Monday, May 10, 2010

எல்லைக்கோட்டையொட்டி பயணிக்கும் கதைகள்

விஜய் மகேந்திரனின் '" நகரத்திற்கு வெளியே " தொகுப்பிலுள்ள பத்து கதைகளையும் வாசிக்கும்போது பல்வேறு விதமான எண்ணங்கள் தோன்றுகின்றது.அவற்றில் சில:

1. இவர் தன்னுடைய வாசகர்கள் யார் என்பதில் மிகத்தெளிவாகவே இருக்கிறார்.

2. நவீன எழுத்துக்களில் எளிமைக்கு கொடுக்கவேண்டிய இடத்தை முன்னிறுத்துகிறார்.

3. தன்னுடைய கதைகளின் சொல்முறையில் பெரும்பாலும் ஒற்றைத்தன்மையையே [ஒரே மாதிரியான என்றும் கொள்ளலாம்] கையாள்கிறார்.

4. கதைக்களங்களும் நகரத்து வாழ்வின்,அம்மனிதர்களின் அக,புற நெருக்கடிக்கு நெருக்கமாக தேர்வுகொள்கிறார்.

5. உள்ளார்ந்து ஒரு தொடர்ச்சியை தனது எல்லா கதைகளிலும் இழுத்துச்செல்கிறார்.
6.பரீட்சார்த்தங்களிலோ,மொழியை கூடுதல் கவனமுடன் கையாள்வதிலோ அக்கறை எதுவும் இருப்பதாக இந்த கதைகளில் வெளிப்படவில்லை.

7. கதைகளை சொல்லுவதில் காட்சித்தன்மையும்,திரைக்கதை போன்ற விவரணைகளும் கூடிய மொழி இவருக்கு கைவந்திருக்கிறது.

8. எந்த எழுத்தாளனின் கதைத்தொகுப்பையும் ஒரு சேர வாசிக்கும்போது சில கதைகள் எரிச்சலூட்டும்.அதற்கு " நகரத்திற்கு வெளியே "வும் தப்பவில்லை.

9. இவரது கதைகளில் பெருநகரத்து பெண்கள் எதிர்கொள்ளும் உடல் சார்ந்த நெருக்கடி கவனம் பெறுகிறது.

இப்படியாக இன்னும் சில .....

இருத்தலின் விதிகள் : எந்தவொரு நவீன எழுத்தாளனுக்கும்,ஏன் அதன் வாசகனுக்கும் கூட நேர்கின்ற ஒரு சிக்கலே கதையின் அடிப்படை.அது இங்கே சிறப்பாக பதிவாகியிருக்கிறது.இதே போன்ற அனுபவங்களை வேறு வேறு எழுத்தாளர்களிடம் படித்ததாக நினைவு.இந்த கதையின் பின்குறிப்பும்,பேசப்படும் இயல்பான உரையாடலுமே இதனை வேறுபடுத்துகிறது.

[இங்கே ஒரு செய்தி : சமீபத்தில் நான் திருச்சிக்கு சென்றபோது பயணத்துணையாக விஜய் மகேந்திரனின் இந்த தொகுப்பை எடுத்துக்கொண்டேன்.முழுக்க வாசித்து முடிக்கையில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தேன்.நான் போனவேலை முடிந்ததும் நான் தேடிசென்றது பழைய புத்தக கடைகளை. இந்த கதையின் நாயகனுக்கு சலித்து தேடியும் கிடைக்காத எஸ்.சம்பத்தின் "இடைவெளி" யும்,அவனுக்கு அதிசயமாய் கிடைத்த சுந்தர ராமசாமியின் " பள்ளம் " சிறுகதை தொகுப்பும் எனக்கு கிடைத்தன.இந்த தற்செயலில் நான் அடைந்த சந்தோஷத்தை உடனே யாருடனாவது பகிர நினைத்து அழைத்தது குமாரநந்தனை..அவரும் சரியாக அதனை அடையாளம் கண்டார் ].

இதில் பழைய புத்தகக்காரன் சொல்வதாக ஒரு தகவல் வரும் ,அந்த உரையாடல் " இவ்வளவு புத்தகம் படிச்ச அந்தாளு ,பிள்ளைகளுக்கு அதன் அருமை தெரியாமலா வளர்த்திருப்பான் ! காசு கூட வேணான்னுட்டாங்க "

" சும்மாவா கொடுத்தாங்க "

"நீ வந்ததுனால உங்கிட்ட போடுறோம்.இல்லாட்டி இதையெல்லாம் சேத்து வச்சு எரிச்சிருப்போம்னு சொல்றாங்க ..முட்டாப்பசங்க "

அந்த பழைய புத்தகக்கடைக்காரனுக்குக்கூட அது கொஞ்சம் விலை அதிகம் கிடைக்கும் வியாபாரப்பொருள்தான்.

ஆனால் நம்மைப்போன்ற இலக்கிய தொடர்புள்ளவர்களுக்கு நேரும் மனஅயர்ச்சியை மீண்டும் மீண்டும் இந்த கதை எனக்கு நினைவூட்டுகிறது.அவ்விதத்தில் இது முக்கியமான சிறுகதையாகப்படுகிறது.

மழை புயல் சின்னம்: இன்றைய உலகில் நிறுவனங்கள் தங்களுடைய நற்பெயரை காப்பாற்ற எப்படியெல்லாம் நிர்வாகத்தில் இறுக்கத்தை காட்டுகிறது என்பது இந்த கதையில் தெளிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.கூடவே ஒரு காதலும்.

மழையோ புயலோ ஏன் இதற்கும் அதிகமான இயற்கை சீற்றங்களே நிகழ்ந்தாலும் வேலைக்கு சரியாக வரவேண்டும் என்றே எதிர்பார்க்கிறது நிர்வாகம்.இதே போன்ற நிகழ்வு நான் களப்பணியாளனாக இருந்தபோது எனக்கும் நிகழ்ந்திருக்கிறது. பெருமழையில் நகரமே ஸ்தம்பித்து நின்றபோதும் என்னை வேலைக்கு வரசொல்லி அழைப்புவந்து அதனால் சண்டை உருவாகியிருக்கிறது.வேலைக்கு செல்லும் நம்மில் பலருக்கு இது போன்ற அனுபவங்கள் நேர்ந்திருக்கும்.எவருக்கும் நிகழக்கூடிய அல்லது நிகழ்ந்திருக்ககூடிய இதுபோன்ற சம்பவங்களே விஜய் மகேந்திரனின் படைப்புகளில் காணக்கிடக்கிறது

.இதில் மழை துவங்கி பலம் கூடும் காட்சியை மிகச்சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்,அந்த பத்தி இப்படி துவங்குகிறது, " காற்று அதிகமாக வீசியது.செய்தித்தாள்கள் பறந்தன.கடையில் தொங்கிய போஸ்டர்கள் கிழிந்து விழுந்தன.தேநீர் குடித்து முடித்தபோது மழை பெய்ய தொடங்கியது...................ஜன்னல் வழியாக பார்த்தபோது எதிரேயிருந்த கடைகளின் தகரக்கொட்டகை தனியாக பிய்ந்து காற்றில் இரண்டு மூன்று அடி தள்ளி பறந்து விழுந்தது ".


இதற்கு அடுத்த பத்தியிலும் சிறப்பாக விவரித்திருக்கிறார்.இந்த கதை மட்டுமல்லாது மேலும் சில கதைகளிலும் எப்படியாவது காதல் இடம்பெற்று விடுகிறது.நல்லவேளை அது நகரத்து மனிதர்களின் மனஇயல்பை தொட்டுச்செல்கிறது.காதலை தவிர்க்க முடியாத ஒன்றாகவும் அதே சமயம் உடல் மூலமே எளிதில் கடக்கக்கூடியதாகவும் இருக்கிறார்கள் விஜய் மகேந்திரனின் மனிதர்கள்.

இந்த கதையின் முதல் பத்தியில் உள்ள வாக்கியங்களை திரும்ப படித்து ரசித்தேன்.அந்த முதல் வரி," என்னுடைய அறையை பார்ப்பதற்கும் எனது துயரம் கூடுவதற்கும் ஏதோ தொடர்பிருக்கிறது "

நகரத்திற்கு வெளியே: இந்த கதையின் முக்கியத்துவம் என்று சொன்னால் இது பெருநகரத்தின் மத்திய மற்றும் மேட்டுக்குடியினரின் மிகமுக்கியமான உளப்பிரச்சனையாகியிருக்கிற Pre Marital Sex என்னும் சிக்கலை கொண்டிருக்கிறது.


.சொல்லப்பட்ட முறையில் இயல்பாக இருக்கிற அதே சமயம் இது முழுக்கவும் புறத்திலிருந்தே அணுகப்பட்டிருக்கிறது. அவளுக்கும் அவனுக்கும் எவ்வித குற்ற உணர்ச்சியுமில்லை. கருவை கலைத்து விடுகிறாள்.அவன் ஆதிக்கம் அதிகமாகி கட்டாயப்படுத்தும்போது அவனை கழட்டிவிடலாமா என்று யோசித்து அவ்விதமே செய்கிறாள்.ஆனால் அவனுடைய தேவை என்பது இவள் ஒருத்தியிடம் மட்டும்தான் என்பதில்லை.ப்ரியா இல்லையேல் பாக்கியம்.அவளுக்கும் அதே பிரச்சனையில் குற்றஉணர்வுகொண்டு, தனித்திருக்கையில் ப்ரியாவும் கேத்ரீனும் ஆறுதலளித்து தன்னுடைய வழியிலியே " பழைய பாக்கியமாக " மாற்றுகின்றார்கள். இதுவே இன்றைய பெருநகரத்து இளைஞர்களின்,யுவதிகளின் ஆழ்மனம் கொண்டிருக்கும் நிஜம்.இந்த நிஜத்தை விஜய் ஆழமாக கவனித்திருக்கிறார்.வெளியே யாருக்கும் தெரியாத வரை எல்லாம் சரியாகவே இருப்பதான கற்பிதம் .இந்த கதையில் எனக்கு ஒரு ஆறுதலும், ஆதங்கமும் இருக்கிறது.

ஆறுதல் : நிஜத்தை அப்படியே சொல்கிறோம் என்று பாலியல் சொற்களை வாரி இறைத்து கிளர்ச்சியடைய செய்யவில்லை.அந்த முறை இந்த கதைக்கு பொருந்தாது என்னும் ஆசிரியரின் பிரக்ஞை குறிப்பிடவேண்டியது.

.
ஆதங்கம் : நிச்சயமாக இன்னும் ஆழமான தளத்திற்கு அந்த சிக்கலின் தன்மையை கொண்டுபோயிருக்கமுடியும். எந்த தளமாற்றமும் நிகழாது ஒரு சாதாரணமான வாசிப்பையே கோருகிறது.

அடைபடும் காற்று : கஷ்டப்பட்டு படிக்கவைத்து பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிய பின் உணரும் தனிமையை இந்த கதை சொல்லமுயற்சிக்கிறது.


இரண்டு வயதானவர்களின் கடிதமும்,இடையே ஆசிரியனுடைய விளக்கமுமான ஒரு வடிவம் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.இந்த முறையும் பலகதைகளில் படித்திருக்கிறோம் என்றாலும் இந்த கதை எனக்கு எரிச்சலடைய செய்யவில்லை. தனிமையிலுள்ள வயதானோரின் கடிதம் அவர்களுடைய வாக்கியங்களிலேயே அருமையாக பதிவாகியிருக்கிறது.இதில் காணும் உளவியல் நெருக்கடியும் - நகரத்து இன்றைய தலைமுறையினர் முந்தைய தலைமுறையினருக்கு கொடுக்கும் இடைவெளி - நன்றாகவே உணர்த்துகிறது.ஆனால் இறுதிப்பகுதி அமெச்சூர் நாடக பாணியில் ,' திடீரென்று ஒரு பெருமூச்சுடன் "அடைபடும் காற்று "என சொல்லிக்கொண்டார் ' என்று முடிவது கதையின் தலைப்பை கதையோடு இணைக்கவேண்டி செயற்கையாக எழுதப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.

இந்த தொகுப்பில் மோசமான கதைகளும் இருக்கின்றன.ஆசியா மேன்ஷன்,சனிப்பெயர்ச்சி,சிரிப்பு ஆகிய கதைகளைத்தான் குறிப்பிட்டு சொல்கிறேன். ' சிரிப்பு ' கதையில் எதுவும் என்னை ஈர்க்கவேயில்லை.சம்பவங்களோ ,கதாப்பாத்திரமோ,மொழியோ ,விவரணைகளோ எதுவுமே சரிவரவில்லை என்றே தோன்றுகிறது.பூங்காவில் சந்திக்கும் நபர் கடவுளா? அவர் சொன்னதும் எல்லாமே மாறிவிடுகிறது.இது பேண்டசியாகவும் இல்லை,யதார்த்தமாகவும் இல்லை, அந்த நபர் வந்து சந்திப்பது ஒரு தற்செயல் என்றும் கூட எடுத்துக்கொள்ள முடியவில்லை.
ஆசியா மேன்ஷன் - சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்று நகரத்திற்கு வருபவனின் சோகப்பகுதியை கொஞ்சமே கொஞ்சம் சுவாரஸ்யத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது.
சனிப்பெயர்ச்சி,ராமநேசன் எனது நண்பன் கதைகளில் மெல்லிய நகைச்சுவை இருந்தாலும் சொன்ன முறைகள் எவ்வித கவனமும் கோருவதில்லை

.ஊர் நலன், காதுகள் உள்ளவன் கேட்கக்கடவன் ஆகியவை ஏதோ பார்த்து சலித்த திரைப்படத்தையே மீண்டும் மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வையே தருகிறது.இத்தனைக்கும் இந்த இரண்டு கதைகளிலும் விவரணைகள் கூர்மையான தொனியில் இருக்கிறது.

மொத்தமாக சொன்னால் விஜய் மகேந்திரன் சிறந்த கதைகளை தரக்கூடிய தடயங்கள் இந்த தொகுப்பில் பல இடங்களில் தென்படுகிறது.
நகரத்து வாழ்வை அவர் மிக கூர்மையாக கவனிக்கிறார்.ஆனால் மொழியும் சொல்முறையும் இன்னும் வலுவாக வேண்டும்.இப்போதைய மொழியும்,சொல்முறையும்,கதைகளும் எளிமையின் துவக்க எல்லைக்கோட்டையொட்டியே பயணித்துக்கொண்டிருக்கிறது.தொகுப்பின் பின்னட்டையில் விஜய் மகேந்திரன் குறித்தும்,அவரது கதைகள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கும் முழுமைக்கும் நான் உடன்படுகிறேன்.

அன்புடன்,
சசி


--

1 comment: