Wednesday, December 30, 2009
சிற்றிதழ் அறிமுகம்
ஆர்.ரவிச்சந்திரனை ஆசிரியராகவும் லதா ராமகிருஷ்ணனை இணை ஆசிரியராகவும் கொண்டு புதுப்புனல் என்னும் கலை இலக்கிய மாத் இதழ் வெளிவருகிறது.
காப்காவின் "பட்டினிக்கலைஞன்" கதையை ஆர்.முத்துக்குமார் ஆய்வு செய்து சிறந்த கட்டுறை ஒன்றை எழுதியுள்ளார். வெளி.ரங்கராஜனின் "மாதிரிகதை" என்னும் நாடக பிரதி இதில் வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் தர்பர், ஸ்டீபன் ஐஸ்வேய்க் போன்றோரின் கதை மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. "காயல்" என்னும் வேட்டைக்கண்ணனின் நாடகம் வெளியிடப்பட்டுள்ளது. "அக்கம்பக்கம்" என்னும் சுவாரசியமான பத்தியை லதா ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார்.
இதேபோல் வைத்தீஸ்வரன், பூமா ஈஸ்வரமூர்த்தி, ரிஷி போன்ற மூத்த கவிஞர்களின் கவிதைகளும், மனோ.மோகன், கோ.கண்ணன், என்.ராஜகோபாலன் போன்ற இளம் கவிஞர்களின் கவிதைகளும் வெளிபட்டுள்ளது. புதிய எழுத்தாளர்களின் படைப்புகளை இதன் ஆசிரியர் வரவேற்றுள்ளார்.
முகவரி:
புதுப்புனல்,
117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி (ரத்னா கபே எதிரில்)
சென்னை - 600005
அலைபேசி: 9962376282
மின்னஞ்சல்:pudhupunal@gmail.com
2.சிற்றிதழ் அறிமுகம் - மந்திரச் சிமிழ்
நண்பர் செல்வ.புவியரசன் எனது இணிய நண்பர். அவரின் வருகை எப்போதும் மனதிற்கு உகந்ததாகவே இருக்கும். சந்தித்து நீண்டநேரம் உரையாடிவிட்டுத் திரும்பும்போது மனதின் அனைத்து உளைச்சல்களும் நீங்கி புத்துணர்வு மேலோங்கியிருக்கும். கூரிய அரசியல் விமர்சனங்களையும், உலககலைஞர்களின் மொழிபெயர்ப்புகளையும், "தமிழினி","உன்னதம்" போன்ற இதழ்களில் செய்து வருகிறார். தி.நகர் பெரியார் சாலையில் உள்ள "துளசி பார்க்" ஹோட்டலின் ரூப்-டாப்பில் இருவரும் சந்தித்து பேசிக்கொண்டிருந்த வேளையில் "மந்திரச்சிமிழ்" என்றொரு காலாண்டிதழை கொடுத்தார்.
க.செண்பகநாதன் பதிப்பாசிரியராகவும், செல்வ.புவியரசன் ஆசிரியராகவும் இருந்து இவ்விதழைக் கொண்டு வந்துள்ளார்கள். "பிராந்தியவாதம்" பற்றிய கட்டுரையை செல்வ.புவியரசன் இதில் எழுதியுள்ளார்.
"உலகமயமாதலும் அதன் இயலாமையும்" என்ற கட்டுறையை சென்பகநாதன் எழுதுயுள்ளார்.
மாற்றுத் திரைப்பட இயக்குநர் "ஷ்யாம் பெனகல்" பற்றிய விரிவான கட்டுரை இவ்விதழில் இடம் பெற்றுள்ளது. அவருடைய படங்கள் பின்னிணைப்பும், அவரது பேட்டியும் முக்கிய அம்சங்களாக உள்ளது. தென்கொரிய இயக்குநர் 'கிம் கிடுக்' பற்றிய கட்டுரையும் அவரது பேட்டியும் இடம் பெற்றுள்ளது. சர்வதேச சினிமா ஆர்வலர்களாலும், சிற்றிதழாளர்களாலும் மிகவும் மதித்து போற்றப்படுபவர் 'கிம் கிடுக்'.
சமகால உலகப்பிரச்சனைகள், உலகமயமாக்கல், ஊடகங்கள் குறித்து எழுதப்படும் விமர்சனங்கள் ஆகியவைக்குறித்த படைப்புகளை அனுப்பிவைக்கும்படி தலையங்கத்தில் பதிப்பாசிரியர் வேண்டுகோக் விடுத்துள்ளார். இம்மாதிரியான இதழ்களை ஊக்குவிக்கவேண்டியது நமது பொறுப்பு. தொடர்ந்து வெளிவந்தால்தான் பலகாத்திரமான விஷயங்களுக்கு உரிய களம் கிடைக்கும். நல்லதரமான வடிவமைப்பில், முதல் இதழ் வெளிவந்துள்ளது.
முகவரி:
மந்திரச்சிமிழ்,
எண் 1, வள்ளலார் முதல் தெரு,
செல்லி நகர், கேம்ப் ரோடு,
கிழக்கு தாம்பரம்,
சென்னை-600073
அலைபேசி:9894931312, 9443308256.
குறிப்பு: (மந்திரச்சிமிழ், புதுப்புனல்)
சென்னையில் உள்ளவர்கள் தி.நகரிலுள்ள New Book Lands ல் வாங்கிக்கொள்ளலாம். கிடைக்கிறது.
நியூ புக் லேண்ட்ஸ்,
வடக்கு உஸ்மான் சாலை,
தி.நகர்,
சென்னை-600017
தொலைபேசி: 044 - 28158171
Tuesday, December 29, 2009
இலக்கியவாதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: திரைப்படத் துறையினருக்கு பிரபஞ்சன் அழைப்பு
First Published : 26 Dec 2009 01:44:55 AM IST
Last Updated :
உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பன்னிரண்டு நூல்கள்
வெளியீட்டு விழாவில் "வெட்டுப்புலி' என்ற நூலை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிட,
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பெறுகிறார். உடன் (இடமிருந்து) பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன்,
கவிஞர் ஞானக்கூத்தன், எழுத்தாளர் பிரபஞ்சன், நூலாசிரியர் தமிழ்மகன்.
சென்னை, டிச.25: ""இலக்கியவாதிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்'' என்று திரைப்படத் துறையினருக்கு பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் அழைப்பு விடுத்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற "உயிர்மை' பதிப்பகத்தின் 12 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது:
""இலக்கிய அறிவு இல்லாத எங்களை எதற்கு இந்த விழாவுக்கு அழைத்தீர்கள்?'' என்று இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர்கள் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.
இலக்கியத்தோடு பரிச்சயம் வேண்டும் என்பதற்காகவே அவர்களை மனுஷ்ய புத்திரன் அழைத்துள்ளார். 1960}70}ம் ஆண்டுகளில் படைப்பாளிகள் ஓவியர்களோடு இணைந்து பணியாற்றினார்கள். அதன் மூலம் சிறந்த ஓவியர்கள் உருவானார்கள். சிறந்த படைப்புகளும் உருவாகின.
அதுபோல, திரைப்படத் துறையினரும், படைப்பாளிகளும் இணைந்து பணியாற்றினால் சிறந்த படைப்புகள் உருவாகும். சிறந்த இயக்குநர்களும் உருவாக முடியும். இலக்கியத் துறையில் இருந்து திரைப்படத் துறைக்குச் சென்ற பலர் சாதனை படைத்துள்ளனர்.
ஆண் } பெண் உறவுச் சிக்கல்களை யாரும் சரியாக புரிந்து கொள்வதில்லை. அதனால்தான் சமுதாய முன்னேற்றம் தடைபடுகிறது. அதனை எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் தனது "அவரவர் வழி' என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் நமக்கு புரிய வைத்துள்ளார்' என்றார் பிரபஞ்சன். முன்னதாக 11 எழுத்தாளர்கள் எழுதிய 12 நூல்களை "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன், கவிஞர் ஞானக்கூத்தன், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், சாரு நிவேதிதா, பாரதி மணி, தேவேந்திர பூபதி, சுகுமாரன், திரைப்பட இயக்குநர்கள் தங்கர்பச்சான், எஸ்.பி. ஜனநாதன், வெற்றிமாறன், அறிவழகன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
வெளியிடப்பட்ட நூல்களும், எழுத்தாளர்களும்: "தாழப்பறக்காத பரத்தையர் கொடி' } கட்டுரைகள் (பிரபஞ்சன்), "என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்' } கட்டுரைகள், "அதீதத்தின் ருசி' } கவிதைகள் (மனுஷ்ய புத்திரன்), "வெட்டுப் புலி' } நாவல் (தமிழ்மகன்), "அவரவர் வழி' } சிறுகதைகள் (சுரேஷ்குமார் இந்திரஜித்), "தண்ணீர் யுத்தம்' } சுற்றுச் சூழல் கட்டுரைகள் (சுப்ரபாரதி மணியன்), "சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும்' } நாவல் (வா.மு. கோமு), "அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது' } குறுநாவல்கள் (வ.ஐ.ச. ஜெயபாலன்), "கானல் வரி' } குறுநாவல் (தமிழ் நதி), "நீலநதி' } சிறுகதைகள் (லஷ்மி சரவணக்குமார்), "நகரத்துக்கு வெளியே' } சிறுகதைகள் (விஜய் மகேந்திரன்), "வேட்கையின் நிறம்' கவிதைகள் (உமா ஷக்தி).
வெளியிடப்பட்ட 12 நூல்கள் பற்றி 12 பேர் விமர்சன உரையாற்றினார்கள். கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்துரை வழங்கினார்.
'உயிர்மை' பதிப்பக நூல் வெளியீட்டு விழா
டிசம்பர் 26,2009,
சென்னை:""நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம், சமூகம் சார்ந்த அறிவை மாணவர்கள் பெற முடியும்,'' என எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் பேசினார்."உயிர்மை' பதிப்பகத்தின் சார்பில், 12 நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. விழாவில், "உயிர்மை' பதிப்பக நிர்வாகி மனுஷ்ய புத்திரன் பேசும் போது, ""நல்ல நூல்களை உருவாக்குவதன் மூலம், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். தரமான நூல்கள் வெளிவருவது அதிகரிக்க வேண்டும்.மாணவர்கள் நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் சமூகம் சார்ந்த அறிவை பெற முடியும். இன்றைய அரசியல் நிகழ்வுகள், வாழ்க்கை தத்துவங்கள் உள்ளிட்டவைகளை, பல நூல்களை கற்றுத் தேர்வதன் மூலமே அறிந்து கொள்ள முடியும்,'' என்றார்.
இந்நிகழ்ச்சியில், மனுஷ்ய புத்திரன் எழுதிய என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம், அதீதத்தின் ருசி, பிரபஞ்சன் எழுதிய தாழப்பறக்காத பரத்தையர் கொடி, சுரேஷ்குமார இந்திரஜித் எழுதிய அவரவர் வழி, சுப்ரபாரதி மணியன் எழுதிய தண்ணீர் யுத்தம், கோமுவின், சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும், தமிழ்மகன் எழுதிய வெட்டுப் புலி, ஜெயபாலனின், அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது, தமிழ்நதியின் கானல் வரி, லஷ்மி சரவணக்குமார் எழுதிய நீல நதி, விஜய் மகேந்திரனின் நகரத்திற்கு வெளியே, உமா சக்தி எழுதிய வேட்கையின் நிறம் உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன. நூல்களை கவிஞர் ஞானகூத்தன், தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் சாரு நிவேதிதா, பாரதி மணி, சுகுமாரன், முருகேச பாண்டின், தேவேந்திர பூபதி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
Friday, December 25, 2009
நகரத்திற்கு வெளியே – நூல் விமர்சனம் -நிலா ரசிகன்
இவ்வகையில், இன்று உயிர்மை வெளியீடாக விஜய் மகேந்திரனின் "நகரத்திற்கு வெளியே" சிறுகதை நூல் வெளியாகி இருக்கிறது.
பத்து சிறுகதைகளை உள்ளடக்கியது இத்தொகுப்பு. ஒரு மணி நேரத்திற்குள் இந்நூலை வாசித்துவிட முடிவது இந்த இயந்திர அவசர வாழ்வில் ஒரு வசதி. விஜய் மகேந்திரனின் கதைகளில் என்னை அதிகம் கவர்ந்தவை திருகலற்ற மொழிநடையும்,நுணுக்கமான விவரணைகளும்,தன்னை சுற்றிய அனுபவங்களை புனைவாக மாற்றியிருக்கும் லாவகமும்.
இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த மூன்று கதைகளை பற்றி பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
1.அடைபடும் காற்று:
இருவருக்கு இடையேயான கடித பரிமாற்றத்தை கதையாக்கி இருக்கிறார்.சென்னையின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றான உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் உணவு விடுதி மூடப்பட்டதை மையமாக கொண்டு நகர்கிறது கதை. இலக்கிய ஆர்வலர்கள் பலரை கண்ட உணவகம் அது. இப்போது மூடப்பட்டு புதர்கள் படர்ந்து கேட்பாரற்று கிடக்கிறது. விரைவில் அந்த உணவகம் இருந்த இடத்தில் ரசாயன தொழிற்சாலை அமைய இருப்பதாக ஒரு செய்தியை இக்கதையின் மூலம் தெரிவிக்கிறார் ஆசிரியர். இந்தக் கதையின் ஒவ்வொரு வரியை வாசிக்கும்போதும் ஒரு வித ஏக்கமும் இனம் புரியாத வலியும் மனதை சூழ்ந்து கொள்வது இக்கதையின் வெற்றி.
2.சனிப்பெயர்ச்சி:
ஆசிரியரின் பிற கதைகளிலிருந்து சற்றே மாறுபட்ட கதையாகவே இந்தக்கதையை உணர்ந்துகொள்ள முடிகிறது. கதையின் ஆரம்ப வரிகளில் ஆரம்பமாகும் அங்கதம் கதையெங்கும் விரவிக்கிடக்கிறது.புரிதலற்ற நண்பனை பற்றிய வலியும்,நேரம் சரியில்லாத காரணத்தால் தவறேதும் செய்யாவிட்டாலும் சனியன் முதுகில் ஏறிக்கொண்டு நடனமிடுவதையும் அழகாக எழுதியிருக்கிறார்.மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தோன்றும் இக்கதையின் பின்னாலிருக்கும் நிதர்சனம் நெஞ்சம் சுடுகிறது.
3.சிரிப்பு:
வேலை இழந்தவனின் வலியை அவனை விட வேறு யார் புரிந்துகொள்ள முடியும்? புரிந்துகொண்டும்தான் என்னவாகி விடப்போகிறது? அவனது காயங்களை ஆறுதல் வார்த்தைகள் மேலும் காயப்படுத்தவே செய்யும். வேலை இல்லாதவனின் ஓவ்வொரு செயலிலும் குற்றம் கண்டுபிடிப்பதே சிலரின் வேலையாக இருக்கும். இந்தக் கதை ஒரு வேலை இல்லாதவனை பற்றியது. நகரத்தின் ஒரு பூங்காவில் நுழைகின்ற அவனை ஒரு அந்நியன் சந்தித்து பேசுகிறான்.கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை கூறுகிறான். மறுநாள் இவனது வீட்டின் அருகிலேயே ஒரு அங்காடியில் வேலை கிடைத்துவிடுகிறது. அந்த அந்நியனுக்கு நன்றி சொல்ல அவனைத் தேடுகையில்தான் இவனுக்கு புலப்படுகிறது அவனைப் பற்றிய உண்மை. கணையாழியில் இந்தக் கதையை படித்திருக்கிறேன். அப்போதே என்னுள் சலசலப்பை ஏற்படுத்திய கதை.
நகரப் பூங்கா பற்றிய விவரிப்புகள் முகத்தில் அறைகிறது.
****
மற்ற சிறுகதைகளும் வெவ்வேறு தளங்களை பின்புலமாக கொண்டு எழுதப்பட்டவை என்பதால் வாசிப்பில் சலிப்பேற்படுத்தவில்லை.
நம் முன் நடக்கும் விஷயங்களை, நாம் சந்திக்கும் மனிதர்களை,மனித முகமூடியில் திரியும் விலங்குகளை,அவலத்தை கண்டு குமறி இயலாமையால் மெளனிக்கும் மனங்களை பற்றிய பதிவுகளாகவே விஜய் மகேந்திரனின் தொகுப்பை இனம் காண்கிறேன். அட்டைப்பட புகைப்படம் மிகப்பொருத்தமாக உருவாக்கி இருக்கிறார்கள். பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.
விஜய மகேந்திரனுக்கும்.
நூலின் பெயர்: நகரத்திற்கு வெளியே
பகுப்பு: சிறுகதைகள்
ஆசிரியர்: விஜய் மகேந்திரன்
பக்கம் : 78
விலை: ரூ.50
பதிப்பகம் : உயிர்மை
Posted by நிலாரசிகன் at 11:29 PM
Labels: சிறுகதை, நூல் விமர்சனம்
Thursday, December 24, 2009
Thursday, December 17, 2009
அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி!
அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி!
பாரதி மணி
ஆதெள கீர்த்தனாரம்ப காலத்திலிருந்தே, -- அரசியல்வாதிகள், மேடைப்பேச்சாளர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும் ‘கல் தோன்றி மண் தோன்றாக்காலத்திலிருந்து’ என்ற தேய்ந்து துரும்பாய்ப்போன பிரயோகத்தை தவிர்த்து -- மாமியாருக்கும் மருமகளுக்குமிடையே இருக்கும் உறவுமுறைகளைப் பற்றி ஆயிரக்கணக்கில் ஜோக்குகளும், சிறுகதைகளும், சீரியல்களும் வந்துவிட்டன. ஆனால் மாமனார்-மருமகன் உறவுமுறைகளை இன்னும் கொச்சைப்படுத்தாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்! இந்தக்கட்டுரையில் என் மாமனார் க.நா.சு.வைப்பற்றிய சில நினைவுகளைப் பதிவு செய்கிறேன்.
தில்லியில் என் திருமணத்திற்குப்பிறகு தனியாக வீடு பார்க்க முனைந்த என் மாமனார் கநாசுவிடம், ‘எனக்கு இப்போ அப்பா இல்லை. என்னை மகனாக நினைத்து நீங்கள் என்னுடன் சேர்ந்து இருக்கக்கூடாதா? தனியாப்போகணுமா?’ என்று நான் கேட்ட கேள்வி அவரை மிகவும் பாதித்தது. ஒரு மாமாங்கத்துக்கும் மேலாக ஒரே வீட்டில் எந்த உரசலுமின்றி மாமனாரும் மருமகனும் சந்தோஷமாக இருந்தோம். இதற்கு முக்கிய காரணம் இருவருமே மற்றவருக்கான உரிய இடத்தை விட்டுக்கொடுத்து, எந்த அநாவசிய தலையீடுகளும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கத்தெரிந்ததால் தான். அவர் கடைசிக்காலத்தில் சென்னையில் வசித்தாலும், சாவதற்கு அவருக்குப்பிடித்தமான தில்லியில் என் வீட்டுக்கே வந்துவிட்டார். ஒரு மகனாக நான் தான் அவரை நிகம்போத் சுடுகாட்டில் எரியூட்டினேன்.
என் குழந்தைகளிடம் மிகவும் அன்பாக இருப்பார். வெளியூருக்குப்போனால், என் மனைவி ஜமுனாவுக்கு எழுதும் எல்லாக்கடிதங்களிலும், ‘குழந்தைகளை ‘க’டிக்காதே’ என்ற வாக்கியம் நிச்சயம் இடம்பெறும். ஆம், அவர் கையெழுத்தில் ‘அ’ பார்ப்பதற்கு ‘க’வைப்போலவே இருக்கும்! குழந்தைகளும் அவரிடம் ஒட்டுதலோடு பழகும். அவர்கள் இன்று இருக்கும் நல்ல நிலைமைக்கு அவர் ஒரு முக்கிய காரணம். சின்னவயதிலேயே ‘அமர் சித்ர கதா’, ‘ட்வின்கிள்’ போன்ற சிறுவர் பத்திரிகைகளுக்கு ஆண்டுச்சந்தா கட்டிவிடுவார். குழந்தைகளுக்கான புத்தகங்களை தேடித்தேடி வாங்கிவருவார். அவ்வப்போது British Council, American Library-யிலிருந்து குழந்தைகள் படிக்கும் புத்தகங்களைத்தேர்வு செய்து எடுத்துவந்து படிக்கச்செய்வார். அவருக்குப் படிக்க புத்தகங்கள் எதுவுமில்லையென்றால், என் குழந்தைகள் பாடபுத்தகங்களை கொண்டுபோய் படிக்க ஆரம்பித்துவிடுவார். He was a voracious reader! என் இரு குழந்தைகளுமே –ரேவதியும் அனுஷாவும் -- படிப்பதில் தாத்தாவைக் கொண்டிருக்கிறார்களென்பதில் எனக்குப்பெருமை! ரேவதி கல்யாணத்துக்குப் பிறகும் அவரது எல்லா புத்தகங்களையும் சரிவர பராமரித்துவந்தாள். சென்னை வந்தபிறகு கநாசுவின் எல்லா புத்தகங்களையும் ‘காலச்சுவடு’ கண்ணனுக்கு கொடுத்துவிட்டேன்.
அப்போது இந்தியாவில் வெளிநாட்டு Portable Typewriters கிடைப்பது அரிது. அதனால் நான் வெளிநாடு போகும்போது, ஆறு மாதத்துக்கொருமுறை, Brother, Olivetti, Remington என்று புது மாடலில் வந்திருக்கும் தட்டச்சுகளை வாங்கிவருவேன். (பழைய டைப்ரைட்டரை வாங்கின விலையை விட அதிக விலைக்கு விற்றுவிடுவேன்!) அதில் ஒரு குழந்தையைப்போல இரவுபகல் பாராது, இரு சுட்டுவிரல்களால் தட்டிக்கொண்டேயிருப்பார். அவர் அறையிலிருந்து ‘டப்..டப்’ என்று டைப் அடிக்கும் சப்தம் கேட்டவாறிருக்கும். அவர் எப்போது தூங்குவாரென்று அவருக்கே தெரியாது! கையில் செலவுக்குப் பணமில்லையென்றால், யாரிடமும் கேட்கமாட்டார். அடிக்கொருதரம் வாசலை எட்டிப் பார்த்து, ‘ராஜி! போஸ்ட்மேன் வந்தாச்சா?’ என்று கேட்டுக்கொண்டேயிருப்பார் ஏதாவது மணியார்டர் வராதாவென்று எதிர்பார்த்து. வெளியில் போவது சுத்தமாக நின்றுவிடும். பேப்பர்க்காரனிடம் குவிந்திருக்கும் பழைய பேப்பர் பத்திரிகைகளைப்போட்டு காசு வாங்குவார். அவர் நிலைகொள்ளாமல் தவிப்பது எனக்குப்புரியும். என் மனைவியிடம், ‘உங்கப்பாட்டே பணமில்லைனு நினைக்கிறேன். இதை நீயாகக் கொடுத்ததாக அவரிடம் கொடு’ என்று நூறோ இருநூறோ கொடுப்பேன். (அப்போது இது பெரிய தொகை). அன்று மாலையே பி்ரிட்டீஷ் கெளன்ஸில், யூ.என்.ஐ. கான்டீன் என்று கிளம்பிவிடுவார். தில்லியில் ஞானபீடம் ஜெயின், குஷ்வந்த் சிங், குல்தீப் நய்யர், வாத்ஸ்யாயன், ஸ்டேட்ஸ்மன் இரானி போன்றவர்கள் ஆதரவில் எல்லா ஆங்கிலப்பத்திரிகைகளுக்கும் எழுதிவந்தார். வசதியாகவே வாழ்ந்தார்.
ஒரு சமயம் குமுதம் பத்திரிகை மூத்த எழுத்தாளர்களை கெளரவிக்கும் வகையில், ‘வைரமோதிரக் கதைகள்’ என்று தொடராக வெளியிட்டது. மூத்த எழுத்தாளர்களிடம் ஒரு கதை பெற்று, அதற்கு சன்மானமாக ஒரு வைரமோதிரம் பரிசளித்தார்கள். தி. ஜானகிராமன், சாண்டில்யன் போன்றோர் எழுதினார்கள். குமுதம் பிரதிநிதி ஒருவர் வீட்டுக்கு வந்து, ‘எடிட்டர் உங்க விரலுக்கு அளவெடுத்துக்கிட்டு வரச்சொன்னார்; அடுத்தவாரம் வந்து கதை வாங்கிட்டுப்போறேன்’ என்று பணிவாகச்சொன்னார். கநாசு பதிலுக்கு ‘செட்டியார் உங்களுக்கு ஒழுங்காக சம்பளம் தருகிறாரா?’ என்று சீரியஸாகக் கேட்டதும், வந்தவர் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடியே போய்விட்டார். பிறகு கநாசுவின் மனைவி, ‘வந்து கேட்டவனுக்கு எதையாவது எழுதிக்கொடுத்து ஒரு வைரமோதிரம் வாங்கத் துப்பில்லே......நானோ பாப்பாவோ அதை போட்டிண்டிருப்போம்! வீட்டுக்கு வந்தவனை விரட்டிட்டேளே!’ என்று அரற்றியது தான் மிச்சம்!
கநாசு அடிக்கடி வெளியில் போய் ஹோட்டல்களில் சாப்பிட விரும்பியதற்கு என் மாமியார் தான் காரணமென்று என் மனைவி ஜமுனா கூறுவார். அதில் உண்மை நிறையவே உண்டு! ‘ராஜி Boiled Vegetables பண்ணினா அது ஏன் Spoiled Vegetables-ஆவே போகிறது?’ என்று கேலியாகக்கேட்பார். என் சமையல் அவருக்கு மிகவும் பிடிக்கும். என்னிடம் யாராவது ‘உனக்கு நடிக்கத் தெரியவில்லை......எழுதத்தெரியவில்லை’ யென்று சொன்னால் மகிழ்ச்சியுடன் ஆமோதிப்பேன். அது உண்மை! ஆனால் சமையலில் நளனுக்கு வாரிசு நான் தான்! என் தாயார் சிவகாமியின் கொடுப்பினை அது! வாரத்துக்கொரு முறை ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பமாக வீட்டில் என் குழந்தைகள் உட்பட எல்லோரும் என்னை சமைக்கச்சொல்லுவார்கள். அன்று வெளியில் போய்விட்டு கநாசு மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது, ‘ராஜி, இன்னிக்கு ஞானபீடம் ஜெயின் மத்தியானம் ஹோட்டலில் சாப்பிடக்கூப்பிட்டார். மொதல்லே சரீன்னேன். அப்புறம் தான் இன்னிக்கு மணி சமையல்னு ஞாபகம் வந்தது. ஒரு ஆட்டோ பிடிச்சு ஓடி வந்துட்டேன். இந்த சின்னவெங்காய சாம்பாரும், அவியலும், கூட்டும், துவரனும் ஓபராய் ஹோட்டல்லே கெடைக்குமோ?’ என்று சொல்லிக்கொண்டே என் சமையலை ருசித்துச்சாப்பிடுவதை பல முறை தள்ளி நின்று ரசித்திருக்கிறேன்! என் மசால் வடைகளை விரும்பிச்சாப்பிடுவார்.
தில்லிக்குளிர்காலத்தில் சாப்பாட்டுக்குப்பிறகு வேர்க்கடலை உடைத்து கொறிக்க ஆரம்பித்தால், மாலைக்குள் அரைக்கிலோவுக்கும் மேலாக முடித்திருப்பார். நடப்பதற்கு அஞ்சாதவர். பக்கத்திலிருக்கும் அம்பாரம் போல் குவித்த வேர்க்கடலை வண்டியை விட்டுவிட்டு, நேரு ப்ளேஸ் வரை நடந்துபோய் வேர்க்கடலை வாங்குவார். நடையில் ‘சிதம்பர நடராஜர்’ தான்! வயோதிகத்துக்கான எந்த உபாதைகளும் அவருக்கு இருந்ததில்லை. தலைவலி, ஜலதோஷமென்று வந்தால், ஜாம்பெக் தான் அவரது சர்வரோக நிவாரணி! அதைப்பற்றி வேடிக்கையாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்!
ஒரு தடவை கலைமகள் தீபாவளிமலரில் அவரது கதையொன்று வெளிவந்தது. என்னிடம் படிக்கக் கொடுத்தார். மூன்று பக்கக்கதையில் 42 தடவை ‘தான்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். அவன் தான்....அதைத்தான்... கீழே தான்....சொன்னதைத் தான்....இப்படி. அவைகளை ஒரு பென்சிலால் அடிக்கோடிட்டு ஜமுனாவிடம் காட்டினேன். பிறகு என் காது கேட்க, ‘ஆமா, இன்னொரு தடவை பார்த்திருக்கணும்... நிறையவே ’தான்’ இருக்கு.....சாம்பாருக்கு போடற அளவுக்கு!’ என்று சொன்னார்.
ஹிந்திக்கவிஞர் ஹரிவன்ஸ் ராய் பச்சன் எப்போதாவது தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அவர் தில்லிக்கு வரும்போது அவரது குல்மோஹர் என்க்லேவ் வீட்டில் சிலசமயம் விருந்துக்கு அழைப்பார். நான் காரில் கொண்டுபோய் விட்டுவிடுவேன். வரும்போது அவர்கள் காரில் வீடு திரும்புவார். ஒருதடவை அமிதாப் பச்சன் வீட்டிலிருந்த நேரம். கவிஞர் இவரிடம் ‘KaNaa, He is my son Amitabh ‘என்று அறிமுகப்படுத்தினார். கநாசு அமிதாப் பச்சனிடம், What are you doing? என்று கேட்டார். அதற்கு அமிதாப் பணிவாக ’ I am in the Film industry’ என்று பதிலளித்தார். அதில் திருப்தியடையாத கநாசு கேட்ட அடுத்த கேள்வி: Writing songs like your Father? அமிதாப் இன்னும் பணிவாக No, I am an Actor என்று பதிலளித்தார்.
வீட்டுக்கு வந்ததும், என் மனைவி ஜமுனா, ‘ஏம்ப்பா! உனக்கு அமிதாப் பச்சனைத் தெரியாதா? போனவாரம் தானே இந்தியா டுடேலே படிச்சே! இந்த தஞ்சாவூர் கிருத்திரமம் தானே வேண்டாங்கிறது!’ என்றதற்கு கநாசுவின் பதில் ஒரு நமுட்டுச்சிரிப்பு தான்! பத்திரிகைகளுக்கு பலவருடங்கள் பேட்டியே கொடுக்காத அமிதாப் பச்சன் முதல் தடவையாக பம்பாய் பிலிம்பேர் பத்திரிகைக்கு கொடுத்த நீண்ட நேர்காணலில் இது ஒரு கேள்வி: What was the most embarrassing moment in your life? அதற்கு அமிதாப் அளித்த பதில்: ’என் தந்தையைப்பார்க்க வந்திருந்த தென்னிந்திய எழுத்தாளர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) கேட்ட கேள்வி தான் என்னை திக்குமுக்காட வைத்தது. அதற்கு ஒரு வாரம் முன்னால் தான் ‘இந்தியா டுடே’ பத்திரிகை என் படத்தை அட்டையில் போட்டு ‘Hundred Crores in One Man Industry’ என்று பல கட்டுரைகளுடன் வெளிவந்த நேரம். ஆனந்த், தீவார் போன்ற வெற்றிப்படங்களுக்குப்பிறகு, என்னை இந்தியாவில் சிறுகுழந்தைக்கும் தெரியும் என்ற இறுமாப்புடன் இருந்த என்னைப்பார்த்து, ‘நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ என்று ஒரு கிழவர் அப்பிராணியாக கேட்ட கேள்வி என்னை உலுக்கிவிட்டது. விளையாட்டுக்காகக் கேட்கிறாரோவென்று அவரை உற்றுப்பார்த்தேன். இல்லை.....ரொம்ப சீரியஸான முகம். அவர் உண்மையாகவே நடித்திருந்தாரென்றால் அவர் என்னைவிட சிறந்த நடிகர்!’
அவரிடமிருந்த மற்றொரு நல்ல குணம் பிறருக்குத்தரும் மரியாதை. வயதில் மிகச்சிறியவர்களையும் பன்மையிலேயே அழைப்பது. இதை அவர் Political Correctness-க்காக செய்வதில்லை. தில்லியில் அவருக்கு சீடராக இருந்த எழுத்தாளர் ஏ.ஆர். ராஜாமணி இல்லாத நேரங்களிலும், ‘ராஜி, இன்னிக்கு ராஜாமணி வந்தாரா?’ என்று பன்மையில் தான் கேட்பார். இந்த விஷயத்தில் நான் அவருக்கு நேர் எதிர்! மனதுக்குப்பிடித்த புதிய நண்பர்களிடம் ஒரு வாரத்துக்குள் ‘வாடா....போடா’ லெவலுக்கு இறங்கிவிடுவேன். தெற்கே வந்தால் சென்னையில் சி.சு. செல்லப்பாவும், சிதம்பரத்தில் ’மெளனி’யும் என்னிடம் பேசும்போது வாக்கியத்துகொரு தடவை வாய்நிறைய ‘மாப்பிளே....,மாப்பிளே’ யென்று அன்போடு கூப்பிடுவார்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் என் சொந்த மாமனார் என்னை இதுவரை ஒருதடவை கூட ‘மாப்பிளே’ என்று அழைத்ததில்லை. அதில் எனக்கு உண்மையிலேயே வருத்தம் தான்!
----oooo0000oooo-----
அமுதசுரபி அக்டோபர் 2009 தீபாவளி மலரில் வெளிவந்தது
bharatimani90@gmail.com
ஷோபாசக்தி
தடிதடியான நாவல்களின் பெருக்கத்தைப் பற்றி லஷ்மி மணிவண்ணன் டிசம்பர் மாத அம்ருதாவில் எழுதியுள்ளார். "காண்டாமிருகம்","அபாயம்"(க்ரியா வெளியிட்டவை) போன்ற சிறு நூல்கள் செய்த இலக்கிய மாற்றங்களைக் கூட இப்பெரிய நூல்கள் செய்வதில்லை என்று எழுதியிருக்கிறார்.பெரிய நாவல்களைப் படைப்பது இன்று இலக்கிய மோஸ்தர் ஆகிவிட்டது. இந்நூல்களில் பாதியை தாண்டுவதற்குள் நமக்கு மூச்சு வாங்கிவிடுகிறது. இவ்வாறு பெரிய நூல்களில் நான் மலைத்து வாசிப்பதையே நிறுத்தியிருந்த சமயம் அது. அப்போது வாசிக்க கிடைத்த புத்தகம்தான் ஷோபாசக்தியின் "ம்". அவர் ஆணா,பெண்ணா என்பது கூட அப்போது தெரியாது. வாசிக்க ஆரம்பித்தவுடன் தெரிந்துவிட்டது இவரது எழுத்து சர்வதேச தரம் வாய்ந்தது என்று. ஒரே மூச்சில் ஒரே இரவில் படித்து முடிக்கப்பட்ட 150 பக்க புத்தகம் "ம்". அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்நாவல் பற்றிய காட்சிப்படிமங்களே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் "வெலிகட சிறை உடைப்பு" பற்றி அவர் எழுதியுள்ள இடங்கள் எந்தப் பேரிலக்கியத்துக்கும் ஒப்பானது. அவரை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விசாரித்தேன்.
அவர் ப்ரான்சில் வசித்துவருகிறார் எப்போதாவதுதான் இந்தியா வருவார் என்றும் கூறினார்கள். அவருக்கு ஒரு கடிதம் மின்னஞ்சல் செய்தேன். எப்பதிலும் இல்லை. பிறகு அவரின் நூல்களான "கொரில்லா","தேசத்துரோகி" போன்றவற்றைப் படித்தேன். "தேசத்துரோகி" சிறுகதைத் தொகுப்பில் "சூச்சுமம்" என்றொரு கதை உள்ளது. அவரது அபூர்வமான பகடிக்கு அக்கதையை சான்றாக கூறலாம். அவரைச் சந்தித்து ஒருநாள் பேச வேண்டும் என்று ஆவல் கூடிக்கொண்டே போனது.
அவருடைய நேர்காணல்களை அவ்வப்போது சிற்றிதழ்களில் படிப்பதுண்டு. போனமாதம் அம்ருதாவில் வந்த நேர்காணல் வரைக்கும் படித்துவிட்டேன். அவரது மேற்சொன்ன மூன்று நூல்களும் தீவிர இலக்கிய வாசகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றவை.
அதன்பிறகு "வேலைக்காரிகளின் புத்தகம்" என்ற அவரது கட்டுரைத் தொகுப்பு வெளிவந்தது,அதுவும் 150 பக்கம்தான். அதில் பல செறிவுள்ள கட்டுரைகள் இருந்தபோதும் "மதுக்குரல் மன்னன்" என்ற இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவை பற்றிய கட்டுரை,சிறந்த சிறுகதைக்கு ஒப்பானது. இலங்கையில் எண்பதுகளில் இருந்த இளைஞர்களின் மனநிலையின் சாட்சியாக இருந்து இக்கட்டுரையை எழுதியுள்ளார் ஷோபா சக்தி.
அதேபோல இலங்கை திரைப்பட இயக்குனர் பிரச்சன விதானகே பற்றிய கட்டுரையும் முக்கியமானது. பிரச்சன விதானேகவுக்கு "செவ்வகம்" சிற்றிதழ் மூலம் சிறப்பிதழ் தயாரித்த எனது நண்பர் விஸ்வாமித்திரன் பெயரையும் கட்டுரையின் அடியில் குறிப்பிட்டிருந்தார்.
சமகால இலக்கியங்களையும்,திரைப்படங்களையும் பிரான்ஸில் இருந்தபடியே நுட்பமாக கவனித்து வருபவர் ஷோபாசக்தி என்ற எண்ணம் எனக்கு வலுப்பட்டது. நானும்,விஸ்வாமித்திரனும் சந்திக்கும் போது அவரைப் பற்றி விவாதிப்போம். ஆனால் திடீரென ஒரு நாள் எதிர்பாராதவாறு சென்னையில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதை சொல்கிறேன்..
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு சென்னையில் அப்போது நடந்துகொண்டிருந்தது. அதில்தான் ஷோபா சக்தியின் நூல்களை பதிப்பித்து வருபவரான நீலகண்டனை சந்தித்தேன். அவர் கடை போட்டிருந்தார். “அநிச்சி” மற்றும் “இன்மை” போன்ற சிற்றிதழ்களை வாங்கிக்கொண்டேன். நான் கேட்ட சில புத்தகங்கள் இப்போது இல்லை உங்களுக்கு விரைவில் தருகிறேன் என்று கூறினார். பிறகு அவரை போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு ஒருமுறை வாருங்கள் என்று அழைத்தேன்.அப்புறம் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. “கருப்புப்பிரதிகள்” நீலகண்டன் குறித்து இவ்விடத்தில் சொல்ல வேண்டும். கடும் பொருளாதார நெரிக்கடிகளின் நடுவேயும்,தேர்ந்தெடுத்த புத்தகங்களை உரிய நேர்த்தியுடனும் தரத்துடனும் பதிப்பிப்பவர். அதோடு நின்று விடாமல் இலக்கியக்கூட்டங்கள் பலவற்றில் அவரே சுமந்து கொண்டு போய் விற்று வருவார். கடுமையான உழைப்பாளி. இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஷோபாசக்தியின் சிறுகதைத் தொகுப்பான “எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு” கருப்புப் பிரதிகள் வெளியீடாக வருவதை அறிந்து நீலகண்டனை தொடர்பு கொண்டேன். புத்தகம் தயாரானவுடன் பிரதி தருவதாகக் கூறினார். சிலநாட்களுக்குப் பிறகு மதியம் 12 மணியளவில் எனக்கு போன் செய்து தி.நகர் வருகிறேன் என்றார். பிறகு என் வீட்டில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். “எம்.ஜி.ஆர் கொலைவழக்கு” சிறுகதைத் தொகுப்பையும்,அழகிய பெரியவனின் கட்டுரைத்தொகுப்பான “மீள்கோணம்” புத்தகத்தையும் கொடுத்தார்.
ஷோபாசக்தி பற்றி அவரிடம் விசாரித்தேஎன். அடுத்த வாரம் சென்னைக்கு வருகிறார் என்றும் வரும்போது உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன் என்றார். அதன் பிறகு நீலகண்டனைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இது அவரின் இயல்பு. இந்த இடைவெளியில் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து இரண்டு நாட்களில் முடித்தும் விட்டேன். ஷோபாசக்தியின் எழுத்தின் வசீகரம் இத்தொகுப்பை படித்ததும் கூடியதே தவிர குறையவில்லை. “வெள்ளிக்கிழமை” என்றொரு கதை இதில் உள்ளது. பாரிஸின் மெத்ரோ ரயிலில் இறங்கி பிச்சையெடுக்கும் ஈழத்துக்கிழவரைப் பற்றிய இக்கதையை அபாரமான மொழிவீச்சில் எழுதி இருக்கிறார். கதை அவலச்சுவையை கொண்டிருந்தாலும் அங்கதம் நிறைந்துள்ள இக்கதையின் முடிவுப் பகுதி கண்ணீரை வரவழைத்து விட்டது.
அதேபோல எம்.ஜி.ஆர் கொலைவழக்கு என்ற கதையும் எழுபது,எண்பதுகளில் ஈழத்து இளைஞர்களின் வாழ்க்கை மாற்றங்களையும்,போராளிகளாக மாறி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதையும் எம்.ஜி.ஆரை படிமமாக்கி எழுதி இருக்கிறார். இந்தக் கதையிலும் முடிவுப்பகுதி பலமடங்கு வீச்சுடையதாக இருக்கிறது.
அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது “ஆக்குமம்” என்ற கதை.பிரான்சில் அகதி கார்டு கிடைக்காமல் அல்லல்படும் ஈழத்தமிழனின் நிலையை அங்கதத்துடன் சொல்வதாகும். போராளில் குழுக்களில் இருந்துள்ளேன்,எனது உயிருக்கு உத்திரவாதமில்லை என்றேல்லாம் சொல்லி அகதி கார்டு விண்ணப்பிக்கிறான்.மனோரஞ்சன் என்ற கதாபாத்திரம். பிரான்ஸ் நீதிமன்றம் அவனுக்கு அகதி கார்டு தர மறுத்துவிடுகிறது. கடைசியாக நம் மாஸ்டர் என்பவரின் உதவியோடு விண்ணப்ப கடித்தத்தை எழுதுகிறான். இந்த முறை நீதிமன்றத்தில் அவனுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து அகதி கார்டு கிடைத்துவிடுகிறது. அவன் கூறியுள்ள காரணம் மிலிட்டரிகாரன் எனது வீட்டு நாயை சுட்டுக்கொன்று விட்டு என்னையும் ஒருநாள் இதுபோல சுடுவேன் என்று சொல்லிச் சென்றான் என்பது. வெளிநாட்டவர் பிரான்சுகுக்கு தரும் மரியாதை அகதிகளுக்கு தருவதை விட அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் இக்கதையில் ஷோபாசக்தி.
அவருடைய கதைகளின் வடிவமும்,கதாபாத்திர வார்ப்பும் துல்லியமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக எந்த வார்த்தைகளும் கதையில் சேர்ப்பதில்லை.செய் நேர்த்தி மிகுந்த கலைஞர்.
“கொரில்லா” நாவலை “Random House” பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகம் ஒரு தமிழ்நாவலை மொழிபெயர்ப்பது இதுவே முதல்முறை. மேலை நாடுகளில் புகழ் பெற்ற பெருமை வாய்ந்த பதிப்பகம் இது. அவருடைய முக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில் மேலும் வெளியாகி உள்ளன.
வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள நியூபுக் லேண்டிற்கு வாரம் ஒருமுறை போவது எனது வழக்கம். அவ்வாறு ஒருநாள் மதியம் மருத்துவமனையில் வேலையை முடித்துவிட்டு அங்கு சென்றேன். கருப்புப் பிரதிகள் நீலகண்டன் புத்தககடையின் முகப்பில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சில வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தேன். ஷோபாசக்தியைப் பற்றி வழக்கம்போல பேச ஆரம்பிக்க,”அதோ இருக்கிறார் ஷோபா சக்தி” என்று அவர் கையை எதிர்புறமாக காண்பிக்க “எங்கே” என்று ஆவலுடன் நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். நாங்கள் நின்றிருந்த ரேக்கிற்கு எதிர்ப்புறம் கீழே அமர்ந்து புத்தகம் தேடிக்கொண்டிருந்த ஒரு இளைஞர், சத்தம்கேட்டு என்னை நோக்கி ஓடி வர நான் அவரை நோக்கிப்போக எனது கையை இறுகப்பற்றிக் கொண்டார். நான் மதிக்கும் எழுத்தாளரான நண்பர் ஷோபாசக்தி.
வாழ்வில் நானோ அவரோ மறக்கமுடியாத தருணம் அது. ஏதோ பல ஆண்டுகள் பழக்கப்பட்டவர்கள் போல நாங்கள் பேச ஆரம்பித்தோம்.
எழுதுகிறீர்களா? Blog ஒண்ணு ஆரம்பிங்க” என்று சொன்னார். அதற்குப்பிறகுதான் இந்த ப்ளாக் ஆரம்பிக்கும் எண்ணமே எனக்கு ஏற்பட்டது. “பேஸ்புக்” என்ற நண்பர்கள் இணையதளத்துக்கும் அழைப்புக் கொடுத்து கூட்டிப் போனவரும் அவர்தான். புத்தககடைக்கு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றோம்.அங்கு கிட்டதட்ட அரைமணிநேரம் பேசினோம்.பிறகு அவருடன் நீலகண்டனும் சேர்ந்து கிளம்பிச் சென்றார்.
“உங்களை சந்திச்சதுல சந்தோஷம்,என் நம்பர் தேவைப்பட்டா நீலகண்டன்கிட்ட வாங்கிக்கங்க,நாம வாய்ப்பு இருந்தா பிரான்ஸ் போறதுக்குள்ள மறுபடியும் சந்திப்போம்” என்றபடியே விடைபெற்றார்.
பெரிய கலைஞர்கள் சிலரிடம் மட்டும் இந்த அன்பையும்,அரவணைப்பையும் கண்டிருக்கிறேன்.இலங்கை திரைப்பட இயக்குனர் பிரச்சன்ன விதானேகயை ஒருமுறை விஸ்வாமித்திரன் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவருடைய திரைப்படங்கள் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. அதன்பின் “இரமத்தியமா” “புரவந்த களுவரே” போன்ற படங்களை பார்த்துவிட்டேன். சரியாக ஒருவருடம் கழித்து பிரச்சன விதானகேயை ஒரு திரைப்படவிழாவில் பார்த்தபோது எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. அவ்வளவு பெரிய கலைஞரா இவ்வளவு எளிமையுடன் இருக்கிறார் என்று. ஆனால் அவரோ என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டவராக தோளில் கைபோட்டபடி பேச ஆரம்பித்தார். வாழ்வியல் அறமும் முடிவற்ற நேசமும் தோழமையும் உண்மை கலைஞர்களுக்கு மட்டுமே உரித்தானது. அத்தகையவர்கள் இருவரை என் வாழ்க்கையில் சந்தித்தது குறித்து மகிழ்ச்சியே.
ஷோபாசக்தியின் நூல்கள
1.கொரில்லா – நாவல் – அடையாளம் வெளியீடு
2.”ம்” – நாவல் – கருப்புப்பிரதிகள் வெளியீடு
3.எம்.ஜி.ஆர் கொலைவழக்கு – சிறுகதைகள் – கறுப்புப்பிரதிகள்
4.வேலைக்காரிகளின் புத்தகம் – கட்டுரைகள் – கறுப்புப்பிரதிகள்
5.தேசத்துரோகி – சிறுகதைகள் – அடையாளம்
5.Gorilla – Randam House Edition – Novel
6. இன்றெமக்கு வேண்டுவது சமாதானமே – பயணி வெளியீடு
7.ஷோபாசக்தி –தோழர் தியாகுவுடன் கலந்துரையாடல் – வடலி வெளியீடு(வெளிவரப்போகிற நூல்)
Wednesday, December 16, 2009
ஷோபாசக்தி
எழுதுகிறீர்களா? Blog ஒண்ணு ஆரம்பிங்க” என்று சொன்னார். அதற்குப்பிறகுதான் இந்த ப்ளாக் ஆரம்பிக்கும் எண்ணமே எனக்கு ஏற்பட்டது. “பேஸ்புக்” என்ற நண்பர்கள் இணையதளத்துக்கும் அழைப்புக் கொடுத்து கூட்டிப் போனவரும் அவர்தான். புத்தககடைக்கு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றோம்.அங்கு கிட்டதட்ட அரைமணிநேரம் பேசினோம்.பிறகு அவருடன் நீலகண்டனும் சேர்ந்து கிளம்பிச் சென்றார்.
“உங்களை சந்திச்சதுல சந்தோஷம்,என் நம்பர் தேவைப்பட்டா நீலகண்டன்கிட்ட வாங்கிக்கங்க,நாம வாய்ப்பு இருந்தா பிரான்ஸ் போறதுக்குள்ள மறுபடியும் சந்திப்போம்” என்றபடியே விடைபெற்றார்.
பெரிய கலைஞர்கள் சிலரிடம் மட்டும் இந்த அன்பையும்,அரவணைப்பையும் கண்டிருக்கிறேன்.இலங்கை திரைப்பட இயக்குனர் பிரச்சன்ன விதானேகயை ஒருமுறை விஸ்வாமித்திரன் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவருடைய திரைப்படங்கள் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. அதன்பின் “இரமத்தியமா” “புரவந்த களுவரே” போன்ற படங்களை பார்த்துவிட்டேன். சரியாக ஒருவருடம் கழித்து பிரச்சன விதானகேயை ஒரு திரைப்படவிழாவில் பார்த்தபோது எனக்கு பிரமிப்பு ஏற்பட்டது. அவ்வளவு பெரிய கலைஞரா இவ்வளவு எளிமையுடன் இருக்கிறார் என்று. ஆனால் அவரோ என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டவராக தோளில் கைபோட்டபடி பேச ஆரம்பித்தார். வாழ்வியல் அறமும் முடிவற்ற நேசமும் தோழமையும் உண்மை கலைஞர்களுக்கு மட்டுமே உரித்தானது. அத்தகையவர்கள் இருவரை என் வாழ்க்கையில் சந்தித்தது குறித்து மகிழ்ச்சியே.
ஷோபாசக்தியின் நூல்கள
1.கொரில்லா – நாவல் – அடையாளம் வெளியீடு
2.”ம்” – நாவல் – கருப்புப்பிரதிகள் வெளியீடு
3.எம்.ஜி.ஆர் கொலைவழக்கு – சிறுகதைகள் – கறுப்புப்பிரதிகள்
4.வேலைக்காரிகளின் புத்தகம் – கட்டுரைகள் – கறுப்புப்பிரதிகள்
5.தேசத்துரோகி – சிறுகதைகள் – அடையாளம்
5.Gorilla – Randam House Edition – Novel
6. இன்றெமக்கு வேண்டுவது சமாதானமே – பயணி வெளியீடு
7.ஷோபாசக்தி –தோழர் தியாகுவுடன் கலந்துரையாடல் – வடலி வெளியீடு(வெளிவரப்போகிற நூல்)
Sunday, December 13, 2009
இருள் விலகும் கதைகள்
இருள் விலகும் கதைகள்
-----------------------------------------
நூலி்ன் பெயர்: இருள் விலகும் கதைகள்
பகுப்பு: சிறுகதைகள்
புத்தகத்தின் விலை: ரூ.90
பதிப்பகம்: தோழமை
தொகுப்பாசிரியர்: விஜய் மகேந்திரன்
-----------------------------------------
நவீன சிறுகதைகளின் காலகட்டமான இக்காலத்தில் தமிழ்ச்சிறுகதைகளின் பங்கு மிக முக்கியமானது. வெவ்வேறு விதமான பரிசோதனை முயற்சிகள்,தனித்து நிற்கும் கதைசொல்லல்,கற்பனைவீச்சின் உச்சத்தில் நிற்கும் கதைகள் என பல சிறுகதைகள் தமிழில் வந்த வண்ணம் உள்ளன.
இன்றைய இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து தோழமை வெளியீடாக
வெளியிட்டிருக்கிறார் சிறுகதையாளர் விஜய் மஹேந்திரன்.
வா.மு.கோமு ,சுதேசமித்திரன்,ஷாராஜ்,கே.என்.செந்தில்,ஹரன் பிரசன்னா,எஸ்.செந்தில்குமார்,பாலைநிலவன்,லஷ்மி சரவணக்குமார்,சிவக்குமார் முத்தையா,விஜய் மகேந்திரன்,புகழ் மற்றும் என்.ஸ்ரீராம்
மொத்தம் 12 சிறுகதையாளர்களின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு கதைகளும் வெவ்வேறு முகம்கொண்டவையாக இருப்பது வாசகனுக்கு புதியதோர் அனுபவமாக இருக்கிறது. கதை சொல்லும் உத்திகளாலும்,கதைக்களத்தின் புதுமையாலும் அனைத்து கதைகளுமே ரசிக்கும்படி இருப்பது இத்தொகுப்பின் பலம்.இந்த தொகுப்பிற்காகவே எழுதப்பட்ட கதைகள் என்பதும் கூடுதல் பலம்.
இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள 12 கதைகளில் மூன்று கதைகளை பற்றிய குறிப்புகள் மட்டும் இங்கே கொடுத்திருக்கிறேன்.
செறவிகளின் வருகை:
சிவக்குமார் முத்தையா எழுதியிருக்கும் இந்தக்கதையின் களம் புதிது.செறவி எனும் பறவைகளால் ஒரு மலையடிவார கிராமம் அல்லல்படுகிறது.கூட்டமாக வரும் அப்பறவைகள் விளைந்திருக்கும் நெல்மணிகளை தின்று மொத்த வயலையும் அழித்துவிட்டு போகின்றன. அந்த பறவைகளிடமிருந்து தங்கள் வயலை பாதுக்காக்க போராடும் கிராம மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது.கதையின் நாயகன் கலியனின் வாழ்க்கையை
செறவிகள் எப்படி கலைத்துப்போடுகின்றன என்பதை கதையின் முடிவு அற்புதமாய் எடுத்துரைக்கிறது.செறவிகளின் வருகை குறித்த விவரணைகள் அருமை. இந்த தொகுப்பிலிருக்கும் மிகச்சிறந்த கதை இது.
நகரத்திற்கு வெளியே:
விஜய மகேந்திரன் கணையாழியில் தனது முதல் படைப்பிலேயே அதிக கவனம் பெற்றவர். நகரத்திற்கு வெளியே கதை இளம் யுவதி ஒருத்தியை பற்றியது. அவளது காதலனால் அவள் படும் தவிப்பை சொல்லியிருக்கிறார்.நகரத்தில் நடக்கும் அவலங்களை முகத்தில் அறைந்தாற் போல் விவரிக்கிறது ஒவ்வொரு வரியும்.காதல் என்கிற பெயரில் நடக்கும் விஷம செயல்களை நகர பெண்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதே இக்கதையின் மூலக்கருவாக உணரமுடிகிறது.
காலவாயனின் காடு:
திரைப்படத் துறையில் பணிபுரியும் எழுத்தாளர் புகழின் கதையிது. மற்ற கதைகளிலிருந்து இதனை வேறுபடுத்தி காட்டுவது இதன் மொழி. சொல்கதை என்றபோதும் இதன் நுட்பமான விவரிப்பு ஆச்சர்யமூட்டுகிறது.வட்டார வழக்கில் வாசகனும் சங்கமித்துவிடுகிறான். காலவாயன் என்கிற விவசாயியின் மனவோட்டமாக கதை நீள்கிறது.நல்லதொரு கதை.
இருள் விலகும் கதைகள் நூலின் அட்டைப்படத்தின் வசீகரிப்பில்தான் இந்நூலை வாங்கினேன். இவை போன்ற தொகுப்பு நூல்கள் பல வெளிவர வேண்டும்.பல சிறுகதையாளர்களின் கதையை ஒரே நூலில் வாசிப்பது புதுவித வாசிப்பனுபவத்தை தருகிறது.ஒவ்வொரு கதையும் வெவ்வேறு பின்புலத்தை கொண்டிருப்பதால் வாசிப்பில் சலிப்பேற்படுத்தவில்லை.தொகுப்பாசிரியர் விஜய மகேந்திரன் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவர்.
-நிலாரசிகன் Posted by நிலாரசிகன் at 11:56 PM
Labels: சிறுகதை, நூல் விமர்சனம்
Wednesday, December 9, 2009
என் எழுத்தாள நண்பர்கள் - பகுதி 2
ஷோபா சக்தி (தொடர்ச்சி)
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு சென்னையில் அப்போது நடந்துகொண்டிருந்தது. அதில்தான் ஷோபா சக்தியின் நூல்களை பதிப்பித்து வருபவரான நீலகண்டனை சந்தித்தேன். அவர் கடை போட்டிருந்தார். “அநிச்சி” மற்றும் “இன்மை” போன்ற சிற்றிதழ்களை வாங்கிக்கொண்டேன். நான் கேட்ட சில புத்தகங்கள் இப்போது இல்லை உங்களுக்கு விரைவில் தருகிறேன் என்று கூறினார். பிறகு அவரை போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு ஒருமுறை வாருங்கள் என்று அழைத்தேன்.அப்புறம் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. “கருப்புப்பிரதிகள்” நீலகண்டன் குறித்து இவ்விடத்தில் சொல்ல வேண்டும். கடும் பொருளாதார நெரிக்கடிகளின் நடுவேயும்,தேர்ந்தெடுத்த புத்தகங்களை உரிய நேர்த்தியுடனும் தரத்துடனும் பதிப்பிப்பவர். அதோடு நின்று விடாமல் இலக்கியக்கூட்டங்கள் பலவற்றில் அவரே சுமந்து கொண்டு போய் விற்று வருவார். கடுமையான உழைப்பாளி. இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஷோபாசக்தியின் சிறுகதைத் தொகுப்பான “எம்.ஜி.ஆர்.கொலை வழக்கு” கருப்புப் பிரதிகள் வெளியீடாக வருவதை அறிந்து நீலகண்டனை தொடர்பு கொண்டேன். புத்தகம் தயாரானவுடன் பிரதி தருவதாகக் கூறினார். சிலநாட்களுக்குப் பிறகு மதியம் 12 மணியளவில் எனக்கு போன் செய்து தி.நகர் வருகிறேன் என்றார். பிறகு என் வீட்டில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். “எம்.ஜி.ஆர் கொலைவழக்கு” சிறுகதைத் தொகுப்பையும்,அழகிய பெரியவனின் கட்டுரைத்தொகுப்பான “மீள்கோணம்” புத்தகத்தையும் கொடுத்தார்.
ஷோபாசக்தி பற்றி அவரிடம் விசாரித்தேஎன். அடுத்த வாரம் சென்னைக்கு வருகிறார் என்றும் வரும்போது உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன் என்றார். அதன் பிறகு நீலகண்டனைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இது அவரின் இயல்பு. இந்த இடைவெளியில் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து இரண்டு நாட்களில் முடித்தும் விட்டேன். ஷோபாசக்தியின் எழுத்தின் வசீகரம் இத்தொகுப்பை படித்ததும் கூடியதே தவிர குறையவில்லை. “வெள்ளிக்கிழமை” என்றொரு கதை இதில் உள்ளது. பாரிஸின் மெத்ரோ ரயிலில் இறங்கி பிச்சையெடுக்கும் ஈழத்துக்கிழவரைப் பற்றிய இக்கதையை அபாரமான மொழிவீச்சில் எழுதி இருக்கிறார். கதை அவலச்சுவையை கொண்டிருந்தாலும் அங்கதம் நிறைந்துள்ள இக்கதையின் முடிவுப் பகுதி கண்ணீரை வரவழைத்து விட்டது.
அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானது “ஆக்குமம்” என்ற கதை.பிரான்சில் அகதி கார்டு கிடைக்காமல் அல்லல்படும் ஈழத்தமிழனின் நிலையை அங்கதத்துடன் சொல்வதாகும். போராளில் குழுக்களில் இருந்துள்ளேன்,எனது உயிருக்கு உத்திரவாதமில்லை என்றேல்லாம் சொல்லி அகதி கார்டு விண்ணப்பிக்கிறான்.மனோரஞ்சன் என்ற கதாபாத்திரம். பிரான்ஸ் நீதிமன்றம் அவனுக்கு அகதி கார்டு தர மறுத்துவிடுகிறது. கடைசியாக நம் மாஸ்டர் என்பவரின் உதவியோடு விண்ணப்ப கடித்தத்தை எழுதுகிறான். இந்த முறை நீதிமன்றத்தில் அவனுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து அகதி கார்டு கிடைத்துவிடுகிறது. அவன் கூறியுள்ள காரணம் மிலிட்டரிகாரன் எனது வீட்டு நாயை சுட்டுக்கொன்று விட்டு என்னையும் ஒருநாள் இதுபோல சுடுவேன் என்று சொல்லிச் சென்றான் என்பது. வெளிநாட்டவர் பிரான்சுகுக்கு தரும் மரியாதை அகதிகளுக்கு தருவதை விட அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் இக்கதையில் ஷோபாசக்தி.
“கொரில்லா” நாவலை “Random House” பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகம் ஒரு தமிழ்நாவலை மொழிபெயர்ப்பது இதுவே முதல்முறை. மேலை நாடுகளில் புகழ் பெற்ற பெருமை வாய்ந்த பதிப்பகம் இது. அவருடைய முக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில் மேலும் வெளியாகி உள்ளன.
வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள நியூபுக் லேண்டிற்கு வாரம் ஒருமுறை போவது எனது வழக்கம். அவ்வாறு ஒருநாள் மதியம் மருத்துவமனையில் வேலையை முடித்துவிட்டு அங்கு சென்றேன். கருப்புப் பிரதிகள் நீலகண்டன் புத்தககடையின் முகப்பில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சில வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தேன். ஷோபாசக்தியைப் பற்றி வழக்கம்போல பேச ஆரம்பிக்க,”அதோ இருக்கிறார் ஷோபா சக்தி” என்று அவர் கையை எதிர்புறமாக காண்பிக்க “எங்கே” என்று ஆவலுடன் நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். நாங்கள் நின்றிருந்த ரேக்கிற்கு எதிர்ப்புறம் கீழே அமர்ந்து புத்தகம் தேடிக்கொண்டிருந்த ஒரு இளைஞர், சத்தம்கேட்டு என்னை நோக்கி ஓடி வர நான் அவரை நோக்கிப்போக எனது கையை இறுகப்பற்றிக் கொண்டார். நான் மதிக்கும் எழுத்தாளரான நண்பர் ஷோபாசக்தி.