Sunday, May 16, 2010

வரிப்புலிகள் ஸ்ரீபதி பத்மநாபா

வரிப்புலிகள்

ஸ்ரீபதி பத்மநாபா

(தமிழ் மற்றும் மலையாள திரைப்படப்பாடல்களை முன்வைத்து)


திரைப்படங்கள் காட்சி ஊடகங்கள். நல்ல வசனம் உள்ள திரைப்படம், நல்ல பாடல் உள்ள திரைப்படம் என்று சொல்பவர்கள் நல்ல திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்று அர்த்தம். நம் மூதாதையர் வழியாக நம் திரைப் படங்களிலும் பாடல் என்ற ஒன்று நிகழ்ந்துவிட்டது. எதார்த்தமான இந்தியத் திரைப்படங்களில் கூட பாடலும் ஒரு பொருட்டாகத்தான் இருக்கிறது. ஒரு திரைப்படத்துக்கு பாடல் தேவையில்லை அல்லது ஒரு திரைப்படத்துக்கு பாடல் என்பது ஒரு மாந்திரீக யதார்த்தவாதப் பரிமாணத்தைக் கொடுக்கிறது என்கிற சாகித்திய விசாரங்களை எல்லாம் விட்டுவிடுவோம்.

உங்களுக்கும் எனக்கும் தினமும் காலையில் எழுந்தவுடன் ஏதோவொரு பாட்டு அனிச்சையாக மனதில் தோன்றி மதியம் வரை விடாது வாய்க்குள் சுழன்று கொண்டிருக்கும். நேற்று காலை எழுந்ததிலிருந்து ஒரு பாடல் வாய்க்குள் சுழன்று கொண்டிருந்தது:
‘கொஞ்சும் புறாவே, நெஞ்சோடு நெஞ்சம், ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமிதேதோ...’
இந்தப் பாடல் எப்போது எனக்குள் புகுந்தது என்று தெரியவில்லை. மதியம் வரை அதை நாக்கிலிருந்து பிடுங்கி வெளியேற்ற முயன்றும் முடியவில்லை. மதியத்துக்குப் பிறகு தானாகவே வெளியேறி விட்டது.

இப்படியாக திரைப்படப்பாடல் என்பது நம் அன்றாட வாழ்வின் அனிச்சைச் செயலாகி விட்ட நிலையில், இந்த எழுத்துரையும் திரைப்படப் பாடல்கள் பற்றியதாகவே இருக்கட்டுமே. திரைப்படப் பாடல்களின் இசை குறித்து நிறைய எழுதப்பட்டுவிட்ட நிலையில் வரிகள் குறித்ததான என்னுடைய பார்வை இந்த எழுத்து என்பதை தலைப்பைப் பார்த்தவுடனேயே புரிந்துகொண்டிருப்பீர்கள்.
(இந்தத் தலைப்பைப் படித்துவிட்டு நண்பரொருவர் சொன்னார்: நம் பாடலாசிரியர்களுக்கு இதை ஒரு பட்டமாகவே வழங்கலாமே; வரிப்புலி வைரமுத்து, வரிப்புலி வாலி.... அடடா! கேட்கவே எவ்வளவு லயமாக இருக்கிறது!)

ஊர் மக்கள் உறங்கி விட்டார்கள், ஊதைக் காற்று அடித்து விட்டது என்று பல்வேறு காரணங்களை அடுக்கி, ஆகவே, மாமா, உடனே, வா, உடலுறவு கொள்ளலாம் என்னும் சுயமைதுனப் பாடல்களையும் விட்டுவிடுவோம். திரைப்படப் பாடல்கள் எவ்வளவு ஆபாசமாய் இருக்கின்றன, ஆங்கிலக் கலப்பு எவ்வளவு சதமானம் இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தோழர் பாமரன் நிறைய எழுதிச் சலித்து விட்டார்.

துரதிஷ்டவசமாக அல்லது அதற்கு எதிர்மறையாக, இரண்டு மொழிகள், இரண்டு கலாச்சாரங்களில் வளர்ந்தவன் நான். (மலையாளக் கரையோரம் என்னை ‘பாண்டி’ என்று அழைக்கிறார்கள்; தமிழ் கூறும் நல்லுலகத்தில் என்னை ‘கஞ்சி’ என்று அழைக்கிறார்கள்.) கள்ளப் பாளையத்தின் கருவேலங் காடுகளிலும் கண்ணூரின் முந்திரித் தோப்புகளிலும் மாறி மாறி வளர்ந்ததால் நினைவுகளில் இருமொழிப் பாடல்கள் உள்ள மிருகமானேன் நான்.
பிஞ்சுப்பருவத்தில் பாடல்கள் என்பவை E=MC2 என்பதுபோல் தாளலயத்தில் மனதில் பதிந்துபோன அர்த்தம் தெரியா சூத்திரங்கள் மட்டுமே. ஆனால், பதின்பருவங்களிலேயே பாடல் வரிகளின் அர்த்தத்தைத் புரிந்துகொள்ளும் அளவு பேரிளம்பையன் ஆனபோதுதான் வரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டேன்.

நான் அர்த்தம் புரிந்து ரசித்த முதல் பாடல் என்று இதைச் சொல்லலாம்: தமிழ்நாட்டில் அவளுடைய Braவுகள் என்று பரவலாக அறியப்பட்ட அவளுடெ ராவுகள் படத்தில் ஒரு பாடல். ஒரு பாலியல் தொழிலாளியின் இரவுகளைப் பற்றிய பாடல். அதுவரை வெறுமனே நாக்குக்குள் சுழன்று கொண்டிருந்த அந்தப் பாடல் அர்த்தம் புரிந்த பிறகு மூளைக்குள் ஒரு துளையைப் போட்டு விட்டது.

‘நிலவின் கிரணங்கள் ஒளி வீசுவதில்லை
இரவின் விண்மீன்கள் கண் சிமிட்டுவதில்லை
மதன உற்சவங்களுக்கு வண்ண மாலைகள் இட்டு இட்டு
மனமும் மார்பும் பாலைவனமானது
நித்திரையின் ஊனங்களன்றோ
என்றும் அவளது இரவுகள்...’

அன்றிலிருந்து வரிகளைப் பிடித்துக்கொண்டேன்.

மருதகாசி, கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துக்குமார், தாமரை.... வயலார் ராமவர்மா, பிச்சு திருமலா, ஓ.என்.வி, ஸ்ரீகுமாரன் தம்பி, கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரி, ரமேசன் நாயர், கிரீஷ் புத்தஞ்சேரி, வயலார் சரத்சந்திர வர்மா.... என்று இவர்களின் வரி விழுதுகளில் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடிப் பயணமாகும் வனங்கள் ரம்மியமானவை.

மேற்கண்ட பாடலை எழுதியவர் பிச்சு திருமலா.

மலையாளத்தின் கண்ணதாசன் என்று கருதப்படும் வயலார் ராமவர்மா என் பதின்பருவங்களில் அதிர்ச்சிகளைத் தந்தவர்.

காதலி வேறொருவனுடன் திருமணமாகிச் செல்கிறாள். அவளுக்காகக் காதலன் பாடும் பாடல்:
‘சுமங்கலீ... நீ நினைத்துக் கொள்வாயா/ கனவிலாவது இந்த கானத்தை...’ என்று தொடஙகும் அந்தப் பாடலின் அனுபல்லவி இப்படிப் போகிறது:

‘பிரிந்து போகும் உன்னால் இனி இந்தக் கதையை மறக்கத்தானே முடியும்
நிறைந்த மார்பின் முதல் நகக் குறியை மறைக்கத்தானே முடியும்
கூந்தலால் மறைக்கத்தானே முடியும்!’

இதற்கு இணையான தமிழ்ப் பாடலும் ஒன்று உள்ளது. இதே சூழ்நிலைக்கு வைரமுத்து எழுதிய அந்தப் பாடலும் கவனிக்கத்தக்கது. திருடா திருடா படத்தில் வரும் ‘ராசாத்தி என் உசிரு என்னுதில்ல...’ கிராமத்துக் காதலின் ஒரு மீஅண்மைக் காட்சியை (Extreme Close/up) வரிகளிலேயே காணலாம்.

‘அந்தக் கழுத்துத் தேமலையும் காதோர மச்சத்தையும் பார்ப்பதெப்போ...’

வைரமுத்துவைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் என் மனதில் உடனே நினைவுக்கு வருபவர் எனக்கு பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் எடுத்த திரு. அரங்கநாதன்தான். இலக்கணம் கசந்து விடக்கூடாது என்பதற்காக அப்போதைய திரைப்படப் பாடல்களின் பாட்டுப் புத்தகங்களை வாங்கிப் படித்து, பாடல்கள் மூலமாக அணிகளையும் வினைகளையும் விளக்குவார் அவர். கூடவே அந்தப் பாடல்களையும் திறனாய்வு செய்து சொல்லுவார். மிக உற்சாகமான வகுப்பறை அவருடையது. பிறிது மொழிதலணியை எங்களுக்குப் புரியவைக்க அவர் வகுப்பெடுத்த விதம் வருமாறு:

டேய் திருப்பதி அந்த இந்தப் படத்தில ஒரு பாட்டு வந்திருக்கில்ல, அதப் பாடு.

எந்தப் படத்திலீங்க ஐயா?

அதாண்டா நம்ம மைக் மோகர் நடிச்சிருக்காருல்ல? ஈரமான...?

இளமைக் காலங்களாய்யா?

அந்தக் கெரகம்தான். பாடு.

நான் தொண்டையை சரி செய்துகொண்டேன்.

பெரிய ஏசுதாசுன்னு நெனப்பாடா? பாட்டு வகுப்பா எடுத்துட்டிருக்கேன்? அட சும்மா பாடுறா...

‘ஈரமான ரோஜாவே... என்னைப் பார்த்து மூடாதே...’ என்று பாட ஆரம்பித்தேன். ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து, என்னோடு நீ பாடி வா சிந்து...’ என்ற வரிகள் முடிந்தபோது நிறுத்தச் சொன்னார்.

அதென்னடாது தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து, என்னோடு நீ பாடி வா சிந்து.. ரெண்டு வரிக்கும் என்னடா சம்மந்தம்?

தெரீலீங்கய்யா...

ழெழீழீழ்ழழ்ழா... அப்பறம் என்னத்தடா பாட்டைக் கேக்கறீங்க! அதாவது...
காத்துள்ள பந்து தண்ணிக்குள்ள மூழ்காது, அது மாதிரி அறிவுள்ள கதாநாயகியா இருந்தா கண்ணீர்ல மூழ்கி வருத்தப்படக் கூடாது. அதனால பிரச்னையெல்லாம் மறந்துட்டு எங்கூட வந்து டூயட் பாடுங்கறாரு மைக் மோகரு. புரிஞ்சுதா? இப்புடி உண்மையச் சொல்லாம உவமையை மட்டும் சொல்லிப் புரிய வக்கிறதுதான் பிறிதுமொழிதலணி, புரிஞ்சுதா?

இன்று வரை எனக்கு பிறிது மொழிதலணி மறக்கவில்லை.

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவைப் பற்றி மணிக்கணக்கில் விவரிப்பார் அரங்கநாதர். உண்மையான காதல் என்றால் என்னவென்று இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம் என்பார்: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்; இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்.

அன்று முதல் இன்று வரை பாடல்வரிகளில் வைரமுத்துவின் கவிதை ரசனை ரசம் மிகுந்ததாகவே இருக்கிறது. சமீபத்தில் அவர் எழுதியதில் இந்த வரிகள் எனக்குப் பிடித்தவை :
லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க ஒத்தைச் சொல்லு சிக்கவில்லை எதனாலே?
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிட்டு பட்டினியாக் கெடப்பாளே அதுபோல... (நெஞ்சாங்கூட்டில்)

அன்றெல்லாம் அரங்கநாதருக்கு ஒரு ஐம்பது வயது இருக்கும். கண்ணதாசனை ரசிக்கிற அதே மனதால் வாலியையும் வைரமுத்துவையும் ரசிக்கிறவராய் இருந்தார் அவர். கண்ணதாசனு டையவை என்று நான் நினைத்துக்கொண்டிருந்த பல வரிகளை அவை வாலியின் வரிகள் என்று பதைபதைத்துப்போய் திருத்துவார். மாதவிப் பொன்மயிலாள் கண்ணதாசன எழுதியது என்றுதான் நினைத்திருந்தேன். அட மகா பாதகத் திருப்பதீ... அது வாலியோடதுடா... என்று கொந்தளித்துப்போவார். அங்கீகாரம் இடம்பெயர்வதில் அவருக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை.

அவரிடம் ‘ஒரு பெரிய இவனாட்டம்’ கண்ணதாசன் தவறு செய்து விட்டார் என்று சுட்டிக் காட்டப் போய் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

ஐயா கண்ணதாசன் ஒரு பாட்டுல தப்பா எழுதியிருக்காருங்கய்யா.

டேய்.டேய்... அடங்குடா... கண்ணதாசனைக் குத்தம் சொல்ற அளவு வந்துட்டியா... பெரிய இவனா நீ.

நீங்க கத்துக் குடுத்த இலக்கணந்தாங்கய்யா....

பார்றா... சரி சொல்லு.

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன?

காதல்.

நீங்க எனக்கு கைக் கிளைன்னுதானே சொல்லிக் கொடுத்தீங்க.

அரங்கநாதர் முறைத்தார்.

ஒருத்தி மடடும் ஒருவனை நினைத்தால்தான் கைக்கிளை. அவனும் அவளை நினைக்கிறான்கறது அடுத்த வரியிலேயே சூசகமா தெரியுதுல்ல. அதப் பாக்கலியா அறிவுக் கொழுந்து... அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்....

நான் வெளிறிய முகத்துடன் வெளியேறினேன்.

தற்கால மலையாளப் பாடலாசிரியர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரி. முக்கியமான இசைக் கலைஞரும் கூட. ‘குஞ்ஞிக் கிடாவின்னு நல்கான் அம்ம நெஞ்சில் பாலாழி ஏந்தி’ எழுதியவரும் அவர்தான்; ‘லஜ்ஜாவதியே நின்டே கள்ளக் கடக் கண்ணில்’ எழுதியவரும் அவர்தான்.

என்னுடைய ‘வண்ணங்கள்’ எனும் இசை ஆல்பத்தில் அவருடைய அனுமதியுடன் நான் சேர்த்துக் கொண்ட வரி இது:

பசிக்கின்ற போது அமுதினை ஊட்ட பாற்கடல் நெஞ்சில் ஏந்திய தாயே...

அவருடன் உரையாடிக் கொண்டிருப்பது என்பது ஒரு அற்புதமான அனுபவம். ஒரே மனிதருக்குள்ளிருந்து சங்கீதமும் சாகித்தியமும் ஒரு சேர பிரவாகமாய் கிளம்புவது அனுபவித்து ரசிக்க வேண்டிய விஷயம். அவருக்கோ தமிழ் பாடலாசிரியர்களைப் பார்த்து ஆச்சர்யம். கண்ணதாசன் முதல் முத்துக்குமார் வரை அலசுவார்.

அவர் மலையாளத்தில் எழுதிய ‘லஜ்ஜாவதியே நின்டே கள்ளக் கடக் கண்ணில்’ என்ற பாடலை தமிழில் முத்துக்குமார் எழுதினார். கைதப்புறத்துக்கு தமிழ்ப் பாடலை விளக்கினேன். ‘லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே’ என்பதற்கு பதிலாக ‘லஜ்ஜாவதியே உன் கள்ளுக்கடைக் கண்கள்’ என்று ஆரம்பித்திருக்கலாமே என்றார். ஆனாலும் மற்ற வரிகளையெல்லாம் மிகவும் ரசித்தார். குறிப்பாக ‘கட்ட வண்டி மையினால் கட்டபொம்மன் மீசையை கண்ணே நீ வரைந்து விட்டு ராஜராஜன் என்றதும்’ மிக அருமை என்றார்.

அவரே இசையமைத்து எழுதி ஜேசுதாஸ் பாடிய மறக்க முடியாத பாடல் ‘தேசாடனம்’ என்ற திரைப்படத்தில் இருக்கிறது. பெற்றோர்களுடன், தாத்தாவுடன், தோழர்களுடன் விளையாடித் திரிந்த மகனை மடத்திலிருந்து வந்து அடுத்த ‘பெரியவாளாக’ ஆக்குவதற்கு தேர்வு செய்கிறார்கள். பெரும் மனப் போராட்டங்களுக்கிடையே அவனை மடத்தில் விட்டு விட்டு திரும்பும் தகப்பனின் உணர்வுகளாக ஒலிக்கும் ‘களி வீடுறங்கியல்லோ...’ என்ற அந்தப் பாடலின் அதே சந்தத்தில் வரிகளின் என்னுடைய தமிழ் வடிவம் இது:

விளையாட்டு வீடுறங்க
விளையாட்டுப் பேச்சுறங்க
ஒரு பார்வை பார்ப்பதற்கே என்னுள்ளம் தானும் ஏங்க
அலைகின்ற அலையே, கடலே
சிரிக்கின்ற பூக்களே
அறிவீர்களா என் நெஞ்சின்
அடங்காத ஜென்ம துக்கம்?

தாலாட்டு பாடினால்தான் கண் மூடுவான்
நான் பொன் முத்தம் சிந்தினால்தான் கண் மலர்வான்
கதை சொல்லிக் கேட்டால்தான் அமுதுண்ணுவான்
என் கைவிரல் நுனியைப் பிடித்தே நடைபோடுவான்... அவன்
நடை போடுவான்...

கண்களில் நீர் மல்க அவர் பாடுவதைக் கேட்பது பரமசுகம், அவரோ... தமிழ் பாடலாசிரியர்கள் போல அவ்வளவு எளிமையா எங்களுக்கு எழுத வராது.
நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்... வைரமுத்து எவ்வளவு எளிமையா அழகா எழுதறார். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிற கீதை வாசகத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு அழகாக, காலங்களில் அவள் வசந்தம்னு காலத்தால் அழியாத ஒரு காதல் பாடலை எழுதுனார் உங்க கண்ணதாசன், என்றெல்லாம் சிலாகித்துப் பேசுவார்.

நானும் அதை யோசிப்பதுண்டு - மலையாளப் பாடல் வரிகளின் பாண்டித்தியத்தைப் பற்றி. சமஸ்கிருத அகராதி இருந்தால்தான் பல வார்த்தைகளின் அர்த்தம் புரியும். பாடலகள் பெரும்பாலும் பண்டிதர்களுக்கே என்ற நிலைமை இன்னும் அங்கே இருக்கிறது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான, அவர்களுடைய எளிமையான மொழியைப் பாடுகிற பாடல்கள் இல்லை என்றே சொல்லலாம்.

மலையாளக் கரையோர மீனவன்கூட, கடலின் அக்கரைக்குச் செல்பவர்களே, பதினாலாம் இரவின் பாற்கடல் அலையின் கடல்கன்னிகள் உதிர்க்கும் மாணிக்கத்தைக் கொண்டு வருவீர்களா என்று ஒரு ஃபேன்டஸி கனவைத்தான் பாடுகிறான். தமிழ் மீனவனோ, வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திமிங்கிலம் தலைமையில் நடக்கும் எளிமையான காதல் திருமணத்தை தன் எளிமையான மொழியில் பாடுகிறான். தமிழின் மிக முக்கியமான அம்சம் சாதாரண மக்களின் பாடல்கள்தான். அதிலும் கானாப் பாடல்கள் தரும் மனவெழுச்சி வார்த்தைகளில் அடக்க முடியாதது. கானாப் பாட்டெல்லாம் ஒரு பாட்டா என்று முகம் சுளிக்கும் பண்டிதர்களுக்கு நேராக நாமும் முகத்தைச் சுளிக்கத்தான் வேண்டியிருக்கிறது. காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் என்று பாரதி எழுதினால்தான் இலக்கியமா? டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா என்பது சாதாரண மனிதனின் இலக்கியம். அதுதான் உண்மையான இலக்கியமும்கூட.

வாலியின் வாலிபம் இப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம். மாதவிப் பொன்மயிலாளுக்கு முன்னமே தொடங்கி அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வைத்த குப்பையாக வந்த உடம்பில் தொடர்ந்து நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் வரைக்கும் அவருடைய இளமை இனிமையானது. இந்த வயதிலும் அவர் எழுதிய நியூயார்க் நகரம் சமீபத்தில் வந்தவற்றில் மிக அழகான பல்லவி:

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்ததே
பனியும் படர்ந்ததே
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் அலைந்ததே
நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்!
தனிமை தனிமை ஓ!
கொடுமை கொடுமை ஓ!

தமிழ்ப் பாடல் வரிகளின் பரிமாணத்தை மாற்றியவர் என்று முத்துக்குமாரைச் சொல்லலாம். நவீன கவிதைக்கு நெருக்கமானதாகவும் ஜென் கவிதைகளின் பாதிப்புடனும் ஹைக்கூபாணியிலும் பல பரீட்சார்த்த முயற்சிகளை பாடல் வரிகளில் அவர் செய்திருக்கிறார். மிக சாதாரணமான, இளைஞர்களின் கேலிப் பாடலான ‘தேரடி வீதியில்’ பாடலை எடுத்துக் கொண்டால் கூட, மூன்று மூன்று வரிகளின் தொகுப்பாக ஹைக்கூவைப் போல் எழுதியிருப்பார். ‘தெரிஞ்சுக்கோ’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டுப் பாருங்கள்...

தேரடிவீதியில்
தேவதை வந்தா
திருவிழா,

அய்யனாரைத்தான்
ஆடு கும்பிட்டா
சைவம் ஆயிட்டாரு

அய்யரு பொண்ணு
மீன் வாங்க வந்தா
லவ் மேரேஜ்

கோயிலுக்குள்ள
காதலைச் சொல்லு
செருப்பிருக்காது...

கண்ணதாசனின் ‘நந்தா நீ என் நிலா நிலா...’ பாடலுக்குப் பிறகு தமிழின் மிக நீண்ட பல்லவியை எழுதியவர் முத்துக்குமார்தான் என்று நினைக்கிறேன். மிக நீண்ட அழகான பல்லவி அது:

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கை மூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதனால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை.

நான் எழுதிய ‘வண்ணங்கள்’ இசைத்தொகுப்பில் சில வரிகள்:

மழை நின்றபின்னே மரம் மேகமாகும்
நீ சென்ற பின்னே உன் நினைவே மரமாகும்...

இதே போல ‘காதல்’ படத்தில் முத்துக்குமாரின் வரிகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ‘தொட்டுத் தொட்டு என்னை வெற்றுக் களிமண்ணை சிற்பமாக யார் செய்ததோ’ பாடலில் வரும் வரிகள்:

முதல் முறை உன்னைப்
பார்த்தது எங்கே
மனதும் தேடும்
மழை நின்ற பின்னும்
மரக்கிளை உள்ளே
மெதுவாய்த் தூறும்...

மனிதர் ஆயிரக்கணக்கில் காதல் வரிகளை எழுதித் தள்ளினாலும் ஒவ்வொரு வரியும் தனித்தன்மையோடு இருப்பதுதான் அவருடைய தனித்தன்மை.

வரிகளின் மீதான பித்து ஒரு காலத்தில் முற்றிப் போயிருந்தது எனக்கு. எந்த எழுத்தைச் சொன்னாலும் ஒரு பாடல் சொல்வது, எந்த வார்த்தையைச் சொன்னாலும் ஒரு பாடல் சொல்வது என்று ஆரம்பித்து நண்பர்களுடன் போட்டி போட்டிருந்த கல்லூரிக் காலத்தில் ஒரு கட்டத்தில் இப்படி ஒரு பாட்டு உருவாகிவிட்டிருந்தது. முடிந்தால் நீங்களும் பாடிப் பார்க்கலாம்:

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா சொல்லித் தந்த வானம் அருகில் ஒரு வானம் தரையில் வந்த மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டுப் பாட வா பார்த்துப் பேச வா பாடம் சொல்லவா பறந்து செல்ல வா பால் நிலவு காய்ந்ததே பார் முழுதும் ஓய்ந்ததே ஏன் ஏன் ஏன் ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன் ஒரு கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகின்றேன் எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் உன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா மேகமே மேகமே பால்நிலா தேயுதே ....

இப்படி ஒரு மணி நேரத்துக்கு மேல் போய்க் கொண்டிருக்கும் இந்தப் பாடல்.

மீண்டும் மலையாளத்துக்கு வருவோம்.ஆழமும் செறிவும் மிகுந்த பன்னூறு வரிகள் இன்னும் மனதுக்குள் சிற்றலையாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் எழுத இடமில்லை. சில வரிகள் மட்டும்:

வாழ்வமுதத்தின் மையம் மதுரமானது (கைதப்புறம்)

பலா இலைப் பாத்திரங்களில் பொம்மைக்குப் பால் கொடுக்கும் குழந்தையாய் மீண்டும் என் அருகில் வந்துநில் (ஓ.என்.வி.)

மீண்டும் மீண்டும் யாரோ கனாவின் படி ஏறி வருகின்ற காலோசைகள்/ மீண்டும் மீண்டும் யாரோ நிலாவில் புல்லாங்குழல் ஊதும் தேனோசைகள் (கிரீஷ் புத்தஞ்சேரி)

ஒரு நிமிடம் தா உனக்குள் கரைய
ஒரு யுகம் தா உன்னை அறிய (சத்யன் அந்திக்காடு)

கண்ணாடி முதன்முதலாய் என்
வெளித் தோற்றத்தைக் கவர்ந்து கொண்டது
பாடகனே... உன் குரல் என்
உள்மனதைக் கவர்ந்து கொண்டது. (கைதப்புறம்)

விரலில் இருந்து வழுக்கி விழுந்தது
விரகம் நிறைந்த ஓர் ஆதி தாளம் (பிச்சு திருமலா)

இவ்வளவு செழுமையும் செறிவும் நிறைந்த மலையாளப் பாடல்களுக்கு ஏன் ஒரு முறை கூட தேசிய விருது கிடைக்கவில்லை என்பது புதிர்தான். பல்லவியின் முதல் வரியிலேயே ஒருமை பன்மையில் கூட இலக்கணப் பிழைகளோடு எழுதி தேசிய விருது ‘வாங்கும்’ அளவுக்கு பா...வம் மலையாள வரிப்புலிகளுக்கு வித்தகம் இல்லை போலும்!


--

2 comments:

  1. இது போன்ற இசை பற்றிய சுவாரஸ்யமான கட்டுரைகளை நண்பர் ஸ்ரீ பதியால் தான் எழுத முடியும்.

    ReplyDelete
  2. பாடல் வரிகள் பற்றிய உங்க நீண்ட பதிவு நல்லயிருக்கு.. நானும் பாடலில் முதலில் ரசிப்பது அதன் வரிகளைத்தான்

    ReplyDelete