Thursday, March 31, 2011

டாய்லெட் கிடைக்குமா ப்ளீஸ்?-பிரியா தம்பி


என் மகளுக்கு இரண்டரை வயதாகிறது. வெளியில் போகும்போது டயாபர் அணிவது அவளுக்கு பிடிப்பதில்லை. நானும் பலநேரங்களில் அதை கட்டாயப்படுத்துவதில்லை. வெளியில் இருக்கும் பலமணி நேரங்கள் சிறுநீரை அடக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்ததும் ‘பியா பாத்ரூம்’ எனக் கேட்பாள். அவள் பாத்ரூமுக்கு ஓடும் வேகம் அவளது பலமணி நேர அவஸ்தையை எனக்கு உணர்த்தும்.

பொது இடங்களில் உள்ள கழிவறைகளின் சுத்தம் பற்றி நமக்குத் தெரியும். அது அவளுக்கு புதிதாக ஏதாவது நோயை வரவழைத்து விடக்கூடாதே என அங்கு அழைத்து செல்வதே இல்லை. திறந்த இடங்களில் சிறுநீர் கழிக்க அவள் ஒத்துக் கொள்வதே இல்லை. குழந்தையே ஆனாலும் பொது இடங்களில் பெண்கள் சிறுநீர் கழிக்கக் கூடாது, சிறுநீரை அடக்கித்தான் ஆக வேண்டும் போன்ற விஷயங்கள் அவளது ஜீனில் வந்தவையாக இருக்கக் கூடும்.

நண்பர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றாலோ, ரயிலில் பயணம் செய்யும்போதோ ‘’இங்கே பாத்ரூம் இருக்கா’’ என்று கேட்பாள். இருக்கு என்று சொன்னால் அவளது முகம் அப்படியே மலர்ந்து விடும். அந்த நேரங்களில் மிக வேதனையாகவும், கோபமாகவும் இருக்கும்.

பொதுக்கூட்டங்களில் பெண்கள் வரவில்லை என்று குறைபட்டுக் கொள்ளும் நம் தோழர்களிடம் இந்த கழிவறை பிரச்னையை காரணம் காட்டியே பலமுறை கோபமாக சண்டை இட்டிருக்கிறேன். இரவு முழுக்க நடக்கும் கலை இரவுகளில், நேரம் பன்னிரண்டை தாண்டும்போதே அங்கிருக்கும் தோழிகளும், நானும் அவஸ்தைப்பட ஆரம்பிப்போம். பல நேரங்களில் அதற்காகவே நிகழ்ச்சியில் இருந்து பாதியில் கிளம்பும்படியும் ஆகியிருக்கிறது.

பயணங்களில் இந்த அவஸ்தையை பற்றி சொல்லவே வேண்டாம். 15 மணி நேர பயணத்தில் ஏதாவது ஒரு மோட்டலில் தான் பேருந்து நிற்கும். அந்த இடத்தின் சுகாதாரம் பற்றியெல்லாம் நாம் யோசிக்கவே முடியாது. சர்க்கரை நோயாளிகள், வயதான பெண்கள் எனில் அவஸ்தை அதிகம். எனக்குத் தெரிந்து எந்தப் பெண்ணும் சாலைப் பயணத்தில் தண்ணீர் குடிப்பதேயில்லை. சுகாதாரமற்ற இடங்கள், தண்ணீர் குடிக்காமல் இருப்பது இரண்டும் ஏற்படுத்தும் மருத்துவப் பிரச்னைகளும் நாம் அறியாததல்ல.

பேருந்து ஓட்டும் பெண்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண் காவலர்கள் இவர்கள் இந்தப் பிரச்னையை தினம் தினம் சமாளித்தாக வேண்டும். சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். தமிழகத்தில் 70 சதவீதம் அரசுப் பள்ளிகளில் கழிப்பிடமே இல்லையாம். கிராமங்களில் பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்துவதற்கு சரியான கழிப்பிட வசதி இல்லாதது முக்கியக் காரணம். மாதவிலக்கு போன்ற நாட்களில் அந்தக் குழந்தைகளின் அவஸ்தையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிரச்னை இப்படியிருக்க...

அடிப்படைத் தேவையான கழிவறை வசதி கூட செய்து கொடுக்க வக்கில்லாத அரசாங்கங்கள் தான் இலவசங்களை இன்று அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆண், பெண் யார் ஆட்சி செய்தாலும் பெண்களின் பிரச்னைகள் யாருக்கும் உறைப்பதில்லை.

அரசுகளை எல்லாம் திட்டிக் கொண்டு எழுத்தில் புரட்சி பேசும் நாம் ... ஆண், திருமணம், காதல், காமம், படுக்கையில் எப்படி நடந்து கொள்வது... இதெல்லாம் தாம் பெண்களின் பிரச்னையென பேசிக் கொண்டிருக்கிறோம்.

தோழர், இங்கே எங்கியாவது டாய்லெட் இருக்குமா? உங்க வீட்டு டாய்லெட்டை கொஞ்சம் யூஸ் பண்ணிக்க முடியுமா? என பதட்டங்கள் இல்லாமல் பொது இடங்களுக்கு பெண்கள் வரமுடிந்தாலே பாதி விடுதலையை எட்டிவிட முடியும் என நினைக்கிறேன்..

5 comments:

 1. Real suffering of ladies. Arrangements should be made adequately in all gatherings, shopping Malls, important busy streets.

  ReplyDelete
 2. சத்தியமான வார்த்தைகள்... கனடா மிகவும் குளிர்ந்த நாடு, வெளியில் சென்றாலே ஒன்று இரண்டு முறை வாஷ்ரூம் பயன்படுத்தியே ஆக வேண்டும். அதுவும் பொது இடத்தில் ஒன்றுக்கு அடிக்கவே முடியாது - சட்டம் எல்லாம் இல்லை என்று நினைக்கிறேன். ஒன்று நாகரிகம் கருதி, மற்றொன்று இங்குள்ள குளிருக்கு உங்கள் சல நீர் உறைந்துவிடும். ஆகையால் ஆங்காங்கு கடைத்தெருக்களில் நல்ல முறையில் டாய்லெட் இருக்கிறது. பொதுவாக இங்கு பெற்றோல் பங்குகளில் தான் டாய்லெட் அதிகம். ஆண் பெண் இருவருக்கும் அது பயன்படுத்தக் கூடியதாக நல்ல முறையில் இருக்கும். பஸ் ஸ்டாண்டில் டாய்லெட் இல்லை. ரயில்வே டாய்லெட் நம்நாட்டு டாய்லெட் போலவே இருக்கிறது என்பதால் பெண்கள் பயன்படுத்துவதில்லை. நம் நாட்டிலும் நல்ல முறையில் டாய்லெட் வழிவகை செய்ய மக்களும், அரசும் இணைந்து முயற்சிக்க வேண்டும்................

  ReplyDelete
 3. எல்லோருக்கும் இது கடினமான பிரச்னை.
  நன்றி.

  ReplyDelete
 4. பிரச்சினையை புரிந்துகொள்ள முடிகிறது. வருடத்திற்கு ஒரு முறை தினத்தந்தி & தினமணி போன்ற பத்திரிக்கையிலும் இந்த பிரச்சினையை எழுதாமலும் இல்லை. என்ன செய்வது. எல்லாவற்றையும்ம் அரசாங்கமே யோசித்து தீர்த்துவிடும் என்றோ அல்லது இலவசமாக வழங்கிவிடும் என்றோ காத்திருந்தால் ஆகாது. தெருவில் இறங்கி போராடுவதே ஒரே வழி!

  ReplyDelete
 5. அமெரிக்காவில் இந்த பிரச்சனையை பல இடங்களில் இல்லை. நம் ஊரிலிருந்து இங்கு வருபவர் ஒவ்வொருவரும் இங்கு இருக்கும் நல்ல விஷயங்கள் பட்டியலில் இது கட்டாயம் இருக்கிறது! நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய நெடுஞ்சாலைகளில் கூட ஒவ்வொரு மணி நேர பயணத்திற்கு பிறகும் செல்ல கூடிய வகையில் கழிவறை வசதி Rest Area என்று சொல்லப்படும் இடங்களில் இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து எவ்வளவோ விஷயங்களை காப்பி அடிக்கிறோம். இந்த விஷயத்தை கண்டிப்பாக எடுத்துக்கொள்ளலாம்!

  ReplyDelete