Sunday, June 20, 2010

என் மகள் ஒரு பெண் -என்.எஸ்.மாதவன்


தமிழில் ஸ்ரீபதி பத்மநபா
தரையில் படுத்தபடி கமலா முன்வாசல்கதவின் அடியிலிருந்த நீளமான இடைவெளியினூடே ஃப்ளாட்டுக்கு முன்னாலிருந்த வராந்தாவில் நகர்ந்துகொண்டிருந்த எண்ணற்ற பாதங்களை கவனித்துக் கொண்டிருந்தாள். அவளறியாமலேயே மேலேறியிருந்த அடிப்பாவாடைக்குள் இடம்பெயர்ந்திருந்த ஜட்டி அவளின் பிஞ்சுப் பிருஷ்டத்தில் பள்ளிக் கூடத்தின் மரப்பெஞ்சுகளின் மேடு பள்ளங்கள் பதிந்திருந்த தழும்புகளின் கறுப்புநிறங்களைக் காண்பித்தது. தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தால் எங்கே அவள் தன்னுணர்வு பெற்று பாவாடையைத் திருத்தி, அந்தக் காட்சியின் களங்கமின்மையை முடிவுக்குக் கொண்டுவந்து விடுவாளோ எனப் பயந்து நான் கண்களைப் பின்வாங்கிக் கொண்டேன். நான் கமலாவுக்குத் துணையிருக்க ஆரம்பித்து கொஞ்ச நேரமாகிறது. பக்கத்து ஃப்ளாட்டில் கமலாவின் தோழி ப்ரீத்தியின் அப்பா முந்தின நான் திடீரென்று இறந்து விட்டார். சுபத்ரா அங்கே போக ஆயத்தமானபோது அம்மாவின்கூட வருவேன் என்று சொல்லி கமலா அடம்பிடித்தாளென்றாலும் சுபத்ரா அதற்கு சம்மதிக்கவில்லை.
வேண்டாம். நீ இங்கேயே யிருந்தா போதும். ஃப்ளாட்டிலிருந்து வெளியே இறங்கும்போது சுபத்ரா சொன்னாள்.
பத்து வயசாச்சில்ல அவளுக்கு? இன்னும் எத்தனை காலந்தான் இதையெல்லாம் மறைச்சு வக்கிறது? நான் கேட்டேன்.
வேண்டாம். இன்னும் ஆகல. பாடி கொண்டுபோன பிறகு அவ வந்தா போதும்.
சுபத்ராவின் வார்த்தைகளில் அவளுடையதேயான பழமையின் பயங்கள் மின்னிக்கொண்டிருந்தன. பிறகும் ஆசை இழக்காமல் கமலா சிணுங்கியபடி சுபத்ராவின் கையைப் பிடித்தாள்.
அவளும் வரட்டும் சுபத்ரா. குழந்தைக இன்னிக்கு டி.வி.யில பார்க்காததா? நான் கேட்டேன். வேண்டாம்னு சொன்னேனில்ல? கமலாவின் கையைத் தட்டிவிட்டபடி சுபத்ரா சொன்னாள்.
அவ பார்க்காதது இன்னும் நெறய இருக்கு. மோளே, நீ வானவில் பார்த்திருக்கியா?
இல்லை. குற்ற உணர்வுடன் கமலா சொன்னாள்.
இந்த விஷயத்தை அப்பாகிட்ட சொல்லு நீ. வெளியே போவதற்காக சுபத்ரா கதவைத் திறந்தபோது வராந்தாவின் வழியாக மலர்வளையங்களையும் பூக்களையும் ஏந்திய பார்வையாளர்கள் நுழைவதை கமலா உற்றுப் பார்த்தாள்.


டைம் ஆகும்போது சொல்லி அனுப்பறேன். இவளுக்குப் பால் கொடுக்க மறந்துராதீங்க. கதவை சாத்தும் முன்னர் சுபத்ரா சொன்னாள். சுபத்ரா போனபிறகும் எதிர்ப்பைக் காட்டும் குறுகுறுப்புடன் கமலா முன்வாசல் கதவின் அருகே அங்குமிங்கும் அலைந்தாள். இரவு முழுக்க தூக்கம் விழித்ததன் களைப்புடன் நான் படுக்கையில் போய் படுத்தேன். கொஞ்சநேரம் கழிந்தபோது கமலாவும் என் அருகே வந்து படுத்து என் முதுகிலுள்ள ஒரு பெரிய மருவை விரல்களால் திருகிக் கொண்டிருந்தாள். இத்தகைய தருணங்களில் இப்படித்தான் அவள் தன் பாதுகாப்புணர்வைத் தேடிக் கொள்வாள்.
அவள் கேட்டாள். நீங்க நெறைய வானவில் பார்த்திருக்கீங்களா, அப்பா?
சின்னவயசிலே நெறைய பார்த்திருக்கேன். இப்ப கொஞ்ச நாளாச்சும்மா, ஒண்ணுகூடப் பாக்க முடியல.
அது ஏன்ப்பா அப்படி? வானவில்லெல்லாம் தீர்ந்து போயிடுத்தா?
சுத்தி சுத்தி பெரிய கட்டடங்களாச்சேம்மா. அதுவுமில்லாம இந்த தூசியும் புகையும். வானத்தையே சரியாகப் பார்க்க முடியலே. அப்புறமில்லே வானவில்?
மொதமொதோ நீங்க எப்பப்பா வானவில் பார்த்தீங்க? சரியா ஞாபகமில்லம்மா.
ஒருமுறை ரயிலில் போகும்போது பார்த்த வானவிற்களைப்பற்றி நான் இப்போதும் அடிக்கடி நினைப்பதுண்டு. பழனியிலிருந்து பாசஞ்சர் வண்டியில் அப்பாவுடன் திரும்பி வரும்போது, வாளையார் காடுகள் முடிந்தவுடன், தூங்கி விழுந்து கொண்டிருந்த என்னை அப்பா தட்டி எழுப்பினார். ஜன்னல் வழியே பார்க்கச் சொன்னார். அப்பா என்னைத் தொடுவது மிக அபூர்வமாக மட்டுமே. ஆகாயத்தில் ஒன்றல்ல. இரண்டு வானவிற்களை நான் பார்த்தேன். இரட்டை வானவில்லை பார்த்த மகிழ்ச்சியில் அதிசயித்துப்போய் நான் விரிந்த கண்களுடன் நிற்கையில் மூன்றாவது வானவில்லைப் போல அப்பாவின் கை என் தோளைச்சுற்றியது.
கமலா எழுந்து அவளுடைய அறைக்குச் சென்றாள். கொஞ்ச நேரம் அவளுடைய அசைவே இல்லை. நான் எழுந்து சென்று பார்த்தபோது அவன் முன்கதவின் முன்னால் தரையோடு படுத்து சின்ன இடுக்கினூடே வராந்தாவில் நுழைகிற கால்களைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். சுபத்ரா அவனுப்பிய ஆள் கதவைத் தட்டியபோது நான் சட்டையை மாட்டி வெளியே இறங்கினேன். திறந்த கதவு வழியாக ப்ரீத்தியின் வீட்டுக்கு வந்த கூட்டம் வராந்தாவில் குழந்தை விளையாடும் இடங்களைக்கூட அபகரித்துக் கொண்டு வளர்ந்து நீண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. பார்வையாளர்கள் குசுகுசுப்பாய்ப் பேசிக்கொள்வதை நிறுத்திவிட்டாலும் கூட அதன் எதிரொலி இடைவழிக்கு மேல் அடைந்து உறைந்து நின்றிருந்தது.
நீ கதவைச் சாத்திக்க மோளே. அம்மாவை இப்ப அனுப்பறேன்.


வெளியே போகும்போது நான் சொன்னேன். ப்ரீத்தியின் அப்பாவின் மரணத்திற்குப் பிறகும் அவளும் அம்மாவும் எங்கள் அண்டை வீட்டார்களாகவே இருந்து வந்தார்கள். ப்ரீத்தியின் அப்பாவின் ஆபீசிலேயே வேலை செய்து வந்த அவளுடைய அம்மா பெரும்பாலும் ஆஸ்த்மாவினால் லீவ் எடுத்து வீட்டிலேயே இருந்தார்கள். ப்ரீத்தி சீக்கிரமே பெரிய பெண்ணாகிவிடுவாள் என்று எங்களுக்குத் தோன்றியது.
இந்தக் குழந்தைகளுக்கு அவங்க எதைநோக்கி வளர்றாங்கன்னு தெரியமாட்டேங்குது. இடுப்பு வலியால் அவதிப்பட்டு படுக்கையில் படுத்தபடி ஒருநாள் சுபத்ரா சொன்னாள்.
அப்படீன்னா?
இன்னிக்கு ப்ரீத்தியும் நம்ம பொண்ணும் விளையாடறதை கவனிச்சேன். இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்திலே அவங்க சின்னக் குழந்தை ஆயிடுவாங்கன்னும், அப்போ முலைப்புட்டியிலே பால் குடிப்பாங்கன்னும் போகுது விளையாட்டு.
எனக்கு அலுவலகத்துக்கு நேரமாகிக் கொண்டிருந்தது.
இப்படிப் படுத்திட்டிருந்தா எப்படி? நீ போய் சீக்கிரம் சப்பாத்தியும் புஜியாவும் செஞ்சு கேரியரில வை.
குழந்தைகள் நிகழ் காலத்திடமான இந்த வெறுப்புடன் கூட அவர்கள் மனித குலத்திலிருந்தே அகன்று கொண்டிருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
அவங்க இப்ப பொம்மைகளை வச்சு விளையாடறதில்ல. நான் சமையலறையில் சென்று சுபத்ராவிடம் சொன்னேன்.
சுபத்ரா ஏதும் பேசாமல் உருளைக்கிழங்கின் தோலை உரித்துக் கொண்டிருந்தாள். பொம்மைகளை வச்சு விளையாடினாத்தான் பெரியவங்களாகும்போது மத்த மனுஷங்க கூட சுலபமா பழகமுடியும்.
உம். சுபத்ரா உம் கொட்டினாள்.
இப்பவெல்லாம் ப்ரீத்தியும் நம்ம பொண்ணும் எப்போ பார்த்தாலும் துப்பாக்கியும் ட்ரக்கும் வெச்சுத்தான் விளையாடறாங்க. எந்திரங்க மேலதான் அவங்களுக்கு அதிக விருப்பம். சுபத்ரா தலைநிமிராமல் சப்பாத்தி மாவு பிசையத் தொடங்கினாள்.
அது கஷ்டம் இல்லையா? ஒருநாள் நானே முன்வந்து அவங்களை ஒரு வீடு வச்சு விளையாடக் கூப்பிட்டேன்.
நான் கேட்டிட்டுதான் இருந்தேன். கீழே க்ரவுண்டில் பாட்மிண்டன் விளையாடப் போகணும்னு சொல்லி அவங்க கீழே போறதையும் நான் பார்த்தேன். சுபத்ரா தலையுயர்த்திச் சொன்னாள்.


நான் ஒன்றும் பேசவில்லை. குழந்தைகளால் நிராகரிக்கப்படுவது அவ்வளவு சுகமான அனுபவம் அல்ல.
திடீரென்று சுபத்ரா வேலையை நிறுத்திவிட்டு தலை உயர்த்திக் கேட்டாள்: வீடு வெச்சு விளையாடறது உங்களுக்கு அவ்ளோ இஷ்டம்னா இதோ, சமையல் ரூம். இங்கே சப்பாத்தியும் புஜியாவும் செஞ்சு விளையாடலாமில்ல? எனக்காவது கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சிருக்கும்.
சுபத்ராவின் கண்கள் நிறைந்தன. நான் சமையலறையிலிருந்து பின் வாங்கினேன்.
அமாவாசை நெருங்கியபோது ப்ரீத்தியின் அம்மாவுடைய ஆஸ்த்மா அதிகமானது. ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். கமலாவைக் கூட்டிக்கொண்டு அவரைப் பார்ப்பதற்காகப் போனேன். ஜெனரல் வார்டின் நீளமான ஹாலில் கடைசி கட்டிலில் ப்ரீத்தியின் அம்மா படுத்திருந்தார். காலடியில் ப்ரீத்தி ஒரு சித்திரக்கதை வாசித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தாள். கையிலிருந்த அரை டஜன் சாத்துக்குடியை வெள்ளைப் பெயிண்ட் அடித்த இரும்பு மேசையில் வைத்தேன். மூக்கில் ஆக்சிஜன் ரப்பர் குழாய் வைக்கப்பட்ட ப்ரீத்தியின் அம்மா என்னைப் பார்த்து சிரிக்க முயன்றார். ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு கமலா ஆஸ்பத்திரியின் வராந்தாவை நோக்கி நடந்தாள். நின்று நின்று கால் வலித்தபோது ப்ரீத்தியின் அம்மாவிடம் விடைபெற்று வீட்டிற்குத் திரும்பினோம்.
ப்ரீத்தி என்ன சொன்னா? நான் கேட்டேன்.
பல தடவை தேங்க்ஸ் சொன்னா

எதுக்கு?
வந்ததுக்கு.
சுபத்ராதான் காலையிலும் சாயங்காலமும் தினமும் வர்றாளே.
அம்மாவும் கஞ்சி கொண்டு வர்ற பொண்ணும் மட்டும்தான் வர்றாங்களாம். வேற யாரும் வர்றதில்லையாம்.
நாம நாளைக்கும் வரலாம். நான் சொன்னேன்.
சட்டென்று கமலா என் கையைப்பிடித்து முத்தமிட்டாள்.
வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்கலாம் என்று படுத்த போதுதான் ப்ரீத்தியின் அம்மா இறந்துவிட்டார் என்று யாரோ வந்து சொன்னார்கள். இந்த முறை சுபத்ரா கமலாவை ப்ரீத்தியின் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போக எதிர்ப்புக் காட்டவில்லை. வெள்ளை சல்வாரும் கமீசும் அணிந்து கமலா சுபத்ராவுடன் படியிறங்கும்போது தான் கவனித்தேன்: சுபத்ராவின் தோள் வரை வளர்ந்து விட்டாள் கமலா. அவளின் வயிற்றில் ஒரு சின்ன கர்ப்பப் பாத்திரம் மலரக் காத்திருக்கிற தென்பதையும் திடீரென்ற நினைத்துக் கொண்டேன். இரவு முழுக்க மரணவீட்டில் சுபத்ராவும் கமலாவும் அடுத்த ஃப்ளாட்டின் சில பெண்களும் சேர்ந்து கண் விழித்திருந்தார்கள். ஏதோ தூரப் பிரதேசத்திலிருந்து ப்ரீத்தியின் அம்மாவின் அண்ணன் வருவதற்காக எல்லோரும் காத்திருந்தார்கள். காலையில் ப்ரீத்தியின் அம்மாவின் ஆபீஸிலிருந்து பத்திருபது பேர்கூட வந்து சேர்ந்தார்கள். இடைவழி பெரும்பாலும் சந்தடியற்றிருந்தது. அதன் மூலையில் அபார்ட்மெண்ட் குழந்தைகள் ஓசையில்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ப்ரீத்தியின் அம்மாவின் அண்ணனும் சில உறவினர்களும் ப்ரீத்தியின் அம்மாவின் வயதான பி.ஏ.வும் ஆபீஸிலிருந்து சிலரும் நானும் சேர்ந்து மின்மயானத்திலிருந்து திரும்பி வந்த போது இரவாகிவிட்டிருந்தது. கமலா அமைதியாக சாப்பாட்டு அறையின் மேசையின் முன்னால் ஒரு டம்ளர் பால் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். பின்னால் நின்று சுபத்ரா அவளுடைய நீண்ட தலைமுடியைச் சீவிப் பின்னிக் கொண்டிருந்தாள். நான் உள்ளே நுழைந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்து அன்றைய தினசரிகளை அப்போதுதான் திறந்தேன். அம்மா சாப்பாட்டு அறையில் கமலா அழைத்தபோது செவிமடுத்தேன்:
அம்மா நாம - நானும் நீங்களும் ப்ரீத்தியும் எல்லாரும் சாகும்போது இப்படித்தான் இருக்குமா?


எப்படி? சுபத்ரா கேட்டாள்.
இப்படி. அதிகமா யாரும் வராம, அன்னிக்கு ப்ரீத்தியோட அப்பா இறந்தபோது எத்தனை கால்களை எண்ணினேன் நான்!
சுபத்ரா ஒன்றும் பேசவில்லை. குழந்தைகள் பிறவியிலேயே சோஷலிஸ்ட்டுகள்தான். சமத்துவமின்மை அவர்களை வேதனைக்குள்ளாக்குகிறது. சுபத்ரா படுக்கை அறைக்குச் சென்று இரவு உடை அணிந்து வெளியே வந்தாள். நான் ப்ரீத்திக்குத் துணையாய் படுக்கப் போறேன். சுபத்ரா கமலாவை முத்தமிட்டுச் சென்னாள்: மோளூ, இன்னைக்கு அப்பாகூடப் படுத்துக்கோ.
நான் செய்திகளை ருசித்தபடி கொஞ்சநேரம் இருந்தேன். கமலா பால் குடிப்பதை நிறுத்திவிட்டு சாப்பாட்டு அறையின் விளக்கை அணைத்து எங்களின் கட்டிலில் போய்ப் படுத்தாள். கொஞ்ச நேரம் கழித்து தினசரியை ஓசையுடன் கீழே போட்டு அன்றைய தினத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உறங்க நானும் தயாரானேன். படுக்கையறையில் சென்று கட்டிலின் ஓரமாய்ப் படுத்து கமலாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். எங்களின் பழைய ஃப்ரிட்ஜ் அவ்வப்போது திடுமென விழித்துக் கொண்டு புலம்புவதைத் தவிர வீடு மௌனமாயிருந்தது. திடீரென்று வருடங்களுக்கு முன்னால் என் தோள்களை வளைத்துக் கிடந்த அப்பாவின் கைகளின் பாரம்பரியம் எனக்குள் விழித்துக் கொண்டது. எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிற அதே ‘பி’ பாஸிட்டிவ் ரத்தத்தினுடைய பிடிவாதமும் அதுதான் - கமலாவைத் தொடவேண்டும். படுக்கையை சூடாக்கத் துவங்கியிருக்கும் அவளோடு இணைந்து கொள்ள இரட்டை வானவில்களைப் பார்த்தபடி நின்ற பையனின் பாரம்பரியம் என்னை முன்னால் தள்ளியது. என்னையே நான் ஒரு கான்வெக்ஸ் கண்ணாடியில் சிறிய உருவத்தில் படி யெடுத்துக் கிடத்தி யிருக்கிற என் மகளோடு உறவை ஸ்தாபிக்க என் கை நீண்டது. கண்கள் திறக்காமல், இன்னும் மூன்றாம் நம்பர் ஷுவிலிருந்து வளராத பிஞ்சுக் கால்களால், கமலா என்னை நெருங்க விடாமல் மார்பில் உதைத்துத் தள்ளினாள்.--------------------


என். எஸ். மாதவன் 1948 - ல் எர்ணாக்குளத்தில் பிறந்தார்.1975 - ல் ஐ.ஏ.எஸ். பட்டம் பெற்றார்.கேரள அரசின் வருவாய்த்துறையில் செக்ரட்டரியாக இருந்தார்.இப்போது மத்திய அரசுப் பணியில் இருக்கிறார்.1970 - ல் கல்லூரி மாணவர்களுக்காக மாத்ருபூமி நடத்திய சிறுகதைப் போட்டியில் ‘சிசு’ முதல் பரிசு பெற்றது. சூளைமேட்டுச் சவங்கள் (1981), ஹிக்விட்டா (1993) ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் பிரசுரமாகியிருக்கின்றன.சென்ற நூறு வருடங்களில் மிகச்சிறந்த பத்து மலையாளக் கதைகளில் ஒன்றாக ஹிக்விட்டா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது. ஹிக்விட்டாவுக்கு 1994 - ல் பத்மராஜன் விருது அளிக்கப்பட்டது.இந்தச் சிறுகதை ஹிக்விட்டா தொகுப்பிலிருந்து.

No comments:

Post a Comment