Wednesday, December 9, 2009

என் எழுத்தாள நண்பர்கள் - பகுதி 2

ஷோபா சக்தி (தொடர்ச்சி)


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு சென்னையில் அப்போது நடந்துகொண்டிருந்தது. அதில்தான் ஷோபா சக்தியின் நூல்களை பதிப்பித்து வருபவரான நீலகண்டனை சந்தித்தேன். அவர் கடை போட்டிருந்தார். “அநிச்சிமற்றும்இன்மைபோன்ற சிற்றிதழ்களை வாங்கிக்கொண்டேன். நான் கேட்ட சில புத்தகங்கள் இப்போது இல்லை உங்களுக்கு விரைவில் தருகிறேன் என்று கூறினார். பிறகு அவரை போனில் தொடர்பு கொண்டு வீட்டிற்கு ஒருமுறை வாருங்கள் என்று அழைத்தேன்.அப்புறம் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. “கருப்புப்பிரதிகள்நீலகண்டன் குறித்து இவ்விடத்தில் சொல்ல வேண்டும். கடும் பொருளாதார நெரிக்கடிகளின் நடுவேயும்,தேர்ந்தெடுத்த புத்தகங்களை உரிய நேர்த்தியுடனும் தரத்துடனும் பதிப்பிப்பவர். அதோடு நின்று விடாமல் இலக்கியக்கூட்டங்கள் பலவற்றில் அவரே சுமந்து கொண்டு போய் விற்று வருவார். கடுமையான உழைப்பாளி. இது நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஷோபாசக்தியின் சிறுகதைத் தொகுப்பானஎம்.ஜி.ஆர்.கொலை வழக்குகருப்புப் பிரதிகள் வெளியீடாக வருவதை அறிந்து நீலகண்டனை தொடர்பு கொண்டேன். புத்தகம் தயாரானவுடன் பிரதி தருவதாகக் கூறினார். சிலநாட்களுக்குப் பிறகு மதியம் 12 மணியளவில் எனக்கு போன் செய்து தி.நகர் வருகிறேன் என்றார். பிறகு என் வீட்டில் நாங்கள் இருவரும் சந்தித்தோம். “எம்.ஜி.ஆர் கொலைவழக்குசிறுகதைத் தொகுப்பையும்,அழகிய பெரியவனின் கட்டுரைத்தொகுப்பானமீள்கோணம்புத்தகத்தையும் கொடுத்தார்.

ஷோபாசக்தி பற்றி அவரிடம் விசாரித்தேஎன். அடுத்த வாரம் சென்னைக்கு வருகிறார் என்றும் வரும்போது உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன் என்றார். அதன் பிறகு நீலகண்டனைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இது அவரின் இயல்பு. இந்த இடைவெளியில் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்து இரண்டு நாட்களில் முடித்தும் விட்டேன். ஷோபாசக்தியின் எழுத்தின் வசீகரம் இத்தொகுப்பை படித்ததும் கூடியதே தவிர குறையவில்லை. “வெள்ளிக்கிழமைஎன்றொரு கதை இதில் உள்ளது. பாரிஸின் மெத்ரோ ரயிலில் இறங்கி பிச்சையெடுக்கும் ஈழத்துக்கிழவரைப் பற்றிய இக்கதையை அபாரமான மொழிவீச்சில் எழுதி இருக்கிறார். கதை அவலச்சுவையை கொண்டிருந்தாலும் அங்கதம் நிறைந்துள்ள இக்கதையின் முடிவுப் பகுதி கண்ணீரை வரவழைத்து விட்டது.

அதேபோல எம்.ஜி.ஆர் கொலைவழக்கு என்ற கதையும் எழுபது,எண்பதுகளில் ஈழத்து இளைஞர்களின் வாழ்க்கை மாற்றங்களையும்,போராளிகளாக மாறி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வதையும் எம்.ஜி.ஆரை படிமமாக்கி எழுதி இருக்கிறார். இந்தக் கதையிலும் முடிவுப்பகுதி பலமடங்கு வீச்சுடையதாக இருக்கிறது.

அவர் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானதுஆக்குமம்என்ற கதை.பிரான்சில் அகதி கார்டு கிடைக்காமல் அல்லல்படும் ஈழத்தமிழனின் நிலையை அங்கதத்துடன் சொல்வதாகும். போராளில் குழுக்களில் இருந்துள்ளேன்,எனது உயிருக்கு உத்திரவாதமில்லை என்றேல்லாம் சொல்லி அகதி கார்டு விண்ணப்பிக்கிறான்.மனோரஞ்சன் என்ற கதாபாத்திரம். பிரான்ஸ் நீதிமன்றம் அவனுக்கு அகதி கார்டு தர மறுத்துவிடுகிறது. கடைசியாக நம் மாஸ்டர் என்பவரின் உதவியோடு விண்ணப்ப கடித்தத்தை எழுதுகிறான். இந்த முறை நீதிமன்றத்தில் அவனுக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்து அகதி கார்டு கிடைத்துவிடுகிறது. அவன் கூறியுள்ள காரணம் மிலிட்டரிகாரன் எனது வீட்டு நாயை சுட்டுக்கொன்று விட்டு என்னையும் ஒருநாள் இதுபோல சுடுவேன் என்று சொல்லிச் சென்றான் என்பது. வெளிநாட்டவர் பிரான்சுகுக்கு தரும் மரியாதை அகதிகளுக்கு தருவதை விட அதிகம் என்பதை சொல்லாமல் சொல்லிச் செல்கிறார் இக்கதையில் ஷோபாசக்தி.

அவருடைய கதைகளின் வடிவமும்,கதாபாத்திர வார்ப்பும் துல்லியமாக இருக்கும். தேவைக்கு அதிகமாக எந்த வார்த்தைகளும் கதையில் சேர்ப்பதில்லை.செய் நேர்த்தி மிகுந்த கலைஞர்.

கொரில்லாநாவலை “Random House” பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதிப்பகம் ஒரு தமிழ்நாவலை மொழிபெயர்ப்பது இதுவே முதல்முறை. மேலை நாடுகளில் புகழ் பெற்ற பெருமை வாய்ந்த பதிப்பகம் இது. அவருடைய முக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில் மேலும் வெளியாகி உள்ளன.

வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள நியூபுக் லேண்டிற்கு வாரம் ஒருமுறை போவது எனது வழக்கம். அவ்வாறு ஒருநாள் மதியம் மருத்துவமனையில் வேலையை முடித்துவிட்டு அங்கு சென்றேன். கருப்புப் பிரதிகள் நீலகண்டன் புத்தககடையின் முகப்பில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சில வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தேன். ஷோபாசக்தியைப் பற்றி வழக்கம்போல பேச ஆரம்பிக்க,”அதோ இருக்கிறார் ஷோபா சக்திஎன்று அவர் கையை எதிர்புறமாக காண்பிக்கஎங்கேஎன்று ஆவலுடன் நான் சுற்றுமுற்றும் பார்த்தேன். நாங்கள் நின்றிருந்த ரேக்கிற்கு எதிர்ப்புறம் கீழே அமர்ந்து புத்தகம் தேடிக்கொண்டிருந்த ஒரு இளைஞர், சத்தம்கேட்டு என்னை நோக்கி ஓடி வர நான் அவரை நோக்கிப்போக எனது கையை இறுகப்பற்றிக் கொண்டார். நான் மதிக்கும் எழுத்தாளரான நண்பர் ஷோபாசக்தி.

(தொடரும்)

3 comments:

  1. ரொம்ப சுவராஸ்யமா சொல்லியிருக்கீங்க :-)

    ReplyDelete
  2. முதல் முறையாக உங்கள் பதிவினை வாசிக்கிறேன். மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete