Showing posts with label வண்ணதாசன். Show all posts
Showing posts with label வண்ணதாசன். Show all posts

Thursday, August 26, 2010

வண்ணதாசன் அனுப்பிய கடிதம்..


வண்ணதாசன் அனுப்பிய கடிதம்..

வண்ணதாசன் எனக்கு பிடித்த முன்னோடி எழுத்தாளர்.அவர் என்ன சொல்வரோ என பயந்து எனது தொகுப்பை நீண்ட நாட்கள் அவருக்கு அனுப்ப விரும்பியும் அனுப்பாமலே வைத்து இருந்தேன்.. சில நாட்கள் முன்பு அனுப்பி வைத்தேன்...இன்று எனக்கு ஒரு கடிதம் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார்,...அந்த கடிதம் ஒரு முன்னோடி எழுத்தாளன் எவ்விதம் இளையவனிடம் உரையாடல் கொள்ள வேண்டும் என்பதன் சாட்சியாக இருந்ததால் இங்கு அதை வெளியிடுகிறேன்..

..அன்புமிக்க மகேந்திரன் ,
வணக்கம்.
உங்களுடைய தொகுப்பிற்கு என் வாசிப்பில், ‘கேட்கக்
கடவன்’ என்று பெயர்.
நீங்கள் இந்திரஜித்திற்குச் சமர்ப்பிப்பதை நியாயம் செய்வது
அந்தக் கதை. காதுகள் உள்ளவன் நேர்த்தியாகச் சொல்லப்
பட்டிருக்கும் கதை.
நகரத்திற்கு வெளியே’யை விடவும் ஆசியா மேன்ஷன் மிக
அசலானது. முன்னுணர முடியாத பாதைகளும், உடனுக்குடன்
நகரம் அழிக்கிற பாதச் சுவடுகளும். தியேட்டர் இருட்டுப்போல சலனங்களை
நோக்கி நகர்த்துகிற தட்டுத் தடவி இருக்கைகளும்
விலக விலக மீண்டும் படியும் குளத்துப்பாசி போன்ற ஒளிந்த
வன்முறையும் நிரவிய நகர முகம் அதில் பதிவாகியிருக்கும்
விதம் கவனத்திற்குரியது.
ஒரு முழு வாழ்வை, புனைவற்று ஆனால் புனைவின்சுழியுடன்
சொல்லி, வெட்டவெளி வெயிலுடன்நம்மை நிறுத்துகிற ஊர் நலன்
கதையும் இத் தொகுப்பின் பொருட்படுத்த வேண்டிய பக்கங்களை
உடையது.
மஹீந்திரன். ஒரு தொகுப்பில் இவ்வளவு நல்ல கதைகள்
இருப்பதே சந்தோஷமாக இருக்கிறது.
அப்புறம் ரமேஷ் ப்ரேதனின் முக்கிய பாத்திரத்தை உங்களால்
உணர்ந்திருக்க முடிந்ததே, அதுவும் எனக்கு முக்கியமானது. அவர்களின்
கட்டுரைகளை, கவிதைகளை, கதைகளை யாரும் தவிர்த்துவிட்டு, நவீன
தமிழிலக்கியம் பற்றி முழுமைகண்டுவிட
முடியாது.
எனக்கு இத் தொகுப்பை அனுப்பத் தோன்றியதற்கும், சமீபத்திய
சில பிற்பகல்களில், என்னுடன் நீங்கள் செயத நீண்ட உரையாடல் களுக்கும் என்
மகிழ்ச்சியும் நன்றியும் உங்களுக்கு உரித்தாகுகிறது.
என் நல் வாழ்த்துக்கள்
அன்புடன்,
கல்யாணி.சி.