Thursday, December 17, 2009

அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி!



அமிதாப் பச்சனிடம் க.நா.சு. கேட்ட கேள்வி!

பாரதி மணி





ஆதெள கீர்த்தனாரம்ப காலத்திலிருந்தே, -- அரசியல்வாதிகள், மேடைப்பேச்சாளர்கள் வாயிலிருந்து அடிக்கடி வரும் ‘கல் தோன்றி மண் தோன்றாக்காலத்திலிருந்து’ என்ற தேய்ந்து துரும்பாய்ப்போன பிரயோகத்தை தவிர்த்து -- மாமியாருக்கும் மருமகளுக்குமிடையே இருக்கும் உறவுமுறைகளைப் பற்றி ஆயிரக்கணக்கில் ஜோக்குகளும், சிறுகதைகளும், சீரியல்களும் வந்துவிட்டன. ஆனால் மாமனார்-மருமகன் உறவுமுறைகளை இன்னும் கொச்சைப்படுத்தாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்! இந்தக்கட்டுரையில் என் மாமனார் க.நா.சு.வைப்பற்றிய சில நினைவுகளைப் பதிவு செய்கிறேன்.

தில்லியில் என் திருமணத்திற்குப்பிறகு தனியாக வீடு பார்க்க முனைந்த என் மாமனார் கநாசுவிடம், ‘எனக்கு இப்போ அப்பா இல்லை. என்னை மகனாக நினைத்து நீங்கள் என்னுடன் சேர்ந்து இருக்கக்கூடாதா? தனியாப்போகணுமா?’ என்று நான் கேட்ட கேள்வி அவரை மிகவும் பாதித்தது. ஒரு மாமாங்கத்துக்கும் மேலாக ஒரே வீட்டில் எந்த உரசலுமின்றி மாமனாரும் மருமகனும் சந்தோஷமாக இருந்தோம். இதற்கு முக்கிய காரணம் இருவருமே மற்றவருக்கான உரிய இடத்தை விட்டுக்கொடுத்து, எந்த அநாவசிய தலையீடுகளும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கத்தெரிந்ததால் தான். அவர் கடைசிக்காலத்தில் சென்னையில் வசித்தாலும், சாவதற்கு அவருக்குப்பிடித்தமான தில்லியில் என் வீட்டுக்கே வந்துவிட்டார். ஒரு மகனாக நான் தான் அவரை நிகம்போத் சுடுகாட்டில் எரியூட்டினேன்.



என் குழந்தைகளிடம் மிகவும் அன்பாக இருப்பார். வெளியூருக்குப்போனால், என் மனைவி ஜமுனாவுக்கு எழுதும் எல்லாக்கடிதங்களிலும், ‘குழந்தைகளை ‘க’டிக்காதே’ என்ற வாக்கியம் நிச்சயம் இடம்பெறும். ஆம், அவர் கையெழுத்தில் ‘அ’ பார்ப்பதற்கு ‘க’வைப்போலவே இருக்கும்! குழந்தைகளும் அவரிடம் ஒட்டுதலோடு பழகும். அவர்கள் இன்று இருக்கும் நல்ல நிலைமைக்கு அவர் ஒரு முக்கிய காரணம். சின்னவயதிலேயே ‘அமர் சித்ர கதா’, ‘ட்வின்கிள்’ போன்ற சிறுவர் பத்திரிகைகளுக்கு ஆண்டுச்சந்தா கட்டிவிடுவார். குழந்தைகளுக்கான புத்தகங்களை தேடித்தேடி வாங்கிவருவார். அவ்வப்போது British Council, American Library-யிலிருந்து குழந்தைகள் படிக்கும் புத்தகங்களைத்தேர்வு செய்து எடுத்துவந்து படிக்கச்செய்வார். அவருக்குப் படிக்க புத்தகங்கள் எதுவுமில்லையென்றால், என் குழந்தைகள் பாடபுத்தகங்களை கொண்டுபோய் படிக்க ஆரம்பித்துவிடுவார். He was a voracious reader! என் இரு குழந்தைகளுமே –ரேவதியும் அனுஷாவும் -- படிப்பதில் தாத்தாவைக் கொண்டிருக்கிறார்களென்பதில் எனக்குப்பெருமை! ரேவதி கல்யாணத்துக்குப் பிறகும் அவரது எல்லா புத்தகங்களையும் சரிவர பராமரித்துவந்தாள். சென்னை வந்தபிறகு கநாசுவின் எல்லா புத்தகங்களையும் ‘காலச்சுவடு’ கண்ணனுக்கு கொடுத்துவிட்டேன்.

அப்போது இந்தியாவில் வெளிநாட்டு Portable Typewriters கிடைப்பது அரிது. அதனால் நான் வெளிநாடு போகும்போது, ஆறு மாதத்துக்கொருமுறை, Brother, Olivetti, Remington என்று புது மாடலில் வந்திருக்கும் தட்டச்சுகளை வாங்கிவருவேன். (பழைய டைப்ரைட்டரை வாங்கின விலையை விட அதிக விலைக்கு விற்றுவிடுவேன்!) அதில் ஒரு குழந்தையைப்போல இரவுபகல் பாராது, இரு சுட்டுவிரல்களால் தட்டிக்கொண்டேயிருப்பார். அவர் அறையிலிருந்து ‘டப்..டப்’ என்று டைப் அடிக்கும் சப்தம் கேட்டவாறிருக்கும். அவர் எப்போது தூங்குவாரென்று அவருக்கே தெரியாது! கையில் செலவுக்குப் பணமில்லையென்றால், யாரிடமும் கேட்கமாட்டார். அடிக்கொருதரம் வாசலை எட்டிப் பார்த்து, ‘ராஜி! போஸ்ட்மேன் வந்தாச்சா?’ என்று கேட்டுக்கொண்டேயிருப்பார் ஏதாவது மணியார்டர் வராதாவென்று எதிர்பார்த்து. வெளியில் போவது சுத்தமாக நின்றுவிடும். பேப்பர்க்காரனிடம் குவிந்திருக்கும் பழைய பேப்பர் பத்திரிகைகளைப்போட்டு காசு வாங்குவார். அவர் நிலைகொள்ளாமல் தவிப்பது எனக்குப்புரியும். என் மனைவியிடம், ‘உங்கப்பாட்டே பணமில்லைனு நினைக்கிறேன். இதை நீயாகக் கொடுத்ததாக அவரிடம் கொடு’ என்று நூறோ இருநூறோ கொடுப்பேன். (அப்போது இது பெரிய தொகை). அன்று மாலையே பி்ரிட்டீஷ் கெளன்ஸில், யூ.என்.ஐ. கான்டீன் என்று கிளம்பிவிடுவார். தில்லியில் ஞானபீடம் ஜெயின், குஷ்வந்த் சிங், குல்தீப் நய்யர், வாத்ஸ்யாயன், ஸ்டேட்ஸ்மன் இரானி போன்றவர்கள் ஆதரவில் எல்லா ஆங்கிலப்பத்திரிகைகளுக்கும் எழுதிவந்தார். வசதியாகவே வாழ்ந்தார்.

ஒரு சமயம் குமுதம் பத்திரிகை மூத்த எழுத்தாளர்களை கெளரவிக்கும் வகையில், ‘வைரமோதிரக் கதைகள்’ என்று தொடராக வெளியிட்டது. மூத்த எழுத்தாளர்களிடம் ஒரு கதை பெற்று, அதற்கு சன்மானமாக ஒரு வைரமோதிரம் பரிசளித்தார்கள். தி. ஜானகிராமன், சாண்டில்யன் போன்றோர் எழுதினார்கள். குமுதம் பிரதிநிதி ஒருவர் வீட்டுக்கு வந்து, ‘எடிட்டர் உங்க விரலுக்கு அளவெடுத்துக்கிட்டு வரச்சொன்னார்; அடுத்தவாரம் வந்து கதை வாங்கிட்டுப்போறேன்’ என்று பணிவாகச்சொன்னார். கநாசு பதிலுக்கு ‘செட்டியார் உங்களுக்கு ஒழுங்காக சம்பளம் தருகிறாரா?’ என்று சீரியஸாகக் கேட்டதும், வந்தவர் துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடியே போய்விட்டார். பிறகு கநாசுவின் மனைவி, ‘வந்து கேட்டவனுக்கு எதையாவது எழுதிக்கொடுத்து ஒரு வைரமோதிரம் வாங்கத் துப்பில்லே......நானோ பாப்பாவோ அதை போட்டிண்டிருப்போம்! வீட்டுக்கு வந்தவனை விரட்டிட்டேளே!’ என்று அரற்றியது தான் மிச்சம்!

கநாசு அடிக்கடி வெளியில் போய் ஹோட்டல்களில் சாப்பிட விரும்பியதற்கு என் மாமியார் தான் காரணமென்று என் மனைவி ஜமுனா கூறுவார். அதில் உண்மை நிறையவே உண்டு! ‘ராஜி Boiled Vegetables பண்ணினா அது ஏன் Spoiled Vegetables-ஆவே போகிறது?’ என்று கேலியாகக்கேட்பார். என் சமையல் அவருக்கு மிகவும் பிடிக்கும். என்னிடம் யாராவது ‘உனக்கு நடிக்கத் தெரியவில்லை......எழுதத்தெரியவில்லை’ யென்று சொன்னால் மகிழ்ச்சியுடன் ஆமோதிப்பேன். அது உண்மை! ஆனால் சமையலில் நளனுக்கு வாரிசு நான் தான்! என் தாயார் சிவகாமியின் கொடுப்பினை அது! வாரத்துக்கொரு முறை ஞாயிற்றுக்கிழமை நேயர் விருப்பமாக வீட்டில் என் குழந்தைகள் உட்பட எல்லோரும் என்னை சமைக்கச்சொல்லுவார்கள். அன்று வெளியில் போய்விட்டு கநாசு மதியம் வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது, ‘ராஜி, இன்னிக்கு ஞானபீடம் ஜெயின் மத்தியானம் ஹோட்டலில் சாப்பிடக்கூப்பிட்டார். மொதல்லே சரீன்னேன். அப்புறம் தான் இன்னிக்கு மணி சமையல்னு ஞாபகம் வந்தது. ஒரு ஆட்டோ பிடிச்சு ஓடி வந்துட்டேன். இந்த சின்னவெங்காய சாம்பாரும், அவியலும், கூட்டும், துவரனும் ஓபராய் ஹோட்டல்லே கெடைக்குமோ?’ என்று சொல்லிக்கொண்டே என் சமையலை ருசித்துச்சாப்பிடுவதை பல முறை தள்ளி நின்று ரசித்திருக்கிறேன்! என் மசால் வடைகளை விரும்பிச்சாப்பிடுவார்.

தில்லிக்குளிர்காலத்தில் சாப்பாட்டுக்குப்பிறகு வேர்க்கடலை உடைத்து கொறிக்க ஆரம்பித்தால், மாலைக்குள் அரைக்கிலோவுக்கும் மேலாக முடித்திருப்பார். நடப்பதற்கு அஞ்சாதவர். பக்கத்திலிருக்கும் அம்பாரம் போல் குவித்த வேர்க்கடலை வண்டியை விட்டுவிட்டு, நேரு ப்ளேஸ் வரை நடந்துபோய் வேர்க்கடலை வாங்குவார். நடையில் ‘சிதம்பர நடராஜர்’ தான்! வயோதிகத்துக்கான எந்த உபாதைகளும் அவருக்கு இருந்ததில்லை. தலைவலி, ஜலதோஷமென்று வந்தால், ஜாம்பெக் தான் அவரது சர்வரோக நிவாரணி! அதைப்பற்றி வேடிக்கையாக ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்!

ஒரு தடவை கலைமகள் தீபாவளிமலரில் அவரது கதையொன்று வெளிவந்தது. என்னிடம் படிக்கக் கொடுத்தார். மூன்று பக்கக்கதையில் 42 தடவை ‘தான்’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார். அவன் தான்....அதைத்தான்... கீழே தான்....சொன்னதைத் தான்....இப்படி. அவைகளை ஒரு பென்சிலால் அடிக்கோடிட்டு ஜமுனாவிடம் காட்டினேன். பிறகு என் காது கேட்க, ‘ஆமா, இன்னொரு தடவை பார்த்திருக்கணும்... நிறையவே ’தான்’ இருக்கு.....சாம்பாருக்கு போடற அளவுக்கு!’ என்று சொன்னார்.

ஹிந்திக்கவிஞர் ஹரிவன்ஸ் ராய் பச்சன் எப்போதாவது தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அவர் தில்லிக்கு வரும்போது அவரது குல்மோஹர் என்க்லேவ் வீட்டில் சிலசமயம் விருந்துக்கு அழைப்பார். நான் காரில் கொண்டுபோய் விட்டுவிடுவேன். வரும்போது அவர்கள் காரில் வீடு திரும்புவார். ஒருதடவை அமிதாப் பச்சன் வீட்டிலிருந்த நேரம். கவிஞர் இவரிடம் ‘KaNaa, He is my son Amitabh ‘என்று அறிமுகப்படுத்தினார். கநாசு அமிதாப் பச்சனிடம், What are you doing? என்று கேட்டார். அதற்கு அமிதாப் பணிவாக ’ I am in the Film industry’ என்று பதிலளித்தார். அதில் திருப்தியடையாத கநாசு கேட்ட அடுத்த கேள்வி: Writing songs like your Father? அமிதாப் இன்னும் பணிவாக No, I am an Actor என்று பதிலளித்தார்.

வீட்டுக்கு வந்ததும், என் மனைவி ஜமுனா, ‘ஏம்ப்பா! உனக்கு அமிதாப் பச்சனைத் தெரியாதா? போனவாரம் தானே இந்தியா டுடேலே படிச்சே! இந்த தஞ்சாவூர் கிருத்திரமம் தானே வேண்டாங்கிறது!’ என்றதற்கு கநாசுவின் பதில் ஒரு நமுட்டுச்சிரிப்பு தான்! பத்திரிகைகளுக்கு பலவருடங்கள் பேட்டியே கொடுக்காத அமிதாப் பச்சன் முதல் தடவையாக பம்பாய் பிலிம்பேர் பத்திரிகைக்கு கொடுத்த நீண்ட நேர்காணலில் இது ஒரு கேள்வி: What was the most embarrassing moment in your life? அதற்கு அமிதாப் அளித்த பதில்: ’என் தந்தையைப்பார்க்க வந்திருந்த தென்னிந்திய எழுத்தாளர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) கேட்ட கேள்வி தான் என்னை திக்குமுக்காட வைத்தது. அதற்கு ஒரு வாரம் முன்னால் தான் ‘இந்தியா டுடே’ பத்திரிகை என் படத்தை அட்டையில் போட்டு ‘Hundred Crores in One Man Industry’ என்று பல கட்டுரைகளுடன் வெளிவந்த நேரம். ஆனந்த், தீவார் போன்ற வெற்றிப்படங்களுக்குப்பிறகு, என்னை இந்தியாவில் சிறுகுழந்தைக்கும் தெரியும் என்ற இறுமாப்புடன் இருந்த என்னைப்பார்த்து, ‘நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?’ என்று ஒரு கிழவர் அப்பிராணியாக கேட்ட கேள்வி என்னை உலுக்கிவிட்டது. விளையாட்டுக்காகக் கேட்கிறாரோவென்று அவரை உற்றுப்பார்த்தேன். இல்லை.....ரொம்ப சீரியஸான முகம். அவர் உண்மையாகவே நடித்திருந்தாரென்றால் அவர் என்னைவிட சிறந்த நடிகர்!’

அவரிடமிருந்த மற்றொரு நல்ல குணம் பிறருக்குத்தரும் மரியாதை. வயதில் மிகச்சிறியவர்களையும் பன்மையிலேயே அழைப்பது. இதை அவர் Political Correctness-க்காக செய்வதில்லை. தில்லியில் அவருக்கு சீடராக இருந்த எழுத்தாளர் ஏ.ஆர். ராஜாமணி இல்லாத நேரங்களிலும், ‘ராஜி, இன்னிக்கு ராஜாமணி வந்தாரா?’ என்று பன்மையில் தான் கேட்பார். இந்த விஷயத்தில் நான் அவருக்கு நேர் எதிர்! மனதுக்குப்பிடித்த புதிய நண்பர்களிடம் ஒரு வாரத்துக்குள் ‘வாடா....போடா’ லெவலுக்கு இறங்கிவிடுவேன். தெற்கே வந்தால் சென்னையில் சி.சு. செல்லப்பாவும், சிதம்பரத்தில் ’மெளனி’யும் என்னிடம் பேசும்போது வாக்கியத்துகொரு தடவை வாய்நிறைய ‘மாப்பிளே....,மாப்பிளே’ யென்று அன்போடு கூப்பிடுவார்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கும். ஆனால் என் சொந்த மாமனார் என்னை இதுவரை ஒருதடவை கூட ‘மாப்பிளே’ என்று அழைத்ததில்லை. அதில் எனக்கு உண்மையிலேயே வருத்தம் தான்!

----oooo0000oooo-----

அமுதசுரபி அக்டோபர் 2009 தீபாவளி மலரில் வெளிவந்தது



bharatimani90@gmail.com

4 comments:

  1. நன்றி, விஜய். இந்தக்கட்டுரை முன்னரே இட்லிவடை, கூட்டாஞ்சோறு வலையங்களில் வந்திருக்கிறது. படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம்.

    நன்றி,
    பாரதி மணி

    ReplyDelete
  2. க.நா.சு வாக இருந்ததால்தான் இப்படி.இப்போது உள்ளவர்கள் சிலர் போயிருந்தால் அமிதாப்பிடம் அடுத்த படத்திற்கு பேசி வசனம் எழுத அட்வான்ஸ் வாங்கி இருப்பார்கள்

    ReplyDelete
  3. மிகவும் அருமையாக இருக்கிறது. க.நா.சு பற்றி அறிந்து கொள்வதோடு அதை உங்கள் பார்வையில் அழகாய் வடித்திருப்பது...!

    ReplyDelete
  4. திரு. விஜயமகேந்திரன் சார், இப்போதுதான் முதல் முறையாக தங்கள் எழுத்துக்களை வாசிக்கிறேன். Blog -ல் வாசிப்பது எனக்கு சற்றே அயர்ச்சி. என்றாலும் தங்கள் எழுத்துக்கள் ஜனரஞ்சக நடை!

    ReplyDelete