Friday, March 25, 2011
குற்றமும் தண்டனையும்
அருணா ஷண்பக். 20 வயது. மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றி வந்தார். அவருக்கும் ஒரு டாக்டருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருந்தது. இருவரும் ஒரே துறையைச் சேர்ந்தவர்கள் என்பதில் அருணாவுக்குக் கூடுதல் சந்தோஷம். திருமண வாழ்க்கை, கணவன், குழந்தைகள் என்று கற்பனையில் திளைத்துக்கொண்டிருந்தார்.
1973-ம் ஆண்டு நவம்பர் 27. உடை மாற்றுவதற்காக மருத்துவமனையின் கீழ்த்தளத்துக்குச் சென்றார் அருணா. அதே மருத்துவமனையில் வார்ட் பாயாகப் பணியாற்றிய சோஹன்லால் பார்தா வால்மீகி என்பவன், பின்னால் வந்து தாக்கினான். நாயைக் கட்டி வைக்கும் சங்கிலியால் கழுத்தை இறுக்கினான். அருணாவுக்கு நடக்கும் கொடூரம் புரிவதற்குள் சுயநினைவு இல்லாமல் போய்விட்டது. சோஹன்லால் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, நகை, பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாததால், அருணாவின் கண்கள் திறந்திருந்தும், பார்க்க முடியவில்லை. அவரால் பேச முடியவில்லை. உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த 38 ஆண்டுகளாக அவர் வேலை செய்த கெம் மருத்துவமனை படுக்கையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார் அருணா.
உறவினர்கள் அதிர்ந்தார்கள். திருமணம் நின்றுபோனது. வழக்கு நடைபெற்றது. குற்றவாளி சோஹன்லால் கைது செய்யப்பட்டான். அவன் மீது திருட்டு, கொலை முயற்சி என்று இரண்டு வழக்குகள் போடப்பட்டன. அவன் இயற்கையான முறையில் உடல் உறவு வைத்துக்கொள்ளாததால், பாலியல் பலாத்காரம் வழக்கு போட சட்டத்தில் இடமில்லை. (என்ன கேவலமான சட்டம்! பெண்ணின் விருப்பம் இன்றி தொட்டாலே அது குற்றம்தானே?) ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது.
தண்டனை முடிந்த பிறகு சோஹன்லால் டெல்லி சென்று விட்டான். இந்த முப்பது வருடங்களில் அவனுக்குத் திருமணமாகி இருக்கலாம். அவனுடைய குழந்தைகளுக்கும் திருமணம் நடந்திருக்கலாம். பேரன், பேத்தி பிறந்திருக்கலாம். அவனுடைய வாழ்க்கையில் அந்த ஏழு ஆண்டுகள் மட்டுமே இயல்பு வாழ்க்கை சற்று மாறியிருந்திருக்கும். அதன் பிறகு அவனும் மற்றவர்களைப் போல இயல்பான, மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்திருப்பான்.
ஆனால் அருணா? உயிர் மட்டுமே இருக்கிறது உடலில். வேறு எந்த அசைவுகளோ, சிந்தனைகளோ இன்றி இருக்கிறார். அவருக்கு நேர்ந்த கொடுமை தெரியாது. பெற்றோர் இறந்து போன விஷயம் தெரியாது. திருமணம் நின்றுபோன விஷயம் தெரியாது. ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள் இருந்தும் தன்னை வந்து யாரும் பார்ப்பதில்லை என்பது தெரியாது. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனுக்குத் தண்டனை கிடைத்த விவரமும் தெரியாது. அவன் சந்தோஷமாக எங்கோ வாழ்ந்து
கொண்டிருப்பதும் தெரியாது. தனக்கு வயது 58 என்றும் தெரியாது. தன்னுடய உருவம் எப்படி உருமாறியிருக்கிறது என்பதும் தெரியாது. வெளி உலகில் என்னவெல்லாம் நடந்திருக்கின்றன, இப்போது பகலா, இரவா எதுவும் தெரியாது.
குற்றம் செய்தவன் குறைந்த தண்டனை அனுபவித்துவிட்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டான். ஆனால் திருமண நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அருணாவுக்கு வாழ்நாள் முழுவதும் எத்தனை கொடூரமான தண்டனை?
அருணா அனுபவித்தது போதும், அவரைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கருணைக்கொலைக்கு இந்திய சட்டத்தில் இடமில்லை என்பதால் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆனால் மருத்துவர்கள் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் அவர் உயிர் பிரிவதற்கு உதவி செய்யலாம் என்று புதிய தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
ருச்சிகா கிர்ஹோத்ரா
பத்து வயதிலேயே தாயை இழந்தவர் ருச்சிகா. அப்பா, பாட்டி, தம்பியுடன் சண்டிகரில் வாழ்ந்து வந்தார். ருச்சிகாவும் அவர் தோழி ஆராதனாவும் டென்னிஸ் வீராங்கனைகள். தினமும் பயிற்சிக்காக டென்னிஸ் அசோசியேஷன் செல்வார்கள். அந்த அசோசியேஷனின் தலைவர் ரத்தோர் என்ற ஐபிஎஸ் அதிகாரி. அவருடைய மகளும் ருச்சிகாவுடன் படித்து வந்தார்.
ஒருநாள் பயிற்சிக்குச் சென்றபோது, தோழி ஆராதனாவை விரட்டிவிட்டு, ருச்சிகாவைப் பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார் ரத்தோர். ருச்சிகா போராடிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆராதனா அதிர்ந்துபோனார். இருவரும் தப்பித்து வீடு வந்து சேர்ந்தனர். மறுநாளும் ரத்தோரின் கொடுமை தொடர்ந்தது. இருவரும் வீட்டில் விஷயத்தைச் சொன்னார்கள். பெரும் போராட்டத்துக்குப் பிறகு ரத்தோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று ருச்சிகா, ஆராதனா குடும்பங்கள் மிரட்டப்பட்டன. ருச்சிகாவின் தம்பியை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து சித்திரவதை செய்தார் ரத்தோர். ருச்சிகாவின் அப்பா மீது லஞ்சம் வாங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. அப்படியும் வழக்கு வாபஸ் பெறாததால், நடத்தை சரியில்லாதவள் என்று சொல்லி ருச்சிகாவை பள்ளியிலிருந்து நீக்க வைத்தார் ரத்தோர். அடுத்தடுத்து இன்னல்களைச் சந்தித்த 14 வயது ருச்சிகா, தன்னால்தானே இத்தனை துன்பங்கள் தன் அப்பாவுக்கும் தம்பிக்கும் என்று நினைத்து, 1991-ம் ஆண்டு விஷம் சாப்பிட்டு, தற்கொலை செய்துகொண்டார்.
விஷயம் கேள்விப்பட்ட ரத்தோர் அன்று இரவு பார்ட்டி வைத்து, கொண்டாடியிருக்கிறார். வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு, ரூபி என்ற பெயரில் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அளிக்கப்பட்டது. ஒரே வாரத்தில் வழக்கு மூடப்பட்டது. சில மாதங்களில் ரத்தோரின் சேவையைப் பாராட்டி, அரசாங்கம் கூடுதல் டிஜிபி பொறுப்பு அளித்தது.
அநியாயமாகத் தன் மகள் சாகடிக்கப்பட்ட விஷயம் கிர்ஹோத்ராவை நிம்மதி இழக்கச் செய்தது. தவறு செய்தவர் எந்தக் குற்றவுணர்வும் இன்றி வாழ்ந்துகொண்டிருக்க, தன் மகளின் இறப்பு மன உளைச்சலைத் தந்தது. மீண்டும் வழக்கு போடப்பட்டது. ஏராளமான தொல்லைகள். போராட்டங்கள். அவமானங்கள். 19 ஆண்டுகளுக்குப் பிறகு, ரத்தோர் செய்த குற்றத்துக்காக 6 மாத தண்டனை அளிக்கப்பட்டது. தண்டனை அளிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் சிரித்துக்கொண்டே பெயிலில் வெளியே வந்துவிட்டார் ரத்தோர்.
ஆருஷி தல்வார்
ஆருஷியின் பெற்றோர் பிரபலமான பல் மருத்துவர்கள். வசதியானவர்கள். பங்களாவில் வாசம். ஒரே பெண். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஆருஷி, ஒருநாள் இரவு அவருடைய அறையில் கொல்லப்பட்டார். மறுநாள் அந்த வீட்டின் வேலைக்காரர் ஹேமந்த் உடல் மாடியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலையில் இதுவரை சரியான துப்புக் கிடைக்கவில்லை. மிகவும் புத்திசாலித்தனத்துடன், மருத்துவம் தெரிந்த ஒருவரால் கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள். கொலைக்கான காரணமும் தெரியவில்லை. எந்தவிதத் தடயமும் கிடைக்கவில்லை. வெளியில் இருந்து யாரும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, ஆருஷியின் பெற்றோர் சரியாக ஒத்துழைப்பு தரவில்லை என்கிறது சிபிஐ. புரியாத புதிராக இருக்கிறது ஆருஷியின் வழக்கு.
பத்மினி
1992-ம் ஆண்டு சிதம்பரத்தில் பத்மினியின் கணவரை, திருட்டுக் குற்றத்தில் சந்தேகப்பட்டு அழைத்துச் சென்றார்கள் காவலர்கள். கணவருக்கு உணவு எடுத்துச் சென்ற பத்மினியை அவருடைய கணவரின் கண் முன்னே பல காவலர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். மறுநாள் பத்மினியின் கணவர் தூக்கில் தொங்கியதாக உடலை ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் நடந்த இந்தக் கொடுமையைக் கண்டு நாடே அதிர்ந்து போனது.
**
சில வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையின் சிறுகதைப் போட்டிக்காக ஏராளமான கதைகள் வந்து சேர்ந்தன. அதில் முதல் பரிசு பெற்ற கதையை எழுதியவர், ஆயுள் தண்டனை கைதி. அவர் தொடர்ந்து கதைகள் எழுதி வந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை முடிந்து, அலுவலகத்துக்கு வந்தார். ஒரு பெண்ணைக் கொலை செய்த குற்றத்துக்காக அவர் தண்டனை அனுபவித்தார் என்பது மட்டும்தான் அதுவரை எங்களுக்குத் தெரிந்த விஷயம்.
வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. சாந்தமான முகம். நிதானமான நடை. சூழ்நிலையால் குற்றவாளியாக மாறியிருப்பாரோ என்று நினைத்தேன். சற்று நேரம் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அவர் சென்ற பிறகு இந்த விஷயம் தெரிய வந்தது.
’நீங்க எதுக்காக கொலை செய்தீங்க?’
‘ம்… அவ நல்லா தளதளன்னு இருப்பா. ஆசைப்பட்டுத் தொட்டேன். பயங்கரமா போராடி உயிரை விட்டுட்டா…’
‘அதை நினைச்சு இப்ப வருத்தப்படறீங்களா?’
’அவ செத்ததுலயோ, எனக்குத் தண்டனை கிடைத்ததிலேயோ வருத்தமே இல்லை. ஏதோ நடந்து முடிஞ்சிருச்சு…’
ஆறு ஆண்டுகள் தண்டனை முடிந்த சோஹன்லால் சக மனிதர்களைப் போல சுகமாக வாழ்கிறான். தன் மகள் வயதை ஒத்த பெண்ணைப் பாலியல் தொல்லை கொடுத்து, மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, தற்கொலை செய்ய வைத்த ரத்தோர், அரசாங்கத்தால் பதக்கம் பெற்று, பதவி உயர்வுகள் பெற்று, சமூகத்தில் பெரிய மனிதராக வலம் வந்து, ஓய்வும் பெற்றுவிட்டார். குற்றவாளி யார் என்றே சரியாக ஊர்ஜிதம் செய்ய முடியாமல் ஆருஷியின் வழக்கு நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கொலையையும் குற்றமாக நினைக்காமல், தண்டனைக்கும் வருத்தப்படாமல் ஒருவரால் வாழ முடிகிறது.
அப்படியென்றால் மனத்தாலும் உடலாலும் பாதிக்கப்பட்டு, உயிரை விட்ட பெண்களுக்கு கிடைக்கும் நீதி என்ன? குற்றவாளிகளுக்குக் கிடைக்கும் தண்டனைக்கு அர்த்தம்தான் என்ன?
மனம் திருந்தி வாழ்ந்தால் பரவாயில்லை. ஆனால் சில ஆண்டுகள் தண்டனையை அனுபவித்துவிட்டு, அல்லது செல்வாக்கை வைத்து தப்பி விட்டு, நாட்டில் நடமாடும் குற்றவாளிகளைக் கண்டு மேலும் குற்றங்கள் பெருகாதா?
இந்தியாவில்தான் பெண்கள் அதிக அளவில் வன்முறைகளுக்கு இலக்காகிறார்கள். ஒவ்வொரு 26 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் கொல்லப்படுகிறாள். பத்து நிமிடங்களுக்கு ஒரு பெண் வன்முறைக்கு ஆளாகிறாள். பணியிடங்களில் அதிக அளவில் பெண்கள் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். முப்பது வயதுக்கு உட்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
ஒரு நாடு முன்னேற முன்னேற குற்றம் குறைய வேண்டும். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இங்கு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்தே வருகின்றன. பெண்களுக்கு நிகழ்த்தப்படும் குற்றங்களில் பெரும்பாலும் புகார் செய்யப்படுவதில்லை. பெற்றோரும் உறவினர்களும் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் பெண்களை அவமானமாகக் கருதுவதால் வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றனர். ஒன்றிரண்டு குற்றங்களே பெரிய அளவில் வெளியே தெரிந்து, வழக்குகள் தொடரப்படுகின்றன.
அந்த வழக்குகளைப் பதிவு செய்வதற்கே பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படியே பதிவு செய்தாலும் அந்த வழக்கு நியாயமாக நடப்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. பணம், செல்வாக்கு, பதவி என்று பல விஷயங்கள் வழக்கின் போக்கை மாற்றிவிடுகின்றன. அப்படியும் சளைக்காமல் வழக்கைத் தொடர்ந்தால், தீர்ப்பு வருவதற்குள் இருபது வருடங்கள் வரை ஆகிவிடுகிறது. இவ்வளவு நீண்ட காலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை, உடல்நிலை எவ்வளவு தூரம் வைராக்கியத்தோடு போராட வைக்க முடியும்? சில வழக்குகள் நடத்த பணம் இல்லாமல், தெம்பு இல்லாமல் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டு விடுகின்றன. எல்லாம் கடந்து நீதி கிடைக்கும்போது, குற்றவாளிகளுக்குத் தண்டனை அற்பமாக அமைந்துவிடுகிறது. இல்லையென்றால் அந்தத் தண்டனைக்கு மேல் முறையீடு, பெயில் என்று வெளியே வந்து, மிகக் குறைந்த கால தண்டனையுடன் தப்பி விடுகிறார்கள்.
இங்கு குற்றம் செய்வது எளிதாக இருக்கிறது. ஆனால் நீதி கிடைப்பதற்கு எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது! அருணா, ருச்சிகா, ஆருஷி… இன்னும் பெயர் தெரியாத பாதிக்கப்பட்ட பெண்கள் நியாயம் கேட்டு நம் முன் நிற்கிறார்கள். அவர்கள் நியாயம் கேட்பது அவர்களுக்காக மட்டுமில்லை, இனி இதுபோன்று எந்த ஒரு பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்.
note
இந்த கட்டுரையை என் கவனத்திற்கு கொண்டு வந்த தோழி ரேவதி கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி,,
courtesy http://www.tamilpaper.net/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment