Monday, May 5, 2014

முகநூல் குறிப்புகளில் விரியும் பன்முகப்பார்வை

சமூகத்தளங்கள் ஆன  பேஸ்புக் ,ட்விட்டர்  போன்றவை மக்களிடையே பெரும்பாலும் இளைஞர்கள் இடையே பிரபலமான பின்,தனது கருத்துக்களை ,எதிர்ப்புகளை பதிவு செய்ய இத்தகைய இணையதளங்களை பயன்படுத்துகிறார்கள் .தமிழ் இலக்கிய சூழலில் இலக்கிய ஆளுமைகள் .திரையுலக ஆளுமைகள் ,பத்திரிகையாளர்கள்  பலரும் தாங்கள் படித்த புத்தகங்கள் ,பார்த்த உலக  சினிமாக்கள் ,சமகால அரசியல் பற்றி தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக தங்கள் முகநூல் பக்கங்களில் எழுதுகின்றனர்.

இப்படி எழுதும் கருத்துக்களுக்கு எதிர்க்கருத்துக்கள் உள்ளவர்கள் அதையும் எழுதி விவாதிப்பதற்கான சூழலும் முகநூளில் இருக்கிறது.துரதிர்ஷ்டவசமாக சிலசமயம் இந்த விவாதங்கள் அத்துமீறி தனிப்பட்ட சண்டையாக மாறி விடும் அபாயமும்   இருக்கிறது.  இதை எல்லாம் மீறி தொடர்ந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் ,கட்டுரைகள் ,பத்திகள்  தீராத படைப்புச்சக்தியுடன் இயங்கும் பல ஆளுமைகள் முகநூளில் இயங்கிவருகிறார்கள் .

  இவ்வாறு தொடர்ந்து படைப்புத்திறனுடன் இயங்கிவரும் ஆளுமைகளில் ஒருவர்தான் ப்ரியாதம்பி .இவரது சில பத்திகளை முகநூலில் படித்தபோது யாரும் எழுதத்துணியாத சில விஷயங்களைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார் .நவீனப்பள்ளிகள் குழந்தைகளை பொதுபுத்தியில் வளர்த்தெடுக்க முயல்கின்றன என்பதில் தொடங்கி பெற்றோர்களும் குழந்தைகளுடன் சென்று பாடம் படிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் எனவும் அந்த பத்தியை எழுதியிருந்தார் .மாதவிடாய் பற்றிய ஆவணப்படம் ஒன்றின் பதிவில் பெண்களுக்கு  ஏற்படும்  சாதாரண இயற்கைப்பிரச்சினையை கூட வெளியே சொல்ல இச்சமூகம் தடைவிதித்திருக்கிறது .கடையில் சென்று நாப்கின் வாங்கக்கூட அவள் நாலைந்துமுறை யோசித்து சுற்றும் முற்றும் பார்க்கவேண்டி இருக்கிறது.அந்த நேரத்தில் பெண்கள் படும் அவஸ்தைகளை விவரித்து எழுதியிருந்தார் .அதற்கு எதிர்வினையில் சில நண்பர்கள்  
  இதைப்போல அவர் முகநூலில் எழுதும் குறிப்புகளை தொகுத்து புத்தகமாக கொண்டுவரலாமே என கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.அதற்கு ப்ரியாதம்பி ''இவை புத்தகமாக கொண்டுவரும் அளவுக்கு தரமுள்ளவையா த,தெரியவில்லை?எனக்  கேள்வி எழுப்பியிருந்தார்.இறுதியாக கயல்கவின் புக்ஸ் முகநூலில் ப்ரியாதம்பி எழுதியுள்ள முக்கியமான பத்திகளை தொகுத்து ''மின்னுவும் அம்மாவும் ''என்ற புத்தகத்தைக் கொண்டு வந்துள்ளார்கள் .இது பாராட்டிற்குரிய முயற்சி.

ப்ரியா தான் சந்தித்த ,கடந்து வந்த மனிதர்கள்,அன்றாடம் பெண்ணாக எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ,அவருக்கும் மகள் மின்னுவுக்கும் நடக்கும் உரையாடல்கள்,படித்த நல்ல புத்தகங்கள் ,பார்த்த நல்ல படங்கள்,சந்திக்கும் அபூர்வ மனிதர்கள் மீதான  நேசம் எல்லாவற்றையும் எவ்வித ஒளிவு மறைவும் இன்றி மெல்லிய அங்கதத்துடன் பதிவு செய்கிறார் .லேசான ரொமண்டிசம் இவர் எழுத்துக்களில் தென்பட்டாலும் அது இந்தப் பத்திகளை அழகாகத்தான் காட்டுகிறது.

சிறந்த மலையாள படங்களின் டிவிடிகள் வாங்க ஒருமுறை கடைக்குச் செல்கிறார்.மலையாளப்  படம் என்றதும் கடைக்காரர் கேலியாகச் சிரிக்கிறார்.பெண்கள் டிவிடிகள் சுகந்திரமாக வங்கக் கூடிய நிலைமை கூடவா இங்கில்லை என்கிறார்.மேலும் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து வாங்கி பில் போடும் போது ,''அவள் பறையும்  கதா ''என்ற படம் கண்ணுக்கு படுகிறது.அதையும் வாங்கிவிடுகிறார்..கடைக்காரர் ''இதுவும் வேணுமா மேடம் ''என்கிறார்.இருக்கட்டும் ஏதோ பெண்ணியப்படம் என வாங்கி வந்துவிடுகிறார்.வீட்டிற்கு   வந்து குடும்பத்துடன் பார்க்க அந்த படத்தை போடும் போது தான்  தெரிகிறது அது ''அந்த'' மாதிரியான படம் என்கிற விஷயம்.உடனே அதை நிறுத்திவிட்டு பதிவில் எழுதுகிறார்.,இந்த மாதிரியான மட்டரக படங்களில் என்ன கிலேசம் கிடைக்கிறது என்று பார்க்கிறார்களோ ''பாவம்  ஆண்கள் !!!அவ்வளவு காய்ந்துபோயா கிடக்கிறார்கள் என அங்கதத்துடன் வெளிப்படையாக சில விஷயங்களை முன்வைக்கும் எழுத்துக்களாக இவரது பத்தி எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன .

தான் சந்தித்த பெரிய பேருந்து விபத்து குறித்த பத்தி ,மிகவும் முக்கியமானதாக புத்தகத்தில் இருக்கிறது.தனியார் பேருந்து ஓட்டுனரின் தவறால் வண்டி கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகிறது.விபத்து காட்சிகளை நேரடியாக நாமே பார்ப்பது மாதிரி விவரித்து இருக்கிறார்.

ப்ரியாவின் பக்கத்து இருக்கைப்பெண் இறந்து  போகிறாள் .திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஒரு இளைஞனின் கை துண்டிக்கப்பட்டு கிடக்கிறது.ப்ரியாவுக்கு தலையில் அடிபட்டு ரத்தம் உறைந்துவிடுகிறது. நிறைய உயிரிழப்புகள் அந்த விபத்தில் ஏற்படுகிறது.விபத்தில்  இருந்து 
மீண்டு  எழவே  இரண்டு மாதம் பிடிக்கிறது.கை துண்டிக்கப்பட்ட இளைஞனின் கையை மீண்டும் பொருத்த முடிவதில்லை. ப்ரியா தலையில் 
ஏற்பட்ட அடியால் நுகர்வுத்திறனை இழக்கிறார் .அந்த  விபத்து ஒவ்வொருவரின் வாழ்க்கை யிலும் மறையாத தழும்புகளை ஏற்படுத்தி விட்டுப் போய் விடுகிறது.கையை இழந்த இளைஞனும் ,ப்ரியாவும் இணைந்து  நிறுவனத்தின் மீது வழக்குகளை தொடுக்கிறார்கள்.ஆனாலும் அவர்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை.பேருந்து நிறுவனத்தார் பணத்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடுகிறார்கள்.விபத்தால் கை போன இளைஞனின் குடும்பத்தாரின் நட்பு கிடைத்தது மட்டுமே விபத்தால் ஏற்பட்ட ஒரே நற்பலன் என்று எழுதியிருக்கிறார்.

சகமனிதர்கள் மீதான நேசம் தொனிக்கும் பத்திகள் இப்புத்தகத்தில் நிறைய இடங்களில் இருக்கிறது.முதல் காதல் அனுபவம் குறித்து எழுதியிருக்கும் ஒரு பத்தி மிகுந்த கவித்துவம் நிரம்பியதாக அமைந்திருக்கிறது.அவருக்கும் மகள் மின்னுவுக்கும் நடக்கும் உரையாடல்கள் ,அம்மா மகள் பேசிக்கொள்வது மாதிரி இல்லாமல் இரு நண்பர்களுக்கிடையே நடப்பது மாதிரி உள்ளது.இது பெற்றோர்கள் இடையே ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்த கூடிய பதிவுகளாக இருக்கிறது.

பெண்ணியம் பற்றி இவர் கூறியிருக்கும் கருத்துக்களும் சலசலப்பை உண்டுபண்ணக்கூடியதாக இருக்கிறது.உதரணமாக''பெண்களை விலக்கிய கூட்டங்களும் ,இயக்கங்களும் எவ்வளவு அபத்தமானதோ ,அதே அளவு அபத்தமானது ஆண்களை விலக்கி  வைத்து பெண்ணியம் பேசுவதும்''!என்று ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்.புத்தகம் முழுவதும்பெரிதும் சிறிதுமான பத்திகள் ஆகவும் ,குறிப்புகளாகவும் இருப்பதால் தடையின்றி வாசிக்க கூடியதாக  இருக்கிறது .மேலும் ப்ரியாவின் பத்திரிக்கையாளர்களுக்கு ரிய   'ரிப்போர்டிங்''நடை வாசிப்பு சுவாரஸ்யத்தை அதிகமாக்குகிறது.பின்னால்  புத்தகமாக வரப்போகிறது எனஅறியாமல் தான் விரும்பியதையெல்லாம் எழுதியிருப்பதால் சிலமுக்கிய விஷயங்களை  விரிவாக எழுதாமல் குறிப்புகளாக நிறுத்தியிருப்பது மட்டும் இப்புத்தகத்தில் குறையாகத் தெரிகிறது.மற்றபடி ப்ரியாவின் முகநூல் குறிப்புகள்  அடங்கிய இப்புத்தகம் பெண்கள் மட்டுமல்ல அனைவரும் வாசிக்க  வேண்டிய பன்முகப்பிரதியே ஆகும்.

மின்னுவும் அம்மாவும் -ப்ரியாதம்பி 
வெளியீடு கயல்கவின் புக்ஸ் 
விலை 120ரூ 


தீராநதி ஏப்ரல் 2014 இதழில் வந்த கட்டுரை 

Sunday, May 4, 2014

கடவுளும் மனநோயாளியும் ஒரே அடுக்ககத்தில் !

இந்நகரத்தில் மனநோயாளி கிளம்புறான் 
வெளுத்த உடைகள் துடைத்த சப்பாத்துகள் 
நேர்த்தியான கழுத்துப்பட்டை அணிந்து 
நகரத்தின் சாலைகளில் இறங்குகிறான் 

சிக்னலின் சிவப்பு தான்  
முதலாக காட்டிக்கொடுத்து நிறுத்துகிறது 
மனநோய் அவனுக்குள் கொப்பளிக்கிறது 
எரியும் பச்சை அவனை சிறிதே 
ஆசுவாசப்படுத்துகிறது !

மஞ்சள் வெயில் பீறிட்டு கிளம்பும் 
மதிய நேரத்தில் தன் கீழ்  பணியாளனின் 
முகத்தில் கோப்பால் எறிகிறான் 
கீழ் பணியாளன் என்னும் இன்னொரு 
மன நோயாளி கைகட்டி சிரித்த படியே 
கோப்புகளில் இருந்து சிதறிய காகிதங்களை 
கோப்புகளுக்கே திருப்புகிறான் 

மாலைநேரக் காற்று சகப்பெண் 
பணியாளியிடம் சமிஞ்சை 
செய்ய தூண்டுகிறது 
புறக்கணிக்கும் அவளிடம் இருந்து 
அந்த சனிக்கிழமை 
விடைபெறுகிறது 

மனநோயாளிக் கணவனின் 
தலையை தனது கைப்பள்ளத்தில் 
இருக்கும் எண்ணையை விட்டு 
உச்சிக்குளிர அரக்கத்  தேய்த்து 
இளவெந்நீர் குளியாட்டி ,
தலைநீவி மனநோயை 
மெல்ல உறங்கச் செய்கிறாள் 
அவனின் இல்லாள் 

அதே அடுக்ககத்தின் வாயிலில் 
வாயில் காப்போனிடம் 
கடவுள் உரையாடிக்கொண்டு இருக்கிறார் 
கையில் ஒரு பால் பாக்கெட் இருக்கிறது.

குழந்தை அழுகிறது என பால் 
வாங்கி வர இந்நகரத்தின் 
சாலைக்கு வந்தாராம் 
உயர்ந்து நிற்கும் இவ்வடுக்கு 
மாடி கட்டிடத்தில் தான் தனது வீடும் 
இருக்கிறது என 
காப்போனிடம் கூறுகிறார் 

மேலும் இவ்வடுக்கு மாடி 
கட்டப்படுவதற்கு முன்பே 
கிளம்பிச் சென்றுவிட்டாராம் 
பால் வாங்க ,
கடவுளின் கையில் 
பதினோரு மாதங்களுக்கு 
முன்தேதியிட்ட பால் பாக்கெட் !!!

(தீராநதி மே 2014 இதழில் வெளிவந்து இருக்கும்  கவிதை )

Thursday, March 20, 2014

நரனின் ''ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் ''

நரனின் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுப்பு சமீபத்தில் நான் வாசித்த தொகுப்புகளில் மிகவும் வித்தியாசமாக உள்ளது .இவரது கவிதைகள் கார்ப்பரேட்களின் ஆதிக்கததிற்க்கு எதிரான குரலை மிக வன்மையாக முன் வைக்கிறது . கார்ப்பரேட்களின் சூழ்ச்சியால் கையககப்படுத்தப்படும் நிலங்கள் ,கனிமங்கள், இயற்க்கை வளங்கள் இவற்றுக்கான எதிர் வினையை ஒவ்வொரு கவிதையும் எவ்வித பிரச்சார நெடியுமின்றி முன் நிறுத்துகின்றன .இவரது கவிதைகளுக்கான மொழி எவ்வித சிக்கலும்,சிடுக்குகளும் இல்லாமல் எளிய ,நேர்த்தியான ,உரைநடையின் மிக அருகில் பயணம் செய்வது இந்த தொகுப்பின் வெற்றி. இத்தகைய நல்ல தொகுப்பை நல்ல வடிவமைப்பில் செறிவான ஓவியங்களோடு கொம்பு வெளியீடாக கொண்டு வந்த நண்பர் ,வெயில் பாராட்டிற்கு உரியவர் .இந்ததொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு கவிதைகள் ....

1
கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை
அவளுக்கு
உள்நாட்டு போரின் போது
அரசின் ஆயுத தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென

2

இம்மலையை டெண்டர் எடுத்த குவாரிக்காரன் .
ஜெலட்டின் குச்சி ;கரி மருந்து ; அழுத்த்துவிசை
காதை மூடிக்கொள் .
பலத்த ஓசை பொடி பொடிந்து …………
மூனறாம் நூற்றாண்டு சமண படுக்கையது .
புடைப்பு சிற்பத்தின் கையில் கூம்பு தாமரையை
சுமந்து நிற்க்கும் ரூப சுந்தரி
கை தனியாய் ;மலர் தனியாய் ;மார்பு தனியாய் - யெல்லாம்
இந்நூற்றாண்டின் ஜெலட்டின் குண்டு வெடித்து .
குவாரி லாரிகளில் எற்றப்பட்டு
அவள் பிருஷ்டமும் ,மார்பும் சமதாளமாக்கப்பட்டு வழவழப்பாக்கப்படும் .
இந்நகரெங்கிலும் வீற்றிருக்கும் அரசு பூங்காக்களின்
கற்பெஞ்சுகளில்
ஜோடிஜோடியாய் வந்தமர்கின்றன. புடைத்த பிருஷ்டங்கள்.

Sunday, March 16, 2014

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014

நான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2013 ஆம் ஆண்டு ( ஜனவரி 2013 முதல் திசம்பர் 2013 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம்.
*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை
ரூ 10,000 வழங்கப்படும்.
*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.
*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 30-04-2014
*அனுப்ப வேண்டிய முகவரி


தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051


Thursday, March 13, 2014

அனிதாவின் ''கனவு கலையாத கடற்கன்னி''


அனிதாவின் ''கனவு கலையாத கடற்கன்னி'' கவிதை தொகுப்பு மீள்வாசிப்பு செய்தேன் இன்று.அனிதாவின் கவிதைகளில் முக்கிய விஷயமாக நான் கருதுவது நுட்பமான வாழ்வின் தருணங்களை எளிய அழகியலுடன் சொல்லி செல்கிறார்.ஒவ்வொரு கவிதைக்குள்ளும் குட்டி கதை ஒன்று ஒளிந்து கிடக்கிறது..எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் இரண்டு ......

தங்கத்தோடு

பத்து வருடம் முன்பிருந்த ஊருக்கு மீண்டும் சென்றேன்.
வருடக்கணக்கில் பயணித்துப் பழகிய
புறந‌கர் ரயிலில் அமர்ந்திருந்தேன்
இங்கே மஞ்சள் சுண்ணாம்படித்த கட்டிடம் இருக்குமென்றும்
இந்த ஆற்றைக் கடக்கையில் துர்வாடை வீசுமென்றும்
இந்த இடத்தில் தண்டவாளம் வளையுமென்றும்
இங்கே சிலுவைகள் நிறைந்த மயானம் இருக்குமென்றும்
நினைத்தபடி சென்று கொண்டிருந்தேன்.
அவ்வாறே எல்லாம் இருந்தது.

தங்கத் தோடு தொலைந்துவிட‌
வீடு போகப் பயந்து இருள் படரும் வரை
பித்துப்பிடித்தாற்போல முன்பு தேடிய அதே இடத்தில்
மீண்டும் ஒருமுறை தேடினேன்.
தொலைத்த இடத்திலேயே கிடந்தது தோடு.

அன்பின் விலைகள்

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்.

சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்துத் தயங்கி
அழாதீங்க என்றான்.

என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்


















Saturday, March 8, 2014

Tea Time

Tea Time
*********

Son adds
cubes of sugar
to the morning tea

A hot one, avec newspaper
Rusks for the sides
and a tv channel
for Dad

A flowery
little cup
for daughter

Mommy Sips off
this life
however it may be...


Tamil poem by Vijay mahindran
 English translation by Anitha jayakumar

Friday, March 7, 2014

தேநீர் வேளை

தேநீர் வேளை

காலையில் தேநீர் அருந்துகையில்
சீனி குறைவாய் இருக்கிறதென
இனிப்பை அள்ளிப் போட்டு
கரண்டியால் கலக்கிகொள்கிறான்
மகன்.

சூடாய் இருக்க வேண்டும்
செய்தித்தாள் வேண்டும்
கொஞ்சம் வர்க்கி ரொட்டிகளும்
தொலைக்காட்சியும்
அப்பாவுக்கு.

பூ வேலைப்பாடுடன் கூடிய
தேநீர்க் குவளை
மகளுக்கு.

எப்படி இருந்தாலும்
அருந்திக்கொள்வாள் அம்மா
இந்த வாழ்க்கையை!


விஜய் மகேந்திரன் (ஆனந்த விகடன் - 23/03/11 இதழில்)


நன்றி: ஆனந்த விகடன்