Tuesday, October 11, 2011

குறுங்கவிதைகள்

மைனா ,குயில்
சத்தமெல்லாம் கேட்கும்
புறநகர் வீட்டில்
மனிதர்கள் மட்டும்
அமைதியாகிவிடுகிறார்கள்.

திரும்பி திரும்பி
பார்க்கிறோம்
திரும்ப வராத
அடுக்குமாடி கட்ட விற்ற
பூர்விக வீட்டை.

முழுக்க இந்நாள்
மனைவியாய்
மாறிப் போயிருந்த
முன்னாள் கல்லூரி தோழியை
நேற்று சந்தித்தேன்.

வண்டியை நிறுத்தும்
போது எச்சரித்தார்..
கூடாதென
எடுக்கும் போது பார்த்தேன்
வன்முறையின் சிறுகீறலை

ஐம்பது ரூபாய் கூலி
வாங்கும் பையன் நிற்பது
தலைவரின் நூறு ரூபாய்
படத்திற்காக .

கண்ணாடி சில்லுகள்
சாலையெங்கும்
சிதறிக்கிடக்கின்றன .
மனைவி இவ்வழியேதானே
அலுவலகம் செல்லுகிறாள்.

ஆகப்பெரிய சாதனையாளர்களையும்
அவன் இவன் என்றுதான்
பேசுகிறோம் மறைவாக.

நீ வேறு நான் வேறு இல்லை
என்றவளே
திருமண அழைப்பிதழில்
என் பெயர் இல்லை
என்றுவிட்டாயே..

அம்மா சொன்ன பல கதைகள்
நினைவிருந்தும்
என் மகளுக்கு சொல்லத்தான்
என்னிடம் கதைகள் இல்லை.

உன் ஓராயிரம்
குறைகளையும்
ஒரு முத்தம்
நிவர்த்தி செய்துவிடுகிறது.

உன்னிடம் ரகசியங்கள்
நிற்பதில்லை
என்னை மட்டும்
மிக அந்தரங்கமாய்
இருக்க நிர்பந்திக்கிறாய்.

அற்ப விஷயங்களுக்காய்
சண்டையிடுபவர்கள்
நினைப்பதில்லை
இப்போதெல்லாம்
அரிதாகவே கிடைக்கிறது
நட்பு.

Thursday, September 15, 2011

யவன ராணி

என் பிரிய அடிமைகள்

கனிவானவர்கள்

இரக்கமுடையவர்கள்

என்னிடம் அவர்கள்

பிறந்த மேனியாய்

வருகிறார்கள்நான் அவர்களுக்கு

ஆடை,லாஹிரி தந்து

அரவணைத்து கொள்கிறேன்என் பிரிய அடிமைகள்

கனிவானவர்கள்

இரக்கமுடையவர்கள்

வஞ்சனையற்றவர்கள்அவர்களின் நித்திரைப்பொழுதில்

கோர்த்த விரல்களிடையே

நீண்ட கூர்வாளொன்றை

திணித்து வைக்கிறேன்.என் எதிரிகளிடத்தே

அதை எவ்வாறு

சுழற்றுவது எனக்

கற்றுக்கொடுக்கிறேன்.உங்களை எனக்கே

மட்டுமாய்

பத்திரப்படுத்துகிறேன்.நீங்கள் எனக்காய்

பயன்படுத்தும்

அத்தருணங்களில்

கட்டியணைத்து

சிறிய முத்தமொன்றை

பரிசளிக்கிறேன்உங்களுக்கு நெருங்கிய

நண்பர்களை

பகைவர்களாக்கச் செய்கிறேன்.நாடு முழுவதும்

என் புராணம்

பேசித்திரிய வைக்கிறேன்.வென்று வா என்றால்

கொன்றுவரும்

உங்களின் நேர்மை

எனக்கு பிடித்தமாய் இருக்கிறது.பரிசாய் நீங்கள்

என் நிர்வாண மேனியாய்

புசிக்கக் கேட்கிறீர்கள்கொடுத்த முத்தங்களும்

ஆகச்சிறந்த விருந்துகளும்

மட்டுமே உங்களுக்கானது

என்கிறேன்.எனது உடல்

அதிகாரம் உள்ளவர்களால்

மட்டுமே சுகிக்கக்கூடியது.

ஒருபோதும் அடிமைகளுக்கல்ல

என்பதை உணர்த்துகிறேன்.நீங்கள் என்னை

வன்புணர்ச்சி

செய்ய முற்படுகிறீர்கள்உங்கள் கையில் கொடுத்த

வாளைப் பறித்து

தலையை கொய்து எறிகிறேன்.ஆயிரத்தி இரண்டாய்

உங்கள் தலை

எனது எண்ணிக்கையில்

கூடுகிறது,என் பிரிய அடிமைகளே

நீங்கள் புத்திசாலிகள்

என்னிடம் மட்டுமே

எப்போதும்

முட்டாள்களாகவே இருக்க

விருப்பமாய் இருக்குறீர்கள்

Saturday, August 6, 2011

அதிகாலையில் தொலைந்து போகும் காதலர்கள்


என் கருத்த ஆன்மா
உன் பளிங்கான
பால் மனதுடன்
கலந்து
பருகச்சிறந்த
தேநீர் ஆயிற்று.

தனித்தனி நூலாக
கண்டுகளில்
சுற்றிக்கிடந்த
நாம்
இணைந்து
இன்றிரவு ஆடையாய்
பரிணமிக்க இருக்கிறோம்.

கண்ணாடி குவளையில்
ஊற்றப்பட்ட
வோட்காவின் மேல்
மிதந்தலையும்
இரு செவ்வகவடிவ
பனிகட்டிகளாய்
கரைந்து
அமிழ்ந்து
வெளியெங்கும்
நிரம்புகிறது
திவ்ய போதை.

அதிகாலையில்
இந்நகரத்திலிருந்து
தொலைந்து போயிருந்தோம்
நாம்.
யாரும் அறியவில்லை.
நீ எனக்குள்ளும்
நான் உனக்குள்ளும்
ஒளிந்திருந்ததை.

Tuesday, July 5, 2011

அதிர்வுகளின் பரிணாம வீச்சு – ஆரண்யகாண்டம் கலந்துரையாடல்


[விஜய மகேந்திரன், ஆரண்யகாண்டம் திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, வேடியப்பன், விநாயக முருகன்]

ஜீலை இரண்டாம் தேதி, ஆரண்யகாண்டம் கலந்துரையாடல் என பேஸ்புக்கில் நண்பர் வினாயகமுருகனும், விஜயமகேந்திரனும் அழைத்திருந்தார்கள். சினிமா மீதான கூர்மையான ரசனையோ, உத்திகள் குறித்த அறிவோ இல்லையென்றாலும், கலந்து கொள்வது இரண்டையும் கொஞ்சம் வளர்க்கும் என்ற நம்பிக்கையில்தான் கலந்துகொள்வதாய் தீர்மானித்திருந்தேன். முன்னதாக என்னவென்று சொல்லத்தெரியாத ஒரு ஈர்ப்பும் ஆரண்யகாண்டம் படத்தின் மீது இருந்தது. சுப்பு, சிங்கப்பெருமாள், சப்பை, கொடுக்காப்புளி, பெயர் தெரியாத சப் இன்ஸ்பெக்டர், வாழ்ந்து கெட்ட ஜமீன் என வெவ்வேறுவித மனிதர்கள் கலந்து கோர்க்கப்பட்ட திரைக்கதையும் அதன் காட்சிக்கோணங்களும், இதனை மனதில் கருவாக வரித்து அலைந்த படைப்பாளியை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆர்வமும் இன்னொரு காரணம்.

நிகழ்வு மணி ஆறுக்கு ஆரம்பித்தது. கலந்துரையாடலுக்கு முன்னதாக பீப்பிள்ஸ்தியேட்டரின் ‘ நீங்களே சொல்லுங்க’ எனும் ஓரங்க நாடக நிகழ்வு. நிகழ்த்தியவர் தம்பி சோழன். இன்னும் மனதின் ரகசிய ஓரங்களில் சிறு அதிர்வுகளை உருவாக்கிக்கொண்டிருக்கும் நிகழ்வு அது.
[பீபுள்ஸ் தியேட்டர் சார்பாக “ நீங்க சொல்லுங்க” - என்ற நாடகத்தை அரங்கேற்றும் தம்பி சோழன்.]

கூட்டத்தின் நடுவில் வந்தவர் தன் பெயர் நீலகண்டன் என்றும் மனநிலை காப்பகத்தில் மன நிலை ஆலோசகராகப் பணிபுரிவதாகவும், தன்னிடம் ஆலோசனைக்கு வந்த இருவரின் கதையை பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் சொன்னார். இரண்டுகதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை.
முதல் கதை திரைப்படவெறியில் மன நிலை பிறழ்ந்த ஒரு பெண்ணைப்பற்றியது. தன்னை நடிகர் அஜீத்தின் மனைவியென்றும், சிறு மனஸ்தாபத்தினால் அஜீத்தைப்பிரிந்து அப்பாவீட்டில் இருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருக்கிறாள். இதற்காக அப்பாவும் மகளும் அழுதுகொண்டிருப்பதாக மன நிலை ஆலோசகர் சொல்கிறார். மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கிறார். தன் பெயர் நீலகண்டன், மன நிலை ஆலோசகர். கொஞ்சம் திடுக்கிட்டு நிமிர்ந்து உக்காருகிறேன். எதையோ சொல்லவருகிறார் என. இரண்டாவது மனநிலை பிறழ்வாளரின் கதை. ஒரு பூங்கா ஒன்றில் சந்தித்த நபர், தனக்கு யாரைபார்த்தாலும் கொல்லத்தோன்றுகிறது. இதற்கான காரண்ம் என்ன என ஆலோசனை கேட்கிறார். அவர் கதையைச் சொல்லும்போதே மறுபடியும் சுய அறிமுகத்தை ஆரம்பிக்கிறார். விளக்குகள் அணைகிறது. ஸ்ரீ நேசனின் ஒரு கவிதையை வாசிக்கத் தொடங்குகிறார். ( விளக்குகள் அணையும்பொழுது மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொள்ளும்படியும், கவிதை வாசிக்கப்படும்பொழுது உடன் சேர்ந்து வாசிக்கும்படியும் துண்டுப்பிரசுரம் கொடுக்கப்ப்ட்டிருந்தது.)

கவிதைக்குள் மூன்றாவது கதை வருகிறது. ஒரு குடும்பம் வழக்க்ம்போல் துயிலெழுகிறது. இருக்கும் பாலைக்காய்ச்சி டீ போட்டுக்குடிக்கிறார்கள். கடைத்தெருவிற்குப்போகிறார்கள் (கவிதையை கலந்துரையாடலுக்கு வந்திருந்தவர்களும் பின்பற்றி சொல்லிக்கொண்டிருக்கிறோம்)

ஆர்ப்பாட்டமான கடைத்தெரு வழக்கத்திற்கு மாறான
அமைதியாக இருந்தது.

ஆர்ப்பாட்டமான எங்கள் குழந்தையும் வழக்கத்திற்கு
மாறாக அமைதியாக இருந்தது.

ஆறு முழ நீளத்திற்கு நைலான் கயிறு வாங்கிக்கொண்டோம்
குழந்தைக்கு ஒரு ஐஸ்கிரீமும்

கவிதையின் இந்த இடத்தை இருட்டில், 20-30 குட்டி மெழுகுவர்த்தி வெளிச்சங்களுடன் கோரஸாக சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தை கற்பனை செய்து பாருங்கள். கிட்டத்தட்ட அற்புதமான உன்மத்த மன நிலை அது.

வீட்டிற்கு வந்து
தூக்கிட்டுக்கொண்டோம்
நாஙக்ள் தூக்கிட்டுக்கொண்டதற்கான காரணத்தை
இந்த உலகத்திடம் சொல்வதற்கு
எந்த முகாந்திரமும் இல்லை

கூட்டம் மொத்தம் ஒரு பித்து நிலையில் பின்சொல்லிச் சொல்கிறது இந்த வரிகளை அடையும் போது கட்டியங்காரனின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. “இந்த உலகத்திடம் சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை” . திடீரென இரு மருத்துவமனை ஊழியர்கள் இருவர் நடுவில் நுழைந்து பேசிக்கொண்டிருப்பவனை இழுத்துச் செல்கிறார்கள். ‘ இவன் ஒரு மன நோயாளி, இவன் பேசசைக் கேட்டதின் மூலமாக நீங்கள் நேரத்தை வீணடித்துவிட்டீர்கள்’ என மருத்துவமனை ஊழியன் சொல்கிறான். இரு ஊழியர்களும் மையபாத்திரத்தை இழுத்துச் செல்லும்போதே ஓங்கிய குரலில்
கத்துகிறான் கவிதையின் கடைசி வரியை “ நாங்கள் தூக்கிட்டுக் கொண்டதற்கான காரணம் அந்தக் குழந்தையிடம் சொல்லப்பட்டிருக்கிறது”. நாங்கள் தூக்கிட்டுக் கொண்டதற்கான காரணம் அந்தக் குழந்தையிடம் சொல்லப்பட்டிருக்கிறது”.

விளக்குகள் எரிகின்றன. கூட்டத்தின் பெரும்பாலான முகங்களில் புயல் கடந்த கலக்கம். சில வினாடிகள் தாமதித்து கைதட்டல் காதைப் பிளக்கிறது. அற்புதமான நிகழ்வு. ஸ்ரீ நேசனின் கவிதை, மருத்துவர் ஆனந்தனின் ஒரு பதிவு, மற்றும் கோபிகிருஷ்ணனின் ஒரு சிறுகதை மூன்றையும் பிணைத்த கதை என பிரசுரத்தில் சொல்லியிருக்கிறார்கள். கொஞ்ச நேரம் அந்த நிகழ்வில் ஊறிப்போய்க்கிடக்கிறேன். தற்கொலைக்காரணத்தைத் தெரிந்து கொண்ட குழந்தை இந்த மனபிறழ்ந்தவனின் நினைவில் எப்படி வருகிறது? நடிகரின் மீது கொண்ட பித்தால் பிறழ்வடைந்த பெண், எல்லாரையும் கொலைசெய்யும் வெறி கொண்ட ஆண், மனப்பிறழ்வைடைந்த இளைஞன், தற்கொலையின் காரணத்தைத் தெரிந்த ஒரே ஒரு குழந்தை எல்லாம் எந்த புள்ளியில் ஒன்று சேருகின்றன? சில கேள்விகளுக்குப் ஒன்றுக்கு மேற்பட்ட பதில்கள். சில கேள்விகளுக்கு பதிலே இல்லை என்பதுதான் உண்மை.

o

பிறகு ஆரண்யகாண்டம் கலந்துரையாடல் நிகழ்வு தொடங்கியது. முதலாவதாக காலச்சுவடு அரவிந்தன் ஆரண்யகாண்டம் குறித்த தனது கருத்துக்களைக் கட்டுரையாக கொண்டுவந்திருந்து வாசித்தார். (யாராவது இந்த கூட்டங்களில் கட்டுரை வாசிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு முயற்சிசெய்யுங்களேன் பிளீஸ். தம்மடிக்கும் இடைவெளியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள் :( ) அடுத்து கவிதா முரளிதரன். தனது கருத்துக்களை குறிப்புகளாகக் கொண்டுவந்து விளக்கமாக சொன்னார். பெரும்பாலான கருத்துக்கள் சுரேஷ்கண்ணனின் இந்த விமர்சனத்தையொட்டியோ, அதை மேற்கோள் காட்டியோதான் இருந்தது. ஒரு கடை நிலை சினிமா ரசிகை இடத்திலிருந்து தான் ரசித்த இடங்களை, ரசித்த பாத்திரங்களைப்பற்றிச் சொன்னார். பிறகு வெளி ரங்கராஜன். ( தனிப்பட்ட முறையில் மற்ற இருவரையும் விட ரங்கராஜனின் விமர்சனம் அல்லது கருத்து கொஞ்சம் கூர்மையாக இருந்ததாக கருதினேன் ) மூவர் பேசியதின் ஒரே சாராம்சமாக தொகுத்துச் சொன்னால் இப்படி வரும்.

“ ஆரண்யகாண்டம் குறிப்பிடத்தகுந்த முதல்-வகை முயற்சி. நிறைய லாஜிக் ஓட்டைகள். சுப்பு இறுதிக்காட்சியில் மரணமடையாமல் தப்பித்தது வரவேற்கத்தகுந்த வித்தியாசம். ” இது போக சப்பை, சுப்பு, ஜமீந்தார் மற்றும் சிறுவனின் பாத்திரப்படைப்பு.

o

கலந்துரையாடல் என்ற அர்த்ததில் வந்தவர்களைவிட க்லந்துரையாடலைக் கவனிக்க வந்தவர்கள்தான் அதிகம் போன்ற ஒரு உணர்வு எழுந்தது. சுமார் 50-60 நபர்கள் வந்திருக்கலாம். அதில் குறிப்பிட்ட 5-6 பேர் தொடர்ந்து கேள்விகள் கேட்க அதற்கு இயக்குனர் குமாரராஜா பதில் சொல்லிக்கொண்டிருந்தார். குமாரராஜாவின் பதில்களைப்பற்றி குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயமாக நான் கருதுவது, அவர் பதில்களும், ப்டத்தைப்போலவே எதிர்பபாராத முடிவுகளை விட்டுச்செல்வதாகத் தோன்றியது. நண்பர்கள், குறிப்பிட்ட காட்சியை அதீத கவனத்துடன், “ இப்படி ஒரு காட்சி இருக்கிறது. இதன் மூலம் என்ன சொல்லவருகிறீர்கள் அ எதைக்குறிக்க இந்த காட்சி வைத்தீர்கள்” என கூர்மையான கேள்விகள் வைக்கப்படும்போதெல்லாம் குமாரராஜா “ எதோ எனக்கு அந்த இடத்தில் அதை வைத்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது எனவே வைத்தேன். பெரிதாய் எந்த உள் நோக்கமும் இல்லை என பலூனை உடைக்கிறார். சில கேள்விகள் “ இந்தக் காட்சி தேவையேயில்லையே ரகமான எளிய கேள்விகளை வைக்கும்போது “குறிப்பிட்ட காட்சி எப்படி படத்தின் போக்கை மாற்றுகிறது அல்லது அதன் குறியீட்டு அர்த்தம் என்ன என வித்தியாச கோணங்களை முன்வைக்கிறார். படம் பார்க்கும்போது சீரியஸ் காட்சி நகைச்சுவையாகவும், நகைச்சுவை காட்சி சீரியஸாகவும் முடியும் உத்தி இந்த இடத்தின் நினைவுக்கு வந்தது.

பெரும்பாலானவர்கள் கேட்க விரும்பிய கேள்விகளை நண்பர் விஜயமகேந்திரனே தொகுத்து வைத்திருந்து, வரிசையாக கேட்டது நிகழ்ச்சியை கொஞ்சம் சரியான பாதையில் கொண்டு சென்றதாகத்தோன்றியது. இருந்தாலும் “ சிங்கப்பெருமாளின் ஆடையில்லாத காட்சி எதற்காக, விருதுவிழாக்களுக்குப்போகும் எல்லாத் திரைப்படங்களிலும் ஒரு ஆடையில்லாத காட்சி இருப்பதைப்போலவா” போன்ற அபத்த கேள்விகளைத் தவிர்த்திருக்கலாம்.

o

யாரைப்பார்த்து இன்ஸ்பையர் ஆனீர்கள்? அடுத்த படம் என்ன? இந்த படத்தின் காட்சிகளை மாற்றவேண்டும் என ஆசைப்பட்டீர்களா போன்ற வழக்கமான கேள்விகள் கொஞ்சம் சலிப்பூட்டின. அவற்றையும் சமாளித்து, பொறுமையாக நேர்மையாக குமாராராஜா பதிலளித்தவிதம் அருமை. அதிலும், ‘புரியாத காட்சிகள் வைப்பது அதைப்பார்ப்பதற்காவது இரண்டாவது முறை தியேட்டர்க்கு வருவீர்கள் தானே” என சிரித்துக்கொண்டே பதில் சொன்னது நச்.

o

புதிய முயற்சிகளுக்கான வேட்கைகளுடன் படைப்பாளி எல்லா காலகட்டத்திலும் தயாராகத்தான் இருக்கிறான். அதற்கான வரவேற்பும் அது மக்களிடையே கிளப்பும் விவாதங்களும் மட்டுமே அந்த முயற்சிகளை நோக்கிய பயணத்தை நோக்கி படைப்பாளியைச் செலுத்துகிறது. என்னைப்போன்ற புதியவர்களுக்கு படைப்பைப்பற்றிய புதிய பரிணாமங்களைக் காட்டுகிறது. இப்படி ஒரு நிகழ்வை முன்னின்று செலுத்தியதற்காக நன்றிகள் வினாயகமுருகன், விஜயமகேந்திரன்.

o

-லதாமகன்

Thursday, June 30, 2011

கனிமொழி என் நண்பர்-மனுஷ்யபுத்திரன்
சமீபத்தில் சண்டே இந்தியன் இதழில் வெளிவந்துள்ள பேட்டியில் சாரு நிவேதிதா கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த அவரது புத்தக வெளியீட்டு விழாவிற்கு கனிமொழி அழைக்கபட்டதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது முழுக்க முழுக்க பதிப்பாளரின் விருப்பம். இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாது என்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா தன்னலம் இல்லாதவர் என்று ஜெயலலிதாவையே அதிர்ச்சியடையச் செய்யும் ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். கொஞ்ச நாளுக்கு முன்புதான் ஒரு தமிழ் எழுத்தாளர் கருணாநிதியை ’கடவுள்’ என்று அழைத்து பெரும் புகழ் பெற்றார். அவருக்கான பரிசு கடந்த தேர்தலில் அவருக்குக் கிடைத்தது. சீசருக்கு உரியது சீசருக்குக் கிடைக்கும்.இந்தக் கருத்தின் மூலம் என்னை தி.மு.க காரனாகவும் அவரை அ.தி.மு.க காரராகவும் நிறுவுவதற்கு சாரு விரும்புகிறார். என்னுடைய நட்பை இழப்பதன் வாயிலாக அவர் அதன் நஷ்டத்தை எப்படி உடனடியாக சந்திக்கிறார் பாருங்கள். அவரை இவ்வளவு பலவீனமாக கருத்துச்சொல்ல நான் அனுமதித்ததே இல்லை. இப்படி சொன்னால் ஜெயலலிதா என்னை உடனே ஜெயில் தூக்கிப் போட்டுவிடுவார் என்று யோசிக்கிறார். இவ்வளவு எளிமையாக சாருவைத் தவிர யாரும் யோசிக்க முடியாது. தமிழ் எழுத்தாளர்களைவிட ஜெயலலிதாவும் கருணாநிதியும் எவ்வளவோ ஜனநாயக பண்புகள் கொண்டவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஜெயமோகன் கருணாநிதியின் மீது செய்த விமர்சனங்களுக்காக கருணாநிதி அவரை ஒரு ட்ரான்ஸ்பருக்கு கூட முயற்சி செய்யவில்லை. முரசொலியில் கவிதை எழுதினார். ’அரசி’ கவிதை எழுதிதற்காக ஜெயலலிதா என்மேல் என்ன கஞ்சா கேஸா போட்டார்?ஆனால் ஜெயலலிதாவை தன்னலம் அற்றவர் என எழுதுவது சுயமுன்னேற்றதிற்கான ஒரு செயல். ரவிபெர்னாட் இந்த வேலையை பத்து வருடமாக செய்ததன் விளைவாக இன்று அவருக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்திருக்கிறது. சாருவுக்கு உரியது சாருவுக்கு கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஜெயலலிதா தன்னலமற்றவராக இருக்கவேண்டும் என்றுதான் நானும் உளமாற விரும்புகிறேன். அப்படி இருந்தால் அடுத்த தேர்தலில் நான் அவருக்கு வாக்களிப்பேன். ஆகவே சாரு அ.தி.மு.கவிலோ பஜ்ரங்தள் ளிலோ இருப்பது அவரது தேர்வு. நாம் அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் எனது நிர்ப்பந்தத்தினாலேயே கனிமொழி அழைக்கப்பட்டார் என்று அவர் சொல்வது தொடர்பாக ஒரு சிறு விளக்கம்.கடந்த ஆண்டு டிசம்பர் 13 புத்தக வெளியீட்டு விழாவில் சாரு தான் கனிமொழியை அழைத்தது தொடர்பாக கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.’’கனிமொழிக்கு நன்றி சொல்லணும். அவங்க கிளம்பிப் போயிட்டதால என் நன்றியை வீடியோவில பார்த்துப்பாங்கிறதால விளக்கமா சொல்லிடுறேன். அவங்க ஹிந்துலே வேலை பார்த்துட்டு இருந்தப்போ அடிக்கடி அவங்கள ஃப்லிம் சேம்பரில பார்ப்பேன். அவங்க கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்க எனக்கு ரொம்ப பிடிச்ச கவிஞர் என்பதால தயக்கத்தோடு போய் ஹலோ சொன்னேன். அவங்களும் ரொம்ப எளிமையா ஹலோ சொன்னாங்க. என் ரைட்டிங் படிச்சிருக்கீங்களான்னு கேட்டன். இல்லை. கேள்விப்பட்டிருக்கேன்னாங்க. உடனே அவங்களுக்கு என்னோட முதல் நாவலை அனுப்புறதா சொன்னேன். 15 நாள் கழித்து பார்த்தப்ப புக் கிடைக்கலைன்னாங்க. நான் அனுப்பினாத்தானே கிடைக்கும். நேரிலேயே கொடுத்தேன். ஒரு கூட்டத்தில கனிமொழி சொன்னாங்க, சாரு என்னை adopt பண்ணிக்கிட்டாருன்னு. நிறைய சண்டை போட்ருக்கோம். நிறைய டிஸ்கஸ் பண்ணியிருக்கோம். கனிமொழி ரொம்ப down to earth. அவங்க normal politician கிடையாது. இவங்க punch ரொம்ப நல்லா இருக்கும். ஒரு முறை சுப்ரமணியசுவாமி எதிர்ல வந்தப்பா ஹலோ சொல்லியிருக்காங்க. உடனே அவர் உங்க அப்பா கோவிச்சுக்கப் போறார்னு சொல்லியிருக்கார். அதுக்கு கனிமொழி, எங்க அப்பா கோவிச்சுக்க மாட்டார். உங்க அம்மா கோவிச்சுக்காம இருக்கணும் சொல்லியிருக்காங்க. அம்மான்னு சொன்னது ஜெயலலிதாவ.

இந்த கூட்டத்துக்கு நான் கனிமொழிய கூப்டத்துக்கு ஏகப்பட்ட விமர்சனம். சாரு தி.மு.க.ல சேரப் போறான், அதிகாரத்தின் பக்கம் போறான்னு. அதெல்லாம் கிடையாது, கனிமொழி ஒரு ஃப்ரெண்ட். கனிமொழி, தமிழச்சி எல்லாம் எங்க வீட்டு உறுப்பினர்கள் மாதிரி. கனிமொழிய பற்றி ஒரு நாவலே எழுதலாம். ஒரு முறை ஒவ்வொரு எழுத்தாளருக்கும் நான் ஒரு சினிமா தலைப்பை பட்டபெயராகக் கொடுத்தேன். அப்போது நான் கனிமொழிக்குக் கொடுத்த பெயர் ‘அழகாய் இருக்கிறாய், பயமாய் இருக்கிறது’இந்த மாதிரி நிறைய எபிஸோட்ஸ்.’’இந்த இடத்தில் சாரு இன்று தன்னை அழிக்க, ஒடுக்க நினைப்பததாக பிரச்சரம் செய்துவரும் ஒரு நிறுவனம் பற்றி 6 மாததிற்கு முன்பு குறிப்பிடும் கருத்துக்களையும் சேர்த்துப் படியுங்கள்.

’’உயிர்மைதான் என்னை வளர்த்தது என்று சொல்வேன்..ஒவ்வொரு ப்ரஸ்ஸாக என்னுடைய புத்தகங்களைப் பதிப்பிக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். அப்போது காலச்சுவடிலிருந்து மனுஷ்ய புத்திரன் வெளியே வந்து உயிர்மை ஆரம்பித்ததன் மூலம் எனக்கு ஒரு விடிவுகாலம் பிறந்தது. உயிர்மை இல்லையென்றால் நான் இல்லை. உயிர்மை என்னை வளர்த்தது. நான் இல்லையென்றால் எஸ்.ராமகிருஷ்ணனோ வேறு ஏதோ ஒரு ராமகிருஷ்ணனோ எழுதியிருப்பார்கள். உயிர்மையில் நான் ஒரு கடைநிலை ஊழியன் மாதிரி. உயிர்மையில் எனக்கு ஃபோரம் கிடைத்தது. ஸ்பேஸ் கிடைத்தது. உயிர்மைக்கு நான் என்றைக்கும் நன்றியுடையவனா இருப்பேன். நல்லி செட்டியார் மாதிரி உயிர்மை ஒரு பெரும் passion னோடு இலக்கியத்திற்கு சேவை செய்துகொண்டு இருக்கிறது.’’உணர்ச்சி பாவங்களோடு இந்தக் கருத்துக்களை பார்க்க விரும்புகிறவர்கள் இந்த வீடியோ இணைப்பிற்குச் செல்லலாம்

http://www.dailymotion.com/video/xhen2c_charu-2010-charu-speechvideo_creationஉயிர்மையின் அனைத்து நூல் வெளியீட்டுக் கூட்டங்களிலும் அதன் பேச்சாளர்கள் சமபந்தப்பட்ட நூலாசிரியர்களின் விருப்பப்படியே இதுவரை தேர்வு செய்யப்பட்டிருகிறார்கள். அவர்களைத் தொடர்புகொண்டு அழைக்கும் பொறுப்பைக்கூட அவர்கள்தான் செய்திருகிறார்கள். உயிர்மை கூட்டங்களில் கமல்ஹாசன், மணிரத்தினம், வைகோ, ஸ்டாலின், சீமான், திருமாவளவன், வைரமுத்து என்று ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத எத்தனையோ பேர் வந்து பேசியிருக்கிறார்கள். அவை அனைத்தும் அந்தந்த நூலாசிரியர்களின் தேர்வு மட்டுமே. சாரு, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், தமிழச்சி தங்கபாண்டியன் இன்னும் பல படைப்பாளிகளின் கூட்டங்கள் அப்படித்தான் ஒழுங்கு செய்யபட்டிருக்கின்றன. இவ்வளவு ஏன் பொன். வாசுதேவன், நிலா ரசிகன், முகுந்த் நாகராஜன் போன்ற இளம் படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு விழாக்களின்போதுகூட பேச்சாளர்களை பரிந்துரைக்கும்படி அவர்களுக்கு பல முறை ஃபோன் செய்வேன்.( அவர்கள் ’நீங்களே பேசினால் நல்லா இருக்கும்’ என்று சொல்லி என்னை சித்தரவதை செய்வது வேறு கதை) உதாரணமாக கடந்த டிசம்பரில் சாருவின் கூட்டதிற்கு அழைக்கபட்ட குஷ்புவின் மொபல் நம்பர் சாருவுக்குதான் தெரியும், எனக்குத் தெரியாது.( கடைசி நேரத்தில் குஷ்பு வரவில்லை). எனது நிர்ப்பந்தத்தால் அழைக்கப்பட்ட ஒருவருடன் நடந்து கொண்டது போலவா சாரு அன்று நடந்துகொண்டார்? அவர் கனிமொழியிடம் காட்டிய இணக்கத்தை அன்று கூட்டத்தில் இருந்த அத்தனை பேரும் புன் சிரிப்புடன் பார்த்துக்கொண்ருந்தார்கள்.. ஆனந்த விகடனின் சாரு கனிமொழி கூட்டதிற்கு வருவது பற்றி அவ்வளவு புளாகாங்கிதத்துடன் எழுதினார்.

இதையெல்லாம் சொல்வதற்கு காரணம் கனிமொழிக்கும் எனக்கும் எந்த நட்பும் இல்லை என்று சொல்வதற்காக அல்ல. அப்படிச் சொலவதற்கான அவசியம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. நான் எனது புத்தகத்தை அவருக்கு சமர்ப்பணம் செய்தபோது தி.மு.க ஆட்சியில் இல்லை. இப்போது மிக இக்கட்டான நிலையில் அவர் இருக்கும் சந்தர்ப்பத்தில் அவரை என் நண்பர் என்று குறிப்பிட விரும்புகிறேன்.இன்று 2 ஜி விவகாரத்தில் அவரது பங்கு தொடர்பாக எனது விமர்சங்களை முன்வைப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. சமீபத்தில் 2 ஜி விவகாரத்தில் கனிமொழி-ஆ.ராசாவுக்கு ஆதரவாக துண்டுப் பிரசுரம் வினியோகித்தற்காக எழுத்தாளர் இமையத்தை திட்டி உயிர்மையில் எழுதினேன். ஆனால் ஒரு நண்பனாக கனிமொழியின் இன்றைய நிலை எனக்கு ஏற்படுத்தும் துயரத்திற்கும் அவல உணர்ச்சிக்கும் அளவேதும் இல்லைகனிமொழியை தங்கள் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் வலியப் போய் சேர்த்துக்கொண்டவர்கள், அவரது முதல் பாராளுமன்ற உரையை வரிக்கு வரி அச்சிட்டு புளகாங்கிதம் அடைந்தவர்கள் இன்று கனிமொழி கணவனுக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறார் என்று எழுதுகிறார்கள். கணவர் அதற்கேற்ற உடல் பருமன் கொண்டவர் என்று எழுதுகிறார்கள்.கனிமொழியின் பேட்டியை மாதம் ஒருமுறையேனும் வெளியிட்டுக்கொண்டிருந்த பத்திரிகைகள் இப்போது அவரது கவிதைகளின் இலக்கியத் தரமின்மை பற்றி விவாதம் நடத்துகின்றனகனிமொழி யாரை நோக்கி ’அவர் எனது தந்தையைப் போன்றவர் ’என்றுநெகிழ்ச்சியுடன் அழைத்தாரோ அவர் இன்று கனிமொழி ஜெயிலில் எப்படிக் குளிப்பார், அவரது கணவருக்கு ஃபீஸ் எவ்வளவு என்று எழுதுகிறார்.இது என்ன மாதிரியான காலம்? இவ்வளவு பெரிய இழிவை நோக்கி மனிதர்கள் எப்படி வந்து சேருகிறார்கள் என்பதை நம்பக்கூட முடியவில்லை.கனிமொழியின் கவிதைகள் உலகத் தரமானவை என்று எழுதியவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் வந்ததில்லை. நான் பேட்டிகளில் நம்பிக்கைக்குரிய கவிஞர்களின் பெயர்களை சொன்ன சந்தர்ப்பதில்கூட அவரது பெயரைச் சொன்னதில்லை என்று அவருக்கு என்மேல் மிகுந்த வருத்தம் உணடு. கடந்த ஐந்தாண்டுகளில் அவரிடம் இரண்டு முறை சிறு உதவிக்காக போயிருக்கிறேன். இரண்டு முறையும் அதை அவர் மறுத்திருக்கிறார். அதைப் பற்றி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. நானும் அவரும் பங்கேற்ற மேடைகளில் அவர் பல முறை நான் பேசியதை கடுமையாக மறுத்துப் பேசியிருக்கிறார். குட்டி ரேவதி தொடர்பான சர்ச்சையில் அவர் என்னை திட்டியே எழுதினார். அவர் உயிர்மையில் ஒரு வரிகூட எழுதியதில்லை. அதனால் என்ன? ஒரு நண்பராக அவர் எனக்களித்த அன்பும் மதிப்பும் கூடிய கணங்கள் இதனால் எல்லாம் இல்லாமல் ஆகிவிடுமா? அவரது நல்லியல்புகளைக் கண்டு வியந்த கணங்கள் பொய் என்று ஆகுமா? நான் மகாபாரதம் படித்து வளர்ந்தவன். பொது நீதிக்கும் தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கும் நடுவே உள்ள போராட்டத்தை அதுபோல சொன்ன ஒரு காப்பியம் இந்த உலகில் இல்லை. எவ்வளவு நீதியுணர்ச்சியுள்ள கர்ணன் துரியோதனை ஆதரித்து நின்ற தருணத்தை கவித்துவ நீதியால்தான் விளக்க முடியுமே தவிர உலகியல் நீதியால் அல்ல.எனக்கு கனிமொழியிடம் எப்போதும் எந்த எதிர்பார்ப்பும் இருந்ததில்லை. நாளை அவரை நான் எனது ஒரு புத்தக வெளியீட்டுக் கூடத்திற்கு எந்தத் தயக்கமும் இன்றி அழைப்பேன். 2 ஜி விவகாரம் நிரூபிக்கப்பட்டு அவர் தண்டனையடைந்தால் கூட அவர் எனது நண்பர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. திருட்டுக் குற்றத்த்தின் சந்தேகத்தின் பேரில் மரத்தை கட்டிவைக்கப்பட்ட ஒருவரை போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லாம் நாலு அடி அடிப்பதுபோல நமது பத்திரிகையாளர்கள் , எழுத்தாளர்கள் நடந்துகொள்கிறார்கள். அவரது பெயரைச் சொல்லி பொது இடங்களில் சிறு மதிப்பு தேட முயன்றவர்கள் இன்று அவரை மானபங்கம் செய்ய முற்படுகிறார்கள். நமது தார்மீக எழுச்சியின் அளவுகோல்கள் எவ்வளவு கபடத் தன்மை வாய்ந்தது என்பதை பார்ப்பதற்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் வரப்போவதில்லைஎதிர்பார்புகளோடும் ஆதாயங்கள் குறித்த கனவுகளோடும் உறவுகளை பராமரிக்க விரும்கிறவர்கள் அவை நிறைவேறாதபோது தடுமாறிப் போகிறார்கள்.சாருவை கொண்டாடிய நண்பர்கள், அவரை பாதுகாத்த நண்பர்கள் அனைவருக்கும் என்ன நடந்தததோ அதுதான் எனக்கும் நடக்கும் என்பது நன்கு அறிந்ததுதான். ஆனால் எனது முறை இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நான் நினைக்கவில்லை. அடுத்தது யார் என்பதும் ஏற்கனெவே முடிவாகி விட்டது.நான் ஒரு எழுத்தாளன். பத்திரிகையாளன், புத்தகங்களை அச்சிட்டு ஊர் ஊராகச் சென்று விற்பவன். எனக்கு கனிமொழியாலோ ஜெயலலிதாவாலோ ஆகவேண்டியது எதுவுமே இல்லை. யாரிடமிருந்தும் எதையும் பெற்றுக் கொள்ளாத ஒருவர் பொய்களைக் கண்டு அஞ்ச வேண்டியதுமில்லை.நாமார்கும் குடியல்லோம்

நமனையஞ்சோம்.

குதிவாதம் (Planter Fascitiis)

உங்கள் பாதத்தில் வலி ஏற்படுகிறது. அந்த வலி நீங்கள் காலையில் படுக்கையை விட்டு எழுந்து பாதத்தை நிலத்தில் வைக்கும் போது கடுமையாக இருக்கிறது. தொடர்ந்து நடக்கும்போது வலி குறைந்து விடுகிறது. இத்தகைய வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கிய காரணம் பிளான்டர் பியடிஸ் (Planter Fascitiis) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் நோய்தான். எம்மவர்கள் இதனைப் பொதுவாகக் குதிவாதம் என்பார்கள். ஆனால் இது தவறான அர்த்தத்தைக் கொடுக்கும் பெயராகும். வாதம் என்பது மூட்டுகளில் ஏற்படும் நோய். ஆனால் இது மூட்டுக்களில் ஏற்படும் நோயல்ல. எனவே உண்மையில் வாதம் அல்ல. பாதத்தின் அடிப்பகுதில் உள்ள சவ்வுகளின் அழற்சியாலேயே இந்நோய் ஏற்படுகிறது. மூட்டுகளில் அல்ல.

அத்துடன் பக்க வாதம் என்றும் பாரிச வாதம் என்று சொல்லப்படும் நோய்க்கும் இதற்கும் எத்தகைய தொடர்பும் கிடையாதுஎன்பதும் குறிப்படத்தக்கது.

எனவே இது ஆபத்தான நோயல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். சில்லறைத் துன்பங்களைக் கொடுக்கும் நோய் மட்டுமே. .

இந் நோயின் அறிகுறிகள் என்ன என்பதை முதலில் தெளிந்து கொள்ளுங்கள்.

இந்நோயின் முக்கிய அறிகுறி உங்கள் பாதத்தின் குதிப்பகுதியில் ஏற்படும் வலிதான். சிலவேளைகளில் அப்பகுதி சிவக்கலாம், வீங்கலாம், அல்லது சூடாக இருப்பதையும் நீங்கள் உணரக் கூடும். இவை அழற்சியின் அறிகுறிகளாகும். உங்கள் பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தடித்த உள்ளங்காலுக்குரிய சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சியால்தான் இந்நோய் ஏற்படுகிறது.

குதிவாதத்தினால் ஏற்படும் வலியானது முன்பே சொல்லியது போல முக்கியமாக அதிகாலையில் நீங்கள் படுக்கை விட்டு எழுந்து முதல் அடி வைக்கும்போது மிக அதிகமாக இருக்கும். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். ஆனால் கவனியாது விட்டால் நாட் செல்லச் செல்ல வலி நாள் முழுவதும் உங்களுக்குத் துன்பம் தரக் கூடும்.

குதிவாதம் ஏற்படக் காரணம் என்ன?

குதிவாதம் ஏற்படக் காரணங்கள் பலவாகவோ அன்றி ஒன்றோடு ஒன்று தொடர்புடைய வெவ்வேறாகவோ இருக்கலாம். உங்கள் குதிப் பகுதியிலும் காலின் கெண்டைப் பகுதியிலும் உள்ள தசைகளின் இறுக்கம் காரணமாக இருக்கலாம், மாறாக பாதப்பகுதியின் தளர்ச்சியும் காரணமாகலாம், அல்லது நீங்கள் செய்யும் உடற்பயிற்சியைத் தவறாகச் செய்வதும் காரணமாகலாம் , அல்லது உங்கள் பாதத்தின் இயற்கையான வளைவுப் பகுதிக்கு நீங்கள் கொடுக்கும் அதிகரித்த வேலைப் பளுவாகவும் இருக்கலாம். உதாரணமாக மிக நீண்ட தூரம் ஓடுதல், அதி வேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்ற பயிற்சிகளைக் கூறலாம்.

பொருத்தமற்ற அதாவது அளவற்ற காலணியை நீங்கள் உபயோகிப்பதும் குதிவாதத்திற்குக் காரணமாகலாம். அல்லது உங்கள் தொழில் காரணமாவோ அல்லது பொழுது போக்குப் பழக்கம் காரணமாகவோ, நீங்கள் குதிக்காலுக்குரிய சவ்வுக்கு அதிக வேலை கொடுத்து ஊறு விளைவிப்பதாலும் இருக்கலாம்.

.

எப்படி சிகிச்சையளிக்கப்படுகிறது?

உங்கள் வைத்தியர் உங்களுக்கு ஆலோசனை, பயிற்ச்சி முறைகள், மாத்திரைகள், ஊசி ஏற்றுதல் போன்ற பல்வேறு வகையான சிகிச்சைகளில் ஒன்றையோ அல்லது சிலவற்றைச் சேர்த்தோ அளிக்கக் கூடும். அவர் உங்களுக்கு அளிக்கும் சிகிச்சை உங்கள் குதிவாதம் ஏற்படுவதற்கான காரணத்தை அகற்றுவதாக இருக்க வேண்டும். அத்துடன் அதன் வேதனையைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும் அத்துடன் சிகிச்சையானது உங்கள் பாதத்தில் ஏற்பட்ட அழற்சியைத் தணிக்கவும் வேண்டும்.

முதலாவதாக உங்கள் பாதணியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் உள்ளங்காலுக்குரிய சவ்வுக்கு ஏற்பட்டுள்ள அதிக வேலைப்பளுவைக் கொடுக்காத, அதன் வேதனையைக் குறைப்பதற்கு ஏற்ற காலணிகளை நீங்கள் தேர்ந்து அணிய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலணி உங்கள் உள்ளங்காலின் இயற்கையான வளைவுக்கு இசைந்து ஒத்தாசை வழங்குவதான அமைப்புடையதாக இருக்க வேண்டும். அத்துடன் உங்கள் பாதணியின் அளவு உங்களுக்கு மினவும் பொருத்தமுள்ளதாக இருக்க வேண்டும்.

குதிவாதநோய் ஏற்பட்டுள்ள விளையாட்டு வீரர்களும்,மற்றும் துடிதுடிப்பான வாழ்க்கை முறை கொண்டவர்களும் தமது பாதங்களுக்கு மேலதிக வேலை கொடுப்பதைக் குறைக்க வேண்டும். அதாவது பாய்தல், ஓடுதல், துள்ளல் போன்றவற்றைச் செய்யும் நேரத்தைக் குறைக்க வேண்டும். உங்கள் பாத வளைவுக்கு ஏற்ற விசேட பாதணிகளும் சிலவேளை தேவைப்படலாம்.

காலையில் படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்க முன்னரே பயிற்சிகளை ஆரம்பியுங்கள். எழுந்தவுடன் உங்கள் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து மஸாஜ் செய்தால் எழுந்து நடக்கும் போது வலி குறைவாக இருக்கும்.

அடுத்தது தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். இவை உங்கள் நோயைத் தணிப்பதில் நல்ல பலனைக் கொடுக்கும்.

முழங்காலுக்குக் கீழ் இருக்கும் கெண்டைக்கால் தசைகளுக்கான இழுவல் பயிற்சிகளும் குதிக்கால் வலிக்கு உதவும். மேலே காட்டிய படங்களில் உள்ளபடி இரண்டு விதமாக செய்யுங்கள். சுவரை உங்கள் கைகளால் தள்ளுவது போன்றவையே இப் பயிற்சிகள். முதலாவது படத்தில் காட்டியபடி உங்கள் இரு கைகளையும் மடிக்காது நேராக வைத்துக் கொண்டு சுவரைத் தள்ளுங்கள். தள்ளுபோது முன்னிருக்கும் கால் சற்று மடிந்திருக்க பின்னிருக்கும் காலிலின் குதிப் பகுதியில் பாரம் தங்குமாறு செய்யுங்கள். அடுத்த தடவை கால்களை மாற்றி வைத்துச் செய்யுங்கள். .

பாதத்தின் தசைநார்களுக்குக் கொடுக்கும் பயிற்சிகளில் துவாயைச் சுருட்டல், மார்பிள் அல்லது நாணயங்களை கால் விரல்களால் பொறுக்கல், மற்றும் காற் பெருவிரல் தட்டல் பயிற்சிகள் சுலபமானவை. பயிற்சிகளின் பெயர்களைக் கேட்டவுடன் பயந்துவிடாதீர்கள். மிகவும் சுலபமானவை. தொடர்ந்து செய்ய நல்ல பலனையும் கொடுக்கும்.

துவாயைச் சுருட்டல் பயிற்சி - ஒரு துவாயை தரையில் விரியுங்கள். படத்தில் காட்டியபடி உங்கள் பாதத்தை அதன் ஒரு ஓரத்தில் வைத்தபடி அருகே ஒரு நாற்காலியில் உட்காருங்கள். துணியை உங்கள் கால்விரல் நுனிகளால் பற்றி உங்கள் பக்கமாக சுருட்டிச் சுருட்டி இழுங்கள். பல முறை இவ்வாறு செய்யுங்கள்.

இன்னுமொரு பயிற்சி கால் விரல்களால் மார்பிள்களை பொறுக்குவதாகும். சில மார்பிள்களை, அல்லது சில நாணயங்களை அல்லது சோடா மூடிகளை நிலத்தில் போட்டு வையுங்கள். அருகில் உயரம் குறைந்த ஒரு கோப்பையை வையுங்கள். உங்கள் குதிக்கால் நிலத்தில் படும்படி உட்கார்ந்து கொண்டு மார்பிள்களை உங்கள் கால் விரல்களால் பொறுக்கி எடுத்து அருகில் ஏற்கனவே வைத்த கோப்பைக்கள் போடுங்கள். நாணயங்களை இவ்வாறு பொறுக்கிப் போடுவது இன்னும் நல்ல பயிற்சியாகும்.

இது ஒரு நுணுக்கமான ஆனால் சிறந்த பயிற்சியாகும். உங்கள் பாதத்தின் குதிப் பகுதி தரையில் திடமாக இருக்கும்படி வைத்தபடி கால் விரல்களை மட்டும் மேலே உயர்த்துங்கள். இப்பொழுது நான்கு விரல்கள் உயர்ந்தபடி நிற்க பெருவிரலால் மாத்திரம் தரையைத் தட்டுங்கள். இனி மறுபுறமாகச் செய்யுங்கள். அதாவது பெருவிரல் உயர்ந்து நிற்க மற்ற நான்கு விரல்களால் தரையைத் தட்டுங்கள்.

இவ்வாறு பலமுறை செய்ய வேண்டும். ஒரு தவணையில் பத்து முறையாவது செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொரு தவணையிலும் ஜம்பது முறையாவது செய்யும்படி பயிற்சியை அதிகரியுங்கள்.

குதியில் ஏற்பட்ட அழற்சியைத் தணிக்க ஐஸ் மஸாஸ் சிலருக்கு உதவக் கூடும். ஒரு சிறிய பேப்பர் கோப்பையில் நீரை வைத்து குளிர்சாதனப் பெட்டி மூலம் ஐஸ் ஆக்குங்கள். கோப்பையிலிருந்து ஐஸ் வெளியே தெரியும் பகுதியை பாதத்தின் வலிக்கும் இடத்தின் மேல் வைத்து அழுத்துங்கள். மிதமான அழுத்தத்துடன் சுற்றுவட்டமாக 5 முதல் 10 நிமிடங்களுக்கு அழுத்துங்கள். இதுவும் குதிவாதத்தின் வலியைத் தணிக்க உதவும்.

ஆழம் குறைந்த பேசினுக்குள் ஐஸ் கலந்த நீரினுள் பாதத்தை 5 முதல் 10 நிமிடங்களுக்கு வைத்திருப்பதையும் மேலை நாட்டு வைத்தியர்கள் சிபார்சு செய்கிறார்கள். ஆயினும் எம்மவர்கள் குறைந்த சூடுள்ள நீரில் பாதத்தை வைத்திருப்பது கூடிய சுகத்தைக் கொடுப்பதாக உணர்கிறார்கள்.

வலியையும் அழற்சியையும் தணிக்கும் வலிநிவாரண மாத்திரைகளும் உங்களுக்கு நிச்சயம் உதவும். வைத்தியரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அத்தகைய மாத்திரைகள நீங்கள் உட்கொள்ள சுகம் தெரியும்.

சில வேளை ஹைட்ரோகோட்டிசோன் ஊசி மருந்தை வலி அதிகமுள்ள இடத்தில் உங்கள் வைத்தியர் போடவும் கூடும்.

உங்களுக்கு ஏற்ற சிகிச்சை முறையை வைத்தியரின் ஆலோசனையுடன் தீர்மானியுங்கள். மனந்தளராமல் தொடர்ந்து செய்யுங்கள் சுகம் கிடைக்கும்.

நன்றி சுஜாதா சுபன்

Wednesday, June 29, 2011

ஆரண்யகாண்டம்-ஒரு கலந்துரையாடல்


ஆரண்ய காண்டம் தமிழின் மிக புதுமையான முயற்சி. இந்தப்படம் பற்றி இன்னும் விரிவான விவாதங்களும்,பரவலான கவன ஈர்ப்பும் தமிழ்ச்சூழலில் நிகழ்த்தப்பட வேண்டும். இதன் தொடக்கமாக நானும், நண்பர் விஜயமகேந்திரனும் இணைந்து ஆரண்யகாண்டம் திரைப்படம் பற்றிய ஒரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில் ஆரண்யகாண்டம் திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கலந்துக் கொள்கிறார். கருத்துரை வழங்குபவர்கள் அரவிந்தன் (காலச்சுவடு), கவிதா முரளிதரன் மற்றும் வெளிரங்கராஜன்.

இட‌ம்:- டிஸ்கவரி புக் பேலஸ் (பாண்டிச்சேரி ஹெஸ்ட் ஹவுஸ்அருகில்)
மேற்கு கே.கே.நகர்,சென்னை-78

நாள்:- ஜூலை 2 , சனிக்கிழமை

நேரம்:- மாலை 6 மணி

நண்பர்கள் அனைவருக்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்ப இயலவில்லை. இந்த அறிவிப்பை அழைப்பாக ஏற்றுக்கொண்டு அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கின்றேன்.

நன்றி !!!

தொடர்புகளுக்கு:-
விநாயக முருகன் 9841790218
விஜயமகேந்திரன் 9444658131
வேடியப்பன் 9940446650

Sunday, May 29, 2011

ஒரு தோழியின் கடிதம்

Dear Mr.Vijay Mahindran,
Last Night i read your Kavithai which was published in Kumudham,it was too good especially i liked the one in which you had mentioned abt you didnt have any stories to tell your Daughter...
About Nagarithkku veliyea:
you have clearly shown how westernisation entering into our culture....Too good..These days be it a girl or a guy they not only follow any culture nor tradition or any moral values...(They think that i wear western clothes,eat western food,work for western companies in western times...........so why not follow western life style or living......)

I really felt pity & anger about the Priya character,bcas she had already hurt her fingers with suriya praksh .....then how could she immediately try with the next guy.......without even any breathing time.....
I have some common Note for Girls................Please dont easily Trust your so called boy friends ......

Keep up your good work going...
All the very Best & Wishes
Akila Palani

Thursday, May 26, 2011

34 வயது பெண்ணின் வலது கை


கை கொடுக்கும் போதுதான் கவனித்தேன்

இரண்டு கீறல் தழும்புகள் அவளது

வலது கையில் இருந்தன,

சமையல் செய்யும் அவசரத்தில் கொதிக்கும்

எண்ணைப் பட்டதால் இருக்கலாம்

அவளது கணவனே சூடு

இழுத்ததாய் இருக்கலாம்

குழந்தைக்கு வைத்த வென்னீர்

கொட்டியிருக்கலாம்.

பஸ்ஸில் படியில் நீட்டிக் கொண்டு இருந்த கம்பி

கிழித்து விட்டுருக்கலாம்.

எப்படி ஆனது என்று என்னால்

அவளிடம் கேட்க முடியவில்லை.

ஆனால் அந்தக் கை மென்மையை

இழந்து சில வருடங்கள் ஆகிறது

என்பதை மட்டும் என்னால்

உணரமுடிந்தது அக்கணத்தில்.

Wednesday, May 25, 2011

ந. முருகேசபாண்டியன் நேர்காணல்
""இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளிகள் இல்லை!''
ந. முருகேசபாண்டியன் நேர்காணல்
நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் நல்ல படைபாளியாகலாம் என்பது நிதர்சன மான உண்மை. நல்ல படைப்பாளி கள் மக்களின் ரசனையை மேன்மைப்படுத்தி சமூக கலை- இலக்கிய வளர்ச்சிக்கு தூண்டுகோலாய் அமைகிறார்கள். அத்தகைய படைப்பிலக்கிவாதிகள் வரிசையில் நிற்பவர் த. முருகேச பாண்டியன். மதுரை மாவட்டம், சமயநல்லூர் கிராமத்தில் 1957-ல் பிறந்த இவர் தமிழின் சிறந்த இலக்கிய விமர்சகர்களில் குறிப்பிடத் தக்கவர். 15 நூல்களின் ஆசிரியர், "என் பார்வையில் படைப்பிலக்கியம்', "மொழிபெயர்ப்பியல்', "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலா'வில் (சங்க கால பெண்பாற் புலவர்கள் முதல் ஆண்டாள் வரை). இவரது படைப்பு களில் ஏழு இலக்கிய விமர்சனம் சார்ந்தவை. "கிராமத்து தெருக்களின் வழியே', "ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்' எனும் கிராமப்புற மானுடவியலைச் சொல்லும் இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார்.

"மேலச் சிவபுரி கணேசர் செந்தமிழ் கல்லூரி'யில் நூலகராகப் பணிபுரியும் முருகேச பாண்டியன், தமிழ் சிற்றிதழ்களுடன் நீண்ட கால தொடர்புடையவர். தனக்கேயுரிய தனித்துவமான பார்வையுடன் அவர் எழுதிய விமர்சனங்கள் தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதித்தவை. பலரும் அறியாமல் இருக்கும் ப. சிங்காரம் போன்ற உலகத் தரமான தமிழ்ப் படைப்பாளி களை தனது விமர்சனங்கள் மூலம் பரவலாக அறியச் செய்தவர்.

வாசிப்பே தனது சுவாசிப்பாகக் கொண்ட இவரை "இனிய உதயம்' நேர்காணலுக்காக நாம் சந்தித்தபோது...

உங்கள் இளமைக் கால இலக்கிய ஈடுபாடு பற்றி. . .

""எனது இலக்கிய வாசிப்பு என்னுடைய பள்ளிப் பருவத் திலேயே தொடங்கிவிட்டது. பத்து வயதில் வாண்டுமாமா எழுதிய 'சிறுத்தைச் சீனன்' என்ற குழந்தை நாவலை முதன் முதலாக வாசித் தேன். அப்புறம் தமிழ்வாணனின் 'இருளில் வந்த இருவர்' என்ற மர்ம நாவல். தொடர்ந்து சிரஞ்சீவி, மாயாவி, பி.டி.சாமி எழுதிய மர்ம நாவல்கள், பேய்க் கதைகள் என்னைக் கவர்ந்தன. பன்னிரண்டு வயதில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்துவிட்டு வந்தியத்தேவன், ஆழ்வார்க் கடியான், கோட்டை கொத்தளம், நிலவறை, கடல், படையெடுப்பு, அரண்மனை என புனைவுலகில் சுழலத் தொடங்கினேன். அப்புறம் சாண்டில்யன், ஆர்.சண்முக சுந்தரம், ஜெயகாந்தன் என எனது வாசிப்புத்தளம் விரிவடைந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு புனைகதையும் வாசிப்பின் வழியாக எனக்குள் கிளர்த்திய சந்தோஷம் அளவற்றது. ஒரு நிலையில் கதை என்பதற்கு அப்பால் கதைகளின் வழியாக மனித இருப்பினைக் கண்டறிந் தேன்.

ஏன் இப்படி சில கதைகள் சோகமாக முடிகின்றன என்ற கேள்வி எனக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. அறுபது களில் நாவல் வாசிப்பது கெட்டது எனக் கருதப்பட்டது. தொடர்ந்து புத்தகம் வாசிக்கிற யாரோ ஒரு பையன் பைத்தியமாகி விட்டான் என்ற பொதுப்புத்தி நிலவிய காலகட்டத்தில் எனது வாசிப்பு ரகசியமாக இருந்தது. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து மணிக்கணக்கில் வாசித்த நாவல்களின் எண்ணிக்கைக்கு கணக்கு எதுவும் கிடையாது. அப்பொழுது தொடங்கிய வாசிப்பு பழக்கம் இன்று வரை தொடர்கின்றது. நேற்று வாசித்து முடித்த வே.ராமசாமியின் 'செவக் காட்டுச் சித்திரங்கள்' சிறுகதைத் தொகுதி தந்த உற்சாக மனநிலை எனக்குக் கிடைத்த பேறுதான். புத்தகம் இல்லாத உலகை என்னால் ஒருபோதும் கற்பனை செய்து பார்க்க முடியாது.''

நீங்கள் எப்படி இலக்கிய விமர்சனத்துறைக்கு வந்தீர்கள்?

""இலக்கிய விமர்சகர் என்று தனிப்பட்ட யாரும் உருவாகிட முடியாது. இதற்கு நானும் விதி விலக்கு அல்ல. ஒவ்வொரு புத்தகத் தையும் வாசித்து முடித்தவுடன், அது குறித்து எனக்குள் அபிப் பிராயங்கள் இளம் பருவத்தி லேயே உருவாகிக் கொண்டிருந் தன. வெறுமனே பொழுது போக்குவதற்காக வாசித்த 'கேளிக்கை' நாவல்கள்கூட ஏதோ ஒரு கருத்தை நுட்பமாகப் புலப் படுத்துகின்றன என நினைக் கிறேன். எனது பதின்பருவத்தில் மதுரையிலுள்ள ச.வெள்ளைச் சாமி நாடார் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கிருந்த பெரிய நூலகம் என்னைக் கண் சிமிட்டி அழைத்தது. பி.யூ.சி. படிக்கும் போது சித்தர் பாடல்கள், குற்றாலக் குறவஞ்சி போன்ற புத்தகங்களை வாசித்து வேறு பட்ட அனுபவங்களைப் பெற் றேன். "தென்மொழி', "கணையாழி', "தீபம்' போன்ற பத்திரிகைகள் மூலம் புதிய பரப்புகள் எனக்கு அறிமுகமாயின. என் வகுப்புத் தோழர் புதியஜீவாவுடன் ஏற்பட்ட நட்பு பாரதிதாசன் கவிதைகள், தனித்தமிழ் ஈடுபாடு என என்னை இழுத்துப் போனது. அப்புறம் பட்ட வகுப்பில் கவிஞர் சமயவேல் எனது சீனியர். இருவரும் விடுதி மாணவர்கள். தினசரி மாலையில் நடந்து போய் விவாதித்த இலக்கிய பேச்சுகள் பலதரப்பட்டன. எனது இலக்கிய ஈடுபாட்டினைக் கருத்தியல் சார்ந்த நிலையில் வடிவமைத்ததில் புதியஜீவாவும் சமயவேலும் குறிப்பிடத்தக்க ஆளுமைகள். "அஃக்', "கசடதபற', "கொல்லிப் பாவை, "கோகயம்', "தெறிகள்' போன்ற சிறுபத்திரிகைகள் புதிய இலக்கியத்தை அறிமுகப்படுத்தின. எங்கள் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ஐ.சி.பி. என அழைக்கப்படும் ஐ.சி.பாலசுந்தரம் எனது ஆசான். உலகத்தின் மாபெரும் இலக்கியப் படைப்புகள் பற்றி போகிற போக்கில் அறிமுகப் படுத்துவார். அவர் என்னையும் சமயவேலையும் நெருக்கமான சிநேகிதர்களைப்போல நடத்தினார். நல்ல உணவு, நல்ல உடை, உன்னத இலக்கியம்பற்றிய அவருடைய பேச்சுகள் முதல் தரமானவை.

ஜெயகாந்தனின் 'அக்னி பிரவேசம்' சிறுகதையைப் படித்துவிட்டுக் கிளர்ந்து போன மனநிலையில், 'அதியற்புதமான கதை' எனப் பாராட்டினேன். அப்பொழுது அவர், "அந்தக் கதையில் ஒரு இளம் பெண் முதன்முதலாக உடலுறவு கொள்கிறாள்.' அப்பொழுது அவள் உடல் படும் அவஸ்தைகள் பற்றிய குறிப்பு எதுவும் விவரிப்பில் இல்லை. வெறுமனே விஷயத்தைச் சொல்வதற்காக எழுதப்பட்டது எப்படி நல்ல கதையாகும்?' என்றார். பல்வேறு நிகழ்வுகளில் ஐ.சி.பி. சூசகமான முறையில் ஓர் இலக்கியப் படைப்பினை எப்படி வாசிப்பது என்று எனக்கு அறிமுகப்படுத்தினார். எனது பத்தொன்பதாவது வயதில் புதிய ஜீவாவின் வற்புறுத்தலால் வாசித்த மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலும், ஜார்ஜ் பொலிட்சரின் 'மார்க்சிய மெய்ஞானம்' கட்டுரை நூலும் எனக் குள் படிந்திருந்த இலக் கிய மனோபாவத்தைப் புரட்டிப் போட்டன.

அன்றைய காலகட்டத்தில் திராவிட இயக்கம் சார்ந்த நிலையில் வறட்டு நாத்திகனாக இருந்தேன். இடதுசாரித் தத்துவம் குறித்து என்னுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த புதிய ஜீவாவுடன் தொடக்கத்தில் முரண்பட்டாலும், நாளடைவில் 'தத்துவம்' என்ற நிலையில் என்னை மார்க்சிஸ்டாகக் கருதிக் கொண்டேன். அப்புறம் சி.பி.எம். வெகுஜன இயக்கமான சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி, மக்கள் உரிமைக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் என தொடர்ந்து பல்வேறு அமைப்பு களில் மாறிமாறி இயங்கிக் கொண்டிருந்தேன்.''

இடதுசாரி அமைப்புகளில் செயல்பட்டது உங்கள் இலக்கிய வாசிப்பில் எத்தகைய பாதிப்பு களை ஏற்படுத்தியது?

""எந்த அமைப்பில் செயற்பட் டாலும் காத்திரமான இலக்கியப் படைப்புகளை வெறியுடன் வாசித்தேன். க.நா.சு., வெங்கட சாமிநாதன், பிரமிள் போன்ற எழுத்தாளர்கள் நசிவிலக்கிய வாதிகள், சி.ஐ.ஏ. ஏஜண்ட்கள் என அமைப்பு சார்ந்த நண்பர்கள் குறிப்பிட்டாலும், அவர்களுடைய படைப்புகளை முன்கூட்டிய தீர்மானம் எதுவுமின்றி வாசித் தேன். 1970-களின் பிற்பகுதியில் எனது புதுக்கவிதைகள் 'தேடல்' இதழில் பிரசுரமாகி இருந்தது. இலக்கியம் பற்றிய எனது புரிதல் இடதுசாரிக் கருத்தின் தாக்கத் தினால் சிக்கலுக்குள்ளானது. அதேநேரத்தில் மொழிபெயர்ப் பின் வழியாக செகாவ், டால்ஸ் டாய், கார்க்கி, தாஸ்தாயேவ்ஸ்கி, துர்கனேவ், ஷோலகோவ், ஹெமிங்வே, நட்ஹம்சன், பால்சாக், எமிலிஜோலா, ஸெல்மாலாகர்லெவ், கிளாடியா ஹெஸ்டிகாரல், மாபசான் என உலகத்து இலக்கிய மாஸ்டர்கள் எனக்குள் ஆளுமை செலுத்தினர்.

அவ்வப்போது சிறுகதை எழுதிக் கொண்டிருந்த எனக்கு, என் எழுத்தின்மீது அவநம்பிக்கை பிறந்தது. டால்ஸ்டாயின் 'அன்னா கரீனினா'வைத் தாண்டியோ, செகாவின் சிறுகதைகளைத் தாண்டியோ சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை எனக் கண்டறிந்தேன். எனவே படைப் பாக்க முயற்சியைக் கைவிட்டு, பல்வேறு புத்தகங்களை விருப்பத் துடன் வாசிக்கத் தொடங்கி னேன். எதையும் விருப்பு வெறுப் பின்றி கறாராக அணுகும் முறையை அன்றைய இடதுசாரி அமைப்பின் நடைமுறையிலிருந்து கற்றுக் கொண்டது, என்னைப் பொறுத்த வரையில் இலக்கிய விமர்சனத்திலும் பயன்பட்டது.''

எப்பொழுது விமர்சனம் எழுதத் தொடங்கினீர்கள்?

""எழுபதுகளின் இறுதியில் கலாப்ரியா, விக்ரமாதித்யன், மு.ராமசாமி, தேவதேவன், தேவதச்சன், கௌரிஷங்கர், அப்பாஸ் போன்ற படைப்பாளர் கள் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் சிலர். எண்பதுகளில் பிரபஞ்சன், நகுலன், சுந்தர ராமசாமி, ராஜமார்த்தாண்டன், வண்ணநிலவன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், மணா, சுரேஷ் குமார இந்திரஜித் போன்றோரின் நட்பினால், எழுத்து பற்றிய புதிய பிம்பம் எனக்குள் உருவாகிக் கொண்டி ருந்தது. இலக்கியக் கூட்டங்களுக் குப் பிந்தைய பேச்சுகளில் என் மனதுக்குப்பட்ட அபிப்பிராயங் களை வெளிப்படையாகப் பேசுவேன். மற்றபடி படைப்பு முயற்சியில் ஈடுபடவோ, விமர்சனம் எழுதவோ எனக்கு விருப்பம் எதுவுமில்லை.

ஒவ்வொரு புத்தகத்துடன் தனிப்பட்ட முறையில் நிகழ்த்தும் உரையாடல் வழியாக எனது வாசிப்புப் பரப்பு விரிந்து கொண்டே இருந்தது. 1994-ஆம் ஆண்டு என நினைக்கிறேன். நண்பர் சுரேஷ் குமார இந்திரஜித் தனது 'மறைந்து திரியும் கிழவன்' சிறுகதைத் தொகுதியை எனக்கு அனுப்பியிருந்தார். அதை வாசித்துவிட்டு எனது அபிப்பிராயத்தைக் கடிதம் மூலம் அவருக்கு அனுப்பி யிருந்தேன். அப்பொழுது மதுரையில் 'சுபமங்களா' சார்பில் நாடக விழா நடைபெற்றது. சுரேஷ் குமாரிடமி ருந்த எனது கடிதத்தை வாசித்துப் பார்த்த ராஜமார்த்தாண்டன், 'நல்லா இருக்கு' என்று தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். அக் கடிதம் சுருங்கிய வடிவத்தில் 'தினமணி கதிர்' பத்திரிகையில் அடுத்த வாரம் எனது பெயரில் வெளியாகி யிருந்தது. வெகுஜனப் பத்திரிகை யில் என் கட்டுரை வெளியானது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்புறம் ராஜமார்த்தாண்டனின் தூண்டுதல் காரணமாக ஏறக் குறைய பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் மதிப்புரைகள் தினமணியில் வெளியாகின. ஒருவகையில் எனது பேச்சை எழுத்து வடிவத்திற்கு மாற்றியதில் நண்பர் ராஜமார்த்தாண்டனுக்குத் தான் முதன்மையிடம். அப்புறம் கண்ணனின் வேண்டுகோள் காரணமாக 'காலச்சுவடு' இதழில் நூல் மதிப்புரைகள் எழுதினேன். அன்றைய காலகட்டத்தில் "காலச்சுவடு' மட்டும் வெளியாகிக் கொண்டிருந்த சூழலில் தொடர்ந்து எழுதவும், இலக்கிய மேடைகளில் பேசவும் நண்பர் கண்ணன் தூண்டு கோலாக விளங்கினார். அப்புறம் 'இலக்கு' தேவகாந்தன், 'உயிர்மை' மனுஷ்யபுத்திரன், 'தீராநதி' மணிகண்டன், 'உயிர் எழுத்து' சுதிர் செந்தில் ஆகியோரும் எனது எழுத்து முயற்சிக்குப் பின்புலமாக விளங்குகின்றனர்.''

நீங்கள் எழுதிய நூல்கள் இலக்கிய விமர்சனம், மொழி பெயர்ப்பியல், கிராமத்து வாழ்க்கை, சங்க இலக்கியம் என பல்துறை சார்ந்ததாக இருக்கிறது. இந்தப் பன்முகத் தன்மைக்குக் காரணம் யாது?

""தொடர்ந்த வாசிப்புதான். பல்வேறு துறைகளில் கட்டுரை நூல்கள் நூற்றுக்கணக்கில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு எழுத்தாளர் தீவிரமான மனநிலையுடன் எழுதியிருக்கும் எந்தவொரு புத்தகமும் பரிசீலனைக்குரியதுதான். இது மட்டும்தான் எனது துறை என முத்திரை குத்திக் கொண்டு ஒதுங்கி இருக்க முடியாது. நவீன கவிதை எழுதிக் கொண்டிருக்கும் என் நண்பர்களில் சிலருக்குக் கட்டுரை எழுதினால் படைப் பூக்கத்தை நலிவடையச் செய்து விடும் என்று பாமரத்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ப.சிங்காரம், நகுலன், சுந்தரராமசாமி, பிரபஞ்சன் போன்றோரிடம் பேசும்போது, கட்டுரைகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டேன்.

எந்தவொரு விஷயத்தை எழுத எடுத்துக் கொண்டாலும் அதில் முன்னோடியாகப் பலரின் புத்தகங்கள் இருக்கும். அவற்றை வாசிப்பதன் மூலம் விடு படல்களை அறிந்து, நாம் செல்ல வேண்டிய திசைவழியைக் கண்டறிய முடியும். எடுத்துக் கொண்ட விஷயம் குறித்து கடின உழைப்பும் நண்ய்ஸ்ரீங்ழ்ண்ற்ஹ் யும்தான் எழுதுவதற்கான அடிப்படை.

ஆங்கிலத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் புத்தகங்களைப் பார்க்கும் போது, தமிழில் ஏற்பட்டுள்ள பின்னடைவு புலப்படும். காத்திரமாகச் செய்ய வேண்டிய எழுத்துப் பணியின் அவசியம் தெரியும். எனவேதான் பல்துறை சார்ந்த நிலையில் தீவிரமாக எழுத்து முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். வெறுமனே இலக்கியப் படைப்பு கள், இலக்கிய விமர்சனம்தான் எழுதுவேன் என்று அடம் பிடிப்பவர்கள் நாளடைவில் 'அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்கள் அட்டவணையில் சேர்ந்து விடுவார்கள்.''

கல்லூரி நூலகர் பணியில் இருப்பது இலக்கியப் பணிக்கு எந்த அளவில் உதவியாக உள்ளது?

""இளம் வயதிலே இலக்கிய வேட்கை காரணமாக ஊர் ஊராகப் போய் இலக்கியவாதி களுடன் 'சல்லாபம்' செய்து இலக்கியப்பேச்சு பேசிய எனக்கு வேலையில் சேர்ந்து ஒழுங்காகச் செயற்பட முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. சங்க காலப் பாணர் மரபில், ஊர் சுற்றியாக அலைந்து திரிவதில் பெரும் விருப்பம் கொண்டிருந்தேன். தாலுகா அலுவலகத்தில் கிளார்க், வங்கியில் கிளார்க் போன்ற வேலைகள் எனக்கு எப்பொழுதும் கவர்ச்சியாக இல்லை. அரசு உயரதிகாரியாகி யாரையும் ஏவல் செய்ய முடியும் என்றும் எனக்கு நம்பிக்கை இல்லை. பல்கலைக் கழகப் பேராசிரியர் பணி அறிவுப்பூர்வமாக அன்றைய காலகட்டத்தில் இருந்தது. ஒரு பேராசிரியர் என்மீது கொண்ட அன்பின் காரணமாக பி.ஹெச்.டி. படிப்பில் சேரத் தடை விதித்து விட்டார். அப்புறம் நூலகர் பணி. அது எனக்குப் பிடித்தமானது தான். எப்பவும் புத்தகங்களுக்கு நடுவில் இருப்பது சுவாரசியம் தருகிறது.

எங்கள் கல்லூரியில் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படுவதால், ஆண்டுதோறும் வெளியாகும் புத்தம் புதிய தமிழ்ப் புத்தகங் களை நூலகத்துக்கு வாங்கும் பொது மனது மகிழ்வடைகிறது. ஒரு கட்டுரை எழுதுவதற்கான அடிப்படையான நூல்கள் பற்றி உடன் அறிந்து கொள்ள முடிகி றது. எம்.ஏ., எம்ஃபில், பிஹெச்டி., பயிலும் மாணவ- மாணவி யருக்கு ஆய்வு தொடர்பாக ஆலோசனைகளைக் கடந்த 23 ஆண்டுகளாக வழங்கு வதன் மூலம் எனது தேடல் துரிதப்படுகிறது. ஒரு விஷயம், ஒருவர் இலக்கிய வாதியாக இருப்பதற்கும் அவர் செய்யும் வேலைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்க வாய்ப் பில்லை.''

உங்கள் இலக்கிய நண்பர் களில் குறிப்பிடத்தக்க ஆளுமை யார்?

""உயிர்மை இதழ் தொடங்கிய போது கவிஞர் மனுஷ்ய புத்திரனின் ஆலோசனையின் பேரில் "என் இலக்கிய நண்பர்கள்' என்ற தலைப்பில் பிரபஞ்சன் முதலாகப் பல்வேறு ஆளுமைகள் பற்றி எனது அபிப்பிராயங்களைப் பதிவு செய்திருந்தேன். அது புத்தக வடிவம் பெற்றபோது, இன்று வரை பலராலும் விரும்பி வாசிக் கப்படுகிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் சில இலக்கிய ஆளுமைகள் எனது உருவாக்கத் தில் பின்புலமாக இருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் எனது நெருங்கிய நண்பர்கள் யாவரும் இலக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். அடிக்கடி முரண்பட்டு கருத்து ரீதியில் சண்டையிட்டுக் கொண் டாலும் இலக்கிய நண்பர் களுடனான உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலைமை இலக்கியவாதிகள், இலக்கிய வாசகர்களுக்கு மட்டும் கிடைத்த 'பெருங்கொடை' என்று தான் கூறவேண்டும்.

என்னைப் பொறுத்த வரை வாசகர் மிக முக்கியமான வர். தீவிரமான இலக்கியத் தளத்தில் இயங்குகிற எல்லோரும் எழுத்தாளர்கள். எனில் தீவிரமான வாசகர்களுக்கு எங்கு போவது? தேர்ந்த வாசகர்களின் எதிர்வினை மூலம்தான் இலக்கிய பேச்சுகள் உருவாகும். இந்த நேரத்தில் ஒன்று சொல்ல வேண்டும். இரவு முழுக்க விடியவிடிய இலக்கியம் பேசிக் கொண்டிருக்கும் மனநிலை வாய்த்த எனது நண்பர்கள் அப்பாஸ், யவனிகா ஸ்ரீராம், ராஜமார்த்தாண்டன், எஸ்.ராம கிருஷ்ணன், கோணங்கி, சமய வேல், பிரேம்-ரமேஷ், சுதீர் செந்தில், சா.ஜோதிவிநாயகம், கௌரிஷங்கர், கலாப்ரியா, அ.ராமசாமி, பிரபஞ்சன், மனுஷ்ய புத்திரன்... பல்வேறு கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் நண்பர்களுடனான சல்லாபமும் பேச்சுகளும் குறிப்பிடத்தக்கவை.

உங்கள் கேள்விக்கு நேரடி யாகப் பதில் சொல்ல வேண்டு மென்றால், 'நகுலன்'தான். அற்புதமான மனிதர். 1985-ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் நான் பணியாற்றியபோது, பல இரவுகள் விடியவிடிய பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். இரு காதுகள் இருப்பதன் அருமையை அவருடைய ஆழமான புலமை நமக்குச் சூசகமாக உணர்த்தும். அவர் பெரிய கவிஞர். அதைவிட ப்ரியமும் அன்பும் மிக்கவர். அது போதாதா? அப்புறம் நண்பர் பிரபஞ்சன். அவரைப் பற்றி எதிர்மறையான பேச்சுக்களைச் சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக் கிறேன். ஆனால் விஷயம் அது வல்ல. எனக்கும் அவருக்குமான நட்பும் தோழமையும் அருமை யான இசைபோல பொங்கிப் பெருகுகிறது.''

ஒரு நூலை எந்த அளவு கோலின் அடிப்படையில் மதிப் பிட எடுத்துக் கொள்கிறீர்கள்?

""முழுக்க என் வாசிப்பு அனுபவம் சார்ந்துதான். பிரதி என்ற நிலையில் ஒரு புத்தகம் வாசிப்பின் வழியாக எனக்குள் தோற்றுவிக்கும் அபிப்பிராயங்கள் தான் எழுத்தின் அடிப்படையாக அமைகின்றன. பெரிய எழுத் தாளர், இளம் எழுத்தாளர் என பேதமெதுவும் நான் பார்ப்ப தில்லை. புத்தகம் குறித்து இது வரை உருவாக்கப்பட்டுள்ள பேச்சு களைக் கருத்தில் கொள்வேனே தவிர, அவற்றை விமர்சனத்தில் பொருட்படுத்துவதில்லை. அப்புறம் தனிப்பட்ட எவ்வித மான அளவுகோலையும் நிரந்தர மாகக் கொண்டு எந்த நூலையும் அணுகுவது எனது வழக்கமல்ல. ஆனால் எழுத்தாளர் யார்? என்பதற்கு முன்னுரிமை தருவேன்.

சந்திரா என்ற பெண் எழுத்தாளர் அண்மைக் காலமாக தரமான சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். உமா மஹேஸ் வரிக்கு அடுத்து சந்திராவின் சிறுகதை முயற்சிகள் குறிப்பிடத் தக்கவை எனக் கொள்ள வேண் டுமே தவிர, அவரைப் புனைகதை உலகில் ஜாம்பவானாக விளங்கும் ஆண் எழுத்தாளர்களுடன் ஒப்பிட வேண்டிய தேவையில்லை என்பது எனது கருத்து.

புத்தகத்திலுள்ள வரிகள் எவ்வளவு முக்கியமோ, அப்புத்த கம் சமகாலத்தில் பெறுமிடமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம். தொகுப் பில் பத்து கவிதைகளைச் சிறப் பாக எழுதியிருக்கும் கவிஞரின் முதல் புத்தகத்தைப் பற்றி நேர் மறையாகவும் சிறிது பாராட்டியும் எழுதுவதில் தப்பில்லை. அது இலக்கிய மதிப்பிடுதலுக்கு அவசியமும்கூட.''

விமர்சனத்தினால் படைப் பாளிக்குப் பயன் உண்டா?

""படைப்பும் விமர்சனமும் பிரிக்க முடியாதவை. எல்லாப் படைப்புகளும் வாசிப்பின் வழியாக ஒவ்வொரு வாசகரிடமும் ஏற்படுத்தும் மதிப்பீடுகள் விமர் சனம்தான். ஒரு படைப்பு காலங் கடந்து நிலைத்து நிற்கிறது எனில், அப்படைப்பு காலந்தோறும் உருவாக்கும் விமர்சன மதிப்பீடு கள், சமகாலத்துடன் பொருந்திப் போகின்றவையாக உள்ளன என்பதுதான் உண்மை. தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட பாயிரமும் இளம்பூரணர் முதலாகப் பல்வேறு உரையாசிரியர் கள் எழுதிய உரைகளும் விமர்சனம்தான். பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை அணுகுவதற்கு அடிப்படையாக விளங்கும்'உரைகளில் நுட்பமான விமர்சனங்கள் பொதிந்துள்ளன.

படைப்புக்கும் அதை அணுகும் வாசகனுக்குமிடையில் விமர்சனம் நுண்தளத்தில் செயல்படுகிறது. மற்றபடி அந்த விமர்சனத்தினால், அந்த நூலை எழுதிய படைப் பாளிக்கு நேரடியாகப் பயன் இருக்காது. 'படைப்பாளி மரணம்' என்ற நவீனக் கோட்பாட்டின்படி பார்த்தால், படைப்பு குறித்த விமர்சனங்களைப் படைப்பாள ரால் தள்ளி நின்று விருப்பு வெறுப்பின்றி வாசிக்க முடியும். ஆனால் பெரும்பாலான படைப் பாளர்கள் தங்கள் படைப்பு களுக்கு 'வக்காலத்து' வாங்குவது தவிர்க்கவியலாதது. அப்புறம் விமர்சனம் என்பது துல்லியமான மதிப்பீடு அல்ல. விமர்சகரின் மனமும் அறிவும் சம்பந்தப்பட்ட விமர்சனம், பல வேளைகளில் படைப்பாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

படைப்பாளரின் படைப்பு நோக்கினுக்கு முற்றிலும் மாறான கோணத்தில் விமர்சனம் முன் வைக்கப்படுவதும் இங்கு நடை பெறுகிறது. படைப்பு மனமும் விமர்சன மனமும் ஒத்திசைந்து போகும்போது, ஙங்ற்ஹற்ங்ஷ்ற் என அழைக்கப்படும் விமர்சனப் பிரதி, படைப்பாளிக்கு மயிலிற கால் வருடிக் கொடுத்த அனுபவத் தைத் தரும். மற்றபடி எந்தவொரு மோசமான படைப்பையும் 'அற்புதம்' எனப் புகழப்படும் மதிப்புரைகளால் அதைத் தூக்கி நிறுத்த முடியாது. எல்லாப் படைப்புகளும் தமது சொந்த பலத்திலேயே இலக்கிய உலகில் காலூன்றி நிற்கின்றன. விமர்சனத் தைப் புறக்கணிக்கிறேன் என்ற வாதம், குளத்துடன் கோபித்துக் கொண்டு குளிக்காமல் போனதை நினைவூட்டுகிறது.''

இலக்கிய விமர்சனத்தால் மக்களுக்குப் பயன் உண்டா?

""இலக்கியத்தினால் பாமர மக்களுக்கு ஏதாவது பயன் இருக்குமானால், விமர்சனத்தி னாலும் ஏதாவது பயன் இருக்கும். மகாபாரதம் போன்ற இதிகாசம் கதை வடிவில் மக்களிடையே தொன்மையாக மாறி ஆழமான மதிப்பீடுகளை உருவாக்குவதில் பாரம்பரியமான கதை சொல்லி களுக்குப் பெரும் இடம் உண்டு. இன்றுவரை மகாபாரத ஏட்டினை வாசித்துக் கதை சொல்கிறவர், அவருடைய நோக்கில்தான் கதாபாத்திரங்கள் பற்றிய சித்திரங் களை உருவாக்குகிறார். அக்கதை யைக் கேட்கின்ற பொதுமக்கள் தங்கள் மனோநிலைக்கு ஏற்ப கதையை மீட்டுருவாக்கம் செய்து கொள்கின்றனர்.

பொதுவாகக் கலை இலக்கிப் படைப்புகளுக்கும் மக்களுக்குமிடை யில் பெரிய இடைவெளி உள்ளது. இந்தியா போன்ற கல்வியறிவு முழுமையடையாத நாடுகளில் மக்களுக்கு அன்றாட வாழ்க்கைப் பாடே பெரிதாக உள்ளது. இந் நிலையில் படைப்பிலக்கியத்தை வாசிப்பதற்கான சூழலும் மன நிலையும் வாய்ப்பது கஷ்டம்தான். ஓரளவு வாசிக்கத் தெரிந்தவர்கள் அவரவர் மனநிலைக்கேற்பப் படைப்புகளை விரும்பி வாசிக் கின்றனர். போன நூற்றாண்டின் முற்பகுதியில் கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களை வாசித்தவர் எண்ணிக்கையைவிட குஜ்லி இலக்கியம் என அழைக்கப்படும் கொலைச் சிந்து போன்ற புத்தகங் களை வாசித்தவர் எண்ணிக்கை அதிகம். இந்நிலை வெகுஜன ரீதியில் இன்றுவரை தொடர் கிறது.

வெகுஜன பத்திரிகைகளில் வணிக நோக்கில் கேளிக்கைக்காக எழுதப்படும் புனைகதைகள்தான் விற்பனையில் முன்னிலை வகிக் கின்றன. காத்திரமான இலக்கியப் படைப்புகளின் விற்பனை ஒப்பீட்டளவில் மிகக்குறைவு. இந்நிலையில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டுமெனில், விமர் சனங்களால்தான் முடியும்.''

இடதுசாரி எழுத்தாளர்களின் படைப்பு முயற்சிகள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

""டி. செல்வராசின் "மலரும் சருகும்', ரகுநாதனின் "பஞ்சும் பசியும்' போன்ற நாவல்களை எழுபதுகளில் வாசித்துவிட்டு அவை முக்கியமானவை என்று நினைத்திருக்கிறேன். ஆனால் சோவியத் யூனியனில் புரட்சிக்கு முன்பும் புரட்சிக்குப் பின்பும் எழுதப்பட்ட பல்வேறு நாவல் களை வாசித்தபோது, தமிழில் முற்போக்கு என்ற லேபிளுடன் வெளியான நாவல்களின் பல வீனத்தைப் புரிந்து கொண்டேன்.

மாக்சீம் கார்க்கியின் 'மூன்று தலைமுறைகள்', 'துர்கனேவின் 'தந்தையரும் தனயர்களும்' ஷோலகோவின் 'வெற்றி முரசு' போன்ற ரஷிய நாவல்களை வாசித்தவர்களுக்குத் தெரியும் தமிழில் இடதுசாரி எழுத் தாளர்களின் இடம் என்ன வென்று. இடதுசாரி அரசியல் என்பதே பத்து அல்லது பதினைந்து எம்.எல்.ஏ., சீட்டுகளுக் காகப் போயஸ் அல்லது அறிவாலயம் வாயிலில் மாறி மாறிக் காத்துக்கிடக்கும் எனச் சுருங்கிய நிலையில், இடதுசாரி இலக்கியம் மட்டும் எப்படி உற்சாகத்துடன் பீறிட்டு எழும்? வெறுமனே வறுமையையும் அன்றாட வாழ்வின் அவலத்தை யும் எழுத்தின் வழியே அப்படியே நகலெடுப்பது, 'உச்' கொட்ட உதவுமே தவிர, வாசிப்பின் வழியாக வாசகனுக்குள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தாது.

தாமரை, சாந்தி, செம்மலர், சிகரம், மனிதன், செந்தாரகை, மன ஓசை, புதிய கலாச்சாரம் போன்ற இடதுசாரி கலை இலக்கிய இதழ்களில் கடந்த முப்பதாண்டு களில் எழுதிய எழுத்தாளர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங் காது. பலர் அமைப்பை விட்டு வெளியேறி விட்டனர். சிலர் சிறுபத்திரிகை வட்டாரத்திற்குள் நுழைந்துள்ளனர். சிலர் மௌனமாகி விட்டனர்.

மனிதனின் வாழ்க்கைப் பாடுகளை எழுதுவதுதான் இடதுசாரி இலக்கியம் எனில், இன்று தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கும் 90% படைப்பாளரைத் தேடித்தான் கண்டறிய வேண்டும். மற்றபடி இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளர் கள் இல்லை. கலை இலக்கியப் பெருமன்றத்தில் தி.சு.நடராசன், நா.முத்துமோகன், பா.ஆனந்த குமார், ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோரின் விமர்சனப் பணிகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.''

கடந்த முப்பது ஆண்டு களாகத் தமிழ் இலக்கிய உலகுடன் நெருக்க மான தொடர்புடன் செயல்படுகிறீர்கள். அண்மையில் தமிழ்ப் படைப்புலகில் ஏற் பட்டுள்ள மாற்றங்கள்?

""சோவியத் யூனியன் நொறுங்கிச் சிதறுண்ட பிறகு, அதுவரை நவீனத் தமிழ் உலகில் செயலாற்றிக் கொண்டிருந்த இடதுசாரிகள் பலவீனப்பட்டுப் போயினர். இந்நிலையில் 90-களில் தமிழுக்கு அறிமுகமான 'பின் நவீனத்துவம்' தொடக்கத்தில் பலரது புருவத்தையும் நெளிய வைத்தது. இதென்னடா புதுக் கூத்து என்று யோசித்தனர். அமைப்பியல், பின்அமைப்பியல் கோட்பாடுகளுடன் பின்நவீனத் துவம் தமிழில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் அழுத்தமானவை. மொழி பற்றிய மரபு வழிப்பட்ட பார்வை மாற்றமடைந்தது.

புத்தகம் என்பது மாறி பிரதி என்ற நிலையில் பிரதிக்குள் பொதிந்திருக்கும் பல்வேறு குரல் களை ஆராய்வது முன்னிலைப் படுத்தப்பட்டது. பிரதியின் மையம் என்ற அதிகாரநிலை, விளிம்பு என்ற ஒடுக்கப்பட்ட நிலை என்ற எதிரிணைகள் மூலம், இதுவரை யில் உருவாக்கப்பட்டிருந்த புனிதங்களை கட்டுடைத்துப் புதிய வகைப்பட்ட சொல்லாடல் உருவாக்கப்பட்டது.

மரபு வழிப்பட்ட கதை சொல்லலுக்கு மாற்றாகத் தொடர்ச்சி யற்ற நிலையில் கதை விவரிப்பு முன்னிலைப்படுத்தப்பட்டது. பால் சமத்துவம் காரணமாக ஒடுக்கப்பட்ட பெண்ணுடல், சாதி அடிப்படையில் பிறப்பினால் தாழ்த்தப்பட்ட தலித்துகள், அரவாணிகள் பற்றிய புதிய பேச்சுகளும் மறு பேச்சுகளும் உருவாக்கப்பட்டன. இலக்கியம் என்பது நகல் எடுப்பது, கண்ணாடிபோலப் பிரதிபலிப் பது என்ற கருதுகோள் தகர்ந்து போனது. இன்று தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான படைப்பாளர்கள் பின்நவீனத்து வப் பார்வையை உள்ளடக்கிய படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

யதார்த்தக் கதைசொல்லல் எனும் புதிய வகைப்பட்ட முறையில் கதை விவரிப்பினுக்கு சோ.தருமனின் 'கூகை' நாவலைச் சொல்ல முடியும். ஜெயமோகனின் விஷ்ணுபுரம், பிரேம்-ரமேஷின் சொல் என்றொரு சொல், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி. . . இப்படி பலரைச் சொல்ல முடியும், பெருமாள் முருகனின் கங்கணம், சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை, வா.மு.கோமு வின் கள்ளி என பலரும் தமிழ் வாழ்க்கையை முன்னிறுத்தி எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

நவீனக்கவிதை எனில் குறைந்த பட்சம் ஐம்பது கவிஞர்கள் நல்ல நிலையில் எழுதிக் கொண்டிருக் கின்றனர். பெண் கவிஞர்களின் பெண் மொழி, மரபு வழிப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்புறம் தலித் கவிஞர்கள் தங்களுக்கே உரித்தான தனிப் பட்ட மொழியைக் கவிதை ஆக்கத்தில் கையாண்டு கொண்டி ருக்கின்றனர். எஸ்.வைத்தீஸ்வரன், கலாப்ரியா, தேவதச்சன் என அறுபதுகளில் எழுதத் தொடங் கிய கவிஞர்கள் இன்றும் எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 90-களில் களமிறங்கிய யவனிகா ஸ்ரீராம், ரமேஷ்-பிரேம், என்.டி. ராஜ்குமார் மட்டுமின்றி, கடந்த பத்தாண்டுகளில் முதல் தொகுப்பு வெளியிட்ட சுகிர்தராணி, மாலதி மைத்ரி, சுதீர் செந்தில், செல்மா பிரியதர்சன் போன்ற பல கவிஞர் கள் நம்பிக்கை அளிக்கின்றனர். நவீன கவிதைகள் தமிழில் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பது ஆரோக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன்.''

முதலில் கலை கலைக்காக; அப்புறம் கலை மக்களுக்காக; அப்புறம் இப்பொழுது பதிப்ப கம், சிறுபத்திரிகை என்ற தொடர்பில் அப்பதிப்பகம் வெளியிடும் படைப்பாளர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமை தந்து விமர்சனம் வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் விமர்சகர் என்ற ரீதியில் கலை இலக்கியத் துறையில் உங்கள் பங்களிப்பு என்ன?

""இப்பொழுது ஒவ் வொரு மாதமும் வெளி யாகும் இடைநிலை இதழ் க ளில் குறைந்தபட்சம் ஆறு பத்திரிகைகளை வாசித்தால் பத்து நாட்களாகி விடுகின் றன. அப்புறம் இன்று குவிந்து கொண்டிருக்கும் புத்தகங் களின் எண்ணிக்கை பிரமிப்பைத் தருகிறது. காலச்சுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்கள் பதிப்புத் துறையில் பொருளாதார ரீதியில் பெற்றுள்ள ஆதாயத்தைப் பார்த்து பல சிறிய பதிப்பகங்கள் படைப்புகள் விமர்சனப் புத்தகங் கள் வெளியிடுகின்றன.

ஒரு தேர்ந்த வாசகனால்கூட தமிழில் வெளியான முக்கியமான புத்தகங்களை வாசிப்பதும், அவற்றை மனதில் நிலை நிறுத்து வதும் கஷ்டமானது. ஒரு மாதம் மொத்தம் பத்து புத்தகங்களுக்கு மதிப்புரை வந்தால் பெரிய விஷயம். அப்புறம் ஒன்று புத்தக மதிப்புரை எழுதுவதற்குச் சரியான ஆட்கள் இல்லை; பலர் முன் வருவது இல்லை. ஆனால் எல்லாப் படைப்பாளர்களும் தங்களுடைய புத்தகம் பற்றி பெரிய அளவில் நேர்மறையாக மதிப்புரை வெளிவராதா என்று ஏங்குகின்றனர்.

புத்தகக் கடலுக்குள் எவ்வித மான அடையாளமும் இல்லாமல் கரைந்து போகும் புத்தகங்களின் எண்ணிக்கை கணக்கு வழக் கற்றவை. புத்தக ஆசிரியர் தனது சொந்தச் செல்வாக்கில் 'லாபி' செய்தால் சில பத்திரிகைகளில் மதிப் புரை வெளிவரலாம். இது மாதிரியான சூழலில் சிறுபத்திரிகை சார்ந்த பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களுக்கு முன்னுரிமை தருவது இயற்கை தான். அது வியாபாரம். வேறு என்ன சொல்ல?

என்னைப் பொறுத்தவரையில் கடந்த 16 ஆண்டுகளில் 130 புத்தகங்களுக்கு மேல் மதிப்புரை எழுதியிருக்கிறேன். புத்தக மதிப் புரை எழுதுவது எனக்கு மட்டும் விதிக்கப்பட்ட தண்டனையா என்று அண்மைக்காலமாக மதிப்புரை எழுதுவதை நிறுத்தி விட்டேன். அப்புறம் ஒரு விஷயம்... புத்தகங்கள் பற்றி ஆழமாக எழுதப்பட்ட மதிப்புரைகள் பற்றி நூலின் ஆசிரியர்களில் பலர் என்னுடன் தங்கள் அபிப்பிராயத் தைப் பகிர்ந்து கொண்டதே இல்லை. படைப்பு என்பது மேலானது, மதிப்புரை என்பது கீழானது என்ற மனநிலையுடன் கள்ளத்தனமாகத் திரியும் எனது நண்பர்களின் அற்பத்தனம் எனக்கு நன்கு தெரியும்.''

சிறுபத்திரிகைச் சூழலில் அரசியல் எப்படி செயல்படு கிறது. அது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

""அரசியல் எங்குதான் இல்லை? கணவன்- மனைவி உறவுக்கிடை யில் கூட நுண் அரசியல் உள்ளது. சிறுபத்திரிகை மனோபாவமே ஒருவகை அரசியல்தான். வணிக நோக்கிலான கேளிக்கை எழுத்து கள் எனப் பெரும் பத்திரிகைகளில் வெளியானவற்றைப் புறக்கணிக் கும் நிலைப்பாடு கருத்தியல் சார்ந் தது. 'மணிக்கொடி' உருவாக்கிய சிறுபத்திரிகை மரபின் வழி வந்தவர்கள் நாம்' என பெருமை பேசும் அப்பாவி நண்பர்கள் எனக்குண்டு. மணிக்கொடியில் கட்டுரைகள் நடுவில் தாதுபுஷ்டி லேகியம், மந்திரக் குளிகை விளம் பரங்கள் வெளியாகியுள்ளன. சாதாரண கதைகள் நிரம்ப வெளியாகியுள்ளன. ஆனால் ஏனோ தெரியவில்லை- சிறு பத்திரிகை மரபினுக்கு முன்னோடி மணிக்கொடி என்ற நம்பிக்கை இங்கு தொடர்ந்து முன்னிலைப் படுத்தப்படுவது ஒரு வகை அரசியல்தான்.

எழுபதுகளில் சில நண்பர்கள் சேர்ந்து, இலக்கிய வேட்கையுடன் நடத்திய இலக்கியப் பத்திரிகை களைச் சிறுபத்திரிகைகள் என அடையாளப்படுத்துவதுதான் சரியானது. அஃக், கசடதபற, நடை, கொல்லிப்பாவை, யாத்ரா, பிரக்ஞை போன்ற சிறுபத்திரிகை கள் சில மதிப்பீடுகளை முன் னிறுத்தின. அந்தப் பத்திரிகைகளின் நேர்மையையும் நோக் கத்தையும் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள்.

சிறுபத்திரிகையை முன் வைத்து, பொருளியல் ஆதாயம், அரசியல் மேலாதிக்கம் பெறுவது அன்று நடைபெறவில்லை. சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு, சிறுபத்திரிகை அடையாளத் துடன்தான் வெளியானது. இன்று கண்ணனின் ஆசிரியர் பொறுப் பில் வெளியாகும் காலச்சுவடு வேறு வகைப்பட்டது. உயிர்மை, உயிர் எழுத்து, தீராநதி, அம்ருதா, காலச்சுவடு போன்றவற்றை இடைநிலை இதழ்கள் என வகைப் படுத்த வேண்டும். சமூகம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை தரும் சில இடைநிலை இதழ்களில் 20% பக்கங்கள்தான் இலக் கியத்திற்கு ஒதுக்கப்படுகின்றன. பத்திரிகைகளின் பெயரிலான பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களுக்குச் சந்தையை உருவாக்கிட அப்பத்திரிகைகள் முயலுவது வியாபாரம்தான். பத்திரிகை அலுவலகக் கட்டிட வாடகை, துணை ஆசிரியர் உள்ளிட்டோரின் ஊதியம் எனப் பெரும் தொகை மாதந்தோறும் செலவாகும்போது, சிறுபத்திரிகை என்ற கருத்து முழுக்க அடிபட்டுப் போகின்றது.

இடைநிலை இதழ் சார்ந்து உருவாக்கப்படும் குழு அரசியல் தான் அபாயமானது. தான் சார்ந்த குழுவினரின் படைப்புகளை வெளியீடு செய்வதும், எதிர்க் குழுவினரின் படைப்புகளைக் கண்டு கொள்ளாமல் செய்வதும் குழுசார்ந்த அரசியலின் விளைவுதான். இந்நிலைமை இலக்கிய வளர்ச்சிக்கு முரணானது. அப்புறம் ஒரு படைப் பாளரை அந்தப் பத்திரிகை சார்ந்தவர் என முத்திரை குத்தி ஒதுக்குவது- போற்றுவது சரியல்ல. எல்லா இடைநிலை இதழ்களுக்கும் ஏதோ, 'கணக்கு வழக்கு' இருக்கிறது. அதற்கேற்ப பல்வேறு விஷயங்கள் நடைபெறு கின்றன. இந்நிலைமை தவிர்க்க வியலாதது. அகநாழிகை, மணல் வீடு போன்றவை சிறு பத்திரிகை கள்போல காட்சி தருகின்றன. ஆனால் அவற்றின் நோக்கம் 300 பிரதிகள் அச்சடிப்பது எனக் குறுகிய வட்டத்துக்குள் சுழல்வது ரொம்ப நாட்கள் நீடிக்காது. அப்புறம் சிறுபத்திரிகை என்றால் மேன்மையானது, சிறுபத்திரிகைக் காரர்கள் என்றால் வித்தியாச மானவர்கள் என்ற எண்ணத்தில் உண்மை இருப்பினும், ஏதோ சிலரின் நலனை முன்னிறுத்தும் அரசியலும் இருக்கிறது. அதுதான் உண்மை.''

தமிழில் வெளிவந்திருக்கும் மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றித் தாங்கள் மேற்கொண்ட முனை வர் பட்ட ஆய்வு, நூலாக வெளிவந்துள்ளது. தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் பெறுமிடம் என்ன?

""எனது உலக இலக்கிய அறி வென்பது மொழி பெயர்ப்புகளின் மூல மாகவே பெரிதும் சாத்தியப்பட்டுள்ளது. ரஷிய நாவல்களை வாசித்துவிட்டு அந்த நாட்டின் புவியியல் அமைப்பு, தட்பவெட்பநிலை, வாழ்க்கை முறை, எனக்கு மிகவும் நெருக்க மாயின. ஸ்டெபிப் புல்வெளிகள், தைகா காடு, கோதுமை வயல்கள், பனிப்பொழிவுகள், கோமகன்கள், சீமாட்டிகள், பண்ணைக் குடி யானவர்கள், குதிரைகள், உலர்புல். அவற்றை எப்படி மறக்க முடியும்.

ரஷியாவிலுள்ள பீட்டர் ஸ்பர்க் நகரத் தெருக்கள், மாட வீடுகள், கோட்டை கொத்தளங் கள், பாலங்கள் எல்லாம் தாஸ்தாயேவ்ஸ்கியின் "வெண்ணிற இரவுகள்' நாவல் மூலம் என் மனதில் துல்லியமாகப் பதிவாகி உள்ளன. வெவ்வேறு மொழி பேசும் பிரதேசங்களின் பதிவுகள் படைப்புகளின் வழியாக உலக மெங்கும் பரவுவதற்கு 'மொழி பெயர்ப்பு' என்ற விநோதச் செயல் முக்கியமானது.

இன்று நவீனத் தமிழிலக்கியம் பெற்றுள்ள வளமானது 1951 முதல் 170 வரை இருபது ஆண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு நாட்டுப் படைப்புகள் அடிப்படை யாகக் கொண்டுள்ளது. அண்மைக் காலமாக வெளிவரும் மொழி பெயர்ப்புப் படைப்புகள் நம்பிக்கை தருகின்றனவாக உள்ளன. ஆப்பிரிக்க எழுத்தாளர் கூகிவா தியாங்கோவின் சிலுவை யில் தொங்கும் சாத்தான் முக்கிய மான நாவல். உருது எழுத்தாள ரான சதத் ஹாசன் மண்டோவின் படைப்புகள் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியன. இப்படி நிரம்பச் சொல்ல முடியும்.

அதே நேரத்தில் கண்ட கண்ட குப்பைகளும் பிற மொழிகளி லிருந்து தமிழாக்கப்படுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அண்மைக் காலத்தில் 'சாகித்ய அகாதெமி' நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ள பிற இந்திய மொழிப் படைப்புகள் வாசிப்பில் அலுப்பைத் தருகின் றன. மொழிப்பெயர்ப்பு படைப்பு மேன்மையானது என்ற மேலை நாட்டு மோகத்துடன் அலையும் சிலர் 'தமிழில் என்ன இருக்கு வாசிப்பதற்கு' என்று போகிற போக்கில் சொல்கின்றனர். இது ஒரு வகையில் பின்காலனிய அரசியல் செயல்பாட்டின் விளைவாகும்.''

'திராவிட இயக்க வளர்ச்சியில் கலைஞரின் நாடகங்கள்' என்ற நூலில் திராவிட இயக்கத்தின் இன்னொரு முகத்தைச் சித்தரித் துள்ளீர்கள். அடிப்படையில் பிரச்சாரத்திற்காக எழுதப்பட்ட திராவிட இலக்கியம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

""போன நூற்றாண்டைப் பொறுத்தவரையில் சாதிய ஒடுக்கு முறை, பெண்ணடிமைத்தனத் தினால் சீரழிந்திருந்த தமிழகத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தோற்றுவிக்கப்பட்ட சீர்திருத்த அமைப்பான 'திராவிட இயக்கம்' குறித்து மீளாய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். பார்ப்பனிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, விதவை திருமணம், ஜமீன் ஒழிப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, தமிழின் மறுமலர்ச்சி, சாதிய எதிர்ப்பு என பல்வேறு தளங்க ளில் இயங்கிய திராவிட இயக்கம் அன்றைய காலகட்டத்தின் தேவை. அந்த இயக்கம் பின்னர் தேர்தலில் போட்டியிட்டுச் சீரழிந்து போனது வேறு விஷயம்!

எனினும் 1940 முதல் 1967 வரை இலக்கியம், நாடகம், திரைப்படம், கட்டுரை என பல்வேறு வழி களில் திராவிட இயக்கத்தாரின் பதிவுகள் ஆழமாகப் பதிந்துள் ளன. ஒரு காலகட்டத்தில் கலை இலக்கியப் படைப்புகள் பிரச் சாரத்திற்கு எந்த அளவில் பயன்பட்டன என்பதை அறிய திராவிட இயக்கத்தில் கலைஞரின் நாடகங்களை முன்மாதிரியாகக் கொண்டு, அன்றைய காலப் பின்புலத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றுள்ளேன். 'எதுவும் புனிதம் இல்லை; எதுவும் இழிவா னது இல்லை' என்ற பின் நவீனத்துவ போக்கினைப் பின்புல மாகக் கொண்டு கலைஞரின் நாடகங்களை மறுவாசிப்புக்குள் ளாக்கினேன். அந்த வகையில் அந்தப் புத்தகம் சமூகப் பதிவு.''

தமிழில் கைலாசபதி, சிவத்தம்பி, கோ.கேசவன் என ஒரு வகைப்பட்ட விமர்சனப் போக்கு, க.நா.சு, வெங்கட் சாமிநாதன் போன்றோர் இன்னொரு போக்கு, கோவை ஞானி, தமிழ வன், அ.மார்க்ஸ் போன்றோரின் வேறுபட்ட போக்குகள் உள்ளன. ஒப்பிட்டுப் பார்க்கும்போது, உங்களுக்கெனத் தனிப்பட்ட விமர்சனப் பார்வை இருக்கிறது. அதற்கான பின்புலம் என்ன?

""தனித் தமிழ், மரபிலக்கியம், சிறுபத்திரிகை இலக்கியம், இடதுசாரி இலக்கியம், நவீன உலக இலக்கியப் படைப்புகள் என எனது இலக்கியப் பயணம் 1974 முதல் மாறிக் கொண்டே இருக்கிறது. பல்வேறுபட்ட தத்து வங்களை வாசிப்பதில் ஆர்வம் எனக்கு அதிகம் என்றாலும் இலக்கியப் படைப்புகளைப் பொறுத்தவரையில் என் 'சுயம்' சார்ந்து எனக்குள் உருவாகும் கருத்தினை அடித்தளமாகக் கொள்கிறேன். நான் எந்தவொரு கோட்பாட்டினுக்கும் தாலி கட்டிக்கொண்டு, அந்த இடத் திலே தேங்கிப் போவதில்லை. அப்புறம் நேற்று சிறுகதை எழுதத் தொடங்கிய இளைஞன், கவிதை எழுதுகிற இளம்பெண் போன் றோரின் குரல்களைக் காது கொடுத்துக் கேட்கிறேன். அவற் றில் ஏதாவது புதிய விஷயம் இருக்கலாம் என நம்புகிறேன். படைப்பைப் பொறுத்த வரையில் 'புயலிலே ஒரு தோணி', "கடலுக்கு அப்பால்' என இரு நாவல்கள் எழுதிவிட்டுக் காணாமல் போன ப.சிங்காரத்தின் எழுத்தைவிட என்ன சொல்ல உள்ளது. அவர் தனது நாவல்கள் குறித்து எந்த 'லாபியும்' செய்யவில்லை. எனினும் அவருடைய மறைவிற்குப் பின்னர், 'புயலிலே ஒரு தோணி' தமிழில் முக்கியமான நாவல்களில் ஒன்று என அங்கீகாரம் பெற்றுவிட்டது.

சிறந்த படைப்பு என்பது முன்னுதாரணத்தினை மறுத்து விட்டுப் புதிய பாதையில் தடம் பதிப்பதாக இருக்க வேண்டும். இலக்கிய விமர்சகரும் அப்படித் தான். பல்வேறு முறைகளில் விமர்சகர்கள் புதிய அணுகு முறையைப் பின்பற்றினாலும், ஒரு நிலையில் அவரவருக்கான தனிப் பட்ட விமர்சன மரபு உருவாகி வரும். என்னைப் பொறுத்தவரை யில் படைப்பின் பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்வதற்கு முன்னுரிமை தருவதை வழக்க மாகக் கொண்டுள்ளன.

நான் எனது பள்ளிப் பருவத் திலிருந்து ஒடுக்கப்பட்டவர் களுக்குச் சார்பான மனநிலை யுடனே வாழ்ந்து வருகிறேன். சக மனிதர்கள்மீதான அன்பு எனக்கு எப்பவும் பிடித்தமானது. அது எனது பதின்பருவத்தில் இயற்கை மீதும் சக உயிரினங்கள் மீதும் என்றும் பரவியது. பால், இன, மொழி, சாதி, மத அடிப் படையில் நசுக்கப்படும் நிலைக்கு எதிரான எனது அரசியல் பார்வை, என் இலக்கிய அணுகுமுறையைத் தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் கோட்பாடு கொள்கையைவிடப் படைப்பாளியும் படைப்பும் எனக்கு மிகவும் முக்கியம்.

ஒரு தேர்ந்த படைப்பின் வழியாகப் படைப்பாளன் மனித இருப்புக் குறித்து கண்டறிந்த உண்மைகள் என்னைப் பொறுத்த வரையில் முக்கியமானவை. வாசகனின் வாசக மனநிலையைச் சீர்குலைத்து, ""அவனுக்குள் இடை விடாத கேள்விகளை எழுப்பும் படைப்பு, ஒரு வகையில் உங்கள் தூக்கத்தைக் கெடுத்துவிடும். இது ஏன் இப்படி நடக்கிறது? வாழ்க்கை ஏன் இப்படி அபத்த மாக உள்ளது? வாழ்வு செலுத்தும் கருணை-கனிவு மனதைக் குதூகலிக்கச் செய்வது எப்படி? இப்படி பல்வேறு கேள்விகள் மூலமாகவே இலக்கியப் படைப்புகளை அணுகும்போது, முற்போக்கு, பிற்போக்கு, உன்னதம் போன்ற அம்சங்களுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. இரும்புப் பெட்டகம் போல விளங்கும் படைப்பின் ரகசியங்களைக் கண்டறிந்து பெற்ற அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. அதே நேரத்தில் மடத் தனமாகவும் செயற்கையாகவும் போலியாகவும் எழுதப்படும் படைப்புகள் எனக்கு எரிச் சலையும் வெறுப்பையும் ஏற்படுத் துகின்றன என்பதையும் இப் பேச்சில் பதிவு செய்ய விரும்பு கிறேன்.''

எதிர்காலத்தில் என்ன எழுதத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?

""ஏதாவது எழுத வேண்டும் அல்லது இந்த எழுத்து வேலையைச் செய்ய வேண்டும் என்ற நினைவு மட்டும் எப்பவும் மனதில் உள்ளது. ஆனால் அவை நடை முறையில் சாத்தியமா, இல்லையா என்பதைச் சொல்ல முடியாது. எல்லாத் திட்டங்களையும் மீறிச் 'சித்தன் போக்கு'போல மனம் புதிய பாதையில் இழுத்துச் செல்லும். வாசிப்பதற்கு நிறைய புத்தகங்கள் என் மேசையில் குவிந்து கிடக்கும்போது ஏன் எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது. புத்தக வாசிப்பு மூலம் மனம் அடையும் 'லஹரி' உணர்வுக்கு அளவேது? அது போதாதா?''

சந்திப்பு: புகைப்படங்கள்:
அண்ணல்

Thursday, May 5, 2011

நகரத்திற்கு வெளியே கிடைக்குமிடம்..

சென்னை தவிர வேறு ஊர்களில் இருக்கும் நண்பர்கள்...என் புத்தகம் கிடைப்பதில்லை என்கிறார்கள்...அவர்கள் நண்பர் வேடியப்பனை தொடர்பு கொண்டு எனது புத்தகத்தை பெறலாம்...அவரது தொடர்பு எண் 9940446650.சென்னையில் உள்ளவர்கள் அவரது டிஸ்கவரி புக் பேலஸ் சென்று வாங்கி கொள்ளவும்..பிரதிகள் உள்ளன,,,

Monday, April 25, 2011

டார்க் ப்ளாக்
சிறுகதை

"சேவ்" மறுவாழ்வு மையத்தின் கட்டிடம் மஞ்சள் நிறத்தில் இருந்தது. அந்த நெடுஞ்சாலையின் இருபக்கங்களிலும் வேறு கட்டிடம் இல்லை. ஒரு தேவாலயத்தின் தோற்றத்தைப் போல சேவ் கட்டிடம். முகப்பில் குடி குடியைக் கெடுக்கும். குடிகாரர்களின் மறுவாழ்வு மையம் என்ற வாசகம் எழுதப்பட்ட போர்டு. தனது ஆயுள் காலத்தின் கடைசி நிமிடத்தினை உணரத் தொடங்கிக் கொண்டிருந்தது.

அந்தக் கட்டிடத்தின் வாசல் கதவை ஒட்டி மேஜை மேல் ஒரு குறிப்பேடு இருந்தது. இதுவரை யாரும் அந்த குறிப்பேட்டில் எதுவும் எழுதவில்லை. ரா.சரவணன் (வயது : 19, த/பெ. ராதா கிருஷ்ணன், தொழில் : மாநில அரசு அதிகாரி, வருமானம் : ஐந்து லட்சத்திற்கு மேல் வருடத்திற்கு) எனக் குறிப்பேட்டில் முதன் முறையாக எழுதினான். புகார் இல்லை. "சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்க" என எழுதி தனது கையெழுத்தைப் போட்டிருந்தான். அவனை இன்று காலையில் சேவ் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். அவனுடன் அவனது அம்மா ரா.சுசீலாவும், இளைய சகோரன் ரா.அபிஷேக்கும் (வயது 11) வந்திருந்தான்.

சேவ் மறுவாழ்வு மையத்தின் பிரதான அலுவலக அறை அவன் அருகில் அவனது அப்பாவும், மையத்தின் சீனியர் டாக்டர்.பரந்தாமனும் அமர்ந்திருந்தனர். ரா.சரவணனுக்கு அறை ஒதுக்கப்பட்டது. C பிளாக்கில் 11-ம் நம்பர் அறை. C பிளாக் பெரும்பாலும் வயதானவர்களுக்குத்தான் ஒதுக்கப்படும்.

ரா.அபிஷேக் தனது சகோதரனுக்கு வாழ்த்துச் சொன்னான். கைகுலுக்கினான், தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்த பைவ் ஸ்டார் சாக்லெட்டை எடுத்து அவனுக்குத் தந்தான். ரா.சரவணன் வாங்கிக் கொண்டான்.

பிறகு சாக்லெட்டின் உறையைப் பிரித்துத் தின்றான் அவர்கள் புறப்பட்டனர். சாலையை கடந்து செல்லும் காரின் சத்தம் சரவணனின் காதுகளுக்குக் கேட்டது. C பிளாக்கிற்கு வார்டன், அவனை அழைத்துச் சென்றார். 11ஆம் நம்பர் அறை திறந்திருந்தது. இரண்டு படுக்கைக் கொண்ட அறை. மறுவாழ்வு மையத்தில் தனித்த படுக்கையறை எதுவுமில்லை. தற்கொலை முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டுமென்பதற்காக மூன்று படுக்கையறைக் கொண்ட அறைகளாகத்தான் மையம் ஏற்பாடு செய்திருந்தது. ரா.சரவணன் 11 ஆம் நம்பர் அறைக்குச் சென்ற போது ச.முருகேசன் (வயது 49) அப்போதுதான் உறங்கி எழுந்திருந்தார். வராண்டாவிற்கு வந்து பராக்கு பார்த்தவரை வார்டன் "உள்ளாறப் போப்பா, டாக்டர்ஸ் ரவுண்ட்ஸ் வர்ற நேரம்" என்று விரட்டினார். ரா.சரவணனும், ச.முருகேசனும் ஒருவரையயாருவர் பார்த்துக் கொண்டனர். ஏனோ அவர்கள் அந்நொடியிலிருந்து நெடுநாட்கள் புரிந்து கொண்டவர்களைப் போல முகம் மலர்ந்து சிரித்தனர். ஒருவரையயாருவர் அறிமுகம் செய்து கொண்டனர். "அண்ணே, உங்களுக்கு எத்தனை நாள் ட்ரீட்மெண்ட்"

"இன்னும் பதினைஞ்சு நாள், பாக்கி இருக்கு சரவணா"

"எனக்கு முப்பது நாள், எனக்கு இந்த இடமே பிடிக்கலை இங்கிருந்து போனால் போதும்னு தோணுது அண்ணே"

"உனக்கு இங்க ட்ரீட்மெண்ட் எடுக்கப்பிடிக்கலையா"

அவன் அமைதியாக இருந்தான். தனது பாக்கெட்டில் ஒளித்து வைத்திருந்த கோல்டுபிளாக் சிகரெட்டை எடுத்தான். ச.முருகேசனுக்கு சந்தோஷம் அவரது உள்ளங்கைகளைத் தேய்த்தபடி அந்த அறையின் வாசல் கதவிற்கு பின்பாக ஒளித்து வைத்திருந்த தீப்பெட்டையை எடுத்துத் தந்தார். சரவணன் பற்றவைக்கப்போனான். கொஞ்சம் பொறு டாக்டர்ஸ் ரவுண்ட்ஸ் வர்றாங்களான்னு பார்க்கிறேன் என்றார். பிறகு எடுத்து வாசலில் நின்று எட்டிப்பார்த்தார். வராண்டாவில் யாரும் இல்லை. B பிளாக்கிலோ அல்லது A பிளாக்கிலோ நடக்கின்ற சத்தம். கட்டிடம் முழுக்க அதிர்ந்தது. முருகேசன் சப்தத்தை வைத்து எத்தனை நபர் என்று யோசித்தார். முருகேசன் மையத்திற்கு வந்து மூன்ற மாதங்களுக்கு மேலாகிறது. யார், யார் எந்த நேரத்தில் வருவார்கள் என்பது அவருக்குத் தெரியும். பிறகு அவர் அவனைப் பார்த்து "ம்ம்.. பத்த வைய்யி, இப்போதைக்கு யாரும் வரமாட்டாங்கன்னு நினைக்கிறேன்" என்றார்.

சிகரெட்டை பற்ற வைத்து ஒரு இழுப்பு இழுத்து முருகேசனிடம் கொடுத்தான் சரவணன். அவர் கண்களை மூடிக்கொண்டு புகையை இழுத்து வெளியே விட்டார். முகம் தெம்பாக தெரிந்தது.

"இன்னும் கொஞ்ச நாள்தான், அப்புறமா போய் என் பிரண்ட்ஸ்களோட குடிச்சிட்டு ஜாலியா இருப்பேன்."

"திரும்பவும் டிரிங்ஸ் பண்ண ஆரம்பிக்கலாமா? மாத்திரைகள் சாப்பிட்ட பிறகு டிரிங்ஸ் யூஸ் பண்ணினா ரத்த வாந்தி எடுப்பீங்கன்னு டாக்டர் சொன்னாரே?"

"அதெல்லாம் சும்மா, இந்த ஹோமில தர்ற மருந்து மாத்திரை எல்லாம் நோ யூஸ். வீட்டிலே நம்மளை அவங்களோட மனத்திருப்திக்காக, அனுப்புறாங்க, நாமளும் அவங்களோட ஆத்திரத்திற்கு வர்றோம். ஹோமிற்கு வர்றவங்க எல்லோரும் நல்ல குணமாயிட்டா அப்புறம் இத்தனை டாஸ்மாக் எதுக்கு, குடிச்சு பழகினவங்களோட மனசு போதையைத் தேடிக்கிட்டேதான் இருக்கும்".

"அப்புறம் நாம ஏன் இங்க இருக்கணும், இங்கிருந்து போயிடலாம்ல, தப்பிச்சு கூட போயிடலாம்".

"தப்பிச்சுப் போனா அவங்களுக்குதான் லாபம், வீட்டுக்கு போனவுடனே நம்மளைத் திரும்பவும் இங்கதான் கொண்டு வந்து விடுவாங்க, இல்லை வேற ஏதாவது ஒரு ஹாம்,

அங்கே போனா ரீடேக்னு சொல்லி நம்மளை வேறொரு டார்க் ப்ளாக்கிலே போட்டுடுவாங்க, டார்க் பிளாக்குங்கிறது, எப்போதும் இரண்டு மூன்று பேரும் நம்மளை போலீசு மாதிரி மோப்பம் பிடிச்சுட்டே இருப்பாங்க, எதுக்கெடுத்தாலும் அடி உதை. அடிக்கிறதுக்கு தனி ரூம். தனி ஆளு, அதுக்கு பேசாம ருமிற்குள்ளேயே தர்ற மாத்திரையை தின்னுட்டு இருக்கலாம்".

"இங்கிருந்து யாரும் தப்பிச்சு போனதில்லையோ".

"இந்த பெட்டு காலியா கிடக்குது பார், சிங்காரவேல்னு ஒருத்தன், பெரிய பேட்டை ரவுடியா திரிஞ்சவன், எந்நேரமும் தண்ணிலதான் இருப்பான், வந்த ரெண்டு நாள்ல தப்பிச்சான், வெளியே போய் பார்ல தகராறு பண்ணி போலீஸ்ல மாட்டிக்கிட்டான், அங்கேயும் அடி உதை, அவங்க வீட்ல மறுபடியும் இங்கதான் வந்து சேர்த்தாங்க, டார்க் ரூம்ல போட்டாங்க, நேரத்துக்கு சாப்பிடனும், இவன் மறுத்தான், பிவிசி பைப்ல முட்டியிலேயே அடிய போட்டாங்க, இப்ப இருக்கிற இடம் தெரியாம இருக்கான்".

"ஆமா சரவணா நீ எத்தனை வருஷமா குடிக்கிற.."

"அண்ணே, இரண்டு, மூன்று தடவை குடிச்சிருப்பேன், அதுவும் பியர்தான் அப்புறம் வழக்கமாயிச்சு முதல் தடவை என்னோட லவ்வர் என்கிட்டே லவ் லெட்டர் கொடுத்தப்ப, எனனோட பிரண்ட்ஸ் ட்ரீட் கேட்டாங்க. பாருக்கு போய் பீர் சாப்பிட்டோம். அப்பா அதை கண்டுபிடிச்சுட்டாரு, திட்டு, அடி, உதை அப்புறம் என்னோட் லவ்வர் அவளோட பக்கத்து வீட்டுக்காரனோட சேர்ந்து சினிமாவுக்கு போனாள். அவன் கூட சேர்ந்து டூவீலரில் சுத்துறா. அவன் என் முன்னாலேயே கிஸ் தர்றான். எனக்கு ஆத்திரம் வருது, ஒரு கோன் ஐஸ்வாங்கி இரண்டு பேரும் சாப்பிட்டதை பார்த்துட்டு என்கூட படிக்கிற சாரு சொன்னாள். நீ என்னை லவ் பண்றயா. இல்லை அவனை லவ் பண்றயான்னு கேட்டேன். இரண்டு பேரையும்தான் அப்படின்னு சொன்னாள். எனக்குப் பொறுக்க முடியலை. நேராக பாருக்கு போய் இரண்டு பீர் சாப்பிட்டேன். வீட்டிற்கு வந்து வாந்தி எடுத்துட்டேன். அப்போதான் எங்க அப்பா ஹோமில கொண்டு போய் விட்டுடுவேன்னு சொன்னாரு !"

ரா.சரவணன் சொல்லி முடித்ததும் சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்திப பற்ற வைத்துக் கொண்டான். அவளும், உன்ன மாதிரி ரெண்டு கெட்டான்தான் போலிருக்க அப்புறம் என்னாச்சு,

"அடிக்கடி அவள நினைச்சு அடிக்கடி பாருக்கு போய் பீர் சாப்பிட ஆரம்பிச்சேன். வீட்லே இருந்து காசு திருடிட்டு போயிடுவேன்".

"ம், அப்புறம் என்னாச்சு ?" "ஒரு நாள் போதை அதிகமாகி, பீர்பாட்டில்ல உடைச்சு, பக்கத்து வீட்டுக்காரன குத்தப்போயிட்டன், அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவன், உனக்குச் சின்னப் பொண்ணு கேக்குதா! "வக்காளி" வெளியே வாடான்னு, அவன் போலீசுக்கு போன் பண்ணினான்".

"போலீஸ் வந்து விசாரணை பண்ணியது. அப்பா பெரிய பதவியில் இருக்கிறதுனால, பிரச்சனையை பேசு முடிச்சிட்டாரு… போலீசும் போயிருச்சு.. அவ வீட்டுக்கு போன் போட்டேன், நீ அவன பார்க்கிறது தெரிஞ்சா உன்னையும் ஒரு நாள் போட்டுத்தள்ள வருவேன்னு சொன்னேன். அவ மிரண்டு போய் அவன்கிட்ட இருந்த தொடர்ப கட் பண்கிட்டா.. என்னையும் மட்டும்தான் லவ் பண்றதா இப்ப சொல்றா... ஆனா என்னால பீர் அடிக்கிறத மட்டும் விடமுடியல... அதான் எங்க வீட்ல கொண்டாந்து இங்க சேர்த்துட்டாங்க..."

முருகேசன் பெருமூச்சு விட்டார். அறையின் மின் விசிறியை வேகத்தில் சுழலவிட்டான் சரவணன். அப்போது பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. மதியச் சாப்பாடு நேரம் என்று முருகேசன் அவனிடம் சொன்னார்.

மதியச் சாப்பாடு முடித்துவட்டு கொஞ்சநேரம் சரவணனுக்கு மற்ற ப்ளாக்குகளை சுற்றிக் காண்பித்தார் முருகேசன், விதவிதமான மனிதர்கள். விதவிதமான கதைகள் அவர்கள் சூழ்ந்திருந்தது. கொலை செய்துவிட்டு தப்பித்து வந்தவன் மனநோயாளி, ஓரினச் சேர்க்கையாளன், பீடி திருடிக் கொடுப்பவன், கஞ்சா அடிப்பவன் முதல் ப்ரவுன்சுகர் எடுத்துக் கொண்டவன் வரை வேறு வேறு ப்ளாக்குகளில் அடைத்திருந்தனர். அவர்களைப் பார்க்க சரவணனுக்கு பயமாக இருந்தது. அநாயசமாக அவர்களின் கதையைச் சொல்லிக் கொண்டு வந்தார் முருகேசன்.

இந்த மையத்தை விட்டு எங்காவது ஓடிப் போக வேண்டும் என்று இருந்தது. அப்போது ஒரு இடத்தில் பொடீர், பொடீர் என சத்தம் கேட்டது. எட்டிப் பார்த்தார்கள். அதுதான் டார்க் ப்ளாக். ஜீரோ வால்ட்ஸ் பல்ப் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அதுதான் அந்த அறையின் மொத்த வெளிச்சமே. வேறு எந்தவகையிலும் வெளிச்சம் உள்ளே வர முடியாதபடி அந்த அறைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. ஒருவனை அந்தரத்தில் தொங்கவிட்டு இருந்தார்கள். இரண்டு பேர் பிவிசி பைப்பால் அவனது முட்டியில் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தார்கள்.

"ஆ வென்று அலறிக் கொண்டிருந்தான்". "ஏண்டா, நாயே குடி கேக்குதா, உனக்கு, ஒளிச்சு வைச்சு குடிக்கிறியா என ஒருவன் சொல்லி அடித்தான்".

ரா.சரவணின் உடல் சில்லிட்டது முருகேசன் அவனை C பிளாக்கிற்கு கூட்டிச் சென்றான். "இங்க மறைச்சு வைச்சு குடிக்கிறவன், தப்பிச்சு போக டிரை பண்றவன், சொல்லுறத கேக்காதவன், எல்லாரையும் இந்த டார்க் ப்ளாக்கிலதான் அடைச்சு வைச்சு சித்தரவதை பண்ணுவாங்க".

"திரும்பி வீட்டுக்கு இங்கிருந்து இவங்க போக முடியாதா".

வீட்ல இருக்கிறவங்க கேட்டா, இன்றும் சரியாகலை என்று சொல்லி காசை பிடுங்கவாங்க முடிஞ்ச மட்டும், பணம் கிடைக்கலைனா இவங்கள துரத்தி விட்டுடுவாங்க.

"எனக்கு பத்தாயிரம் ரூபா முன்பணமா, வாங்கி இருக்காங்கண்ணே".

"உங்கப்பா பெரிய ஆபீஸர் ஆச்சே, அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுவிடுவாங்கன்னு நினைக்கிற. இன்னும் சில ஆயிரம் பிடுங்குவானுங்க. சரவணனை பயம் பிடித்தாட்டியது".

"இங்கிருந்து எப்படியாவது தப்பிக்கணும், நீங்கதான் உதவி செய்யணும் என்று அழ ஆரம்பித்தான்".

முருகேசனுக்கும் அந்த ஆசை தொற்றியது. இவர்கள் என்ன முடிவது செய்வது இரண்டு வாரம் கழித்து வெளியே போவது என்று? இன்றே வெளியேறினால் என்ன? என்று அவருக்கு எண்ணம் வந்தது. சுதந்திர காற்றை சுவாசிப்பது போல உணர்ந்தார். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தபடி யோசிக்க ஆரம்பித்தார்.

அன்றிவு அவர்கள் மையத்தை விட்டு வெளியேறி விடுவது என முடிவு செய்தார்கள். இருவருக்கும் அங்கு இருப்பதற்கு பிடிக்கவில்லை வீட்டிற்கு செல்லவும் பயம் இருந்தாலும், அவனுக்கு டார்க் பிளாக் அதிர்சிக்குள்ளாக்கியது.

மையத்தின் அலுவலக அறை எப்போதும் திறந்துதான் இருக்கும். இரவு வேளையில் வார்டன் அவரது அறைக்குச் சென்று விடுவார். டாக்டரின் உதவியாளர் மட்டும் அந்த அறையில் இருப்பார். அவரும் புகைப்பிடிப்பதற்காக அடிக்கடி வாசலுக்கு வேளியே வந்து நின்று கொள்வார்.

முருகேசன் கடந்த ஒரு வாரமாக இதையயல்லாம் பார்த்துவிட்டுதான் சரவணனிடம் சொன்னார். அவர்கள் இருவரும் C பிளாக்கை விட்டு வெளியேறி நடந்தார்கள். அலுவலக அறைக்கு அந்து டி.வி. பார்ப்பது போல நின்றனர். இரவு தூக்க மாத்திரைகளை சாப்பிடவில்லை. டாக்டர் தந்த மாத்திரைகளை நொறுக்கி கழிப்பறையில் போட்டுவிட்டார்கள்.

முருகேசன் சந்தர்ப்பம் பார்த்து அறையின் கதவைத் திறந்து வெளியேறினார். பின்பாகவே சரவணனும் ஒரே ஓட்டமாக ஓடிவந்தான். அவர்கள் நெடுஞ்சாலையில் வேகமாக ஓட்டமெடுத்தார்கள். டாக்டரின் உதவியாளர் புகைத்துக் கொண்டிருந்த கீழே போட்டு திரும்புவதற்குள் இப்படி ஓடிவிட்டார்கள் என்று மணியை அழுத்தினார்.

பெல் சத்தம் கேட்டு உள் அறையில் உறங்கிக் கொண்டிருந்த வார்டன் என்னமோ, ஏதோ என்று வேட்டியைக் கட்டியபடி வந்தார். அலுவலக அறையினும் சிறு கூட்டம் கூடிவிட்டது. டாக்டரின் உதவியாளனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் முன்னால் நடந்த சம்பவத்தை அவர் சொல்வதற்கு வெட்கப்பட்டார் கூடவே பயந்து கொண்டிருந்தார்.

சரவணனது வீட்டிற்கு போன் செய்து வார்டன் தகவலைச் சொன்னார். அதே போல முருகேசன் வீட்டிற்கும் தகவல் சொன்னார்கள். தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்பி எல்லோரும் இருக்கிறார்களா என்று மற்ற ப்ளாக்குகளில் சரிபார்க்கச் சொன்னார் வார்டன். தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டு உறங்கினவர்கள் எழுப்பியதும் உளர ஆரம்பித்தார்கள்.

சரவணனும், முருகேசனும் மூச்சு வாங்கியபடி ஓடிக் கொண்டிருந்தனர். முருகேசனுக்கு ஓடிய வேகத்தில் செருப்பு அறுந்துவிட்டது. கழற்றி தூக்கி எறிந்து விட்டு ஓடினார். ஏற்கனவே அவர்கள் பேசி வைத்திருந்தனர். நேராக பேருந்து நிலையத்திற்குதான் ஓடவேண்டும் என்று யைமத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவு ஓடவேண்டும் என்றதும் முதலில் அசந்தவர், பிறகு நம்பிக்கை வந்தவராக ஓட ஆரம்பித்தார் சரவணனும் வேகமெடுத்தான்.

அவர்கள் ஒன்றரை மணிநேர ஓட்டத்திற்குப் பிறகு பேருந்து நிலையத்திற்கு வந்தடைந்தனர். டீக்கடையில் தண்ணீர் வாங்கிக் குடித்தனர். முருகேசனுக்கு கை நடுங்கியது. அவருக்க ஏற்கனவே சிறிது ரத்த அழுத்தம் இருந்தது. தண்ணீரை வாங்கி முகத்தில் அடித்துக் கொண்டார். அங்கிருந்த மரப்பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர். அந்த இடத்தில் சிலர் சாக்கை விரித்தும், பேப்பரை விரித்தும் படுத்திருந்தனர். சரவணன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு இடத்தில் சிறுநீர் கழித்துவந்தான்.

சற்று நேரத்தில் போலீஸ் விசில் சத்தம் கேட்டது. முருகேசன் எழுந்துநின்றார். இரண்டு கான்ஸ்டபிள்கள் அந்த இடத்திற்கு வந்தனர்.

"ஏய் யார்ரா இந்நேரம்" என்று டார்ச்லைட் அடித்தார்கள்.

கையிலிருந்த லத்திக்குச்சியால், அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களை அடித்து எழுப்பினார்கள், பின் முருகேசன் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார்கள்.

"யாருப்பா நீங்க, வெளியூர் ஆளங்க போலத்தெரியுது".

"ஸார் நான் பேங்க் ஸ்டாப்! ஒரு வேலை விஷயமாக இங்கேவந்தேன் முருகேசன் மூச்சுவாங்கியபடி சொன்னார்".

"இவன் யாரு சரவணனைக் காட்டி கேட்டார்கள். என் ஊருப்பையன் உதவிக்கு கூட்டி வந்தேங்க ஏன் இப்படி வியர்த்து ரெண்டு பேரும் உட்கார்ந்து இருக்கீங்க எங்கியோ பாக்கெட் அடிச்சு வந்த மாதிரி".

சரவணன் முழித்தான் முருகேசன் அமைதியாக இருந்தார். சரவணனைத்தான் முதலில் கைவைத்தார்கள். ஓங்கி "சப்பென்று" கன்னத்தில் ஒரு அடி விழுந்தது. உண்மையை உளறினான் சரவணன். முருகேசன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தார். மையத்தின் பெயரைக் கேட்டார்கள். சொன்னதும் ஹோமிற்கு போன் செய்தார்கள். டாக்டரின் உதவியாளர் ஆட்டோ எடுத்துக் கொண்டு வருவதாகக் கூறினார். B1 போலீஸ் ஸ்டேஷன் வந்து அழைத்துக் கொண்டு போங்கள் என்றார் போலீஸ்காரர்.

முருகேசனும், சரவணனும் போலீஸ்காரர்களுக்குப் பின்னால் நடந்தார்கள். அவர்களை கடந்து ஒரு ஆட்டோ வேகமாக ஓடியது. போலீஸ்காரர் அவனை கைதட்டி அழைத்தார். அதில் மூவரும் ஏறிக் கொண்டனர். வண்டி போலீஸ் ஸ்டேஷன் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

சரவணன் டார்க் ப்ளாக்கைப் பற்றி நினைத்துக் கொண்டான். பிளாஸ்டிக் பைப்புகளில் அடிவிழுவது போல நினைத்துக் கொண்டான்.

"சார், சார், ஹோமிற்கு வேண்டாம் சார், எங்க அப்பாவிற்கு போன் போடுங்க", "இனிமேல் குடிக்கமாட்டேன் சார், சத்தியா குடிக்கமாட்டேன் பிளீஸ் சார் அப்பாவிற்கு போன் போடுங்க" என்று அழுது கொண்டே வந்தான். முருகேசன் தனது மூத்த மகனை மனதில் நினைத்தார். அவனின் காதல் தற்கொலைக்குப் பிறகு தான் அவர் அதிகம் குடிக்க ஆரம்பித்து இருந்தார். அவரறியாமல் கண்களில் நீர் கசிந்தது.

போலீஸ் ஸ்டேஷனை ஆட்டோ நெருங்கிய போது, மையத்தின் வார்டனும், உதவியாளரும் வாசலில் நின்று கொண்டிருந்தனர். சரவணன் தன் கண்களை மூடிக் கொண்டான். தங்களது வாழ்க்கையை முடிவு செய்யும் உரிமை முழுமையாக பறிபோயிருப்பதை அக்கணம் உணர்ந்தார் முருகேசன்.

விஜய மகேந்திரன் மொபைல் எண் 9444658131
உயிரோசை இணைய இதழில் வெளியான கதை

Saturday, April 23, 2011

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்


செந்தமிழ் அறக்கட்டளை,மணப்பாறை --ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்செந்தமிழ் அறக்கட்டளை,மணப்பாறை

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்

தமிழ்மணவாளன் ஒருங்கிணைப்பாளர்ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011

செந்தமிழ் அறக்கட்டளை (மணப்பாறை) வழங்கும் இந்த ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 அறிவிக்கப்பட்டுள்ளன. நாவல்/நாடகப் பிரிவில் தமிழ்மகன்(வெட்டுப்புலி), வேலு சரவணன்(தங்கராணி),முனைவர். பா.அ. முனுசாமி(இராஜசேகர சரிதம்) ஆகியோரும்,

நவீன கவிதைகள் பிரிவில் கடற்கரய்(கண்ணாடிக்கிணறு),பொன்.இளவேனில்(மணல் சிற்பம்),அ.வெண்ணிலா(இரவு வரைந்த ஓவியம்).பா.சத்தியமோகன்(பெரிய புராணம்-நவீன கவிதையில்) ஆகியோரும்,

சிறுகதைப் பிரிவில் விஜய மகேந்திரன்(நகரத்திற்கு வெளியே),ஜனநேசன்(வாஞ்சை),உயிர்வேலி ஆலா(தொப்பக்கூத்தாடி) ஆகியோரும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது -2011 பெறுகிறார்கள்.

விருது வழங்கும் விழா 30-04-2011 மாலை 0600மணிக்கு,ஆளுனர் மாளிகையில் நடைபெறுகிறது.தமிழக ஆளுனர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார்.

விழாவில் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப, ம.இராஜேந்திரன் (துணைவேந்தர் தமிழ்பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

எழுத்தாளர் பிரபஞ்சன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் இளம்பிறை ஆகியோர் விருதுக்கான நூல்களைத்தேர்வு செய்தனர்.

சீராளன் ஜெயந்தன் தமிழ்மணவாளன் சௌமா.இராஜரெத்தினம்

நிறுவனர் ஒருங்கிணைப்பாளர் நிறுவன அறங்காவலர்

ஜெயந்தன் இலக்கியப்பரிசுப்போட்டி செந்தமிழ் அறக்கட்டளை

Thursday, April 14, 2011

ஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு

ஜெயந்தன் நினைவு இலக்கியப்பரிசு 2011.சிறந்த சிறுகதை தொகுப்புக்காக ..''நகரத்திற்கு வெளியே'' தொகுப்பிற்கு கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் நண்பர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

Friday, April 1, 2011

''நீயா நானா'' நிகழ்ச்சி

வரும் ஞாயிறு அன்று இரவு ஒன்பது மணிக்கு நான் பங்கு பெற்ற ''நீயா நானா'' நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது...நண்பர்கள் கண்டுகளிக்கவும்..பொது இடங்களில் அரசியல் பேசுவது சரியே என்ற அணியில் நான் பேசி இருக்கிறேன்.

Thursday, March 31, 2011

டாய்லெட் கிடைக்குமா ப்ளீஸ்?-பிரியா தம்பி


என் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வெளியில் இருக்கும் பலமணி நேரங்கள் சிறுநீரை அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்ததும் ‘பியா பாத்ரூம்’ எனக் கேட்பாள். அவள் பாத்ரூமுக்கு ஓடும் வேகம் அவளது பலமணி நேர அவஸ்தையை எனக்கு உணர்த்தும்.

பொது இடங்களில் உள்ள கழிவறைகளின் சுத்தம் பற்றி நமக்குத் தெரியும். அது அவளுக்கு புதிதாக ஏதாவது நோயை வரவழைத்து விடக்கூடாதே என அங்கு அழைத்து செல்வதே இல்லை. திறந்த இடங்களில் சிறுநீர் கழிக்க அவள் ஒத்துக் கொள்வதே இல்லை. குழந்தையே ஆனாலும் பொது இடங்களில் பெண்கள் சிறுநீர் கழிக்கக் கூடாது, சிறுநீரை அடக்கித்தான் ஆக வேண்டும் போன்ற விஷயங்கள் அவளது ஜீனில் வந்தவையாக இருக்கக் கூடும்.

நண்பர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றாலோ, ரயிலில் பயணம் செய்யும்போதோ ‘’இங்கே பாத்ரூம் இருக்கா’’ என்று கேட்பாள். இருக்கு என்று சொன்னால் அவளது முகம் அப்படியே மலர்ந்து விடும். அந்த நேரங்களில் மிக வேதனையாகவும், கோபமாகவும் இருக்கும்.

பொதுக்கூட்டங்களில் பெண்கள் வரவில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் நம் தோழர்களிடம் இந்த கழிவறை பிரச்னையை காரணம் காட்டியே பலமுறை கோபமாக சண்டை இட்டிருக்கிறேன். இரவு முழுக்க நடக்கும் கலை இரவுகளில், நேரம் பன்னிரண்டை தாண்டும்போதே அங்கிருக்கும் தோழிகளும், நானும் அவஸ்தைப்பட ஆரம்பிப்போம். பல நேரங்களில் அதற்காகவே நிகழ்ச்சியில் இருந்து பாதியில் கிளம்பும்படியும் ஆகியிருக்கிறது.

பயணங்களில் இந்த அவஸ்தையை பற்றி சொல்லவே வேண்டாம். 15 மணி நேர பயணத்தில் ஏதாவது ஒரு மோட்டலில் தான் பேருந்து நிற்கும். அந்த இடத்தின் சுகாதாரம் பற்றியெல்லாம் நாம் யோசிக்கவே முடியாது. சர்க்கரை நோயாளிகள், வயதான பெண்கள் எனில் அவஸ்தை அதிகம். எனக்குத் தெரிந்து எந்தப் பெண்ணும் சாலைப் பயணத்தில் தண்ணீர் குடிப்பதேயில்லை. சுகாதாரமற்ற இடங்கள், தண்ணீர் குடிக்காமல் இருப்பது இரண்டும் ஏற்படுத்தும் மருத்துவப் பிரச்னைகளும் நாம் அறியாததல்ல.

பேருந்து ஓட்டும் பெண்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் காவலர்கள் இவர்கள் இந்தப் பிரச்னையை தினம் தினம் சமாளித்தாக வேண்டும். சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். தமிழகத்தில் 70 சதவீதம் அரசுப் பள்ளிகளில் கழிப்பிடமே இல்லையாம். கிராமங்களில் பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்துவதற்கு சரியான கழிப்பிட வசதி இல்லாதது முக்கியக் காரணம். மாதவிலக்கு போன்ற நாட்களில் அந்தக் குழந்தைகளின் அவஸ்தையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிரச்னை இப்படியிருக்க...

அடிப்படைத் தேவையான கழிவறை வசதி கூட செய்து கொடுக்க வக்கில்லாத அரசாங்கங்கள் தான் இலவசங்களை இன்று அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆண், பெண் யார் ஆட்சி செய்தாலும் பெண்களின் பிரச்னைகள் யாருக்கும் உறைப்பதில்லை.

அரசுகளை எல்லாம் திட்டிக் கொண்டு எழுத்தில் புரட்சி பேசும் நாம் ... ஆண், திருமணம், காதல், காமம், படுக்கையில் எப்படி நடந்து கொள்வது... இதெல்லாம் தாம் பெண்களின் பிரச்னையென பேசிக் கொண்டிருக்கிறோம்.

தோழர், இங்கே எங்கியாவது டாய்லெட் இருக்குமா? உங்க வீட்டு டாய்லெட்டை கொஞ்சம் யூஸ் பண்ணிக்க முடியுமா? என பதட்டங்கள் இல்லாமல் பொது இடங்களுக்கு பெண்கள் வரமுடிந்தாலே பாதி விடுதலையை எட்டிவிட முடியும் என நினைக்கிறேன்..

Friday, March 25, 2011

குற்றமும் தண்டனையும்


அருணா ஷண்பக். 20 வயது. மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். அவருக்கும் ஒரு டாக்டருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருந்தது. இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என்பதில் அருணாவுக்குக் கூடுதல் சந்தோஷம். திருமண வாழ்க்கை, கணவன், குழந்தைகள் என்று கற்பனையில் திளைத்துக்கொண்டிருந்தார்.

1973-ம் ஆண்டு நவம்பர் 27. உடை மாற்றுவதற்காக மருத்துவமனையின் கீழ்த்தளத்துக்குச் சென்றார் அருணா. அதே மருத்துவமனையில் வார்ட் பாயாகப் பணியாற்றிய சோஹன்லால் பார்தா வால்மீகி என்பவன், பின்னால் வந்து தாக்கினான். நாயைக் கட்டி வைக்கும் சங்கிலியால் கழுத்தை இறுக்கினான். அருணாவுக்கு நடக்கும் கொடூரம் புரிவதற்குள் சுயநினைவு இல்லாமல் போய்விட்டது. சோஹன்லால் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, நகை, பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாததால், அருணாவின் கண்கள் திறந்திருந்தும், பார்க்க முடியவில்லை. அவரால் பேச முடியவில்லை. உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த 38 ஆண்டுகளாக அவர் வேலை செய்த கெம் மருத்துவமனை படுக்கையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார் அருணா.

உறவினர்கள் அதிர்ந்தார்கள். திருமணம் நின்றுபோனது. வழக்கு நடைபெற்றது. குற்றவாளி சோஹன்லால் கைது செய்யப்பட்டான். அவன் மீது திருட்டு, கொலை முயற்சி என்று இரண்டு வழக்குகள் போடப்பட்டன. அவன் இயற்கையான முறையில் உடல் உறவு வைத்துக்கொள்ளாததால், பாலியல் பலாத்காரம் வழக்கு போட சட்டத்தில் இடமில்லை. (என்ன கேவலமான சட்டம்! பெண்ணின் விருப்பம் இன்றி தொட்டாலே அது குற்றம்தானே?) ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.

தண்டனை முடிந்த பிறகு சோஹன்லால் டெல்லி சென்று விட்டான். இந்த முப்பது வருடங்களில் அவனுக்குத் திருமணமாகி இருக்கலாம். அவனுடைய குழந்தைகளுக்கும் திருமணம் நடந்திருக்கலாம். பேரன், பேத்தி பிறந்திருக்கலாம். அவனுடைய வாழ்க்கையில் அந்த ஏழு ஆண்டுகள் மட்டுமே இயல்பு வாழ்க்கை சற்று மாறியிருந்திருக்கும். அதன் பிறகு அவனும் மற்றவர்களைப் போல இயல்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்திருப்பான்.

ஆனால் அருணா? உயிர் மட்டுமே இருக்கிறது உடலில். வேறு எந்த அசைவுகளோ, சிந்தனைகளோ இன்றி இருக்கிறார். அவருக்கு நேர்ந்த கொடுமை தெரியாது. பெற்றோர் இறந்து போன விஷயம் தெரியாது. திருமணம் நின்றுபோன விஷயம் தெரியாது. ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் இருந்தும் தன்னை வந்து யாரும் பார்ப்பதில்லை என்பது தெரியாது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனுக்குத் தண்டனை கிடைத்த விவரமும் தெரியாது. அவன் சந்தோஷமாக எங்கோ வாழ்ந்து

கொண்டிருப்பதும் தெரியாது. தனக்கு வயது 58 என்றும் தெரியாது. தன்னுடய உருவம் எப்படி உருமாறியிருக்கிறது என்பதும் தெரியாது. வெளி உலகில் என்னவெல்லாம் நடந்திருக்கின்றன, இப்போது பகலா, இரவா எதுவும் தெரியாது.

குற்றம் செய்தவன் குறைந்த தண்டனை அனுபவித்துவிட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டான். ஆனால் திருமண நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அருணாவுக்கு வாழ்நாள் முழுவதும் எத்தனை கொடூரமான தண்டனை?

அருணா அனுபவித்தது போதும், அவரைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கருணைக்கொலைக்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என்பதால் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆனால் மருத்துவர்கள் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் அவர் உயிர் பிரிவதற்கு உதவி செய்யலாம் என்று புதிய தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

ருச்சிகா கிர்ஹோத்ரா

பத்து வயதிலேயே தாயை இழந்தவர் ருச்சிகா. அப்பா, பாட்டி, தம்பியுடன் சண்டிகரில் வாழ்ந்து வந்தார். ருச்சிகாவும் அவர் தோழி ஆராதனாவும் டென்னிஸ் வீராங்கனைகள். தினமும் பயிற்சிக்காக டென்னிஸ் அசோசியேஷன் செல்வார்கள். அந்த அசோசியேஷனின் தலைவர் ரத்தோர் என்ற ஐபிஎஸ் அதிகாரி. அவருடைய மகளும் ருச்சிகாவுடன் படித்து வந்தார்.

ஒருநாள் பயிற்சிக்குச் சென்றபோது, தோழி ஆராதனாவை விரட்டிவிட்டு, ருச்சிகாவைப் பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார் ரத்தோர். ருச்சிகா போராடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆராதனா அதிர்ந்துபோனார். இருவரும் தப்பித்து வீடு வந்து சேர்ந்தனர். மறுநாளும் ரத்தோரின் கொடுமை தொடர்ந்தது. இருவரும் வீட்டில் விஷயத்தைச் சொன்னார்கள். பெரும் போராட்டத்துக்குப் பிறகு ரத்தோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று ருச்சிகா, ஆராதனா குடும்பங்கள் மிரட்டப்பட்டன. ருச்சிகாவின் தம்பியை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார் ரத்தோர். ருச்சிகாவின் அப்பா மீது லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. அப்படியும் வழக்கு வாபஸ் பெறாததால், நடத்தை சரியில்லாதவள் என்று சொல்லி ருச்சிகாவை பள்ளியிலிருந்து நீக்க வைத்தார் ரத்தோர். அடுத்தடுத்து இன்னல்களைச் சந்தித்த 14 வயது ருச்சிகா, தன்னால்தானே இத்தனை துன்பங்கள் தன் அப்பாவுக்கும் தம்பிக்கும் என்று நினைத்து, 1991-ம் ஆண்டு விஷம் சாப்பிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.

விஷயம் கேள்விப்பட்ட ரத்தோர் அன்று இரவு பார்ட்டி வைத்து, கொண்டாடியிருக்கிறார். வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, ரூபி என்ற பெயரில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அளிக்கப்பட்டது. ஒரே வாரத்தில் வழக்கு மூடப்பட்டது. சில மாதங்களில் ரத்தோரின் சேவையைப் பாராட்டி, அரசாங்கம் கூடுதல் டிஜிபி பொறுப்பு அளித்தது.

அநியாயமாகத் தன் மகள் சாகடிக்கப்பட்ட விஷயம் கிர்ஹோத்ராவை நிம்மதி இழக்கச் செய்தது. தவறு செய்தவர் எந்தக் குற்றவுணர்வும் இன்றி வாழ்ந்துகொண்டிருக்க, தன் மகளின் இறப்பு மன உளைச்சலைத் தந்தது. மீண்டும் வழக்கு போடப்பட்டது. ஏராளமான தொல்லைகள். போராட்டங்கள். அவமானங்கள். 19 ஆண்டுகளுக்குப் பிறகு, ரத்தோர் செய்த குற்றத்துக்காக 6 மாத தண்டனை அளிக்கப்பட்டது. தண்டனை அளிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் சிரித்துக்கொண்டே பெயிலில் வெளியே வந்துவிட்டார் ரத்தோர்.

ஆருஷி தல்வார்

ஆருஷியின் பெற்றோர் பிரபலமான பல் மருத்துவர்கள். வசதியானவர்கள். பங்களாவில் வாசம். ஒரே பெண். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஆருஷி, ஒருநாள் இரவு அவருடைய அறையில் கொல்லப்பட்டார். மறுநாள் அந்த வீட்டின் வேலைக்காரர் ஹேமந்த் உடல் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலையில் இதுவரை சரியான துப்புக் கிடைக்கவில்லை. மிகவும் புத்திசாலித்தனத்துடன், மருத்துவம் தெரிந்த ஒருவரால் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். கொலைக்கான காரணமும் தெரியவில்லை. எந்தவிதத் தடயமும் கிடைக்கவில்லை. வெளியில் இருந்து யாரும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, ஆருஷியின் பெற்றோர் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்கிறது சிபிஐ. புரியாத புதிராக இருக்கிறது ஆருஷியின் வழக்கு.

பத்மினி

1992-ம் ஆண்டு சிதம்பரத்தில் பத்மினியின் கணவரை, திருட்டுக் குற்றத்தில் சந்தேகப்பட்டு அழைத்துச் சென்றார்கள் காவலர்கள். கணவருக்கு உணவு எடுத்துச் சென்ற பத்மினியை அவருடைய கணவரின் கண் முன்னே பல காவலர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். மறுநாள் பத்மினியின் கணவர் தூக்கில் தொங்கியதாக உடலை ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் நடந்த இந்தக் கொடுமையைக் கண்டு நாடே அதிர்ந்து போனது.

**

சில வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையின் சிறுகதைப் போட்டிக்காக ஏராளமான கதைகள் வந்து சேர்ந்தன. அதில் முதல் பரிசு பெற்ற கதையை எழுதியவர், ஆயுள் தண்டனை கைதி. அவர் தொடர்ந்து கதைகள் எழுதி வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை முடிந்து, அலுவலகத்துக்கு வந்தார். ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக அவர் தண்டனை அனுபவித்தார் என்பது மட்டும்தான் அதுவரை எங்களுக்குத் தெரிந்த விஷயம்.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. சாந்தமான முகம். நிதானமான நடை. சூழ்நிலையால் குற்றவாளியாக மாறியிருப்பாரோ என்று நினைத்தேன். சற்று நேரம் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் சென்ற பிறகு இந்த விஷயம் தெரிய வந்தது.

’நீங்க எதுக்காக கொலை செய்தீங்க?’

‘ம்… அவ நல்லா தளதளன்னு இருப்பா. ஆசைப்பட்டுத் தொட்டேன். பயங்கரமா போராடி உயிரை விட்டுட்டா…’

‘அதை நினைச்சு இப்ப வருத்தப்படறீங்களா?’

’அவ செத்ததுலயோ, எனக்குத் தண்டனை கிடைத்ததிலேயோ வருத்தமே இல்லை. ஏதோ நடந்து முடிஞ்சிருச்சு…’

ஆறு ஆண்டுகள் தண்டனை முடிந்த சோஹன்லால் சக மனிதர்களைப் போல சுகமாக வாழ்கிறான். தன் மகள் வயதை ஒத்த பெண்ணைப் பாலியல் தொல்லை கொடுத்து, மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, தற்கொலை செய்ய வைத்த ரத்தோர், அரசாங்கத்தால் பதக்கம் பெற்று, பதவி உயர்வுகள் பெற்று, சமூகத்தில் பெரிய மனிதராக வலம் வந்து, ஓய்வும் பெற்றுவிட்டார். குற்றவாளி யார் என்றே சரியாக ஊர்ஜிதம் செய்ய முடியாமல் ஆருஷியின் வழக்கு நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கொலையையும் குற்றமாக நினைக்காமல், தண்டனைக்கும் வருத்தப்படாமல் ஒருவரால் வாழ முடிகிறது.

அப்படியென்றால் மனத்தாலும் உடலாலும் பாதிக்கப்பட்டு, உயிரை விட்ட பெண்களுக்கு கிடைக்கும் நீதி என்ன? குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் தண்டனைக்கு அர்த்தம்தான் என்ன?

மனம் திருந்தி வாழ்ந்தால் பரவாயில்லை. ஆனால் சில ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டு, அல்லது செல்வாக்கை வைத்து தப்பி விட்டு, நாட்டில் நடமாடும் குற்றவாளிகளைக் கண்டு மேலும் குற்றங்கள் பெருகாதா?

இந்தியாவில்தான் பெண்கள் அதிக அளவில் வன்முறைகளுக்கு இலக்காகிறார்கள். ஒவ்வொரு 26 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் கொல்லப்படுகிறாள். பத்து நிமிடங்களுக்கு ஒரு பெண் வன்முறைக்கு ஆளாகிறாள். பணியிடங்களில் அதிக அளவில் பெண்கள் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். முப்பது வயதுக்கு உட்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒரு நாடு முன்னேற முன்னேற குற்றம் குறைய வேண்டும். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இங்கு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்தே வருகின்றன. பெண்களுக்கு நிகழ்த்தப்படும் குற்றங்களில் பெரும்பாலும் புகார் செய்யப்படுவதில்லை. பெற்றோரும் உறவினர்களும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்களை அவமானமாகக் கருதுவதால் வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். ஒன்றிரண்டு குற்றங்களே பெரிய அளவில் வெளியே தெரிந்து, வழக்குகள் தொடரப்படுகின்றன.

அந்த வழக்குகளைப் பதிவு செய்வதற்கே பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படியே பதிவு செய்தாலும் அந்த வழக்கு நியாயமாக நடப்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பணம், செல்வாக்கு, பதவி என்று பல விஷயங்கள் வழக்கின் போக்கை மாற்றிவிடுகின்றன. அப்படியும் சளைக்காமல் வழக்கைத் தொடர்ந்தால், தீர்ப்பு வருவதற்குள் இருபது வருடங்கள் வரை ஆகிவிடுகிறது. இவ்வளவு நீண்ட காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை, உடல்நிலை எவ்வளவு தூரம் வைராக்கியத்தோடு போராட வைக்க முடியும்? சில வழக்குகள் நடத்த பணம் இல்லாமல், தெம்பு இல்லாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. எல்லாம் கடந்து நீதி கிடைக்கும்போது, குற்றவாளிகளுக்குத் தண்டனை அற்பமாக அமைந்துவிடுகிறது. இல்லையென்றால் அந்தத் தண்டனைக்கு மேல் முறையீடு, பெயில் என்று வெளியே வந்து, மிகக் குறைந்த கால தண்டனையுடன் தப்பி விடுகிறார்கள்.

இங்கு குற்றம் செய்வது எளிதாக இருக்கிறது. ஆனால் நீதி கிடைப்பதற்கு எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது! அருணா, ருச்சிகா, ஆருஷி… இன்னும் பெயர் தெரியாத பாதிக்கப்பட்ட பெண்கள் நியாயம் கேட்டு நம் முன் நிற்கிறார்கள். அவர்கள் நியாயம் கேட்பது அவர்களுக்காக மட்டுமில்லை, இனி இதுபோன்று எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்.
note
இந்த கட்டுரையை என் கவனத்திற்கு கொண்டு வந்த தோழி ரேவதி கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி,,
courtesy http://www.tamilpaper.net/