Friday, September 17, 2010

Post-Postmodernism எனப்படும் பிந்தைய பின் நவீனத்துவம் குறித்து....

Post-Postmodernism எனப்படும் பிந்தைய பின் நவீனத்துவம் குறித்து....
எம்.ஜி.சுரேஷ்


பின் நவீனத்துவம் ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக சிலர் தொண்ணூறுகளில் அறிவித்தார்கள். அதாவது, பின் நவீனத்துவம் அவுட்-ஆஃப் ஃபேஷன் ஆகிவிட்டது என்றும், கடந்த 50 ஆண்டுக் காலத்தில் நுகர்வோர் கலாச்சாரம் புதிய பரிமாணங்களை எட்டிவிட்டது என்றும், அதன் விளைவாக 1990ன் பிற்பகுதியில் பிந்தைய பின் நவீனத்துவம் (Post-Postmodernism) தோன்றி விட்டது என்றும் உறுதி செய்தார்கள். பின் நவீனத்துவம் நம்பிக்கையின்மையை விதைக்கிறது. எனவே, நம்பிக்கை, விசுவாசம், நம்பிக்கையூட்டும் உரையாடல், நிகழ்த்திக்காட்டுதல் ஆகியவற்றை மீட்டெடுக்க வேண்டும். அதன் மூலம் பின் நவீனத்துவ நகை முரணை (Post modern irony) கடந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். அதைத் தொடர்ந்து இந்தப் புதிய சிந்தனையை வடிவமைப்பதில் சிலர் முனைந்தனர். (உண்மையில் பின் நவீனத்துவம் அவ நம்பிக்கையை விதைக்கவில்லை. நம்பிக்கையின் மேல் கேள்விகளை எழுப்பியது; விசாரணை செய்தது என்பது வேறு விஷயம்.)

அமெரிக்கக் கட்டடக்கலை நிபுணரான கிறிஸ்தோபர் அலெக்ஸாண்டரின் தாவோயிஸ அடிப்படையிலான கட்டடக்கலை, ஜெர்மானிய ஜெஸ்டால்ட் உளவியல், குஸ்தாவ் யங்கின் மூலமாதிரிக் கருத்தியல் ஆகியவற்றைக் கலந்து டாம் டர்னர் என்ற கட்டடக்கலைஞர் ஒரு கொள்கையை உருவாக்கினார். அந்தக் கொள்கையின் அடிப்படையில் ஒரு புது மோஸ்தர் நகரமைப்புத் திட்டத்தை உருவாக்கினார். தனது கருத்தியலை ‘பிந்தைய பின் நவீனத்துவத் திருப்பம்’ என்ற த்லைப்பில் ஒரு சிறு நூலாக எழுதினார். அந்த நூல் 1995 ஆம் ஆண்டு வெளியானது. கவனிக்கப்படாமல் போயிற்று.

1999ம் ஆண்டு, ருஷ்ய பின் நவீனவாதியான மிகயீல் எப்ஸ்டீன் ஒரு நூல் எழுதினார். அதில், ‘நவீனத்துவத்தில் இருந்து பின் நவீனத்துவம் வெளிப்பட்ட மாதிரி பின் நவீனத்துவத்தின் நீட்சியாக அதற்கு அடுத்த கட்டம் தோன்றி விட்டது’ என்று குறிப்பிட்டார். அதை ‘அப்பாலை பின் நவீனத்துவம்’ (Trans Postmodernism) என்று அழைக்கலாம் என்பது அவர் கருத்து. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பின் நவீனத்துவம் தோன்றி, தனக்கு முன் இருந்த பல கருத்தியல்களுக்கு ‘பின்’ (Post) என்ற முன்னொட்டு சேர்த்தது. அதன் விளைவாக, நவீனத்துவம் பின் நவீனத்துவமாக மாற்றம் கொண்டது. தொடர்ந்து, பின் காலனியம், பின் மார்க்ஸிஸம், பின் முதலாளியம், பின் கருத்துமுதல்வாதம் என்று எல்லாமே ‘பின்’ என்ற முன்னொட்டால் அடையாளப்படுத்தப்பட்டன. இப்போது அப்பாலை பின் நவீனத்துவத்தின்படி பழைய கருத்தியல்கள் யாவும், பின் என்ற முன்னொட்டுக்குப் பதில் அப்பாலை என்ற முன்னொட்டால அடையாளப்படுத்தப்பட வேண்டும். என்பது எப்ஸ்டீனின் கருத்து.

அமெரிக்கச் சிந்தனையாளரான எரிக் கான்ஸ் (Eric Gans) என்பவர் கி.பி. 2000 க்குப்பின் வரும் ஆண்டுகளை பிந்தைய ஆயிரம் (Post Millenium) என்று அழைக்க வேண்டும் என்றார். மேலும் அவர் பின் நவீனத்தின் மீதான தனது விமர்சனத்தையும் முன் வைத்தார். அவரது கருத்தின்படி, ‘நவீனத்துவத்தின் தோல்வி மற்றும் அதனால் ஏற்பட்ட எரிச்சல், விரக்தி ஆகியவற்றின் விளைவாகவே பின் நவீனத்துவம் தோன்றியது’ அவர் ஒரு சமன்பாட்டையும் சொல்கிறார். பாதிப்புக்குப் பொறுப்பாளிகள் X பாதிக்கப்பட்டவர்கள் என்பது அந்த சமன்பாடு. கான்ஸின் வாதம் பின் நவீனத்துவத்தைக் குறுக்கிப் பார்க்கும் வாதம் என்றே சொல்லத்தோன்றுகிறது. எரிச்சலும், விரக்தியும் ஒருவனை ஒன்று பயங்கரவாதி ஆக்கும்; அல்லது துறவி ஆக்கும். பின் நவீனத்துவவாதிகள் யாருமே பயங்கரவாதிகளோ அல்லது துறவிகளோ அல்ல. அவர்கள் ஜனநாயகவாதிகள் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், கான்ஸ் தனது வாதத்தில், ‘பின் நவீன அறம் என்பது நவீனத்துவத்துக்கு எதிரான முதலாளித்துவ வெறுப்பு மற்றும் ஜனநாயக எதிர்ப்பும் ஆகும்’ என்கிறார். இதில் பாதி உண்மையும் பாதி பொய்யும் இருக்கின்றன. முதலாளித்துவ வெறுப்பு என்பது உண்மையே; ஜனநாயக எதிர்ப்பு என்பது பொய். உரைநடையையே ஜனநாயகப்படுத்தி வாசிப்பு ஜனநாயகம் கோரும் பின் நவீனத்துவம் ஜனநாயக எதிர்ப்பைக் கொண்டிருப்பதாக கான்ஸ் சொல்வது அவரது தவறான புரிதலையே காட்டுகிறது. ‘முதலாளித்துவம் உற்பத்தித் திறன் மிக்கது; பின் நவீனத்துவம் உற்பத்தித்திறன் அற்றது’ என்பது கான்ஸின் இன்னொரு குற்றச்சாட்டு. உற்பத்தி செய்து அதன் மூலம் லாபம் ஈட்டுவது முதலாளித்துவத்தின் இலக்கு. எனவே அது உற்பத்தித் திறன் மிக்கதாகத்தானே இருக்க முடியும். அந்த உற்பத்தித் திறன் ஈட்டும் லாபம் யாருடைய பெட்டிக்குப் போய்ச்சேர்கிறது என்பதுதான் கேள்வியே.

கான்ஸின் கூற்றுப்படி, ‘பின் நவீனத்துவத்துக்கு அடுத்து வரும் யுகம் பிந்தைய புத்தாயிரம் ஆகும்.அதை அவ்விதமே அழைக்க வேண்டும். மேலும், பின் நவீனத்துவம் உருவாக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலை சார்ந்து உருவாக்கப்பட்ட உரையாடலை ஒதுக்கி விட்டு அதற்கு மாற்றான மனநிலைக்குரிய உரையாடலை உருவாக்கவேண்டும். அப்போதுதான் உலகில் நிலவும் எரிச்சலும் விரக்தியும் இல்லாமல் போகும்.’ கான்ஸின் வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. ஆஷ்விட்ஸ் வதை முகாமில் ஒரு காரணமுமின்றி லட்சக்கணக்கான யூதர்கள் கொல்லப்பட்டார்கள். ஸ்டாலின் கால ருஷ்யாவில் ஏராளமான அப்பாவிகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதனால்தான் பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலையும், அவர்களைச் சார்ந்த மனநிலையும் உருவாயின. அது சார்ந்த உரையாடல்களும் தோன்றின. இன்னமும் ஃபாசிசத்தின் அபாயம் முற்றிலும் நீங்கி விடாத நிலையில் அதையெல்லாம் மறந்து வேறு ஒரு புதிய உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்று கான்ஸ் ஆசைப்படுவது ஓர் ஆதிக்க சக்தி கொண்ட அதிகாரத்தின் அரசியலை ஆதரிப்பதல்லாமல் வேறென்ன?

பிந்தைய பின் நவீனத்துவத்தை வேறு மாதிரி அணுகியவர் என்று ஜெர்மானிய அமெரிக்கரான ரயோல் எஷல்மேன் என்பவரைக் குறிப்பிடலாம். அவர் ஒரு புத்தகம் எழுதினார். அதன் பெயர்: ‘நிகழ்த்திக் காட்டுதலும், பின் நவீனத்துவத்தின் முடிவும்’ (Perfomatism and end of Post modernism). அவரது கருத்தின்படி, ‘ஒருங்கிணைக்கப்பட்ட, அழகியலால் ஊடாடப்பட்ட, கடந்து செல்லும் அனுபவம்தான் நிகழ்த்திக் காட்டுதல் ஆகும்’. அது மட்டுமல்ல; ‘மூடப்பட்ட கலையை அதில் இருக்கும் எளிய ஆனால் புரிந்து கொள்ள சிரமம் தருகிற கதாபாத்திரம் அல்லது தருணம் ஆகியவற்றைக் கொண்டு பார்வையாளன் அழகு, அன்பு, நம்பிக்கை மற்றும் காலத்தை மீறிக் கடந்து செல்லும் தன்மை ஆகியவற்றை உணர்தலே’ என்றும் அவர் சொல்கிறார். இவர் ஜீன் லக் மாரியானின் ‘பின் நவீன மதவியல்’ என்கிற கோட்பாட்டை ஆதரிக்கிறார் என்பது ஆபத்தான செய்தியாகப் படுகிறது.

2006 ம் ஆண்டு பிரிட்டிஷ் சிந்தனையாளரான ஆலன் கிர்பி, ‘பின் நவீனத்துவத்தின் மரணமும், அதன் பின்பும்’ என்ற ஒரு நூல் எழுதினார். அதில் அவர் ‘பின் நவீனத்துவம் இறந்து விட்டது; அதன் இடத்தில், ஒரு புதிய அதிகாரச்சட்டகமும், அறிவும் குடி புகுந்திருக்கின்றன.’ என்று சொல்கிறார். ஆலன் கிர்பி பிந்தைய பின் நவீனத்துவத்தை போலி நவீனத்துவம் (Pseudo Modernism) என்று அழைக்கிறார். மொபைல் போன், இணையம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களின் பங்கேற்பு போன்ற நிலைமைகளை இவர் போலி நவீனத்துவம் என்கிறார். இந்த போலி நவீன யுகத்தில் ஒரு மனிதன் நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் மொபைலில் எண்களை அழுத்தி போன் செய்கிறான்.கம்ப்யூட்டர் முன் அமர்ந்து ‘க்ளிக்’குகிறான். மௌஸை அழுத்தி நகர்த்தி திரையில் தேடுகிறான். தேர்வு செய்கிறான். வேண்டியவற்றை இறக்கம் செய்து கொள்கிறான். இதனை ‘ஒரு படித்தான அறிவு ஜீவி நிலை’ என்று கிர்பி அழைக்கிறார். அந்த நிலை ஒரு ‘அரை மயக்க நிலை’ என்றும் குறிப்பிடுகிறார். இப்படி மீடியா மூலம் பெறப்படும் உள்ளீடற்ற தன்மையானது நவீனத்துவத்தின் மனநோயையும், பின் நவீனத்துவத்தின் சுயமோகத்தையும் தாண்டிச் செல்கிறது’ என்கிறார். கிர்பி நவீனத்துவத்தின் மனநோய் என்று சொல்வது சரிதான். ஆனால், பின் நவீனத்துவத்தின் சுயமோகம் என்று குறிப்பிடுவது சரியில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனேனில், சுயமோகம் என்பதே நவீனத்துவம் சார்ந்தது. அதிகாரத்தின் சுயமோகம், ஆசிரியனின் சுயமோகம், அரசியல்வாதியின் சுயமோகம் என்று ஏகப்பட்ட சுயமோகங்களால் ஆனது. அந்த சுயமோகங்களை ரத்து செய்ய வந்தது பின் நவீனத்துவம். தலைக்குப் பின்னால் ‘ஒளிவட்டத்துடன்’ திரிந்த ஆசிரியனின் மரணத்தை அறிவித்தது பின் நவீனத்துவம் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

‘பின் நவீனத்துவம் சொற்களின் அர்த்தம் பிடிபடாமை குறித்துப் பேசுகிறது. ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் இருப்பதாகவும், அதனால் அர்த்தங்கள் ஒத்திப்போடப்பட வேண்டும் என்றும் சொல்கிறது. அப்படி அர்த்தங்கள் ஒத்திபோடப்பட்டால் ஒரு பிரதியை எப்படி விமர்சனம் செய்வது?’ என்று கேள்வி எழுப்புகிறார் கிர்பி. எனவே பின் நவீன விமர்சனத்தைக் கை விட்டு அதற்குப் பதிலாக, ‘ஆய்வுபூர்வமான யதார்த்தவாதத்தை’ (Critical realism) கையில் எடுக்க வேண்டும் என்கிறார் கிர்பி.

பின் நவீனத்துவம் சொற்களின் அர்த்தம் பிடிபடாமை குறித்துப் பேசுவது எந்த அர்த்தத்தையுமே எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற பொருளில் அல்ல. எல்லா அர்த்தங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே. சொல்லின் அர்த்தத்தை ஒற்றையாகக் குறுக்கி விடக்கூடாது என்பதே அதன் நோக்கம். இதில் பின் நவீன விமர்சனத்தை நிராகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. சொல்லப் போனால், கிர்பி சொல்லும் கிரிட்டிகல் ரியலிஸம் பின் நவீனம் சார்ந்ததே. தத்துவத்துறையில் கிரிட்டிகல் ரியலிஸ்ம் என்பது ஜான் லாக், தெகார்த்தே போன்றவர்களால் ஏற்கெனவே துவக்கி வைக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் அரிஸ்டாட்டிலின் ‘மறைமுக யதார்த்தம்’(Indirect realism) வரை நாம் பயணம் செய்ய முடியும். அரிஸ்டாட்டிலின் கருத்தை பெர்ட்ரண்ட் ரஸல், ஸ்பைனோஸா, போன்றோர் வளர்த்தெடுத்தனர். கிரிட்டிகல் ரியலிஸத்தை பின் வருமாறு சுருக்கமாகப் புரிந்து கொள்ளலாம்.

என் கண் முன்னே ஒரு டேபிளின் மேல் ஒரு தம்ளர் இருக்கிறது. அதில் பாதி அளவு தண்ணீர் இருக்கிறது.

(அ) நான் இப்போது அந்தத் தம்ளரைப் பார்க்கிறேன். நான் சொல்கிறேன். ‘இப்போது நான் தம்ளரைப் பார்க்கிறேன் என்று. ஆனால், நான் பார்ப்பது தம்ளரை அல்ல. என் விழித்திரையில் படும் அதன் பிம்பத்தை மட்டுமே. அது தம்ளரின் பிரதிநிதித்துவம். அதே போல் நாம் பார்க்கும் விஷயங்களை கலை ஆக்கங்களாக உருவாக்கும் போது அவையும் அசல் விஷயங்களின் பிரதிநிதித்துவங்களாக இருக்கின்றன.

(ஆ) நான் பார்க்கும் தம்ளரில் பாதி அளவு தண்ணீர் இருக்கிறது என்று நான் சொன்னால் அது எனது நம்பிக்கையைக் குறிக்கும். அதுவே அந்த தம்ளரில் பாதி தம்ளர் காலியாக இருக்கிறது என்று சொன்னால் அது எனது அவநம்பிக்கையைக் காட்டும்.

தம்ளர் என்பது யதார்த்தம். அதை நான் பார்க்கும் போது பிரதிநிதித்துவம்; அதில் இருப்பதைப் பற்றிப் பேசும் போது யதார்த்தம் என்பது ஆய்வு ரீதியிலான யதார்த்தமாக ஆகிவிடுகிறது. இது பின் நவீனத்துவம் சார்ந்ததே.

இணையத்தில் உலவும் வலைப்பூக்கள் (Blogs) பற்றிக் குறிப்பிடும் கிர்பி, அந்தப் பக்கங்களுக்கு யார் ஆசிரியன் என்பது குறித்து யாரும் தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை; பொருட்படுத்துவதும் இல்லை’ என்கிறார். இது உண்மையே. ஒரு காலத்தில் ஆசிரியன் என்று ஒருவன் இருந்தான். அவன் எழுதும் எழுத்துகள் அவன் பெயரிலேயே பிரசுரமாகும். அவனுக்குப் பெயரும் புகழும் கிடைக்கும். இன்றைக்கு, இணைய தளத்தில் தகவல் திரட்டும் போது நமக்கு தகவல்கள்தான் முக்கியமாக இருக்கின்றன். அந்தத் தகவல்களைத் தேடி எழுதி இணையத்தில் பதிவு செய்த ஆசிரியனைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?

அதே போல்தான் பத்திரிகை ஆசிரியரும். ஒரு பத்திரிகையில் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் விரும்பும் விஷயங்கள் மட்டுமே வெளியாகும். அவருக்குப் பிடிக்காத எழுத்துகள் பிரசுரமாகாது. இதனால் ஒரு காலத்தில் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்து பிரசுரமாகவில்லையே என்று ஏங்கியதுண்டு. இப்போது வலைப்பூ வந்த பின் ஒவ்வொரு எழுத்தாளனும் தனக்கென்று ஒரு வலைப்பூ தளத்தை ஏற்படுத்திக் கொண்டு சுதந்திரமாக எழுதுகிறான். ஒரு பத்திரிகைக்கான லே-அவுட் போன்ற அனைத்து வசதிகளும் வ்லைப்பூக்களில் உண்டு. ஆக, ஒரு வலைப்பூ என்பது அந்த எழுத்தாளனின் பத்திரிகை எனலாம். இந்த வலைப்பூக்கள் ஆயிரக்கணக்கானவர்களால் படிக்கப்படுகின்றன. வலைப்பூவுக்கு வரும் ஆசிரியரின் கடிதங்கள் என்று பின்னூட்டங்களைக் குறிப்பிடலாம். இந்த வலைப்பூக்கள் ஆசிரியன் என்ற ஒற்றைத்தன்மையை உடைத்து பல ஆசிரியர்கள் என்னும் பன்மைத்தன்மையை உருவாக்குகின்றன. இதை கிர்பி பிந்தைய பின் நவீன நிலவரம் என்று குறிப்பிடுகிறார். இது உண்மையே.

பொத்ரியார் தொலைக்காட்சியைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘நமது இருண்ட அறைகளை இந்த ஊடகம் தனது குளிர்ந்த ஒளியினால் நிரப்புகிறது. தனது ஒளிக்கதிர்களினால் சதா நம்மைத் துளைத்தபடி இருக்கிறது. நாம் செயலற்றவர்களாக நம்மை முற்றிலுமாக ஒப்புக் கொடுத்திருக்கிறோம், என்றார். நிலைமை இப்போது அப்படி இல்லை என்கிறார் கிர்பி. இன்றைக்கு டிவி நம்மை செயலற்ற பார்வையாளர்களாக வைத்திருக்கவில்லை. நம்மைப் பங்கு பெறுபவர்களாகவும் ஆக்கி இருக்கிறது. இன்று ரியாலிடி ஷோ, டாக் ஷோ போன்ற நிக்ழ்ச்சிகளில் பார்வையாளர்கள் நேரடியாகப் பங்கு பெறுகிறார்கள். பணமும் சம்பாதிக்கிறார்கள். இன்றைக்கு டிவி பொழுது போக்குச் சாதனம் மட்டுமல்ல; பணம் ஈட்டும் சாதனமும் கூட. தவிரவும் பொத்ரியார் சொன்ன காலத்தில் டிவி கண் கவர் காட்சியாகவும், தன்னை மையத்தில் இருத்திக் கொண்டும், பார்வையாளனை விளிம்பிலும் வைத்திருந்தது. இந்த நிலை இப்போது மாறிவிட்டது. மையம் – விளிம்பு பாகுபாடு தகர்ந்து விட்டது. பார்வையாளன் தன்னையே டிவியில் பிம்பமாகப் பார்த்துக் கொள்ளும் போது எது மையம்? எது விளிம்பு?

சரி, பின் நவீன யுகத்துக்கும் இப்போதைய போலி நவீனத்துக்குமுள்ள வித்தியாசம் என்ன?

பின் நவீன யுகத்தில் ஒரு மனிதன் படித்தான்; பார்த்தான்; கவனித்தான். போலி நவீன யுகத்திலோ ஒரு மனிதன் க்ளிக் செய்கிறான்; மௌஸை அழுத்துகிறான்; திரையில் தேடுகிறான்; தேர்ந்தெடுக்கிறான்; தகவல் இறக்கம் செய்கிறான். இப்போது பிரதி என்று தனியே எதுவும் இல்லை. அவனே பிரதியாக இருக்கிறான். எல்லாப் பிரதிகளையும் தாண்டிச் செல்லும் பிரதியாக.

No comments:

Post a Comment