Friday, December 25, 2009

நகரத்திற்கு வெளியே – நூல் விமர்சனம் -நிலா ரசிகன்

கடந்த சில ஆண்டுகளாக கவிதைகளே இலக்கிய இதழ்களில் கோலோச்சி வந்தன. எங்கு பார்த்தாலும் கவிதை என்கிற நிலை இருந்து வந்தது.இந்த நிலை கடந்த இரு ஆண்டுகளில் மாறி இருப்பதாகவே தோன்றுகிறது. புதியதாக இலக்கிய உலகில் தடம்பதித்த சிற்றிதழ்கள்/இடைநிலை இதழ்கள் சிறுகதைக்கு அதிக முக்கியத்துவம் தரத்துவங்கின. இது பல சிறுகதை எழுத்தாளர்களுக்கு தளமாக அமைந்து பல புதிய படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன. விளிம்பு நிலை மனிதர்களை,சமுதாய அவலத்தை,அக உணர்வுப்போராட்டங்களை,உள்மன பரிதவிப்புகளை என வெவ்வேறு கருக்களை மையமாகக் கொண்டு சிறுகதைகள் வெளியாகிய வண்ணம் இருப்பது வாசகர்களுக்கு நல்லதொரு படையலாக அமைந்திருக்கிறது.

இவ்வகையில், இன்று உயிர்மை வெளியீடாக விஜய் மகேந்திரனின் "நகரத்திற்கு வெளியே" சிறுகதை நூல் வெளியாகி இருக்கிறது.
பத்து சிறுகதைகளை உள்ளடக்கியது இத்தொகுப்பு. ஒரு மணி நேரத்திற்குள் இந்நூலை வாசித்துவிட முடிவது இந்த இயந்திர அவசர வாழ்வில் ஒரு வசதி. விஜய் மகேந்திரனின் கதைகளில் என்னை அதிகம் கவர்ந்தவை திருகலற்ற மொழிநடையும்,நுணுக்கமான விவரணைகளும்,தன்னை சுற்றிய அனுபவங்களை புனைவாக மாற்றியிருக்கும் லாவகமும்.

இத்தொகுப்பில் என்னைக் கவர்ந்த மூன்று கதைகளை பற்றி பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

1.அடைபடும் காற்று:

இருவருக்கு இடையேயான கடித பரிமாற்றத்தை கதையாக்கி இருக்கிறார்.சென்னையின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றான உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன் உணவு விடுதி மூடப்பட்டதை மையமாக கொண்டு நகர்கிறது கதை. இலக்கிய ஆர்வலர்கள் பலரை கண்ட உணவகம் அது. இப்போது மூடப்பட்டு புதர்கள் படர்ந்து கேட்பாரற்று கிடக்கிறது. விரைவில் அந்த உணவகம் இருந்த இடத்தில் ரசாயன தொழிற்சாலை அமைய இருப்பதாக ஒரு செய்தியை இக்கதையின் மூலம் தெரிவிக்கிறார் ஆசிரியர். இந்தக் கதையின் ஒவ்வொரு வரியை வாசிக்கும்போதும் ஒரு வித ஏக்கமும் இனம் புரியாத வலியும் மனதை சூழ்ந்து கொள்வது இக்கதையின் வெற்றி.

2.சனிப்பெயர்ச்சி:

ஆசிரியரின் பிற கதைகளிலிருந்து சற்றே மாறுபட்ட கதையாகவே இந்தக்கதையை உணர்ந்துகொள்ள முடிகிறது. கதையின் ஆரம்ப வரிகளில் ஆரம்பமாகும் அங்கதம் கதையெங்கும் விரவிக்கிடக்கிறது.புரிதலற்ற நண்பனை பற்றிய வலியும்,நேரம் சரியில்லாத காரணத்தால் தவறேதும் செய்யாவிட்டாலும் சனியன் முதுகில் ஏறிக்கொண்டு நடனமிடுவதையும் அழகாக எழுதியிருக்கிறார்.மேலோட்டமாக பார்த்தால் சாதாரணமாக தோன்றும் இக்கதையின் பின்னாலிருக்கும் நிதர்சனம் நெஞ்சம் சுடுகிறது.

3.சிரிப்பு:

வேலை இழந்தவனின் வலியை அவனை விட வேறு யார் புரிந்துகொள்ள முடியும்? புரிந்துகொண்டும்தான் என்னவாகி விடப்போகிறது? அவனது காயங்களை ஆறுதல் வார்த்தைகள் மேலும் காயப்படுத்தவே செய்யும். வேலை இல்லாதவனின் ஓவ்வொரு செயலிலும் குற்றம் கண்டுபிடிப்பதே சிலரின் வேலையாக இருக்கும். இந்தக் கதை ஒரு வேலை இல்லாதவனை பற்றியது. நகரத்தின் ஒரு பூங்காவில் நுழைகின்ற அவனை ஒரு அந்நியன் சந்தித்து பேசுகிறான்.கண்டிப்பாக வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை கூறுகிறான். மறுநாள் இவனது வீட்டின் அருகிலேயே ஒரு அங்காடியில் வேலை கிடைத்துவிடுகிறது. அந்த அந்நியனுக்கு நன்றி சொல்ல அவனைத் தேடுகையில்தான் இவனுக்கு புலப்படுகிறது அவனைப் பற்றிய உண்மை. கணையாழியில் இந்தக் கதையை படித்திருக்கிறேன். அப்போதே என்னுள் சலசலப்பை ஏற்படுத்திய கதை.
நகரப் பூங்கா பற்றிய விவரிப்புகள் முகத்தில் அறைகிறது.

****
மற்ற சிறுகதைகளும் வெவ்வேறு தளங்களை பின்புலமாக கொண்டு எழுதப்பட்டவை என்பதால் வாசிப்பில் சலிப்பேற்படுத்தவில்லை.
நம் முன் நடக்கும் விஷயங்களை, நாம் சந்திக்கும் மனிதர்களை,மனித முகமூடியில் திரியும் விலங்குகளை,அவலத்தை கண்டு குமறி இயலாமையால் மெளனிக்கும் மனங்களை பற்றிய பதிவுகளாகவே விஜய் மகேந்திரனின் தொகுப்பை இனம் காண்கிறேன். அட்டைப்பட புகைப்படம் மிகப்பொருத்தமாக உருவாக்கி இருக்கிறார்கள். பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்.
விஜய மகேந்திரனுக்கும்.

நூலின் பெயர்: நகரத்திற்கு வெளியே
பகுப்பு: சிறுகதைகள்
ஆசிரியர்: விஜய் மகேந்திரன்
பக்கம் : 78
விலை: ரூ.50
பதிப்பகம் : உயிர்மை
Posted by நிலாரசிகன் at 11:29 PM
Labels: சிறுக‌தை, நூல் விமர்சனம்

No comments:

Post a Comment