Wednesday, May 25, 2011

ந. முருகேசபாண்டியன் நேர்காணல்




""இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளிகள் இல்லை!''
ந. முருகேசபாண்டியன் நேர்காணல்




நல்ல நூல்களை வாசிப்பதன் மூலம் நல்ல படைபாளியாகலாம் என்பது நிதர்சன மான உண்மை. நல்ல படைப்பாளி கள் மக்களின் ரசனையை மேன்மைப்படுத்தி சமூக கலை- இலக்கிய வளர்ச்சிக்கு தூண்டுகோலாய் அமைகிறார்கள். அத்தகைய படைப்பிலக்கிவாதிகள் வரிசையில் நிற்பவர் த. முருகேச பாண்டியன். மதுரை மாவட்டம், சமயநல்லூர் கிராமத்தில் 1957-ல் பிறந்த இவர் தமிழின் சிறந்த இலக்கிய விமர்சகர்களில் குறிப்பிடத் தக்கவர். 15 நூல்களின் ஆசிரியர், "என் பார்வையில் படைப்பிலக்கியம்', "மொழிபெயர்ப்பியல்', "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலா'வில் (சங்க கால பெண்பாற் புலவர்கள் முதல் ஆண்டாள் வரை). இவரது படைப்பு களில் ஏழு இலக்கிய விமர்சனம் சார்ந்தவை. "கிராமத்து தெருக்களின் வழியே', "ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்' எனும் கிராமப்புற மானுடவியலைச் சொல்லும் இரண்டு நூல்களையும் எழுதியுள்ளார்.

"மேலச் சிவபுரி கணேசர் செந்தமிழ் கல்லூரி'யில் நூலகராகப் பணிபுரியும் முருகேச பாண்டியன், தமிழ் சிற்றிதழ்களுடன் நீண்ட கால தொடர்புடையவர். தனக்கேயுரிய தனித்துவமான பார்வையுடன் அவர் எழுதிய விமர்சனங்கள் தமிழ் இலக்கிய உலகில் முத்திரை பதித்தவை. பலரும் அறியாமல் இருக்கும் ப. சிங்காரம் போன்ற உலகத் தரமான தமிழ்ப் படைப்பாளி களை தனது விமர்சனங்கள் மூலம் பரவலாக அறியச் செய்தவர்.

வாசிப்பே தனது சுவாசிப்பாகக் கொண்ட இவரை "இனிய உதயம்' நேர்காணலுக்காக நாம் சந்தித்தபோது...

உங்கள் இளமைக் கால இலக்கிய ஈடுபாடு பற்றி. . .

""எனது இலக்கிய வாசிப்பு என்னுடைய பள்ளிப் பருவத் திலேயே தொடங்கிவிட்டது. பத்து வயதில் வாண்டுமாமா எழுதிய 'சிறுத்தைச் சீனன்' என்ற குழந்தை நாவலை முதன் முதலாக வாசித் தேன். அப்புறம் தமிழ்வாணனின் 'இருளில் வந்த இருவர்' என்ற மர்ம நாவல். தொடர்ந்து சிரஞ்சீவி, மாயாவி, பி.டி.சாமி எழுதிய மர்ம நாவல்கள், பேய்க் கதைகள் என்னைக் கவர்ந்தன. பன்னிரண்டு வயதில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை வாசித்துவிட்டு வந்தியத்தேவன், ஆழ்வார்க் கடியான், கோட்டை கொத்தளம், நிலவறை, கடல், படையெடுப்பு, அரண்மனை என புனைவுலகில் சுழலத் தொடங்கினேன். அப்புறம் சாண்டில்யன், ஆர்.சண்முக சுந்தரம், ஜெயகாந்தன் என எனது வாசிப்புத்தளம் விரிவடைந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு புனைகதையும் வாசிப்பின் வழியாக எனக்குள் கிளர்த்திய சந்தோஷம் அளவற்றது. ஒரு நிலையில் கதை என்பதற்கு அப்பால் கதைகளின் வழியாக மனித இருப்பினைக் கண்டறிந் தேன்.

ஏன் இப்படி சில கதைகள் சோகமாக முடிகின்றன என்ற கேள்வி எனக்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. அறுபது களில் நாவல் வாசிப்பது கெட்டது எனக் கருதப்பட்டது. தொடர்ந்து புத்தகம் வாசிக்கிற யாரோ ஒரு பையன் பைத்தியமாகி விட்டான் என்ற பொதுப்புத்தி நிலவிய காலகட்டத்தில் எனது வாசிப்பு ரகசியமாக இருந்தது. எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து மணிக்கணக்கில் வாசித்த நாவல்களின் எண்ணிக்கைக்கு கணக்கு எதுவும் கிடையாது. அப்பொழுது தொடங்கிய வாசிப்பு பழக்கம் இன்று வரை தொடர்கின்றது. நேற்று வாசித்து முடித்த வே.ராமசாமியின் 'செவக் காட்டுச் சித்திரங்கள்' சிறுகதைத் தொகுதி தந்த உற்சாக மனநிலை எனக்குக் கிடைத்த பேறுதான். புத்தகம் இல்லாத உலகை என்னால் ஒருபோதும் கற்பனை செய்து பார்க்க முடியாது.''

நீங்கள் எப்படி இலக்கிய விமர்சனத்துறைக்கு வந்தீர்கள்?

""இலக்கிய விமர்சகர் என்று தனிப்பட்ட யாரும் உருவாகிட முடியாது. இதற்கு நானும் விதி விலக்கு அல்ல. ஒவ்வொரு புத்தகத் தையும் வாசித்து முடித்தவுடன், அது குறித்து எனக்குள் அபிப் பிராயங்கள் இளம் பருவத்தி லேயே உருவாகிக் கொண்டிருந் தன. வெறுமனே பொழுது போக்குவதற்காக வாசித்த 'கேளிக்கை' நாவல்கள்கூட ஏதோ ஒரு கருத்தை நுட்பமாகப் புலப் படுத்துகின்றன என நினைக் கிறேன். எனது பதின்பருவத்தில் மதுரையிலுள்ள ச.வெள்ளைச் சாமி நாடார் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கிருந்த பெரிய நூலகம் என்னைக் கண் சிமிட்டி அழைத்தது. பி.யூ.சி. படிக்கும் போது சித்தர் பாடல்கள், குற்றாலக் குறவஞ்சி போன்ற புத்தகங்களை வாசித்து வேறு பட்ட அனுபவங்களைப் பெற் றேன். "தென்மொழி', "கணையாழி', "தீபம்' போன்ற பத்திரிகைகள் மூலம் புதிய பரப்புகள் எனக்கு அறிமுகமாயின. என் வகுப்புத் தோழர் புதியஜீவாவுடன் ஏற்பட்ட நட்பு பாரதிதாசன் கவிதைகள், தனித்தமிழ் ஈடுபாடு என என்னை இழுத்துப் போனது. அப்புறம் பட்ட வகுப்பில் கவிஞர் சமயவேல் எனது சீனியர். இருவரும் விடுதி மாணவர்கள். தினசரி மாலையில் நடந்து போய் விவாதித்த இலக்கிய பேச்சுகள் பலதரப்பட்டன. எனது இலக்கிய ஈடுபாட்டினைக் கருத்தியல் சார்ந்த நிலையில் வடிவமைத்ததில் புதியஜீவாவும் சமயவேலும் குறிப்பிடத்தக்க ஆளுமைகள். "அஃக்', "கசடதபற', "கொல்லிப் பாவை, "கோகயம்', "தெறிகள்' போன்ற சிறுபத்திரிகைகள் புதிய இலக்கியத்தை அறிமுகப்படுத்தின. எங்கள் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ஐ.சி.பி. என அழைக்கப்படும் ஐ.சி.பாலசுந்தரம் எனது ஆசான். உலகத்தின் மாபெரும் இலக்கியப் படைப்புகள் பற்றி போகிற போக்கில் அறிமுகப் படுத்துவார். அவர் என்னையும் சமயவேலையும் நெருக்கமான சிநேகிதர்களைப்போல நடத்தினார். நல்ல உணவு, நல்ல உடை, உன்னத இலக்கியம்பற்றிய அவருடைய பேச்சுகள் முதல் தரமானவை.

ஜெயகாந்தனின் 'அக்னி பிரவேசம்' சிறுகதையைப் படித்துவிட்டுக் கிளர்ந்து போன மனநிலையில், 'அதியற்புதமான கதை' எனப் பாராட்டினேன். அப்பொழுது அவர், "அந்தக் கதையில் ஒரு இளம் பெண் முதன்முதலாக உடலுறவு கொள்கிறாள்.' அப்பொழுது அவள் உடல் படும் அவஸ்தைகள் பற்றிய குறிப்பு எதுவும் விவரிப்பில் இல்லை. வெறுமனே விஷயத்தைச் சொல்வதற்காக எழுதப்பட்டது எப்படி நல்ல கதையாகும்?' என்றார். பல்வேறு நிகழ்வுகளில் ஐ.சி.பி. சூசகமான முறையில் ஓர் இலக்கியப் படைப்பினை எப்படி வாசிப்பது என்று எனக்கு அறிமுகப்படுத்தினார். எனது பத்தொன்பதாவது வயதில் புதிய ஜீவாவின் வற்புறுத்தலால் வாசித்த மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலும், ஜார்ஜ் பொலிட்சரின் 'மார்க்சிய மெய்ஞானம்' கட்டுரை நூலும் எனக் குள் படிந்திருந்த இலக் கிய மனோபாவத்தைப் புரட்டிப் போட்டன.

அன்றைய காலகட்டத்தில் திராவிட இயக்கம் சார்ந்த நிலையில் வறட்டு நாத்திகனாக இருந்தேன். இடதுசாரித் தத்துவம் குறித்து என்னுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த புதிய ஜீவாவுடன் தொடக்கத்தில் முரண்பட்டாலும், நாளடைவில் 'தத்துவம்' என்ற நிலையில் என்னை மார்க்சிஸ்டாகக் கருதிக் கொண்டேன். அப்புறம் சி.பி.எம். வெகுஜன இயக்கமான சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி, மக்கள் உரிமைக் கழகம், மக்கள் கலை இலக்கியக் கழகம் என தொடர்ந்து பல்வேறு அமைப்பு களில் மாறிமாறி இயங்கிக் கொண்டிருந்தேன்.''

இடதுசாரி அமைப்புகளில் செயல்பட்டது உங்கள் இலக்கிய வாசிப்பில் எத்தகைய பாதிப்பு களை ஏற்படுத்தியது?

""எந்த அமைப்பில் செயற்பட் டாலும் காத்திரமான இலக்கியப் படைப்புகளை வெறியுடன் வாசித்தேன். க.நா.சு., வெங்கட சாமிநாதன், பிரமிள் போன்ற எழுத்தாளர்கள் நசிவிலக்கிய வாதிகள், சி.ஐ.ஏ. ஏஜண்ட்கள் என அமைப்பு சார்ந்த நண்பர்கள் குறிப்பிட்டாலும், அவர்களுடைய படைப்புகளை முன்கூட்டிய தீர்மானம் எதுவுமின்றி வாசித் தேன். 1970-களின் பிற்பகுதியில் எனது புதுக்கவிதைகள் 'தேடல்' இதழில் பிரசுரமாகி இருந்தது. இலக்கியம் பற்றிய எனது புரிதல் இடதுசாரிக் கருத்தின் தாக்கத் தினால் சிக்கலுக்குள்ளானது. அதேநேரத்தில் மொழிபெயர்ப் பின் வழியாக செகாவ், டால்ஸ் டாய், கார்க்கி, தாஸ்தாயேவ்ஸ்கி, துர்கனேவ், ஷோலகோவ், ஹெமிங்வே, நட்ஹம்சன், பால்சாக், எமிலிஜோலா, ஸெல்மாலாகர்லெவ், கிளாடியா ஹெஸ்டிகாரல், மாபசான் என உலகத்து இலக்கிய மாஸ்டர்கள் எனக்குள் ஆளுமை செலுத்தினர்.

அவ்வப்போது சிறுகதை எழுதிக் கொண்டிருந்த எனக்கு, என் எழுத்தின்மீது அவநம்பிக்கை பிறந்தது. டால்ஸ்டாயின் 'அன்னா கரீனினா'வைத் தாண்டியோ, செகாவின் சிறுகதைகளைத் தாண்டியோ சொல்வதற்கு என்னிடம் எதுவுமில்லை எனக் கண்டறிந்தேன். எனவே படைப் பாக்க முயற்சியைக் கைவிட்டு, பல்வேறு புத்தகங்களை விருப்பத் துடன் வாசிக்கத் தொடங்கி னேன். எதையும் விருப்பு வெறுப் பின்றி கறாராக அணுகும் முறையை அன்றைய இடதுசாரி அமைப்பின் நடைமுறையிலிருந்து கற்றுக் கொண்டது, என்னைப் பொறுத்த வரையில் இலக்கிய விமர்சனத்திலும் பயன்பட்டது.''

எப்பொழுது விமர்சனம் எழுதத் தொடங்கினீர்கள்?

""எழுபதுகளின் இறுதியில் கலாப்ரியா, விக்ரமாதித்யன், மு.ராமசாமி, தேவதேவன், தேவதச்சன், கௌரிஷங்கர், அப்பாஸ் போன்ற படைப்பாளர் கள் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் சிலர். எண்பதுகளில் பிரபஞ்சன், நகுலன், சுந்தர ராமசாமி, ராஜமார்த்தாண்டன், வண்ணநிலவன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், மணா, சுரேஷ் குமார இந்திரஜித் போன்றோரின் நட்பினால், எழுத்து பற்றிய புதிய பிம்பம் எனக்குள் உருவாகிக் கொண்டி ருந்தது. இலக்கியக் கூட்டங்களுக் குப் பிந்தைய பேச்சுகளில் என் மனதுக்குப்பட்ட அபிப்பிராயங் களை வெளிப்படையாகப் பேசுவேன். மற்றபடி படைப்பு முயற்சியில் ஈடுபடவோ, விமர்சனம் எழுதவோ எனக்கு விருப்பம் எதுவுமில்லை.

ஒவ்வொரு புத்தகத்துடன் தனிப்பட்ட முறையில் நிகழ்த்தும் உரையாடல் வழியாக எனது வாசிப்புப் பரப்பு விரிந்து கொண்டே இருந்தது. 1994-ஆம் ஆண்டு என நினைக்கிறேன். நண்பர் சுரேஷ் குமார இந்திரஜித் தனது 'மறைந்து திரியும் கிழவன்' சிறுகதைத் தொகுதியை எனக்கு அனுப்பியிருந்தார். அதை வாசித்துவிட்டு எனது அபிப்பிராயத்தைக் கடிதம் மூலம் அவருக்கு அனுப்பி யிருந்தேன். அப்பொழுது மதுரையில் 'சுபமங்களா' சார்பில் நாடக விழா நடைபெற்றது. சுரேஷ் குமாரிடமி ருந்த எனது கடிதத்தை வாசித்துப் பார்த்த ராஜமார்த்தாண்டன், 'நல்லா இருக்கு' என்று தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். அக் கடிதம் சுருங்கிய வடிவத்தில் 'தினமணி கதிர்' பத்திரிகையில் அடுத்த வாரம் எனது பெயரில் வெளியாகி யிருந்தது. வெகுஜனப் பத்திரிகை யில் என் கட்டுரை வெளியானது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அப்புறம் ராஜமார்த்தாண்டனின் தூண்டுதல் காரணமாக ஏறக் குறைய பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் மதிப்புரைகள் தினமணியில் வெளியாகின. ஒருவகையில் எனது பேச்சை எழுத்து வடிவத்திற்கு மாற்றியதில் நண்பர் ராஜமார்த்தாண்டனுக்குத் தான் முதன்மையிடம். அப்புறம் கண்ணனின் வேண்டுகோள் காரணமாக 'காலச்சுவடு' இதழில் நூல் மதிப்புரைகள் எழுதினேன். அன்றைய காலகட்டத்தில் "காலச்சுவடு' மட்டும் வெளியாகிக் கொண்டிருந்த சூழலில் தொடர்ந்து எழுதவும், இலக்கிய மேடைகளில் பேசவும் நண்பர் கண்ணன் தூண்டு கோலாக விளங்கினார். அப்புறம் 'இலக்கு' தேவகாந்தன், 'உயிர்மை' மனுஷ்யபுத்திரன், 'தீராநதி' மணிகண்டன், 'உயிர் எழுத்து' சுதிர் செந்தில் ஆகியோரும் எனது எழுத்து முயற்சிக்குப் பின்புலமாக விளங்குகின்றனர்.''

நீங்கள் எழுதிய நூல்கள் இலக்கிய விமர்சனம், மொழி பெயர்ப்பியல், கிராமத்து வாழ்க்கை, சங்க இலக்கியம் என பல்துறை சார்ந்ததாக இருக்கிறது. இந்தப் பன்முகத் தன்மைக்குக் காரணம் யாது?

""தொடர்ந்த வாசிப்புதான். பல்வேறு துறைகளில் கட்டுரை நூல்கள் நூற்றுக்கணக்கில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு எழுத்தாளர் தீவிரமான மனநிலையுடன் எழுதியிருக்கும் எந்தவொரு புத்தகமும் பரிசீலனைக்குரியதுதான். இது மட்டும்தான் எனது துறை என முத்திரை குத்திக் கொண்டு ஒதுங்கி இருக்க முடியாது. நவீன கவிதை எழுதிக் கொண்டிருக்கும் என் நண்பர்களில் சிலருக்குக் கட்டுரை எழுதினால் படைப் பூக்கத்தை நலிவடையச் செய்து விடும் என்று பாமரத்தனமாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ப.சிங்காரம், நகுலன், சுந்தரராமசாமி, பிரபஞ்சன் போன்றோரிடம் பேசும்போது, கட்டுரைகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டேன்.

எந்தவொரு விஷயத்தை எழுத எடுத்துக் கொண்டாலும் அதில் முன்னோடியாகப் பலரின் புத்தகங்கள் இருக்கும். அவற்றை வாசிப்பதன் மூலம் விடு படல்களை அறிந்து, நாம் செல்ல வேண்டிய திசைவழியைக் கண்டறிய முடியும். எடுத்துக் கொண்ட விஷயம் குறித்து கடின உழைப்பும் நண்ய்ஸ்ரீங்ழ்ண்ற்ஹ் யும்தான் எழுதுவதற்கான அடிப்படை.

ஆங்கிலத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும் புத்தகங்களைப் பார்க்கும் போது, தமிழில் ஏற்பட்டுள்ள பின்னடைவு புலப்படும். காத்திரமாகச் செய்ய வேண்டிய எழுத்துப் பணியின் அவசியம் தெரியும். எனவேதான் பல்துறை சார்ந்த நிலையில் தீவிரமாக எழுத்து முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். வெறுமனே இலக்கியப் படைப்பு கள், இலக்கிய விமர்சனம்தான் எழுதுவேன் என்று அடம் பிடிப்பவர்கள் நாளடைவில் 'அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்கள் அட்டவணையில் சேர்ந்து விடுவார்கள்.''

கல்லூரி நூலகர் பணியில் இருப்பது இலக்கியப் பணிக்கு எந்த அளவில் உதவியாக உள்ளது?

""இளம் வயதிலே இலக்கிய வேட்கை காரணமாக ஊர் ஊராகப் போய் இலக்கியவாதி களுடன் 'சல்லாபம்' செய்து இலக்கியப்பேச்சு பேசிய எனக்கு வேலையில் சேர்ந்து ஒழுங்காகச் செயற்பட முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. சங்க காலப் பாணர் மரபில், ஊர் சுற்றியாக அலைந்து திரிவதில் பெரும் விருப்பம் கொண்டிருந்தேன். தாலுகா அலுவலகத்தில் கிளார்க், வங்கியில் கிளார்க் போன்ற வேலைகள் எனக்கு எப்பொழுதும் கவர்ச்சியாக இல்லை. அரசு உயரதிகாரியாகி யாரையும் ஏவல் செய்ய முடியும் என்றும் எனக்கு நம்பிக்கை இல்லை. பல்கலைக் கழகப் பேராசிரியர் பணி அறிவுப்பூர்வமாக அன்றைய காலகட்டத்தில் இருந்தது. ஒரு பேராசிரியர் என்மீது கொண்ட அன்பின் காரணமாக பி.ஹெச்.டி. படிப்பில் சேரத் தடை விதித்து விட்டார். அப்புறம் நூலகர் பணி. அது எனக்குப் பிடித்தமானது தான். எப்பவும் புத்தகங்களுக்கு நடுவில் இருப்பது சுவாரசியம் தருகிறது.

எங்கள் கல்லூரியில் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படுவதால், ஆண்டுதோறும் வெளியாகும் புத்தம் புதிய தமிழ்ப் புத்தகங் களை நூலகத்துக்கு வாங்கும் பொது மனது மகிழ்வடைகிறது. ஒரு கட்டுரை எழுதுவதற்கான அடிப்படையான நூல்கள் பற்றி உடன் அறிந்து கொள்ள முடிகி றது. எம்.ஏ., எம்ஃபில், பிஹெச்டி., பயிலும் மாணவ- மாணவி யருக்கு ஆய்வு தொடர்பாக ஆலோசனைகளைக் கடந்த 23 ஆண்டுகளாக வழங்கு வதன் மூலம் எனது தேடல் துரிதப்படுகிறது. ஒரு விஷயம், ஒருவர் இலக்கிய வாதியாக இருப்பதற்கும் அவர் செய்யும் வேலைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்க வாய்ப் பில்லை.''

உங்கள் இலக்கிய நண்பர் களில் குறிப்பிடத்தக்க ஆளுமை யார்?

""உயிர்மை இதழ் தொடங்கிய போது கவிஞர் மனுஷ்ய புத்திரனின் ஆலோசனையின் பேரில் "என் இலக்கிய நண்பர்கள்' என்ற தலைப்பில் பிரபஞ்சன் முதலாகப் பல்வேறு ஆளுமைகள் பற்றி எனது அபிப்பிராயங்களைப் பதிவு செய்திருந்தேன். அது புத்தக வடிவம் பெற்றபோது, இன்று வரை பலராலும் விரும்பி வாசிக் கப்படுகிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் சில இலக்கிய ஆளுமைகள் எனது உருவாக்கத் தில் பின்புலமாக இருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் எனது நெருங்கிய நண்பர்கள் யாவரும் இலக்கியத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். அடிக்கடி முரண்பட்டு கருத்து ரீதியில் சண்டையிட்டுக் கொண் டாலும் இலக்கிய நண்பர் களுடனான உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலைமை இலக்கியவாதிகள், இலக்கிய வாசகர்களுக்கு மட்டும் கிடைத்த 'பெருங்கொடை' என்று தான் கூறவேண்டும்.

என்னைப் பொறுத்த வரை வாசகர் மிக முக்கியமான வர். தீவிரமான இலக்கியத் தளத்தில் இயங்குகிற எல்லோரும் எழுத்தாளர்கள். எனில் தீவிரமான வாசகர்களுக்கு எங்கு போவது? தேர்ந்த வாசகர்களின் எதிர்வினை மூலம்தான் இலக்கிய பேச்சுகள் உருவாகும். இந்த நேரத்தில் ஒன்று சொல்ல வேண்டும். இரவு முழுக்க விடியவிடிய இலக்கியம் பேசிக் கொண்டிருக்கும் மனநிலை வாய்த்த எனது நண்பர்கள் அப்பாஸ், யவனிகா ஸ்ரீராம், ராஜமார்த்தாண்டன், எஸ்.ராம கிருஷ்ணன், கோணங்கி, சமய வேல், பிரேம்-ரமேஷ், சுதீர் செந்தில், சா.ஜோதிவிநாயகம், கௌரிஷங்கர், கலாப்ரியா, அ.ராமசாமி, பிரபஞ்சன், மனுஷ்ய புத்திரன்... பல்வேறு கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் நண்பர்களுடனான சல்லாபமும் பேச்சுகளும் குறிப்பிடத்தக்கவை.

உங்கள் கேள்விக்கு நேரடி யாகப் பதில் சொல்ல வேண்டு மென்றால், 'நகுலன்'தான். அற்புதமான மனிதர். 1985-ஆம் ஆண்டில் திருவனந்தபுரத்தில் நான் பணியாற்றியபோது, பல இரவுகள் விடியவிடிய பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். இரு காதுகள் இருப்பதன் அருமையை அவருடைய ஆழமான புலமை நமக்குச் சூசகமாக உணர்த்தும். அவர் பெரிய கவிஞர். அதைவிட ப்ரியமும் அன்பும் மிக்கவர். அது போதாதா? அப்புறம் நண்பர் பிரபஞ்சன். அவரைப் பற்றி எதிர்மறையான பேச்சுக்களைச் சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக் கிறேன். ஆனால் விஷயம் அது வல்ல. எனக்கும் அவருக்குமான நட்பும் தோழமையும் அருமை யான இசைபோல பொங்கிப் பெருகுகிறது.''

ஒரு நூலை எந்த அளவு கோலின் அடிப்படையில் மதிப் பிட எடுத்துக் கொள்கிறீர்கள்?

""முழுக்க என் வாசிப்பு அனுபவம் சார்ந்துதான். பிரதி என்ற நிலையில் ஒரு புத்தகம் வாசிப்பின் வழியாக எனக்குள் தோற்றுவிக்கும் அபிப்பிராயங்கள் தான் எழுத்தின் அடிப்படையாக அமைகின்றன. பெரிய எழுத் தாளர், இளம் எழுத்தாளர் என பேதமெதுவும் நான் பார்ப்ப தில்லை. புத்தகம் குறித்து இது வரை உருவாக்கப்பட்டுள்ள பேச்சு களைக் கருத்தில் கொள்வேனே தவிர, அவற்றை விமர்சனத்தில் பொருட்படுத்துவதில்லை. அப்புறம் தனிப்பட்ட எவ்வித மான அளவுகோலையும் நிரந்தர மாகக் கொண்டு எந்த நூலையும் அணுகுவது எனது வழக்கமல்ல. ஆனால் எழுத்தாளர் யார்? என்பதற்கு முன்னுரிமை தருவேன்.

சந்திரா என்ற பெண் எழுத்தாளர் அண்மைக் காலமாக தரமான சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். உமா மஹேஸ் வரிக்கு அடுத்து சந்திராவின் சிறுகதை முயற்சிகள் குறிப்பிடத் தக்கவை எனக் கொள்ள வேண் டுமே தவிர, அவரைப் புனைகதை உலகில் ஜாம்பவானாக விளங்கும் ஆண் எழுத்தாளர்களுடன் ஒப்பிட வேண்டிய தேவையில்லை என்பது எனது கருத்து.

புத்தகத்திலுள்ள வரிகள் எவ்வளவு முக்கியமோ, அப்புத்த கம் சமகாலத்தில் பெறுமிடமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியம். தொகுப் பில் பத்து கவிதைகளைச் சிறப் பாக எழுதியிருக்கும் கவிஞரின் முதல் புத்தகத்தைப் பற்றி நேர் மறையாகவும் சிறிது பாராட்டியும் எழுதுவதில் தப்பில்லை. அது இலக்கிய மதிப்பிடுதலுக்கு அவசியமும்கூட.''

விமர்சனத்தினால் படைப் பாளிக்குப் பயன் உண்டா?

""படைப்பும் விமர்சனமும் பிரிக்க முடியாதவை. எல்லாப் படைப்புகளும் வாசிப்பின் வழியாக ஒவ்வொரு வாசகரிடமும் ஏற்படுத்தும் மதிப்பீடுகள் விமர் சனம்தான். ஒரு படைப்பு காலங் கடந்து நிலைத்து நிற்கிறது எனில், அப்படைப்பு காலந்தோறும் உருவாக்கும் விமர்சன மதிப்பீடு கள், சமகாலத்துடன் பொருந்திப் போகின்றவையாக உள்ளன என்பதுதான் உண்மை. தொல்காப்பியத்திற்கு எழுதப்பட்ட பாயிரமும் இளம்பூரணர் முதலாகப் பல்வேறு உரையாசிரியர் கள் எழுதிய உரைகளும் விமர்சனம்தான். பழந்தமிழ் இலக்கியப் படைப்புகளை அணுகுவதற்கு அடிப்படையாக விளங்கும்'உரைகளில் நுட்பமான விமர்சனங்கள் பொதிந்துள்ளன.

படைப்புக்கும் அதை அணுகும் வாசகனுக்குமிடையில் விமர்சனம் நுண்தளத்தில் செயல்படுகிறது. மற்றபடி அந்த விமர்சனத்தினால், அந்த நூலை எழுதிய படைப் பாளிக்கு நேரடியாகப் பயன் இருக்காது. 'படைப்பாளி மரணம்' என்ற நவீனக் கோட்பாட்டின்படி பார்த்தால், படைப்பு குறித்த விமர்சனங்களைப் படைப்பாள ரால் தள்ளி நின்று விருப்பு வெறுப்பின்றி வாசிக்க முடியும். ஆனால் பெரும்பாலான படைப் பாளர்கள் தங்கள் படைப்பு களுக்கு 'வக்காலத்து' வாங்குவது தவிர்க்கவியலாதது. அப்புறம் விமர்சனம் என்பது துல்லியமான மதிப்பீடு அல்ல. விமர்சகரின் மனமும் அறிவும் சம்பந்தப்பட்ட விமர்சனம், பல வேளைகளில் படைப்பாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

படைப்பாளரின் படைப்பு நோக்கினுக்கு முற்றிலும் மாறான கோணத்தில் விமர்சனம் முன் வைக்கப்படுவதும் இங்கு நடை பெறுகிறது. படைப்பு மனமும் விமர்சன மனமும் ஒத்திசைந்து போகும்போது, ஙங்ற்ஹற்ங்ஷ்ற் என அழைக்கப்படும் விமர்சனப் பிரதி, படைப்பாளிக்கு மயிலிற கால் வருடிக் கொடுத்த அனுபவத் தைத் தரும். மற்றபடி எந்தவொரு மோசமான படைப்பையும் 'அற்புதம்' எனப் புகழப்படும் மதிப்புரைகளால் அதைத் தூக்கி நிறுத்த முடியாது. எல்லாப் படைப்புகளும் தமது சொந்த பலத்திலேயே இலக்கிய உலகில் காலூன்றி நிற்கின்றன. விமர்சனத் தைப் புறக்கணிக்கிறேன் என்ற வாதம், குளத்துடன் கோபித்துக் கொண்டு குளிக்காமல் போனதை நினைவூட்டுகிறது.''

இலக்கிய விமர்சனத்தால் மக்களுக்குப் பயன் உண்டா?

""இலக்கியத்தினால் பாமர மக்களுக்கு ஏதாவது பயன் இருக்குமானால், விமர்சனத்தி னாலும் ஏதாவது பயன் இருக்கும். மகாபாரதம் போன்ற இதிகாசம் கதை வடிவில் மக்களிடையே தொன்மையாக மாறி ஆழமான மதிப்பீடுகளை உருவாக்குவதில் பாரம்பரியமான கதை சொல்லி களுக்குப் பெரும் இடம் உண்டு. இன்றுவரை மகாபாரத ஏட்டினை வாசித்துக் கதை சொல்கிறவர், அவருடைய நோக்கில்தான் கதாபாத்திரங்கள் பற்றிய சித்திரங் களை உருவாக்குகிறார். அக்கதை யைக் கேட்கின்ற பொதுமக்கள் தங்கள் மனோநிலைக்கு ஏற்ப கதையை மீட்டுருவாக்கம் செய்து கொள்கின்றனர்.

பொதுவாகக் கலை இலக்கிப் படைப்புகளுக்கும் மக்களுக்குமிடை யில் பெரிய இடைவெளி உள்ளது. இந்தியா போன்ற கல்வியறிவு முழுமையடையாத நாடுகளில் மக்களுக்கு அன்றாட வாழ்க்கைப் பாடே பெரிதாக உள்ளது. இந் நிலையில் படைப்பிலக்கியத்தை வாசிப்பதற்கான சூழலும் மன நிலையும் வாய்ப்பது கஷ்டம்தான். ஓரளவு வாசிக்கத் தெரிந்தவர்கள் அவரவர் மனநிலைக்கேற்பப் படைப்புகளை விரும்பி வாசிக் கின்றனர். போன நூற்றாண்டின் முற்பகுதியில் கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களை வாசித்தவர் எண்ணிக்கையைவிட குஜ்லி இலக்கியம் என அழைக்கப்படும் கொலைச் சிந்து போன்ற புத்தகங் களை வாசித்தவர் எண்ணிக்கை அதிகம். இந்நிலை வெகுஜன ரீதியில் இன்றுவரை தொடர் கிறது.

வெகுஜன பத்திரிகைகளில் வணிக நோக்கில் கேளிக்கைக்காக எழுதப்படும் புனைகதைகள்தான் விற்பனையில் முன்னிலை வகிக் கின்றன. காத்திரமான இலக்கியப் படைப்புகளின் விற்பனை ஒப்பீட்டளவில் மிகக்குறைவு. இந்நிலையில் ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டுமெனில், விமர் சனங்களால்தான் முடியும்.''

இடதுசாரி எழுத்தாளர்களின் படைப்பு முயற்சிகள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

""டி. செல்வராசின் "மலரும் சருகும்', ரகுநாதனின் "பஞ்சும் பசியும்' போன்ற நாவல்களை எழுபதுகளில் வாசித்துவிட்டு அவை முக்கியமானவை என்று நினைத்திருக்கிறேன். ஆனால் சோவியத் யூனியனில் புரட்சிக்கு முன்பும் புரட்சிக்குப் பின்பும் எழுதப்பட்ட பல்வேறு நாவல் களை வாசித்தபோது, தமிழில் முற்போக்கு என்ற லேபிளுடன் வெளியான நாவல்களின் பல வீனத்தைப் புரிந்து கொண்டேன்.

மாக்சீம் கார்க்கியின் 'மூன்று தலைமுறைகள்', 'துர்கனேவின் 'தந்தையரும் தனயர்களும்' ஷோலகோவின் 'வெற்றி முரசு' போன்ற ரஷிய நாவல்களை வாசித்தவர்களுக்குத் தெரியும் தமிழில் இடதுசாரி எழுத் தாளர்களின் இடம் என்ன வென்று. இடதுசாரி அரசியல் என்பதே பத்து அல்லது பதினைந்து எம்.எல்.ஏ., சீட்டுகளுக் காகப் போயஸ் அல்லது அறிவாலயம் வாயிலில் மாறி மாறிக் காத்துக்கிடக்கும் எனச் சுருங்கிய நிலையில், இடதுசாரி இலக்கியம் மட்டும் எப்படி உற்சாகத்துடன் பீறிட்டு எழும்? வெறுமனே வறுமையையும் அன்றாட வாழ்வின் அவலத்தை யும் எழுத்தின் வழியே அப்படியே நகலெடுப்பது, 'உச்' கொட்ட உதவுமே தவிர, வாசிப்பின் வழியாக வாசகனுக்குள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தாது.

தாமரை, சாந்தி, செம்மலர், சிகரம், மனிதன், செந்தாரகை, மன ஓசை, புதிய கலாச்சாரம் போன்ற இடதுசாரி கலை இலக்கிய இதழ்களில் கடந்த முப்பதாண்டு களில் எழுதிய எழுத்தாளர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங் காது. பலர் அமைப்பை விட்டு வெளியேறி விட்டனர். சிலர் சிறுபத்திரிகை வட்டாரத்திற்குள் நுழைந்துள்ளனர். சிலர் மௌனமாகி விட்டனர்.

மனிதனின் வாழ்க்கைப் பாடுகளை எழுதுவதுதான் இடதுசாரி இலக்கியம் எனில், இன்று தீவிரமாக இலக்கியத் தளத்தில் இயங்கும் 90% படைப்பாளரைத் தேடித்தான் கண்டறிய வேண்டும். மற்றபடி இன்று இடதுசாரி அமைப்புகளில் சாதனை படைத்த படைப்பாளர் கள் இல்லை. கலை இலக்கியப் பெருமன்றத்தில் தி.சு.நடராசன், நா.முத்துமோகன், பா.ஆனந்த குமார், ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோரின் விமர்சனப் பணிகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.''

கடந்த முப்பது ஆண்டு களாகத் தமிழ் இலக்கிய உலகுடன் நெருக்க மான தொடர்புடன் செயல்படுகிறீர்கள். அண்மையில் தமிழ்ப் படைப்புலகில் ஏற் பட்டுள்ள மாற்றங்கள்?

""சோவியத் யூனியன் நொறுங்கிச் சிதறுண்ட பிறகு, அதுவரை நவீனத் தமிழ் உலகில் செயலாற்றிக் கொண்டிருந்த இடதுசாரிகள் பலவீனப்பட்டுப் போயினர். இந்நிலையில் 90-களில் தமிழுக்கு அறிமுகமான 'பின் நவீனத்துவம்' தொடக்கத்தில் பலரது புருவத்தையும் நெளிய வைத்தது. இதென்னடா புதுக் கூத்து என்று யோசித்தனர். அமைப்பியல், பின்அமைப்பியல் கோட்பாடுகளுடன் பின்நவீனத் துவம் தமிழில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் அழுத்தமானவை. மொழி பற்றிய மரபு வழிப்பட்ட பார்வை மாற்றமடைந்தது.

புத்தகம் என்பது மாறி பிரதி என்ற நிலையில் பிரதிக்குள் பொதிந்திருக்கும் பல்வேறு குரல் களை ஆராய்வது முன்னிலைப் படுத்தப்பட்டது. பிரதியின் மையம் என்ற அதிகாரநிலை, விளிம்பு என்ற ஒடுக்கப்பட்ட நிலை என்ற எதிரிணைகள் மூலம், இதுவரை யில் உருவாக்கப்பட்டிருந்த புனிதங்களை கட்டுடைத்துப் புதிய வகைப்பட்ட சொல்லாடல் உருவாக்கப்பட்டது.

மரபு வழிப்பட்ட கதை சொல்லலுக்கு மாற்றாகத் தொடர்ச்சி யற்ற நிலையில் கதை விவரிப்பு முன்னிலைப்படுத்தப்பட்டது. பால் சமத்துவம் காரணமாக ஒடுக்கப்பட்ட பெண்ணுடல், சாதி அடிப்படையில் பிறப்பினால் தாழ்த்தப்பட்ட தலித்துகள், அரவாணிகள் பற்றிய புதிய பேச்சுகளும் மறு பேச்சுகளும் உருவாக்கப்பட்டன. இலக்கியம் என்பது நகல் எடுப்பது, கண்ணாடிபோலப் பிரதிபலிப் பது என்ற கருதுகோள் தகர்ந்து போனது. இன்று தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் முக்கியமான படைப்பாளர்கள் பின்நவீனத்து வப் பார்வையை உள்ளடக்கிய படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

யதார்த்தக் கதைசொல்லல் எனும் புதிய வகைப்பட்ட முறையில் கதை விவரிப்பினுக்கு சோ.தருமனின் 'கூகை' நாவலைச் சொல்ல முடியும். ஜெயமோகனின் விஷ்ணுபுரம், பிரேம்-ரமேஷின் சொல் என்றொரு சொல், எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங் குருதி. . . இப்படி பலரைச் சொல்ல முடியும், பெருமாள் முருகனின் கங்கணம், சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை, வா.மு.கோமு வின் கள்ளி என பலரும் தமிழ் வாழ்க்கையை முன்னிறுத்தி எழுதிக் கொண்டிருக்கின்றனர்.

நவீனக்கவிதை எனில் குறைந்த பட்சம் ஐம்பது கவிஞர்கள் நல்ல நிலையில் எழுதிக் கொண்டிருக் கின்றனர். பெண் கவிஞர்களின் பெண் மொழி, மரபு வழிப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அப்புறம் தலித் கவிஞர்கள் தங்களுக்கே உரித்தான தனிப் பட்ட மொழியைக் கவிதை ஆக்கத்தில் கையாண்டு கொண்டி ருக்கின்றனர். எஸ்.வைத்தீஸ்வரன், கலாப்ரியா, தேவதச்சன் என அறுபதுகளில் எழுதத் தொடங் கிய கவிஞர்கள் இன்றும் எழுதுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 90-களில் களமிறங்கிய யவனிகா ஸ்ரீராம், ரமேஷ்-பிரேம், என்.டி. ராஜ்குமார் மட்டுமின்றி, கடந்த பத்தாண்டுகளில் முதல் தொகுப்பு வெளியிட்ட சுகிர்தராணி, மாலதி மைத்ரி, சுதீர் செந்தில், செல்மா பிரியதர்சன் போன்ற பல கவிஞர் கள் நம்பிக்கை அளிக்கின்றனர். நவீன கவிதைகள் தமிழில் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பது ஆரோக்கியமான விஷயம் என்று நினைக்கிறேன்.''

முதலில் கலை கலைக்காக; அப்புறம் கலை மக்களுக்காக; அப்புறம் இப்பொழுது பதிப்ப கம், சிறுபத்திரிகை என்ற தொடர்பில் அப்பதிப்பகம் வெளியிடும் படைப்பாளர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமை தந்து விமர்சனம் வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில் விமர்சகர் என்ற ரீதியில் கலை இலக்கியத் துறையில் உங்கள் பங்களிப்பு என்ன?

""இப்பொழுது ஒவ் வொரு மாதமும் வெளி யாகும் இடைநிலை இதழ் க ளில் குறைந்தபட்சம் ஆறு பத்திரிகைகளை வாசித்தால் பத்து நாட்களாகி விடுகின் றன. அப்புறம் இன்று குவிந்து கொண்டிருக்கும் புத்தகங் களின் எண்ணிக்கை பிரமிப்பைத் தருகிறது. காலச்சுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்கள் பதிப்புத் துறையில் பொருளாதார ரீதியில் பெற்றுள்ள ஆதாயத்தைப் பார்த்து பல சிறிய பதிப்பகங்கள் படைப்புகள் விமர்சனப் புத்தகங் கள் வெளியிடுகின்றன.

ஒரு தேர்ந்த வாசகனால்கூட தமிழில் வெளியான முக்கியமான புத்தகங்களை வாசிப்பதும், அவற்றை மனதில் நிலை நிறுத்து வதும் கஷ்டமானது. ஒரு மாதம் மொத்தம் பத்து புத்தகங்களுக்கு மதிப்புரை வந்தால் பெரிய விஷயம். அப்புறம் ஒன்று புத்தக மதிப்புரை எழுதுவதற்குச் சரியான ஆட்கள் இல்லை; பலர் முன் வருவது இல்லை. ஆனால் எல்லாப் படைப்பாளர்களும் தங்களுடைய புத்தகம் பற்றி பெரிய அளவில் நேர்மறையாக மதிப்புரை வெளிவராதா என்று ஏங்குகின்றனர்.

புத்தகக் கடலுக்குள் எவ்வித மான அடையாளமும் இல்லாமல் கரைந்து போகும் புத்தகங்களின் எண்ணிக்கை கணக்கு வழக் கற்றவை. புத்தக ஆசிரியர் தனது சொந்தச் செல்வாக்கில் 'லாபி' செய்தால் சில பத்திரிகைகளில் மதிப் புரை வெளிவரலாம். இது மாதிரியான சூழலில் சிறுபத்திரிகை சார்ந்த பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களுக்கு முன்னுரிமை தருவது இயற்கை தான். அது வியாபாரம். வேறு என்ன சொல்ல?

என்னைப் பொறுத்தவரையில் கடந்த 16 ஆண்டுகளில் 130 புத்தகங்களுக்கு மேல் மதிப்புரை எழுதியிருக்கிறேன். புத்தக மதிப் புரை எழுதுவது எனக்கு மட்டும் விதிக்கப்பட்ட தண்டனையா என்று அண்மைக்காலமாக மதிப்புரை எழுதுவதை நிறுத்தி விட்டேன். அப்புறம் ஒரு விஷயம்... புத்தகங்கள் பற்றி ஆழமாக எழுதப்பட்ட மதிப்புரைகள் பற்றி நூலின் ஆசிரியர்களில் பலர் என்னுடன் தங்கள் அபிப்பிராயத் தைப் பகிர்ந்து கொண்டதே இல்லை. படைப்பு என்பது மேலானது, மதிப்புரை என்பது கீழானது என்ற மனநிலையுடன் கள்ளத்தனமாகத் திரியும் எனது நண்பர்களின் அற்பத்தனம் எனக்கு நன்கு தெரியும்.''

சிறுபத்திரிகைச் சூழலில் அரசியல் எப்படி செயல்படு கிறது. அது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

""அரசியல் எங்குதான் இல்லை? கணவன்- மனைவி உறவுக்கிடை யில் கூட நுண் அரசியல் உள்ளது. சிறுபத்திரிகை மனோபாவமே ஒருவகை அரசியல்தான். வணிக நோக்கிலான கேளிக்கை எழுத்து கள் எனப் பெரும் பத்திரிகைகளில் வெளியானவற்றைப் புறக்கணிக் கும் நிலைப்பாடு கருத்தியல் சார்ந் தது. 'மணிக்கொடி' உருவாக்கிய சிறுபத்திரிகை மரபின் வழி வந்தவர்கள் நாம்' என பெருமை பேசும் அப்பாவி நண்பர்கள் எனக்குண்டு. மணிக்கொடியில் கட்டுரைகள் நடுவில் தாதுபுஷ்டி லேகியம், மந்திரக் குளிகை விளம் பரங்கள் வெளியாகியுள்ளன. சாதாரண கதைகள் நிரம்ப வெளியாகியுள்ளன. ஆனால் ஏனோ தெரியவில்லை- சிறு பத்திரிகை மரபினுக்கு முன்னோடி மணிக்கொடி என்ற நம்பிக்கை இங்கு தொடர்ந்து முன்னிலைப் படுத்தப்படுவது ஒரு வகை அரசியல்தான்.

எழுபதுகளில் சில நண்பர்கள் சேர்ந்து, இலக்கிய வேட்கையுடன் நடத்திய இலக்கியப் பத்திரிகை களைச் சிறுபத்திரிகைகள் என அடையாளப்படுத்துவதுதான் சரியானது. அஃக், கசடதபற, நடை, கொல்லிப்பாவை, யாத்ரா, பிரக்ஞை போன்ற சிறுபத்திரிகை கள் சில மதிப்பீடுகளை முன் னிறுத்தின. அந்தப் பத்திரிகைகளின் நேர்மையையும் நோக் கத்தையும் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள்.

சிறுபத்திரிகையை முன் வைத்து, பொருளியல் ஆதாயம், அரசியல் மேலாதிக்கம் பெறுவது அன்று நடைபெறவில்லை. சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு, சிறுபத்திரிகை அடையாளத் துடன்தான் வெளியானது. இன்று கண்ணனின் ஆசிரியர் பொறுப் பில் வெளியாகும் காலச்சுவடு வேறு வகைப்பட்டது. உயிர்மை, உயிர் எழுத்து, தீராநதி, அம்ருதா, காலச்சுவடு போன்றவற்றை இடைநிலை இதழ்கள் என வகைப் படுத்த வேண்டும். சமூகம், அரசியல், பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை தரும் சில இடைநிலை இதழ்களில் 20% பக்கங்கள்தான் இலக் கியத்திற்கு ஒதுக்கப்படுகின்றன. பத்திரிகைகளின் பெயரிலான பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்களுக்குச் சந்தையை உருவாக்கிட அப்பத்திரிகைகள் முயலுவது வியாபாரம்தான். பத்திரிகை அலுவலகக் கட்டிட வாடகை, துணை ஆசிரியர் உள்ளிட்டோரின் ஊதியம் எனப் பெரும் தொகை மாதந்தோறும் செலவாகும்போது, சிறுபத்திரிகை என்ற கருத்து முழுக்க அடிபட்டுப் போகின்றது.

இடைநிலை இதழ் சார்ந்து உருவாக்கப்படும் குழு அரசியல் தான் அபாயமானது. தான் சார்ந்த குழுவினரின் படைப்புகளை வெளியீடு செய்வதும், எதிர்க் குழுவினரின் படைப்புகளைக் கண்டு கொள்ளாமல் செய்வதும் குழுசார்ந்த அரசியலின் விளைவுதான். இந்நிலைமை இலக்கிய வளர்ச்சிக்கு முரணானது. அப்புறம் ஒரு படைப் பாளரை அந்தப் பத்திரிகை சார்ந்தவர் என முத்திரை குத்தி ஒதுக்குவது- போற்றுவது சரியல்ல. எல்லா இடைநிலை இதழ்களுக்கும் ஏதோ, 'கணக்கு வழக்கு' இருக்கிறது. அதற்கேற்ப பல்வேறு விஷயங்கள் நடைபெறு கின்றன. இந்நிலைமை தவிர்க்க வியலாதது. அகநாழிகை, மணல் வீடு போன்றவை சிறு பத்திரிகை கள்போல காட்சி தருகின்றன. ஆனால் அவற்றின் நோக்கம் 300 பிரதிகள் அச்சடிப்பது எனக் குறுகிய வட்டத்துக்குள் சுழல்வது ரொம்ப நாட்கள் நீடிக்காது. அப்புறம் சிறுபத்திரிகை என்றால் மேன்மையானது, சிறுபத்திரிகைக் காரர்கள் என்றால் வித்தியாச மானவர்கள் என்ற எண்ணத்தில் உண்மை இருப்பினும், ஏதோ சிலரின் நலனை முன்னிறுத்தும் அரசியலும் இருக்கிறது. அதுதான் உண்மை.''

தமிழில் வெளிவந்திருக்கும் மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றித் தாங்கள் மேற்கொண்ட முனை வர் பட்ட ஆய்வு, நூலாக வெளிவந்துள்ளது. தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் பெறுமிடம் என்ன?

""எனது உலக இலக்கிய அறி வென்பது மொழி பெயர்ப்புகளின் மூல மாகவே பெரிதும் சாத்தியப்பட்டுள்ளது. ரஷிய நாவல்களை வாசித்துவிட்டு அந்த நாட்டின் புவியியல் அமைப்பு, தட்பவெட்பநிலை, வாழ்க்கை முறை, எனக்கு மிகவும் நெருக்க மாயின. ஸ்டெபிப் புல்வெளிகள், தைகா காடு, கோதுமை வயல்கள், பனிப்பொழிவுகள், கோமகன்கள், சீமாட்டிகள், பண்ணைக் குடி யானவர்கள், குதிரைகள், உலர்புல். அவற்றை எப்படி மறக்க முடியும்.

ரஷியாவிலுள்ள பீட்டர் ஸ்பர்க் நகரத் தெருக்கள், மாட வீடுகள், கோட்டை கொத்தளங் கள், பாலங்கள் எல்லாம் தாஸ்தாயேவ்ஸ்கியின் "வெண்ணிற இரவுகள்' நாவல் மூலம் என் மனதில் துல்லியமாகப் பதிவாகி உள்ளன. வெவ்வேறு மொழி பேசும் பிரதேசங்களின் பதிவுகள் படைப்புகளின் வழியாக உலக மெங்கும் பரவுவதற்கு 'மொழி பெயர்ப்பு' என்ற விநோதச் செயல் முக்கியமானது.

இன்று நவீனத் தமிழிலக்கியம் பெற்றுள்ள வளமானது 1951 முதல் 170 வரை இருபது ஆண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு நாட்டுப் படைப்புகள் அடிப்படை யாகக் கொண்டுள்ளது. அண்மைக் காலமாக வெளிவரும் மொழி பெயர்ப்புப் படைப்புகள் நம்பிக்கை தருகின்றனவாக உள்ளன. ஆப்பிரிக்க எழுத்தாளர் கூகிவா தியாங்கோவின் சிலுவை யில் தொங்கும் சாத்தான் முக்கிய மான நாவல். உருது எழுத்தாள ரான சதத் ஹாசன் மண்டோவின் படைப்புகள் அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியன. இப்படி நிரம்பச் சொல்ல முடியும்.

அதே நேரத்தில் கண்ட கண்ட குப்பைகளும் பிற மொழிகளி லிருந்து தமிழாக்கப்படுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அண்மைக் காலத்தில் 'சாகித்ய அகாதெமி' நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ள பிற இந்திய மொழிப் படைப்புகள் வாசிப்பில் அலுப்பைத் தருகின் றன. மொழிப்பெயர்ப்பு படைப்பு மேன்மையானது என்ற மேலை நாட்டு மோகத்துடன் அலையும் சிலர் 'தமிழில் என்ன இருக்கு வாசிப்பதற்கு' என்று போகிற போக்கில் சொல்கின்றனர். இது ஒரு வகையில் பின்காலனிய அரசியல் செயல்பாட்டின் விளைவாகும்.''

'திராவிட இயக்க வளர்ச்சியில் கலைஞரின் நாடகங்கள்' என்ற நூலில் திராவிட இயக்கத்தின் இன்னொரு முகத்தைச் சித்தரித் துள்ளீர்கள். அடிப்படையில் பிரச்சாரத்திற்காக எழுதப்பட்ட திராவிட இலக்கியம் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?

""போன நூற்றாண்டைப் பொறுத்தவரையில் சாதிய ஒடுக்கு முறை, பெண்ணடிமைத்தனத் தினால் சீரழிந்திருந்த தமிழகத்தில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தோற்றுவிக்கப்பட்ட சீர்திருத்த அமைப்பான 'திராவிட இயக்கம்' குறித்து மீளாய்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். பார்ப்பனிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, விதவை திருமணம், ஜமீன் ஒழிப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, தமிழின் மறுமலர்ச்சி, சாதிய எதிர்ப்பு என பல்வேறு தளங்க ளில் இயங்கிய திராவிட இயக்கம் அன்றைய காலகட்டத்தின் தேவை. அந்த இயக்கம் பின்னர் தேர்தலில் போட்டியிட்டுச் சீரழிந்து போனது வேறு விஷயம்!

எனினும் 1940 முதல் 1967 வரை இலக்கியம், நாடகம், திரைப்படம், கட்டுரை என பல்வேறு வழி களில் திராவிட இயக்கத்தாரின் பதிவுகள் ஆழமாகப் பதிந்துள் ளன. ஒரு காலகட்டத்தில் கலை இலக்கியப் படைப்புகள் பிரச் சாரத்திற்கு எந்த அளவில் பயன்பட்டன என்பதை அறிய திராவிட இயக்கத்தில் கலைஞரின் நாடகங்களை முன்மாதிரியாகக் கொண்டு, அன்றைய காலப் பின்புலத்தை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றுள்ளேன். 'எதுவும் புனிதம் இல்லை; எதுவும் இழிவா னது இல்லை' என்ற பின் நவீனத்துவ போக்கினைப் பின்புல மாகக் கொண்டு கலைஞரின் நாடகங்களை மறுவாசிப்புக்குள் ளாக்கினேன். அந்த வகையில் அந்தப் புத்தகம் சமூகப் பதிவு.''

தமிழில் கைலாசபதி, சிவத்தம்பி, கோ.கேசவன் என ஒரு வகைப்பட்ட விமர்சனப் போக்கு, க.நா.சு, வெங்கட் சாமிநாதன் போன்றோர் இன்னொரு போக்கு, கோவை ஞானி, தமிழ வன், அ.மார்க்ஸ் போன்றோரின் வேறுபட்ட போக்குகள் உள்ளன. ஒப்பிட்டுப் பார்க்கும்போது, உங்களுக்கெனத் தனிப்பட்ட விமர்சனப் பார்வை இருக்கிறது. அதற்கான பின்புலம் என்ன?

""தனித் தமிழ், மரபிலக்கியம், சிறுபத்திரிகை இலக்கியம், இடதுசாரி இலக்கியம், நவீன உலக இலக்கியப் படைப்புகள் என எனது இலக்கியப் பயணம் 1974 முதல் மாறிக் கொண்டே இருக்கிறது. பல்வேறுபட்ட தத்து வங்களை வாசிப்பதில் ஆர்வம் எனக்கு அதிகம் என்றாலும் இலக்கியப் படைப்புகளைப் பொறுத்தவரையில் என் 'சுயம்' சார்ந்து எனக்குள் உருவாகும் கருத்தினை அடித்தளமாகக் கொள்கிறேன். நான் எந்தவொரு கோட்பாட்டினுக்கும் தாலி கட்டிக்கொண்டு, அந்த இடத் திலே தேங்கிப் போவதில்லை. அப்புறம் நேற்று சிறுகதை எழுதத் தொடங்கிய இளைஞன், கவிதை எழுதுகிற இளம்பெண் போன் றோரின் குரல்களைக் காது கொடுத்துக் கேட்கிறேன். அவற் றில் ஏதாவது புதிய விஷயம் இருக்கலாம் என நம்புகிறேன். படைப்பைப் பொறுத்த வரையில் 'புயலிலே ஒரு தோணி', "கடலுக்கு அப்பால்' என இரு நாவல்கள் எழுதிவிட்டுக் காணாமல் போன ப.சிங்காரத்தின் எழுத்தைவிட என்ன சொல்ல உள்ளது. அவர் தனது நாவல்கள் குறித்து எந்த 'லாபியும்' செய்யவில்லை. எனினும் அவருடைய மறைவிற்குப் பின்னர், 'புயலிலே ஒரு தோணி' தமிழில் முக்கியமான நாவல்களில் ஒன்று என அங்கீகாரம் பெற்றுவிட்டது.

சிறந்த படைப்பு என்பது முன்னுதாரணத்தினை மறுத்து விட்டுப் புதிய பாதையில் தடம் பதிப்பதாக இருக்க வேண்டும். இலக்கிய விமர்சகரும் அப்படித் தான். பல்வேறு முறைகளில் விமர்சகர்கள் புதிய அணுகு முறையைப் பின்பற்றினாலும், ஒரு நிலையில் அவரவருக்கான தனிப் பட்ட விமர்சன மரபு உருவாகி வரும். என்னைப் பொறுத்தவரை யில் படைப்பின் பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்வதற்கு முன்னுரிமை தருவதை வழக்க மாகக் கொண்டுள்ளன.

நான் எனது பள்ளிப் பருவத் திலிருந்து ஒடுக்கப்பட்டவர் களுக்குச் சார்பான மனநிலை யுடனே வாழ்ந்து வருகிறேன். சக மனிதர்கள்மீதான அன்பு எனக்கு எப்பவும் பிடித்தமானது. அது எனது பதின்பருவத்தில் இயற்கை மீதும் சக உயிரினங்கள் மீதும் என்றும் பரவியது. பால், இன, மொழி, சாதி, மத அடிப் படையில் நசுக்கப்படும் நிலைக்கு எதிரான எனது அரசியல் பார்வை, என் இலக்கிய அணுகுமுறையைத் தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் கோட்பாடு கொள்கையைவிடப் படைப்பாளியும் படைப்பும் எனக்கு மிகவும் முக்கியம்.

ஒரு தேர்ந்த படைப்பின் வழியாகப் படைப்பாளன் மனித இருப்புக் குறித்து கண்டறிந்த உண்மைகள் என்னைப் பொறுத்த வரையில் முக்கியமானவை. வாசகனின் வாசக மனநிலையைச் சீர்குலைத்து, ""அவனுக்குள் இடை விடாத கேள்விகளை எழுப்பும் படைப்பு, ஒரு வகையில் உங்கள் தூக்கத்தைக் கெடுத்துவிடும். இது ஏன் இப்படி நடக்கிறது? வாழ்க்கை ஏன் இப்படி அபத்த மாக உள்ளது? வாழ்வு செலுத்தும் கருணை-கனிவு மனதைக் குதூகலிக்கச் செய்வது எப்படி? இப்படி பல்வேறு கேள்விகள் மூலமாகவே இலக்கியப் படைப்புகளை அணுகும்போது, முற்போக்கு, பிற்போக்கு, உன்னதம் போன்ற அம்சங்களுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. இரும்புப் பெட்டகம் போல விளங்கும் படைப்பின் ரகசியங்களைக் கண்டறிந்து பெற்ற அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. அதே நேரத்தில் மடத் தனமாகவும் செயற்கையாகவும் போலியாகவும் எழுதப்படும் படைப்புகள் எனக்கு எரிச் சலையும் வெறுப்பையும் ஏற்படுத் துகின்றன என்பதையும் இப் பேச்சில் பதிவு செய்ய விரும்பு கிறேன்.''

எதிர்காலத்தில் என்ன எழுதத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?

""ஏதாவது எழுத வேண்டும் அல்லது இந்த எழுத்து வேலையைச் செய்ய வேண்டும் என்ற நினைவு மட்டும் எப்பவும் மனதில் உள்ளது. ஆனால் அவை நடை முறையில் சாத்தியமா, இல்லையா என்பதைச் சொல்ல முடியாது. எல்லாத் திட்டங்களையும் மீறிச் 'சித்தன் போக்கு'போல மனம் புதிய பாதையில் இழுத்துச் செல்லும். வாசிப்பதற்கு நிறைய புத்தகங்கள் என் மேசையில் குவிந்து கிடக்கும்போது ஏன் எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது. புத்தக வாசிப்பு மூலம் மனம் அடையும் 'லஹரி' உணர்வுக்கு அளவேது? அது போதாதா?''

சந்திப்பு: புகைப்படங்கள்:
அண்ணல்

1 comment:

  1. இந்த மாத இனிய உதயம் மாத இதழில் வெளிவந்தவை .அருமையான பகிர்வு நண்பரே .

    ReplyDelete