Friday, March 7, 2014

நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்

எழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
‘காவ்யா,’ பதிப்பக உரிமையாளர் சண்முகசுந்தரம் அறிமுக உரை ஆற்றினார். ‘என் பெயர்,’ நாவல் ஒரு மையம் உடைந்த எழுத்தின் வகையில் அமைந்த நாவல் என்று அவர் கூறினார். இது போன்ற மையம் உடைந்த எழுத்துக்கள் நமது சங்க காலப் பாடல்களிலும் உள்ளன என்றார் அவர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், நிஜந்தனின் ஆறு நாவல்களை ஆய்வு செய்து எழுதிய கட்டுரையையும் அவர் வாசித்தார். அதில், ‘நகரம் சார்ந்த மனிதர்களின் வாழ்வை நிஜந்தன் பின்நவீனத்துவ பாணியில் பதிவு செய்திருக்கிறார்,’ என்று சுப்ரபாரதிமணியன் கூறியிருக்கிறார்.
கவிஞர் அமிர்தம் சூர்யா, ‘என் பெயர்,’ நாவலைப் பற்றிய மதிப்புரை வழங்கினார். அதில் அவர், ‘நிஜந்தன் எனும் கதைசொல்லியை nijanthan book release 2எதிர்கொள்ளும் நிஜந்தன் எனும் இளைஞனின் தற்கொலைக்குப் பின்னால் பார்வையற்றவன் ஒருவனை மறுமணம் புரியும் அவனுடைய மனைவி, கருவில் இருக்கும் குழந்தைக்கு நிஜந்தன் என்று பெயரிட நினைக்கும்போது அது கருவில் கலையும் அவலத்தைக் காட்டுகிறது இந்த நாவல். செயற்கைக் கருத்தரிப்பு மூலம் பிறந்த குழந்தைக்கு, இறந்துபோன மகனின் நினைவாக நிஜந்தன் என்று பெயர் வைக்கும் அவனுடைய பெற்றோரும் இறந்துபோய்விட, காணாமல் போகிறான் குழந்தை நிஜந்தன். அவன் கிடைப்பானா, கிடைப்பது என்பது என்ன என்பது போல் கதை விரிகிறது. ‘என் பெயர்,’ எனும் நாவல், பல தளங்களை முன் வைக்கிறது. ஒரே பெயர் கொண்ட மனிதர்களின் உளவியலை அலசி ஆராய்கிறது. தற்கொலை உணர்வின் அடித்தளத்தை இந்தக் கதை ஆய்கிறது. ஒரே கதையில் பல கதைகள் இருக்கும் உத்தி புதியதாக இருக்கிறது. இந்தக் கதையின் கட்டமைப்பு புதியதாக இருக்கிறது. உடல் அரசியல் இந்தக் கதையில் முன் வைக்கப்படுகிறது. கதையின் இறுதியில், நிஜந்தன்கள் சாவதில்லை என்று கதைசொல்லி கூறுவதன் மூலம் என்ன சொல்லப்படுகிறது? உயிர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்படுகிறதா? ஆண்கள் தீர்வதில்லை, ஆணாதிக்கம் தீர்வதில்லை, உடல் மேலாண்மை முடிவதில்லை என்று சொல்லப்படுகிறதா? இந்தக் கதை, எனக்கு கவிதை எழுதும் உற்சாகத்தை அளித்தது,’ என்று பல கருத்துக்களை முன்வைத்தார்.

மதிப்புரை வழங்கிய, எழுத்தாளர் விஜய மகேந்திரன், ‘சுயசார்பு கொண்ட பெண்கள், கணவனால் அழுத்தப்படும்போது அடங்கிப்போவார்களா, எதிர்த்து நிற்பார்களா என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது. பிரம்மஸ்ரீ சுரேஷ் என்ற பாத்திரம் பின்நவீனத்துவ நாவலின் படிமங்களைக் காட்டுகிறது. இந்த நாவலில் புறவய விவரணைகள் இடம்பெறவில்லை. பல இடங்களில் ஊடகங்களில் செய்தி சொல்லும் நடை கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது கணவனால் தள்ளப்பட்டு கரு கலைவது கொஞ்சம் நாடகத்தனமாக இருக்கிறது. இது ஒரு நல்ல நாவல். தமிழில் நல்ல நாவல்கள் பல கவனிக்கப்படுவதில்லை போலவே இருக்கிறது,’ என்று கூறினார்.


‘என் பெயர்,’ நாவலை ஆய்வு செய்து பேசிய கவிஞர் உமா சக்தி, ‘பல நூல்களின் பிரதிகள் இந்த நாவலில் இடம்பெற்றிருப்பது பலம் சேர்க்கிறது. முந்தைய நாவல்களின் சுருக்கம் இடம்பெற்றிருப்பது புதிய உத்தி. கதை சொல்லிக்கு நபீலா என்ற பாத்திரத்தின் மீது தனி கவனம் இருந்தாலும், பக்குவத்துடன் அதை அணுகியிருப்பது பாராட்டுக்குரியது. இரண்டாவது கணவன் மூலமான குழந்தைக்கும் ஏன் முதல் கணவனின் பெயரான நிஜந்தன் என்பதையே வைக்க ப்ரியா நினைக்க வேண்டும்? கரப்பான் பூச்சி இந்த நாவல் முழுக்க ஒரு படிமமாக இடம்பெறுகிறது. அது முதலில் வந்த உயிர், அது அழியாது, எனவே நிஜந்தன் என்ற பிம்பத்திற்கும் அழிவில்லை. நான் யார், நாம் யார் என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது. வேகமாக சில பாத்திரங்கள் வந்து போகின்றன. அவை அதிக தாக்கம் கொடுக்கும்படி இருந்திருக்கலாம்,’ என்று கூறினார்.

ஊடகவியலாளர் புருஷோத்தமன் தனது மதிப்புரையில், ‘பெயர்களும், நிகழ்வுகளும் இந்த நாவலில் திரும்பத் திரும்ப வருகின்றன. பல மரணங்கள் கதையில் நிகழ்கின்றன. ஆனால் அது கதையோட்டத்தைப் பாதிப்பதில்லை. மழை ஒரு குறியீடாக நாவல் முழுக்க வந்து போகிறது. அதே போல் கரப்பான் பூச்சிகளும் முக்கியப் பாத்திரம் ஏற்றிருக்கின்றன. நித்யஸ்ரீ கணவனின் தற்கொலை, இளவரசனின் தற்கொலை, உயிரியல் பூங்காவின் புலிகள் என்று பல்வேறு சமூகப் பிரச்னைகள் கதையின் ஓட்டத்திற்குப் பயன்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளை அதிகக் கவனம் கொண்டு அணுக வேண்டாம் என்று இந்த நாவல் ஓரிடத்தில் பலமாகக் கூறுகிறது,’ என்று கூறினார்.

இறுதியில் நன்றியுரை வழங்கிய எழுத்தாளர் நிஜந்தன், ‘இந்த அறிமுகக் கூட்டம், எனக்கே என்னை அறிமுகம் செய்து வைத்தது. நிஜந்தன்கள் சாவதில்லை என்று கூறியதன் மூலம் அதிகாரப் பரம்பரை சாகாது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இறுதியில் கரு கலைவது மட்டும் நாடகத்தனம் கொண்டது என்று கூற முடியாது. முழு நாவலே நாடகப் புனைவு கொண்டதாகத்தான் இருக்கிறது. வாழ்வில் இருக்கும் புனைவை புரிந்துகொண்டால்தான், புனைவில் இருக்கும் வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும். புறவய விவரணை என்னுடைய நாவல்களில் குறைவு என்பதை ஏற்றுக்கொள்கிறேன்,’ என்று கூறினார்.

டிஸ்கவரி புக் பேலசைச் சேர்ந்த வேடியப்பன் நிறைவுரை வழங்கினார். ‘விவரம் தெரிந்த வாசகர்கள், நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள். அமிர்தம் சூர்யாவின் பேச்சு ஒரு மேஜிக் போல இருந்தது. நாவலைப் படிக்கத் தூண்டியது,’ என்று கூறினார்.
தொலைக்காட்சித் தொகுப்பாளர் ராமகிருஷ்ணன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
http://nadappu.com/nijanthans-en-peyar-novel/
-நன்றி நடப்பு.காம்

No comments:

Post a Comment