Friday, July 30, 2010

இலக்கியவாதிகளே....தீவிரவாசகர்களே உடனடியாக பயன்பெறுங்கள்

ஓர் விளம்பரம்


பிரதி உயிர் அல்லது
புரட்சி நிச்சயம்... அதனால் கலகம் வேண்டாம்...

எல்லாமே மெய்நிகர் தோற்றம்தான்

A LOT CAN HAPPEN OVER COFEE

தமிழ் மொழியின் வாசகப்பரப்பு விரிந்திருப்பதாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வரை தமிழர்கள் தமிழ் புத்தகங்களையே தலையணை போல் அனுசரிக்கத் தொடங்கியிருப்பதாலும், விரிவாகியிருக்கும் வாசகத்தேவைக்கு சேவை செய்ய பிரதி வங்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது எழுத்துச் செயல்பாடுகளுக்குத் தளம் அமைப்பதோடு மட்டுமல்லாமல் அறிவின் சகல அசைவுகள் மீதும் தன் ஒளியைப் பாய்ச்சத் தலைப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கிய கலைவெளியில் பின் காலனியம், கீழை மார்க்சியம், பெரியாரியம், பின்நவீனத்துவம், தமிழ்த்தேசியம், முற்போக்கு இலக்கியம், இந்து தேசியம், தலித்தியம், திராவிடம் இந்துத்துவ தமிழ்த்தேசியம், வெகுஜனக் கலாச்சார ஆராய்ச்சி, விளிம்புநிலை ஆய்வுகள், மானுடவியல், தொண்டு கிறிஸ்தவம் எனப் பல போக்குகள் இன்று பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.
இப்போக்குகளில் இயங்கும் எழுத்தாளர்களின் பிரதிகளுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் பிரதி உயிர் - ன் நோக்கம்.
மேற்கொண்ட கருத்தியல்கள் அத்தனையும் கலந்து கட்டியோ, ஒரு கருத்தியலில் ஆணித்தரமாக நின்றோ, ஒருவர் ஒரு இதழை ஆரம்பிக்க விரும்பினால் அவர்களுக்குத் தேவையான படைப்புத் தேவைகளைப் பிரதி உயிர் சிறப்பான முறையில் செய்து தரும்.

ஒவ்வொரு இலக்கிய அரசியல் போக்கு சார்ந்தும் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்கள், விமர்சகர்கள், செயலாளிகள் மற்றும் வாசகர்களின் வங்கியைத் தனித்தனியே நாங்கள் விசேஷமாகப் பராமரித்து வருகிறோம்.

இதழ்களை அழகுறத் தயாரித்துத் தருவது, புத்தகங்களைப் பதிப்பிப்பதோடு பிரதி உயிர் தன் இயக்கத்தைச் சுருக்கிக் கொள்ளவில்லை.

வெளியீட்டு விழாக்கள், விமர்சனக் கூட்டங்களைத் திட்டமிடுவதோடு விழாவுக்கு வருவதற்கு எப்போதும் தயாராகவுள்ள தலைசிறந்த மூத்த எழுத்தாளர்கள், சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள்,விமர்சகர்கள், பெண்ணியவாதிகள்,பிரமுகர்கள் பட்டியலும் எங்களிடம் உண்டு. நிகழ்ச்சியின் வசதிகளுக்கேற்ப, இடங்களுக்கேற்ப தனித்தனிக் கட்டணங்கள் உண்டு.

I AM NOMORE THAN THE WORDS YOU ARE NOW READING

பிரதி உயிரின், சமீபத்திய அறிமுகமாய் அது தலைநகரத்தில் நடத்திய சில விருந்துகளைப் பற்றிச் சொல்ல வேண்டும். இதற்குப் பிரதி உயிர் அமைப்பின் உறுப்பினராக வேண்டும். பிரதி உயிர் பதிப்பிக்கும் புத்தகங்கள் உறுப்பினர்களுக்குத் தள்ளுபடியில் வழங்கப்படுவதும் உண்டு. இந்த விருந்துகளில் பிரதி உயிரின் உறுப்பினர்கள், விருந்தினர்களாக கலந்துகொள்ளலாம். சற்று வித்தியாசமான சிந்தனை கொண்ட அல்லது அப்படி நினைக்கும் இளம் யுவதிகள் எல்லோருக்கும் உறுப்பினர் கட்டணம் இலவசம். மூன்று மாதங்களில் பாய்கட் தொடங்கி மொட்டை வரை அவர்கள் ஒப்பனை மாற நாங்கள் கியாரண்டி. ஆவணப்பட, குறும்பட, இனவரைவியல் திரை இயக்குநர்களாகத் தமிழில் பரிமளிக்கவும் வெளிநாடுகளுக்குச் சென்று தமிழர்களிடம் நிதி சேகரிப்பதற்கும் புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த விருந்துகளில் மதுபானம் இலவசம் என்பதைக் குறிப்பிட வேண்டியதில்லை. மதுப்பழக்கத்தை முதலில் ஆரம்பிக்கிறார் என்றால் அவர் அதை விண்ணப்பத்திலேயே குறிப்பிட வேண்டும். நட்சத்திர ஓட்டலில் குடித்து சலிப்பானவர்களுக்கு கவிதை, அழகியல், ஐரோப்பிய சினிமா, புரட்சி பற்றிப் பாதுகாப்பாக உரையாடியபடியே குடிப்பது நல்ல அனுபவமாய் இருப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதோடு அங்கே தமிழின் இளம் சினிமா இயக்குநர்களையும், அரசியல் ஆளுமைகளையும் விருந்து நிகழ்ச்சிகளில் திடீரென்று சந்திக்கும் அனுகூலம் உண்டு. இந்த நகர விருந்துகளை தமிழக கிராமங்களை நோக்கி நகர்த்தும் திட்டங்களும் உண்டு. இதற்கான திட்ட நிரல் போர்டு அறக்கட்டளைக்கு அனுப்பப்பட்டுள்ளது. உலகமயமாதல் போக்கில் மையமற்ற பிராந்தியப் பண்புகளும் முக்கியத்துவம் பெறும் தருணம் இது.

மார்க்கெட்டிங் துறையில் தனித்திறன் இருப்பதாக நம்புபவர்கள், முதல் இல்லாமலே நடுவாண்மை செய்யக்கூடிய கலாச்சார இடைவெளிகள் தமிழில் இதுவரை நிரப்பப்படாதது. ப்ராஜக்ட் என்னும் ஒரு சொல்லை மாற்றி மாற்றிச் சொல்லத் தெரிந்தால் போதும். அதுபோக சிறுபத்திரிகை அறிவுத்தளத்தில் உள்ள கலைச்சொற்கள் மற்றும் குழுக்குறிகள் ஆகியவற்றை 30 நாட்களில் தபாலில் கற்றுக்கொள்ளக்கூடிய பயிற்சிப் பட்டறைகளும் நடத்தத் தற்போது திட்டம் உள்ளது. இத்திட்டம் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. தமிழில் ஐம்பது ஆண்டுகளில் உருவான கலை இலக்கியப் போக்குகளை குறுக்குவெட்டாகத் தீண்டும் ஒரு க்ராஷ் கோர்ஸ் இது.

மானுடவியல், தொல்லியல், நாணயவியல், குறியியல் முதல் நுண்கலாச்சாரம், நாட்டார் மரபுகள் வரை கிளாசில் உள்ள விஸ்கியின் ஒற்றை மிடறில், மடிக்கணினியின் ஒற்றைச்சொடுக்கு வேகத்தில் செய்திகளை நீங்கள் பரிமாற முடியும். தமிழர்களில் யாரும் யார் பேசுவதையும் காது கொடுத்துக் கேட்பதில்லை. கேள்விகளுக்கும்(?) இது பொருந்தும். அதனால் அவை தீவிரமான விவாதமாக மாறவேண்டியது இல்லை. தீவிரமும் தேவை இல்லை. ஆனால் சூழ்நிலைக்கேற்ப தீவிரபாவம் அவசியம்.

லத்தீன் அமெரிக்க சினிமா, கறுப்பு சினிமா என்று சும்மாக் கிடந்த தமிழ் சினிமாவை ஒப்பிட்டு உசுப்பிவிட்டுத் தற்போதைய சினிமாவின் போக்கையே மாற்றியுள்ள பின்நவீனத்துவ சினிமா விமர்சகர்களால், வெகுஜன சினிமா இயக்குநர்களுக்கு வெகுஜனப் பத்திரிகை சினிமா விமர்சனங்களில் ஆர்வம் இல்லாத ஒருநிலைமையே ஏற்பட்டுவிட்டது. தமிழின் காத்திரமான தளமாற்றங்களில் ஒன்று என்றே இதைக் குறிப்பிட வேண்டும்.

சினிமா பி.ஆர்.ஓ.க்கள் அனைவரும் பிரதி உயிரைத் தொடர்பு கொண்டு பிரதி உயிர் நடத்தும் இதழுக்கு விளம்பரம் தந்தால் நயமான முறையில் சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்களைக் கொண்டு பின்நவீனத்துவ விமர்சனங்களை ஏற்பாடு செய்யும்.

இப்பவெல்லாம் யார் ஒழுங்கா சமைக்கிறானுக, ஒழுங்கா படம் எடுக்கிறானுக... நாட்டுல அட்டூழியம் கூடிப்போச்சு... அந்தக் காலத்துல அவியல் இருக்கு பாருங்க... திருவனந்தபுரம் வரை மணக்கும்...

இறந்த காலம் குறித்த நல்லுணர்வும் நிகழ்காலம் குறித்த வெறுப்பும் கொண்ட ஒரு நாஸ்டால்ஜியா மனநிலையும் தமிழில் பண்டு தொட்டே நிலைபெற்றுள்ளது. இதற்கு நாற்பது வயதுக்கு மேற்பட்ட, நாற்பது வயது எனத் தங்களை நினைத்துக்கொள்ளும் ஈசி சேர் வாசக சமூகம் இருப்பதாக பிரதி உயிரின் கருத்துக்கணிப்பு தெரிவித்து இருக்கிறது. நிகழ்காலம் இருப்பதற்கு நியாயம் உண்டெனில் இறந்தகால நினைவையும் அனுமதிப்பது பாசிசத்தை மறுக்கும் செயல்பாடுதான் என்று பூக்கோ, சார்த்தரின் நினைவு விழாவில் பேசியதை இங்கு குறிப்பிடவேண்டும்.

அந்த வாசகர்களின் தேவையையும் கருத்தில் கொண்டு நாஞ்சில் நாடன் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் சிறுகதைகள், கட்டுரைகளை வழங்க இருக்கிறது. சுற்றிலும் சினிமா நடிகைகளின் புகைப்படங்கள், செய்திப் பக்கங்களுக்கு நடுவில் சினிமாவைக் காய்ந்து எழுதுவதற்கு நாஞ்சில் நாடனுக்கு இயற்கையாக உள்ள நாஞ்சில் நாட்டு தைரியமே காரணம் என்கிறார் பேராசிரியர் அ.கா. பெருமாள்.

இன்றைய நவீனமயமாதல், உலகமயமாதல் பின்னணியில் இந்தியாவின் சிந்தனை மரபு, இந்து சிந்தனை மரபு, எம்.ஜி.ஆர்., சிவாஜி, பிரமீள், தேவதேவன், கலாப்ரியா, கோபால் பல்பொடி, காந்தி, மூப்பனார், வைரமுத்து, ராஜ்தாக்கரே, கீதை, விவிலியம், காய்கறிகள், சைவம், வைணவம், பௌத்தம், ஆத்மா, அறிவியல் ஞானம், விஞ்ஞானம், இந்திய ஒற்றுமை இயற்கை வேளாண்மை, கோடாங்கித் தைலம் முதல் ஆரிய வைத்தியசாலை வழங்கும் அல்சுக்தாதி வரை சகலத்தையும் காக்டெய்ல் போடவல்ல ஜெயமோகன் என்ற பிறவி எழுத்தாளனின் அசுர பலம்தான் பிரதி உயிரின் அடித்தளம் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இணையம், சிற்றிதழ், வெகுஜன் இதழ் முதல் அதிகாலை வீட்டுக்கு வரும் பால்பாக்கெட் எழுத்துக்கள் வரை செய்தியின் நவ துவாரங்களிலிருந்தும் ஜெயமோகனின் பீ.....றிடல் தமிழர் இன்று அடைந்திருக்கும் பாக்கியம் என்றே குறிப்பிட வேண்டும். இந்துத்துவம், மார்க்சியத்தில் தொடங்கி இப்போது தமிழ்த் தேசியம் வரை நீளும் அவரது பரிசீலனை இன்று உலகளாவிய பாரதூரமான தட்வெப்பநிலை மாறுதல்களில், சுற்றுப்புறச்சூழல் நோக்கியும் இருக்கலாம்.

சென்னைக்குச் சீக்கிரம் பனிஆந்தைகள் வரக்கூடும் என கணித்துள்ள தியோடர் பாஸ்கரனின் அவதானம் இங்கே கவனிக்க வேண்டியது.

ஜெயமோகன் சமீபத்தில் நண்பர்களோடு மேற்கொண்ட இந்தியப் பயணம் தமிழ்ச்சூழலில் பல்வேறு அதிர்வுகளை எழுப்பியுள்ளது. அவர் மேற்கொண்ட பயணம் கூகிள் எர்த்தில் வரைபடமாக சிகப்பு வெளிச்சமிடப்பட்டுள்ளன. கலைமனப்போக்கால் பீடிக்கப்பட்ட கணிப்பொறி வல்லுநர்கள், கார் உரிமையாளர்கள், பணவசதி படைத்தவர்கள், சினிமாக்காரர்கள், பைனான்ஸ் பேர்வழிகள் என இந்தியாவிற்குள் இருக்கும் அறியப்படாத பாரதத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள், யார் வேண்டுமானாலும் ஜெயமோகனின் வழிகாட்டுதலுடன் பயணங்களை மேற்கொள்ளலாம்.

அவருக்கு கல் தடுக்குவது, அவரது மகன் பத்தாவது வகுப்பில் பாஸ் ஆவது எல்லாமே அவருக்கு ஆன்மீக தரிசனம்தான். ஏனெனில் இதுவரை இந்த பிரபஞ்சத்தில் யாருக்கும் கல் தடுக்கவில்லை. யாரும் பத்தாம் வகுப்பு பாசாகவும் இல்லை. எதுவும் நிகழாத வரை நான் பிறக்கவேயில்லை என்பதன் தத்துவ நீட்சியாக ஜெயமோகன் இருக்கிறார்.

பிரதி உயிர் அல்லது GATED COMMUNITY

எந்த இடத்தையும் பற்றிப் பார்ப்பதற்கு முன்னமேயே உள்ளுணர்விலிருந்து பேசத் தொடங்கிவிடும் ஜெயமோகனின் உடனிருப்பு உங்களுக்குக் கூடுதல் அனுகூலம். ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ஜெயமோகனின் யாத்திரைகள் திட்டமிடப்பட்டுள்ளன. நடுவில் பி.எஸ்.என்.எல். பணி, இந்திய லௌகீகவாதத்தின் குறுக்கீடாக ஜெயமோகனால் வருத்தத்துடன் சுட்டப்படுகிறது. யாத்திரைகளுக்கு நடுவில் ஜெயமோகன் வசனம் எழுதும் திரைப்படப் படப்பிடிப்புத் தளங்களுக்குச் செல்லும் திட்டமும் இருக்கிறது. பயணிக்க விரும்புபவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே பிரதி உயிரைத் தொடர்புகொள்ளவும்.

டியூப் லைட்டுகளை உடைத்து முழங்குவது முதல் தவளைகளைக் கடித்து சாப்பிடுவது வரை இந்திய தாந்திரீக மரபின் அதீத சுயமோகச் சாயலையும் ஜெயமோகன் தற்போது வெளிப்படுத்தி வருகிறார். ஒன் இந்தியா என முழங்கும் பி.எஸ்.என்.எல்.லின் செல் ஒன் விளம்பர வாசகத்தை இவர்தான் வடிவமைத்தது. இது இவரின் பன்முகத்தன்மையின் சமீபத்திய அடையாளம்.

ஜெயமோகன் பங்கேற்கும் திரைப்படங்களில் முதிய ஏழைத்தமிழ் எழுத்தாளர்களுக்கு யாசகர், வறியவர் வேடங்கள் காத்திருக்கின்றன. இலக்கியமும் சினிமாவும் இணைவதற்கான முயற்சியில் தன்னாலான பங்களிப்பு என கேரளச் சூழலை ஒப்பிட்டு ஜெயமோகன் பேசியதை நாம் இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

பிரதி உயிர் சமூக உறுப்பினர்கள் ஆகுபவர்களுக்கு, தங்களது குடும்பப் பிரச்னைகள், சட்டரீதியான பிரச்னைகள், மனரீதியான நமைச்சல்கள், அதிகார, புகழ் அபிலாசைகள் இருக்கலாம். அவரவர்களின் பிரச்னைகளின் தன்மைக்கேற்ப ஆலோசனைகளும், ஆற்றுப்படுத்தலும், சந்திப்புகளும் உண்டு. எல்லாவற்றையும் உடைக்க வேண்டும். எதுவும் உடைந்துவிடக்கூடாது என்ற நம் ஜனநாயக மரபைப் பின்பற்றும் virtual கலகங்களுக்கும் இங்கு இடம் உண்டு.

அதனதன் தீவிரத்துக்கு ஏற்ப சட்ட ஒழுங்கு ஆலோசனைகளும், அரசியல்வாதிகளின் ஆதாயமும் சகாயமும் கிடைக்கும் என்பது உறுதி.
வாலைச் சுருட்டு வெளியே... கலகம் செய் பிரதியே
எனவே சீக்கிரம் உறுப்பினராகுங்கள்... சேர்ந்து பயன்பெறுங்கள்.

(மணல் புத்தகம் – 2009 இல் வெளியான விளம்பரம்)

Thursday, July 29, 2010

சாருவால் வந்த நற்பலன்கள்


சாருவால் வந்த நற்பலன்கள்

பொதுவாக என் மனைவி எனது எந்த எழுத்துகளையும் படித்ததில்லை.திருமணமான புதிதில் ராமநேசன் எனது நண்பன் கதையை மட்டும் படித்து இருக்கிறாள்.பொதுவாக அவளுக்கு வாசிப்பு பழக்கம் இல்லை.அப்புறம் அவள் ஒரு mnc கம்பெனியில் வேலை கிடைத்து சென்றுவிட்டதால் நேரம் கிடைப்பதும் அரிதாகி விட்டது.எனது சம்பாத்தியத்தில் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என அவளுக்கு நன்கு தெரிந்து விட்டது.நானும் மர்மமாக இலக்கியம் ,எழுத்து என்று என்னால் முடிந்த வரை இயங்கி கொண்டு இருக்கிறேன்.இதையெல்லாம் விட்டுவிட்டு ஒழுங்காக சம்பாதிக்கும் வழியை பார்க்குமாறு பலமுறை என்னை எச்சரித்தும் கேட்கவில்லை.

ஒருநாள் அலுவலகத்தில் எப்படியோ கூகுளில் எனது ப்ளோக்கை கண்டுபிடித்து உடன்வேளைபார்க்கும் தோழிகளிடம் காட்டும்போதுதான் சாருவுக்கு நான் எழுதிய பதிலை படித்து விட்டாள். வீடு வந்தவள் என்னை விசாரிக்க தொடங்கினாள்.
உண்மையை சொல்லு சாயங்காலம் நீ வேலைக்கு போறியா இல்லை அவர் சொல்ற மாதிரி உயிர்மை ஆபீஸ் போய் கதை அடிச்சிட்டு இருக்கியா?இது முதல் கேள்வி.இந்த கேள்விக்கு பதில் சொல்லுவதற்குள் நான் அல்லாடிவிட்டேன்.அவர் சும்மா ஜாலிக்கு சொல்றார் என்றேன்.அவர் பெரிய எழுத்தாளர் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்றாள்.
அடுத்த கேள்வி டென் டி மற்றும் பெண்கள் பற்றியது...உனக்கு இன்னும் அந்த ஆசையெல்லாம் இருக்கா,பிச்சு போடுவேன்.
அப்புறம் அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு உன்னையல்லாம் எத்தனை பேருக்கு தெரியும் ?எழுதுறத விட்டு தொலைனாலும் கேட்கமட்டேன்னு சொல்ற?.நான் வாய் திறக்கவே முடியவில்லை.....

வீட்டில் இப்படி என்றால் நண்பர் கே.ஜே.அசோக்குமார் புனேயில் இருந்து போன் போட்டு சாயங்காலம் ஆனால் உயிர்ம்மையில் போய் சிரிச்சிட்டு இருக்கிங்கலாமே ? ஏன் என்று கேட்டு துயரபடுதுகிறார்.

ஏதோ துக்கம் விசாரிப்பது போல் சில நண்பர்கள் இதை எல்லாம் பாசிடிவாக எடுத்துகங்க ?என்று ஆறுதல் சொல்கின்றனர்...
இதற்கு நடுவே எனக்கு உண்மையான மன ஆறுதலாக இருந்த நண்பர்கள் இரண்டு பேர்.மாமல்லன் கார்த்தி,ஷங்கர்ராமசுப்ரமணியன்,
இருவரும்தான் தற்சமயம் விடுமுறை நாட்களில் அவர்கள் அறையில் இடம் அளித்து எனது புலம்பல்களை கேட்டு வருகின்றனர்.. அவர்களுக்கு நன்றி....

நண்பர் மாமல்லன் கார்த்தி சமீபமாக எனக்கும் நண்பர்கள் அபிலாஷ்,செல்வ.புவியரசன் எல்லோரையும் அழைத்து நல்ல விருந்து ஒன்றை அளித்தார்...மனம் விட்டு பலநாட்களுக்கு பிறகு பேசினோம்.
அவரது அறை குறித்து இங்கே சொல்ல வேண்டும்.அது ஒரு பின்நவினத்துவ அறை.முன்றாவது மாடியில் பாதி மொட்டைமாடி,பாதிஅறை. பத்துக்கு பதினைந்து இருக்கும் அவ்வறையில் குளிர்சாதன வசதி,மங்கலான விளக்குகள் ,ஸ்லொ ராக் இசை,கணினி வசதி என சூட் ரூம் போல வைத்துள்ளார் மாமல்லன்.நண்பர்களுக்காக தான் வாழ்நாளில் பாதியை அவர் செலவு செய்து இருக்க வேண்டும்.

என்ன சாருவை பற்றி பேச வந்து அவர் போலவே பேச ஆரம்பிக்கிறேன்.....இப்போதைக்கு விடைபெறுகிறேன் அதுதான் நல்லது எனக்கும் உங்களுக்கும்.....

Monday, July 26, 2010

சாரு நிவேதிதாவின் சான்றிதழ்


சாரு நிவேதிதாவின் சான்றிதழ்.

''இந்த இட்த்தில் எனக்கு விஜய் மகேந்திரன் என்ற நண்பரின் பெயர் ஞாபகம் வருகிறது. அவருடைய ’நகரத்திற்கு வெளியே’ என்ற சிறுகதைத் தொகுதி உயிர்மை வெளியீடாக வந்துள்ளது. அதில் உள்ள ஒரு கதையைக் கூட இலக்கியம் என்று சொல்ல மாட்டேன். உங்கள் வீட்டுக் குழந்தை ஏதோ ஒன்றைக் கிறுக்கிக் கொண்டு வந்து உங்களிடம் காண்பித்தால் அதை வாங்கி “வான் கோவைச் நீ அவமானப்படுத்தி விட்டாய்” என்று சொல்லி குப்பைக் கூடையிலா போடுவீர்கள்? அந்த மாதிரி சிறுகதைகள் அவை. இது பற்றி விஜய் மகேந்திரனை பலமுறை கிண்டல் செய்திருக்கிறேன். இந்தக் கிண்டலை மற்றவர்களாக இருந்தால் அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொண்டு என்னைப் பகைவனாக நினைத்துத் தூக்கம் வராமல் அவதிப்பட்டிருப்பார்கள். இருந்தாலும் விஜய் மகேந்திரன் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை. திரும்பத் திரும்ப வந்து கதவைத் தட்டுகிறார். காரணம் என்ன? அவர் ஒரு டாக்டர். இளைஞர். ஏன் அவர் மாலை நேரங்களில் பெண்களை ஒதுக்கிக் கொண்டு டென்.டி போன்ற ப்ப்களில் ஒதுங்காமல் என்னையும் ஹமீதையும் வந்து பார்க்கிறார்? இலக்கியம் என்ற விஷயத்தின் மீது அவருக்கு இருக்கும் தீராத காதல். அதனால்தான் நானும் ஹமீதும் எவ்வளவு கிண்டல் செய்தாலும் திரும்பத் திரும்ப வந்து நிற்கிறார். என்றாவது ஒருநாள் – இன்னும் பத்து ஆண்டுகள் சென்றாவது – அவர் ஒரு நல்ல கதையை எழுதுவார். அதற்காக இப்போதே அவருக்கு ஒரு முத்தம் கொடுக்க நான் தயார்.''

மேற்கண்ட பத்தி சாரு ப்ளோகில் அவர் என்னை பற்றி எழுதியது .பொதுவா எந்த இலக்கிய அரசியல் மற்றும் அக்கபோர்களில் நான் கலந்து கொள்ள விருப்பம் அற்றவன்.மேற்கண்ட பத்தியை முன்னிட்டு நிறைய நண்பர்கள் நான் சாருவுக்கு பதில் சொல்லி எழுத வேண்டும் என போன் செய்தனர்.கடந்த இரண்டு நாட்களாக எனக்கு பதில் சொல்லுவதே வேலையாக போய் விட்டது.

அதற்கான விளக்கத்தை இங்கே சொல்லிவிடுகிறேன்..சாரு என்னை நேரடியாக கிண்டல் செய்து ஒருபோதும் பேசியது இல்லை.என் கதைகள் குறித்து ஒருபோதும் அவரிடம் ஒருபோதும் உரையாடியது இல்லை.மாலை வேளைகளில் நான் ஒரு மருத்துவமனையில் பணிபுரிகிறேன்...மனுஷ்ய புத்திரனை சனி,அல்லது ஞாயிறு தான் சந்திப்பேன்.அவரது வேலைபளு அப்படி.டென் டி பப்ப்களில் ஒதுங்க கூடிய அளவில் எனக்கு வசதி இல்லை.அல்லது ஸ்பான்சர்களும் இல்லை.அன்றாடம் எட்டுமணி நேரம் வேலை பார்த்து கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை மற்றும் எழுத்து பணிகளை செய்து வருபவன் நான்.

அப்புறம் யாருடைய சான்றிதழ் பெறுவதற்காகவும் நான் எழுதுவது இல்லை.அதே போல் சாரு கடந்த சில வருடங்களாக யாரையும் பாராட்டி எழுதியதும் இல்லை.மனுஷ்யபுத்திரனை நான் ஒரு வாசகனாக இருந்த காலத்தில் இருந்து அறிவேன்...அவர் ஒரு போதும் என் மனம் புண்படுமாறு என் கதைகள் குறித்து எந்த அபிப்ராயமும் சொன்னதில்லை...
சாரு அவர் என்னை கிண்டல் செய்து வந்ததாக குறிப்பிடுகிறார்.எழுத்தை விட்டு விலகி குடும்ப பிரச்சனைகள் சிலவற்றில் அல்லாடி இருந்த போது 2007 இல் எனக்கு போதிய மன தெம்பையும் தைரியத்தையும் அளித்து எழுத சொன்னது மனுஷ்ய புத்திரன்தான்.எனது முதல் தொகுப்பை சிறப்பான முறையில் வெளியிட்டு இன்று நாலு பேர் அறிய காரணமாகவும் இருந்தவரை இப்படி என்னை கிண்டல் செய்தார் என்று குறிப்பிடுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது.அல்லது இதுதான் வேலையா?அவருக்கு ஆயிரம் பணிகள் இருக்கிறது .

புத்தக கண்காட்சியில் எனது புத்தகத்தை ஆர்வத்தோடு இரண்டு இளம்பெண்கள் வாங்கி போனதாக தெரிவித்து ஊக்கம் அளித்தவர் சாரு...தொடர்ந்து எழுதுமாறும் விகடன் போன்ற வெகு ஜன இதழ்களில் கூட பங்களிக்குமாறும் சொன்னார்.இது ஜனவரி 2010 இல்.உண்மை இப்படி இருக்க இதற்கு என்ன பதில் சொல்லுவது.

கடைசியில்
என்றாவது ஒருநாள் – இன்னும் பத்து ஆண்டுகள் சென்றாவது – அவர் ஒரு நல்ல கதையை எழுதுவார். அதற்காக இப்போதே அவருக்கு ஒரு முத்தம் கொடுக்க நான் தயார்.''
இந்த நம்பிக்கையில் தான் ஒவ்வொரு இளம் எழுத்தாளனும் எழுதிக்கொண்டு இருக்கிறான்.
என்.எஸ்.மாதவனின் ஹிக்விட்டா போன்ற ஒருகதையை நான் எழுதிவிட்டால் என்னோடைய எழுத்து பயணத்தை நிறுத்திவிட கூடும்...நண்பர்களே இந்த விளக்கம் போதும் என நினைக்கிறேன்....

பின்குறிப்பு
கடந்த சனி கிழமை காலையில் சாரு என்னிடம்தான் போன் செய்து எனது தொகுப்பின் பேரை கேட்டார்.மாலையில் எழுதிவிட்டார்.இரண்டுக்கும் நடுவே அவர் கூர்க் வேறு சென்றுகொண்டு இருந்தார்!!!!

Friday, July 23, 2010

விஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம்

ஆர்.அபிலாஷ்


விஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் நேற்று மேற்கு கே.கே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் எனும் புத்தகக் கடையில் நடந்தது. தேர்ந்தவர்களுக்கே உரிய விமர்சன வட்டம் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கூடி இலக்கியப் பேச்சாளர்களை பாப்பையாவாகத் தூண்டும் பெருங் கூட்டத்துக்கும் மத்தியில் ஒரு புள்ளியில் இருந்தது இந்நிகழ்ச்சி. அதாவது பாப்பையாவுக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் நடுவில். சுமார் இருபத்தைந்தில் இருந்து முப்பதுக்குள் இருப்பார்கள் பார்வையாளர்கள். இதை சரியாக கணிப்பது மிகவும் சிரமம். குறுக்கும் நெறுக்குமான எறும்பு சாரிகள் போல் கூட்டம் தொடர்ச்சியாக கலைந்து கூடிக் கொண்டிருந்தது. முதலில் கூத்துப்பட்டறையை சேர்ந்த தம்பிச்சோழன் சி.மோகன் மற்றும் ரமேஷ் பிரேதனின் கவிதைகளை நிகழ்த்திக் காட்டினார். பிறகு யவனிகா ஸ்ரீராம், ஐயப்ப மாதவன், தாரா கணேசன், பாக்கியம் சங்கர் ஆகியோருடன் நானும் பேசினேன்.



நான் முதன்முதலாக பேசிய இலக்கியக் கூட்டம். மிகவும் பதற்றமாக கையைப் பிசைந்தபடி குறிப்புகளை மனதில் மேல் கீழாக அடுக்கி குழப்பிக் கொண்டிருந்தேன். முதலில் பேசின யவனிகாவின் பேச்சு அவ்வளவு பிரமாதம். “நவீன உலகின் ஒவ்வொரு பொருளும் பாலியல் வடிவம் கொண்டிருக்கின்றன” என்றார். எழுத்தாளன் பேசும் போது இப்படியான கூர்மையான அவதானிப்புகள் தாம் முக்கியம். யவனிகாவின் சிறப்பான பேச்சுக்கு பிறகு என் பதற்றம் அதிகரித்தது. அவருடன் ஒப்பிட்டால் நான் சொல்லி விடப் போகிறேன் என்ற பயம். நல்ல வேளை என்னை கடைசியாக பேச அழைத்தார்கள். தாரா கணேசன் பேசும் போதே மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டேன். சுருக்கமாக எளிமையாக பேசுவது என்று தீர்மானித்தேன். என்னை அழைத்ததும் மைக்கை தவிர்த்தேன். அந்த கூட்டத்தை ஒரு வகுப்பறையாக நினைத்து பேச ஆரம்பித்தேன். பேச்சு சிலருக்கு பிடித்திருந்ததாக சொன்னார்கள். யவனிகா கைகொடுத்து பாராட்டினார். அங்கீகரிக்க தயக்கமற்ற மனிதர். அவரிடம் ஒரு சொல் கூட அதுவரை நான் பேசி இருந்ததில்லை. களைத்துப் போன நிலையிலும் அவர் மட்டும் கடைசி வரை மேடையில் இருந்தார்.

மூன்று வருடங்களுக்கு பிறகு நண்பர் செல்வப்புவியரசை சந்தித்தேன். அதைப் போன்றே இணைய நண்பரான மாமல்லன் கார்த்தி, லக்கி லுக், அதிஷா, கேபிள் சங்கர் ஆகியோரின் சந்திப்பும். அதிஷாவின் எழுத்து போலே பார்த்ததும் அவரை எனக்கு பிடித்து போனது. மென்மையான குரல், மென்மையான சிரிப்பு, மென்மையான நக்கல் ... இப்படியே.

கூட்டம் முடிந்து தொடர்ந்து மழை பெய்தது. வெளியே கடை ஷட்டரில் சாய்ந்து காத்திருந்து அரட்டை அலசல் புலம்பல் என கழித்து பிறகு நனைந்த படியே புறப்பட்டு செல்வா மற்றும் மகேந்திரனுடன் இரவுணவு அருந்தினேன். சிரமமாக இருந்தாலும் அன்று மழை பெய்தது பிடித்திருந்தது. மழை மனிதர்களுக்குள் ஒரு அன்னியோன்யத்தை கொண்டு வந்து விடுகிறது. நகரத்தின் அழைப்புகளில் இருந்து சற்று நேரம் காப்பாற்றுகிறது.

விஜய் மகேந்திரனை எனக்கு அதற்கு முன் நேரில் பரிச்சயம் இல்லை. போனில் சில வார்த்தைகள் பேசி இருப்போம். என்னுடைய இது போன்ற ஒரு கூட்டப்பதிவை படித்து விட்டு அழைத்து பேசினார். அதற்கு பின்னர் சந்திக்க முயன்று நடக்கவில்லை. அடுத்து அவர் பேசினது கூட்டத்துக்கு அழைக்கத்தான். ஒருநாள் பரிச்சயத்தில் விஜய்யை இப்படி புரிகிறேன். கூர்மையானவர். மனிதர்களை நன்றாக கவனிக்கிறார். நட்பை பேணத் தெரிந்தவர். முக்கியமாக அவரிடம் நட்பு பாராட்டுவது சிக்கலற்றதாக இருக்கும் என்று ஊகிக்கிறேன். இந்த ஊகம் சரியாகவோ தவறாகவோ போகட்டும். அதுதானே சுவாரஸ்யம்.

சில நண்பர்களிடம் பேசியதில் நான் உயிர்மையில் இன்னும் பணி புரிவதாக நினைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இல்லை. கடுமையான முதுகுவலி காரணமாக உயிர்மையில் ஒரு மாதம் மட்டுமே என்னால் பணி செய்ய முடிந்தது. (இதை முன்னரே பிளாகில் அறிவித்திருக்க வேண்டும்). கல்லூரிப் பணி வேறு இருப்பதால் சமாளிக்க முடியவில்லை. மனுஷ்யபுத்திரன் நல்ல வேளை புரிந்து கொண்டார். ஜெயமோகன் எழுதியது போல் நான் காய்நகர்த்தி உயிர்மை ஆசிரியக் குழுவில் சேரவில்லை. அப்படி ஒரு உயர்வான அரசியல் நோக்கம் இருந்திருந்தால் ஒரு மாதத்தில் விட்டிருக்க மாட்டேன். வேறு சிலர் அப்போது நம்பியது போல் நான் ஊதியத்துக்காகவும் மனுஷ்யபுத்திரனை ஆதரித்து அக்கட்டுரைகளை எழுதவில்லை. இதுவரை நான் அவரிடம் எந்த பணத்தையும் எதிர்பார்க்கவோ பெற்றுக் கொண்டதோ இல்லை. அதை விட மேலான உதவிகளை எனக்கு செய்துள்ளார். அவரது ஊக்குவிப்பு இன்றி நான் உரை எழுதி இருக்க மாட்டேன். எழுத்துலகில் எனது சின்னஞ்சிறு இருப்புக்கு அவர் முக்கிய காரணம். இதை எல்லாம் சொல்வதற்கு இச்சந்தர்பத்தை பயன்படுத்துகிறேன். நான் என்றும் உயிர்மையில் தான் இருக்கிறேன். ஆனால் ஊழியனாக இல்லை.


இக்கூட்டத்தில் நான் பார்வையாளனாக கலந்து கொள்ளவில்லை என்பதால் மேலதிகமாக விமர்சிப்பது நியாயமாக இருக்காது. பார்வையாளர் யாராவது அதற்குரிய சுதந்திரத்துடன் கூட்டம் பற்றி எழுத வேண்டும். கண்ணாடி வீட்டுக்குள் இருந்தபடி நானதை செய்ய முடியாது.

விஜய் மகேந்திரனின் 'நகரத்திற்கு வெளியே'


விஜய் மகேந்திரனின் 'நகரத்திற்கு வெளியே'
நூல் விமர்சனக் கூட்டம் (அகநாழிகை & டிஸ்கவரி புக் பேலஸ்)
தாரா கணேசன்

"Only those things are beautiful which are inspired by madness and written by reason." -Andre Gide


எவையெல்லாம் பைத்தியக்காரத்தனத்தினால் தூண்டப்பட்டும் அறிவார்த்தத்தினால் எழுதவும் படுகின்றனவோ அவையெல்லாம் அதியழகானவை என்கிறான் ஆண்ட்ரே கைட்.

தனது கதைகளின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிக உள்ளங்களைக் கொள்ளை கொண்ட எர்னஸ்ட் ஹெம்மிங்வே "There is no friend as loyal as a book." ஒரு புத்தகத்தைவிடவும் உண்மையான நண்பன் இருக்க முடியாது என்கிறார். வாழ்வைப்பற்றி எழுத வேண்டுமெனில் முதலில் நீ வாழ்ந்து பார்க்கவேண்டும் புகழ்பெற்ற அமெரிக்கச் சிறுகதை எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான வில்லியம் பால்க்னர் தானொரு தோல்வியுற்ற கவிஞரென்றும் கவிதையில் தோற்றுப்போய் சிறுகதை எழுதத் தொடங்கி அதிலும் தோற்று பின்பு தனது எழுத்துப்பயணம் நாவலில் போய் முடிந்ததாகவும் கூறுகிறார். அவர் சொல்வது முற்றிலும் உண்மைதான் கவிதைக்கு அடுத்தபடியாய் அதிக எதிர்பார்ப்புகளை முன்வைப்பவை சிறுகதைகள் தான். ஏனெனில் நாவலை போன்று அதில் பரந்த வெளியும், இடமும் இருப்பும் இல்லை. கதா பாத்திரங்கள், காலம், இருப்பு, போராட்டம், உரையாடல், மௌனம் என்ற பரந்துபட்ட தளங்களில் நாவல் தன்னை நிலை நிறுத்துகிறது. சிறுகதை என்பது அவ்வாறில்லை. அவற்றில் உரையாடல்கள் கூட அதிகம் இருக்காது.

பார்வைக்கு எளிமையாய்த் தோன்றினாலும் சிறுகதைகள் எழுத்தின் சவாலான வடிவம் தான். இன்றைய நவீன எழுத்துலகின் சூழலுக்கு நாவலை விடவும் மிகவும் பொருத்தமான வடிவம் சிறுகதைகள் தான். புகழ் பெற்ற உலகச் சிறுகதைகளை எடுத்துக்கொண்டால் ஓ ஹென்றி, ஜேடி சாலிங்கர், எட்கர் ஆலன் போ, ஜான் அப்டைக், போன்ற சிறந்த அமெரிக்கச் சிறுகதையாளர்களில் மிகவும் முக்கியமானவர் ஓ ஹென்றி. பிரமாதமான சிறுகதைகளைத் தந்தவர். முக்கியமாக கிஃப்ட் ஆப் மேகி கதை. கதையின் வடிவம், விவரிப்பு, அதன் வழியாக அவர் என்ன சொல்லவருகிறார் என்ற எதிர்பார்ப்பு, அந்த எளிய சிறுகதையினை முன்னெடுத்துச் செல்லும் விதம் அதன் இலக்கியத் தரம் என எல்லாமுமே வாசகனுக்கு பிரமிப்பூட்டக்கூடியவை. வில்லியம் டீன் ஹவெல்ஸ் (William Dean Howells) என்ற விமர்சகர் அமெரிக்க மக்களிடையே இருக்கும் வேகமும் பொறுமையின்மை காரணமாகத்தான் சிறுகதை என்னும் வடிவம் அமெரிக்க இலக்கிய உணர்வுக்கு ஏற்புடையதாயிற்று என்கிறார்.

அமெரிக்கச் சிறுகதைகளுக்கு அடுத்தபடியாக உலகப் புகழ் வாய்ந்தவை பிரஞ்சுச் சிறுகதைகள். ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் உலகம் அறிந்த அற்புதமான பிரஞ்சு சிறுகதையாளர்கள் மெரிமீ் (Merimee), பால்ஸாக் (Balzac), மாப்பசான் (Maupassant) ஆகியோர். இவர்களில், மாப்பசான் தான் இந்திய மொழிச் சிறுகதைப் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றார். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மாப்பசானின் தி நெக்லஸ் அதி சிறந்த சிறுகதையாக பேசப்படுகிறது.

ரஷ்யாவைப் பொறுத்தவரை செக்காவ் துர்கனேவ், கொகொல் (Gogol) ஆகியோர் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்கள். இவர்களில் கொகொல் எழுதிய மேலங்கி (Overcoat என்னும் கொகொலின் கதை உலகப் புகழ்பெற்றது. சிறுகதையின் தந்தையெனப் போற்றப்படும் "கொகொலின் மேலங்கியுள் இருந்துதான் நாங்கள் அனைவரும் பிறந்தோம் என்கிறார் துர்கனேவ்.

இங்கிலாந்து என்றெடுத்துக்கொண்டால் ரட்யாட் கிப்ளிங் (Rudyard Kipling), ஆர்.எல்.ஸ்டீவன்சன் (R.L.Stevenson), கதரீன் மான்ஸ்ஃபீல்ட் (Katherene Mansfield), தாமஸ் ஹார்டி (Thomas Hardy), ஜோசப் கான்ராட் (Joseph Conrad), ஹென்றி ஜேம்ஸ் (Henry James), ஜேம்ஸ் ஜாய்ஸ் ஆகியோர் அற்புதமான சிறுகதையாளர்கள். 90களில் இங்கிலாந்தின் சிறுகதையாளர்களில் வித்யாசமான கதைசொல்லி ரோல்ட் டால். 1945ல் இருந்து இன்றுவரையான முக்கியமான 50 எழுத்தாளர்களில் டாலும் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். இவரது Land Lady, Willam and Mary, The visitor ஆகியவை ஆகச் சிறந்த சிறுகதைகள்.

ஜப்பானின் ஹாருகி முரகரி (Haruiki Murakari), ஐரிஷ் சிறுகதையாளரான வில்லம் ட்ரெவர் (Willam Trevor), அமெரிக்காவின் ரேமாண்ட் கார்வர் (Rayond Carver), மற்றும் டொபியஸ் வுல்ப் (Tobias Wolff) ஆகியோர் சமகாலத்தின் சிறந்த சிறுகதையாளர்கள்.

இப்படி உலகின் சிறந்த சிறுகதைகாளர்களின் ஒட்டுமொத்த வரிசையில் கொண்டாடப்படவேண்டிய பல சிறுகதைகள் தமிழில் படைக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தனில் தொடங்கி, மௌனி, கு.பா.ரா., லா.சாரா., தி.ஜா., அசோகமித்ரன், வண்ணநிலவன், வண்ணதாசன், ஜி. நாகராஜன், பிரபஞ்சன், இ.பா, நாஞ்சில் நாடன், சமயவேல், ஜே பி சாணக்கியா, எஸ் செந்தில்குமார், என்று விரிந்துகொண்டேயிருக்கும் சிறுகதையுலகம் எண்ணற்ற கதையாடல்களை, கதை மாந்தர்களை, சூழல்களை, மண்வாசனையை நம்மனதில் உலவ வைத்த வண்ணம் இருக்கின்றன. தமிழ்ச் சிறுகதைகளின் பெரும் கரையில் விஜய மகேந்திரனின் புதிய காலடியும் இப்போது பதிந்திருக்கிறது.

இன்றைய நவீனத் தமிழ்ச் சிறுகதை இலக்கியமென்பது, அது கையாளும் உட்கருத்திலும், கதை சொல்லப்படும் விதத்தின் நேர்த்தியிலும் மொழியிலும் பல்வேறு வகையான மாற்றங்களைக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சிறுகதையாளனும் தனக்கென்ற தனித்துவமான கதை சொல்லும் முறையும் கதைக் களனையும் தேர்வு செய்கிறான். நொடிக்கு நொடி மாறிக்கொண்டிருக்கிறது உலகம். அதி நவீனத்தை நோக்கி நகர்ந்த வண்ணமும் இருக்கிறது. வாழ்வு நகரும் வேகத்திற்கு ஏற்ப சிந்தனையின் வடிவமும் மொழியின் வடிவமும் இலக்கியத்தின் வடிவமும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இதுதான் வடிவமென்று எவ்வித நிர்ணயமும் அவசியமற்றுப்போன நிலையும் உருவாகிக்கொண்டிருக்கிறது. எப்போதுமே புதிய வடிவங்களும் புரட்ச்சிகரமான மாற்றங்களும் கலையிலும் இலக்கியத்திலும் ஈடு இணையற்ற வரவேற்பைப் பெற்றிருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.

அலங்காரங்களும் வர்ணனைகளும் தேவையற்றதாகி படைப்பின் முழுவீச்சை யதார்த்தத்துடன் தரும்பொழுது அப்படைப்புகள் உலக அளவில் சிறந்த படைப்புகளில் இடம்பெறக்கூடிய தகுதியைப் பெறுகிறன. எல்லையற்ற சாத்தியங்களுடன் புனைவின் எல்லைகள் விரிந்து கொண்டேயிருக்க, இன்றைய நவீன சிறுகதை என்பது நிகழ்வின் பிரதிபலிப்பாக இருக்கிறது. யதார்த்தமும், நிகழ்வுகள் சார்ந்த மன அதிர்வுகள், அத்தகைய அதிர்வுகள் உருவாக்கும் மனோநிலை, மொழிவழியே வெளிப்படும் மனோநிலையின் பிரதிபலிப்பு என்று படைப்பின் தளம் விரிகிறது. அதுவே உச்சபட்சப் புனைவாக மீபொருண்மை, மிகை யதார்த்தம், யதார்த்ததிற்கும் பாண்டஸிக்கும் இடைப்பட்ட ஹைப்பர் ரியாலிட்டி போன்ற பல்வேறு விதமான படைப்புகளை உருவாக்குகிறது..

விஜய மகேந்திரனின் இருள் விலகும் கதைகள் தலைப்பில் 12 நவீன சிறுகதைகளை தொகுத்து அளித்து தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். நகரத்திற்கு வெளியே என்னும் தனது சிறுகதைத் தொகுப்பின் மூலம் மேலும் கவனம் பெறுகிறார். விரையும் நகர வாழ்வின் சிக்கல்களையும் அபத்தங்களையும் தனது சிறுகதைகளின் வழியே நம்முன் வைக்கும் இவருக்கு எளிய மொழி கைவந்துள்ளது. இத்தொகுதியின் முதற்கதையான ’சனிப்பெயர்ச்சி’யில் ஜாதகம், ஜோதிடம் ஆகியவற்றை தீவிரமாய் நம்புவதால் விளையும் பிரச்சினைகளை நகைச்சுவையாக முன்வைக்கிறார். ’மழை புயல் சின்னம்’ என்னும் சிறுகதை இதொகுதியில் சிறந்த கதை. நகர்வதறியாமல் வாசகனை நகர்த்திச் செல்கிறது இச்சிறுகதை. கதையின் களம் அருமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. புயல் மழையினால் பாதிக்கப்படும் அன்றாட வாழ்வினைக் காட்சி மாற்றத்தினூடே அழகாய் சித்தரித்திருக்கிறார். ஒரு சாதாரணனின் வாழ்வில் உருவாகும் காதலின் எதிர்பார்ப்புகளை, யதார்த்தத்தை ஒரு மழைநாளின் மந்தத்தை, அதனை சாவதானமாக தேநீர் அருந்தியபடி அனுபவிக்கும் போது முளைக்கும் அலுவலக நெருக்கடிகளை, புதியதான திருப்பத்தை, அந்த மழை நாள் தந்த எதிர்பாராத கதகதப்பை நன்கு சித்தரித்திருக்கிறார். தேவையற்றுக் நீளாமல் கச்சிதமாய் முடிக்கப்பட்ட நல்ல சிறுகதை இது. அடைபடும் காற்று என்று இன்னொரு சிறுகதை. இவரது கதைகளுக்குள் இது ஒரு புதிய முயற்சி. முழுக் கதையும் கடிதங்களே. அமெரிக்காவிற்கு வேலை நிமித்தம் சென்ற மகனுடன் சென்று திரும்பும் ஒரு வயோதிகர் டிரைவ் இன் ஓட்டல் மூடிவிட்ட வருத்தத்தை சித்தரித்திருப்பதை வாசிப்பது ஒரு வித்யாசமான அனுபவமாய் இருக்கிறது.

பொதுவாகவே விஜய் மகேந்திரன் எளிய சம்பவங்களின் வழியே நகரத்தின் அவலத்தை உருவாக்கி காட்டியிருப்பது இவரது சிறுகதைகளின் சிறப்பம்சம். இருத்தலின் விதிகள் கதையில் இன்னும் சற்று கனம் கூட்டியிருக்கலாம். இந்தக்கதைக்கு நல்ல கரு இருப்பினும் மனதில் பதிய மறுக்கிறது. நகரச் சூழல், அதன் நெருக்கடிகள் இவற்றின் விவரிப்பு அன்றாட வாழ்வை படம்பிடித்துக்காட்டினாலும் இக்கதையின் மையச்சரடு பலவீனமாய் இருக்கிறது. மேலும் சில கதைகளுக்கு வலிந்து அவசியமற்ற கதைமுடிவில் விளக்கம் அளித்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

சிரிப்பு கதையில் கொஞ்சம் பாண்டசியின் சாயல் தெரிகிறது. வேலை கிடைக்காத ஒருவனுக்கு யாரோ முகம் தெரியாத ஒருவன் கிடைக்கும் என்றொரு வார்த்தையைச் சொல்கிறான். வேலையற்றவனுக்கு அதிகாலை விடிகிறது. அப்போது அவன் கட்டிலுக்குக் கீழிருந்து குதித்தோடுகிறது ஒரு சுண்டெலி என்று அந்த மனிதனின் வாழ்வில் ஒரு நம்பிக்கையை துள்ளலை உற்சாகத்தை உத்வேகத்தை சுண்டெலியை உதாரணித்துச் சொல்லியிருப்பதில் நகைச்சுவையான அணுகுமுறை.




முக்கியமாக இவரது நாவலின் தலைப்பிற்கு தெரிவான சிறுகதை நகரத்திற்கு வெளியே. காதலில் தோற்றுப்போன மனநிலையும் தனிமையும் புறக்கணிப்புமே கதையின் மைய உணர்ச்சிகள். ஆணாதிக்கத்தையும் இக்கதை தெளிவாய் பதிவு செய்கிறது. பெண்ணின் உடலை மனத்தை வெளியை தளையிட்டுச் தனது கட்டுப்பட்டுக்குள் வைக்கும் அடக்குமுறையினையும், பெண்ணின் சுதந்திர வெளி மற்றும் மீறலையும், இக்கதை முன்வைக்கிறது. வணிகமயமாகிப்போன உலகில் வாழ்வின் அபத்தச் சூழல் இக்கதையில் நன்கு பதிவாகியிருக்கிறது இக்கதையும் இத்தொகுப்பில் கவனத்திற்குரியதாகிறது.

ஒரு சில இடங்களில் நாட்குறிப்பு படிப்பது போன்ற சம்பவக்கோவையின் உணர்வு எழுவதை தவிர்க்க இயலவில்லை. ஆயினும் அவ்வகை எழுத்தும் ஒருவகையான மன அழுத்தத்தின் வெளிப்பாடாகவே அமைகிறது. சிறுகதையென்பது கதைசொல்லியின் கரத்திலிருக்கும் கண்ணுக்குப் புலப்படா நூலைப் பிடித்துக்கொண்டு அவனது கதாப் பிரபஞ்சத்தில் பிரவேசிக்கும் முயற்சி. அவரவர் பிரபஞ்சம் அவரவர்களுக்கு. பொதுப் புத்தி சார்ந்த விஷயங்களை படைப்பாளிக்குள் திணிப்பது அவசியமற்றது. தனது வாழ்வு சார்ந்த உலகில் படைப்பாளியின் அவதானங்களும் பாதிப்புகளும் மொழியின் ஆளுமையில் படைப்புகளாகின்றன. ஒரு படைப்பாளியின் தேடலும் இயலாமையும் எதார்த்தமுமே அவனது படைப்பை கவனத்திற்குரியதாக்குகிறது. அவனது தொடர்ந்த தேடலும் உணர்வின் தீவிரமுமே அவன் ஒரு பெரும் ஆளுமையாய் உருவாக வழிவகுக்கிறது. எந்தப் படைப்பாளியும் எவரையும் சார்ந்திருத்தல் அவசியமல்ல. தனது தனித்துவத்தை, தனது உலகை எப்படிப் படைக்கிறான் என்பதே முக்கியமாகிறது. ஒரு படைப்பாளன் வெறும் கதைசொல்லியாக இல்லாமல் நல்ல படைப்பாளியாய் இருப்பதே முக்கியமாகிறது. மறுபடியும் ஹெமிங்வேயின் வரிகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. என்ன சொல்ல வேண்டுமோ அதனை ஒரு எழுத்தாளன் எழுத வேண்டுமே தவிர வெறுமனே உரையாடக்கூடாது என்கிறார் ஹெமிங்வே.






விஜய் மகேந்திரனுக்கு நல்ல கதை சொல்லும் பாங்கும் கதைக்களனைத் தெரிவு செய்யும் திறமும் வாய்த்திருக்கின்றன. புதிய எழுத்தாளர்களிடம் இலக்கிய உலகம் அதிக நம்ப்பிக்கையும் அதே சமயம் அதிக எதிர்பார்ப்பையும் முன் வைக்கிறது. விஜய மகேந்திரன் சிறுகதைத் தளத்தில் இன்னும் ஆழமாக வேரூன்றி. அந்த எதிர்பார்ப்ப்புக்கான தனது பங்களிப்பைச் செய்யவேண்டும்.
thanks to:
http://tharaganesan.blogspot.com/2010/07/only-those-things-are-beautiful-which.html

Thursday, July 22, 2010

டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ புத்தக வெளியீட்டு நிகழ்வு



டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ புத்தக வெளியீட்டு நிகழ்வு


புத்தக வெளியீட்டு நிகழ்வில் ரூ.100 மதிப்புள்ள ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ புத்தகம் 50 சதவிகித கழிவில் ரூ.50/-க்கு கிடைக்கும்.


மேலும், டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘நுனிப்புல்‘ சிறுகதைத் தொகுப்பு பாகம் - 1 வருகை தருகின்ற அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்.


அனைவரும் வருக !

Tuesday, July 13, 2010

விஜய் மகேந்திரனின் ‘நகரத்திற்கு வெளியே‘ - விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம்


18.07.2010 ஞாயிறு மாலை 5.30

டிஸ்கவரி புக் பேலஸ்,
(பாண்டிச்சேரி இல்லம் அருகில்)
கே.கே. நகர் மேற்கு, சென்னை - 78.

பங்கேற்பாளர்கள்

யவனிகா ஸ்ரீராம்
அய்யப்ப மாதவன்
ரமேஷ் பிரேதன்
தாரா கணேசன்
பொன்.வாசுதேவன்
ஆர்.அபிலாஷ்
பாக்கியம் சங்கர்

அனைவரும் வருக !

நிகழ்ச்சி ஏற்பாடு : அகநாழிகை

Wednesday, July 7, 2010

ராவணன் : ஓர் இந்திய அறிவு ஜீவியின் அமெரிக்க மனம்


எம்.ஜி.சுரேஷ்


ராவணன் : ஓர் இந்திய அறிவு ஜீவியின் அமெரிக்க மனம் அறுபதுகளில் ஃ பிரெஞ்சு சிந்தனையாளரான கை டி போர்ட் (guy debord), 'நமது யுகம் கண்கவர் காட்சிகளின் (spectacles) யுகமாக இருக்கிறது. முன்னேறிய முதலாளிய சமூகம், தகவல் தொடர்பு, விளம்பரங்கள் ஆகியவற்றைக் கண்கவர் காட்சிகளாக உருமாறி நம்மை மயக்குகின்றன. இவற்றை நாம் செயலிழந்து கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.' என்று எழுதினார். இன்றைய தினம் அமெரிக்கா கண்கவர் காட்சிகளை உருவாக்குவதில் முதலிடம் வகிக்கிறது.

அமெரிக்க டிவி, பிரிட்டனி ஸ்பியர்ஸ், ஷகிரா, பியான்சி போன்ற பெண்களின் அரை நிர்வாண ஆட்டங்களை ஒளிபரப்பி, அந்தப் பெண்களின் காம உறுப்புகளை பார்வையாளனின் முகத்தில் வந்து தேய்க்கின்றன. அதே போல், அமெரிக்கத் திரைப்படங்களும் கதாநாயகனும் கதாநாயகியும் போலியாகப் புணர்ந்து உச்சம் எய்துவதைத் திரையில் காட்டி, பார்வையாளனை உச்சம் எய்துமாறு செய்கின்றன. தவிரவும், மக்களை மகிழ்விக்க எதையாவது செய்தே தீர வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்க மனம் சிந்தித்தபடி இருக்கிறது. செய்தி, திரைப்படம், விளம்பரம், டிவி நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் மக்களை கண் கொட்டாமல் பார்க்க வைக்க வேண்டும். இதனால்தான் ஒருவரி காதல் கதையான 'டைடானிக்'கை எடுக்க பல கோடி ரூபாய் செலவாகிறது.

காதலை விட ஒரு பெரிய கப்பல் உடைந்து சிதறுகிற கண்கவர் காட்சி பெரிய விஷயமாக இருக்கிறது. அழிந்து போன 'டைனசார்' விலங்கின் பாசிலை வைத்து அதற்கு உயிர் கொடுத்து உலவ விடப்படும் ஒரு வரிக் கதை பல கோடி ருபாய் செலவில் கம்ப்யூட்டர் கிராஃபிக் உதவியுடன் மக்கள் கண் முன் ஒரு கண்கவர் காட்சியாக முன் வைக்கப்படுகிறது. ஆக, ஒரு அமெரிக்கத் திரைப்படத்தின் பிரதான அம்சம் என்பது மக்களை 'மகிழ்விப்பதே'. ஒரு பாலியல் தொழிலாளி எப்படி தனது வாடிக்கையாளரை மகிழ்விக்கப் பாடு படுகிறாளோ அது போலவே ஓர் இயக்குனர் தனது பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும்.அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பணத்தைத் தண்ணீராக இறைக்கலாம். நம்பர் ஒன திறமைசாலிகளை ஒன்று திரட்டலாம். உலக அழகிகளை ஒப்பந்தம் செய்யலாம். மக்கள் மனம் மகிழ வேண்டும். அதன் பலனாக பணப்பெட்டி நிறைய வேண்டும். இது தான் ஹாலிவுட் தொழில் தர்மம்.

இந்தியா போன்ற பின் காலனிய நாடுகளும் இப்போது அமெரிக்க மனத்தை சுவீகரித்துக் கொண்டு 'கண்கவர் காட்சிகளை' உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டன. ஓரிரு வரிக் கதை இருந்தால் போதும். வெண் சருமம கொண்ட ஒரு பெண்ணின் உடலை வித விதமான கோணங்களில் காட்டலாம். மயிர்கூச்செறிய வைக்கும் சாகசக் கட்சிகள், வெடித்துச் சிதறும் கட்டிடங்கள், போன்ற காட்சிகளை வைத்துப பார்வையாளனைப் புல்லரிக்க வைக்கலாம். மேலும், ஏற்கெனவே சினிமாவில் வர்த்தக ரீதியான வெற்றி பெற்ற முகங்கள், நம்பர் ஒன தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோரும் கைகோர்த்து விட்டால் போதுமே. அப்புறம் என்ன? இப்படிபட்ட தறி கெட்டு ஓடும் ரோலர் கோஸ்டர் ஆக தமிழ் சினிமா மாறி சில வருடங்கள் ஆகிவிட்டன. எதனால் இந்த விபரீதம்? பன்னாட்டு நிறுவங்கள் எப்போது இந்தியா சினிமாத்துறையைக் கையில் எடுத்துக் கொண்டனவோ அப்போதிலிருந்தே இந்த நிலைமை உருவாகத் தொடங்கி விட்டது.

இந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஹாலிவுட் தொழில் தர்மத்தை இங்குள்ள இயக்குனர்கள் மேல் திணிக்கின்றன. அதற்கு ஒத்துப்போகும் இயக்குனர்கள் வசம் தங்கள் புரோஜெக்ட்களை ஒப்படைக்கின்றன. இதனால், அமெரிக்க மனமும், ஹாலிவுட் தொழில் தர்மமும் கொண்டவர்களாக நம் இயக்குனர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது. மணி ரத்னத்தின் சமீபத்திய படமான ராவணன் பற்றிப் பேசும் முன் இத்தனை முஸ்தீபுகள் தேவைப்படுகின்றன. முதலில் தலைப்பிலிருந்து ஆரம்பிப்போம். இந்திய மரபு ராமனைக் கொண்டாடுகிறது. ராவணனை ஒரு கொடிய வில்லனாகவே பார்க்கிறது. எனவே, இந்த நம்பிக்கையை கொட்டிக்கவிழ்த்தால் என்ன? கட்டவிழ்த்துப் பார்த்தால் என்ன என்கிற பின் நவீனத்துவ அலசலை மேற்கொள்வதற்காக மணி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் போலிருக்கிறது என்று யாராவது நினைத்தால் அதற்கு மணி பொறுப்பேற்க முடியாது. ஏனெனில், ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக வைக்கப்பட்ட தலைப்பு இது. ஒரு பெண் திடீரென்று தெருவில் நிர்வாணமாக ஓடினால் பார்க்கும் அத்தனை பேருக்கும் தூக்கி வாரிப்போடும். அதைப் போன்ற ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக வைக்கப்பட்ட தலைப்பு இது. இதுவும் ஒரு வணிக உத்தியே. இந்த உத்தியினால் ஒன்றும் 'போணி' ஆகவில்லை என்பது வேறு விஷயம். தமிழ் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே ராமாயணமும், ராமனும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு விட்டதால் இது ஆறிய கஞ்சி.

சரி, கதை? பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் விக்ரம். அவர் தங்கையை லாக்-அப்பில் வைத்து போலீஸ்காரர்கள் கற்பழித்து விடுகிறார்கள். இதனால் விக்ரமின் தங்கை ப்ரியா மணி தற்கொலை செய்து கொள்ள, தன தங்கையை கொன்றவர்களை விக்ரம் பழி வாங்கத் துடிக்கிறார். தன்னை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்கத்துடிக்கும் போலீஸ் அதிகாரியின் மனைவியைக் கடத்துகிறார்.....ஆவ. கொட்டாவி விட வைக்கும் அறுதல் பழசான கதை. இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? என்ன செய்ய முடியாது? இந்தக் கதையுடன் ராமாயணத்தை சேர்த்து ஒரு 'தர்ஜுமா' செய்தால் ஒரு ரீமிக்ஸ் கதை கிடைக்கும். இது ரீமிக்ஸ் யுகம். எனவே இந்த ரீமிக்சும் ஜெயிக்கும். சரி, அப்புறம்? கதைக்கான பின்புலத்துக்கு என்ன செய்யலாம்? அதற்கென்ன இருக்கவே இருக்கிறது சந்தனக் கடத்தல் வீரப்பன் கதை. அதை உப்பு மிளகுத் தூள் போல் ஆங்காங்கே தெளித்துக் கொள்ளலாம். கதை தயார். அப்புறம் என்ன செய்வது. நல்ல விலைக்குப் போகும் கதாநாயகன், நம்பர் ஒன கதாநாயகி, நம்பர் ஒன காமிராமேன், நம்பர் ஒன இசையமைப்பாளர், கண்கவர் லொக்கேஷன் இவற்றை ஃ பிக்ஸ் செய்து கொண்டால் முடிந்தது.


படம் ஆரம்பிக்கும் போது, காமிராவுக்கு முதுகு காட்டி நிற்கிறார் நாயகன் விக்ரம். காமிரா பின்னகரும் போது, ஒரு மிகப்பெரிய மலை உச்சியின் மேல் விக்ரம் நிற்பது தெரிகிறது. கீழே அதல பாதாளம். அதில் ஆறு ஒன்று ஓடுகிறது. அதி ஒரு படகில் ஒய்யாரமாக உட்கார்ந்து பயணம் செய்யும் ஐஸ்வர்யா ராய். உடனடியாக ஐஸ்வர்யா ராயின் படகு தாக்கப்பட்டு அவர் கடத்தப்படுகிறார். விக்ரம் மற்றும் இதர பழங்குடி மக்கள் மத்தியில் அவர் சிறை வைக்கப்படுகிறார். அப்போது ஐஸ்வர்யா ராய் விக்ரமிடம் பேசும் தத்துவர்ர்த்த வசனங்கள் அசட்டுத்தனமாகவும், படுசெயற்கையாகவும், சிரிப்பு வரவழைப்பவையாகவும் இருக்கின்றன. (வசனம்: சுகாசினி) பின்னர் கதை நகர்கிறது. பழங்குடி மக்களின் வாழ்க்கை; கதாநாயகனின் பழகும் விதம் இவையெல்லாம் அவளை கவனிக்க வைக்கின்றன. ஐஸ்வர்யா ராயின் கணவனாக வருபவர் ப்ருதிவிராஜ். அவர் ஒரு போலீஸ் உயர் அதிகாரி. தன மனைவியைக் கடத்திய வீராவை (அது தான் விக்ரமின் கதாபாத்திரப் பெயர்) வேட்டையாடுகிறார். விக்ரமைப் பொறுத்தவரை அவர் தங்கையைக கற்பழித்துக் கொன்ற போலீஸ்காரனைக் கொல்லவேண்டும். ப்ரிதிவிராஜுவுக்கோ வீராவிடம் சிக்கி இருக்கும் தன மனைவியைக் காப்பாற்ற வேண்டும். அதை விட முக்கியம் வீராவை என்கவுண்டரில் சுட்டுத்தள்ள வேண்டும். இறுதியில், க்ளைமாக்சுக்கு சற்று முன்னதாக ஐஸ்வர்யா ராயை விக்ரம் விட்டு விடுகிறார். தன்னிடம் திரும்பி வரும் ஐஸ்வர்யா ராயின் கற்பைச் சந்தேகிக்கப்படுகிறார் ப்ருதிவி. அவளைப் பற்றி விக்ரம் அவதூறாகப் பேசியதாக ப்ருதிவி பொய் சொல்ல, உடனே ஐஸ்வர்யா அது உண்மைதானா என்று ஊர்ஜிதம் செய்து கொள்ள விக்ரமை மீண்டும் தேடி காட்டுக்கே வருகிறார். விக்ரமைச் சந்திக்கிறார். அப்போதுதான் தன கணவன் சொன்னது பொய் என்று தெரிகிறது. அப்போது ஐஸ்வர்யாவுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து வரும் ப்ருத்வி ராஜ் விக்ரமை சுட்டுக் கொன்று விடுகிறார். படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ருதிவிராஜ், கார்த்திக், ப்ரியா மணி, பிரபு என்று ஒரு பெரிய நட்சதிரப்பட்டாளம். அவர்கள் நடிப்பு மிக நேர்த்தியாக வடிக்கபட்டு இருக்கிறது.

அவர்களைத் தத்ரூபமாகக்காட்டக்கூடிய சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. அற்புதமான லொகேஷன்கள். காதுகளில் ரீங்கரிக்கும் ஏ. ஆர். ரஹ்மான். இவர்களைக் கொண்டு ஒரு சிற்பி சிலை வடிப்பது போல் சிரத்தையுடன் படத்தை உருவாக்கியிருக்கிறார் மணி ரத்னம். கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூடிய விதத்தில் ஒவ்வொரு ஃ பிரேமுக்கும் கவனமாக உழைத்திருக்கிறார். அதை நாம் பாராட்டியே தீர வேண்டும். இவை யாவும் இந்தப் படத்தை உலகாளவிய தரத்துக்கு கொண்டு செல்கின்றன என்பது உண்மையே. இந்தச் சந்தர்ப்பத்தில் உலகப் புகழ் பெற்ற வங்க மொழி இயக்குனர் மிருனாள் சென் தனது கட்டுரை ஒன்றில் எழுதிய வரிகள் என் நினைவுக்கு வருகின்றன: 'ஹாலிவுட்டில் மிக மோசமான படங்கள், மிகக் கூர்மையாக எடுக்கபடுகின்றன.' அது மணி ரத்னத்தின் ராவணனுக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. இராமாயணத்தை உல்டா செய்து ஒரு படம் எடுப்பதில் நமக்கு எவ்வித மறுப்பும் இல்லை. அதை ஒரு மறு வாசிப்பு என்று சொல்லலாம். ஆனால், பழங்குடி மக்களைப் பற்றிய படமாகவும் இது இருப்பதால் நெருடுகிறது. பழங்குடி மக்களை ஏன் போலீஸ் துரத்துகிறது? வேட்டையாடுகிறது? என்பதைப் பற்றி மணிரத்னம் கவனம் செலுத்தவில்லை. வீரையன் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை விவரிக்கும் மணி எதனால் கொல்லப்பட்டான் என்பதை விவரிக்கவில்லை. எப்படிக் கொல்லப்பட்டான் என்பது சுவாரசியம். ஏன் கொல்லப்பட்டான் என்பது எரியும் சமூகப் பிரச்சனை. அதைக் கிளறினால் பார்வையாளனின் சமநிலை குலைந்து போகும். எனவே அது நமக்குத் தேவை இல்லை. நர்மதா அணைத்திட்டத்தால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களைப் போல், வீரையன் சார்ந்த பழங்குடி மக்களுக்கு என்ன பிரச்சனை? அதை என் அரசோ அல்லது காவல் துறையோ பொருட்படுத்தவில்லை? எப்படி நடந்தது என்பதைச் சொல்வது அமெரிக்க மனம். இந்தச் சந்தர்ப்பத்தில் என் சிங்கப்பூர் நண்பர் பாலாஜி சொன்ன ஒரு விஷயத்தை நினைவு கூர வேண்டியவனாக இருக்கிறேன்.

பிரபல பீட்டில்ஸ் பாடகரான ஜான் லென்னான் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுட்டது தொடர்பாக ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அந்த ஆவணப்படம் அவர் எவ்வாறு சுடப்பட்டார் என்பது பற்றி மட்டுமே விவரித்தது. எதனால் சுடப்பட்டார் என்பது பற்றி அது பேசவில்லை. இதுதான் அமெரிக்க மனம்.ஒரு விஷயம் ஏன் நடந்தது என்பது மனசாட்சி உள்ளவர்களின் மனம். மனசாட்சி உள்ளவர்கள் வெற்றிகரமான வியாபாரிகளாக இருக்க முடியாது. எனவே அது தேவை இல்லை. அதற்கு பதிலாக ஐஸ்வர்யாவின் பளீரிடும் வெண்மையான தோள்களையும், மார்பக நடு நீரோடையையும், பளிங்கு போன்ற முகத்தையும் க்ளோஸ் அப் ஷாட்களில் காட்டுவது பற்றி யோசிப்பது அமெரிக்க மனம். அந்த மனம்தான் மணியின் மனம். அடுத்து இந்தப் படத்தில் ஒரு இடத்தில் விக்ரம் பேசுகிறார்: 'மேட்டுக்குடி மக்களுக்கு ஒடுக்கப்பட்டவர்களின் வலியை ஒரு போதும் உணரமுடியாது.' ஒடுக்கப்பட்டவர்களின் மீதான மணிரத்னத்தின் கரிசனம் கவனத்துக்குரியது. இந்த கரிசனம், பெரும் சக்தியாக வளர்ந்து வரும் 'தலித்' மக்களை, தங்கள் வணிக இலக்காக ஆக்கிக்கொள்ள விழையும் முதலாளித்துவ வர்த்தக நோக்கமே அல்லாமல் வேறென்ன? இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, தியேட்டரை விட்டு வெளியே வரும் போது எனக்குத் தோன்றியது. ஒரு ஜப்பானியப்படம் ஜப்பானியத் தன்மைகளுடன் இருக்கிறது. ஒரு ஃ பிரெஞ்சுப்படம் ஃ பிரெஞ்சுத்தனமைகளுடன் இருக்கிறது.

ஒரு அமெரிக்கப் படம் அமெரிக்கத்தனமைகளுடன் இருக்கிறது. ஆனால், ஒரு இந்தியப் படமும் அமெரிக்கத் தன்மையுடன் இருக்கிறது. அது ஏன்?