது என நினைக்கிறேன்.
“இருள் விலகும் கதைகள்” தொகுப்பைப் படித்துவிட்டு என்னை நேரில் சந்தித்தது பசுமையாக நினைவிருக்கிறது. உனது வலைப்பூவை அதற்கு முன்னர் படித்திருந்ததினால் எனக்கும் நீ அறிமுகமாகி இருந்தாய்!

ஆச்சரியம் என்னவெனில் சென்னையில் கணிணித்துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு இலக்கியம் என்றால் எட்டிக்காய் என நினைத்திருந்தேன். ஆனால் உன்னைப் போல சில நண்பர்கள் அங்கிருந்துகொண்டு தன்னாலான பங்கை ஆற்றி வருகின்றனர்.
சென்னைக்கு வந்து பத்தாண்டுகளாகியும் நீ இயல்பு மாறாமல் கவிதைகள்,கதைகள் என்று எழுதிக்கொண்டிருப்பது குறித்த மகிழ்வை உன்னிடமே சொல்லியிருக்கிறேன். நகரத்தின் பற்சக்கரங்கள் இலக்கிய வாழ்வின் நேரங்களை அகற்றிவிடும் தன்மை கொண்டது.பிழைப்புக்கு மாரடிக்கவே நமது பொழுதுகள் சரியாகிவிடும்.

உனது சிறுகதைத்தொகுப்பான “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” கொடுத்து ஐந்து மாதமாகிறது.இப்போதுதான் எழுதுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். ஊர்ப்பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற நம்பிக்கைதான்.
எனக்கு தொகுப்பின் முதல்கதையான “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்” என்கிற சிறுகதை மிகவும் பிடித்திருந்தது. இதன் வடிவமும் என்னைக் கவர்ந்தது. பழைய புத்தகக்கடையில் தேடி எடுக்கும் ஒரு டைரியில் இருந்து கதை ஆரம்பிப்பதாக எழுதி இருப்பது சிறப்பான உத்தி. சிறுமியின் டைரிக்குறிப்புகளை அவளது பாஷையிலே எழுதியிருக்கிறாய்!

இது ஒரு நல்ல சிறுகதைக்கான வித்தை. அது உனக்கு இந்தக் கதையில் கை வந்திருக்கிறது. சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும்,கடத்தப்பட்டு,விற்கப்பட்டு பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தப்படுவதமான கொடுமைகளை இக்கதையில் தோலுரித்துக்காடி இருக்கிறாய். வட இந்தியாவில் இவை அதிக அளவு நடைபெறுகின்றன.பாலியல் வக்கரம் மனிதர்களிடையே நச்சுக்காற்று போல பரவியிருக்கிறது.

டெல்லியில் ரயிலில் சந்திக்கும் பெண்ணுக்கும்,அவளது டைரியிலும் இதே போல் கதை இருக்க இருவரும் ஒருத்திதானா? என்றவாறு கதையை முடித்திருக்கிறாய். எந்த இடத்திலும் விரசம் இல்லாதவாறு நுட்பமாக எழுதியிருக்கிறாய்.
குழந்தைகள் உலகம் பற்றிய கதைகள் இந்தத் தொகுப்பில் கணிசமாக இருக்கின்றன. பால்ய வயதின் நினைவுகளை அசைபோடும் கதைகளும். அவ்வகையில் “வேலியோரபொம்மை மனம்” என்ற கதையும் “ப்ரியாக்குட்டி நான்காம் வகுப்பு “ஏ” பிரிவு” கதையும் என்னைக் கவர்ந்தன.

“வேலியோர பொம்மை மனம்” கதை இலங்கையில் போரால் அநாதைகளாக்கப்படும் சிறுமிகளில் ஒருத்தியைப் பற்றிய உண்மை கலந்த புனைவு எனலாம்.
அப்பா,அம்மாவை வீட்டில் குண்டு விழுந்ததால் இழந்து ஒரே நாளில் அநாதையாகிவிடும் ஜெயா,வேலியோர முகாமில் இருக்கிறாள்.அந்த பிஞ்சு மனத்திற்கு அவள் அப்பா வாங்கிக் கொடுத்த கரடி பொம்மைதான் ஒரே ஆதரவு. அகதிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளை அவர்களோடு நின்று சாப்பிடுகிறாள். அவர்களுக்கு பாதுகாப்பாய் இருக்கும் இராணுவ வீரர்களில் ஒருவன் இவள்மீது வெறுப்பைக் காண்பிக்கிறான்.பொம்மையை பிடுங்கி வைக்கிறான். இறுதியில் ஜெயாவுக்கு அளிக்கப்படும் இரண்டு ரொட்டித்துண்டுகளை வாங்கியவள்,வீரனுக்கு அவற்றில் ஒன்றைக் கொடுக்க அவன் நெகிழ்ந்து உடல் நடுங்குகிறான். மனித உணர்வுகளை நுட்பமாக பேசியிருக்கிறாய்.

இந்தக்கதையை படித்தபோது சிறுமி ஜெயா எங்கிருக்கிறாள் என தெரிந்தால் என் வீட்டிற்கு அழைத்து வந்து விடலாமா என்றுகூட நினைத்தேன். அவ்வளவு தத்ரூபமாக அமைந்திருக்கிறது இந்தக்கதை.

சிறுவயதில் நம்முடன் படித்த நண்பர்களை,நாம் இழந்த உறவுகளை,விளையாடிய பொழுதுகளை(உம்.கிளியாந்தட்டு) நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறது உனது கதைகள்.
சத்யம் தியேட்டரில் குவாலிட்டு walls வாங்கி சாப்பிடுபவர்களுக்கு “சேமியா ஐஸ்”ஸின் அருமை தெரியுமா? சேமியா ஐஸ் கதையில் வரும் சிறுவன் வீட்டிலுள்ள பொருட்களைத் திருடி அவற்றை ஐஸ்காரனிடம் கொடுத்து சேமியா ஐஸ் வாங்கி தின்கிறான்.
அவனது சித்தியால் அடிபடுகிறான். அதன்பிறகு திருந்தினானா என்றால் ஐஸ் வண்டி வரும் சத்தம் கேட்டவுடன் வாங்கிய அடி மறந்துபோய் சித்தியின் புதுச்செருப்பைக் கண்டு சிரிப்பதாக கதையை முடித்திருக்கிறாய்!

அந்த வயதுக்குள்ள சேட்டைகள் அது! “வால்பாண்டி சரித்திரமும்” அப்படி ஒரு சேட்டைக்கார பையனின் கதையே!
தொகுப்பின் கடைசிக்கதையான “மை லிட்டில் ஏலியன் ப்ரண்ட்” எனக்குப்பிடித்திருந்தது.எடுத்த எடுப்பிலேயே இது fantasy கதை என்பதை படிப்பவர்களுக்கு உணர்த்தி விடுகிறாய். இதன் வடிவ ஒழுங்கு,கதை கூறல் முறை,விவரணைகள் எல்லாம் துல்லியமாக அமைந்துள்ள கதை. சாரு நிவேதிதா கூட இக்கதையை படித்ததில் பிடித்ததாக அவரது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
50 வருடங்களுக்கு பிறகு வரும் நூலுக்கு ஒருவன் விமர்சனம் எழுதுவதாய் கதையை அமைத்திருக்கிறாய்.அமெரிக்காவில் fantasy நாவல்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையையும் வெளிவரும் முதல் நாளே முன்பதிவு செய்து எவ்வாறு முண்டியடித்துக்கொண்டு வாங்குகிறார்கள் என்பதையும் சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளாய். முழுக்க புனைவாகவே ஒரு கதையை நகர்த்திச்செல்ல நல்ல கற்பனை வளம் தேவை. அது இருக்கிறது உன்னிடம்.

மேற்கூறிய விஷயங்கள் எல்லாம் உனக்குள் இருக்கும் நல்ல சிறுகதையாளனை இனம் காட்டுகிறது.தொகுப்பு பற்றி இருக்கும் விமர்சனங்களையும் நான் உனக்கு சொல்லியாக வேண்டும். உதாரணமாக “வேட்கையின் நிறங்கள்” கதையின் கரு வித்தியாசமானது. ஆனால் ஒரினச்சேர்க்கை வைத்துக்கொள்ளும் பெண்களின் மன உலகத்தை இன்னும் அழுத்தமாக நீ சொல்லியிருக்க வேண்டும். இது சொல்லப்பட்ட முறையின் கோளாறுதான். சில கதைகளை ஒன்றரை பக்கங்களில் முடித்திருக்கிறாய்.அப்படி எழுதக்கூடாது என்று வரையறையில்லை. ஆனால் விரிவாக எழுத வேண்டிய கதைப்பரப்பை சுருக்கக்கூடாது. உதாரணமாக ‘தூவல்’ என்ற கதையில் இறுதிப்பகுதிகளில்தான் உண்மையாக கதை துவங்குகிறது.ஆனால் சுருக்கமாக அந்தக்கதை முடிவடைந்துவிடுகிறது.
காதலில் தோற்று மும்பை போகும் அவன் பிழைப்பிற்காக ஈடுபடும் குற்றங்களை கூறுகிறாய். அதன்பிறகு கூலிப்படையில் சேருகிறான். அந்த அனுபவத்தை இன்னும் விரிவாக சொல்லி இருந்தால் கதைக்கு வேறு ஒரு தளம் கிடைத்து இருக்கும்.
முதல் தொகுப்பில் பெரும்பாலானவர்களுக்கு நேரும் பிரச்சினைதான் இது. இதை நீ கண்டுணர்ந்து செம்மைப்படுத்தினால் உனது கதைகளின் விகாசம் கூடும்.
பால்ய வயதில் நீ கண்டுணர்ந்த நண்பர்கள்,குழந்தைகள்,அனுபவங்கள் ஆகியவற்றின் தனிப்பட்ட டைரிக்குறிப்புகளைத்தான் எடுத்து கதையாக்கி இருக்கிறாயோ? என்று நினைப்பதற்கு ஏதுவாகவே தொகுப்பின் பெரும்பாலான கதைகள் இருக்கின்றன. புனைவு கலந்த டைரிக்குறிப்புகள் என்று கூடச் சொல்லலாம். உனக்குள் இருக்கும் படைப்பாளியை விட்டுக்கொடுக்காமல் கடந்த பத்தாண்டுகளாக சென்னை என்னும் பெருநகரத்தில் வசித்து வருகிறாய். கார்ப்பரேட் கலாச்சாரம் பற்றியும்,நுகர்வு கலாச்சாரம் மக்களை என்ன மாதிரியான சீரழிவிற்கு கொண்டு செல்கிறது என்பது பற்றியும் என்னிடம் நிறைய விவாதித்து இருக்கிறாய்!

அதைப்பற்றிய கதைகளை எப்போது எழுதப்போகிறாய்? நகரத்தின் மாறிவரும் பண்பாட்டு கூறுகள் பற்றியும் உன்னால் நல்ல கதைகளாக எழுதமுடியும்.
கவிதைகளில் காதலாக கசிந்து உருகும் நீ,ஏன் இன்னும் தீவிரமான காதல்கதைகளை எழுதவில்லை? உன்னுடைய கல்லூரிக்காலங்கள்,தொழிலின் பொருட்டு பார்த்த நகரங்கள்,உனது வெளிநாட்டு அனுபவங்கள் ஆகியவற்றை எல்லாம் உனது புனைவுலகத்திற்குள் எவ்வித மனத்தைகளுமின்றி கொண்டு வர வேண்டும். அப்போது வேறு ஒரு செழுமையான படைப்பாளி எங்களுக்கு கிடைப்பார். இந்தக் கோரிக்கையை மிக உருமையுடன் உன்னிடத்தில் வைக்கிறேன்.
திரிசக்தி பதிப்பகம் முதல் சிறுகதைதொகுப்பு என்று பாராமல் சிறப்பான முறையில் வடிவமைத்து உனது நூலை வெளியிட்டு உள்ளார்கள்.அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

வெளியீடு: திரிசக்தி பதிப்பகம்

இணையத்தில் பெற: http://ezeebookshop.com/eshop/product_info.php?products_id=79

விலை: ரூ.70
-விஜய் மகேந்திரன்.

12 comments:

  1. பனித்துளி படர்ந்த டெம்ப்ளேட் அழகு விமர்சனத்தைப் போலவே

    ஆமா! டெம்ப்ளேட் மாத்தினா வோட்டு பட்டைய மறு இணைப்பு செய்றதில்லையா தோழர் ?

    :)

    ReplyDelete
  2. அருமையான விமர்சனம் நண்பா..
    நண்பர் நிலாவுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. விஜய் மகேந்திரன்
    உங்கள் வர்ணனை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. உள்ளத்தின் ஆழத்தில் இருந்து எழுதிருக்கிறார் விஜய் மகேந்திரன் இந்த பதிவை,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நான் கூட சென்னையில் சாப்ட்வேர் எஞ்சினியர்தான். ஆனால் நிலா ரசிகன் மலை என்றால் நான் மண்தான்.

    ReplyDelete
  6. நன்றி,சாப்ட்வேர்,உங்கள் profile படம் உங்களுடையதுதானே?!!!!!!!!!

    ReplyDelete
  7. நன்றி நேசமித்திரன்,முபின் சாதிகா ,உழவன் ,உங்கள் வருகைக்குக்கும்,பாராட்டுகளுக்கும்

    ReplyDelete
  8. ஆச்சரியம் என்னவெனில் சென்னையில் கணிணித்துறையில் வேலைபார்ப்பவர்களுக்கு இலக்கியம் என்றால் எட்டிக்காய் என நினைத்திருந்தேன்.-Yennathu? --Even though I dunno how to write, I know atleast how to read and enjoy gud writing..

    ReplyDelete
  9. அருமையான பார்வை..!

    ReplyDelete