Tuesday, February 23, 2010

வாமு கோமு எனது தொகுப்பிற்கு எழுதிய விமர்சன பதிவு

http://vaamukomu.blogspot.com/2010/02/blog-post_22.html
விஜய் மகேந்திரனின் முதல் சிறுகதைத்தொகுப்பு பத்துகதைகளுடன் உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. எனது மண்பூதம் தொகுப்பு உயிர்மை வெளியீடாக வந்த சமயத்தில் படிக்கிறமாதிரி யார் இப்போ எழுதறாங்க கோமு? திரும்பத் திரும்ப படிச்சாலும் உங்களோட கதைகள் சலிக்கவே இல்லை என்று பேசி நணபரானவர் விஜய் மகேந்திரன். பார்த்து பழகு விஷம் அது என்று பெருசு எச்சரிக்கை செய்தது ! இப்போது பெருசுக்கு நாந்தான் விஷம் என்று புரிந்து இருக்கும் . இலக்கிய சூழலில் யார்தான் விஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எல்லோரிடமும் விஷம் இருக்கிறது! யாரும் இங்கே யோக்கியவான்கள் இல்லை.அடுத்த நாள் உயிருடன் இருப்போமா மாட்டோமா? என்று உறுதியின்மையில் இருக்கவே, இந்த சூழலில் சண்டைகள் சர்ச்சைகள் !

நகரத்திற்க்கு வெளியே தொகுப்பில் இருக்கும் ஊர்நலன் என்ற‌
சிறுகதை இதெ கருத்தைத்தான் முன் வைக்கிறது, நாயக பிம்பம் வில்லனாகி நாட்டாமையாகி அழிவைத் தேடிக்கொள்கிறது. காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன் சிறுகதையில் கண்களை இழந்த பெரியவர் கருப்பய்யா தன் பேத்தி ஓடிப்போய்விட்டாள் என்றதும் கிளம்பும் வேகம்.. வெற்றி பெறட்டுமே? என்று நம்மை முன்பே யோசிக்க வைக்கிறது! ஆனால் எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல் தோற்றுப்போகிறார். வாழ்க்கை எந்த நேரங்களிலும் வெற்றியையே தந்து கொண்டிருப்பதுமில்லை. தொகுப்பில் முதல் கதையாக சனிப்பெயர்ச்சி கதை இடம்பெற்றுள்ளது. இது உயிர் எழுத்து இதழில் வந்த சமயமே எல்லோராலும் பாராட்டப்பட்ட கதை! கதைகளை எனது அறையை பார்ப்பதற்க்கு துயரம் கூடுவதாக உள்ளது என்று நேராகவே சொல்ல ஆரம்பித்துவிடுகிறார். அந்த கூறல் முறையில் தங்குதடையே ஏற்ப்படுவது இல்லை. தொகுப்பில் நகரத்திற்க்கு வெளியே சிறந்த கதையாக இருக்கிறது! கதை சமகாலத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறது, வாசிப்போர் சூரிய பிரகாஷாக இருக்கவும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது ! ஆசியா மேன்சன் , அடைபடும் காற்று என்கிற கதைகள் இரண்டும் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அது சொல்லப்பட்ட முறையில் கோளாறாகக் கூட இருக்கலாம். மழைபுயல்சின்னம் அகநாழிகை இதழில் வந்தது. இதழில் படிக்கும்போதே சென்னை சூழலையும் காதல் என்ற சொல் நகரங்களில் கற்பழிக்கப்படுவதும் .. இதற்க்கெல்லாம் என்ன அர்த்தம் ? இப்படியேதான் வாழ்ந்து தீரவேண்டுமா ? என்றெல்லாம் தோன்றியது.

வாழப்பழகிக் கொண்டவர்களுக்கு வருத்தங்கள் பெரிய விஷயங்கள் இல்லைதான் என்பதை அழகாகச் சொன்ன படைப்பு. ராமநேசன் என்கிற கதை நண்பனைப்பற்றிய தகவலில் இருக்கிறது, பின் அட்டையில் நகரம் தரும் கனவுகளும் பயங்களும் தீவிரமான மனப்பிறழ்வை உருவாக்குபவை. என்கிற வாசகம் பயமுறுத்தினாலும் நகரங்கள் இப்படித்தான் என்பதை உணர்ந்து கொள்ள எனக்கு இந்த தொகுப்பு அவசியமாகப்படுகிறது!

பாக்கியம் சங்கர் இந்த தொகுப்பு பற்றி என்னிடம் பேசுகையில் சாருவாகன்,ஆதவன், அசோகமித்திரன் ஆகியோர் வாழ்வின் தரிசனங்களை தம் எழுத்தில் பதிய வைத்தது போல் விஜயும் வெகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவு செய்ததாகக் குறிப்பிட்டார். வசவச கசகசவென மொழியைத் திருகி பிசைந்து கொண்டு இருந்த திருச்செந்தாழை, லஷ்மிசரவணகுமார்,எஸ் செந்தில்குமார் சிறுகதைகளுக்குள் நுழையவே அவ்வளவு சங்கடம் பிறந்துவிடுகிறது! தான் எழுதிய கதைகளை வாசிக்க வைத்த சாமார்த்தியமே இத்தொகுப்பின் வெற்றி என்கிறார். தொடர்ந்து மேலும் சாதிப்பார் என்று நம்புகிறேன் என்றெ குறிப்பிட்டார்.

இந்த தொகுப்பின் வெற்றியை இங்கேயிருந்தே பாட்டிலை நீட்டி சியர்ஸை சொல்லி தனியாக நாளை கொண்டாட வேணும்.தொடர்ந்து இயங்குவது சிரமமான இந்த சூழலில் மிக முக்கியம் நண்பரே ! உங்கள் நாவல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் !

நகரத்திற்கு வெளியே -விஜய்மகேந்திரன்
உயிர்மை பதிப்பகம் விலை 50.00

Monday, February 22, 2010

சிறுவர் சினிமா’


நிகழ்வும் சாரமும்


விஸ்வாமித்திரன் எழுதி ‘புதிய பார்வை’ இதழில் வெளிவந்து, வாசகர்களின் பரவலான கவனிப்பையும் பாராட்டுதலையும் பெற்ற உலகத்தின் சிறந்த சிறுவர் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களடங்கிய ‘சிறுவர் சினிமா’ புத்தகத்தை ‘வம்சி புக்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. 07.01.2008 அன்று, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் உள்ள ‘வம்சி புக்ஸ்’ விற்பனை அங்காடியில் புத்தகத்தின் முதல்பிரதி வெளியிடப்பட்டது.

இலங்கைத் திரைப்பட இயக்குநரும், சர்வதேச அளவில் இலங்கைத் திரைப்படங்களைக் கொண்டு சென்றதில் முக்கியமான படைப்பாளருமான பிரசன்ன விதானகே ‘சிறுவர் சினிமா’ புத்தகத்தை வெளியிட, எழுத்தாளரும் ‘கல்லூரி’ திரைப்பட ஒளிப்பதிவாளருமான செழியன் பெற்றுக் கொண்டார். திரைப்பட இயக்குநர்கள் அம்ஜத் மீரா அகிலன், மாமல்லன், யுவராஜ் மற்றும் எழுத்தாளர் விஜய் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புத்தகத்தை வெளியிட்டுப் பேசின திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகே, “தமிழ்த் திரைப்படங்களில் தற்போது குறிப்பிடத்தக்க மாற்றம் நிலவி வருகிறது எனவும், உலகத் திரைப்படங்கள் குறித்த பிரக்ஞை தமிழ் இளைஞர்களிடையே பரவி வருகிறது எனவும் எனக்குத் தோன்றுகிறது. இந்த மாற்றத்திற்கு விஸ்வாமித்திரன் போன்றோரின் திரைப்பட எழுத்துக்களும் முக்கியமான காரணம்” என்று குறிப்பிட்டார்.

இந்நூல் குறித்து விஸ்வாமித்திரன் பேசும்போது, “உலகத் திரைப்படங்களை பரவலாக்குவதோடு மட்டுமில்லாமல், சிறுவர் வாழ்வியலைச் சித்திரிக்கும் படங்கள் குறித்து தமிழ்ப் பார்வையாளர்கள் கொள்ளவேண்டிய கூர்ந்த கவனத்தை ஏற்படுத்துவன் நோக்கமே இந்த நூலை நான் எழுத காரணமாயிற்று என்றார். மேலும், ‘வம்சி புக்ஸ்’ மூலம் இந்த நூலை பதிப்பித்த எழுத்தாளர் திரு. பவா செல்லதுரை அவர்கள் எல்லா தரப்பினரையும் பாரபட்சமின்றி புத்தகம் சென்றடைய வேண்டுமென்ற சீரிய நோக்கத்தில் குறைந்த அடக்க விலையை நிர்ணயித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” எனவும் கூறினார்.

விழா எளியமுறையில் நடந்தேறியது. ‘சிறுவர் சினிமா’ புத்தக வெளியீடு என்பதை பறைசாற்றும் வகையில் பள்ளிச் சிறுவர்களும் கலந்து கொண்டது விழாவை இன்னும் சிறக்கச் செய்தது.சிறந்த உலகத் திரைப்படங்கள் – முதல் பகுதி

பதிப்பு: டிசம்பர் 2007
ரூ. 80

வெளியீடு:

வம்சி புக்ஸ்,
19, டி. எம். சாரோன்,
திருவண்ணாமலை – 606 601
தொடர்பு எண்: 94448 67023, 94432 22997- விஜய் மகேந்திரன்

*

நன்றி – ‘புதிய பார்வை’
ஜனவரி (15-30) இதழ்

Saturday, February 20, 2010

சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ புத்தக விமர்சனம்


வெறும் கதை சொல்லல் மட்டும் நாவல் அல்ல. தமிழ் நாவல்களில் பல புதுவகையான உத்திகள் கையாளப்பட்டன. அதில் நான் லீனியரும் ஒன்று. கை போன போக்கில், எழுதிச் செல்வது, முன் மாதிரியான முடிவுகள் எதுவும் வைத்துக்கொள்ளாமலே, ஊடே ஆசிரியரின் மனமொழி இவற்றில் வெளிப்படும்.

பெரும்பாலும் நான் லீனியர் முறையில் எழுதப்படும் கதைகள் தமிழில் கவனத்தைப் பெறுவதில்லை. காரணம் இந்த எழுத்து முறையை கையாள்பவருக்கு அதீத மொழிநுட்பமும், சரளமான மொழிநடையும் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் ஆசிரியர் இதைத்தான் சொல்ல வருகிறார் என்பதே புரியாமல் போய் விட வாய்ப்புகள் அதிகம்.

சுதேசமித்திரனின் “ஆஸ்பத்திரி” நான்-லீனியர் முறைப்படி எழுதப்பட்டுள்ௗ நாவல் என்றாலும் அந்த முறைமைக்குள் மட்டும் முற்றிலும் அடக்கிவிட முடியாத நாவல். இரு மகன்கள் மற்றும் அவர்களது அப்பாவின் மரணம் நிகழும் ஆஸ்பத்திரியையும் மையமாக கொண்டு, முன், பின்னாக சம்பவங்களைக் கோர்த்து “ஆஸ்பத்திரி” என்ற ஸ்தாபனத்தின் மீதான தனது விமர்சனங்கௗயும், ஆற்றாமைகளையும் முன் வைக்கிறார்.

“கொலை செய்வதற்கு எனப் பிரேத்யேகமான சில இடங்கள் உண்டு” என்ற வாசகத்துடன் இந்நாவல் ஆரம்பமாகிறது.

அப்பா உயிருக்காக போராடிக் கொண்டிருந்த போது, நாங்கள் வீட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா இரவு மேட்ச் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தோம். ஸ்ரீகாந்த் பேட் செய்து கொண்டிருந்தார் எனவும் நாவலின் ஆரம்பத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த ஒருவரி கதை நடைபெறுவது கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்பதைக் குறிப்பால் உணர்த்திவிடுகிறது.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ வசதிகள் இந்த அளவு எல்லா மருத்துவ மனைகளிலும் பரவலாக்கப்படவில்லை. முக்கியமாக, சென்னையில் இரு பெரும் மருத்துவமனைகள் அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தது என்பதையும் நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். அந்த இரு மருத்துவமனைகளில் வசூலிக்கும் கட்டணங்கள் நடுத்தர வர்க்கத்தினரின் தரத்தை விட மிக அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லாமல், சொத்துக்களை விற்று, அங்கு மருத்துவம் பார்த்தவர்களையும் நானே கண்டிருக்கிறேன். அங்கு ஒரு நாளைக்கு ஐ.சி.யூ.வில் இருக்க வசூலிக்கப்படும் கட்டணம், இன்று சென்னையில் சாப்ட்வேர் இஞ்சினியராக இருப்பவரின் ஒரு மாதச் சம்பளம் ஆகும்.

நடுத்தர வர்க்கத்தினரின் தரவை மட்டுமே பெரும்பாலும் நம்பி நடைபெறும் இம்மருத்துவமனைகளில் அவர்கள் மருந்துக்குக் கூட மதிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். அதை பல்வேறு இடங்களில் நாவலில் சுவாரசியமாக பதிவு செய்துள்ளார் சுதேசமித்தரன். பணக்காரராக இருப்பின் வெளிநாடுகளிலும், ஏழையாக இருப்பின் அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவம் பார்த்துக் கொள்வது சகஜம். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. இதற்கு இந்நாவலில் தகுந்த காரணத்தையும் விளக்கியுள்ளார்.

சுதேசமித்திரனின் முந்தைய நாவலான “காக்டெய்லை” விட பல படிகள் உயர்ந்து நிற்கக் கூடியது ஆஸ்பத்திரி. மெல்லிய அங்கதமும், சுவாரஸ்யமான எழுத்தின் வேகத்தோடும் சேர்த்து சிறந்த கதை ஒன்றையும் சொல்லி விடுகிறார். நான்-லீனியரில் கதை சொல்வது கடினம், ஆனால் அதையும் இஇதில் செய்து காட்டியிருக்கிறார்.

உண்மைகள் உறவாடும் எழுத்துக்களில், நான்-லீனியரின் தனிக்குரலாக சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ நாவலை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

வௌயீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 144
விலை : ரூ.80/-


-----------------------------------------------------------------------------

Saturday, February 13, 2010

புத்தகம் கிடைக்குமிடம்எனது நகரத்திற்கு வெளியே சிறுகதை தொகுப்பு discovery book palace கே.கே.நகரில் கிடைக்கிறது.இதன் உரிமையாளர் வேடியப்பன் சிறந்த இலக்கிய ஆர்வம் உள்ளவர்.நல்ல இலக்கிய புத்தகங்களை சிறந்த முறையில் வரிசைபடுதிள்ளனர் .மேலும் இலக்கிய கூட்டங்களுக்கும் அதில் இடமளிக்கின்றர்.அது பாராட்டுக்குரியது.
முகவரி
dicovery book place, மகாவீர் காம்ப்ளெக்ஸ்,
முனுசாமி சாலை,பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,சென்னை-78
cell-9940446650.

Tuesday, February 2, 2010

கவிஞர் விக்கிரமாதித்யன்

சந்திரா அவர்கள் எழுதி அவரது ப்ளாக் இல் பிரசுரமான பதிவு.

கவிஞர் விக்கிரமாதித்யன் அவர்களுக்கு தமிழின் சிறந்த இலக்கிய விருதான விளக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கான பாராட்டு விழா 31.01.2010 அன்று நடந்தது. மிகப்பெரிய கூட்டம் இல்லை. ஆனால் அவரை விரும்பியவர்கள் அல்லது அந்த ஆளுமையை புரிந்துகொண்டவர்கள் அங்கே இருந்தார்கள். விக்கிரமாதித்யனைப் பற்றி சொல்லும்போது காடாறு மாதம் நாடாறுமாதம் வாழ்கிறவர் என்பார்கள். அவரை விரும்பியவர்களால் நாடோடி நம்பியண்ணன் என்று செல்லமாக அழைக்கப்படுபவர். அவருடைய வாழ்க்கை முழுதும் பயணத்தால் நிரம்பியிருக்கிறது. அது தத்துவார்த்தமும் விரக்தியும் வறுமையும் தேடலுமான பயணம். விக்கிரமாதித்யனை ஒரு கவிஞனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அப்படி கவிஞனாக வாழ்வதில் உள்ள பொருளாதார சிக்கலும் மனச்சிக்கலும் மிகப் பெரிது. வலி நிறைந்தது. ஒரு கவிஞனாக வாழ்வதில் அவருக்கு மிகப்பெரிய ஆனந்தம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால் அவரால் ஒரு கவிஞனாக மட்டுமே வாழமுடியும்.

அவருக்கான விளக்கு விருது பாராட்டு விழாவில் மிக அசௌகரியமாகவே உட்கார்ந்திருந்தார். ஆம் அவர் மேடையையும் பாராட்டையும் விரும்பவில்லை என்றே தெரிந்தது. அவர் தன்பின்னால் எந்த ஒளிவட்டத்தையும் வைத்துக்கொள்ளவில்லை. அதுவே அவரை மிகச் சிறப்பான இடத்தில் வைத்திருக்கிறது. அவரைப்பற்றி, கவிதையில் அவர் ஆளுமையைப்பற்றி, அவர் வாழ்க்கையைப்பற்றி விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசும் போது அதை மிக ஆர்வமாக எளிமையாக எதிர்கொண்டார். சிலசமயம் வெட்கத்தோடு ஒரு சிறுவனைப் போல் சிரித்துக்கொண்டார். என்னை அவரிடம் பலமுறை பலபேர்(இலக்கிய நண்பர்கள்) அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் இவங்களை எனக்கு ‘நல்லாத் தெரியுமே’ என்பார். ஆம் அவரை ஆறாம்திணை இணைய இதழுக்காக நேர்காணல் செய்திருக்கிறேன். அப்பொழுது முதல் இலக்கிய கூட்டங்கள் புத்தகக் கண்காட்சிகளில் சந்திக்கும் போது நினைவு கூர்ந்துகொள்வார். நேர்காணலில் மட்டும் அவரிடம் நிறைய பேசினேன். அதன்பின்னான சந்திப்புகளில் நலம் விசாரிப்புகளோடு பேச்சு முடிந்துவிடும். ஆனால் எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞராக இருந்தார். அவரைப் பற்றிய செய்திகளை அங்கங்கே கேட்டுக்கொண்டே இருப்பேன்.

ஏனேன்று தெரியவில்லை. அவருடைய கவிதையை விட அவருடைய வாழ்க்கை மிகவும் அவதானிப்புகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒரு கவிஞனின் நலிந்த வாழ்க்கை சுவாரஸ்யத்தை கொடுக்கிறதா? இது மிகப்பெரிய கேள்வியாக எனக்குள் இருக்கிறது. சமிபத்தில் அவருக்கு சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பு வந்தது. அவரும் ஒப்புக்கொண்டிருக்கிறார். பாடல் ஒலிப்பதிவு நடக்கும் நாளை அவரிடம் தெரியபடுத்த படக்குழுவினர் முற்பட்டபோது வழக்கப்போல் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை. அவரிடம் செல்போனும் கிடையாது. அவர் பாடல் எழுதும் வாய்ப்பை விரும்பியோ விரும்பாமலோ தவறவிட்டார். அதைப்பற்றி விசனத்தோடு இருக்கிறாரா என்றும் தெரியவில்லை. ஆனால் எப்போதும்போல் சிரித்த முகத்தோட இருக்கிறார். இந்த விசயம் கேள்விப்படும் அனைவரும் ‘ஏன் இவர் இன்னும் பொழைக்கத் தெரியாம இருக்கிறார்’ என்பார்கள். அவை எல்லாவற்றிர்க்கும் அவருடைய பதில் ஒரு சிரிப்பாகத்தான் இருக்கும். நான் கடவுள் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அது பற்றியும் அவருக்கு பெரிதான அபிப்ராயம் இருப்பதுமாதிரி தெரியவில்லை. அதையும் தன் வாழ்வின் ஒரு சாதாரண நிகழ்வாகவே நினைக்கிறார்.

புதிதாக எழுத வருபவர்களை எந்த தலைமைப்பீடத்தையும் தலையில் வைத்துக்கொள்ளாமல் பாராட்டி வளர்த்துவிடுவார் என்பார்கள். ‘ஆரம்பகாலத்தில் விக்கிரமாத்தியன்தான் என் எழுத்தை பாராட்டி அதை பத்திரிக்கைகளில் வெளிவருவதற்காகவும் முயற்சி செய்தார்’ என்று அஜயன்பாலா விழாவில் பேசினார். விக்கிரமாதித்யனைப்பற்றி பல சுவாரஸ்யமான விசயங்களை பகிர்ந்து கொண்டார். ஒரு நாள் விக்கிரமாதித்யனுக்கு நடிகை விஜயசாந்தியை பார்க்க வேண்டும் போல் இருந்திருக்கிறது. அஜயன்பாலாவை அழைத்துக்கொண்டு விஜயசாந்தி வசிக்கும் தி.நகர் ப்குதியில் ராத்திரியெல்லாம் அலைந்துகொண்டிருந்திருக்கிறார். இது ஒரு சாதாரண ரசிகன் ஒரு நடிகையை பார்க்கும் ஆவலைப்போல் இல்லை. அவருக்கும் தெரிந்திருக்கும் ராத்திரியில் ஒரு நடிகையின் வீட்டை கண்டுபிடித்து அவரைச் சந்திப்பது சாத்தியமில்லை என்பது. இருந்தும் அந்த ராத்திரி முழுதும் அந்த நடிகையின் ஞாபகத்தில் இருக்க விரும்பி இருக்கிறார். அந்த கவிதை மனது சரியானதா இல்லையா என்பது விசயம் இல்லை. ஆனால் அவர் அப்படித்தான் இருந்திருக்கிறார். அதேபோல் ‘பருவராகம்’ என்றொரு இதழ். அது ஒரு பாலியல் விசயங்களை உள்ளடக்கிய இதழ். அந்த இதழில் விக்கிரமாதித்யனின் கவிதை ஒரு காலத்தில் வந்திருக்கிறது. அந்த இதழுக்கெல்லாம் எழுதி அவர் சம்பாதிதார் என்று அர்த்தம் இல்லை. அது எதிர்புரட்சியும் அல்ல. வாழ்க்கை மீது விருப்பு வெறுப்பு என்று பிரித்தறிய முடியாத ஏதோ ஒரு சுவை அதில் அடங்கியிருக்கிறது. காலம் இவரை தவறவிட்டுக்கொண்டிருக்கும் அல்லது சிலநேரம் காலத்தை இவர் தவறவிட்டுக்கொண்டிருப்பார். எதுவாக இருந்தாலும் காலம் இவரை ஒரு கவிஞனாக வைத்திருக்கிறது. இது சாபமா? வரமா? என்று தெரியவில்லை.