Thursday, March 20, 2014

நரனின் ''ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் ''

நரனின் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுப்பு சமீபத்தில் நான் வாசித்த தொகுப்புகளில் மிகவும் வித்தியாசமாக உள்ளது .இவரது கவிதைகள் கார்ப்பரேட்களின் ஆதிக்கததிற்க்கு எதிரான குரலை மிக வன்மையாக முன் வைக்கிறது . கார்ப்பரேட்களின் சூழ்ச்சியால் கையககப்படுத்தப்படும் நிலங்கள் ,கனிமங்கள், இயற்க்கை வளங்கள் இவற்றுக்கான எதிர் வினையை ஒவ்வொரு கவிதையும் எவ்வித பிரச்சார நெடியுமின்றி முன் நிறுத்துகின்றன .இவரது கவிதைகளுக்கான மொழி எவ்வித சிக்கலும்,சிடுக்குகளும் இல்லாமல் எளிய ,நேர்த்தியான ,உரைநடையின் மிக அருகில் பயணம் செய்வது இந்த தொகுப்பின் வெற்றி. இத்தகைய நல்ல தொகுப்பை நல்ல வடிவமைப்பில் செறிவான ஓவியங்களோடு கொம்பு வெளியீடாக கொண்டு வந்த நண்பர் ,வெயில் பாராட்டிற்கு உரியவர் .இந்ததொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த இரண்டு கவிதைகள் ....

1
கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை
அவளுக்கு
உள்நாட்டு போரின் போது
அரசின் ஆயுத தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென

2

இம்மலையை டெண்டர் எடுத்த குவாரிக்காரன் .
ஜெலட்டின் குச்சி ;கரி மருந்து ; அழுத்த்துவிசை
காதை மூடிக்கொள் .
பலத்த ஓசை பொடி பொடிந்து …………
மூனறாம் நூற்றாண்டு சமண படுக்கையது .
புடைப்பு சிற்பத்தின் கையில் கூம்பு தாமரையை
சுமந்து நிற்க்கும் ரூப சுந்தரி
கை தனியாய் ;மலர் தனியாய் ;மார்பு தனியாய் - யெல்லாம்
இந்நூற்றாண்டின் ஜெலட்டின் குண்டு வெடித்து .
குவாரி லாரிகளில் எற்றப்பட்டு
அவள் பிருஷ்டமும் ,மார்பும் சமதாளமாக்கப்பட்டு வழவழப்பாக்கப்படும் .
இந்நகரெங்கிலும் வீற்றிருக்கும் அரசு பூங்காக்களின்
கற்பெஞ்சுகளில்
ஜோடிஜோடியாய் வந்தமர்கின்றன. புடைத்த பிருஷ்டங்கள்.

Sunday, March 16, 2014

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2014

நான்காம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன.
*நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2013 ஆம் ஆண்டு ( ஜனவரி 2013 முதல் திசம்பர் 2013 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம்.
*ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை
ரூ 10,000 வழங்கப்படும்.
*நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும்.
*நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 30-04-2014
*அனுப்ப வேண்டிய முகவரி


தமிழ்மணவாளன்
18, பத்மாவதி நகர்
மாதவரம் பால் பண்ணை
சென்னை-600 051


Thursday, March 13, 2014

அனிதாவின் ''கனவு கலையாத கடற்கன்னி''


அனிதாவின் ''கனவு கலையாத கடற்கன்னி'' கவிதை தொகுப்பு மீள்வாசிப்பு செய்தேன் இன்று.அனிதாவின் கவிதைகளில் முக்கிய விஷயமாக நான் கருதுவது நுட்பமான வாழ்வின் தருணங்களை எளிய அழகியலுடன் சொல்லி செல்கிறார்.ஒவ்வொரு கவிதைக்குள்ளும் குட்டி கதை ஒன்று ஒளிந்து கிடக்கிறது..எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் இரண்டு ......

தங்கத்தோடு

பத்து வருடம் முன்பிருந்த ஊருக்கு மீண்டும் சென்றேன்.
வருடக்கணக்கில் பயணித்துப் பழகிய
புறந‌கர் ரயிலில் அமர்ந்திருந்தேன்
இங்கே மஞ்சள் சுண்ணாம்படித்த கட்டிடம் இருக்குமென்றும்
இந்த ஆற்றைக் கடக்கையில் துர்வாடை வீசுமென்றும்
இந்த இடத்தில் தண்டவாளம் வளையுமென்றும்
இங்கே சிலுவைகள் நிறைந்த மயானம் இருக்குமென்றும்
நினைத்தபடி சென்று கொண்டிருந்தேன்.
அவ்வாறே எல்லாம் இருந்தது.

தங்கத் தோடு தொலைந்துவிட‌
வீடு போகப் பயந்து இருள் படரும் வரை
பித்துப்பிடித்தாற்போல முன்பு தேடிய அதே இடத்தில்
மீண்டும் ஒருமுறை தேடினேன்.
தொலைத்த இடத்திலேயே கிடந்தது தோடு.

அன்பின் விலைகள்

எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்.

சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப்பார்த்துத் தயங்கி
அழாதீங்க என்றான்.

என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு எட்டு ரூபாய் சில்லரை
எண்ணி கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.

அந்த மீதி சில்லரையாவது வாங்காமல் விட்டிருக்கலாம்


















Saturday, March 8, 2014

Tea Time

Tea Time
*********

Son adds
cubes of sugar
to the morning tea

A hot one, avec newspaper
Rusks for the sides
and a tv channel
for Dad

A flowery
little cup
for daughter

Mommy Sips off
this life
however it may be...


Tamil poem by Vijay mahindran
 English translation by Anitha jayakumar

Friday, March 7, 2014

தேநீர் வேளை

தேநீர் வேளை

காலையில் தேநீர் அருந்துகையில்
சீனி குறைவாய் இருக்கிறதென
இனிப்பை அள்ளிப் போட்டு
கரண்டியால் கலக்கிகொள்கிறான்
மகன்.

சூடாய் இருக்க வேண்டும்
செய்தித்தாள் வேண்டும்
கொஞ்சம் வர்க்கி ரொட்டிகளும்
தொலைக்காட்சியும்
அப்பாவுக்கு.

பூ வேலைப்பாடுடன் கூடிய
தேநீர்க் குவளை
மகளுக்கு.

எப்படி இருந்தாலும்
அருந்திக்கொள்வாள் அம்மா
இந்த வாழ்க்கையை!


விஜய் மகேந்திரன் (ஆனந்த விகடன் - 23/03/11 இதழில்)


நன்றி: ஆனந்த விகடன்

நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ நாவல் அறிமுகக் கூட்டம்

எழுத்தாளரும், ஊடகவியலாளருமான நிஜந்தன் எழுதிய, ‘என் பெயர்,’ என்ற நாவலின் அறிமுகக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
‘காவ்யா,’ பதிப்பக உரிமையாளர் சண்முகசுந்தரம் அறிமுக உரை ஆற்றினார். ‘என் பெயர்,’ நாவல் ஒரு மையம் உடைந்த எழுத்தின் வகையில் அமைந்த நாவல் என்று அவர் கூறினார். இது போன்ற மையம் உடைந்த எழுத்துக்கள் நமது சங்க காலப் பாடல்களிலும் உள்ளன என்றார் அவர். எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், நிஜந்தனின் ஆறு நாவல்களை ஆய்வு செய்து எழுதிய கட்டுரையையும் அவர் வாசித்தார். அதில், ‘நகரம் சார்ந்த மனிதர்களின் வாழ்வை நிஜந்தன் பின்நவீனத்துவ பாணியில் பதிவு செய்திருக்கிறார்,’ என்று சுப்ரபாரதிமணியன் கூறியிருக்கிறார்.
கவிஞர் அமிர்தம் சூர்யா, ‘என் பெயர்,’ நாவலைப் பற்றிய மதிப்புரை வழங்கினார். அதில் அவர், ‘நிஜந்தன் எனும் கதைசொல்லியை nijanthan book release 2எதிர்கொள்ளும் நிஜந்தன் எனும் இளைஞனின் தற்கொலைக்குப் பின்னால் பார்வையற்றவன் ஒருவனை மறுமணம் புரியும் அவனுடைய மனைவி, கருவில் இருக்கும் குழந்தைக்கு நிஜந்தன் என்று பெயரிட நினைக்கும்போது அது கருவில் கலையும் அவலத்தைக் காட்டுகிறது இந்த நாவல். செயற்கைக் கருத்தரிப்பு மூலம் பிறந்த குழந்தைக்கு, இறந்துபோன மகனின் நினைவாக நிஜந்தன் என்று பெயர் வைக்கும் அவனுடைய பெற்றோரும் இறந்துபோய்விட, காணாமல் போகிறான் குழந்தை நிஜந்தன். அவன் கிடைப்பானா, கிடைப்பது என்பது என்ன என்பது போல் கதை விரிகிறது. ‘என் பெயர்,’ எனும் நாவல், பல தளங்களை முன் வைக்கிறது. ஒரே பெயர் கொண்ட மனிதர்களின் உளவியலை அலசி ஆராய்கிறது. தற்கொலை உணர்வின் அடித்தளத்தை இந்தக் கதை ஆய்கிறது. ஒரே கதையில் பல கதைகள் இருக்கும் உத்தி புதியதாக இருக்கிறது. இந்தக் கதையின் கட்டமைப்பு புதியதாக இருக்கிறது. உடல் அரசியல் இந்தக் கதையில் முன் வைக்கப்படுகிறது. கதையின் இறுதியில், நிஜந்தன்கள் சாவதில்லை என்று கதைசொல்லி கூறுவதன் மூலம் என்ன சொல்லப்படுகிறது? உயிர்களுக்கு நம்பிக்கை அளிக்கப்படுகிறதா? ஆண்கள் தீர்வதில்லை, ஆணாதிக்கம் தீர்வதில்லை, உடல் மேலாண்மை முடிவதில்லை என்று சொல்லப்படுகிறதா? இந்தக் கதை, எனக்கு கவிதை எழுதும் உற்சாகத்தை அளித்தது,’ என்று பல கருத்துக்களை முன்வைத்தார்.

மதிப்புரை வழங்கிய, எழுத்தாளர் விஜய மகேந்திரன், ‘சுயசார்பு கொண்ட பெண்கள், கணவனால் அழுத்தப்படும்போது அடங்கிப்போவார்களா, எதிர்த்து நிற்பார்களா என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது. பிரம்மஸ்ரீ சுரேஷ் என்ற பாத்திரம் பின்நவீனத்துவ நாவலின் படிமங்களைக் காட்டுகிறது. இந்த நாவலில் புறவய விவரணைகள் இடம்பெறவில்லை. பல இடங்களில் ஊடகங்களில் செய்தி சொல்லும் நடை கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது கணவனால் தள்ளப்பட்டு கரு கலைவது கொஞ்சம் நாடகத்தனமாக இருக்கிறது. இது ஒரு நல்ல நாவல். தமிழில் நல்ல நாவல்கள் பல கவனிக்கப்படுவதில்லை போலவே இருக்கிறது,’ என்று கூறினார்.


‘என் பெயர்,’ நாவலை ஆய்வு செய்து பேசிய கவிஞர் உமா சக்தி, ‘பல நூல்களின் பிரதிகள் இந்த நாவலில் இடம்பெற்றிருப்பது பலம் சேர்க்கிறது. முந்தைய நாவல்களின் சுருக்கம் இடம்பெற்றிருப்பது புதிய உத்தி. கதை சொல்லிக்கு நபீலா என்ற பாத்திரத்தின் மீது தனி கவனம் இருந்தாலும், பக்குவத்துடன் அதை அணுகியிருப்பது பாராட்டுக்குரியது. இரண்டாவது கணவன் மூலமான குழந்தைக்கும் ஏன் முதல் கணவனின் பெயரான நிஜந்தன் என்பதையே வைக்க ப்ரியா நினைக்க வேண்டும்? கரப்பான் பூச்சி இந்த நாவல் முழுக்க ஒரு படிமமாக இடம்பெறுகிறது. அது முதலில் வந்த உயிர், அது அழியாது, எனவே நிஜந்தன் என்ற பிம்பத்திற்கும் அழிவில்லை. நான் யார், நாம் யார் என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது. வேகமாக சில பாத்திரங்கள் வந்து போகின்றன. அவை அதிக தாக்கம் கொடுக்கும்படி இருந்திருக்கலாம்,’ என்று கூறினார்.

ஊடகவியலாளர் புருஷோத்தமன் தனது மதிப்புரையில், ‘பெயர்களும், நிகழ்வுகளும் இந்த நாவலில் திரும்பத் திரும்ப வருகின்றன. பல மரணங்கள் கதையில் நிகழ்கின்றன. ஆனால் அது கதையோட்டத்தைப் பாதிப்பதில்லை. மழை ஒரு குறியீடாக நாவல் முழுக்க வந்து போகிறது. அதே போல் கரப்பான் பூச்சிகளும் முக்கியப் பாத்திரம் ஏற்றிருக்கின்றன. நித்யஸ்ரீ கணவனின் தற்கொலை, இளவரசனின் தற்கொலை, உயிரியல் பூங்காவின் புலிகள் என்று பல்வேறு சமூகப் பிரச்னைகள் கதையின் ஓட்டத்திற்குப் பயன்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளை அதிகக் கவனம் கொண்டு அணுக வேண்டாம் என்று இந்த நாவல் ஓரிடத்தில் பலமாகக் கூறுகிறது,’ என்று கூறினார்.

இறுதியில் நன்றியுரை வழங்கிய எழுத்தாளர் நிஜந்தன், ‘இந்த அறிமுகக் கூட்டம், எனக்கே என்னை அறிமுகம் செய்து வைத்தது. நிஜந்தன்கள் சாவதில்லை என்று கூறியதன் மூலம் அதிகாரப் பரம்பரை சாகாது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இறுதியில் கரு கலைவது மட்டும் நாடகத்தனம் கொண்டது என்று கூற முடியாது. முழு நாவலே நாடகப் புனைவு கொண்டதாகத்தான் இருக்கிறது. வாழ்வில் இருக்கும் புனைவை புரிந்துகொண்டால்தான், புனைவில் இருக்கும் வாழ்வைப் புரிந்துகொள்ள முடியும். புறவய விவரணை என்னுடைய நாவல்களில் குறைவு என்பதை ஏற்றுக்கொள்கிறேன்,’ என்று கூறினார்.

டிஸ்கவரி புக் பேலசைச் சேர்ந்த வேடியப்பன் நிறைவுரை வழங்கினார். ‘விவரம் தெரிந்த வாசகர்கள், நிகழ்வுக்கு வந்திருக்கிறார்கள். அமிர்தம் சூர்யாவின் பேச்சு ஒரு மேஜிக் போல இருந்தது. நாவலைப் படிக்கத் தூண்டியது,’ என்று கூறினார்.
தொலைக்காட்சித் தொகுப்பாளர் ராமகிருஷ்ணன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
http://nadappu.com/nijanthans-en-peyar-novel/
-நன்றி நடப்பு.காம்