Showing posts with label ஸ்ரீபதி பத்மநாபா. Show all posts
Showing posts with label ஸ்ரீபதி பத்மநாபா. Show all posts

Monday, November 8, 2010

முதல் ஆணியக் கவிதை-ஸ்ரீபதி பத்மநாபா




எண்பதுகளின் இறுதி வருடங்களில் தமிழ்நாட்டில் முதல் கணினி பட்டப்படிப்பு அறிமுகமானபோது அந்தப் பொறியில் சிக்கிக் கொண்ட மவுஸ்களில் அவனும் ஒருவன் - அன்றைய கணினிகளில் மௌஸ்களைக் காண்பது மிக அரிது. மவுஸ் இல்லாமல் கணினியை இயக்க முடியுமா என்று கேட்காதீர்கள். அன்றெல்லாம் அலைபேசியில்லாமல்கூட வாழ்ந்தவர்கள்தானே நாம். அன்றைய கணினி யுகம் பற்றி குறைந்தபட்சம் 386 கட்டுரைகளாவது எழுத முடியும். அது பின்னர் எப்போதேனும். இன்றைய பேசுபொருள் வேறு.

கணினி அறிவியல் மாணவனாக இருந்தபோதும் அன்று கல்லூரியின் பிரதானக் கவிஞனாக அறியப்பட்டவன் அவன்தான். கையில் கணையாழி கொண்டிருக்கும் விசித்திர ஜீவியாக கணினி மாணவிகள் விலகவும் கலை மாணவிகள் அணுகவுமான இயல்பினனாயிருந்தான். அப்போது நடைமுறையிலிருந்த கடைக்கால நெம்புகோல் கவிதைகள் புனைவதில் மட்டுமல்லாது எண்சீர்கழிநெடிலடி விருத்தங்கள் செய்வதிலும் தான் நிபுணன் என்பதாகவும் நினைத்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது மலையாளக் கரையோரம் சென்று வந்து கொண்டிருந்ததால் மலையாளத்தின் 'அக்ஷர ஸ்லோகம்' எனும் கவிதைச் செயல்பாடு பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தான்.

அக்ஷர ஸ்லோகம் என்பது செய்யுள் சொல்வதற்கான ஒரு போட்டி. சென்ற தலைமுறையில் எந்த கேரள கிராமத்தை போய்ப் பார்த்தாலும் அம்பல மரத்தின் சுவட்டிலோ இல்லத்து முற்றங்களிலோ இப்படிப்பட்ட அக்ஷர ஸ்லோக சபைகள் காணக் கிடைத்திருந்தன. இங்கு ஸ்லோகம் என்பதற்கு மந்திரம் என்பதல்ல பொருள்; செய்யுள் என்பதே.

அக்ஷர ஸ்லோகம் என்பது இன்றைய அந்தாக்ஷரியின் முன்னோடி என்று சொல்லலாம். 4 அடிகளுடைய செய்யுட்கள். தானே இயற்றியதாகவோ பிரபல புலவர்கள் இயற்றியதாகவோ இருக்கலாம். முதல் நபர் ஒரு ஸ்லோகம் சொன்னவுடன் அந்த ஸ்வோகத்தின் மூன்றாவது அடியின் முதல் எழுத்தில் அடுத்த நபர் அடுத்த ஸ்லோகத்தைத் தொடங்க வேண்டும். அந்த ஸ்லோகங்கள் பூந்தானத்தின் ஸ்ரீகிருஷ்ண கருணாமிர்தத்தில் இருந்தும் இருக்கலாம். எரணாகுளம் ஹோட்டல் சாப்பாடு பற்றி தானே இயற்றியதாகவும் இருக்கலாம்.

எட்டாண்டு எத்திய தயிரும் என் சிவனே சுண்ணாம்பு சோறும் புழுக்
கூட்டம் தத்திடும் ஊறுகாயும் அய்யோ கசப்பேறிய பொரியலும்
கெட்டபலாவில் மோரூற்றியின்னும் கெடவைத்த குழம்பும் இம்
மட்டில் பட்சணமுண்டு வெளிவரலாம் எரணாகுளம் ஹோட்டலில்.

அன்று முதல் தானும் தமிழில் இதுபோன்ற முயற்சிகளைச் செய்யலானான். எது கையில் கிடைத்தாலும் எதுகையாய் மாற்றி ஒரு செய்யுள் புனைந்து விடுவான். உதாரணத்திற்கு இரண்டு:
(முறைப்படி சீர் பிரிக்காமல்)

1. பாடினாள் பின்னாடியும் காட்டினாள் முகம்
ஏந்தியளித்திட்டாள் முத்தம் இதழி னுட்புகுந்து
கூடினாள் தள்ளிப்போய் கல்யாணப் பந்தரின்கீழ்
வாந்தியெடுத்திட்டாள் முட்டாள்.

2. மைக்கேல் ஏஞ்சலோ வைரஸ் புகழ்

ஊஞ்சலாடும் மனது கேட்கின்றதோர் நாள் லீவு
காஞ்சு கிடப்பாள் அனிதா மேட்னிஷோ போவதற்காய்
வாஞ்சையில் பூட்டுதே கம்ப்யூட்டர் - மிக்கயில்
ஏஞ்சலோ வைரசே நீவாழ்.

இப்போது வலையுலகில் தமிழில் மரபுக் கவிதைகளும் மலையாளத்தில் அக்ஷர ஸ்லோகங்களும் உலகமெங்குமிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறன்றன. மேற்கண்டவற்றை விட நவீன பாடுபொருட்களில் மரபுக் கவிதைகள் வகைதொகையின்றிக் கிடைக்கின்றன இணையத்தில்.

ஆனாலும் அக்ஷர ஸ்லோகம் பற்றி எண்ணும்போதெல்லாம் அவனுக்கு மஹாகவி காளிதாஸனோ அல்லது மாடமனை திரிவிக்ரமன் பட்டதிரிப்பாடோ நினைவுக்கு வராமல் இருப்பதில்லை. திரிவிக்ரமன் அக்ஷரஸ்லோகத்தில் விற்பன்னர். ஒரு முறை மஹாகவி காளிதாஸன் முதன்முதலில் எழுதிய ஸ்லோகம் என்று ஒரு சாதனத்தை சொல்லிக் காண்பித்தார். அதற்கு முன் அந்த செய்யுள் உருவான இதிகாசத்தையும் சொன்னார்:

காளிதாஸன் தான்தோன்றித்தனமான கற்பனைகளில் திளைத்து எங்கென்றிலாது அலைந்து திரிந்து கொண்டிருப்பார். அவ்வாறு ஒருக்கால் கூரிருட்டினுள் காட்டிற்குள் அலைந்து கொண்டிருந்தார். நான்காம் யாமம் தாண்டி பொழுது புலரும் வேளையே வந்து விட்டது. அந்த இருட்டுக்குள் ஒரு ஆற்றைக் கண்டார்; ஆனந்தம் கொண்டார். ஆடைகளையெல்லாம் அவிழ்த்து வீசி ஆற்றில் குதித்தார். அந்த சமயம் பார்த்து அருகிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து ஒரு யுவதி அங்கு வந்தாள். எப்போதும் அந்த இருளில் வந்து ஆற்றில் குளிப்பது அவள் வழக்கம். வழக்கம் போல அருகில் யாரும் இல்லை என்ற நினைப்பில் அவளும் ஆடைகள் முழுதும் களைந்து ஆற்றில் இறங்கினாள். நீரில் மூழ்கிக் கிடந்த காளிதாஸன் வெளிவந்து தலையைச் சிலுப்பிப் பார்க்கையில் அவரின் முன்னால் அவள். அதிர்ச்சியில் உறைந்துபோயினர் இருவரும். ஆனாலும் அவர்களின் அனிச்சை உணர்வுகள் விழித்தே யிருந்தன. ஒரு கையால் தன் தனங்களையும் ஒரு கையால் தன் அல்குலையும் மறைத்துக் கொண்டாள் அவள். கையறு நிலையில் காளிதாசனுக்குள் ஒரு கவிதைதான் முகிழ்த்தது:

ஹே பாக்யவதீ நாரீ
ஏக ஹஸ்த்யேன கோப்யதே
நிர்பாக்யம் காளிதாசஸ்ய
த்விமுஷ்டிம் சதுரங்குலம்.

வியாக்கியானம்:

பெண்ணே நீ பாக்கியவதி!
ஒரு கையாலேயே உன் மானத்தை மறைத்துவிட்டாய்
பாவம் இந்த காளிதாசன் துர்பாக்கியவான்
இரண்டு கைகளை உபயோகித்தும்
நான்கு அங்குலம் மீதமிருக்கிறதே!

இதுதான் காளிதாசனின் முதல் கவிதையா அல்லது திரிவிக்ரமன் பட்டதிரி எதாவது மண்டபத்தில் எழுதி வாங்கியதா என்று தெரியவில்லை. எவ்வாறாயினும் உலகின் முதல் ஆணியக் கவிதை இதுதான் என்று சொல்லாமில்லையா என்று கேட்கிறார்
திரிவிக்ரமன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
முதல் ஆணியக் கவிதை

Thursday, August 26, 2010

குஞ்ஞுண்ணி மாஸ்டரின் குட்டிக் கவிதைகள்

தமிழில் -ஸ்ரீபதி பத்மநாபா

2006 ஆம் ஆண்டில் காலமான குஞ்ஞுண்ணி மாஸ்டர் 1927 இல் பிறந்தார். ஆசிரியராக நெடுங்காலம் பணியாற்றிய அவருடைய கவிதைகள் அவருடைய மனம் போலவே குழந்தைகளுக்கானவை அல்லது குழந்தைப் பருவம் இன்னும் எய்தாத பெரியவர்களுக்கானவை. மலையாளத்தில் நா பிறழும் வார்த்தை ஜாலங்களினூடாகவும் பழமொழிகளினூடாகவும் அழகான எளிமையான அதே சமயம் பிரம்மாண்ட அர்த்தங்களைப் பொதிந்து வைத்திருக்கும் அவரது எழுத்திலிருந்து சிலதுளிகள்...



1. பசிக்கும்போதுண்ணுவேன் நான்

தாகமெடுத்தால் குடிப்பேன்

களைத்தால் உறங்குவேன்

உறங்கும்போது எழுதுவேன் கவிதைகள்



2. எழுதுவதென்பதல்லவென்பதுதானெழுத்து



3. பின்னால் மட்டும் மடங்கும் கால்களால் தானே

முன்னால் பாய்கிறான் மனிதன்



4. நானிப்படியில்லாமலிருந்தா

லிப்பேரண்டமுமிப்படியில்லாமல் போகும்!

அடேங்கப்பா நானே!



5. நானொரு கடலுருவாக்கினேன்

நானொரு கரையுருவாக்கினேன்

முடியவில்லை ஒரு நெய்தலுருவாக்க



6. ஒரு சலவைக்காரனிருக்கிறானென்னூரில்

எல்லோரும் அம்மணமாயிருக்குமென்னூரில்

அந்த சலவைக்காரனும் அம்மணன்தான்



7. அதிசயமான பொருள் கொண்டுதானே

இறைவன் என்னைப் படைத்தான்

பின் அதில் மிச்சமிருப்பதை வைத்துத்தான்

பிரபஞ்சத்தைப் படைத்திருப்பானோ!



8. நானெனும் பூவின்

நானெனும் தேனைத் தேடிப்பறக்கும்

நானெனும் வண்டை கை வீசி அழைக்கும்

விளக்காய் எரிகிறேன் நான்



9. டிரைவர் யார் கண்டக்டர் யாரென்று பாராமல் தானே

பஸ் ஏறி பயணிக்கிறோம் நாம்

அம்மையாரப்பனாரென்று பார்க்காமலேயே இம்

மண்ணில் இறங்கிய முட்டாள்கள்தானே நாம்



10. உள்ளே முழுக்க ஆவேசம்

வெளியே முழுக்க ஆகாசம்



11. பொண்ணு பாக்கப் போகையிலே

கண்ணு மட்டும் பத்தாது

கண்ணாடியும் கையில் வேணும்



(இன்னும் இருக்கிறது... அடுத்த பதிவில்...)

Tuesday, August 17, 2010

வி.கெ.என். 'பையன் கதைகள்'

மலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்று கருதப்படுபவர் வி.கெ.என். 2004 இல் காலமான இவருடைய 'பையன் கதைகள்' தொகுப்பு 1980 இல் மத்திய சாகித்ய அகாடமி விருது வாங்கியது. இந்த தொகுப்பிலிருந்து 40 கதைகளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு சிறுகதையாகவும் மொத்தமாக ஒரு நாவலாகவும் அனுபவபடுகிறது. விரைவில் புத்தகம் வெளியாகும். இங்கே முதல் கதையை பதிகிறேன். நீளமாக இருந்தாலும் மிக சுவாரஸ்யமான கதை. படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.

'பையன் கதைகள்' மலையாள மூலம் : வி.கெ.என். தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா

1. கர்னல்

அக்காலம் பையன் டிஃபன்ஸ் காலனியில் வசித்து யமுனையில் குளித்து ஹவுஸ்காஸில் சம்போகித்து வந்தான். ஃபர்ஸ்ட் க்ளாஸ் காலம். ஒண்ணும் பிரச்னையேயில்ல. டிஃபன்ஸ் காலனின்னு சொன்னாலே ஒரு பந்தாதான். தலைநகரத்தின் மிக மேன்மையான வசிப்பிடமென்றும் மிகவும் அழகான வேசிகளின் கூடாரமென்றும் சௌந்தர்ய ஆராதனையின் தைமூர்கள் திரும்பத் திரும்பச் சொல்லுகிற இடம் அது. உங்களுக்கு டிஃபன்ஸ் காலனி முகவரியிருந்தால் நகரத்தின் ஃபுல்குடிமகன் ஆகிவிட்டீர்கள் என்றும் வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டீர்கள் என்றும் அர்த்தம். ரொம்ப சீக்கிரம் நுழைந்தவர்களில் பையனும் ஒருவன்.

அரைமாடியில் தான் பையன்பட்சி கூடுகட்டியிருந்தான். அரைமாடி என்றால் ஒரு மாடிக் கட்டிடத்தின் மேலிருக்கும் ஒற்றைஅறை என்பது பதவுரை. அறையைச் சுற்றிலும் சிமென்ட் போட்ட விசாலமான தளம். வேனில்காலத்தில் பரமசுகம். சிமென்ட் வெந்து பழுத்து, விடாமல் அனலடிக்கும். அறைக்குள் விசிறிக்குக் கீழே உட்கார்ந்தாலும் படுத்தாலும் கம்பளி போர்த்தி அடுப்புக்கனலில் குந்தியிருப்பதுபோலத்தான் இருக்கும். எழுந்திருக்கவே தோன்றாது. யமுனையைத் தவிர தேசத்திலெங்கும் தண்ணீர் பிரச்னையேயில்லை. கூதிர்காலத்தில் இதைவிட சுகம். பகலும் இரவும் வஜ்ஜிரத்தின் குளிரூசிமுனையில் சுகசயனம் செய்வதைப் போலிருக்கும். பீஷ்மபிதாமகனைக் கண்ணெதிரில் பார்க்கலாம். இருபத்துநாலுமணி நேரமும் ஐஸ் போட்ட தண்ணீர் பைப்பை அடைத்தாலும் தாரையாய் பிரவாகித்துக் கொண்டிருக்கும்.

இத்தனை வசதிகளிருக்கும் வீட்டுக்கு முப்பது நாளுக்கொருமுறை நூற்றியிருபது ரூபாய் வாடகை மட்டுமே பையன் கொடுத்துவந்தான். தண்ணீரும் மின்சாரமும் தனி. எல்லாம் முதலிலேயே கொடுத்துவிட வேண்டும். லாபம்தானென்று சொல்கிறான் பையன். மரங்களுக்குக் கீழே வசித்து டிஃபன்ஸ் காலனியின் வீட்டுரிமையாளர்களுக்கு இதை விட வாடகையை வெறுமனே கொடுக்கிற எத்தனையோ பேரை அவனுக்குத் தெரியுமாம். அதைப் பார்க்கையில் லாபம்தானே.

சர்வீசிலிருந்து விலகி வீடுகட்டி வீரசொர்க்கம் பூண்ட ஒரு மேஜருடைய மாளிகை இது. முதல் மற்றும் இரண்டாம் உலக மகாயுத்தங்களில் அவர் போர் புரிந்திருக்கிறார். ரொம்மலுடன் போரிட முடியவில்லையே என்பதாயிருந்தது இறக்கும்வரை இருந்த ஒரே துக்கம். இப்போது ரொம்மலிடமே தன் துக்கத்தைச் சொல்லித் தீர்த்திருப்பார் என்று சொல்கிறான் பையன். பையனுக்கு முகவரியைக் கொடுக்கையில் அவர் உயிரோடுதானிருந்தார். பிறகு திடீரென இறந்துவிட்டார். ஆனாலும் கடைசி நிமிடம் வரைக்கும் மரணத்தை இழுத்துக்கொண்டு போன பிடிவாத குணத்துக்காரர் அந்த மேஜர் என்பது பையனின் கருத்து.
எதார்த்த வாழ்க்கையில் சுடலைபத்ரகாளியாகவும் நடிப்பில் மேஜரின் மனைவியாகவும் இருந்த ஒரு பெண்மணிதான் எல்லா முதல்தேதியும் வந்து வாடகை வசூலித்துக்கொண்டிருந்தாள். ஒருமுறைகூட தவறாமல் வந்துகொண்டிருந்ததால் ஒருமுறைகூட தவறாமல் வாடகை கொடுக்கவேண்டியதாயிற்று பையனுக்கு. ஒரு மாதமாவது கொடுக்காமல் அந்த அமௌண்ட்டுக்கு இரண்டு நேரமும் உணவருந்த வேண்டும் என்று பையன் பலமுறைஆசைப்பட்டிருக்கிறான். வெகு காலத்துக்கு எதுவும் நடக்கவில்லை.

அப்படியிருக்கையில் ஒருநாள் கீழே முழுவீட்டில் நன்றாய் உண்டு வசித்து வந்த பெங்காலியும் அவர் குடும்பமும் ஒரு அந்தி நேரத்தில் பெட்டிபடுக்கையோடு தெருவில் இறங்கிப் போவதைப் பையன் பார்த்தான். பிறகு இரண்டு மாத காலம் வீடு காலியாய் விறைத்துப்போய் நின்றது. சரியான ஆள் கிடைக்கவில்லையென்று மேஜரின் விதவை, பையனிடம் சொன்னாள். ஐநூறு ரூபாய் தரும் யோக்யதையிருக்கிறமேல்தட்டு வாழ்க்கை வாழ்கிறவர்கள் வரும்வரை வீடு ஓய்வெடுத்துக்கொள்ளட்டும் என்பதாக இருந்தது காளியின் கணக்கு.
இரண்டுமாதங்கள் கழிந்து ஒருநாள் காலையில் பையன் எழுந்தபோது கீழே வீட்டைச் சுற்றி ராணுவ நடவடிக்கைகள் நடப்பதைப் பார்த்தான். ஒரு ராணுவ லாரியிலிருந்து வீரர்கள் சாமான்களை இறக்குகிறார்கள். ஆகாயத்தை நோக்கி மெஷின்கன் பொழிகிறார்கள். வடக்கன்பாட்டு பாடுகிறார்கள். சுழன்று சுவடு வைத்து வாள்வீசுகிறார்கள். பையன் ரகசியமாய் விசாரித்ததில் ஒரு கர்னல்தான் கீழ்வீட்டுக்குக் குடிவந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ஒன்பது மணியளவில் மூக்குப் பிடிக்க ஜலபானம் செய்துவிட்டு பணியிடத்துக்குச் செல்கையில் அடக்கமுடியாத ஒரு பாதுகாப்புணர்வை அனுபவித்தான் பையன். யுத்தம் வந்தால் கீழே கர்னல் இருக்கிறாரே.

வேலை முடிந்து ஜகத்துக்கே உற்சவத்தை அறிவித்துவிட்டு பறந்து கூடடையும்போது பையன் கீழ்த்தளத்தில் வெளிச்சம் கண்டான். ஒரு சீமைநாயின் குரைப்பைக் கேட்டான். பயங்கரமான ஒரு பெண்குரலையும் கேட்டான். கர்னலின் தர்மபத்தினியாயிருக்கும். யுத்தத்திலும் சமாதானத்திலும் கணவனுக்கு சக்தியளிக்கும் ஏகாதசி நோன்புக்காரி. லாரியும் மெஷின்கன்னும் மறைந்துவிட்டிருந்தன. அடுத்த நாள் காலையில் கர்னலை சந்தித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து மீண்டும் சுபிட்சமாக ஜலபானம் செய்து கம்பளி போர்த்தி கனலடுப்பில் உறங்கினான் பையன்.

எட்டு மணியானபோது பையன் ஜலபானம் செய்து உடை உடுத்துக் கீழே இறங்கினான். செயற்கை மார்பிள் கல் பதித்த வராந்தாவில் நடந்து காலிங்பெல் அழுத்தினான். யூனிபார்ம் போட்ட ஒரு வேலைக்காரன் கதவு திறந்தான். கை இரண்டையும் தூக்கி சரணடைந்துவிட்டதாகக் காட்டி பையன் கர்னல்சாப் இருக்கிறாரா என்று கேட்டான். போய்விட்டார் என்று வேலைக்காரன் சொன்னான். அறிக்கையை உறுதிசெய்யும்விதமாக உள்ளேயிருந்து முதல்நாளிரவு குரைத்த சீமைநாய் இரண்டு முறைகுரைத்தது. கையைக் கீழிறக்கி பையன் திரும்பி நடந்தான்.
மாலையில் திரும்பிவந்து பையன் காதைத் தீட்டிக்கொண்டு படுத்தான். பயங்கரமான பெண்குரலும் சீமைநாயின் குரலும் மட்டுமே கேட்டது. அந்தப்பிரதேசத்திலேயே எங்கும் ஆண்குரலே இல்லை. இது என்ன கர்னல்டா இவன்? பையன் தனக்குள் சொன்னான். இருபத்து நாலு மணி நேரமும் யுத்தம் செய்கிற ஒரு வித்துவான். சரி, நாளைக்குக் காலையில போய் அவனைப் பிடிச்சுக்கலாம்.
அடுத்த நாள் காலையில் மணியடித்தபோதும் வேலைக்காரன் முந்தின நாள் கதையையே சொல்கிறான். கர்னல் போய்விட்டார். ஓஹோ, வித்தியாசமான ஒரு ஜாதிப் பறவைதான் இந்தக் கர்னல், பையன் நினைத்துக்கொண்டான். சுற்றுவட்டாரப் பறவைகள் துயிலெழுந்து, பாடுவதற்கு ஒரு சான்ஸ் கிடைக்கும் முன்பாகவே பறந்துபோகிற ஒரு பறவை. சுற்றுவட்டாரப் பறவைகள் உறங்கிய பின்னர் மட்டுமே கூடடைகிறபறவை. அப்படியானால், கர்னலின் தர்மபத்தினிக்குத்தான் நாளின் பெரும்பான்மையான பகுதியும் வீட்டின் கமான்ட் என்றாகிறது. இன்னும் ஒரு அடி மார்ச் செய்து சொன்னால், பையன் நினைத்துக்கொண்டான்: கர்னலுக்குத் தன் சொந்த வீட்டில் பெரிய கமான்ட் ஒன்றும் கிடையாது. பரஸ்பர புரிதலின் அடிப்படையில் தலைவரும் தர்மபத்தினியும் தங்களுடைய கமான்டுகளை எல்லை பிரித்து வைத்தமாதிரிதான். தலைவருக்கு ரெஜிமென்ட். தலைவிக்கு வீடு. போடா மயிரு என்று சொல்லி ஒரு வில்லன் சிரிப்பு சிரித்தபடி பையன் நடந்தான்.

ஆனாலும் வெப்பமானியின் பாதரசம் போல எரிச்சலும் பிடிவாதமும் பையனின் மனதில் ஏறிக்கொண்டன. உயிரோட இருந்தா, நாளைக்குக் கர்னலைப் பிடிச்சாகணும். பார்த்துடலாமே, எப்படிப்பட்ட ஆள்னு. இவ்வளவு நேரத்திலேயே போகிறஒரு கிளி உண்டா? அப்படி இருந்தா அதைக் கூட்டில வச்சே பிடிச்சாகணும். நாளைக்குக் காலைல ஏழு மணிக்கே கீழ இறங்கி மணியடிச்சு உள்ளே நுழையப் போறேன்.


பகல்போய் இரவு வந்தது. இரவு முக்காலும் போனது. புலர்காலமானபோது உடை அணிந்து பையன் டெரஸ்ஸில் பம்மியிருந்தான். ஒரு வேளை ஏழுக்கு முன்னாலேயே கிளி போவதாயிருந்தால் பிடிக்கும் விதத்தில். ஏழானது. கிளி கீழேதானிருக்கிறது என்பது உறுதியானதும், ஏழு முடிந்து ஒரு நிமிடத்தில் பையன் ஆபரேஷனை ஆரம்பித்தான். கீழேயிறங்கி வராந்தாவை வலம் வந்து மணியடித்தான். சேவகன் கதவைத் திறந்தான். அவன் வசனமேதும் சொல்லத் துவங்கும் முன்பாகவே பையன் உள்ளே நுழைந்தான். சேவகன் சடுதியில் உள்ளே விரைந்தான். என்ன வேணும்னாலும் போய்ச் சொல்லு, பையன் சொல்லிக்கொண்டான். கர்னலைப் பார்க்காமல் ஒரு அடி பின்வாங்க மாட்டேன்.

வரவேற்பறையில் பையன் காலூன்றி நின்றான். சுற்றிலும் பசுமையா யிருந்தது. பச்சை நிறத்தில் சுவர், அதே நிறத்தில் சோஃபா, தரைவிரிப்பு, கர்ட்டன், பூச்செண்டு, ரெஃப்ரிஜிரேட்டர் இன்னும் பல. எல்லாம் ஒன்றுக்கொன்று மேட்ச்சாய் இருந்தது. மேட்ச் செய்தது போதவில்லை என்று தோன்றும் இடங்களில் மேட்ச் பாக்சுகள் அடுக்கப்பட்டிருந்தன.

சோஃபாவுக் கீழே குனிந்து, குரைக்கும் சீமை நாய்கள் கடிக்கத் தயாராக பச்சை நிறத்தில் இருக்கின்றதா என்று பையன் பார்த்தான். ப்ளீஸ் டேக் யுவர் சீட், பையன் சொல்லிக்கொண்டான்: இங்கே ஃபார்மாலிட்டி எதுவும் கிடையாது. உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ.

சோஃபாவுக்குள் தாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் பயங்கரப் பெண் குரல் கேட்டது:

யெஸ்.

பையன் பார்த்தான். பச்சை நிறக் கதவருகில், பச்சைக் கர்ட்டனை விலக்கி, பச்சை சாரியும் கையில்லா பச்சை சோளியும் அணிந்து, பச்சை லிப்ஸ்டிக் போட்டு, பச்சை நிறமான ஒரு பேரிளம்பெண் தடித்துக் கொழுத்து தளும்பி நின்றுகொண்டிருக்கிறாள். எல்லைப் போரில் முழுசாய் தோற்றுவிட்ட சேலையும் சோளியும் அவளுடைய மத்திய பாகத்திலும் தோள் ஓரத்திலும் கசங்கிப் போய்க் கிடந்தன. கர்னலின் மனைவி!
வெளிப்படையான இந்தத் தூண்டுதலுக்கு எதிர்நின்று பையன் நினைத்துக்கொண்டான்: பையா. நீ அட்டகாசமான ஒரு காளைக்குட்டிதான். உன் வாலை நீ சுருட்டி வைத்துக்கொள்.

பையன் இவ்வாறு சொன்னான்: மேலதான் தொழுவம். கர்னல் சாரைப் பார்க்கலாம்னு வந்தேன்.

அவள் சிரித்தாள்: உட்காருங்க.

சோஃபாவின் ஒரு ஓரத்தில் அவளும் உட்கார்ந்தாள். அதைத் தொடர்ந்து நிகழ்ந்த பூகம்பம் அடங்கியவுடன் அவள் கேட்டாள்: எப்படியிருக்கு இடம்?

பரவாயில்லை, பையன் சொன்னான்: ஒரு ரூம்தான் இருக்கு. கல்யாணமாகாததால அப்படியே போகுது.

ஓஹோ அவள் உரக்கச் சிரித்தாள்: நான் இந்த இடத்தைக் கேட்டேன்.

இந்த என்பதிலிருந்த அழுத்தம் பையனை உலுக்கிவிட்டது.
உனக்கு இது வேணும், பையன் சொல்லிக்கொண்டான், உன்னோட இடத்தைப்பத்தி யாராவது கேப்பாங்கன்னு நெனச்சே பாரு உனக்கு இது வேணும்.

ரொம்ப நல்ல வீடு, பையன் சொன்னான்: அருமையா இருக்கு.
சொன்னது சரியல்ல என்று பையனுக்குத் தெரிந்திருந்தது. இனி என்ன செய்ய முடியும், சொல்லிவிட்ட நிலையில்!

ஒருவேளை கர்னலின் மனைவி தான் சொன்னதை எழுதி வாங்கிக்கொள்வாள் என்று பையன் நினைத்தான். ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை. தோட்டக்காரன் வேலை செய்திருந்த முற்றத்தைக் கண்ணாடி ஜன்னலினூடே சுட்டிக்காட்டியபடி அவள் சொன்னாள்:
நான் வந்தபோது முற்றத்தைப் பார்க்க சகிக்கலை. வேணும்னா பார்த்துக்குங்க. ஒரு மாசத்துக்குள்ளே அங்க முழுக்க ரோஜாப்பூக்களாயிருக்கும்.

அழகாயிருக்கும், எதிர்காலத்தில் மலரப் போகிறமலர்களை மனதில் கண்டு பையன் சொன்னான். நினைக்கவும் செய்தான்: நூறு மலர்கள் மலரட்டும், நூறு கர்னல்கள் தங்களுக்குள் வாள்வீசிக் கொள்ளட்டும்!

முதல் கேள்வியைத் தப்பாய்ப் புரிந்துகொண்டதால் தன் பதில் தவறாகிவிட்டது, பையன் நினைத்துக்கொண்டான். இனி என்ன பேச? யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது கூந்தலிலிருந்து வீழ்ந்துவிட்ட ஒரு ஹேர்பின்னை எடுப்பதற்காக அவள் குனிந்தாள். அப்போது கழுத்திலிருந்து காதங்கள் கீழே உன்னதமான எல்லைப் பிரதேசங்களைத் தடுக்க முடியாமல் தடுத்து நிறுத்தியிருந்த அவளுடைய சோளியின் தடைகள் கலையவும் மீட்டர் கணக்கில் சொத்து விவரக் கணக்குகள் பேரலைகளாய் உயர்ந்து பிளக்கவும் செய்தன. உத்தண்ட சாஸ்திரிகளுக்குப் பிறகு தோன்றிய மஹாஸ்த்ரீரசிகனான பையன் கண்கள் விரியப் பார்த்தான். எழுந்திரிக்கலாமா? அப்புறம்?

பையா பையா பையா! பையன் சொல்லிக்கொண்டான்: மெதுவா போ. வண்டிய கியர்ல போடு. முன்னால இருக்கறது பெரிய வளைவு!

கர்னல் வந்துட்டார்னா, பையன் நினைத்தான்: எல்லாம் போச்சு! வந்துடாதேடா கர்னல்!
அறையின் ஒரு மூலைக்குச் சென்று பச்சை முக்காலியிலிருந்த புத்தனின் சிலையைக் காட்டி பையன் சொன்னான்: அழகான சிலை. இவ்ளோ சமத்தான புத்தனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை.
அவளுக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. சேலையில் பொதிந்த ஒரு காலை அநாயாசமாக மறுகாலின்மேல் ஏற்றிவைத்து கையிரண்டையும் தலைக்குப் பின்னால் கோர்த்து சிரித்தவாறு அவள் சொன்னாள்:
அதை நான் வாங்டாக்கில வாங்கினேன்.

தான் பூமியை விட்டு நழுவுவதாகத் தோன்றியது பையனுக்கு. ஆனந்தவல்லி, தடியழகி, திம்மி, லூசுப் பாருக்குட்டி, பஞ்ச கல்யாணி, அதே போஸில், தான் மரிக்கும்வரைக்கும் இருக்கட்டும் என்று பையன் ஏங்கினான். அவள் அப்படி உட்கார்ந்திருக்கும்போது எல்லா எல்லைக்கோடுகளும் மறைந்துவிடுகின்றன. அலைகள் பின்னோக்கி அடிக்கின்றன. உன்னதமான ஆழங்களுடைய, பிரம்மாண்டமான புதையல்களைக் கொண்ட, உழுது பிளந்த மண்ணின் மணம் எழுகிற பூமிதேவி கஜம்கஜமாய் அலங்கோலமாய்க் கிடக்கிறாள். பையனின் போதம் ஒரு குடிகாரனைப் போலானது.

கர்னல் வந்துடக் கூடாதே! பையன் மீண்டும் நினைத்துக் கொண்டான். வந்தா அவனைக் கொன்னுடுவேன்.
அவளுடைய லைன் புரிந்துவிட்ட பிறகு ஒரு நிமிஷம்கூட வீணாக்காமல் பையன் தொடர்ந்து சொன்னான்:
ரேடியோகிராம் ரொம்பப் புதுமாடல் போலிருக்கே. இந்த மாடலை நான் முன்னே பார்த்ததில்லை.
ஆனந்தவல்லிக்குப் பரமசந்தோஷமாகி விட்டது. அந்த நிமிடமே அவள் பாய்ந்து தன்னை எதுவும் செய்யாமலிருந்தது தன்னுடைய துரதிர்ஷ்டம் என்று சொல்கிறான் பையன்.
காஸாவிலிருந்து ஒரு நண்பர் கொண்டு வந்தார்.
ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகொள்ளும் சுகத்துடன் அவள் சொன்னாள்.

பையன் தன்னுடைய மிக நேர்த்தியான அப்பாவித்தனத்தை முகத்தில் நிறைத்துக்கொண்டு, முன்னால் சாய்ந்து உட்கார்ந்து அவளுடைய கண்களுக்குள் பார்த்தபடி கேட்டான்:
க்யூரியோஸ் நிறைய இருக்கு போலிருக்கே?

லூசுப் பாருக்குட்டி உருகிப் போனதாய்த் தோன்றியது பையனுக்கு.
அவள் சொன்னாள்: ஒரு புதிய டேப்ரிக்கார்டர் இருக்கு. காமிக்கட்டுமா?
அவள் எழுந்தாள்.
அந்த நேரத்தில்தான் சேவகன் தோன்றிக் கேட்கிறான்: டிபன் வெக்கட்டுமா?

செத்தால் போதுமென்றாகிவிட்டது பையனுக்கு. இப்போது கர்னல் வந்துவிடுவார். அவருடன் உட்கார்ந்து அவள் சாப்பிடுவாள். என்னால் அதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ம்... போகிறேன். இன்னொரு நாள்...
ரொம்ப சந்தோஷங்க. கண்களில் துக்கத்துடன் பையன் சொன்னான். இன்னொரு நாள் வரேன். கர்னல் சாஹிபை அப்போ பாக்கலாம். பை!

கர்னல் சாஹிபைப் பாக்கணுமா? திம்மியின் கண்களில் பிரகாசம் படர்ந்தது:
வாங்க!

அவள் குறுக்கே நடந்து வராந்தாக் கதவைத் திறந்தாள். நடக்கையில் பஞ்சகல்யாணி குலுங்கவும் குலுங்கிச் சிரிக்கவும் செய்தாள். அவளுடைய பாகங்கள் தளும்பித் தெறித்து வீழந்துவிடுமென்று தோன்றியது பையனுக்கு. தெறித்து வீழந்தால், பையன் நினைத்துக் கொண்டான்: நான் அவற்றை வாரியெடுத்துக் கொண்டு ஓடிவிடுவேன். எப்போதும் திருப்பிக் கொடுக்க மாட்டேன்! என்னமோ, கர்னலைப் பற்றி இப்போ சொல்லியிருக்க வேண்டாம். எல்லாம் நாசமாப் போச்சு!

வராந்தாவில் காலிங் பெல்லுக்கு எதிராக கதவின் ஒரு பக்கத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சின்ன போர்டைக் காட்டி அவள் சொன்னாள்:

ப்ளீஸ் மீட் தி கர்னல்.

பையன் போர்டிலிருந்த இதிகாசத்தை மனதுக்குள் வாசித்தான்:
லெப். கர்னல். (மிஸ்) ரேணு, எம்.டி.

தன் காலடிக்குக் கீழே பூமி வழுக்கிப் போவதைப் போல் தோன்றியது பையனுக்கு. மீண்டும் கண்களில் நிஷ்களங்கத்தைக் குழைத்து அவளை வணங்கி நிற்கும்போது, சுந்தரிக்குட்டி உள்ளே பார்த்து இவ்வாறு சொல்வதை பையன் கேட்டான்:
டிஃபன் ரெண்டு பேருக்கு வை.

அன்று முதல் பிறகு எல்லாமே சுகம்தானென்று சொல்கிறான் பையன். இரண்டு நேரம் தேய்த்துக் குளியல், மூன்று நேரம் சாப்பாடு, புல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கோழிமுட்டை, ஆட்டுப்பால், மாத்திரை, தங்கபஸ்பம், உயிரோடு காட்டுப்போத்தின் இறைச்சி. என்னன்னா, பையன் சொல்கிறான், அதுக்குப் பிறகு ஹவுஸ்காஸு*க்கு போகலைன்னு அர்த்தம்.

-----------------------------------------------

*ஹவுஸ்காஸ் : டெல்லியின் பாலியல் தொழில் வீதி

Monday, June 28, 2010

குருவாயுபுரத்து ஹோர்லிக்ஸ் விசேஷங்கள்


குருவாயுபுரத்து ஹோர்லிக்ஸ் விசேஷங்கள்

ஸ்ரீபதி பத்மநாபா


நான் ஒரு 'நிரீசுவரவாதி' - நாத்திகன் என்றாலும் அம்பலங்களுடனும் பூஜை அனுஷ்டானங்களுடனும் எப்போதும் எனக்கு நெருங்கிய உறவு உண்டு. முக்கியமான ஹோமங்களில் வந்து வெறுமனே உட்காருங்கள் போதும் என்று என் நண்பரான தந்திரி ஒருவர் அடிக்கடி அழைப்பதுண்டு. என் வேஷவிதானம் அப்படி. சமீபத்தில் நண்பர் ஜெரால்டு தன் சீரியலில் நடிக்க அழைத்தார். அதுவும் பூசாரி வேடம்தான்.

கட உள் என்ற கருத்தாக்கத்தின்படி பார்த்தால் கோவில்கள் எப்போதும் உள்ளத்தைக் கடக்க வைப்பவைதான். கேரளத்தின் பெரும்பாலான கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பெரும்பாலும் எல்லாக் கோவில்களிலும் ஒரு தூரத்து உறவினராவது பணியில் இருப்பார். எனவே தங்குமிடம் பெரும்பாலும் கிடைத்துவிடும். உணக்கச்சோறின் ருசியே தனிதான்.

கல்லூரிக் காலங்களில் அடிக்கடி குருவாயுபுரத்துக்கு செல்வதுண்டு. கிருஷ்ணனிடம் கொண்ட ஈர்ப்பு அல்ல; வேறொரு கதையது; இது வேறொரு கதை.

குரு பிரகஸ்பதியும் வாயுதேவனும் சேர்ந்து நிர்மாணித்த கோவில் என்பதால் குருவாயுபுரம்; குருவாயூர். அதிகாலை நிர்மால்ய தரிசனம் மிக பிரசித்தி. என் நண்பன் பி.வி.மேனன் சொல்வான்: இந்த அதிகாலை நேரத்தில் வரிசையில் நின்றிருக்கும் எல்லாப் பெண்களின் முகத்திலும் குடிகொண்டிருக்கும் ஒரு கோபிகா பாவம் இருக்கிறதே, இதை தரிசிப்பதற்காகவே இந்த பூலோக வைகுண்டத்துக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம்.
குருவாயூருக்கு போகிறபோதெல்லாம் மேற்கு நடையில் உறவினர் ஒருவர் வீட்டில் தங்குவது வழக்கம். ஆனால் அந்த முறை பி.வி.மேனன் கூட இருந்ததால் லாட்ஜில் தங்க வேண்டியதாயிற்று. பனச்சிக்காட் வித்யாதர் மேனனும் நானும் கல்லூரித் தோழர்கள். அவன் எனக்கு ஒரு வருடம் சீனியர். காளிதாஸன் விவரித்த கள்ள சன்யாசி போன்றவன்.


ஒரு சன்னியாசி கடையில் இறைச்சி வாங்கிக்கொண்டிருந்தார். அதை கவனித்தான் ஒரு வழிப்போக்கன். அவர்களின் சம்பாஷணையை ஒரு செய்யுளாகத் தருகிறார் காளிதாஸன்.

பிக்ஷோ, மாம்ச நிஷேவணம் கிமுசிதம்? கிம் தேன மத்யம் வினா?
மத்யம் சாபி தவப்ரியம்? ப்ரியம் அஹோ வாராங்கனாபிஸ்ஸமம்
வாரஸ்த்ரீ ரதயே குதஸ்தவ தனம்? தியூதேன சௌர்யேண வாம்.
சௌர்யதூத பரிஸ்ரமோடஸ்தி பவத ப்ரஷ்டஸ்ய கான்யா கதி?

சன்யாசியே, இறைச்சி சாப்பிடுவது சரியா?
தவறுதான், மதுவில்லாமல் இறைச்சி சாப்பிடுவது.
ஓ உங்களுக்கு மதுவும் பிடிக்குமா?
பிடிக்குமாவது, வேசிகளைப் போலவே மதுவும் இஷ்டம்தான்.
ஓஹோ, வேசிகளிடம் போக உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கும்?
சூதாட்டமும் திருட்டும்தான்.
சன்னியாசியான நீங்கள் இதெல்லாம் செய்யலாமா?
கதியற்றவனுக்கு வேறு கதி என்ன?

(ஷோலே முதல் மன்மத லீலை வரை பல பெரும் படைப்பாளிகள் இதே போல 'சிந்தித்திருப்பது' உங்களுக்கே தெரியும்.)

காலை தரிசனம் முடிந்த பிறகு அவன் குருவாயூரின் இண்டு இடுக்கான ஒரு இடத்தில் ஓடுபோட்ட ஒரு சிறு டீக்கடைக்கு அழைத்துப் போனான். காலை உணவு இங்கேயா என்று முகம் சுளித்த என்னிடம் ஒரு சாயா மட்டும் சாப்பிடலாம் என்றான். இந்த இடத்தைத் தேடி சாயா சாப்பிட வருகிறான் என்றால் நிச்சயமாக கடைக்காரருக்கு ஒரு மகள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அங்கு இருந்ததோ ஒரு பெண்மணி மட்டுமே. பி.வியைக் கண்டதும் அவள் முகம் பிரகாசமானது. 'ரண்டு சாயா இவிடெ, பின்னே ரண்டு ஹோர்லிக்ஸ் டோக்கன்' என்றான் பி.வி. 'ஓ சாய காப்பியெல்லாம் மடுத்து அல்லே...' என்றபடி' ஹோர்லிக்ஸ் வெல கூடி கேட்டோ, ஆயிரம் ரூபா.' என்றாள் அந்தப் பேரிளம்பெண். எனக்கு ஒரு மாதிரி தலை சுற்றுவதுபோல இருந்தது. என்ன நடக்கிறது இங்கே? 'எனக்கு அறியாம்.' என்றபடி இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்தான். அவள் இரண்டு சிகரெட் அட்டைகளில் ஹோர்லிக்ஸ் என்று எழுதிக் கொடுத்தாள். சாயா சாப்பிட்டு வெளியே வந்தோம். 'என்னடா பண்ணிட்டிருக்கே? ஒண்ணும் புரியல' என்றேன். 'பேசாம வா' என்றான். ஒரு டாக்சி பேசினான். சாவக்காடு போய் அங்கே ஒரு மணிநேரம் வெய்ட் செய்து திரும்பி வரவேண்டும் என்றான்.

ஒரு காலத்தில் சவங்களின் காடாக இருந்தது சாவக்காடு. மத்தியின் மணம் வீசும் கடலோர சிறு நகரம். குருவாயூரிலிருந்து பக்கம்தான். ஒரு தனிமையான பங்களாவின்முன் கார் நின்றது. வராந்தாவில் கொம்பன் மீசை வைத்த ஆள் மப்டி போலீஸ் போல இருந்தான். பிவி டோக்கனைக் காண்பித்தான். 'ம்... அகத்து போய்க்கோ' என்றான் அவன்.

உள்ளே மாடிப்படியேறி ஒரு அறை. விசாலமான அறை. அங்கு மூன்று அறைகளுக்கான வழிகள் இருந்தன. இங்கேயும் ஒரு பெரிளம்பெண் தோன்றினாள். பிவியைப் பார்த்து சிரித்தாள். 'சாயயோ காப்பியோ அதோ ஹோர்லிக்சோ' என்றாள். 'ஹோர்லிக்ஸ்' என்றபடி டோக்கனைக் கொடுத்தான். 'ம்... இரிக்கூ' என்றபடி ஒரு அறையை நோக்கிப் போனாள். பிவி அந்தக் கதவுகளைக் காட்டி ஒன்று சாயா 100 ரூபா, இன்னொன்று காபி 500 ரூபா, அது ஹோர்லிக்ஸ் 1000 ரூபா' என்றான். ஹோர்லிக்ஸ் கதவு திறந்தது.... என்ன சொல்ல... கிருஷ்ண கிருபா சாகரம் ! ஏழு கோபிகைகள் நின்றிருந்தார்கள். 'எல்லாரும் கோளேஜ் குட்டிகளாணு...' என்றாள் பேரிளம்பெண். நான் பிவியை முறைத்து 'இதுக்குத்தான்னு முதல்லயே சொல்லிருந்தேன்னா நான் வந்திருக்கமாட்டேன்ல... ஆளை விடு சாமி' என்றபடி கீழே இறங்கினேன்.

மலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்றழைக்கப்படும் மறைந்த எழுத்தாளர் 'வி.கே.என்'னின் 'பையன் கதைகளின்' ஒரு பகுதி நினைவுக்கு வந்தது:
தங்களின் வேசியிடம் போன அனுபவங்கள் பற்றி மூன்ற பேர் பகிர்ந்துகொள்கிறார்கள். பையன் சொல்கிறான்:

என் அனுபவம் வேறு மாதிரி. ஏஜென்ட் என்னிடம் வந்து, சார் மூன்று பேர் இருக்கிறார்கள். ஒருத்தி நடுத்தர வயதுக்காரி. ஒருத்தி இருபத்தெட்டு வயதுக்காரி. இன்னொருத்தி கொக்காலையை சேர்ந்தவ. இருபது வயசு. பி.ஏ. பாஸ் பண்ணிருக்கா சார்.

அவளே வரட்டும். வரும்போது மறக்காம சர்டிபிகேட்டையும் எடுத்தாரச் சொல்லு...........!

Sunday, June 20, 2010

என் மகள் ஒரு பெண் -என்.எஸ்.மாதவன்


தமிழில் ஸ்ரீபதி பத்மநபா
தரையில் படுத்தபடி கமலா முன்வாசல்கதவின் அடியிலிருந்த நீளமான இடைவெளியினூடே ஃப்ளாட்டுக்கு முன்னாலிருந்த வராந்தாவில் நகர்ந்துகொண்டிருந்த எண்ணற்ற பாதங்களை கவனித்துக் கொண்டிருந்தாள். அவளறியாமலேயே மேலேறியிருந்த அடிப்பாவாடைக்குள் இடம்பெயர்ந்திருந்த ஜட்டி அவளின் பிஞ்சுப் பிருஷ்டத்தில் பள்ளிக் கூடத்தின் மரப்பெஞ்சுகளின் மேடு பள்ளங்கள் பதிந்திருந்த தழும்புகளின் கறுப்புநிறங்களைக் காண்பித்தது. தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தால் எங்கே அவள் தன்னுணர்வு பெற்று பாவாடையைத் திருத்தி, அந்தக் காட்சியின் களங்கமின்மையை முடிவுக்குக் கொண்டுவந்து விடுவாளோ எனப் பயந்து நான் கண்களைப் பின்வாங்கிக் கொண்டேன். நான் கமலாவுக்குத் துணையிருக்க ஆரம்பித்து கொஞ்ச நேரமாகிறது. பக்கத்து ஃப்ளாட்டில் கமலாவின் தோழி ப்ரீத்தியின் அப்பா முந்தின நான் திடீரென்று இறந்து விட்டார். சுபத்ரா அங்கே போக ஆயத்தமானபோது அம்மாவின்கூட வருவேன் என்று சொல்லி கமலா அடம்பிடித்தாளென்றாலும் சுபத்ரா அதற்கு சம்மதிக்கவில்லை.
வேண்டாம். நீ இங்கேயே யிருந்தா போதும். ஃப்ளாட்டிலிருந்து வெளியே இறங்கும்போது சுபத்ரா சொன்னாள்.
பத்து வயசாச்சில்ல அவளுக்கு? இன்னும் எத்தனை காலந்தான் இதையெல்லாம் மறைச்சு வக்கிறது? நான் கேட்டேன்.
வேண்டாம். இன்னும் ஆகல. பாடி கொண்டுபோன பிறகு அவ வந்தா போதும்.
சுபத்ராவின் வார்த்தைகளில் அவளுடையதேயான பழமையின் பயங்கள் மின்னிக்கொண்டிருந்தன. பிறகும் ஆசை இழக்காமல் கமலா சிணுங்கியபடி சுபத்ராவின் கையைப் பிடித்தாள்.
அவளும் வரட்டும் சுபத்ரா. குழந்தைக இன்னிக்கு டி.வி.யில பார்க்காததா? நான் கேட்டேன். வேண்டாம்னு சொன்னேனில்ல? கமலாவின் கையைத் தட்டிவிட்டபடி சுபத்ரா சொன்னாள்.
அவ பார்க்காதது இன்னும் நெறய இருக்கு. மோளே, நீ வானவில் பார்த்திருக்கியா?
இல்லை. குற்ற உணர்வுடன் கமலா சொன்னாள்.
இந்த விஷயத்தை அப்பாகிட்ட சொல்லு நீ. வெளியே போவதற்காக சுபத்ரா கதவைத் திறந்தபோது வராந்தாவின் வழியாக மலர்வளையங்களையும் பூக்களையும் ஏந்திய பார்வையாளர்கள் நுழைவதை கமலா உற்றுப் பார்த்தாள்.


டைம் ஆகும்போது சொல்லி அனுப்பறேன். இவளுக்குப் பால் கொடுக்க மறந்துராதீங்க. கதவை சாத்தும் முன்னர் சுபத்ரா சொன்னாள். சுபத்ரா போனபிறகும் எதிர்ப்பைக் காட்டும் குறுகுறுப்புடன் கமலா முன்வாசல் கதவின் அருகே அங்குமிங்கும் அலைந்தாள். இரவு முழுக்க தூக்கம் விழித்ததன் களைப்புடன் நான் படுக்கையில் போய் படுத்தேன். கொஞ்சநேரம் கழிந்தபோது கமலாவும் என் அருகே வந்து படுத்து என் முதுகிலுள்ள ஒரு பெரிய மருவை விரல்களால் திருகிக் கொண்டிருந்தாள். இத்தகைய தருணங்களில் இப்படித்தான் அவள் தன் பாதுகாப்புணர்வைத் தேடிக் கொள்வாள்.
அவள் கேட்டாள். நீங்க நெறைய வானவில் பார்த்திருக்கீங்களா, அப்பா?
சின்னவயசிலே நெறைய பார்த்திருக்கேன். இப்ப கொஞ்ச நாளாச்சும்மா, ஒண்ணுகூடப் பாக்க முடியல.
அது ஏன்ப்பா அப்படி? வானவில்லெல்லாம் தீர்ந்து போயிடுத்தா?
சுத்தி சுத்தி பெரிய கட்டடங்களாச்சேம்மா. அதுவுமில்லாம இந்த தூசியும் புகையும். வானத்தையே சரியாகப் பார்க்க முடியலே. அப்புறமில்லே வானவில்?
மொதமொதோ நீங்க எப்பப்பா வானவில் பார்த்தீங்க? சரியா ஞாபகமில்லம்மா.
ஒருமுறை ரயிலில் போகும்போது பார்த்த வானவிற்களைப்பற்றி நான் இப்போதும் அடிக்கடி நினைப்பதுண்டு. பழனியிலிருந்து பாசஞ்சர் வண்டியில் அப்பாவுடன் திரும்பி வரும்போது, வாளையார் காடுகள் முடிந்தவுடன், தூங்கி விழுந்து கொண்டிருந்த என்னை அப்பா தட்டி எழுப்பினார். ஜன்னல் வழியே பார்க்கச் சொன்னார். அப்பா என்னைத் தொடுவது மிக அபூர்வமாக மட்டுமே. ஆகாயத்தில் ஒன்றல்ல. இரண்டு வானவிற்களை நான் பார்த்தேன். இரட்டை வானவில்லை பார்த்த மகிழ்ச்சியில் அதிசயித்துப்போய் நான் விரிந்த கண்களுடன் நிற்கையில் மூன்றாவது வானவில்லைப் போல அப்பாவின் கை என் தோளைச்சுற்றியது.
கமலா எழுந்து அவளுடைய அறைக்குச் சென்றாள். கொஞ்ச நேரம் அவளுடைய அசைவே இல்லை. நான் எழுந்து சென்று பார்த்தபோது அவன் முன்கதவின் முன்னால் தரையோடு படுத்து சின்ன இடுக்கினூடே வராந்தாவில் நுழைகிற கால்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். சுபத்ரா அவனுப்பிய ஆள் கதவைத் தட்டியபோது நான் சட்டையை மாட்டி வெளியே இறங்கினேன். திறந்த கதவு வழியாக ப்ரீத்தியின் வீட்டுக்கு வந்த கூட்டம் வராந்தாவில் குழந்தை விளையாடும் இடங்களைக்கூட அபகரித்துக் கொண்டு வளர்ந்து நீண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. பார்வையாளர்கள் குசுகுசுப்பாய்ப் பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டாலும் கூட அதன் எதிரொலி இடைவழிக்கு மேல் அடைந்து உறைந்து நின்றிருந்தது.
நீ கதவைச் சாத்திக்க மோளே. அம்மாவை இப்ப அனுப்பறேன்.


வெளியே போகும்போது நான் சொன்னேன். ப்ரீத்தியின் அப்பாவின் மரணத்திற்குப் பிறகும் அவளும் அம்மாவும் எங்கள் அண்டை வீட்டார்களாகவே இருந்து வந்தார்கள். ப்ரீத்தியின் அப்பாவின் ஆபீசிலேயே வேலை செய்து வந்த அவளுடைய அம்மா பெரும்பாலும் ஆஸ்த்மாவினால் லீவ் எடுத்து வீட்டிலேயே இருந்தார்கள். ப்ரீத்தி சீக்கிரமே பெரிய பெண்ணாகிவிடுவாள் என்று எங்களுக்குத் தோன்றியது.
இந்தக் குழந்தைகளுக்கு அவங்க எதைநோக்கி வளர்றாங்கன்னு தெரியமாட்டேங்குது. இடுப்பு வலியால் அவதிப்பட்டு படுக்கையில் படுத்தபடி ஒருநாள் சுபத்ரா சொன்னாள்.
அப்படீன்னா?
இன்னிக்கு ப்ரீத்தியும் நம்ம பொண்ணும் விளையாடறதை கவனிச்சேன். இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்திலே அவங்க சின்னக் குழந்தை ஆயிடுவாங்கன்னும், அப்போ முலைப்புட்டியிலே பால் குடிப்பாங்கன்னும் போகுது விளையாட்டு.
எனக்கு அலுவலகத்துக்கு நேரமாகிக் கொண்டிருந்தது.
இப்படிப் படுத்திட்டிருந்தா எப்படி? நீ போய் சீக்கிரம் சப்பாத்தியும் புஜியாவும் செஞ்சு கேரியரில வை.
குழந்தைகள் நிகழ் காலத்திடமான இந்த வெறுப்புடன் கூட அவர்கள் மனித குலத்திலிருந்தே அகன்று கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
அவங்க இப்ப பொம்மைகளை வச்சு விளையாடறதில்ல. நான் சமையலறையில் சென்று சுபத்ராவிடம் சொன்னேன்.
சுபத்ரா ஏதும் பேசாமல் உருளைக்கிழங்கின் தோலை உரித்துக் கொண்டிருந்தாள். பொம்மைகளை வச்சு விளையாடினாத்தான் பெரியவங்களாகும்போது மத்த மனுஷங்க கூட சுலபமா பழகமுடியும்.
உம். சுபத்ரா உம் கொட்டினாள்.
இப்பவெல்லாம் ப்ரீத்தியும் நம்ம பொண்ணும் எப்போ பார்த்தாலும் துப்பாக்கியும் ட்ரக்கும் வெச்சுத்தான் விளையாடறாங்க. எந்திரங்க மேலதான் அவங்களுக்கு அதிக விருப்பம். சுபத்ரா தலைநிமிராமல் சப்பாத்தி மாவு பிசையத் தொடங்கினாள்.
அது கஷ்டம் இல்லையா? ஒருநாள் நானே முன்வந்து அவங்களை ஒரு வீடு வச்சு விளையாடக் கூப்பிட்டேன்.
நான் கேட்டிட்டுதான் இருந்தேன். கீழே க்ரவுண்டில் பாட்மிண்டன் விளையாடப் போகணும்னு சொல்லி அவங்க கீழே போறதையும் நான் பார்த்தேன். சுபத்ரா தலையுயர்த்திச் சொன்னாள்.


நான் ஒன்றும் பேசவில்லை. குழந்தைகளால் நிராகரிக்கப்படுவது அவ்வளவு சுகமான அனுபவம் அல்ல.
திடீரென்று சுபத்ரா வேலையை நிறுத்திவிட்டு தலை உயர்த்திக் கேட்டாள்: வீடு வெச்சு விளையாடறது உங்களுக்கு அவ்ளோ இஷ்டம்னா இதோ, சமையல் ரூம். இங்கே சப்பாத்தியும் புஜியாவும் செஞ்சு விளையாடலாமில்ல? எனக்காவது கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சிருக்கும்.
சுபத்ராவின் கண்கள் நிறைந்தன. நான் சமையலறையிலிருந்து பின் வாங்கினேன்.
அமாவாசை நெருங்கியபோது ப்ரீத்தியின் அம்மாவுடைய ஆஸ்த்மா அதிகமானது. ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். கமலாவைக் கூட்டிக்கொண்டு அவரைப் பார்ப்பதற்காகப் போனேன். ஜெனரல் வார்டின் நீளமான ஹாலில் கடைசி கட்டிலில் ப்ரீத்தியின் அம்மா படுத்திருந்தார். காலடியில் ப்ரீத்தி ஒரு சித்திரக்கதை வாசித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தாள். கையிலிருந்த அரை டஜன் சாத்துக்குடியை வெள்ளைப் பெயிண்ட் அடித்த இரும்பு மேசையில் வைத்தேன். மூக்கில் ஆக்சிஜன் ரப்பர் குழாய் வைக்கப்பட்ட ப்ரீத்தியின் அம்மா என்னைப் பார்த்து சிரிக்க முயன்றார். ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு கமலா ஆஸ்பத்திரியின் வராந்தாவை நோக்கி நடந்தாள். நின்று நின்று கால் வலித்தபோது ப்ரீத்தியின் அம்மாவிடம் விடைபெற்று வீட்டிற்குத் திரும்பினோம்.
ப்ரீத்தி என்ன சொன்னா? நான் கேட்டேன்.
பல தடவை தேங்க்ஸ் சொன்னா

எதுக்கு?
வந்ததுக்கு.
சுபத்ராதான் காலையிலும் சாயங்காலமும் தினமும் வர்றாளே.
அம்மாவும் கஞ்சி கொண்டு வர்ற பொண்ணும் மட்டும்தான் வர்றாங்களாம். வேற யாரும் வர்றதில்லையாம்.
நாம நாளைக்கும் வரலாம். நான் சொன்னேன்.
சட்டென்று கமலா என் கையைப்பிடித்து முத்தமிட்டாள்.
வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்கலாம் என்று படுத்த போதுதான் ப்ரீத்தியின் அம்மா இறந்துவிட்டார் என்று யாரோ வந்து சொன்னார்கள். இந்த முறை சுபத்ரா கமலாவை ப்ரீத்தியின் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போக எதிர்ப்புக் காட்டவில்லை. வெள்ளை சல்வாரும் கமீசும் அணிந்து கமலா சுபத்ராவுடன் படியிறங்கும்போது தான் கவனித்தேன்: சுபத்ராவின் தோள் வரை வளர்ந்து விட்டாள் கமலா. அவளின் வயிற்றில் ஒரு சின்ன கர்ப்பப் பாத்திரம் மலரக் காத்திருக்கிற தென்பதையும் திடீரென்ற நினைத்துக் கொண்டேன். இரவு முழுக்க மரணவீட்டில் சுபத்ராவும் கமலாவும் அடுத்த ஃப்ளாட்டின் சில பெண்களும் சேர்ந்து கண் விழித்திருந்தார்கள். ஏதோ தூரப் பிரதேசத்திலிருந்து ப்ரீத்தியின் அம்மாவின் அண்ணன் வருவதற்காக எல்லோரும் காத்திருந்தார்கள். காலையில் ப்ரீத்தியின் அம்மாவின் ஆபீஸிலிருந்து பத்திருபது பேர்கூட வந்து சேர்ந்தார்கள். இடைவழி பெரும்பாலும் சந்தடியற்றிருந்தது. அதன் மூலையில் அபார்ட்மெண்ட் குழந்தைகள் ஓசையில்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ப்ரீத்தியின் அம்மாவின் அண்ணனும் சில உறவினர்களும் ப்ரீத்தியின் அம்மாவின் வயதான பி.ஏ.வும் ஆபீஸிலிருந்து சிலரும் நானும் சேர்ந்து மின்மயானத்திலிருந்து திரும்பி வந்த போது இரவாகிவிட்டிருந்தது. கமலா அமைதியாக சாப்பாட்டு அறையின் மேசையின் முன்னால் ஒரு டம்ளர் பால் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பின்னால் நின்று சுபத்ரா அவளுடைய நீண்ட தலைமுடியைச் சீவிப் பின்னிக் கொண்டிருந்தாள். நான் உள்ளே நுழைந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்து அன்றைய தினசரிகளை அப்போதுதான் திறந்தேன். அம்மா சாப்பாட்டு அறையில் கமலா அழைத்தபோது செவிமடுத்தேன்:
அம்மா நாம - நானும் நீங்களும் ப்ரீத்தியும் எல்லாரும் சாகும்போது இப்படித்தான் இருக்குமா?


எப்படி? சுபத்ரா கேட்டாள்.
இப்படி. அதிகமா யாரும் வராம, அன்னிக்கு ப்ரீத்தியோட அப்பா இறந்தபோது எத்தனை கால்களை எண்ணினேன் நான்!
சுபத்ரா ஒன்றும் பேசவில்லை. குழந்தைகள் பிறவியிலேயே சோஷலிஸ்ட்டுகள்தான். சமத்துவமின்மை அவர்களை வேதனைக்குள்ளாக்குகிறது. சுபத்ரா படுக்கை அறைக்குச் சென்று இரவு உடை அணிந்து வெளியே வந்தாள். நான் ப்ரீத்திக்குத் துணையாய் படுக்கப் போறேன். சுபத்ரா கமலாவை முத்தமிட்டுச் சென்னாள்: மோளூ, இன்னைக்கு அப்பாகூடப் படுத்துக்கோ.
நான் செய்திகளை ருசித்தபடி கொஞ்சநேரம் இருந்தேன். கமலா பால் குடிப்பதை நிறுத்திவிட்டு சாப்பாட்டு அறையின் விளக்கை அணைத்து எங்களின் கட்டிலில் போய்ப் படுத்தாள். கொஞ்ச நேரம் கழித்து தினசரியை ஓசையுடன் கீழே போட்டு அன்றைய தினத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உறங்க நானும் தயாரானேன். படுக்கையறையில் சென்று கட்டிலின் ஓரமாய்ப் படுத்து கமலாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களின் பழைய ஃப்ரிட்ஜ் அவ்வப்போது திடுமென விழித்துக் கொண்டு புலம்புவதைத் தவிர வீடு மௌனமாயிருந்தது. திடீரென்று வருடங்களுக்கு முன்னால் என் தோள்களை வளைத்துக் கிடந்த அப்பாவின் கைகளின் பாரம்பரியம் எனக்குள் விழித்துக் கொண்டது. எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிற அதே ‘பி’ பாஸிட்டிவ் ரத்தத்தினுடைய பிடிவாதமும் அதுதான் - கமலாவைத் தொடவேண்டும். படுக்கையை சூடாக்கத் துவங்கியிருக்கும் அவளோடு இணைந்து கொள்ள இரட்டை வானவில்களைப் பார்த்தபடி நின்ற பையனின் பாரம்பரியம் என்னை முன்னால் தள்ளியது. என்னையே நான் ஒரு கான்வெக்ஸ் கண்ணாடியில் சிறிய உருவத்தில் படி யெடுத்துக் கிடத்தி யிருக்கிற என் மகளோடு உறவை ஸ்தாபிக்க என் கை நீண்டது. கண்கள் திறக்காமல், இன்னும் மூன்றாம் நம்பர் ஷுவிலிருந்து வளராத பிஞ்சுக் கால்களால், கமலா என்னை நெருங்க விடாமல் மார்பில் உதைத்துத் தள்ளினாள்.--------------------


என். எஸ். மாதவன் 1948 - ல் எர்ணாக்குளத்தில் பிறந்தார்.1975 - ல் ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்றார்.கேரள அரசின் வருவாய்த்துறையில் செக்ரட்டரியாக இருந்தார்.இப்போது மத்திய அரசுப் பணியில் இருக்கிறார்.1970 - ல் கல்லூரி மாணவர்களுக்காக மாத்ருபூமி நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘சிசு’ முதல் பரிசு பெற்றது. சூளைமேட்டுச் சவங்கள் (1981), ஹிக்விட்டா (1993) ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் பிரசுரமாகியிருக்கின்றன.சென்ற நூறு வருடங்களில் மிகச்சிறந்த பத்து மலையாளக் கதைகளில் ஒன்றாக ஹிக்விட்டா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. ஹிக்விட்டாவுக்கு 1994 - ல் பத்மராஜன் விருது அளிக்கப்பட்டது.இந்தச் சிறுகதை ஹிக்விட்டா தொகுப்பிலிருந்து.

Wednesday, June 2, 2010

கதை திரைக்கதை வசனம் மற்றும் ...

ஸ்ரீபதி பத்மநாபா


சில வாரங்களுக்கு முன் 'காளிதாசன் விவரித்த கள்ள சந்நியாசி' பி.வி.மேனன் பற்றி சொல்லியிருந்தேன். நான் கணினியியல் படித்துக்கொண்டிருந்தபொழுது அவன் எனக்கு சீனியர். அவன் இளங்கலை மேலாண்மையியல் படித்துக்கொண்டிருந்தான்.

கல்லூரியில் எல்லோரிடமும் என்னை பார்த்து ஒரு மரியாதை கலந்த பயம் இருந்தது. இவன் எப்படியேனும் சினிமாவில் பெரியாளாகிவிடுவான் என்று எல்லோருக்கும் பயம். வகுப்பறைக்கு வரும்போதே ஒரு குவார்டர் பாட்டிலோடுதான் வருவான். ஆனால் முதல் பெஞ்சில்தான் உட்காருவான். இரண்டு முறை சென்னைக்கு திருட்டு ரயில் ஏறி திரும்பி வந்தவன். ஆனால் பாடத்தில் சுட்டி. சிஸ்டம் அனாலிசிஸ் பேப்பரில் மூன்று மணி நேரத்தில் எண்பத்தெட்டு பக்கங்கள் எழுதி எண்பத்தெட்டு சதமானம் மதிப்பு எண்கள் வாங்கியவன். உழைப்பின் விஷயத்தில் ஒரு குட்டி ஜெயமோகன் என்றே சொல்லலாம்.

பட்டப்படிப்பு முடிந்தபிறகு என் நெருங்கிய நண்பர்கள் முடிவு செய்தபடி திருப்பூரில் கணினி சம்பந்தமான தொழில் செய்வது என முடிவெடுத்தோம். என் நண்பர்கள் என் மீது மிக நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஏனென்றால் கணிப்பொறியியல் இறுதியாண்டில் என் ப்ராஜெக்ட் தான் பல்கலைகழகத்தில் முதல் மதிப்பெண்ணை பெற்றிருந்தது. நுண் மென் சாளரங்களும் மூஷிகனும் இல்லாத அந்த காலத்திலேயே ஆர்டிபிசியல் இண்டல்லிஜன்சில் ப்ராஜெக்ட் செய்திருந்தேன். நுண் மென் சாளரங்கள் என்றால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் , மூஷிகன் என்றால் மௌசிகன் என்கிற மௌஸ்.

நண்பர்கள் என்னை நம்பி முதலீடு செய்ய தயார். ஒரே ஒரு நிபந்தனை. நான் சென்னை இருக்கும் திசையில் தலை வைத்து படுக்க கூடாது. ஐந்து நண்பர்கள் சேர்ந்து திருப்பூரில் வன்பொருள் மற்றும் மென்பொருள் நிறுவனம் துவங்கினோம். மூன்று நண்பர்கள் பிரபல கணினி நிறுவனத்தின் வன்பொருள்களை விநியோகம் செய்வது என்றும் நானும் இன்னொரு நண்பனும் மென்பொருள் துறையை கவனித்துக்கொள்வது என்றும் தீர்மானமானது. மென்பொருள்துறை தற்காலம் போல ஏற்றம் பெற்ற துறையாக அப்போது இருக்கவில்லை.

திருப்பூரின் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு எக்ஸ்போர்ட் டாகிமேண்டஷன் என்பது சிம்ம சொம்மனப்பாயிருந்தது. Proforma, Bill of Lading, Shipping Bill இப்படி ஐம்பதுக்கும் மேலான ஆவணங்கள் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் சமர்ப்பிக்க வேண்டும். ஒரு மில்லிமீடர் பிழை இருந்தாலும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நிறுவனம் நிராகரித்துவிடும். அதனால் அதற்கான மென்பொருள் தயார் செய்வது என்றும் அதன் மூலமாக மென்பொருள் துறையில் ஒரு அடி கல்லாகவோ ஒரு மைல் கல்லாகவோ மாறிவிடுவது என்றும் முடிவு செய்தோம்.

ஆறு மாதங்கள் அதற்காக உழைத்து ஒரு பிரபல நிறுவனத்திடம் செய்முறை விளக்கம் அளிப்பதற்கான நாள் நெருங்கிகொண்டிருக்கும்போதுதான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.

எங்களுக்கு முன்பே திருப்பூருக்கு வந்து ஒரு பின்னலாடை நிறுவனம் நடத்திகொண்டிருக்கிறான். என்னை தேடி கண்டுபிடித்து அழைத்துவிட்டான். அவன் அலுவகத்துக்கு போனபோது மலையாளத்திலேயே பேசினான். தீவிரமான விஷயங்கள் என்றால் என்னிடம் மலையாளத்தில் பேசுவது அவன் வழக்கம்.

இரிக்கு... சாப்ட்வேர் இலானோ இப்போ களி? என்றான்.

அதே என்றேன்.

சினிம எல்லாம் மதியாக்கியோ என்றான்.

போகணம். சமயம் வரட்டே என்றேன்.

நமுக்கு ஒரு சினிமா செய்தாலோ? என்றான்.

நான் அவனை கூர்ந்து பார்த்தேன். எதாவது 'கம்பி' படத்துக்கு அடிபோடுகிரானோ கள்ள சந்நியாசி என்று யோசித்தேன். கம்பி படம் என்றால் பலான படம்.


நான் உறைந்து போய் உட்கார்ந்திருந்தேன்.

ஒரு பெமினிஸ்ட் பிரயோகம் ஆயால் நன்னு என்றான்.

இன்னும் உறைந்து போய்விட்டேன். குருவாயுவூர் கிருஷ்ணன் அருள் புரிகிறானா?

நல்ல ஒரு கத உண்டல்லோ பி.வீ! என்றேன்.

ஒரு நல்ல ஹீரோயின் சப்ஜெக்ட். 'ஒரு யுகம்' என்னானு டைட்டில். ஒரு வேசியுடே ஒரு நாள். அன்னு நடக்குன்ன சம்பவங்களானு.
பக்ஷே கிளைமாக்சில் மாத்ரமானு ஒரு பெட்ரூம் சீன் வருன்னது.
வீட்டு சிலவினு வேண்டி ஆரே என்கிலும் கிட்டான் வேண்டி அவள் அலையுன்னு. பக்ஷே ராத்ரி வரே ஆரேயும் கிட்டுன்னில்ல. ஆ அலைச்சலானு படம் முழுவன். ஒடுக்கம் (கடைசியில்) அவளுடே விகலாங்கனாய (ஊனமுற்ற) பர்தாவுமொத்து (கணவனுடன்) குறச்சு கஞ்சி கழிச்சு சுகமாய் கிடன்னு உறங்குன்னு...

கிரேட் என்றான். ஆரானு ஹீரோயின் என்று கேட்டான். மலையாளத்தில் அப்போது ஓரளவு பிரபலமாயிருந்த அவளுடைய பெயரைக் குறிப்பிட்டேன்.

'சுவீதா!'
'வெரி குட்' என்றான்.

அடுத்த வாரம் 'அந்த புரத்தில்' உள்ள அவளுடைய வீட்டுக்கு கதை சொல்ல சென்றேன். அவளுக்கு வளரே இஷ்டமாயி. களைத்து போய் ஆயுதம் இழந்து நிற்கும் நிலையில் 'இன்று போய் நாளை வா' என்று கருணை கூர்ந்தாள்.

அதற்கு அடுத்த வாரம் எர்ணகுளத்தில் ப்ரொடியூசர் பி.வி.மேனோனுடன் சந்திப்பு. நான் எர்ணகுளத்தில் காத்திருந்தேன். பி.வீ. ஒரு ஹோட்டலுக்கு வரச்சொன்னான். பல ஆயிரம் நட்சத்ரங்கள் பெற்ற ஹோட்டல். அங்கு லானில் பி.வீயும் கருணையுள்ளம் கொண்ட சுவீதாவும் தவிர வேறொரு கதாபாத்திரமும் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு அந்நியன், விதேசி. மூவரும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்கள். சுவீதா என்னை கண்டதும் வரூ கதாகிருத்தே என்றாள். அந்நியன் பி.வீயின் கஸ்டமர். மொராக்கோ விலிருந்து வந்திருந்தான். சிறிது நேரத்தில் அவனிடம் சுவீதா எதோ செவியோதினாள். இருவரும் கிளம்பி சென்றார்கள். நானும் பிவீயும் அப்சொலயுட் வோட்காவை மிக சரியாக சுவைத்துகொண்டிருந்தோம். சிறிது நேரம் கழிந்து பேரர் வந்து பிவீயின் செவியோதினான். வாடா போலாம் என்றபடி ஆயிரம்
நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திர அறைக்கு அழைத்து போனான்.

அறைக்குள் ஒரு அரைக்கால் சராயோடு அமர்ந்திருந்தான் அந்நியன். அவளை காணவில்லை. பீவீயிடம் 'உனக்கு ஆர்டர் கொடுத்த டி ஷர்டை அணிந்து வர சொல்லியிருக்கிறேன் அவளிடம்' என்றான் அந்நியன். அவள் குளியல அறையிலிருந்து வெளியே வந்தாள். ஆங்கில எழுத்துக்களை கலைத்து போட்டு அதன் மேல் ஒரு நாய்குட்டியின் முகம் அச்சிடப்பட்ட ஒரு டி ஷர்ட். கீழே ஜீன்ஸ். அந்நியனுக்கு புராடக்ட் பிடித்து விட்டது போல. முகத்தில் மகிழ்ச்சி தெறித்தது. கூடவே கையில் பிடித்திருந்த வோட்காவின் குறும்பும் கொப்பளித்தது. டி ஷர்டை சுட்டி காட்டி கொஞ்சம் மேலே தூக்கமுடியுமா டியர் என்றான். சுவீதா டி சாடை கொஞ்சம் சுருட்டி மேலே உயர்த்தினாள் - தொப்புள் தெரிந்தது. அந்நியன் என்னை திரும்பி பார்த்து ஹவ் ஈஸ் இட் என்றான். வெரி குட் என்றேன். நோ நாட் குட் என்ற படி இன்னும் கொஞ்சம் மேலே உயர்த்த சொன்னான். இப்போது பீவீயை பார்க்கிறான். அவன் வெரி குட் சொன்ன போதும் திருப்தியாகவில்லை அந்நியனுக்கு. சுவீதா பொறுத்து பார்த்து மார்புகளில் பாதி தெரிவது வரை உயர்த்தி நிறுத்தினாள். அந்நியனுக்கு இப்போதுதான் வெரி குட்.

நண்பர்கள் என்னை கடுமையாக வைது கொண்டிருந்தார்கள் - தொழிலில் சிரத்தை இல்லாமல் இருப்பதற்காக. நான் அவர்களை அலட்சியமாக பார்த்துக்கொண்டிருந்தேன். இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. நான் பீவீயின் அலுவலகத்துக்கு போனேன். புதிதாய் ஒரு கார் நின்றிருந்தது. பீவீ பிசியாயிருந்தான். காத்திருந்து அறைக்குள் போனேன்.

வாடா ஸ்ரீ ! நானே கூப்படும்னு இருந்தேன். அந்த டி ஷர்ட்ல நல்ல லாபமடா. நீயும் சுவிதாவும் நல்ல ஹெல்ப் பண்ணீங்க. முதல்ல முழு டி ஷர்டுக்குதான் ஆர்டர் குடுத்து அக்ரீமென்ட் போட்டிருந்தான் அந்த பையர். சுவிதாவ பாத்து ஜொள்ளு விட்டு கால் வாசியா குறச்சிட்டான். விலைய மாத்தவே இல்ல. அவ்வளவு துணி நமக்கு லாபம்.
என்றபடி ஒரு நோட்டுக்கட்டை மேசையிலிருந்து எடுத்து 'பத்தாயிரம் இருக்கு, செலவுக்கு வச்சுக்கோ' என்றான்.

அப்போ 'ஒரு யுகம்?' என்று கேட்டேன்.

சினிமாதானே, எடுக்கலாம்டா, இன்னும் ஒரு ரெண்டு மூணு பிசினஸ் நடக்கட்டும். என்றான்.

கதை திரைக்கதை வசனம் நான் எழுதினேன் என்றாலும் 'இயக்கத்தில்' அவன் தான் பெரிய ஆள் என்று உணர்ந்து கொண்டேன், மட்டுமல்லாமல், இயக்குனர் ஆவதற்கு கலையுடன் கூடவே பிசினஸ் மேநேஜ்மன்ட்டும் அவசியம் என்பதையும்.

Monday, May 24, 2010

பாரடி நீ மோகினி ! - ஸ்ரீபதி பத்மநாபா

பாடலாசிரியர் ஆவது எப்படி என்னும் 'dummies' பாடம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளுகிறேன். நானும் ஒரு 'dummy' தான் என்றபோதிலும்.

கட்டுரையின் தலைப்பில் உள்ள முதல் வார்த்தை தமிழ் 'பாரடி' அல்ல. ஆங்கில parody. தமிழில் பகடி என்று எளிமையாக மொழிபெயர்க்கலாம். ஏற்கனவே வெளிவந்து பிரபலமான ஒரு பாடலை பகடி செய்து எழுதி பார்ப்பதுதான் parody. அங்கதமே அதன் அடிப்படை அலகு.
கேரளத்தில் 'பாரடி' ஒரு நல்ல குடிசை தொழிலாகவே வளர்ந்து வந்திருக்கிறது - மிமிக்ரியை போல. எந்த ஒரு புது பாடலையும் உடனே 'பாரடி' செய்து ஒரு கேசட்டை இறக்கி விடுவார்கள்.

இதுதான் பாடலாசிரியன் ஆவதற்கான பயிற்சியின் முதல் படி! உதாரணமாக 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலை ஒரு 'dummy' பகடி செய்தால் எப்படி இருக்கும் என்று பார்ப்போமா?

காலங்களில் அவள் கோடை / கலைகளிலே அவள் கராத்தே / மாதங்களில் அவள் சித்திரை / மலர்களிலே அவள் ஊமத்தை!

பறவைகளில் அவள் கௌதாரி / பாடல்களில் அவள் ஒப்பாரி / கனிகளிலே அவள் பப்பாளி / காற்றினிலே அவள் சூறாவளி /
பேய் போல் சிரிப்பதில் வில்லி / அவள் சனி போல் அணைப்பதில் கில்லி / நெருப்பை வளர்ப்பதில் எண்ணெய் / அவள் கிறுக்கன் ஆக்கினாள் என்னை !

கல்லூரி காலங்களில் பலர் அவரவர்களின் காதல் வளர்வதற்காக 'பாரடி' பாடல் புனைந்துதவ என்னை அணுகுவதுண்டு. நானும் நிறைய எழுதி கொடுப்பேன், பெரும்பாலும் காதலியின் பெயரை பதிலீடு செய்து கொடுத்தால் போதுமானதாயிருக்கும். சேது ராமசாமிதான் அவர்களிலிருந்து வேறுபட்டு காதல் தோல்விக்காக என்னிடம் 'பாரடி' எழுதி தர சொல்லி கேட்டவன். அப்போது 'மண்ணில் இந்த காதலன்றி' பாடல் காதலர்களின் தேசிய கீதமாக இருந்தது. 'பாவலர் வரதராசன்' என்ற புனை பெயரில் கங்கை அமரன் எழுதிய பாடல் அது என்று கேள்விபட்டிருக்கிறேன். கங்கை அமரனின் பாடல் திறமை மீது மேலும் நம்பிக்கை வந்த காலம் அது.
சேது ராமசாமி ஒரு நாள் என்னிடம் வந்து 'எனக்கு இந்த பாட்டை மாத்தி குடு' என்றான் முழு போதையில். 'எல்லாமே ஆப்போசிட்டா இருக்கணும். எனக்கு இந்த காதலை பத்தியும் பொண்ணுகள பத்தியும் நெனச்சாலே கொமட்டீட்டு வருது' என்று கல்லூரி வாசலில் வாந்தி எடுத்தான். அவன் ஒரு நல்ல பாடகன் கூட. காதலை பற்றியும் பெண்களை பற்றியும் என் கருத்தியல் வேறானது என்றாலும் அவனுக்காக எழுதி கொடுத்தேன். (ஒரு பாடல் ஆசிரியன் ஆவதற்கு இந்த குவாலிட்டி மிக அவசியம்.)

அன்று இரவு நண்பர்கள் சபையில் அவன் அந்த பாடலை பாடினான்.
மண்ணில் இந்த காதல் என்னும் போதை என்று தீருமோ / என்று கன்னிப் பாவை என்னும் பேயின் ஆட்டம் ஓயுமோ / பெண்மை என்னும் சாத்தான் வேதம் ஓதுது / உண்மை என்று நம்பி கூட்டம் கூடுது

வெட்டிப்பயல் வேலையத்தவன் தின்னுட்டு ஊரைச்சுத்தும் சொத்தைப்பயல் சோம்பல் உள்ளவன் அத்தனை நபர்களும் பித்தம் தலைக்கேரியிறங்க சிந்தனை மழுங்கிட சுத்தி வந்து சொல்லும் ஒரு சொல் பெண் எனும் ஒரு விஷம் / கன்னியிவள் இருந்தால் சனி தான் பிடிக்கும் / கன்னித்துணை இழந்தால் அதுவும் விலகும் / முடி முதல் அடி வரை முழுவதும் விஷம் தரும் ஒரு பெரும் புதிரினை படைத்தது அவன் தவறே....

(மூன்று முறை மூச்சு வாங்குவது போல் நடித்தான்)

கத்தியென குத்தும் விழிகள் கட்டிலில் விழுந்ததும் கட்டியவன் காதில் மந்திரம் ஓதிடும் இதழ்களும் புற்றிடையும் புன்னகையுமே புத்தியை மயக்கிடும் கற்றிருந்த கல்வி முழுதும் கணத்தில் மறந்திடும் / இதை எண்ணுவதர்கா உனக்கோர் பிறவி? / இவளிடம் பணிந்தான் அவனா துறவி?
...


பாடலை அவன் முடிக்க முடியவில்லை! தர்ம அடி! பெரும்பாலும் அப்போதுதான் காதலில் விழுந்தவர்களின் சபையில் இப்படியொரு பாடலை பாடலாமா? ரணகளம்! அதிலிருந்து இந்த 'பாரடி'யை மறந்துவிட்டேன்.


சில ஆண்டுகளுக்கு பிறகு இசைத்தொகுப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, சங்கரின் (சுதேசமித்திரன்) உத்தி ஒன்று எனக்கு பிடித்தமானதாயிருந்தது. சங்கரும் இரண்டு இசைதொகுப்புகள் எழுதியிருந்தான். 'கண்களில் நாணேற்றி அம்பு எய்து காவியம் பாடும் என் காதல் தேவி' என்ற பாடல் எனக்கு பிடித்திருந்தது. அப்போது பிரபலமாயிருந்த யேசுதாசின் மலையாள பாடலான 'சிந்துவில் நீராடி ஈறனாயி' என்ற பாடலின் மெட்டை எடுத்து அதற்கு புதிய வரிகளை எழுதி இசை அமைக்கும் சுரேஷிடம் மூல மெட்டை கூறாமல் புதிய இசை அமைக்க சொன்னபோது ஒரு நல்ல புதிய பாடல் கிடைத்துவிட்டது.

என் சகோதர உறவுமுறையினரும் மலையாளத்தின் பிரபலமான பாடல் ஆசிரியரும் இசைக்கலைஞருமான கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரியின் சில பாடல்களை எடுத்துக்கொண்டு அதே மெட்டில் வேறொரு சூழ்நிலையை யோசித்து அதற்கு வரிகளை எழுதி சுரேஷிடம் கொடுத்து புது மெட்டு அமைக்க சொன்ன போது நல்ல பாடல்கள் உருவாக ஆரம்பித்தன. அந்த வரிகளை மலையாளத்தில் கைதப்ரத்திடம் சொல்லிக்காட்டுவேன். அவருக்கு மிகப்பிடித்த என்னுடைய சில வரிகள்:

மலைச்சாலை போகும் வரை போகும் மனதில்
இன்னும் உள்ளது இரவின் மிச்சங்கள்
எது பாதை புரியாத போதும்
எதிர்பார்ப்பு எதுவானபோதும்
எனை மூடும் பனிமூட்டம் எல்லாம்
விலகும் உன் விழி வீசும் ஒளியால்...

அது மட்டுமல்லாமல் எனக்கு பிடித்த அவருடைய சில வரிகளை தமிழ்படுத்தி அவருடைய அனுமதியுடன் உபயோகித்ததும் பாடல் எழுதும் பயிற்சியின் ஒரு அங்கமாயிற்று. 'குஞ்சி கிடாவின்னு நல்கான் அம்ம நெஞ்சில் பாலாழி ஏந்தி' என்னும் அவருடைய புகழ் பெற்ற வரியை தமிழில் வேறொரு மெட்டில் இப்படி மாற்றி எழுதியிருந்தேன்: 'பசிக்கின்ற போது அமுதினை ஊட்ட பாற்கடல் நெஞ்சில் ஏந்திய தாயே'
இவை மட்டுமல்லாமல் இலக்கணப் பயிற்சி, மரபு கவிதைகளில் பயிற்சி போன்ற மொழி சார்ந்த அறிவுகளும் கூடவே கொஞ்சம் அந்நிய மொழி தேர்ச்சியும் பொது அறிவும் அறிவியல் மற்றும் புள்ளியியல் அறிவும் தமிழ் சினிமா பாடல் ஆசிரியன் ஆவதற்கு மிக மிக அவசியம். பியூட்டிக்கு சமமாக டியூட்டியோ ஸ்வீட்டியோ போட தெரிய வேண்டும். டூயட் பாடலில் 'செவ்வாயில் காற்றே கிடையாது... அது யாருக்கும் தெரியாது... காதலர்களின் கண்ணீரும் அது போல யாருக்கும் தெரியாது...' என்று எழுத தெரிய வேண்டும்.

மிக முக்கியமானது எழுத போகும் பாடலின் பாத்திரத்தின் தன்மை என்ன, அதை ஏற்று நடிப்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வது.

உதாரணமாக, உங்களுக்கு சினிமா பாடல் ஆசிரியனாக ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம். இயக்குனர் கதையை விவரித்து, குறிப்பிட்ட பாடலின் சிச்சுவேஷனையும் சொல்லிவிட்டார்.
சிச்சுவேஷன் இதுதான்:

நாயகி தன் சோகச்சுமைகளை நெஞ்சுக்குள் தாங்கியபடி ஊமைக்குயிலாய் பாடும் ஒரு பாடல்.

இசை அமைப்பாளர் 'தத்தகாரத்தை' சிடியில் கீபோர்ட் ட்ராக் கொடுத்துவிட்டார். நீங்களும் ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து ஒரு பாடல் எழுதி விட்டீர்கள். நன்றாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் இயக்குனரும் இசை அமைப்பாளரும் நமட்டு சிரிப்பு சிரித்தபடி வேறு வரிகள் எழுதிகொண்டுவாருங்கள் என்கிறார்கள். வரிகளில் என்ன குறை என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது.
'சொந்த சுமையை தூக்கி தூக்கி சோர்ந்து போனேன்' என்று நன்றாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். சோக ரசம் நன்றாகவே தளும்புகிறது. ஆனால் கதாநாயகியாக அபினயிப்பவர் யாரென்று நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை!நமீதா!

Sunday, May 23, 2010

தி போலீஸ் ஸ்டோரி- ஸ்ரீபதி பத்மநாபா

ஆரண்யம் இலக்கிய இதழை நடத்தி கையை சுட்டுக்கொண்டு, அதற்கு தீனி போட்டுக் கொண்டிருந்த மஹாகவி வரைகலை நிலையத்தை நடத்த முடியாதபடிக்கு ஒரு விபத்தில் சிக்கி ஆறு மாதங்கள் பணிகள் எதுவும் செய்யாமலிருந்து, முதல் குழந்தையை இழந்து நின்றுகொண்டிருந்த சோதனைக் காலம்.

எப்படியாவது ஆரண்யத்தை திரும்பவும் கொண்டுவந்துவிட வேண்டும் என்று தீவிரமாக யோசித்து வரைகலைப் பணிகளில் மீண்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் நெடுங்கால நண்பன் இளமாறன் ஒரு திட்டத்தோடு வந்தான். கேரளாவில் அவன் செய்யப்போகும் வியாபாரத்தில் உறுதுணையாக இருக்கவேண்டும். ஆறே மாதத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்துவிடலாம். ஒரு நல்ல பங்கு எனக்கும் கொடுப்பான்.
அப்படி என்ன தொழில்? லாட்டரித் தொழில். தெருத்தெருவாக 'நாளெ.. நாளெ.. பூட்டான் பூட்டான்' என்று லாட்டரி விற்பதல்ல; அந்த லாட்டரிச் சீட்டுகளை உற்பத்தி செய்து நடத்தும் நிறுவனம் தொடங்குவது. தமிழ்நாட்டில் தொழில் செய்த அனுபவம் அவனுக்கு இருந்தது. ஒரு நல்ல தொகை கைக்கு வந்தால் மீண்டும் ஆரண்யம் துவங்கலாமே என்றொரு நப்பாசை எனக்கு. சம்மதித்தேன். புலவர்க்கழகு புரவலருடன் சேர்ந்தொழுகல் தானே?
தமிழ்நாட்டில் லாட்டரி தடைசெய்யப்பட்ட பிறகு இங்கு அந்தத் தொழில் நடத்திக்கொண்டிருந்தவர்கள் எல்லோரும் கேரளாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். அங்கே லாட்டரித் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான். அரசாங்கத்துக்கு எப்படி தண்ணி காட்டுவது என்பதில் அவர்களுக்கு இருக்கும் நிபுணத்துவம் பிரமிக்கவைப்பது.
ஒரு நம்பர் லாட்டரியை நீங்கள் வாங்கிப் பழகிவிட்டீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுவது நெம்ப கஷ்டம். அந்த அளவுக்கு போதை வஸ்து அது. லாட்டரி சீட்டில் இருக்கும் எண்ணின் கடைசி இலக்கத்தை வைத்து விளையாடும் லாட்டரி அது. அதன் பயங்கரத்தை உணர்ந்த அரசு அதை இந்தியா முழுக்க தடை செய்துவிட்டது.

நமக்கா வழி தெயாது? கடைசி இரண்டு இலக்கங்களை வைத்து பரிசு கொடுக்க ஆரம்பிக்கிறோம். அரசு அதிகாரிகளும் இது பிரச்சினையில்லாத லாட்டரி என்று அனுமதி கொடுத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு பாவம் அந்த அளவுக்கு படிப்பறிவில்லை - இதுவும் ஒரு நம்பர் போன்றதுதான் என்று. ஒவ்வொரு கடையிலும் அரை மணிக்கொரு முறை வரும் லாட்டரி முடிவுகளுக்காக கடைகளின் அறைகளில் கூட்டம்கூட்டமாக அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் மனிதர்கள்... ஒவ்வொருவர் கையிலும் அடித்துத் திருத்தி எழுதப்பட்ட எண்கள் எழுதிய அட்டவணைகள் கொண்ட கசங்கிய நோட்டுப்புத்தகங்கள்... எளிமையானவர்களின் லலிதமான புரோபபிலிட்டி அன்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ்..! சிஸ்டம் அனாலிசிஸ் அன்ட் ரிசர்ச்...!
இளமாறன் ஆரம்பிக்கப் போகும் லாட்டரி நிறுவனத்தின் மேலாளராக நான் பொறுப்பெடுத்துக் கொண்டேன். அலுவலகம் பாலக்காட்டில் என்றாலும் பதிவு செய்யப்பட்டது கேரளத்தின் வடகோடியில் உள்ள காசர்கோட்டில். எல்லா லாட்டரி நிறுவனங்களும் அங்கேதான் பதிவு செய்யப்பட்டிருக்கும். ஏனென்றால் மிக பின்தங்கிய மாவட்டம் அது. அங்கு பதிவு செய்தால் அதிக தொந்தரவு இருக்காது. விற்பனை வரியை மிகக்குறைந்த கையூட்டில் விழுங்கிவிடலாம்.

விற்பனையைத் துவங்குவதற்கு முன் கேரளத்திலிருக்கும் எல்லா ஏஜென்டுகளையும் சென்று பார்த்து அறிமுகம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. நானும் இளமாறனும் காரில் காசர்கோடு துவங்கி கண்ணூர் மலப்புறம் கோழிக்கோடு பாலக்காடு திருச்சூர் எரணாகுளம் ஆலப்புழை பத்தனம்திட்டா திருவனந்தபுரம் என ஒரு நீண்டதூரப் பயணம் சென்றோம் ...

அப்போதுதான் தெரிந்தது... எப்படிப்பட்ட ஒரு தாதா சாம்ராஜ்யத்துக்குள் நுழைந்திருக்கிறோம் என்பது. பெரும்பாலும் தமிழர்கள் கோலோச்சிக் கொண்டிருக்கும் வியாபாரம். படிப்பறிவைவிட பட்டறிவின் ஆளுமை அவசியம். கோடிக்கணக்கில் பணம் புரளும் தொழில் என்பதால் உயிருக்கு விலையில்லை. போட்டியாளன் எப்போது வேண்டுமானாலும் போட்டுத் தள்ளிவிடுவான்.

ஆரண்யத்துக்காக கேரளத்தின் எல்லா மாவட்டங்களையும் சுற்றிப் பார்த்து பாரம்பர்ய அடிப்படையிலான ஒரு கட்டுரைத் தொடர் எழுதவேண்டும் என்றொரு ஆதர்சம் எனக்கு இருந்தது. இப்போதைய பயணத்தில் எண்களுடனும் தொகைகளுடனும் அலைபேசி அழைப்புகளுடனும் சேர்ந்து கலந்து அது ஒரு ஏக்கக் கனவாகவே கரைந்துவிட்டிருந்தது.

லாட்டரி துவங்க வேண்டிய நாளும் நெருங்கிவிட்டது. நான் திருச்சூரில் இருந்தேன். ஒரு வாரத்துக்கான 21 லட்சம் லாட்டரி சீட்டுகள் இன்று பாலக்காட்டுக்கு வந்திருக்கும். நாளையிலிருந்து எல்லா ஊர்களுக்கும் விநியோகம் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்களில் முதல் குலுக்கல். பாலக்காடு அலுவலகத்திலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு.

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து எல்லா லாட்டரி சீட்டுகளையும் கைப்பற்றி அலுவலகத்துக்கு சீல் வைத்துவிட்டு முதலாளி இளமாறனையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். நான் உடனே செல்ல வேண்டும். டிரைவரை அழுத்திப் பிடிக்கச் சொல்லி மாலை நேரத்தில் பாலக்காடு வந்து சேர்ந்தோம்.

அலுவலக ஊழியர்கள் தெருவில் நின்றுகொண்டிருந்தார்கள். இளமாறனின் அலைபேசி அணைக்கப்பட்டிருந்தது. உடனடியாக காவல்துறை உயரதிகாரியின் அலுவலகத்துக்குப் போகச் சொன்னார்கள். அங்கே கீழ்தளத்தில் ஒரு மூலையில் இளமாறன் நிற்கவைக்கப்பட்டிருந்தான். அருகில் சென்றேன். ஏற்கனவே லாட்டரி நடத்திக் கொண்டிருக்கும் நான்கு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தின் முதலாளி செய்த வேலையாம் இது. எங்கள் நிறுவனத்தின் பதிவு சான்றிதழ் காசர்கோட்டிலிருந்து மறுநாள்தான் வந்து சேரும். இன்றைக்கே லாட்டரி சீட்டுகள் வந்துவிட்டதைத் தெந்து கொண்ட எதிராளி போலீஸ் செல்வாக்கைப் பயன்படுத்திவிட்டான். அனுமதியில்லாத லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுவிட்டன. இன்னும் இளமாறன் மீது எஃப்ஐஆர் போடவில்லை. நான் மேல்தளத்தில் உயரதிகாரியின் அறைக்குச் சென்றேன். வெளியே காத்திருக்கச் சொன்னார்கள்.

காத்திருந்தேன். என் அம்மா சரசுவதி டீச்சர் என் முன்னால் வந்து நின்று, 'எவ்வளவு பதவிசா இலக்கிய இதழெல்லாம் நடத்தி மரியாதையோட வாழ்ந்திட்டிருந்த... இங்க வந்து நின்னுட்டிருக்கியே... வெக்கமா இல்ல?' என்றார். மனைவி சரிதாவும் முன் வந்து நின்று, 'கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சிட்டு அமேரிக்கயிலோ அபுதாபியிலோ போயி சம்பாதிக்கான் நோக்காதெ இவிட வந்நு நில்கான் நாணமில்லே ஸ்ரீயேட்டா?' என்றாள். பெல் அடித்தவுடன் தலையைக் குனிந்தபடி உயரதிகாரியின் அறைக்குள் சென்றேன்.

மலையாள நடிகர் திலகனை போலீஸ் சீருடையில் பார்த்திருக்கிறீர்களா? அவரையே வார்த்து வைத்ததைப் போல கம்பீரமாக அமர்ந்திருந்தார் அந்த உயரதிகாரி. ஐம்பது வயதைக் கடந்தவர். 'பாண்டிகளெல்லாம் இவிடெ வந்நு லோட்டரி என்னு பேரும் பறஞ்ஞு நம்முடெ கவண்மென்டின்டெ பைசயும் ஜனங்களுடெ பைஸயும் கட்டுகொண்டு போகுந்நு. அதினு நீயெல்லாம் கூட்டு. அல்லேடோ?' என்று 'கலிதுள்ளி'னார். 'இல்ல சார். இது கவர்மென்ட் அங்கீகிருதம் உள்ளதாணு சார். நாளெ ராவிலே சர்டிபிகேட் எத்தும் சார்.' என்றேன். 'இந்நு இல்லல்லோ... அதினு எந்து செய்யும்' என்றார். 'சார் வேண்டது எந்தாந்நு வெச்சா செய்யாம் சார்' என்றேன். 'ஓ... மற்றேது... அல்லே...?' என்றார். 'ஞான் பைச மேடிக்குமெந்நு ஆராடோ பறஞ்ஞது?' என்றபடி கோபமாக எழுந்து முன்னால் வந்தார். 'என்னெ கண்டா அத் தரக் காரனாணு எந்நு தோனுந்நுண்டோ?' என்றபடி என் தாடையில் கைவைத்து நிமிர்த்தினார். 'இல்ல சார், குறே பைச செலவு செய்தாணு ஈ பிசினஸ் துடங்கியிட்டுள்ளது. சார் ஒந்நு சஹாயிக்கணம்' என்றேன். 'ம்... ரோபர்ட்டே...' என்று உள்ளே பாத்து கூப்பிட்டார். உளளே இருந்து ரோபர்ட் வந்தான். எதிர் லாட்டரி நிறுவனத்தின் ஆள். 'ஈயாள் மாசம் மூணு லட்சம் ஆணு தருந்நது. தான் எந்து தரும்?' என்று கேட்டார். 'சார் இப்பழாணு துடங்கியிட்டுள்ளது. என்டெ 'போஸி'னோடு சம்சாரிச்சு பறயாம் சார்' என்றேன். 'வில பேசல் ஒன்னும் வேண்டா. மாசம் ரண்டு லட்சம். இந்நு தன்னே வீட்டில் கொண்டு வந்து தரணம். காசு தந்நிட்டு ஆ பாண்டியெ விளிச்சிட்டு போய்க்கோ. அல்லெங்கில் இந்நு லோக் அப்பில் கிடக்கட்டெ' என்றார். 'ஞான் இப்பம் வராம் சார்' என்றபடி கீழே ஓடினேன்.

(அடுத்த மூன்று மணி நேரங்களுக்குள் இரண்டு லட்ச ரூபாயை இளமாறனின் வீட்டிலிருந்து வரவழைத்து அவரிடம் ஒப்படைத்துவிட்டு இளமாறனையும் அழைத்துக்கொண்டு அலுவலகம் வந்தேன். அடுத்த ஒரு மாதத்திலேயே கேரள அரசு தனியார் லாட்டரிகளை தடை செய்து விட்டது. அறுபது லட்ச ரூபாய் நஷ்டம் இளமாறனுக்கு. செய்த வேலையும் ஆரண்யம் கனவும் எனக்கு நஷ்டம்.)

அதற்கடுத்த இரண்டாம் நாள் நான் கோவைக்கு வரவேண்டியிருந்தது. இளமாறன் பாலக்காட்டிலேயே இருந்தான். பஸ்ஸில் வந்து இளமாறனின் வீட்டுக்குச் சென்று அவனுடைய பைக்கை எடுத்து என் வீட்டுக்கு சென்றேன். வழியில் 'ஒந்நு பூசிக் களயாம்' என்று தோன்றியதால் பாரில் நிறுத்தினேன். இரவு 10 மணியாகி விட்டது. கம்பெனிக்கு யாரும் இல்லை. காழ் ழிட்டர் பிழாந்தியும் காழ் கிழோ சிக்கனையும் அகத்தில் ஆக்கிவிட்டு வெளியே வந்தேன். காந்திபார்க்கில் வளைவில் போலீசில் மாட்டிக் கொண்டேன்.

டிரங்க் அன்ட் டிரைவன் !

ஒரு வார்த்தை கூட கேட்காமல் சார்ஜ்ஷீட் எழுதிவிட்டார் சார்ஜன்ட். 1200 ரூபாய் அபராதம். 'சார் எதாவது செய்யறதுன்னா செஞ்சுடலாம் சார்...' என்றேன். நிமிர்ந்து பார்த்தார். 'ஓ... லஞ்சம்... இல்லியா?' என்றார். 'என்னப் பாத்தா காசு வாங்குறவன்மாதி தெரியுதா?' என்றார். 'ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா...' என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் நினைத்தது போல இல்லை. உண்மையிலேயே உண்மையான போலீஸ்காரர்தான் அவர். 'காலையில ஸ்டேஷனுக்கு வந்து ஃபைனைக் கட்டிட்டு வண்டி எடுத்திட்டு போங்க' என்றார். 'இப்பவே கட்டிடறேனே' என்றேன். 'முடியாது. குடிச்சிட்டு வண்டி ஓட்ட விடமாட்டேன். வேணும்னா ஒண்ணு செய்ங்க... உங்க ஃப்ரண்ட்ஸ் யாரையாவது வரச் சொல்லுங்க... அவங்க ஓட்டிட்டுப் போலாம்... ஐ மீன் குடிக்காதவங்க...' நானும் யோசித்து யோசித்து பார்த்து அந்த கசப்பான உண்மையை எதிர்கொண்டேன். குடிக்காத நண்பர்களே எனக்குக் கிடையாது.... சரிதாவை வேண்டுமானால் வரச் சொல்லலாம். ஆனால் அவளுக்கு வண்டி ஓட்டத் தெயாது. இதற்காகவாவது அவளுக்கு பைக் ஓட்டக் கற்றுக் கொடுக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்த நாள் போய் பைக்கை மீட்டு விட்டு மதியம் அதே பைக்கில் ஒரு சிக்னலில் நின்றுகொண்டிருந்தேன். பக்கத்தில் திரும்பிப் பார்த்தால் வெள்ளை பைக் வெள்ளை சீருடையில் அதே சார்ஜன்ட். புன்னகைத்தார். நானும் புன்னகைத்தேன். 'அப்புறம்... இன்னிக்கு எப்படி? குடிச்சிட்டு அந்தப் பக்கம் வருவீங்களா?' என்றார் இளக்காரமாக. 'நிச்சயமா வருவேன் சார். குடிச்சிட்டுத்தான் வருவேன். ஆனா உங்களால என்னைப் பிடிக்க முடியாது.' என்றேன் நானும் இளக்காரமாக. சிக்னல் விழுந்தது.

அன்று இரவு காந்திபார்க்கில் அவர் நின்றுகொண்டிருந்தார். நானும் குடித்துவிட்டுத்தான் போனேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரித்து தோளைத் தட்டிக்கொடுத்தார். இப்போது அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்.

அன்று 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தின்' மெட்டில் 'மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்' என்ற வரிகளைப் பாடியபடி நடந்து சென்றேன். .

Friday, May 21, 2010

யோத்தி மாசி!

யோத்தி மாசி!
ஸ்ரீபதி பத்மநாபா



ஆங்கிலத்தில் ஸ்பூனரிசம் (Spoonerism) என்றொன்றுண்டு. வார்த்தைகளுக்கிடையே நாக்குழறி வேறு வார்த்தைகளாக வெளிப்படுதல். வில்லியம் ஆர்ச்சிபால்ட் ஸ்பூனர் (1844-1930) என்பவருக்கு இது ஒரு வியாதியாகவே இருந்திருக்கிறது. ஆனால் அவருக்குப் பிறகு பெரும்பாலும் இது ஒரு வார்த்தை விளையாட்டாகவே வழக்கத்திலிருக்கிறது.

ஒரு உதாரணம்: you have very mad banners.

இதன் மூல வாக்கியம்: you have very bad manners.

இன்னொன்று: bedding wells அதாவது wedding bells

இப்படி சாதாரண வாக்கியங்களில் ஆரம்பித்து பெரும்பாலும் 'நல்ல' வாக்கியங்களாக மாறிவிடும் இந்த வார்த்தை விளையாட்டு. உதாரணத்துக்கு இரண்டு:

1. Have you seen her sick duck?

2. She showed me her tool kits.

தமிழில் இப்படியொரு வார்த்தை விளையாட்டை நான் அறிந்ததில்லை. ஆனால் மலையாளத்தில் இது ஒரு மாபெரும் 'இயக்க'மாகவே இருக்கிறது என்று சொல்லலாம்; 'சொறிச்சு மல்லல்' என்பது மலையாளிக்கு என்றைக்கும் 'இஷ்டப்பட்ட ஒரு வினோதம்' ஆகவே இருக்கிறது. 'மறிச்சு சொல்லல்' (மாற்றிச் சொல்லுதல்) என்பதை மாற்றிப் போட்ட பிரயோகம் இது. இளைஞர்கள் முதியவர்கள் என்றில்லாமல் யாரிடமிருந்து வேண்டுமானாலும் ஒரு சொறிச்சு மல்லல் பிரயோகத்தை நீங்கள் எந்தக் கணமும் எதிர்பார்க்கலாம். அதை நீங்கள் சொறிச்சு மல்லிப் பார்ப்பதற்குள் அவர் இடத்தைக் காலி செய்திருப்பார். அந்தப் பிரயோகத்தை அதிர்ச்சியுடன் வாயிலிட்டு மென்று வெளியே துப்புவதற்குள் நீங்கள் படாத பாடுபடவேண்டியிருக்கும்.
அந்த நாட்களில் எங்கள் தறவாட்டு இல்லத்தில் ஒரு காரணவர் இருந்தார். முற்றத்திலோ அஞ்சாம்புரையிலோ குளக்கரையிலோ எங்கிருந்தாலும் சரி, அவரைச் சுற்றி எப்போதும் ஒரு இளைஞர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். அந்தப் பக்கம் செல்ல பெண்கள் தயங்குவதுபோல் நடிக்கவாவது செய்வார்கள். தொந்தியைத் தடவியபடி அல்லது பூணூலால் முதுகைச் சொறிந்தபடி அல்லது மூக்குப்பொடியை உறிஞ்சி தும்மியபடி என்று பல சேஷ்டைகளுடன் அவர் நல்ல வார்த்தைகள்தான் பேசிக்கொண்டிருப்பார். அதற்கு எதற்கு இந்த இளைஞர்கள் இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் என்று - தமிழ்நாட்டிலிருந்து எப்போதாவது அங்கு செல்லும் - எனக்குப் புரியவே புரியாது; எரிச்சல்தான் வரும். சில பேரிடம் கேட்டபோது சிரித்தபடியே போய்விட்டார்கள்.

ஒருநாள் என் முறைப்பெண்ணிடம் இதைப் பற்றி ரகசியமாகக் கேட்டேன்: ஸ்ரீக்குட்டீ, இந்த கேசவப்பன் சொல்வதற்கெல்லாம் எதற்காக இவர்கள் இப்படி கேணத்தனமாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. அவள் ஆர்வத்துடன், இன்று என்ன சொன்னார் என்று கேட்டாள். 'வாதி குடிச்சிட்டுண்டோ?' என்று கேட்டார்; எல்லோரும் சிரிக்கத் துவங்கிவிட்டார்கள் என்றேன். அவள் ஒரு நொடி யோசித்து முகத்தை அஷ்டகோணலாக்கி 'அய்யே...' என்றபடி ஓடிவிட்டாள்.

பலநாட்கள் அவளிடம் கெஞ்சிய பிறகுதான் இந்த 'பாவம் பாண்டி'க்கு சொறிச்சு மல்லல் குறித்து சொல்லிக் கொடுத்தாள்: முறைப்பையனுக்குக் கெட்ட வார்த்தை சொல்லிக்கொடுக்கும் குறும்பு கொப்பளிக்கும் ஆர்வத்துடனும் நாணத்துடனும். இரண்டு வார்த்தைகளில் முதல் எழுத்தை மாற்றிப் போடவேண்டுமாம்; நெடிலையும் குறிலையும் மாற்றிவிட வேண்டுமாம்.
தொடர்ந்து ரகசியமாய் என் காதில் 'மதமேதாயாலும் குணமுண்டாயால் மதி' என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.

அதிலிருந்து யார் எது சொன்னாலும் எது கேட்டாலும் ஒரு நிமிடத்துக்கு என்னிடமிருந்து பதில் வருவதில்லை. ஒரு நிமிடம் யோசித்து அதில் சொறிச்சு மல்லல் எதுவும் இல்லை என்று உறுதியானபிறகுதான் பேசவே துவங்குவேன். இப்போதும் இந்த வியாதி தொடர்கிறதோ என்னவோ?

அன்று நான் போயிருந்தது ஒரு திருமணத்துக்காக. அடுத்த நாள் திருமண விருந்துப் பந்தி. நாலைந்து இலைகள் தள்ளி காரணவர் உட்கார்ந்திருந்தார். எதிர்ப் பந்தியில் பெண்கள். எரிசேரி, புளிசேரி, காளன், பப்படம், கூச்சல்... பரபரப்பு கூடிக்கொண்டே இருந்தது. திடீரென்று காரணவர் சத்தமாகக் கத்தினார்: 'உண்ணீ... சாம்பாருண்டோ ?'... திடீரென நிசப்தம் நிலவியது. ஒரு நொடி விட்டு 'சொறிச்சு மல்லல்லே...' என்றார். சில நொடிகள் கழிந்து ஆண்கள் வரிசையில் அட்டகாசச் சிரிப்பு; எதிர்ப்புறமிருந்து 'அய்யே...' என்ற கூக்குரல்கள்.

ரொம்ப யோத்தி மாசிக்கிறாய்ங்களோ என்று நினைத்துக்கொண்டேன்.

Sunday, May 16, 2010

வரிப்புலிகள் ஸ்ரீபதி பத்மநாபா

வரிப்புலிகள்

ஸ்ரீபதி பத்மநாபா

(தமிழ் மற்றும் மலையாள திரைப்படப்பாடல்களை முன்வைத்து)


திரைப்படங்கள் காட்சி ஊடகங்கள். நல்ல வசனம் உள்ள திரைப்படம், நல்ல பாடல் உள்ள திரைப்படம் என்று சொல்பவர்கள் நல்ல திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்று அர்த்தம். நம் மூதாதையர் வழியாக நம் திரைப் படங்களிலும் பாடல் என்ற ஒன்று நிகழ்ந்துவிட்டது. எதார்த்தமான இந்தியத் திரைப்படங்களில் கூட பாடலும் ஒரு பொருட்டாகத்தான் இருக்கிறது. ஒரு திரைப்படத்துக்கு பாடல் தேவையில்லை அல்லது ஒரு திரைப்படத்துக்கு பாடல் என்பது ஒரு மாந்திரீக யதார்த்தவாதப் பரிமாணத்தைக் கொடுக்கிறது என்கிற சாகித்திய விசாரங்களை எல்லாம் விட்டுவிடுவோம்.

உங்களுக்கும் எனக்கும் தினமும் காலையில் எழுந்தவுடன் ஏதோவொரு பாட்டு அனிச்சையாக மனதில் தோன்றி மதியம் வரை விடாது வாய்க்குள் சுழன்று கொண்டிருக்கும். நேற்று காலை எழுந்ததிலிருந்து ஒரு பாடல் வாய்க்குள் சுழன்று கொண்டிருந்தது:
‘கொஞ்சும் புறாவே, நெஞ்சோடு நெஞ்சம், ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமிதேதோ...’
இந்தப் பாடல் எப்போது எனக்குள் புகுந்தது என்று தெரியவில்லை. மதியம் வரை அதை நாக்கிலிருந்து பிடுங்கி வெளியேற்ற முயன்றும் முடியவில்லை. மதியத்துக்குப் பிறகு தானாகவே வெளியேறி விட்டது.

இப்படியாக திரைப்படப்பாடல் என்பது நம் அன்றாட வாழ்வின் அனிச்சைச் செயலாகி விட்ட நிலையில், இந்த எழுத்துரையும் திரைப்படப் பாடல்கள் பற்றியதாகவே இருக்கட்டுமே. திரைப்படப் பாடல்களின் இசை குறித்து நிறைய எழுதப்பட்டுவிட்ட நிலையில் வரிகள் குறித்ததான என்னுடைய பார்வை இந்த எழுத்து என்பதை தலைப்பைப் பார்த்தவுடனேயே புரிந்துகொண்டிருப்பீர்கள்.
(இந்தத் தலைப்பைப் படித்துவிட்டு நண்பரொருவர் சொன்னார்: நம் பாடலாசிரியர்களுக்கு இதை ஒரு பட்டமாகவே வழங்கலாமே; வரிப்புலி வைரமுத்து, வரிப்புலி வாலி.... அடடா! கேட்கவே எவ்வளவு லயமாக இருக்கிறது!)

ஊர் மக்கள் உறங்கி விட்டார்கள், ஊதைக் காற்று அடித்து விட்டது என்று பல்வேறு காரணங்களை அடுக்கி, ஆகவே, மாமா, உடனே, வா, உடலுறவு கொள்ளலாம் என்னும் சுயமைதுனப் பாடல்களையும் விட்டுவிடுவோம். திரைப்படப் பாடல்கள் எவ்வளவு ஆபாசமாய் இருக்கின்றன, ஆங்கிலக் கலப்பு எவ்வளவு சதமானம் இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் தோழர் பாமரன் நிறைய எழுதிச் சலித்து விட்டார்.

துரதிஷ்டவசமாக அல்லது அதற்கு எதிர்மறையாக, இரண்டு மொழிகள், இரண்டு கலாச்சாரங்களில் வளர்ந்தவன் நான். (மலையாளக் கரையோரம் என்னை ‘பாண்டி’ என்று அழைக்கிறார்கள்; தமிழ் கூறும் நல்லுலகத்தில் என்னை ‘கஞ்சி’ என்று அழைக்கிறார்கள்.) கள்ளப் பாளையத்தின் கருவேலங் காடுகளிலும் கண்ணூரின் முந்திரித் தோப்புகளிலும் மாறி மாறி வளர்ந்ததால் நினைவுகளில் இருமொழிப் பாடல்கள் உள்ள மிருகமானேன் நான்.
பிஞ்சுப்பருவத்தில் பாடல்கள் என்பவை E=MC2 என்பதுபோல் தாளலயத்தில் மனதில் பதிந்துபோன அர்த்தம் தெரியா சூத்திரங்கள் மட்டுமே. ஆனால், பதின்பருவங்களிலேயே பாடல் வரிகளின் அர்த்தத்தைத் புரிந்துகொள்ளும் அளவு பேரிளம்பையன் ஆனபோதுதான் வரிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டேன்.

நான் அர்த்தம் புரிந்து ரசித்த முதல் பாடல் என்று இதைச் சொல்லலாம்: தமிழ்நாட்டில் அவளுடைய Braவுகள் என்று பரவலாக அறியப்பட்ட அவளுடெ ராவுகள் படத்தில் ஒரு பாடல். ஒரு பாலியல் தொழிலாளியின் இரவுகளைப் பற்றிய பாடல். அதுவரை வெறுமனே நாக்குக்குள் சுழன்று கொண்டிருந்த அந்தப் பாடல் அர்த்தம் புரிந்த பிறகு மூளைக்குள் ஒரு துளையைப் போட்டு விட்டது.

‘நிலவின் கிரணங்கள் ஒளி வீசுவதில்லை
இரவின் விண்மீன்கள் கண் சிமிட்டுவதில்லை
மதன உற்சவங்களுக்கு வண்ண மாலைகள் இட்டு இட்டு
மனமும் மார்பும் பாலைவனமானது
நித்திரையின் ஊனங்களன்றோ
என்றும் அவளது இரவுகள்...’

அன்றிலிருந்து வரிகளைப் பிடித்துக்கொண்டேன்.

மருதகாசி, கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துக்குமார், தாமரை.... வயலார் ராமவர்மா, பிச்சு திருமலா, ஓ.என்.வி, ஸ்ரீகுமாரன் தம்பி, கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரி, ரமேசன் நாயர், கிரீஷ் புத்தஞ்சேரி, வயலார் சரத்சந்திர வர்மா.... என்று இவர்களின் வரி விழுதுகளில் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடிப் பயணமாகும் வனங்கள் ரம்மியமானவை.

மேற்கண்ட பாடலை எழுதியவர் பிச்சு திருமலா.

மலையாளத்தின் கண்ணதாசன் என்று கருதப்படும் வயலார் ராமவர்மா என் பதின்பருவங்களில் அதிர்ச்சிகளைத் தந்தவர்.

காதலி வேறொருவனுடன் திருமணமாகிச் செல்கிறாள். அவளுக்காகக் காதலன் பாடும் பாடல்:
‘சுமங்கலீ... நீ நினைத்துக் கொள்வாயா/ கனவிலாவது இந்த கானத்தை...’ என்று தொடஙகும் அந்தப் பாடலின் அனுபல்லவி இப்படிப் போகிறது:

‘பிரிந்து போகும் உன்னால் இனி இந்தக் கதையை மறக்கத்தானே முடியும்
நிறைந்த மார்பின் முதல் நகக் குறியை மறைக்கத்தானே முடியும்
கூந்தலால் மறைக்கத்தானே முடியும்!’

இதற்கு இணையான தமிழ்ப் பாடலும் ஒன்று உள்ளது. இதே சூழ்நிலைக்கு வைரமுத்து எழுதிய அந்தப் பாடலும் கவனிக்கத்தக்கது. திருடா திருடா படத்தில் வரும் ‘ராசாத்தி என் உசிரு என்னுதில்ல...’ கிராமத்துக் காதலின் ஒரு மீஅண்மைக் காட்சியை (Extreme Close/up) வரிகளிலேயே காணலாம்.

‘அந்தக் கழுத்துத் தேமலையும் காதோர மச்சத்தையும் பார்ப்பதெப்போ...’

வைரமுத்துவைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் என் மனதில் உடனே நினைவுக்கு வருபவர் எனக்கு பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் எடுத்த திரு. அரங்கநாதன்தான். இலக்கணம் கசந்து விடக்கூடாது என்பதற்காக அப்போதைய திரைப்படப் பாடல்களின் பாட்டுப் புத்தகங்களை வாங்கிப் படித்து, பாடல்கள் மூலமாக அணிகளையும் வினைகளையும் விளக்குவார் அவர். கூடவே அந்தப் பாடல்களையும் திறனாய்வு செய்து சொல்லுவார். மிக உற்சாகமான வகுப்பறை அவருடையது. பிறிது மொழிதலணியை எங்களுக்குப் புரியவைக்க அவர் வகுப்பெடுத்த விதம் வருமாறு:

டேய் திருப்பதி அந்த இந்தப் படத்தில ஒரு பாட்டு வந்திருக்கில்ல, அதப் பாடு.

எந்தப் படத்திலீங்க ஐயா?

அதாண்டா நம்ம மைக் மோகர் நடிச்சிருக்காருல்ல? ஈரமான...?

இளமைக் காலங்களாய்யா?

அந்தக் கெரகம்தான். பாடு.

நான் தொண்டையை சரி செய்துகொண்டேன்.

பெரிய ஏசுதாசுன்னு நெனப்பாடா? பாட்டு வகுப்பா எடுத்துட்டிருக்கேன்? அட சும்மா பாடுறா...

‘ஈரமான ரோஜாவே... என்னைப் பார்த்து மூடாதே...’ என்று பாட ஆரம்பித்தேன். ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து, என்னோடு நீ பாடி வா சிந்து...’ என்ற வரிகள் முடிந்தபோது நிறுத்தச் சொன்னார்.

அதென்னடாது தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து, என்னோடு நீ பாடி வா சிந்து.. ரெண்டு வரிக்கும் என்னடா சம்மந்தம்?

தெரீலீங்கய்யா...

ழெழீழீழ்ழழ்ழா... அப்பறம் என்னத்தடா பாட்டைக் கேக்கறீங்க! அதாவது...
காத்துள்ள பந்து தண்ணிக்குள்ள மூழ்காது, அது மாதிரி அறிவுள்ள கதாநாயகியா இருந்தா கண்ணீர்ல மூழ்கி வருத்தப்படக் கூடாது. அதனால பிரச்னையெல்லாம் மறந்துட்டு எங்கூட வந்து டூயட் பாடுங்கறாரு மைக் மோகரு. புரிஞ்சுதா? இப்புடி உண்மையச் சொல்லாம உவமையை மட்டும் சொல்லிப் புரிய வக்கிறதுதான் பிறிதுமொழிதலணி, புரிஞ்சுதா?

இன்று வரை எனக்கு பிறிது மொழிதலணி மறக்கவில்லை.

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவைப் பற்றி மணிக்கணக்கில் விவரிப்பார் அரங்கநாதர். உண்மையான காதல் என்றால் என்னவென்று இரண்டு வரிகளில் சொல்லிவிடலாம் என்பார்: வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்; இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்.

அன்று முதல் இன்று வரை பாடல்வரிகளில் வைரமுத்துவின் கவிதை ரசனை ரசம் மிகுந்ததாகவே இருக்கிறது. சமீபத்தில் அவர் எழுதியதில் இந்த வரிகள் எனக்குப் பிடித்தவை :
லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க ஒத்தைச் சொல்லு சிக்கவில்லை எதனாலே?
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிட்டு பட்டினியாக் கெடப்பாளே அதுபோல... (நெஞ்சாங்கூட்டில்)

அன்றெல்லாம் அரங்கநாதருக்கு ஒரு ஐம்பது வயது இருக்கும். கண்ணதாசனை ரசிக்கிற அதே மனதால் வாலியையும் வைரமுத்துவையும் ரசிக்கிறவராய் இருந்தார் அவர். கண்ணதாசனு டையவை என்று நான் நினைத்துக்கொண்டிருந்த பல வரிகளை அவை வாலியின் வரிகள் என்று பதைபதைத்துப்போய் திருத்துவார். மாதவிப் பொன்மயிலாள் கண்ணதாசன எழுதியது என்றுதான் நினைத்திருந்தேன். அட மகா பாதகத் திருப்பதீ... அது வாலியோடதுடா... என்று கொந்தளித்துப்போவார். அங்கீகாரம் இடம்பெயர்வதில் அவருக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை.

அவரிடம் ‘ஒரு பெரிய இவனாட்டம்’ கண்ணதாசன் தவறு செய்து விட்டார் என்று சுட்டிக் காட்டப் போய் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

ஐயா கண்ணதாசன் ஒரு பாட்டுல தப்பா எழுதியிருக்காருங்கய்யா.

டேய்.டேய்... அடங்குடா... கண்ணதாசனைக் குத்தம் சொல்ற அளவு வந்துட்டியா... பெரிய இவனா நீ.

நீங்க கத்துக் குடுத்த இலக்கணந்தாங்கய்யா....

பார்றா... சரி சொல்லு.

ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்கு பெயர் என்ன?

காதல்.

நீங்க எனக்கு கைக் கிளைன்னுதானே சொல்லிக் கொடுத்தீங்க.

அரங்கநாதர் முறைத்தார்.

ஒருத்தி மடடும் ஒருவனை நினைத்தால்தான் கைக்கிளை. அவனும் அவளை நினைக்கிறான்கறது அடுத்த வரியிலேயே சூசகமா தெரியுதுல்ல. அதப் பாக்கலியா அறிவுக் கொழுந்து... அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்....

நான் வெளிறிய முகத்துடன் வெளியேறினேன்.

தற்கால மலையாளப் பாடலாசிரியர்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் கைதப்புறம் தாமோதரன் நம்பூதிரி. முக்கியமான இசைக் கலைஞரும் கூட. ‘குஞ்ஞிக் கிடாவின்னு நல்கான் அம்ம நெஞ்சில் பாலாழி ஏந்தி’ எழுதியவரும் அவர்தான்; ‘லஜ்ஜாவதியே நின்டே கள்ளக் கடக் கண்ணில்’ எழுதியவரும் அவர்தான்.

என்னுடைய ‘வண்ணங்கள்’ எனும் இசை ஆல்பத்தில் அவருடைய அனுமதியுடன் நான் சேர்த்துக் கொண்ட வரி இது:

பசிக்கின்ற போது அமுதினை ஊட்ட பாற்கடல் நெஞ்சில் ஏந்திய தாயே...

அவருடன் உரையாடிக் கொண்டிருப்பது என்பது ஒரு அற்புதமான அனுபவம். ஒரே மனிதருக்குள்ளிருந்து சங்கீதமும் சாகித்தியமும் ஒரு சேர பிரவாகமாய் கிளம்புவது அனுபவித்து ரசிக்க வேண்டிய விஷயம். அவருக்கோ தமிழ் பாடலாசிரியர்களைப் பார்த்து ஆச்சர்யம். கண்ணதாசன் முதல் முத்துக்குமார் வரை அலசுவார்.

அவர் மலையாளத்தில் எழுதிய ‘லஜ்ஜாவதியே நின்டே கள்ளக் கடக் கண்ணில்’ என்ற பாடலை தமிழில் முத்துக்குமார் எழுதினார். கைதப்புறத்துக்கு தமிழ்ப் பாடலை விளக்கினேன். ‘லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே’ என்பதற்கு பதிலாக ‘லஜ்ஜாவதியே உன் கள்ளுக்கடைக் கண்கள்’ என்று ஆரம்பித்திருக்கலாமே என்றார். ஆனாலும் மற்ற வரிகளையெல்லாம் மிகவும் ரசித்தார். குறிப்பாக ‘கட்ட வண்டி மையினால் கட்டபொம்மன் மீசையை கண்ணே நீ வரைந்து விட்டு ராஜராஜன் என்றதும்’ மிக அருமை என்றார்.

அவரே இசையமைத்து எழுதி ஜேசுதாஸ் பாடிய மறக்க முடியாத பாடல் ‘தேசாடனம்’ என்ற திரைப்படத்தில் இருக்கிறது. பெற்றோர்களுடன், தாத்தாவுடன், தோழர்களுடன் விளையாடித் திரிந்த மகனை மடத்திலிருந்து வந்து அடுத்த ‘பெரியவாளாக’ ஆக்குவதற்கு தேர்வு செய்கிறார்கள். பெரும் மனப் போராட்டங்களுக்கிடையே அவனை மடத்தில் விட்டு விட்டு திரும்பும் தகப்பனின் உணர்வுகளாக ஒலிக்கும் ‘களி வீடுறங்கியல்லோ...’ என்ற அந்தப் பாடலின் அதே சந்தத்தில் வரிகளின் என்னுடைய தமிழ் வடிவம் இது:

விளையாட்டு வீடுறங்க
விளையாட்டுப் பேச்சுறங்க
ஒரு பார்வை பார்ப்பதற்கே என்னுள்ளம் தானும் ஏங்க
அலைகின்ற அலையே, கடலே
சிரிக்கின்ற பூக்களே
அறிவீர்களா என் நெஞ்சின்
அடங்காத ஜென்ம துக்கம்?

தாலாட்டு பாடினால்தான் கண் மூடுவான்
நான் பொன் முத்தம் சிந்தினால்தான் கண் மலர்வான்
கதை சொல்லிக் கேட்டால்தான் அமுதுண்ணுவான்
என் கைவிரல் நுனியைப் பிடித்தே நடைபோடுவான்... அவன்
நடை போடுவான்...

கண்களில் நீர் மல்க அவர் பாடுவதைக் கேட்பது பரமசுகம், அவரோ... தமிழ் பாடலாசிரியர்கள் போல அவ்வளவு எளிமையா எங்களுக்கு எழுத வராது.
நீ காற்று, நான் மரம், என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்... வைரமுத்து எவ்வளவு எளிமையா அழகா எழுதறார். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிற கீதை வாசகத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு அழகாக, காலங்களில் அவள் வசந்தம்னு காலத்தால் அழியாத ஒரு காதல் பாடலை எழுதுனார் உங்க கண்ணதாசன், என்றெல்லாம் சிலாகித்துப் பேசுவார்.

நானும் அதை யோசிப்பதுண்டு - மலையாளப் பாடல் வரிகளின் பாண்டித்தியத்தைப் பற்றி. சமஸ்கிருத அகராதி இருந்தால்தான் பல வார்த்தைகளின் அர்த்தம் புரியும். பாடலகள் பெரும்பாலும் பண்டிதர்களுக்கே என்ற நிலைமை இன்னும் அங்கே இருக்கிறது. விளிம்பு நிலை மனிதர்களுக்கான, அவர்களுடைய எளிமையான மொழியைப் பாடுகிற பாடல்கள் இல்லை என்றே சொல்லலாம்.

மலையாளக் கரையோர மீனவன்கூட, கடலின் அக்கரைக்குச் செல்பவர்களே, பதினாலாம் இரவின் பாற்கடல் அலையின் கடல்கன்னிகள் உதிர்க்கும் மாணிக்கத்தைக் கொண்டு வருவீர்களா என்று ஒரு ஃபேன்டஸி கனவைத்தான் பாடுகிறான். தமிழ் மீனவனோ, வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திமிங்கிலம் தலைமையில் நடக்கும் எளிமையான காதல் திருமணத்தை தன் எளிமையான மொழியில் பாடுகிறான். தமிழின் மிக முக்கியமான அம்சம் சாதாரண மக்களின் பாடல்கள்தான். அதிலும் கானாப் பாடல்கள் தரும் மனவெழுச்சி வார்த்தைகளில் அடக்க முடியாதது. கானாப் பாட்டெல்லாம் ஒரு பாட்டா என்று முகம் சுளிக்கும் பண்டிதர்களுக்கு நேராக நாமும் முகத்தைச் சுளிக்கத்தான் வேண்டியிருக்கிறது. காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் என்று பாரதி எழுதினால்தான் இலக்கியமா? டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா என்பது சாதாரண மனிதனின் இலக்கியம். அதுதான் உண்மையான இலக்கியமும்கூட.

வாலியின் வாலிபம் இப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயம். மாதவிப் பொன்மயிலாளுக்கு முன்னமே தொடங்கி அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வைத்த குப்பையாக வந்த உடம்பில் தொடர்ந்து நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் வரைக்கும் அவருடைய இளமை இனிமையானது. இந்த வயதிலும் அவர் எழுதிய நியூயார்க் நகரம் சமீபத்தில் வந்தவற்றில் மிக அழகான பல்லவி:

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்ததே
பனியும் படர்ந்ததே
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் அலைந்ததே
நான்கு கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்!
தனிமை தனிமை ஓ!
கொடுமை கொடுமை ஓ!

தமிழ்ப் பாடல் வரிகளின் பரிமாணத்தை மாற்றியவர் என்று முத்துக்குமாரைச் சொல்லலாம். நவீன கவிதைக்கு நெருக்கமானதாகவும் ஜென் கவிதைகளின் பாதிப்புடனும் ஹைக்கூபாணியிலும் பல பரீட்சார்த்த முயற்சிகளை பாடல் வரிகளில் அவர் செய்திருக்கிறார். மிக சாதாரணமான, இளைஞர்களின் கேலிப் பாடலான ‘தேரடி வீதியில்’ பாடலை எடுத்துக் கொண்டால் கூட, மூன்று மூன்று வரிகளின் தொகுப்பாக ஹைக்கூவைப் போல் எழுதியிருப்பார். ‘தெரிஞ்சுக்கோ’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டுப் பாருங்கள்...

தேரடிவீதியில்
தேவதை வந்தா
திருவிழா,

அய்யனாரைத்தான்
ஆடு கும்பிட்டா
சைவம் ஆயிட்டாரு

அய்யரு பொண்ணு
மீன் வாங்க வந்தா
லவ் மேரேஜ்

கோயிலுக்குள்ள
காதலைச் சொல்லு
செருப்பிருக்காது...

கண்ணதாசனின் ‘நந்தா நீ என் நிலா நிலா...’ பாடலுக்குப் பிறகு தமிழின் மிக நீண்ட பல்லவியை எழுதியவர் முத்துக்குமார்தான் என்று நினைக்கிறேன். மிக நீண்ட அழகான பல்லவி அது:

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயமில்லை
கடல் கை மூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை
ஒரு முறைதான் பெண் பார்ப்பதனால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை.

நான் எழுதிய ‘வண்ணங்கள்’ இசைத்தொகுப்பில் சில வரிகள்:

மழை நின்றபின்னே மரம் மேகமாகும்
நீ சென்ற பின்னே உன் நினைவே மரமாகும்...

இதே போல ‘காதல்’ படத்தில் முத்துக்குமாரின் வரிகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். ‘தொட்டுத் தொட்டு என்னை வெற்றுக் களிமண்ணை சிற்பமாக யார் செய்ததோ’ பாடலில் வரும் வரிகள்:

முதல் முறை உன்னைப்
பார்த்தது எங்கே
மனதும் தேடும்
மழை நின்ற பின்னும்
மரக்கிளை உள்ளே
மெதுவாய்த் தூறும்...

மனிதர் ஆயிரக்கணக்கில் காதல் வரிகளை எழுதித் தள்ளினாலும் ஒவ்வொரு வரியும் தனித்தன்மையோடு இருப்பதுதான் அவருடைய தனித்தன்மை.

வரிகளின் மீதான பித்து ஒரு காலத்தில் முற்றிப் போயிருந்தது எனக்கு. எந்த எழுத்தைச் சொன்னாலும் ஒரு பாடல் சொல்வது, எந்த வார்த்தையைச் சொன்னாலும் ஒரு பாடல் சொல்வது என்று ஆரம்பித்து நண்பர்களுடன் போட்டி போட்டிருந்த கல்லூரிக் காலத்தில் ஒரு கட்டத்தில் இப்படி ஒரு பாட்டு உருவாகிவிட்டிருந்தது. முடிந்தால் நீங்களும் பாடிப் பார்க்கலாம்:

அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா சொல்லித் தந்த வானம் அருகில் ஒரு வானம் தரையில் வந்த மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு மின்னல் வெட்டட்டும் பாட்டுப் பாட வா பார்த்துப் பேச வா பாடம் சொல்லவா பறந்து செல்ல வா பால் நிலவு காய்ந்ததே பார் முழுதும் ஓய்ந்ததே ஏன் ஏன் ஏன் ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன் ஒரு கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகின்றேன் எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் இங்கேதான் கண்டேன் உன் வண்ணங்கள் என் வாழ்க்கை வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா மேகமே மேகமே பால்நிலா தேயுதே ....

இப்படி ஒரு மணி நேரத்துக்கு மேல் போய்க் கொண்டிருக்கும் இந்தப் பாடல்.

மீண்டும் மலையாளத்துக்கு வருவோம்.ஆழமும் செறிவும் மிகுந்த பன்னூறு வரிகள் இன்னும் மனதுக்குள் சிற்றலையாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் எழுத இடமில்லை. சில வரிகள் மட்டும்:

வாழ்வமுதத்தின் மையம் மதுரமானது (கைதப்புறம்)

பலா இலைப் பாத்திரங்களில் பொம்மைக்குப் பால் கொடுக்கும் குழந்தையாய் மீண்டும் என் அருகில் வந்துநில் (ஓ.என்.வி.)

மீண்டும் மீண்டும் யாரோ கனாவின் படி ஏறி வருகின்ற காலோசைகள்/ மீண்டும் மீண்டும் யாரோ நிலாவில் புல்லாங்குழல் ஊதும் தேனோசைகள் (கிரீஷ் புத்தஞ்சேரி)

ஒரு நிமிடம் தா உனக்குள் கரைய
ஒரு யுகம் தா உன்னை அறிய (சத்யன் அந்திக்காடு)

கண்ணாடி முதன்முதலாய் என்
வெளித் தோற்றத்தைக் கவர்ந்து கொண்டது
பாடகனே... உன் குரல் என்
உள்மனதைக் கவர்ந்து கொண்டது. (கைதப்புறம்)

விரலில் இருந்து வழுக்கி விழுந்தது
விரகம் நிறைந்த ஓர் ஆதி தாளம் (பிச்சு திருமலா)

இவ்வளவு செழுமையும் செறிவும் நிறைந்த மலையாளப் பாடல்களுக்கு ஏன் ஒரு முறை கூட தேசிய விருது கிடைக்கவில்லை என்பது புதிர்தான். பல்லவியின் முதல் வரியிலேயே ஒருமை பன்மையில் கூட இலக்கணப் பிழைகளோடு எழுதி தேசிய விருது ‘வாங்கும்’ அளவுக்கு பா...வம் மலையாள வரிப்புலிகளுக்கு வித்தகம் இல்லை போலும்!


--

Monday, April 26, 2010

தாத்ரிக்குட்டி என்னும் சாதனம்- ஸ்ரீபதி பத்மநாபா

தாத்ரிக்குட்டி என்னும் சாதனம்

கேரளத்தில் நம்பூதிரிகளின் சமூகத்தில் வழக்கிலிருந்த ஒரு குற்ற விசாரணை முறை 'ஸ்மார்த்த விசாரம்'. நம்பூதிரிப் பெண்களின் நடத்தையில் சந்தேகம் உண்டானால் அவர்களை விசாரணைக்குட்படுத்தி
தண்டனை வழங்கும் ஆணாதிக்க ஒருதலைப்பட்ச விசாரணை முறை இது.

அந்தர்ஜனங்களின் அடுக்களை தோஷம் என்பது இந்தக் குற்றச்சாட்டுக்குப் பெயர். பரபுருஷனிடம் ஒரு அந்தர்ஜனம் (மனைக்குள் இருக்கும் மக்கள் என்று அர்த்தம்) தொடர்பு கொண்டுவிட்டாள் என்ற சமூகத்துக்குள் ஒரு வதந்தி உருவாகும்போது இந்த ஸ்மார்த்த விசாரம் நடத்தப்படும்.

இந்த ஸ்மார்த்த விசாரம் 'தாசீ விசாரத்தில்' துவங்குகிறது. அதாவது அந்தர்ஜனத்தின் வேலைக்காரியை விசாரணை செய்தல். வேலைக்காரி தன் எஜமானி நடத்தை கெட்டவள் என்பதை உறுதி செய்துவிட்டால், உடனே அந்த அந்தர்ஜனம் தன் பெயரை இழக்கிறாள். தன் திணைûயுயும் இழக்கிறாள். அதாவது அஃறிணை ஆகிறாள். அதுமுதல், அவள் 'சாதனம்' என்றே அறியப்படுகிறாள்.

தாசீ விசாரம் முடிந்தவுடன் அடுத்த கட்டம் சாதனத்தை அஞ்சாம் புறையில் தள்ளுவது. அதாவது அவள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு அஞ்சாம் புறை எனப்படும் தனி அறையில் தனிமைக்காவலில் வைக்கப்படுகிறாள்.

அடுத்த கட்டமாக அந்த தேசத்தின் ஆட்சியாளரிடம் (ராஜா அல்லது 'நாடுவாழி' என்று அழைக்கப்படும் பண்ணையார்) குற்ற விசாரணைக்கான அனுமதி கோரப்படுகிறது. விசாரணையை ஒரு நம்பூதிரிதான் நடத்த வேண்டும். அவருக்கு 'ஸ்மார்த்தன்' என்று பெயர். ராஜா அந்தப் பகுதியின் பிரபலமான ஒரு ஸ்மார்த்தனையும், இரண்டு மீமாம்சகர்களையும் ஒரு அரசப் பிரதிநிதியையும் விசாரணைக்காக நியமிக்கிறார்.

விசாரணை நடத்தி, சாதனம் குற்றம் செய்திருக்கிறது என்பதை எப்படியேனும் நிரூபித்து, சாதனத்தை 'கதவடைத்து பிண்டம் வைப்பது' வரை ஒரு மிகப்பெரிய கடமையை நிர்வகிப்பதுதான் ஒரு 'உண்மையான' ஸ்மார்த்தனின் பணி.

விசாரணை நேரத்தில் மேற்பார்வை செய்கின்ற அரசப் பிரதிநிதியை 'புறக் கோய்மை' என்றும் அந்தப் பிரதேசத்து நம்பூதிரிகளின் பிரதிநிதியை 'அகக் கோய்மை' என்று அழைப்பார்கள். அஞ்சாம்புறையின் புறத்தளத்தில் இவர்கள் எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள். விருப்பமுள்ள ஊர் மக்களும் பங்குபெறலாம்.

ஸ்மார்த்தனும் இரண்டு கோய்மைகளும் சேர்ந்து உள்ளே நுழைய முற்படுகிறார்கள். அப்போது வாசலில் இருக்கும் தாசி அவர்களைத் தடுக்கிறாள். ஆண்கள் உள்ளே நுழையக் கூடாது என்கிறாள். ஏன் என்று இவர்கள் கேட்கிறார்கள். உள்ளே ஒரு சாதனம் இருக்கிறது என்று தாசி கூறுகிறாள். யார் அது என்று ஸ்மார்த்தன் கேட்கிறார். இந்த மாதிரி இந்த மாதிரி மனையின் இந்த மாதிரி இந்த மாதிரி நம்பூதிரியின் மகள் அல்லது சகோதரி அல்லது மனைவியான இந்த மாதிரி இந்த மாதிரி சாதனம் என்று அவள் பெயரைக் கூறுகிறாள் தாசி. இப்படிப்பட்ட ஒரு பெண் இந்த வீட்டில் எப்படி தனியாக இருக்கிறாள் என்று ஆச்சர்யம் அபிநயிக்கும் ஸ்மார்த்தன் கூடுதல் விவரங்களைக் கோருகிறார்.

இந்த இடத்திலிருந்து அதிகாரபூர்வமாகத் துவங்குகிறது ஸ்மார்த்த விசாரம். குற்றவாளியான சாதனம், கதவுக்குப் பின்னால் நின்றுகொண்டு, கண்ணையும் முகத்தையும் வெள்ளைத் துண்டால் கட்டி, ஸ்மார்த்தனின் கேள்விகளுக்கு தாசியின் மூலமாக பதில் அளிக்க வேண்டும். வேறு யாரும் பேசுவதற்கு அனுமதியில்லை. ஸ்மார்த்தனின் கேள்விகளில் ஏதேனும் தவறு இருந்தால் அகக்கோய்மை தன் தலையில் கட்டியிருக்கும் துண்டை கீழே போடுவார். இதற்கு 'நாட்டாமை, கேள்வியை மாத்து' என்று அர்த்தம், ஸ்மார்த்தன் தன் கேள்வியை மாற்றிக் கேட்பார். எல்லாமே அவளை குற்றத்தை சம்மதிக்க வைப்பதற்கான வழிகள்தான்.

ஸ்மார்த்த விசாரம் அன்றைய தினம் முடியாமல் நீண்டு போகிறது என்றால் அன்றைய தினம் தனக்குக் கிடைத்த விவரங்களை சபையின் முன் அறிவிப்பார் ஸ்மார்த்தன். இதற்கு 'ஸ்வரூபம் சொல்லுதல்' என்று பெயர். ஒவ்வொரு நாளும் ஸ்மார்த்த விசாரம் முடிந்ததும் குற்றவாளியின் உறவினர்கள் ஜட்ஜ் டிரிப்யூனல் அங்கத்தினர்களுக்கு விருந்து அளிக்க வேண்டும். சில ஸ்மார்த்த விசாரங்கள் மாதக்கணக்கிலும் வருடக்கணக்கிலும் நீடித்திருக்கின்றன. (ஷோரணூருக்கு அருகில் கவளப்பாறையில் ஒரு நம்பூதிரி குடும்பத்தில் இந்த ஸ்மார்த்த விசாரம் 36 வருடங்கள் நீண்டது. இறுதியில் அந்த அந்தர்ஜனம் குற்றமற்றவர் என்று நிரூபணமாயிற்று. ஆனாலும்... தன யௌவனம் முழுவதும் இருளடைந்த அஞ்சாம்புறையில் கழித்ததற்கான எந்த நியாயமும் அவருக்கு வழங்கப்படவில்லை.)

சாதனம் குற்றத்தை ஒத்துக்கொண்டதும் தான் சம்போகித்த ஆள் யார், எந்த தருணத்தில் நடைபெற்றது, எப்படி நடைபெற்றது, எவ்வளவு முறை நடைபெற்றது என்பதையெல்லாம் விவரிக்க வேண்டும். ஒரு வேளை ஒன்றிற்கு மேல் ஆட்கள் இருந்தால் ஒவ்வொருவர் பெயர் சொல்லப்படும்போதும் இந்த விவரணைகளும் தேவை. அதற்குப் பிறகு சாதனம் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்படுகிறது. அவள் மரித்துவிட்டதாகக் கருதி பிண்டம் வைக்கப்படுகிறது. பிரஷ்டம் செய்யப்பட்ட அவள் தனக்குத் தோன்றிய திசையில் செல்கிறாள்.

அவளால் சுட்டப்பட்ட ஆண்களும் சமூகத்திலிருந்து விலக்கப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் அப்பீலுக்குப் போகலாம். தான் குற்றமற்றவன் என்பதை கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு நிரூபிக்கலாம். இந்த கைமுக்கல் சடங்கு நடப்பது கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்தரம் கோவிலில்.

இப்படி ஆணாதிக்கம் கொடிகட்டி வாழ்ந்திருந்த அந்தக் கால நம்பூதிரி சமுதாயத்தில் இந்தக் கொடுமைகளுக்கு உள்ளாகி வீரத்துடன் எதிர்த்து நின்ற ஒரே ஒரு அந்தர்ஜனம் தாத்ரிக்குட்டி.

குன்னங்குளம் கல்பகசேரி மனையின் குறியேடத்து தாத்ரி என்ற தாத்ரிக்குட்டி, அழகாகயிருந்ததாலேயே ஆணாதிக்கத்தின் அனைத்துக் கொடுமைகளுக்கும் ஆளானவள். சிறு வயதிலேயே தன் சொந்த தந்தையாலும் சகோதரனாலும் பாலியல் வன்கொடுமைக்கு இரையாகிறாள். திருமணம் நடந்ததும் முதலிரவில் கணவனின் மூத்த சகோதரனிடம் முதலில் தன்னைக் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இதற்குப் பிறகுதான் பழி தீர்க்கும் படலத்தைத் துவக்குகிறாள் தாத்ரிக்குட்டி. சமூகத்தின் பிரபலமானவர்கள் எல்லோரையும் வசியப்படுத்தி வீழ்த்துகிறாள். அவர்களுடன் சம்போகித்ததற்கான எல்லா நிரூபணங்களையும் சேகரித்து வைக்கிறாள்.
அவளிடம் ஸ்மார்த்த விசாரம் நடத்தப்படுகிறது.

நம்பூதிரி சமூகத்தையே நடுங்கச் செய்த இந்த ஸ்மார்த்த விசாரம் நடந்தது 1905ம் ஆண்டு. இதுவே கடைசி ஸ்மார்த்த விசாரம் என்றும் அறியப்படுகிறது.

விசாரணையில் சமூகத்தில் பிரபலமான 64 பேருடன் தான் சம்போகித்ததாக சொல்லும் தாத்ரிக்குட்டி ஒவ்வொருவரின் பெயராகச் சொல்கிறாள். 63 பெயர்களை சொல்லி முடித்தவள் ஸ்மார்த்தனை நோக்கி விரல் நீட்டி 64 வது ஆள் யாரென்று சொல்லட்டுமா என்று கம்பீரமாகக் கேட்கிறாள்.

சமூகத்திலிருந்து அந்த 64 பேரும் வெளியேற்றப்பட்டார்கள். தாத்ரிக்குட்டியும் தனக்குத் தோன்றிய திசையில் பயணத்தைத் துவங்கினாள்.

பி.கு.1
தாத்ரிக்குட்டி தமிழ்நாட்டு எல்லையில் கோவைக்கு அருகே ரயில்வே ஊழியரான ஒரு கிறிஸ்துவ இளைஞரை மணந்துகொண்டாள் என்கிறது செவி வழி வரலாறு. அவருக்கு அழகான ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மலையாளத் திரையில் கொடிகட்டிப் பறந்த ஷீலா என்பதும் ஒரு (உறுதிப்படுத்தப்படாத) தகவல்!

பி.கு. 2
தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரத்தை அடிப்படையாகக் கொண்டு எம்.டி. வாசுதேவன் நாயரின் 'பரிணயம்', மாடம்பு குஞ்ஞக்குட்டனின் 'பிரஷ்டு', அரவிந்தனின் 'மாறாட்டம்' போன்ற படைப்புகள் வந்திருக்கின்றன.

பி.கு. 3
முக்கியமான குறிப்பு இது. தாத்ரிகுட்டியால் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டவர்களில் மேலங்கத்து கோபால மேனனும் ஒருவர். கோழிக்கோடு அரசின் வரி வசூல் அதிகாரியாக இருந்தவர். நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு சென்ற அவர் அங்கே சத்யவதி என்ற பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டார். அதில் அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. முதல்வர் சக்ரபாணி. இரண்டாமவர் ராமச்சந்திரன். இரண்டாமவர் என்றாலும் இவர்தான் முதல்வர் ஆனார். மேலங்கத்து கோபாலன் ராமச்சந்திரன் (MGR) !

Tuesday, March 16, 2010

'டுங்களே' சதாசிவம்-ஸ்ரீபதி பத்மநாபா


மலையாளத்தில் 'அடிபொளி' என்றால் 'கலக்கல்', 'தூள் கிளப்புதல்' இன்ன பிற. தமிழ்நாட்டில் மலையாளத் திரைப்படப் பாடல்களைப் பெரும்பாலும் கேட்பது அரிது. திரைப்படப் பாடல்கள் அறிமுகமான காலந்தொட்டு இங்கு அறிமுகமாகியிருக்கும் மலையாளப் பாடல்கள் சொற்பமே. பழசில் 'ஒரு கடலினக்கரெ போணோரே' புதுசில் ஒரு 'லஜ்ஜாவதியே'.

ஆனால் மலையாளக் கரையோரம் அப்படியல்ல. அந்தக் காலத்து 'காலங்களில் அவள் வசந்தம்' தொடங்கி இன்றைய 'நாக்க முக்க' வரைக்கும் அவர்களுக்கு ஜீவனாணு. சோகமான 'போனால் போகட்டும் போடா'வாகட்டும், மென்மையான ஒரு 'வெள்ளை மழை'யாகட்டும் அதிரடியான 'கண்ணதாசன் காரைக்குடி'யாகட்டும் எல்லாமே அங்கு 'அடிபொளி'தான்.

அதற்கு முக்கியமான காரணம் மலையாளத் திரைப்பாடல்களின் மேதாவித்தனம் என்றுதான் சொல்லவேண்டும். திரைப்படப்பாடல் என்பது இலக்கியக் களமல்ல என்பதையும் கவிமேதைமையைக் காட்டும் இடமல்ல என்பதையும் வரிகளின் எளிமையே பிரம்மாண்டம் என்பதையும் அறியாது எழுதப்படுவதுதான் மலையாளப் பாடல்கள் பரவலாக மக்களை சென்றடையாமலிருப்பதன் காரணம் என்று சொல்லலாம். ஒரு பாடல் அடிபொளியாக வேண்டுமென்றால் செறிவான கவித்துவம் அல்ல அவசியம்; ஓசை நயமும் அங்கங்கே மின்னலெனத் தெறிக்கும் புதுப்புது 'ஐடியா'க்களும்தான்.

முன்னமே வேறொரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும் இங்கு திரும்பச் சொல்லலாம்:
மலையாளக் கரையோர மீனவன்கூட, 'கடலின் அக்கரைக்குச் செல்பவர்களே, பதினாலாம் இரவின் பாற்கடல் அலையின் கடல் கன்னிகள் உதிர்க்கும் மாணிக்கத்தைக் கொண்டுவருவீர்களா' என்று ஒரு ஃபேன்டஸி கனவைத்தான் பாடுகிறான். தமிழ் மீனவனோ வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திமிங்கிலம் தலைமையில் நடக்கும் காதல் திருமணத்தை தன் எளிமையான மொழியில் பாடுகிறான். 'காதல், காதல், காதல், காதல் போயின் சாதல்' என்பதல்ல திரைப் பாடல்; 'டாவு டாவு டாவுடா, டாவில்லாட்டி டையிடா' இதுதான் திரைப்பாடல்.

குத்துப்பாட்டில்கூட மென்மையான கவிதை தளும்பும் வரிகளைத்தான் மலையாளப் பாடல்களில் காணமுடியும். சமீபத்தில் பெரு வெற்றி பெற்ற லஜ்ஜாவதியே பாடலில் கூட காதலியுடன் பிள்ளைப்பிராயத்தில் ஈடுபட்ட ரசனையான நினைவுகள்தான் சொல்லப்பட்டிருக்கும். மலையாளப் பாடலாசிரியர்களுக்கு அந்தக்காலத்திலிருந்தே காதல் என்றால் அது கண்ணனும் ராதையும்தான். சமீபத்தில்கூட 'ஓடக்குழல் விளி கேட்டோ ராதே என் ராதே' என்று பாடல் எழுதப்படுகிறது. அதனாலேயே சாதாரண மலையாள ரசிகனுக்கு தமிழ்ப்பாடல்கள் நெருக்கமானவையாகத் தோன்றுகின்றன. எந்த மலையாள சேனலை எடுத்துக்கொண்டாலும் எந்த டேலன்ட் ஷோவை எடுத்துக்கொண்டாலும் அதில் இரண்டு தமிழ்ப்பாடல்களையாவது கேட்க முடியும்.

தமிழகம் போலவே கேரளாவின் கோவில் திருவிழாக்களிலும் 'கானமேளா' ஆர்க்கெஸ்ட்ரா இன்றியமையாதது. இருபது தமிழ்ப்பாடல்கள், பத்து இந்திப்பாடல்கள், ஐந்து மலையாளப் பாடல்கள் இதுதான் அந்த மேடைகளின் சூத்திரமாக இருக்கும். பெரும்பாலும் தமிழகத்திலிருந்துதான் இசைக்குழுக்கள் வரவழைக்கப்படும். ஏழெட்டு வருடங்களுக்கு முன் நான் இதுபோன்ற மேடைக்கச்சேரிகளுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். நான் ஒரு மேடைப்பாடகன் என்று நினைத்துவிடவேண்டாம். கோவையிலிருந்த பல இசைக்குழுக்களிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் வேலை 'அதிகமில்லாத' நாட்களில் நானும் அவர்களுடன் செல்வதுண்டு. யாராவது கேட்டால் இசைக்குழுவின் மேலாளர் என்று அறிமுகப்படுத்துவார்கள். சிலசமயம் 'இவர்தாங்க எங்க லிரிசிஸ்ட்' என்று அறிமுகப்படுத்துவார்கள். ஏற்கனவே எழுதப்பட்ட பாடல்களைப் பாடும் இசைக்குழுவில் லிரிசிஸ்ட்டுக்கு என்ன வேலை என்று யாரும் கேட்டதில்லை.

அன்று கேரளாவில் ஷோரணூர் என்ற இடத்தில் கச்சேரி. வாளையார் செக்போஸ்ட்டில் நிற்கிறதோ இல்லையோ எல்லை கடந்தவுடன் 'பெவரேஜஸ் கார்ப்பரேஷனின்' முதல் கடையிலேயே டெம்போ டிராவலரை நிறுத்திவிடவேண்டும் என்பது ஒரு விதி. கச்சேரிக்கு முன் ஒரு 'கட்டிங்', கச்சேரி முடிந்தபின் அரையோ முழுசோ என்பதும் ஒரு விதி.

ஷோரணூரில் கச்சேரி துவங்கியது. நான் இசைக்குழுவின் வேனிலேயே அமர்ந்துகொண்டேன். முதலில் சில பக்திப் பாடல்கள். ஒரு பாடகர் ஒட்டடைக்குச்சி போல் நெடுநெடுவென்று இருப்பார். சதாசிவம். சதா கிருஷ்ணனின் பாடலைப் பாடுவதுதான் அவருக்கு வாய்த்தது. டி.எம்.சௌந்தரராஜனின் குரலைப் பிரதியெடுத்துப் பாடுபவர். இந்த சரீரத்திலிருந்து இப்படி ஒரு சாரீரமா என்று வியக்க வைப்பார். முதல் சில பக்திப் பாடல்களில் 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே' இல்லாமல் இருந்ததே இல்லை. அனுபவித்துப் பாடுவார். அதுவும் பாடலின் இறுதியில் நிறுத்தி நிதானமாக புருஷோத்தமன் குரல் பா............ என்று அந்த 'பா' வின் 'ஆ'காரத்தை 'தம்' பிடித்து இழுத்து 'டுங்களே' என்று முடிப்பார். எவ்வளவு நேரம் ஆகாரத்தை நீட்டுகிறாரோ அவ்வளவு கைதட்டல் கிடைக்கும் என்பது அவரது விசுவாசம். அவரது விசுவாசம் எப்போதும் அவரை ரட்சித்தே வந்திருக்கிறது. இன்றைக்கு 'கட்டிங்' கொஞ்சம் அதிகம் போல. ஆலாபனை நீண்டுகொண்டே போனது. இதுவரை கேட்டதிலியே மிக நீளமான பா.

நான் வேனிலிருந்து இறங்கி வேனின் பின்னால் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு நின்றேன். என்னை நோக்கி ஒருவர் வந்தார். பக்திப் பாடல்கள் முடிந்து அந்த அரபிக்கடலோரம் துவங்கிவிட்டது. 'ட்ரூப்பிலே ஆளாணு அல்லே?' என்று கேட்டார். 'அதெ' என்றேன். நல்ல வாசம். ஸ்டெடியாக இருப்பதாக தள்ளாடிக் காண்பித்தார். 'மலையாளமும் தமிழும் அறியாம் அல்லே' என்று கேட்டார். 'அதெ' என்றேன். 'ஆ பாட்டுகாரியோடு மலையாளம் சம்சாரிக்குன்னதும் மற்றுள்ளவரோடு தமிழ் சம்சாரிக்குன்னதும் ஞான் கேட்டு' என்றார். ஆசுவாசமாக வேனில் சாய்ந்து நின்று கொண்டார். 'எனிக்கொரு காரியம் மனசிலாயில்லா' என்றார். 'எந்து கார்யம்' என்றேன். குரல் குழற ஆரம்பித்திருந்தது. 'காரியம் அல்ல, ஒரு வாக்கு' என்றார். 'எந்து வாக்கு' என்றேன். வாக்கு, சொல், வார்த்தை. 'மாஷே, ஒரு தமிழ் வாக்காணு, அதின்டெ அர்த்தம் பறயாமோ' என்றபடி அப்படியே தரையில் குந்தி உட்கார்ந்தார். நான் கீழே பார்த்து 'எந்து வாக்கு' என்றேன் மறுபடியும். அவர் மேலே பார்த்து 'ஆ... ஆ... பாட்டு கேட்டில்லே? புள்ளாங்குழல்..? அதிலெ ஒரு வாக்கு...' என்று சொல்லச் சொல்ல தலை தொங்கியது.

அரபிக்கடலின் ஓசையில் பொறுமையிழந்து 'எந்து வாக்கு?' என்று அலறினேன்.

'டுங்களே' என்றபடி நிலம் பதிந்தார்.