Monday, March 7, 2011
ஒரு மனிதனின் ஒரு நகரம் – சென்னை
சென்னையைப் பல்வேறு ஊர்களில் இருந்தபடி, சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தத் தலைநகரில் வசிக்க நேருமென்று ஒரு நாளும் நினைத்ததில்லை. தொண்ணூறுகளின் துவக்கத்தில் அப்பாவை அரக்கோணத்திற்கு மாற்றியபோது சென்னை மிக அருகாமை ஊராக இருந்தது. தமிழநாட்டில் முதல் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. சென்னைக்கும் அரக்கோணத்திற்கும் தான் தொண்ணூறுகளில் பார்த்த சென்னையின் மனிதர்களின இயல்பு இப்போது ஏதோ ஒரு விதத்தில் தலைகீழாக மாறியிருக்கிறது. அசோக்நகரில் சித்தி வீடு இருந்தது. விடுமுறைக்கு அவர்கள் அரக்கோணத்திற்கு வருவது அல்லது நாங்கள் சென்னைக்கு செல்வது வழக்கமாயிருந்தது.
சென்னை என்பது புதிய சினிமாக்கள் பார்க்கும் இடமாகவே அப்போது எனக்கு இருந்தது. ஆல்பர்ட், உதயம் அப்போது அருமையாகப் பராமரிக்கப்பட்ட திரையரங்குகளாகும். உதயம் தியேட்டரில் அதிக திரைப்படங்கள் பார்க்க நேர்ந்திருக்கிறது. அஞ்சலி, சத்ரியன், மைக்கல் மதனகாமராஜன், கோபுர வாசலிலே.. போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடியவை அந்த ஆண்டுகளில்.
அப்பாவிற்கு மத்திய அரசில் வேலை என்பதால் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பெட்டிதூக்கி வேறு ஊர் செல்ல வேண்டியிருக்கும். ஒரு வழியாகக் கல்லூரிப் படிப்புக்காக மதுரைக்கு மாற்றல் வாங்கி வந்தார், அப்பா. படிப்பு முடிந்ததும் சென்னை சென்று செட்டிலாகி விட வேண்டும் என்ற அப்பார்ட்மெண்ட்வாசிக் கனவுதான் எனக்கும் இருந்தது. அந்த சாதாரண கனவு அவ்வளவு எளிதானதல்ல என்பது சென்னைக்கு வந்த பிறகுதான் புரிந்தது. 2005-ல் அப்பாவிற்கு ஓய்வு பெற மூன்று வருடங்கள் இருக்கும்போதுதான் சென்னைக்கு மாற்றினார்கள். அதுவரை அடிக்கடி வந்து செல்லும் ஊராகவும், ஒரு சுற்றுலா பயணியின் மன நிலையோடுதான் வந்து சென்று கொண்டிருந்தேன். 2000 முதல் 2005 வரை சென்னையில் தங்கிப் பணியாற்ற என் வீட்டினர் ஒத்துக்கொள்ளவேயில்லை.
ஒரு கட்டத்தில் மதுரையில் வேலையில் முன்னேற வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. நான் பணியாற்றும் பிஸியோதெரபி துறையின் வேலைகளும் மிகக்குறைவாக மதுரையில் இருந்தன. நானே சென்னைக்கு வர வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த போது தான் இந்த மாற்றல் வந்து தலைநகருக்கு கொண்டு வந்து சேர்த்தது.
குவார்ட்டர்ஸ் கிடைத்த இடம் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை. இங்கு வந்து இறங்கிய போது எனக்கும் இந்தப் பகுதிக்கும் ஏதோ ஒரு தொடர்பு முன்னரே இருப்பது போல உணர்ந்தேன்.
வேலையில்லாமல் ஓரிரு மாதங்கள் இருக்க நேர்ந்தது. சாதாரணமாக ஒருவர் சென்னையில் வேலை தேட ஆரம்பித்தால் நல்ல இடத்தில் வேலை கிடைப்பதற்குக் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம் என்பது என் கணிப்பு. நகரம் பிடிபடவே இரண்டு மாதங்கள் ஆகிவிடும்.
அந்த காலத்தில் எழுத்தாளர்களை நோக்கிய பயணங்கள் ஆரம்பமாகிறது. எஸ்.ராமகிருஷ்ணனை அடிக்கடி சந்திப்பேன். சென்னை குறித்து நிறைய விஷயங்களை அவர் எனக்கு சொல்லித்தருவார். புத்தக வெளியீட்டுக் கூட்டம் நடக்கும் இடங்கள், பிலிம் சேம்பர், புக் பாயிண்ட், ருஷ்யன் கலாச்சாரமையம், தேவநேயப்பாவணர் நூலக அரங்கம் என உரையாடலின் வழியே அறிமுகப்படுத்தினார். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடும் பழைய புத்தகக் கடைகள் பற்றியும் அறிந்து கொண்டேன். அதில்தான் சம்பத்தின் “இடைவெளி” போன்ற மறுபதிப்புக் காணாத புத்தகங்களை வாங்கினேன். கிடைப்பதற்கரிய, தற்போது பதிப்பில் இல்லாத புத்தகங்களை அங்குதான் காண முடிந்தது. “குட்டி இளவரசன்”, “கரம் சேவ் சகோதரர்கள்”, சார்த்தர் எழுதிய புத்தகங்கள் என்று பல அரிய நூல்கள் மலிவான விலையில் கிடைத்தன.
உயிர்மை நடத்தும் பெரும்பாலான கூட்டங்களுக்கு மனுஷ்யபுத்திரன் அழைப்பு விடுப்பார். இத்தனைக்கும் அப்போது நான் இலக்கிய வாசகன் மட்டுமே, பல நண்பர்களை அறிமுகப்படுத்தினார். நேரம் கிடைக்கும் போது அவர் வீட்டிற்கு செல்வேன். பெரும் வேலைகளுக்கிடையேயும் எனக்காக நேரம் ஒதுக்கி இலக்கியம் குறித்தும், புதியதாய் உயிர்மையில் வரப்போகும் புத்தகங்களை குறித்தும் பேசுவார்.
இப்போதைய சென்னையின் வெறுமைத் தோற்றத்தை நினைத்துப் பார்க்கிறேன். எந்த நண்பரின் வீட்டுக்குள்ளும் நுழையவே முடியவில்லை. அப்படி நுழைந்தாலும் இலக்கியம் குறித்துப் பேச முடியாது. பொது இடங்களில் சந்திப்பதோடு சரி. ஆனால் மனுஷ்யபுத்திரனும், ராமகிருஷ்ணனும், அவர்கள் வீட்டிற்குச் சென்ற போது அமரவைத்து மணிக்கணக்கில் பேசியது எங்ஙனம் என யோசிக்கையில் வியப்பே மேலோங்கியது. இன்று வரைக்கும் இலக்கியம் தேடி வரும் இளைஞர்களுக்கு அவர்களின் வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.
என் வீட்டின் அருகாமையில் அப்போது அஜயன் பாலா இருந்தார். அவர்தான் என்னைக் கவிஞர் அய்யப்ப மாதவனுக்கு அறிமுகப்படுத்தினார். பார்த்தவுடன் நெருங்கிய நண்பராக உணரமுடிந்தது. அவர் போகும் இலக்கியக் கூட்டங்கள், நண்பர்கள் சந்திப்பு, சிறப்புத் திரையிடல்கள் என்று என்னையும் கூட்டிச் செல்வார். ஸ்ரீ நேசன், பழனிவேள், ஜோஸ் அன்றாயின், குமார் அம்பாயிரம், விசுவநாதன் கணேசன் எனப் பரவலான இலக்கிய நண்பர்களை அறிமுகப்படுத்தினார். ஹபிபுல்லா சாலையில் அவருக்கு ஒரு அறை இருந்தது. அதுவே இலக்கிய நண்பர்களைச் சந்திக்கும் களமாகவும் விளங்கியது.
அந்த அறையின் சமையலறை மேடையில் கூடப் புத்தகங்கள் இருக்கும், அக்காட்சி இன்றும் என் நினைவில் இருக்கிறது. இதற்கு நடுவேதான் தனியார் மருத்துவமனை ஒன்றில் எனக்கு வேலை கிடைத்தது. மருத்துவமனை வாரத்தின் பகல்களையெல்லாம் எடுத்துக் கொண்டது. விடுமுறைகளில் மட்டுமே நண்பர்களைச் சந்திக்கிற, இலக்கியம் பேசுகின்ற ஆளாய் மாறிப்போனேன். எழுதுவதும் கணிசமாக குறைந்துவிட்டது. அய்யப்பன் தான் தொடர்ந்து நான் இயங்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவ்வப்போது பேச்சினூடே சொல்வார்.
நகரத்தின் மனிதர்கள் எங்கும் பரபரப்பின் மீது தொற்றிக் கொண்டு இயங்குகிறார்கள். தன் வாழ்வு, தன் குடும்பம், தன் தேவைகள் என்றே அவர்களின் வாழ்க்கை சுருக்கியதால் இருக்கலாம். இவர்களிடம் இருந்து தனிமைப்பட்டவனாய் நான் உணர்ந்தேன். அந்த மாநகரத்தனிமை தான் என்னைக் கதைகள் எழுத வைத்தன. அவசரத்திற்கு உதவி செய்யக்கூட ஆட்கள் வரமாட்டார்கள் என்பதைப் பல முறை கண்டு இருக்கிறேன். சாலை விபத்தின் போது “எனக்கென்ன” என்று ஒதுங்கிப்போகும் ஆட்களுக்கு மத்தியில் ஓரிரண்டு பேர் உதவிக்கு வருவது இன்னும் ஈரம் மிகுந்த மனிதர்கள் இருப்பதையும் காட்டியது. புதிய இடங்களில் வழிகேட்க நான் ஆட்டோ ஓட்டுநர்களையே பயன்படுத்துவேன். பக்கத்தில் இருக்கும் தெருவின் பெயரே தெரியாதவர்களே வீடுகளில் இருக்கிறார்கள். தெரிந்தாலும் தெரியாது என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். என் பக்கத்து வீட்டில் யாருக்கும் நிச்சயம் என் பெயர் தெரியாது என்றே நினைக்கிறேன். தென் மாவட்டங்களில் இருந்து என்னைப் போன்றே நிறைய இளைஞர்கள் வேலை தேடி இங்கு வருகிறார்கள். வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் இளைஞர்கள் எவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப்போனதாய் சரித்திரச் சான்றேதும் கிடையாது. சென்னை அவர்களை வெளியேறவிடாமல் இலக்கியம், சினிமா, வேலை, இருப்பிடம், காதல், குடி என்று சிறு சிறு ஆசைகளை மூட்டித் தனக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறது. காலப் போக்கில் அவர்களும் முகமூடி ஒன்றைப் போட்டுக் கொண்டு இங்கு இருக்கும் மனிதர்களுள் கலந்துவிடுகிறார்கள்.
நானும், அய்யப்ப மாதவனும், ஒரு கோடைகால மதியப் பொழுதில் திட்டம் ஒன்றைத் தீட்டினோம். அவருக்கும் எனக்கும் நெத்திலி மீன் சாப்பிடும் ஆசை வந்தது. நெத்திலி வறுவல் தி.நகரில் ஜி.என். செட்டி சாலையில் உள்ள ஹோட்டல் விருதுநகரில் பிரபலமான உணவுகளின் ஒன்று. அவரும் நானும் சென்று நெத்திலி மீன் வறுவல் ஆளுக்கு ஒன்றாகப் பார்சல் சொல்லிவிட்டு காத்திருந்தோம். அறையில் வறுவலைக் கொண்டு வந்து ஆளுக்கு ஒரு பீருடன் சாப்பிடுவது திட்டம். கோடைக்கால மதியத்தில் ரம்மியமாக இருக்கும் என எங்களுக்குள் பேசிக்கொண்டோம். கொஞ்ச நேரத்தில் அரசியல்வாதி ஒருவரின் வாரிசுகள் ஹோட்டலினுள் நுழைந்தனர். அவர்கள் ஏஸி அறைக்குள் சென்றனர். நாங்கள் வேடிக்கை பார்த்தோம். சுறாப்புட்டு, இறாவறுவல், நெத்திலி வறுவல் என அவர்கள் அறைக்குள் சென்று கொண்டே இருந்தது. இருமுறை பில் போடும் இடத்தில் கேட்டேன். காத்திருக்கச் சொன்னார்கள். கிட்டதட்ட ஒரு மணி நேரம் கடந்தது. பொறுமையிழந்து இருவரும் சென்று கேட்டபோது நெத்திலி வறுவல் தீர்ந்துவிட்டதாகவும், வேண்டுமானால் சிக்கன் 65 போட்டுத் தருவதாகக் கூறினார்கள். எங்களுக்கு எடுத்து வைத்ததை அரசியல்வாதி குடும்பத்தினருக்கு தாரை வார்த்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொண்டேன்.
"முன்பே சொல்ல வேண்டியதுதானே, இவ்வளவு நேரம் காக்க வைத்தா அநியாயமாக உங்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்வீர்கள்?" எனக்கேட்டேன்.
“அதான் 65 போட்டுத்தரம்னு சொன்னமே சார்” என்றார்கள்
“அட வெண்ணைகளா, அதுக்கு எதுக்குடா உங்க ஹோட்டல் தேடி வர்றோம்?” என படக்கென்று கேட்டார் அய்யப்பன்.
“பாருங்க வி.எம். சென்னையில் ஒரு சின்ன ஆசையைக் கூட நிறைவேற்ற முடியாமல் அரசியல் உள்ளே நுழைஞ்சிடுது!” ஆற்றாமையுடன் அய்யப்பன் கூறினார்.
இங்கு வேலை, பதவி, சம்பளம், கவனிப்பு, மரியாதை, உடை எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. அதாவது கண்ணுக்குத் தெரியாத நுண் அரசியல். ஏதாவது ஷாப்பிங் மால்களிலோ, வரவேற்பு கூடங்களிலோ குறிப்பிட்ட இனத்தை அதாவது வட இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண்களை மட்டும்தான் பெரும்பான்மையாக வேலைக்கு அமர்த்துகின்றனர். இவற்றில் ஒரு கருப்பான பெண்ணைக்கூடக் காண்பது கடினம். அதேபோல ஐ.டி. கம்பெனிகளுக்கும் வேலைக்கு அமர்த்தும் பெண்களுக்கும் நிறம், உடை கோட் (Code) உண்டு என்று ஒரு நண்பர் கூறினார்.
இவ்வளவு நாட்களாக இங்கிருந்தும் என்னால் நகரத்தின் சூழ்ச்சிகளில் ஒன்றைக் கூடக் கற்றுக் கொள்ளவோ பயன்படுத்தவோ முடிந்ததே இல்லை. சாட்சியாக எல்லாவற்றுக்கும் இருந்து கடந்து சென்றதன் விளைவே எனது கதைகள்.
சென்னையின் லாப நோக்கற்ற சந்திக்கும் இடங்கள், ஒவ்வொன்றும், ஷாப்பிங் மால்களாக மாறிவருகின்றன. தனித்த வீடுகள் பெரும்பாலானவை அடுக்குமாடி குடியிருப்புகாளக மாறியிருகின்றது. செங்கல்பட்டின் எல்லைவரை சென்னை விரிந்திருக்கிறது. வாகனங்களின் நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி சாலையை அடைத்துக் கொண்டு மூச்சுவிட முடியாமல் மேம்பாலங்களில் ஏறிக் கொண்டு இருக்கின்றது. ஒரு காப்பி வாங்கிக் குடித்துக் கொண்டு மணிக்கணக்கில் நண்பர்களோடு கதை பேசிய உட்லண்ட்ஸ் டிரைவ் இன் இன்று அடைக்கப்பட்டு விட்டது. இதன் பாதிப்பால் எழுதியதே “அடைபடும் காற்று” என்றொரு கதை. தந்தையாரின் வீட்டை மட்டும் வைத்துக் கொண்டு அவரின் புத்தக சேகரிப்புகளை பழைய பேப்பர்கடைக்கு போட்ட புத்திரன்களின் மனநிலையைப் பார்த்து எழுதியதே “இருத்தலின் விதிகள்” மகப்பேறு மருத்துவரிடம் செக்கப் செய்ய வரும் திருமணமாகாத இளம் பெண்கள் சிலரின் கதையே “நகரத்திற்கு வெளியே” இப்படிநான் சிலவற்றுக்கு சாட்சியாக இருந்து எழுதியிருக்கிறேன். மாநகரின் சில காட்சிகளை பதிவு செய்திருக்கிறேன். பதிவு செய்யாமல் போனவையே அதிகம், இன்று அய்யப்பமாதவனின் அறை ஹபிபுல்லாரோட்டில் இல்லை. அவர் ராயப்பேட்டை சென்றுவிட்டார். விசுவநாதன் கணேசன் வளசரவாக்கம் போய்விட்டார். இன்று இந்த தி.நகரில் நான் மட்டும் இருக்கிறேன். தேநீர் கடையில் பேசிய பேச்சுக்கள், சந்திப்புகள், நண்பர்களின் இலக்கிய உரையாடல்கள் எதுவும் ஹபிபுல்லா ரோட்டில் இல்லை. வெற்றுத் தனிமை என்னைச் சூழ்ந்து இருக்கிறது.
இதெல்லாம் என்னுடைய தனிப்பட்ட உணர்வுகள் தானே தவிர, சென்னை நகரத்தின் ரங்கநாதன் தெருவில், சரவணா ஸ்டோர்ஸில் துணி எடுக்கும் கூட்டம் 365 நாட்களும் அலை மோதுகிறது. ஜாய் ஆலுக்காஸ், ஜி.ஆர்.டி என தீபாவளி, அக் ஷயா திதி ஸ்பெஷல் என்று நகைகள் வாங்க வரும் கூட்டமும் குறைவதேயில்லை. பாண்டிபஜார் கடைகள் சனி, ஞாயிறுகளில் நிரம்பியே வழிகின்றன. சரவணபவனில் க்யூ கட்டி நிற்கிறது. முருகன் இட்லி கடையில் நாள் முழுவதும் காத்திருந்து டோக்கன் வாங்கி சாப்பிடுகிறார்கள், வட இந்தியர்கள். கிருஷ்ணா ஸ்வீட்ஸின் மைசூர்பாக் வியாபாரம் கோலாகலமாகவே நடக்கிறது. யாருக்கும் எந்தக் குறையுமில்லை, வெளியே இருந்து சென்னையைப் பார்த்தால், கொண்டாட்ட நகரமாகவே தெரியும். கண்ணாடித் தொட்டியில் வண்ணமயமான மீன்களை வெளியே இருந்து பார்த்தபடி கடந்து செல்லும் ஒரு பார்வையாளரைப் போல சென்னையை ஒரு சிறுவனாகவே வேடிக்கைப் பார்க்க கற்றுக் கொண்டுள்ளேன்.
6 comments:
Chakkaravarthi said...
வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் இளைஞர்கள் எவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப்போனதாய் சரித்திரச் சான்றேதும் கிடையாது. சென்னை அவர்களை வெளியேறவிடாமல் இலக்கியம், சினிமா, வேலை, இருப்பிடம், காதல், குடி என்று சிறு சிறு ஆசைகளை மூட்டித் தனக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறது. காலப் போக்கில் அவர்களும் முகமூடி ஒன்றைப் போட்டுக் கொண்டு இங்கு இருக்கும் மனிதர்களுள் கலந்துவிடுகிறார்கள்....எத்தனை உண்மையான வரிகள் .. இல்லை இது வாழ்கையின் நிதர்சனம் .. கண்ணனுக்கு தெரியாத கயிறு மாநகரம் எல்லோரும் அதன் பிடியில் சிக்கி .. சிக்கலை அவிழ்க்க முயன்று தோற்று .. ஜெயிக்கும் .. விளையாட்டை அழகாய் பதிவு செய்திருக்கிறார் .. விஜய் மகேந்திரன் ..
Uma Varatharajan said...
//வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் வரும் இளைஞர்கள் எவரும் தன் சொந்த ஊருக்குத் திரும்பிப்போனதாய் சரித்திரச் சான்றேதும் கிடையாது. சென்னை அவர்களை வெளியேறவிடாமல் இலக்கியம், சினிமா, வேலை, இருப்பிடம், காதல், குடி என்று சிறு சிறு ஆசைகளை மூட்டித் தனக்குள்ளேயே தக்க வைத்துக் கொள்கிறது.//மிகவும் யதார்த்தமான வரிகள்.எந்த ஒரு மனிதனும் சற்று பக்குவமடைய,சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள மன முதிர்ச்சியடைய ' நகர் வாசம்' என்பது இன்றியமையாதது. விஜய் மகேந்திரனின் எழுத்தில் தெரியும் அந்த 'விலகி நின்று வேடிக்கை பார்க்கும்' தன்மை புலப் படுவதற்கும் அதுவே காரணமாக இருக்கலாம்.
vijay mahendran said...
சக்ரவர்த்தி,உமா வரதராஜன் சார்..உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி,,,
Aravind said...
Where i can find your stories/can you please mention the book and the publisher name
vijay mahendran said...
நன்றி அரவிந்த் ,''நகரத்திற்கு வெளியே'' தொகுப்பின் பெயர்,உயிர்மை பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.
Lavanya Rajalakshmi said...
" கண்ணாடித் தொட்டியில் வண்ணமயமான மீன்களை வெளியே இருந்து பார்த்தபடி கடந்து செல்லும் ஒரு பார்வையாளரைப் போல சென்னையை ஒரு சிறுவனாகவே வேடிக்கைப் பார்க்க கற்றுக் கொண்டுள்ளேன். " - மிகவும் நிதர்சனமான வரிகள். நம்மைப்போல் வேற்று ஊர்வாசிகளுக்கு சென்னை போன்ற பரபரப்பான, சுலபத்தில் ஒட்டிக்கொள்ள முடியாத lifestyle உள்ள ஒரு நகரம் எப்பொழுதுமே கண்ணாடித் தொட்டியின் வண்ண மீன்தான்.. மிகவும் நல்ல பதிவு.. நன்றி விஜய்..
thanks to...
http://www.thangameen.com/Archieves/contentdetails.aspx?tid=196&iid=33
Subscribe to:
Post Comments (Atom)
உலகில் எந்தப் பகுதிக்கு சென்றாலும், சென்னை எவ்வளவு கேவலமாய் மாறிவிட்டாலும், சென்னைக்கும் எனக்கும் எதோ ஒரு பிரிக்க முடியாத பந்தம் இருப்பதை உணர்ந்துள்ளேன் ! ஆனால் பழைய சென்னை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கிழடுத் தட்டி வருவது மிகவும் வேதனையான விசயம். திட்டமிடல் இன்றிய குடியேற்றமும், சுயநலவாசிகளின் பெருக்கமும் சென்னையை அழித்துவிட்டன. சென்னை செங்கல் பட்டு வரைப் பரவுவதில் பிரச்சனை இல்லை. ஆனால் திட்டமே இல்லாமல் குப்பைத் தொட்டியைவிடவும் கேவலமாய் மாறிவருவது நெஞ்சை அடைக்கிறது ................
ReplyDeleteஅன்பு விஜய்,
ReplyDeleteநல்லாயிருந்தது இந்தப் பதிவு... நெத்திலி மீனுக்கு அலைஞ்சது... ஒரு அணுபவம். நெத்திலி மீனைப் பற்றி படிக்கும் போதே... வார்த்தைகளுக்கு ஊடாகத் தெரியும் அதே மாதிரியான அணுபவங்களை வாசிக்க வைக்கிறது... நானும் சென்னையில் பிரசாத் லேப்ல கொஞ்ச நாள் வேலை பார்த்தபோது தி.நகரின் பரபரப்பும்... அதன் அடர்ந்த அமைதியும் வியப்பான முரன்களாய்த் தோன்றும். ஆழ்கடலின் அமைதியும், கரையின் ஆர்ப்பரிப்பும் போல.
எல்லாவற்றையும் எழுத வாய்க்கிறது உங்களுக்கு வாழ்த்துக்கள்... மாதவன் எனக்கும் நல்ல நண்பர்...
அன்புடன்
ராகவன்
உங்களின் பார்வை பல சராசரி மனிதனின் பார்வை , மிக சிறப்பு !!
ReplyDeleteசென்னையைப் பற்றி எழுத்தாக்கம் அருமை, நான் முதல் முதலில் சென்னை சென்றது 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் - அப்போதுதான் எனக்கு மூன்றாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு முடிந்து இரண்டு மாத கோடை விடுமுறை - திருமணமாகி சென்னை தங்க சாலை பகுதியில் குடியிருந்த எனது சகோதரி வீட்டில் கோடை விடுமுறையைக் கழிக்க எனது தந்தையாருடன் சென்றேன். சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பார்த்துப் பிரமித்துப் போனேன். ஆசியக் கண்டத்திலேயே உயரமான மெட்ராஸ் எல் ஐ சி - பதினாலு மாடிக் கட்டிடம் பார்ப்பதற்கென்றே மவுன்ட் ரோட்டிற்கு என் அப்பாவுடன் சென்றேன் ! பீச் - செத்த காலேஜ் ( உயிரற்ற மிருகங்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள ஜூ) - உயிர் காலேஜ் ( ஜூ), மூர் மார்கெட் போன்ற இடங்களைச் சுற்றிப் பார்த்தேன். அந்தக் காலத்தில் சென்னை செல்வது அமெரிக்காவிற்குப் போவது போன்ற சிறப்பு - மெட்ராஸ் சென்று விட்டு வந்தால் எல்லோரும் கேட்கும் கேள்வி - மூர் மார்கெட் போனயா? எல் ஐ சி கட்டடம் பார்த்தியா ? பீச் சுக்குப் போனாயா? என்ற கேள்விகள் தான் அதிகம், அப்போது மெட்ராஸ் டவுன் பஸ் சில் பயணித்த டிக்கட்டுகள் - ஜூ நுழைவுக்கட்டன டிக்கட் போன்றவற்றை ஒரு நோட்டில் தேதி வாரியாக ஒட்டி பல ஆண்டுகள் அதை பொக்கிசமாக வைத்திருந்தேன் பிறகு 1977 இல் மெட்ராசில் மத்திய அரசு பணியில் சேர்ந்த பின் ஒருமாதம் தங்கியிருந்தேன், வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து நாலாம் நெம்பர் பஸ் எடுத்து வாசன் வீடு ஸ்டாப் இறங்கி என்னுடைய அலுவலகத்திற்குப் போவேன். காலேஜ் முடித்ததும் பத்தொன்பது வயதில் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தாலும், என் உருவம் ஐந்தடிக்கும் குறைவாகாவே - அரும்பு மீசை கூட முளைக்காத காலம், ஒரு சனிக்கிழமை என் நண்பரின் அறைக்குச் சென்றுவிட்டு அவருடன், கூட மேலும் நான்கு நண்பர்களுடன் இரவு இரண்டாவது ஆட்டம் ( நைட் ஷோ) ஆங்கிலப் படம் பார்க்க மவுன்ட் ரோடு தேவி தியேட்டருக்குப் போனேன். நடிகை எலிசபெத் டெய்லர் நடித்த "ஏ: படம். டிக்கட் கொடுப்பவர் டிக்கெட் கவுண்டரிலிருந்து தலையை உயர்த்தி அனைவரையும் பார்த்து விட்டு, அந்த தம்பியை உள்ளே விட முடியாது - பதினாறு வயது மேல் இருப்பவர்களுக்குத்தான் அனுமதி என்றார். என் நண்பர்கள் அவருக்கு பத்தொன்பது ஆகிறது - மத்திய அரசு ஊழியர் என்றெல்லாம் விளக்கம் அளித்தும் டிக்கட் கொடுப்பவர் நம்பவும் இல்லை - டிக்கட் கொடுக்கவும் மறுத்து விட்டார், ( அப்போதெல்லாம் ஐ டி கார்ட் சிஸ்டம் இல்லை) .. பிறகு எல்லோரும் பக்கத்து கடையில் டீ சாப்பிட்டு விட்டு அறைக்குத் திரும்பினோம். இன்றைக்கும் நண்பர்கள் நாங்கள் சந்தித்துக் கொண்டால் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொள்வோம். தியேட்டர்களில் சட்ட விதிகள் அவ்வளவு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது என்பது தான் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம்.
ReplyDeleteஅன்றைய சென்னை மக்களிடம் சகஜமான மனநிலை - ஏழை பணக்காரன் என்ற "ஈகோ: அதிகம் இல்லாதிருந்தது. ஆனால் இன்று ஏறக்குறைய பதினாறு முதல் முப்பத்தைந்து வயது வரை உள்ள பெரும்பான்மையானவர்களிடம் "ஈகோ" "சக மனிதர்களைப் பற்றி சற்றும் கவலைப்படாத,சுயநலம், பாதைகளில் - பயணிக்கும் வாகனங்களில் பக்கத்தில் இருப்பவர்க்கு அசௌகரியம் ஆகுமே என்றெல்லாம் எண்ணாமல் சப்தமாக பேசுவது அல்லது திமிராக நடந்து கொள்வது போன்ற விரும்பத்தகாத செயல்கள் நிறைந்துள்ளன. வயதானவர்கள் - நோயாளிகள் - பாமர மக்களை மிகவும் ஏலனாமகப் பார்க்கிறார்கள். 1965 இல் பீச் பகுதியில் ஆடையின்றி நிர்வாணமாக ஓடியாடிய ஏழை குழந்தைகளை பார்த்தேன். கடந்த ஆண்டும் பீச் பகுதிச் சென்றபோதும் அதே போல
ஆடையின்றி நிர்வாணமாக ஓடியாடிய ஏழை குழந்தைகளை காண நேர்ந்தது, சென்னை - இன்று பட்டு சட்டை அணிந்த மாப்பிளையாக - பட்டுச் சேலை அணிந்த மணமகளாக - சுரிதார் அணிந்த நாகரிக மங்கையாகக் காட்சியளிக்கலாம் - ஆனால், பட்டுச் சட்டைகளுக்கும் பட்டுச் சேலைகளுக்கும் சுரிதார்களுக்குள்ளும் இருக்கும் உள்ளாடை கந்தலாகத்தான் உள்ளது ! நான் கந்தல் என்று குறிப்பிடுவது, மங்கல்யான் ஏவினாலும், இன்றைக்கும் ஆடையின்றி நிர்வாணமாக ஓடியாடும் ஏழை குழந்தைகள் நிறைந்த சென்னை !
சென்னையைப் பற்றி எழுத்தாக்கம் அருமை, நான் முதல் முதலில் சென்னை சென்றது 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் - அப்போதுதான் எனக்கு மூன்றாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வு முடிந்து இரண்டு மாத கோடை விடுமுறை - திருமணமாகி சென்னை தங்க சாலை பகுதியில் குடியிருந்த எனது சகோதரி வீட்டில் கோடை விடுமுறையைக் கழிக்க எனது தந்தையாருடன் சென்றேன். சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பார்த்துப் பிரமித்துப் போனேன். ஆசியக் கண்டத்திலேயே உயரமான மெட்ராஸ் எல் ஐ சி - பதினாலு மாடிக் கட்டிடம் பார்ப்பதற்கென்றே மவுன்ட் ரோட்டிற்கு என் அப்பாவுடன் சென்றேன் ! பீச் - செத்த காலேஜ் ( உயிரற்ற மிருகங்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள ஜூ) - உயிர் காலேஜ் ( ஜூ), மூர் மார்கெட் போன்ற இடங்களைச் சுற்றிப் பார்த்தேன். அந்தக் காலத்தில் சென்னை செல்வது அமெரிக்காவிற்குப் போவது போன்ற சிறப்பு - மெட்ராஸ் சென்று விட்டு வந்தால் எல்லோரும் கேட்கும் கேள்வி - மூர் மார்கெட் போனயா? எல் ஐ சி கட்டடம் பார்த்தியா ? பீச் சுக்குப் போனாயா? என்ற கேள்விகள் தான் அதிகம், அப்போது மெட்ராஸ் டவுன் பஸ் சில் பயணித்த டிக்கட்டுகள் - ஜூ நுழைவுக்கட்டன டிக்கட் போன்றவற்றை ஒரு நோட்டில் தேதி வாரியாக ஒட்டி பல ஆண்டுகள் அதை பொக்கிசமாக வைத்திருந்தேன் பிறகு 1977 இல் மெட்ராசில் மத்திய அரசு பணியில் சேர்ந்த பின் ஒருமாதம் தங்கியிருந்தேன், வள்ளலார் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து நாலாம் நெம்பர் பஸ் எடுத்து வாசன் வீடு ஸ்டாப் இறங்கி என்னுடைய அலுவலகத்திற்குப் போவேன். காலேஜ் முடித்ததும் பத்தொன்பது வயதில் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தாலும், என் உருவம் ஐந்தடிக்கும் குறைவாகாவே - அரும்பு மீசை கூட முளைக்காத காலம், ஒரு சனிக்கிழமை என் நண்பரின் அறைக்குச் சென்றுவிட்டு அவருடன், கூட மேலும் நான்கு நண்பர்களுடன் இரவு இரண்டாவது ஆட்டம் ( நைட் ஷோ) ஆங்கிலப் படம் பார்க்க மவுன்ட் ரோடு தேவி தியேட்டருக்குப் போனேன். நடிகை எலிசபெத் டெய்லர் நடித்த "ஏ: படம். டிக்கட் கொடுப்பவர் டிக்கெட் கவுண்டரிலிருந்து தலையை உயர்த்தி அனைவரையும் பார்த்து விட்டு, அந்த தம்பியை உள்ளே விட முடியாது - பதினாறு வயது மேல் இருப்பவர்களுக்குத்தான் அனுமதி என்றார். என் நண்பர்கள் அவருக்கு பத்தொன்பது ஆகிறது - மத்திய அரசு ஊழியர் என்றெல்லாம் விளக்கம் அளித்தும் டிக்கட் கொடுப்பவர் நம்பவும் இல்லை - டிக்கட் கொடுக்கவும் மறுத்து விட்டார், ( அப்போதெல்லாம் ஐ டி கார்ட் சிஸ்டம் இல்லை) .. பிறகு எல்லோரும் பக்கத்து கடையில் டீ சாப்பிட்டு விட்டு அறைக்குத் திரும்பினோம். இன்றைக்கும் நண்பர்கள் நாங்கள் சந்தித்துக் கொண்டால் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொள்வோம். தியேட்டர்களில் சட்ட விதிகள் அவ்வளவு சிறப்பாக கடைபிடிக்கப்பட்டது என்பது தான் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம்.
ReplyDeleteஅன்றைய சென்னை மக்களிடம் சகஜமான மனநிலை - ஏழை பணக்காரன் என்ற "ஈகோ: அதிகம் இல்லாதிருந்தது. ஆனால் இன்று ஏறக்குறைய பதினாறு முதல் முப்பத்தைந்து வயது வரை உள்ள பெரும்பான்மையானவர்களிடம் "ஈகோ" "சக மனிதர்களைப் பற்றி சற்றும் கவலைப்படாத,சுயநலம், பாதைகளில் - பயணிக்கும் வாகனங்களில் பக்கத்தில் இருப்பவர்க்கு அசௌகரியம் ஆகுமே என்றெல்லாம் எண்ணாமல் சப்தமாக பேசுவது அல்லது திமிராக நடந்து கொள்வது போன்ற விரும்பத்தகாத செயல்கள் நிறைந்துள்ளன. வயதானவர்கள் - நோயாளிகள் - பாமர மக்களை மிகவும் ஏலனாமகப் பார்க்கிறார்கள். 1965 இல் பீச் பகுதியில் ஆடையின்றி நிர்வாணமாக ஓடியாடிய ஏழை குழந்தைகளை பார்த்தேன். கடந்த ஆண்டும் பீச் பகுதிச் சென்றபோதும் அதே போல
ஆடையின்றி நிர்வாணமாக ஓடியாடிய ஏழை குழந்தைகளை காண நேர்ந்தது, சென்னை - இன்று பட்டு சட்டை அணிந்த மாப்பிளையாக - பட்டுச் சேலை அணிந்த மணமகளாக - சுரிதார் அணிந்த நாகரிக மங்கையாகக் காட்சியளிக்கலாம் - ஆனால், பட்டுச் சட்டைகளுக்கும் பட்டுச் சேலைகளுக்கும் சுரிதார்களுக்குள்ளும் இருக்கும் உள்ளாடை கந்தலாகத்தான் உள்ளது ! நான் கந்தல் என்று குறிப்பிடுவது, மங்கல்யான் ஏவினாலும், இன்றைக்கும் ஆடையின்றி நிர்வாணமாக ஓடியாடும் ஏழை குழந்தைகள் நிறைந்த சென்னை !