Tuesday, August 17, 2010

வி.கெ.என். 'பையன் கதைகள்'

மலையாளத்தின் 'ஹாஸ்ய சாம்ராட்' என்று கருதப்படுபவர் வி.கெ.என். 2004 இல் காலமான இவருடைய 'பையன் கதைகள்' தொகுப்பு 1980 இல் மத்திய சாகித்ய அகாடமி விருது வாங்கியது. இந்த தொகுப்பிலிருந்து 40 கதைகளை தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு சிறுகதையாகவும் மொத்தமாக ஒரு நாவலாகவும் அனுபவபடுகிறது. விரைவில் புத்தகம் வெளியாகும். இங்கே முதல் கதையை பதிகிறேன். நீளமாக இருந்தாலும் மிக சுவாரஸ்யமான கதை. படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்.

'பையன் கதைகள்' மலையாள மூலம் : வி.கெ.என். தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா

1. கர்னல்

அக்காலம் பையன் டிஃபன்ஸ் காலனியில் வசித்து யமுனையில் குளித்து ஹவுஸ்காஸில் சம்போகித்து வந்தான். ஃபர்ஸ்ட் க்ளாஸ் காலம். ஒண்ணும் பிரச்னையேயில்ல. டிஃபன்ஸ் காலனின்னு சொன்னாலே ஒரு பந்தாதான். தலைநகரத்தின் மிக மேன்மையான வசிப்பிடமென்றும் மிகவும் அழகான வேசிகளின் கூடாரமென்றும் சௌந்தர்ய ஆராதனையின் தைமூர்கள் திரும்பத் திரும்பச் சொல்லுகிற இடம் அது. உங்களுக்கு டிஃபன்ஸ் காலனி முகவரியிருந்தால் நகரத்தின் ஃபுல்குடிமகன் ஆகிவிட்டீர்கள் என்றும் வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டீர்கள் என்றும் அர்த்தம். ரொம்ப சீக்கிரம் நுழைந்தவர்களில் பையனும் ஒருவன்.

அரைமாடியில் தான் பையன்பட்சி கூடுகட்டியிருந்தான். அரைமாடி என்றால் ஒரு மாடிக் கட்டிடத்தின் மேலிருக்கும் ஒற்றைஅறை என்பது பதவுரை. அறையைச் சுற்றிலும் சிமென்ட் போட்ட விசாலமான தளம். வேனில்காலத்தில் பரமசுகம். சிமென்ட் வெந்து பழுத்து, விடாமல் அனலடிக்கும். அறைக்குள் விசிறிக்குக் கீழே உட்கார்ந்தாலும் படுத்தாலும் கம்பளி போர்த்தி அடுப்புக்கனலில் குந்தியிருப்பதுபோலத்தான் இருக்கும். எழுந்திருக்கவே தோன்றாது. யமுனையைத் தவிர தேசத்திலெங்கும் தண்ணீர் பிரச்னையேயில்லை. கூதிர்காலத்தில் இதைவிட சுகம். பகலும் இரவும் வஜ்ஜிரத்தின் குளிரூசிமுனையில் சுகசயனம் செய்வதைப் போலிருக்கும். பீஷ்மபிதாமகனைக் கண்ணெதிரில் பார்க்கலாம். இருபத்துநாலுமணி நேரமும் ஐஸ் போட்ட தண்ணீர் பைப்பை அடைத்தாலும் தாரையாய் பிரவாகித்துக் கொண்டிருக்கும்.

இத்தனை வசதிகளிருக்கும் வீட்டுக்கு முப்பது நாளுக்கொருமுறை நூற்றியிருபது ரூபாய் வாடகை மட்டுமே பையன் கொடுத்துவந்தான். தண்ணீரும் மின்சாரமும் தனி. எல்லாம் முதலிலேயே கொடுத்துவிட வேண்டும். லாபம்தானென்று சொல்கிறான் பையன். மரங்களுக்குக் கீழே வசித்து டிஃபன்ஸ் காலனியின் வீட்டுரிமையாளர்களுக்கு இதை விட வாடகையை வெறுமனே கொடுக்கிற எத்தனையோ பேரை அவனுக்குத் தெரியுமாம். அதைப் பார்க்கையில் லாபம்தானே.

சர்வீசிலிருந்து விலகி வீடுகட்டி வீரசொர்க்கம் பூண்ட ஒரு மேஜருடைய மாளிகை இது. முதல் மற்றும் இரண்டாம் உலக மகாயுத்தங்களில் அவர் போர் புரிந்திருக்கிறார். ரொம்மலுடன் போரிட முடியவில்லையே என்பதாயிருந்தது இறக்கும்வரை இருந்த ஒரே துக்கம். இப்போது ரொம்மலிடமே தன் துக்கத்தைச் சொல்லித் தீர்த்திருப்பார் என்று சொல்கிறான் பையன். பையனுக்கு முகவரியைக் கொடுக்கையில் அவர் உயிரோடுதானிருந்தார். பிறகு திடீரென இறந்துவிட்டார். ஆனாலும் கடைசி நிமிடம் வரைக்கும் மரணத்தை இழுத்துக்கொண்டு போன பிடிவாத குணத்துக்காரர் அந்த மேஜர் என்பது பையனின் கருத்து.
எதார்த்த வாழ்க்கையில் சுடலைபத்ரகாளியாகவும் நடிப்பில் மேஜரின் மனைவியாகவும் இருந்த ஒரு பெண்மணிதான் எல்லா முதல்தேதியும் வந்து வாடகை வசூலித்துக்கொண்டிருந்தாள். ஒருமுறைகூட தவறாமல் வந்துகொண்டிருந்ததால் ஒருமுறைகூட தவறாமல் வாடகை கொடுக்கவேண்டியதாயிற்று பையனுக்கு. ஒரு மாதமாவது கொடுக்காமல் அந்த அமௌண்ட்டுக்கு இரண்டு நேரமும் உணவருந்த வேண்டும் என்று பையன் பலமுறைஆசைப்பட்டிருக்கிறான். வெகு காலத்துக்கு எதுவும் நடக்கவில்லை.

அப்படியிருக்கையில் ஒருநாள் கீழே முழுவீட்டில் நன்றாய் உண்டு வசித்து வந்த பெங்காலியும் அவர் குடும்பமும் ஒரு அந்தி நேரத்தில் பெட்டிபடுக்கையோடு தெருவில் இறங்கிப் போவதைப் பையன் பார்த்தான். பிறகு இரண்டு மாத காலம் வீடு காலியாய் விறைத்துப்போய் நின்றது. சரியான ஆள் கிடைக்கவில்லையென்று மேஜரின் விதவை, பையனிடம் சொன்னாள். ஐநூறு ரூபாய் தரும் யோக்யதையிருக்கிறமேல்தட்டு வாழ்க்கை வாழ்கிறவர்கள் வரும்வரை வீடு ஓய்வெடுத்துக்கொள்ளட்டும் என்பதாக இருந்தது காளியின் கணக்கு.
இரண்டுமாதங்கள் கழிந்து ஒருநாள் காலையில் பையன் எழுந்தபோது கீழே வீட்டைச் சுற்றி ராணுவ நடவடிக்கைகள் நடப்பதைப் பார்த்தான். ஒரு ராணுவ லாரியிலிருந்து வீரர்கள் சாமான்களை இறக்குகிறார்கள். ஆகாயத்தை நோக்கி மெஷின்கன் பொழிகிறார்கள். வடக்கன்பாட்டு பாடுகிறார்கள். சுழன்று சுவடு வைத்து வாள்வீசுகிறார்கள். பையன் ரகசியமாய் விசாரித்ததில் ஒரு கர்னல்தான் கீழ்வீட்டுக்குக் குடிவந்திருக்கிறார் என்பது தெரிந்தது. ஒன்பது மணியளவில் மூக்குப் பிடிக்க ஜலபானம் செய்துவிட்டு பணியிடத்துக்குச் செல்கையில் அடக்கமுடியாத ஒரு பாதுகாப்புணர்வை அனுபவித்தான் பையன். யுத்தம் வந்தால் கீழே கர்னல் இருக்கிறாரே.

வேலை முடிந்து ஜகத்துக்கே உற்சவத்தை அறிவித்துவிட்டு பறந்து கூடடையும்போது பையன் கீழ்த்தளத்தில் வெளிச்சம் கண்டான். ஒரு சீமைநாயின் குரைப்பைக் கேட்டான். பயங்கரமான ஒரு பெண்குரலையும் கேட்டான். கர்னலின் தர்மபத்தினியாயிருக்கும். யுத்தத்திலும் சமாதானத்திலும் கணவனுக்கு சக்தியளிக்கும் ஏகாதசி நோன்புக்காரி. லாரியும் மெஷின்கன்னும் மறைந்துவிட்டிருந்தன. அடுத்த நாள் காலையில் கர்னலை சந்தித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து மீண்டும் சுபிட்சமாக ஜலபானம் செய்து கம்பளி போர்த்தி கனலடுப்பில் உறங்கினான் பையன்.

எட்டு மணியானபோது பையன் ஜலபானம் செய்து உடை உடுத்துக் கீழே இறங்கினான். செயற்கை மார்பிள் கல் பதித்த வராந்தாவில் நடந்து காலிங்பெல் அழுத்தினான். யூனிபார்ம் போட்ட ஒரு வேலைக்காரன் கதவு திறந்தான். கை இரண்டையும் தூக்கி சரணடைந்துவிட்டதாகக் காட்டி பையன் கர்னல்சாப் இருக்கிறாரா என்று கேட்டான். போய்விட்டார் என்று வேலைக்காரன் சொன்னான். அறிக்கையை உறுதிசெய்யும்விதமாக உள்ளேயிருந்து முதல்நாளிரவு குரைத்த சீமைநாய் இரண்டு முறைகுரைத்தது. கையைக் கீழிறக்கி பையன் திரும்பி நடந்தான்.
மாலையில் திரும்பிவந்து பையன் காதைத் தீட்டிக்கொண்டு படுத்தான். பயங்கரமான பெண்குரலும் சீமைநாயின் குரலும் மட்டுமே கேட்டது. அந்தப்பிரதேசத்திலேயே எங்கும் ஆண்குரலே இல்லை. இது என்ன கர்னல்டா இவன்? பையன் தனக்குள் சொன்னான். இருபத்து நாலு மணி நேரமும் யுத்தம் செய்கிற ஒரு வித்துவான். சரி, நாளைக்குக் காலையில போய் அவனைப் பிடிச்சுக்கலாம்.
அடுத்த நாள் காலையில் மணியடித்தபோதும் வேலைக்காரன் முந்தின நாள் கதையையே சொல்கிறான். கர்னல் போய்விட்டார். ஓஹோ, வித்தியாசமான ஒரு ஜாதிப் பறவைதான் இந்தக் கர்னல், பையன் நினைத்துக்கொண்டான். சுற்றுவட்டாரப் பறவைகள் துயிலெழுந்து, பாடுவதற்கு ஒரு சான்ஸ் கிடைக்கும் முன்பாகவே பறந்துபோகிற ஒரு பறவை. சுற்றுவட்டாரப் பறவைகள் உறங்கிய பின்னர் மட்டுமே கூடடைகிறபறவை. அப்படியானால், கர்னலின் தர்மபத்தினிக்குத்தான் நாளின் பெரும்பான்மையான பகுதியும் வீட்டின் கமான்ட் என்றாகிறது. இன்னும் ஒரு அடி மார்ச் செய்து சொன்னால், பையன் நினைத்துக்கொண்டான்: கர்னலுக்குத் தன் சொந்த வீட்டில் பெரிய கமான்ட் ஒன்றும் கிடையாது. பரஸ்பர புரிதலின் அடிப்படையில் தலைவரும் தர்மபத்தினியும் தங்களுடைய கமான்டுகளை எல்லை பிரித்து வைத்தமாதிரிதான். தலைவருக்கு ரெஜிமென்ட். தலைவிக்கு வீடு. போடா மயிரு என்று சொல்லி ஒரு வில்லன் சிரிப்பு சிரித்தபடி பையன் நடந்தான்.

ஆனாலும் வெப்பமானியின் பாதரசம் போல எரிச்சலும் பிடிவாதமும் பையனின் மனதில் ஏறிக்கொண்டன. உயிரோட இருந்தா, நாளைக்குக் கர்னலைப் பிடிச்சாகணும். பார்த்துடலாமே, எப்படிப்பட்ட ஆள்னு. இவ்வளவு நேரத்திலேயே போகிறஒரு கிளி உண்டா? அப்படி இருந்தா அதைக் கூட்டில வச்சே பிடிச்சாகணும். நாளைக்குக் காலைல ஏழு மணிக்கே கீழ இறங்கி மணியடிச்சு உள்ளே நுழையப் போறேன்.


பகல்போய் இரவு வந்தது. இரவு முக்காலும் போனது. புலர்காலமானபோது உடை அணிந்து பையன் டெரஸ்ஸில் பம்மியிருந்தான். ஒரு வேளை ஏழுக்கு முன்னாலேயே கிளி போவதாயிருந்தால் பிடிக்கும் விதத்தில். ஏழானது. கிளி கீழேதானிருக்கிறது என்பது உறுதியானதும், ஏழு முடிந்து ஒரு நிமிடத்தில் பையன் ஆபரேஷனை ஆரம்பித்தான். கீழேயிறங்கி வராந்தாவை வலம் வந்து மணியடித்தான். சேவகன் கதவைத் திறந்தான். அவன் வசனமேதும் சொல்லத் துவங்கும் முன்பாகவே பையன் உள்ளே நுழைந்தான். சேவகன் சடுதியில் உள்ளே விரைந்தான். என்ன வேணும்னாலும் போய்ச் சொல்லு, பையன் சொல்லிக்கொண்டான். கர்னலைப் பார்க்காமல் ஒரு அடி பின்வாங்க மாட்டேன்.

வரவேற்பறையில் பையன் காலூன்றி நின்றான். சுற்றிலும் பசுமையா யிருந்தது. பச்சை நிறத்தில் சுவர், அதே நிறத்தில் சோஃபா, தரைவிரிப்பு, கர்ட்டன், பூச்செண்டு, ரெஃப்ரிஜிரேட்டர் இன்னும் பல. எல்லாம் ஒன்றுக்கொன்று மேட்ச்சாய் இருந்தது. மேட்ச் செய்தது போதவில்லை என்று தோன்றும் இடங்களில் மேட்ச் பாக்சுகள் அடுக்கப்பட்டிருந்தன.

சோஃபாவுக் கீழே குனிந்து, குரைக்கும் சீமை நாய்கள் கடிக்கத் தயாராக பச்சை நிறத்தில் இருக்கின்றதா என்று பையன் பார்த்தான். ப்ளீஸ் டேக் யுவர் சீட், பையன் சொல்லிக்கொண்டான்: இங்கே ஃபார்மாலிட்டி எதுவும் கிடையாது. உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ.

சோஃபாவுக்குள் தாழ்ந்து கொண்டிருக்கும்போதுதான் பயங்கரப் பெண் குரல் கேட்டது:

யெஸ்.

பையன் பார்த்தான். பச்சை நிறக் கதவருகில், பச்சைக் கர்ட்டனை விலக்கி, பச்சை சாரியும் கையில்லா பச்சை சோளியும் அணிந்து, பச்சை லிப்ஸ்டிக் போட்டு, பச்சை நிறமான ஒரு பேரிளம்பெண் தடித்துக் கொழுத்து தளும்பி நின்றுகொண்டிருக்கிறாள். எல்லைப் போரில் முழுசாய் தோற்றுவிட்ட சேலையும் சோளியும் அவளுடைய மத்திய பாகத்திலும் தோள் ஓரத்திலும் கசங்கிப் போய்க் கிடந்தன. கர்னலின் மனைவி!
வெளிப்படையான இந்தத் தூண்டுதலுக்கு எதிர்நின்று பையன் நினைத்துக்கொண்டான்: பையா. நீ அட்டகாசமான ஒரு காளைக்குட்டிதான். உன் வாலை நீ சுருட்டி வைத்துக்கொள்.

பையன் இவ்வாறு சொன்னான்: மேலதான் தொழுவம். கர்னல் சாரைப் பார்க்கலாம்னு வந்தேன்.

அவள் சிரித்தாள்: உட்காருங்க.

சோஃபாவின் ஒரு ஓரத்தில் அவளும் உட்கார்ந்தாள். அதைத் தொடர்ந்து நிகழ்ந்த பூகம்பம் அடங்கியவுடன் அவள் கேட்டாள்: எப்படியிருக்கு இடம்?

பரவாயில்லை, பையன் சொன்னான்: ஒரு ரூம்தான் இருக்கு. கல்யாணமாகாததால அப்படியே போகுது.

ஓஹோ அவள் உரக்கச் சிரித்தாள்: நான் இந்த இடத்தைக் கேட்டேன்.

இந்த என்பதிலிருந்த அழுத்தம் பையனை உலுக்கிவிட்டது.
உனக்கு இது வேணும், பையன் சொல்லிக்கொண்டான், உன்னோட இடத்தைப்பத்தி யாராவது கேப்பாங்கன்னு நெனச்சே பாரு உனக்கு இது வேணும்.

ரொம்ப நல்ல வீடு, பையன் சொன்னான்: அருமையா இருக்கு.
சொன்னது சரியல்ல என்று பையனுக்குத் தெரிந்திருந்தது. இனி என்ன செய்ய முடியும், சொல்லிவிட்ட நிலையில்!

ஒருவேளை கர்னலின் மனைவி தான் சொன்னதை எழுதி வாங்கிக்கொள்வாள் என்று பையன் நினைத்தான். ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை. தோட்டக்காரன் வேலை செய்திருந்த முற்றத்தைக் கண்ணாடி ஜன்னலினூடே சுட்டிக்காட்டியபடி அவள் சொன்னாள்:
நான் வந்தபோது முற்றத்தைப் பார்க்க சகிக்கலை. வேணும்னா பார்த்துக்குங்க. ஒரு மாசத்துக்குள்ளே அங்க முழுக்க ரோஜாப்பூக்களாயிருக்கும்.

அழகாயிருக்கும், எதிர்காலத்தில் மலரப் போகிறமலர்களை மனதில் கண்டு பையன் சொன்னான். நினைக்கவும் செய்தான்: நூறு மலர்கள் மலரட்டும், நூறு கர்னல்கள் தங்களுக்குள் வாள்வீசிக் கொள்ளட்டும்!

முதல் கேள்வியைத் தப்பாய்ப் புரிந்துகொண்டதால் தன் பதில் தவறாகிவிட்டது, பையன் நினைத்துக்கொண்டான். இனி என்ன பேச? யோசித்துக்கொண்டிருந்தான். அப்போது கூந்தலிலிருந்து வீழ்ந்துவிட்ட ஒரு ஹேர்பின்னை எடுப்பதற்காக அவள் குனிந்தாள். அப்போது கழுத்திலிருந்து காதங்கள் கீழே உன்னதமான எல்லைப் பிரதேசங்களைத் தடுக்க முடியாமல் தடுத்து நிறுத்தியிருந்த அவளுடைய சோளியின் தடைகள் கலையவும் மீட்டர் கணக்கில் சொத்து விவரக் கணக்குகள் பேரலைகளாய் உயர்ந்து பிளக்கவும் செய்தன. உத்தண்ட சாஸ்திரிகளுக்குப் பிறகு தோன்றிய மஹாஸ்த்ரீரசிகனான பையன் கண்கள் விரியப் பார்த்தான். எழுந்திரிக்கலாமா? அப்புறம்?

பையா பையா பையா! பையன் சொல்லிக்கொண்டான்: மெதுவா போ. வண்டிய கியர்ல போடு. முன்னால இருக்கறது பெரிய வளைவு!

கர்னல் வந்துட்டார்னா, பையன் நினைத்தான்: எல்லாம் போச்சு! வந்துடாதேடா கர்னல்!
அறையின் ஒரு மூலைக்குச் சென்று பச்சை முக்காலியிலிருந்த புத்தனின் சிலையைக் காட்டி பையன் சொன்னான்: அழகான சிலை. இவ்ளோ சமத்தான புத்தனை நான் இதுவரைக்கும் பார்த்ததில்லை.
அவளுக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. சேலையில் பொதிந்த ஒரு காலை அநாயாசமாக மறுகாலின்மேல் ஏற்றிவைத்து கையிரண்டையும் தலைக்குப் பின்னால் கோர்த்து சிரித்தவாறு அவள் சொன்னாள்:
அதை நான் வாங்டாக்கில வாங்கினேன்.

தான் பூமியை விட்டு நழுவுவதாகத் தோன்றியது பையனுக்கு. ஆனந்தவல்லி, தடியழகி, திம்மி, லூசுப் பாருக்குட்டி, பஞ்ச கல்யாணி, அதே போஸில், தான் மரிக்கும்வரைக்கும் இருக்கட்டும் என்று பையன் ஏங்கினான். அவள் அப்படி உட்கார்ந்திருக்கும்போது எல்லா எல்லைக்கோடுகளும் மறைந்துவிடுகின்றன. அலைகள் பின்னோக்கி அடிக்கின்றன. உன்னதமான ஆழங்களுடைய, பிரம்மாண்டமான புதையல்களைக் கொண்ட, உழுது பிளந்த மண்ணின் மணம் எழுகிற பூமிதேவி கஜம்கஜமாய் அலங்கோலமாய்க் கிடக்கிறாள். பையனின் போதம் ஒரு குடிகாரனைப் போலானது.

கர்னல் வந்துடக் கூடாதே! பையன் மீண்டும் நினைத்துக் கொண்டான். வந்தா அவனைக் கொன்னுடுவேன்.
அவளுடைய லைன் புரிந்துவிட்ட பிறகு ஒரு நிமிஷம்கூட வீணாக்காமல் பையன் தொடர்ந்து சொன்னான்:
ரேடியோகிராம் ரொம்பப் புதுமாடல் போலிருக்கே. இந்த மாடலை நான் முன்னே பார்த்ததில்லை.
ஆனந்தவல்லிக்குப் பரமசந்தோஷமாகி விட்டது. அந்த நிமிடமே அவள் பாய்ந்து தன்னை எதுவும் செய்யாமலிருந்தது தன்னுடைய துரதிர்ஷ்டம் என்று சொல்கிறான் பையன்.
காஸாவிலிருந்து ஒரு நண்பர் கொண்டு வந்தார்.
ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகொள்ளும் சுகத்துடன் அவள் சொன்னாள்.

பையன் தன்னுடைய மிக நேர்த்தியான அப்பாவித்தனத்தை முகத்தில் நிறைத்துக்கொண்டு, முன்னால் சாய்ந்து உட்கார்ந்து அவளுடைய கண்களுக்குள் பார்த்தபடி கேட்டான்:
க்யூரியோஸ் நிறைய இருக்கு போலிருக்கே?

லூசுப் பாருக்குட்டி உருகிப் போனதாய்த் தோன்றியது பையனுக்கு.
அவள் சொன்னாள்: ஒரு புதிய டேப்ரிக்கார்டர் இருக்கு. காமிக்கட்டுமா?
அவள் எழுந்தாள்.
அந்த நேரத்தில்தான் சேவகன் தோன்றிக் கேட்கிறான்: டிபன் வெக்கட்டுமா?

செத்தால் போதுமென்றாகிவிட்டது பையனுக்கு. இப்போது கர்னல் வந்துவிடுவார். அவருடன் உட்கார்ந்து அவள் சாப்பிடுவாள். என்னால் அதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ம்... போகிறேன். இன்னொரு நாள்...
ரொம்ப சந்தோஷங்க. கண்களில் துக்கத்துடன் பையன் சொன்னான். இன்னொரு நாள் வரேன். கர்னல் சாஹிபை அப்போ பாக்கலாம். பை!

கர்னல் சாஹிபைப் பாக்கணுமா? திம்மியின் கண்களில் பிரகாசம் படர்ந்தது:
வாங்க!

அவள் குறுக்கே நடந்து வராந்தாக் கதவைத் திறந்தாள். நடக்கையில் பஞ்சகல்யாணி குலுங்கவும் குலுங்கிச் சிரிக்கவும் செய்தாள். அவளுடைய பாகங்கள் தளும்பித் தெறித்து வீழந்துவிடுமென்று தோன்றியது பையனுக்கு. தெறித்து வீழந்தால், பையன் நினைத்துக் கொண்டான்: நான் அவற்றை வாரியெடுத்துக் கொண்டு ஓடிவிடுவேன். எப்போதும் திருப்பிக் கொடுக்க மாட்டேன்! என்னமோ, கர்னலைப் பற்றி இப்போ சொல்லியிருக்க வேண்டாம். எல்லாம் நாசமாப் போச்சு!

வராந்தாவில் காலிங் பெல்லுக்கு எதிராக கதவின் ஒரு பக்கத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சின்ன போர்டைக் காட்டி அவள் சொன்னாள்:

ப்ளீஸ் மீட் தி கர்னல்.

பையன் போர்டிலிருந்த இதிகாசத்தை மனதுக்குள் வாசித்தான்:
லெப். கர்னல். (மிஸ்) ரேணு, எம்.டி.

தன் காலடிக்குக் கீழே பூமி வழுக்கிப் போவதைப் போல் தோன்றியது பையனுக்கு. மீண்டும் கண்களில் நிஷ்களங்கத்தைக் குழைத்து அவளை வணங்கி நிற்கும்போது, சுந்தரிக்குட்டி உள்ளே பார்த்து இவ்வாறு சொல்வதை பையன் கேட்டான்:
டிஃபன் ரெண்டு பேருக்கு வை.

அன்று முதல் பிறகு எல்லாமே சுகம்தானென்று சொல்கிறான் பையன். இரண்டு நேரம் தேய்த்துக் குளியல், மூன்று நேரம் சாப்பாடு, புல், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கோழிமுட்டை, ஆட்டுப்பால், மாத்திரை, தங்கபஸ்பம், உயிரோடு காட்டுப்போத்தின் இறைச்சி. என்னன்னா, பையன் சொல்கிறான், அதுக்குப் பிறகு ஹவுஸ்காஸு*க்கு போகலைன்னு அர்த்தம்.

-----------------------------------------------

*ஹவுஸ்காஸ் : டெல்லியின் பாலியல் தொழில் வீதி

3 comments:

 1. அன்பின் நண்பரே...

  வலைச்சரத்தில் இன்றைய எனது பகிர்வில் உங்களது சிறுகதை குறித்து பகிர்ந்துள்ளேன்.

  வலைச்சரம் பார்க்க : http://blogintamil.blogspot.com/

  நன்றி.

  நட்புடன்,
  சே.குமார்.

  http://vayalaan.blogspot.com

  ReplyDelete
 2. சே.குமார் அவர்களுக்கு மிக்க நன்றி...படித்ததில் சிறந்ததை பகிர்வது சிறந்த செயல்..வாழத்துக்கள் உங்கள் அறிமுகம் தொடரட்டும் ...நான் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை அடைபடும் காற்று...முதியோர்களை பற்றி பேசும் கதை ....

  ReplyDelete
 3. விஜய்... எனக்கு வி.கெ.என் என்ற பெயரே புதிது. ஆனால், கதை சொன்னவிதம் புதுமையாக இருந்தது. நூல் விரைவில் வெளிவர வாழ்த்துகள்.

  ReplyDelete