எம்.ஜி.சுரேஷ்
ராவணன் : ஓர் இந்திய அறிவு ஜீவியின் அமெரிக்க மனம் அறுபதுகளில் ஃ பிரெஞ்சு சிந்தனையாளரான கை டி போர்ட் (guy debord), 'நமது யுகம் கண்கவர் காட்சிகளின் (spectacles) யுகமாக இருக்கிறது. முன்னேறிய முதலாளிய சமூகம், தகவல் தொடர்பு, விளம்பரங்கள் ஆகியவற்றைக் கண்கவர் காட்சிகளாக உருமாறி நம்மை மயக்குகின்றன. இவற்றை நாம் செயலிழந்து கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.' என்று எழுதினார். இன்றைய தினம் அமெரிக்கா கண்கவர் காட்சிகளை உருவாக்குவதில் முதலிடம் வகிக்கிறது.
அமெரிக்க டிவி, பிரிட்டனி ஸ்பியர்ஸ், ஷகிரா, பியான்சி போன்ற பெண்களின் அரை நிர்வாண ஆட்டங்களை ஒளிபரப்பி, அந்தப் பெண்களின் காம உறுப்புகளை பார்வையாளனின் முகத்தில் வந்து தேய்க்கின்றன. அதே போல், அமெரிக்கத் திரைப்படங்களும் கதாநாயகனும் கதாநாயகியும் போலியாகப் புணர்ந்து உச்சம் எய்துவதைத் திரையில் காட்டி, பார்வையாளனை உச்சம் எய்துமாறு செய்கின்றன. தவிரவும், மக்களை மகிழ்விக்க எதையாவது செய்தே தீர வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்க மனம் சிந்தித்தபடி இருக்கிறது. செய்தி, திரைப்படம், விளம்பரம், டிவி நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் மக்களை கண் கொட்டாமல் பார்க்க வைக்க வேண்டும். இதனால்தான் ஒருவரி காதல் கதையான 'டைடானிக்'கை எடுக்க பல கோடி ரூபாய் செலவாகிறது.
காதலை விட ஒரு பெரிய கப்பல் உடைந்து சிதறுகிற கண்கவர் காட்சி பெரிய விஷயமாக இருக்கிறது. அழிந்து போன 'டைனசார்' விலங்கின் பாசிலை வைத்து அதற்கு உயிர் கொடுத்து உலவ விடப்படும் ஒரு வரிக் கதை பல கோடி ருபாய் செலவில் கம்ப்யூட்டர் கிராஃபிக் உதவியுடன் மக்கள் கண் முன் ஒரு கண்கவர் காட்சியாக முன் வைக்கப்படுகிறது. ஆக, ஒரு அமெரிக்கத் திரைப்படத்தின் பிரதான அம்சம் என்பது மக்களை 'மகிழ்விப்பதே'. ஒரு பாலியல் தொழிலாளி எப்படி தனது வாடிக்கையாளரை மகிழ்விக்கப் பாடு படுகிறாளோ அது போலவே ஓர் இயக்குனர் தனது பார்வையாளர்களை மகிழ்விக்க வேண்டும்.அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பணத்தைத் தண்ணீராக இறைக்கலாம். நம்பர் ஒன திறமைசாலிகளை ஒன்று திரட்டலாம். உலக அழகிகளை ஒப்பந்தம் செய்யலாம். மக்கள் மனம் மகிழ வேண்டும். அதன் பலனாக பணப்பெட்டி நிறைய வேண்டும். இது தான் ஹாலிவுட் தொழில் தர்மம்.
இந்தியா போன்ற பின் காலனிய நாடுகளும் இப்போது அமெரிக்க மனத்தை சுவீகரித்துக் கொண்டு 'கண்கவர் காட்சிகளை' உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டன. ஓரிரு வரிக் கதை இருந்தால் போதும். வெண் சருமம கொண்ட ஒரு பெண்ணின் உடலை வித விதமான கோணங்களில் காட்டலாம். மயிர்கூச்செறிய வைக்கும் சாகசக் கட்சிகள், வெடித்துச் சிதறும் கட்டிடங்கள், போன்ற காட்சிகளை வைத்துப பார்வையாளனைப் புல்லரிக்க வைக்கலாம். மேலும், ஏற்கெனவே சினிமாவில் வர்த்தக ரீதியான வெற்றி பெற்ற முகங்கள், நம்பர் ஒன தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோரும் கைகோர்த்து விட்டால் போதுமே. அப்புறம் என்ன? இப்படிபட்ட தறி கெட்டு ஓடும் ரோலர் கோஸ்டர் ஆக தமிழ் சினிமா மாறி சில வருடங்கள் ஆகிவிட்டன. எதனால் இந்த விபரீதம்? பன்னாட்டு நிறுவங்கள் எப்போது இந்தியா சினிமாத்துறையைக் கையில் எடுத்துக் கொண்டனவோ அப்போதிலிருந்தே இந்த நிலைமை உருவாகத் தொடங்கி விட்டது.
இந்த பன்னாட்டு நிறுவனங்கள் ஹாலிவுட் தொழில் தர்மத்தை இங்குள்ள இயக்குனர்கள் மேல் திணிக்கின்றன. அதற்கு ஒத்துப்போகும் இயக்குனர்கள் வசம் தங்கள் புரோஜெக்ட்களை ஒப்படைக்கின்றன. இதனால், அமெரிக்க மனமும், ஹாலிவுட் தொழில் தர்மமும் கொண்டவர்களாக நம் இயக்குனர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது. மணி ரத்னத்தின் சமீபத்திய படமான ராவணன் பற்றிப் பேசும் முன் இத்தனை முஸ்தீபுகள் தேவைப்படுகின்றன. முதலில் தலைப்பிலிருந்து ஆரம்பிப்போம். இந்திய மரபு ராமனைக் கொண்டாடுகிறது. ராவணனை ஒரு கொடிய வில்லனாகவே பார்க்கிறது. எனவே, இந்த நம்பிக்கையை கொட்டிக்கவிழ்த்தால் என்ன? கட்டவிழ்த்துப் பார்த்தால் என்ன என்கிற பின் நவீனத்துவ அலசலை மேற்கொள்வதற்காக மணி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் போலிருக்கிறது என்று யாராவது நினைத்தால் அதற்கு மணி பொறுப்பேற்க முடியாது. ஏனெனில், ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக வைக்கப்பட்ட தலைப்பு இது. ஒரு பெண் திடீரென்று தெருவில் நிர்வாணமாக ஓடினால் பார்க்கும் அத்தனை பேருக்கும் தூக்கி வாரிப்போடும். அதைப் போன்ற ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக வைக்கப்பட்ட தலைப்பு இது. இதுவும் ஒரு வணிக உத்தியே. இந்த உத்தியினால் ஒன்றும் 'போணி' ஆகவில்லை என்பது வேறு விஷயம். தமிழ் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே ராமாயணமும், ராமனும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு விட்டதால் இது ஆறிய கஞ்சி.
சரி, கதை? பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் விக்ரம். அவர் தங்கையை லாக்-அப்பில் வைத்து போலீஸ்காரர்கள் கற்பழித்து விடுகிறார்கள். இதனால் விக்ரமின் தங்கை ப்ரியா மணி தற்கொலை செய்து கொள்ள, தன தங்கையை கொன்றவர்களை விக்ரம் பழி வாங்கத் துடிக்கிறார். தன்னை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்கத்துடிக்கும் போலீஸ் அதிகாரியின் மனைவியைக் கடத்துகிறார்.....ஆவ. கொட்டாவி விட வைக்கும் அறுதல் பழசான கதை. இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? என்ன செய்ய முடியாது? இந்தக் கதையுடன் ராமாயணத்தை சேர்த்து ஒரு 'தர்ஜுமா' செய்தால் ஒரு ரீமிக்ஸ் கதை கிடைக்கும். இது ரீமிக்ஸ் யுகம். எனவே இந்த ரீமிக்சும் ஜெயிக்கும். சரி, அப்புறம்? கதைக்கான பின்புலத்துக்கு என்ன செய்யலாம்? அதற்கென்ன இருக்கவே இருக்கிறது சந்தனக் கடத்தல் வீரப்பன் கதை. அதை உப்பு மிளகுத் தூள் போல் ஆங்காங்கே தெளித்துக் கொள்ளலாம். கதை தயார். அப்புறம் என்ன செய்வது. நல்ல விலைக்குப் போகும் கதாநாயகன், நம்பர் ஒன கதாநாயகி, நம்பர் ஒன காமிராமேன், நம்பர் ஒன இசையமைப்பாளர், கண்கவர் லொக்கேஷன் இவற்றை ஃ பிக்ஸ் செய்து கொண்டால் முடிந்தது.
படம் ஆரம்பிக்கும் போது, காமிராவுக்கு முதுகு காட்டி நிற்கிறார் நாயகன் விக்ரம். காமிரா பின்னகரும் போது, ஒரு மிகப்பெரிய மலை உச்சியின் மேல் விக்ரம் நிற்பது தெரிகிறது. கீழே அதல பாதாளம். அதில் ஆறு ஒன்று ஓடுகிறது. அதி ஒரு படகில் ஒய்யாரமாக உட்கார்ந்து பயணம் செய்யும் ஐஸ்வர்யா ராய். உடனடியாக ஐஸ்வர்யா ராயின் படகு தாக்கப்பட்டு அவர் கடத்தப்படுகிறார். விக்ரம் மற்றும் இதர பழங்குடி மக்கள் மத்தியில் அவர் சிறை வைக்கப்படுகிறார். அப்போது ஐஸ்வர்யா ராய் விக்ரமிடம் பேசும் தத்துவர்ர்த்த வசனங்கள் அசட்டுத்தனமாகவும், படுசெயற்கையாகவும், சிரிப்பு வரவழைப்பவையாகவும் இருக்கின்றன. (வசனம்: சுகாசினி) பின்னர் கதை நகர்கிறது. பழங்குடி மக்களின் வாழ்க்கை; கதாநாயகனின் பழகும் விதம் இவையெல்லாம் அவளை கவனிக்க வைக்கின்றன. ஐஸ்வர்யா ராயின் கணவனாக வருபவர் ப்ருதிவிராஜ். அவர் ஒரு போலீஸ் உயர் அதிகாரி. தன மனைவியைக் கடத்திய வீராவை (அது தான் விக்ரமின் கதாபாத்திரப் பெயர்) வேட்டையாடுகிறார். விக்ரமைப் பொறுத்தவரை அவர் தங்கையைக கற்பழித்துக் கொன்ற போலீஸ்காரனைக் கொல்லவேண்டும். ப்ரிதிவிராஜுவுக்கோ வீராவிடம் சிக்கி இருக்கும் தன மனைவியைக் காப்பாற்ற வேண்டும். அதை விட முக்கியம் வீராவை என்கவுண்டரில் சுட்டுத்தள்ள வேண்டும். இறுதியில், க்ளைமாக்சுக்கு சற்று முன்னதாக ஐஸ்வர்யா ராயை விக்ரம் விட்டு விடுகிறார். தன்னிடம் திரும்பி வரும் ஐஸ்வர்யா ராயின் கற்பைச் சந்தேகிக்கப்படுகிறார் ப்ருதிவி. அவளைப் பற்றி விக்ரம் அவதூறாகப் பேசியதாக ப்ருதிவி பொய் சொல்ல, உடனே ஐஸ்வர்யா அது உண்மைதானா என்று ஊர்ஜிதம் செய்து கொள்ள விக்ரமை மீண்டும் தேடி காட்டுக்கே வருகிறார். விக்ரமைச் சந்திக்கிறார். அப்போதுதான் தன கணவன் சொன்னது பொய் என்று தெரிகிறது. அப்போது ஐஸ்வர்யாவுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து வரும் ப்ருத்வி ராஜ் விக்ரமை சுட்டுக் கொன்று விடுகிறார். படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ப்ருதிவிராஜ், கார்த்திக், ப்ரியா மணி, பிரபு என்று ஒரு பெரிய நட்சதிரப்பட்டாளம். அவர்கள் நடிப்பு மிக நேர்த்தியாக வடிக்கபட்டு இருக்கிறது.
அவர்களைத் தத்ரூபமாகக்காட்டக்கூடிய சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. அற்புதமான லொகேஷன்கள். காதுகளில் ரீங்கரிக்கும் ஏ. ஆர். ரஹ்மான். இவர்களைக் கொண்டு ஒரு சிற்பி சிலை வடிப்பது போல் சிரத்தையுடன் படத்தை உருவாக்கியிருக்கிறார் மணி ரத்னம். கண்களில் ஒற்றிக் கொள்ளக்கூடிய விதத்தில் ஒவ்வொரு ஃ பிரேமுக்கும் கவனமாக உழைத்திருக்கிறார். அதை நாம் பாராட்டியே தீர வேண்டும். இவை யாவும் இந்தப் படத்தை உலகாளவிய தரத்துக்கு கொண்டு செல்கின்றன என்பது உண்மையே. இந்தச் சந்தர்ப்பத்தில் உலகப் புகழ் பெற்ற வங்க மொழி இயக்குனர் மிருனாள் சென் தனது கட்டுரை ஒன்றில் எழுதிய வரிகள் என் நினைவுக்கு வருகின்றன: 'ஹாலிவுட்டில் மிக மோசமான படங்கள், மிகக் கூர்மையாக எடுக்கபடுகின்றன.' அது மணி ரத்னத்தின் ராவணனுக்கும் பொருந்தும் என்றே தோன்றுகிறது. இராமாயணத்தை உல்டா செய்து ஒரு படம் எடுப்பதில் நமக்கு எவ்வித மறுப்பும் இல்லை. அதை ஒரு மறு வாசிப்பு என்று சொல்லலாம். ஆனால், பழங்குடி மக்களைப் பற்றிய படமாகவும் இது இருப்பதால் நெருடுகிறது. பழங்குடி மக்களை ஏன் போலீஸ் துரத்துகிறது? வேட்டையாடுகிறது? என்பதைப் பற்றி மணிரத்னம் கவனம் செலுத்தவில்லை. வீரையன் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை விவரிக்கும் மணி எதனால் கொல்லப்பட்டான் என்பதை விவரிக்கவில்லை. எப்படிக் கொல்லப்பட்டான் என்பது சுவாரசியம். ஏன் கொல்லப்பட்டான் என்பது எரியும் சமூகப் பிரச்சனை. அதைக் கிளறினால் பார்வையாளனின் சமநிலை குலைந்து போகும். எனவே அது நமக்குத் தேவை இல்லை. நர்மதா அணைத்திட்டத்தால் பாதிக்கப்படும் பழங்குடி மக்களைப் போல், வீரையன் சார்ந்த பழங்குடி மக்களுக்கு என்ன பிரச்சனை? அதை என் அரசோ அல்லது காவல் துறையோ பொருட்படுத்தவில்லை? எப்படி நடந்தது என்பதைச் சொல்வது அமெரிக்க மனம். இந்தச் சந்தர்ப்பத்தில் என் சிங்கப்பூர் நண்பர் பாலாஜி சொன்ன ஒரு விஷயத்தை நினைவு கூர வேண்டியவனாக இருக்கிறேன்.
பிரபல பீட்டில்ஸ் பாடகரான ஜான் லென்னான் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் சுட்டது தொடர்பாக ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அந்த ஆவணப்படம் அவர் எவ்வாறு சுடப்பட்டார் என்பது பற்றி மட்டுமே விவரித்தது. எதனால் சுடப்பட்டார் என்பது பற்றி அது பேசவில்லை. இதுதான் அமெரிக்க மனம்.ஒரு விஷயம் ஏன் நடந்தது என்பது மனசாட்சி உள்ளவர்களின் மனம். மனசாட்சி உள்ளவர்கள் வெற்றிகரமான வியாபாரிகளாக இருக்க முடியாது. எனவே அது தேவை இல்லை. அதற்கு பதிலாக ஐஸ்வர்யாவின் பளீரிடும் வெண்மையான தோள்களையும், மார்பக நடு நீரோடையையும், பளிங்கு போன்ற முகத்தையும் க்ளோஸ் அப் ஷாட்களில் காட்டுவது பற்றி யோசிப்பது அமெரிக்க மனம். அந்த மனம்தான் மணியின் மனம். அடுத்து இந்தப் படத்தில் ஒரு இடத்தில் விக்ரம் பேசுகிறார்: 'மேட்டுக்குடி மக்களுக்கு ஒடுக்கப்பட்டவர்களின் வலியை ஒரு போதும் உணரமுடியாது.' ஒடுக்கப்பட்டவர்களின் மீதான மணிரத்னத்தின் கரிசனம் கவனத்துக்குரியது. இந்த கரிசனம், பெரும் சக்தியாக வளர்ந்து வரும் 'தலித்' மக்களை, தங்கள் வணிக இலக்காக ஆக்கிக்கொள்ள விழையும் முதலாளித்துவ வர்த்தக நோக்கமே அல்லாமல் வேறென்ன? இந்தப் படத்தைப் பார்த்து விட்டு, தியேட்டரை விட்டு வெளியே வரும் போது எனக்குத் தோன்றியது. ஒரு ஜப்பானியப்படம் ஜப்பானியத் தன்மைகளுடன் இருக்கிறது. ஒரு ஃ பிரெஞ்சுப்படம் ஃ பிரெஞ்சுத்தனமைகளுடன் இருக்கிறது.
ஒரு அமெரிக்கப் படம் அமெரிக்கத்தனமைகளுடன் இருக்கிறது. ஆனால், ஒரு இந்தியப் படமும் அமெரிக்கத் தன்மையுடன் இருக்கிறது. அது ஏன்?
மிக அருமையான ஒப்பீடு..
ReplyDelete//ஆனால், ஒரு இந்தியப் படமும் அமெரிக்கத் தன்மையுடன் இருக்கிறது. அது ஏன்?//
நச்.... ஆனா பதில் சொல்லத்தான் யாரும் இல்லை...
ஒரு அமெரிக்கப் படம் அமெரிக்கத்தனமைகளுடன் இருக்கிறது. ஆனால், ஒரு இந்தியப் படமும் அமெரிக்கத் தன்மையுடன் இருக்கிறது. அது ஏன்?////
ReplyDeleteஅதனால் தான் இந்த அசிங்கமான தோல்வி. பெரும்பாலான மணிரத்னத்தின் படங்கள் வெற்றி என்பதை விட வெற்றி மாதிரி கொண்ட படங்கள். இப்பொதெல்லாம் திரையுலகம் கீழ் நோக்கி போய் கொண்டிருக்கும் சூழலில் வெற்றியாக காட்டமுடியாததால் தோல்வி அடைந்தது தெரிந்துவிட்டது.