நகரத்திற்கு வெளியே இருக்கும் மனிதர்களுள் விஜய் மகேந்திரன்
- சுப்ரபாரதிமணியன்
தற்போதைய வெகுஜன ஊடகங்களில் திரைப்படங்களும் இதழ்களும் இளைஞர்களையே
மையமாகக் கொண்டிருக்கின்றன. திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களில் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என்பதால் திரைப்படங்கள் அவர்களை மையமாகக் கொண்ட காதல் அம்சத்தையே பிரதானமாகக் கொண்டிருக்கின்றன. இன்னொருபுறம் கேளிக்கை சார்ந்த விடயங்களிலும், நுகர்வு கலாச்சாரத்தன்மை கொண்டும் அமைந்திருக்கின்றன. வெகுஜன இதழ்கள் இளைஞர்களை கவர்கிற வகையில் திரைப்பட நடிக, நடிகைகளின் வாழ்க்கை செய்திகளையே மையமாக கொண்டு இயங்குகின்றன. இன்றைய இளைஞர்களின் உள்ளார்ந்த சிக்கல்களையும், பிரச்சனைகளையும் இவைகள் வெகு குறைந்த சதவீதத்திலேயே முன் வைக்கின்றன.
இலக்கிய இதழ்கள் சார்ந்து எழுதும் இளம் எழுத்தாளர்களின் படைப்புகளில் அவர்களின் பிரத்யேக வாழ்கை சார்ந்த சிக்கல்கள் வெகுவாக வெளிப்படுவதில்லை. அவர்களில் பெரும்பான்மையோர் பெரியவர்களின் உலகில் தென்படும் சிக்கல்களையும், அனுபவங்களையுமே, அவரின் வயது சார்ந்தோரின் பிரச்சினைகளையும் படைப்புலகில் கொண்டு வந்து இயங்குவது விசேஷ தன்மையாக இருக்கிறது. இதுவே அவரின் பிரத்யேக எழுத்தின் இயல்பு அன்று தொனிக்கிற விதமாய் அவரின் ''நகரத்திற்கு வெளியே'' முதல் தொகுப்பில் இருக்கும் கதைகள் அமைந்திருக்கின்றன. பொதுத்தலைப்பு நகரத்திற்கு வெளியே என்றிருந்தாலும், நகரம் சார்ந்து இயங்குகிற இளைஞர்களையே இக்கதைகள் மையமாக கொண்டிருக்கின்றன. கணிசமான இளைஞர்கள் கவிதா உலகில் தங்களை ஆட்படுத்திக் கொண்டு தீவிரமாய் இயங்குவதைப் போல சிறுகதைத் தளத்தில் இயங்கவில்லை. அவ்வாறு இயங்குகிரவர்களில் குறிப்பிடதக்கவராயும் விஜய் மகேந்திரன் இருக்கிறார்.
நகரம் சார்ந்த உதிரி இளைஞர்கள் இவரின் கதைகளில் நிரம்பத் தென்படுகிறார்கள். நகர கல்லூரியில் விரிவுரையலர்களாக கொத்தடிமை போல அவர்கள் இயங்குகிறார்கள். குடிகார இளைஞர்களாய் இருக்கிறார்கள். பழைய புத்தகக் கடைகளைத் தேடிப்போய் அலைகிறவர்களும் இருக்கிறார்கள். வேலை இல்லாமல் மன உலைச்சல்களில் அல்லல்படும் இளைஞர்கள் மத்தியில் ஆறுதல் சொல்லவும் மன பிரதிபலிப்பை இளைஞர்கள் இன்னொரு தளத்தில் காணக் கிடைக்கின்றார்கள். கல்லூரி வாழ்க்கை முடிந்து திருமணத்தின் போது சந்தித்து தங்களின் கல்லூரி வாழ்க்கையை எண்ணி ஏங்கிக் கொள்கிறவர்களையும் இருக்கிறார்கள். ''ஏதோ குழாய் வரி கட்டாத வீட்டின் குழாய் இணைப்பைத் துண்டிக்கச் சொல்வது போல'' காதலைத் துண்டித்துக் கொண்டு புது காதல் உலகத்திற்குள் நுழைந்து கொள்ளும் இளைஞர்களும் இருக்கிறார்கள். பாலியல் தேவைகள் இளம் பெண்களை கருக்கலைப்பிற்கு கொண்டு செல்கின்றன. இதன் பொருட்டு அவமானம் அடைகிறார்கள். சாகசச் செயல்களும், அத்து மீறல்களும் சில இளைஞர்களை தாதாக்களாக மாறி அவர்கள் வன்முறையின் கூரிய நகங்களுக்குள் அடைபட்டு சாவையும் சந்தித்து கொள்கிறார்கள். வீட்டிற்கு தெரியாமல் காதலில் ஈடுபட்டு பின் குடும்பச் சூழலை விட்டு ஓடிப்போகிற இளம் பெண்களும் அவலமும் மூத்தகுடி உறுப்பினர்களை முன் வைத்து அலசப்படுகிறது.
நகரம் சார்ந்து இயங்கும் இளைஞர்களின் சிக்கல்களை, வீட்டுச்சூழலிலும், அலுவலக சூழலிலும், அவதானித்து அவற்றை விஜய் மகேந்திரன் கதைகளுக்குள் கொண்டு வருகிறார். உதிரிகளாய் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் உலகம் நுட்பமாய் வெளிப்படுகிறது. இந்த குரூரங்களுக்குள் இருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை எவ்வித துவேசமும் இன்றி வெளியே நின்று அவதானித்து பதிவு செய்கிறார். அவர் இளைஞர் என்பதாலேயே துவேஷம் இக்கதைகளில் படியவில்லை.
முதியவர் ஒருவர் தனது சமவயது நண்பருக்கு எழுதும் கடிதங்களை மையமாகக் கொண்டிருக்கும் ''அடைபடும் கற்று'' என்ற கதையில் டிரைவ் இன் உணவு விடுதி இருந்த இடம் ஒரு தொழிற்சாலைக்காக காலி செய்யப்பட்டுவிட்டது பற்றியதாக இருக்கிறது. அதில் இடம் பெரும் ஒரு பகுதியில் ருசியான உணவின் மேன்மை பற்றிச் சொல்லப்படும்போது ''எப்படியோ உமக்கு வேதனையிலும் நாக்கில் நீர் சொட்டுகிறது'' என்ற கேள்வி இருக்கிறது. இளைஞர்களின் இயல்பான வாழ்வை மீறி குரூரங்கள் தென்படும் பகுதிகளில் கூட விஜய் மகேந்திரன் மெல்லிய கேலி பல கேள்விகளை முன் வைக்கிறது.
ஆனால் குரூரமனத்தின் வெளிப்பாடாக இல்லாமல் அக்கறை சார்ந்த கவலையாகவும் இருக்கிறது.
இக்கதைகள் சொல்லப்பட்டிருக்கும் தொனியில் இருக்கும் யதார்த்தமும், எளிமையும் ஏமாற்றக்கூடியது. எளிமையான சொற்களை மீறிய தீர்க்கமான இளைஞர்களின் அனுபவங்கள் கவனத்திற்குரியவை. கதைகளின் தலைப்புகள் கவித்துவமாய் அமைக்கப்பட்டிருப்பது அவற்றின் உள்ளடக்கத்தை இன்னும் தீவிரமானதாக்குகிறது .
நகரத்திற்கு வெளியே
சிறுகதைகள்
விஜய் மகேந்திரன்
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-18.
விலை ரூ.50/-
Nalladhoru Madhippurai Vijay Mahendran.
ReplyDelete