Wednesday, June 29, 2016

இருக்கும் போதே கொண்டாடப்பட வேண்டிய கிளாசிக் எழுத்தாளன்!

நண்பர் கிராபியன் ப்ளாக்கின் வெளிவந்திருக்கும் சிறுகதை தொகுப்பிற்கு நான் எழுதிய முன்னுரை


தமிழ் இலக்கிய உலகில் சிறுகதையாளனாக நுழைவது எளிதானது. ஆனால் வெற்றிப்பெற்று தனக்கான இடத்தை தக்கவைப்பது மிக கடினமான காரியம். வலுவான முன்னோடிகள் சிலம்பம் வீசிச்சென்ற இடம் இது. நாவல், கவிதை ,சுயபுராணப் பத்திகள் இவற்றையெல்லாம் வெளியிட எளிதாக பதிப்பாளர்கள் கிடைக்கலாம். சிறுகதை தொகுப்பு வீச்சுடன் வரவில்லையெனில் படைப்பாளி சொந்தச்செலவில் தான் வெளியிடவேண்டும். புதிய எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்புகளை பெரும்பாலான பதிப்பகங்கள் வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவது இல்லை. அதே நேரத்தில் மறைந்த எழுத்தாளர்களின் கதைகளை கிளாசிக் என மொத்தத் தொகுப்பாக்கி கெட்டி அட்டைப்பதிப்பில் 800, 1000 என விலை வைத்து நம் மீது வீசுகிறார்கள்.

சமீபத்தில் நான் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் ஒருவரின் மொத்த தொகுப்பைப் பார்த்தேன். இப்போது அவர் உயிருடன் இருந்தால் இந்த விலை கொடுத்து அவரே வாங்க மாட்டார். காலமெல்லாம் வறுமையில் கழித்து, புறக்கணிப்பில் வாழ்ந்தவர் அவர். தன்னுடைய கதைகள் முழுத்தொகுப்பாகி ஆங்கில புத்தகங்களின் தரத்தில் வந்துள்ளதை அவரால் பார்க்க இயலவில்லையே என வருத்தப்பட்டேன். ஒரு படைப்பாளி உயிருடன் இருக்கும் போது புறக்கணிக்கப்பட்டு இறந்த பின் எழுதப்படும் அஞ்சலிக்குறிப்புகள் மூலம் மட்டுமே குவியும் கவனம் கவலைக்குரியது.
மறைந்த பின் ஒருவரின் படைப்புக்களை திறனாய்வு செய்து கட்டுரைகள் எழுதுகிறவர்கள் அவர் உயிருடன் இருக்கும் போது ஏன் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள். உயிருடன் இருக்கும் போதே கவனப்படுத்தி கொண்டாடியிருந்தால் இன்னும் கொஞ்சநாட்கள் கூட அவர் உயிரோடு இருந்திருப்பாரோ எனக்கூட எனக்குத் தோன்றுவதுண்டு.

கிராபியன் ப்ளாக் தனது பூமியின் மரணம்...! இன்னும் 5 நிமிடங்களில்... தொகுப்போடு சிறுகதை உலகில் களமிறங்கியிருக்கிறார். இலக்கியம்,சினிமா தொடர்பான கூட்டங்களில் ப்ளாக் எனக்கு பரிச்சயம். சமூகம், இலக்கியம், சினிமா, ஊடகம் என பன்முகத்தளத்தில் இயங்கிவருபவர். நண்பர்களிடம் உண்மையாக அன்பு பாராட்டுபவர். நடிக்கத்தெரியாதவர். அவருடைய கதைகளில் முதல் கதையாக வாசித்தது 'கள்ள மௌனம்'. புஷ்கின் என்ற இயக்குனரின் சமரசமற்ற வாழ்க்கையை கூறுவதாக அமைத்துள்ளது. வணிக சமரசம் எதுவுமின்றி படம் எடுக்கும் புஷ்கின் சமூகத்தால் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார் என்பதை துல்லியமாக கூறுகிறது.குறைவான பக்கங்கள் உடைய இக்கதை பலமுறை என்னை படிக்கத்தூண்டியது. 'போஸ்டர்' என்ற கதை உதவி இயக்குநராகவே இருந்து எந்த அடையாளமும் கிடைக்காமல் இறக்கும் நபரின் கதை.சினிமா உலகம் பற்றிய வர்ணனைகள் மிகுந்த அர்த்த செறிவுடன் ப்ளாக்கிற்கு எழுத வருகிறது.அவர் விளையாடிய மைதானமல்லவா அது!

'கன்னியாட்டம் கதை' நகரத்தில் காதல் என்ற சொல் எவ்வாறு தீட்டுக்கழிந்து போயிருக்கிறது என்பதை அப்பட்டமாக சொல்கிறது. நகர ஓட்டத்தில் நல்ல வேலை, பதவி உயர்வு, குறைவில்லாத வருமானம் என எல்லாவற்றிலும் உயரும் சிபி சக்கன்,காதலில் மிக அற்பமாக தோற்றுப்போகிறான். தோற்கடிக்கும் அங்கயர்கன்னி பாத்திரத்தை நுட்பமாக படைத்துள்ளார் ப்ளாக். சம்பவங்களை கோர்த்துள்ள விதமும் பாராட்டுக்குரியது.
'மெய்யாலுமா' கதை செய்தித்தாளில் வேலைசெய்யும் எழுத்தாளனின் வாழ்க்கை சாகசங்களை விவரிக்கிறது. ஒரு எழுத்தாளனாக பெரும் வரவேற்பை அவன் சார்ந்து இருக்கும் செய்தித்தாளின் ஆசிரியரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இரவுநேரம் இருந்தால் தானே எழுதுவாய் என்று இரவுப்பணியாக கொடுத்து வறுக்கிறார். வேறுவழியின்றி பதவி விலகல் கொடுத்து விலகுகிறான். ஒரு எழுத்தாளன் பத்திரிக்கையில் வேலை செய்யும் போது வரும் பிரச்னைகளை மெல்லிய அங்கதத்துடன் எடுத்துரைக்கிறார் ப்ளாக்.

ப்ளாக்கின் கதைகளில் என்னை கவர்ந்த முக்கிய அம்சம் மெல்லிய நகைச்சுவை. அதுவும் பிளாக் காமெடி எனப்படும் அவல நகைச்சுவை கதைகளை ப்ளாக்கால் நன்கு எழுதமுடிகிறது.முதல் தொகுப்பில் இத்தனை கதைகள் நன்றாக வந்திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். சொற்களிலும், உரையாடல்களிலும் இன்னும் கூர்மை வரப்பெற்றால் ப்ளாக் நல்ல சிறுகதையாளர்கள் வரிசையில் உரிய இடத்தைப்பிடிப்பார்.சிறுகதைத தொகுப்புக்கள் குறைந்து வரும் வேளையில் கிராபியன் ப்ளாக்கின் வருகை வரவேற்கத்தக்கது.
என்று அன்புடன்
விஜய் மகேந்திரன்

No comments:

Post a Comment