''கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைகளுக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை அவளுக்கு
உள்நாட்டு போரின் போது
அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென''
வளரும் நாடுகளின் ஆயுதப்போட்டியை ,போரின் போது அப்பாவிக்குழந்தைகள் கொல்லப்படுவதன் வலிமிகு உணர்வை இந்தக்கவிதையில் நுட்பமாக முன்வைக்கிறார்.இவரது கவிதையின் பாடுபொருட்கள் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது ,நிலங்கள் தவறான முறையில் கையகப்படுத்தப் படுவது ,கனிமவளங்கள் திருட்டுப்போவது ,கார்ப்பரேட்களின் ஆதிக்கததிற்க்கு எதிரான குரல் ,கருத்துரிமையை சிதைக்கும் காரணிகள் என பின் காலனிய நாடுகளில் வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் அத்தனை அபத்தங்களையும் பகடி செய்வதாக அமைந்திருக்கிறது.
சூழலியல் சார்ந்து மிகுந்த அக்கறை கொண்டவாராக தெரிகிறார் நரன்.'' மஞ்சள்நிற கோதுமை'' என்ற கவிதையில்
''இவ்விகார குழந்தையை
நேற்று அணுக்கழிவாகக் கூடத்தான் கண்டேன்.
இனிப்பு பாலைத்தான் இன்று தயிராய் அருந்தினீர் புளிப்பு மனிதரே
போபாலில் ஓராயிரம் மண்டைஓட்டை அடுக்கி வைத்தீரே
விருந்து ஓடும்.தென்கோடிக்கரைக்கு சாக்குப்பையோடு.''
சூழலியல் சார்ந்த பயத்தையும் அவரது அக்கறையை வலுவாக இக்கவிதை வெளிப்படுத்துகிறது.இன்னொரு கவிதையான ''பக்க விளைவுகள் '' கருத்து சுகந்திரம் அரசு இயந்திரத்தால் நசுக்கப்படுவதை மிகவும் பகடி செய்யும் கவிதையாக இருக்கிறது.
''இந்நிலத்திற்கும் அதன் மேல் வாழும் மக்களுக்கும்
வழங்கவென சில ஆன்டி பயாடிக் மாத்திரைகள்
பேச்சுரிமைக்கும் எழுத்துரிமைக்கும் கருத்துரிமைக்கும்
எதிராய் வேலை செய்யுமாம்
ஆலோசனையும் மாத்திரையும் ஆரம்ப சுகாதார மையங்களில்
இலவசமாக அரசு வழங்குகிறது ''
என்று ஆரம்பிக்கும் கவிதை ''பக்க விளைவுகள் நிச்சயம் இருக்கத்தான் செய்யுமாம் ''என பகடியுடன் முடிகிறது.பின் நவீனத்துவ கவிதைகளுக்கு இருக்கும் பொதுவான கூரான பகடியை (satire),அதிகாரமையங்களை கேள்விக்குள்ளாக்க பயன்படுத்துகிறார் நரன் .இவ்வகை பகடியின் உச்சமாக ''2 பாயிண்ட் தீவிரம் ''கவிதை அமைந்திருக்கிறது.இக்கவிதையில் வரும் திரு.எம் அடையாளச்சிக்கலினால் அல்லல்படும் நபராகவே இருக்கிறார்.என்னவாவது செய்து புகழ் பெற வேண்டும் எனநினைக்கும் பொதுப்புத்தியினரின் அடையாளச்சிக்கலை பகடி செய்வதாக கவிதை உள்ளது.
''விற்பனைப் பிரதிநிதி நண்பனொருவன்
தன் கழுத்து டையினாலேயே கழுதை இறுக்கி
சுய கொலை செய்து பிரபலமானதை
செய்திதாள்களில் படித்த நாள் முதல்
தானும் டை அணிய பழகிக் கொண்டிருக்கிறார்.''
என்ற வரிகளில்
பொதுப்புத்தியினரின்''போலச்செய்
''அங்கே பாருங்கள் ,சில கரையான்கள் அவள் உதட்டிலிருந்து
அழுகையை மட்டும்தனியே பிரித்துப் போய்
உண்டு கொண்டிருக்கின்றன ''
இவ்வரிகளில் இருப்பது ஓவிய விவரிப்பு முறை கவித்துவ கட்டமைப்புக்களே ,இவ்வகைகட்டமைப்புகளை தொகுப்பில் பலவேறு இடங்களில் சிறப்பாய் பயன்படுத்தி இருக்கிறார் நரன். அதே போல ''லீ கூப்பர் ஷூ ''என்னும் படிமத்தை கார்ப்பரேட்களின் ஆதிக்கததிற்க்கு எதிரான குரலாக பயன்படுத்தி இருக்கிறார் தொகுப்பில் சில இடங்களில்.உலகமய மாதலின் விளைவாக நடைபெறும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தொழிலாளர்களை கிட்டத்தட்ட அடிமை முறையில் வேலை வாங்கி விட்டு அதை நல்லதொரு வாழ்க்கை வாழ்வதாக அரசு நம்பிக்கை தருவதையே ''இங்கே ''என்னும் கவிதை கலைத்துப் போட்டு மறு பரிசிலனை செய்ய சொல்கிறது.ஆற்று மணலும் மலைகளும் டெண்டர் விடப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதற்கு எதிரான அரசியலை ''காதை மூடிக் கொள் '' கவிதை முன் வைக்கிறது.
இம்மலையை டெண்டர் எடுத்த குவாரிக்காரன் .
ஜெலட்டின் குச்சி ;கரி மருந்து ; அழுத்த்துவிசை
காதை மூடிக்கொள் .
பலத்த ஓசை பொடி பொடிந்து …………
மூனறாம் நூற்றாண்டு சமண படுக்கையது .
புடைப்பு சிற்பத்தின் கையில் கூம்பு தாமரையை
சுமந்து நிற்க்கும் ரூப சுந்தரி
கை தனியாய் ;மலர் தனியாய் ;மார்பு தனியாய் - யெல்லாம்
இந்நூற்றாண்டின் ஜெலட்டின் குண்டு வெடித்து .
குவாரி லாரிகளில் எற்றப்பட்டு
அவள் பிருஷ்டமும் ,மார்பும் சமதாளமாக்கப்பட்டு வழவழப்பாக்கப்படும் .
இந்நகரெங்கிலும் வீற்றிருக்கும் அரசு பூங்காக்களின்
கற்பெஞ்சுகளில்
ஜோடிஜோடியாய் வந்தமர்கின்றன. புடைத்த பிருஷ்டங்கள்.
தனித்துவமான மொழி கட்டமைப்பு,அபூர்வமான பகடிகள் ,புதிய பாடுப் பொருட்கள் ,என நரனின் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுப்பு சிறப்பாக வந்துள்ளது.கொம்பு பதிப்பகம்,புத்தகத்தை அழகான முறையில் பொருத்தமான ஓவியங்களுடன் கொண்டுவந்து இருக்கிறது.கவிதைகளின் உள்ளடக்கத்தை இவ் ஓவியங்கள் இன்னும் ஒருபடி தீவிரப்படுத்துகின்றன.
நன்றி தீராநதி ஜூலை 2014
கொம்பு பதிப்பகம்,
எண் 11.பப்ளிக் ஆபிஸ் ரோடு ,
தேவி திரையரங்கு அருகில்,நாகப்பட்டினம் 611001
போன் 9952326742
விலை ரூபாய் 60
No comments:
Post a Comment