Sunday, January 30, 2011

ஒரு மனிதனின் ஒரு நகரம்

சிங்கப்பூரில் இருந்து வரும் தங்கமீன் இணையதளத்தில் தமிழகம் பகுதியில் எனது கட்டுரை இடம் பெறுகிறது.அவற்றின் சில பகுதிகளை இங்கு பகிர்கிறேன் .முழு கட்டுரையை இணையதளத்தில் வெளிவந்தவுடன் நண்பர்கள் படிக்கவும்.

ஒரு மனிதனின் ஒரு நகரம் – சென்னை


விஜய் மகேந்திரன்


சென்னையை பல்வேறு ஊர்களில் இருந்தபடி, சினிமாவிலோ, தொலைக்காட்சியிலோ தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த தலைநகரில் வசிக்க நேருமென்று ஒரு நாளும் நினைத்ததில்லை. தொண்ணூறுகளின் துவக்கத்தில் அப்பாவிற்கு அரக்கோணம் மாற்றியபோது சென்னை மிக அருகாமை ஊராக இருந்தது. தமிழநாட்டில் முதல் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. சென்னைக்கும் அரக்கோணத்திற்கும் தான் தொண்ணூறுகளில் பார்த்த சென்னையின் மனிதர்களின இயல்பு இப்போது ஏதோ ஒரு விதத்தில் தலைகீழாக மாறியிருக்கிறது. அசோக்நகரில் சித்தி வீடு இருந்தது. விடுமுறைக்கு அவர்கள் அரக்கோணத்திற்கு வருவது அல்லது நாங்கள் சென்னைக்கு செல்வது வழக்கமாயிருந்தது.

சென்னை என்பது புதிய சினிமாக்கள் பார்க்கும் இடமாகவே அப்போது எனக்கு இருந்தது. ஆல்பர்ட், உதயம் அப்போது அருமையாக பராமரிக்கப்பட்ட திரையரங்குகளாகும். உதயம் தியேட்டரில் அதிக திரைப்படங்கள் பார்க்க நேர்ந்திருக்கிறது. அஞ்சலி, சத்ரியன், மைக்கல் மதனகாமராஜன், கோபுர வாசலிலே.. போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடியவை அந்த ஆண்டுகளில்.

அப்பாவிற்கு மத்திய அரசில் வேலை என்பதால் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பெட்டித்தூக்கி வேறு ஊர் செல்ல வேண்டியிருக்கும். ஒரு வழியாக கல்லூரிப் படிப்புக்காக மதுரைக்கு மாற்றல் வாங்கி வந்தார், அப்பா. படிப்பு முடிந்ததும் சென்னை சென்று செட்டிலாகி விட வேண்டும் என்ற அப்பார்ட்மெண்ட்வாசி கனவுதான் எனக்கும் இருந்தது. அந்த சாதாரண கனவு அவ்வளவு எளிதானதல்ல என்பது சென்னைக்கு வந்த பிறகுதான் புரிந்தது. 2005-ல் அப்பாவிற்கு ஓய்வு பெற மூன்று வருடங்கள் இருக்கும்போதுதான் சென்னைக்கு மாற்றினார்கள். அதுவரை அடிக்கடி வந்து செல்லும் ஊராகவும், ஒரு சுற்றுலா பயணியின் மன நிலையோடுதான் வந்து சென்று கொண்டிருந்தேன். 2000 முதல் 2005 வரை சென்னையில் தங்கி பணியாற்ற என் வீட்டினர் ஒத்துக்கொள்ளவேயில்லை.

ஒரு கட்டத்தில் மதுரையில் வேலையில் முன்னேற வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. நான் பணியாற்றும் பிஸியோதெரபிதுறையின் வேலைகளும் மிகக்குறைவாக மதுரையில் இருந்தன. நானே சென்னைக்கு வர வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த போது தான் இந்த மாற்றல் வந்து தலைநகருக்கு கொண்டு வந்து சேர்த்தது.

குவார்ட்டர்ஸ் கிடைத்த இடம் தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை. இங்கு வந்து இறங்கிய போது எனக்கும் இந்தப் பகுதிக்கும் ஏதோ ஒரு தொடர்பு முன்னரே இருப்பது போல உணர்ந்தேன்.

வேலையில்லாமல் ஓரிரு மாதங்கள் இருக்க நேர்ந்தது. சாதாரணமாக ஒருவர் சென்னையில் வேலை தேட ஆரம்பித்தால் நல்ல இடத்தில் வேலை கிடைப்பதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம் என்பது என் கணிப்பு. நகரம் பிடிபடவே இரண்டு மாதங்கள் ஆகிவிடும்.

அந்த காலத்தில் எழுத்தாளர்களை நோக்கிய பயணங்கள் ஆரம்பமாகிறது. எஸ்.ராமகிருஷ்ணனை அடிக்கடி சந்திப்பேன். சென்னை குறித்து நிறைய விஷயங்களை அவர் எனக்கு சொல்லித்தருவார். புத்தக வெளியீட்டு கூட்டம் நடக்கும் இடங்கள், பிலிம் சேம்பர், புக் பாயிண்ட், ருஷ்யன் கலாச்சாரமையம், தேவநேயப்பாவணர் நூலக அரங்கம் என உரையாடலின் வழியே அறிமுகப்படுத்தினார். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடும் பழைய புத்தகக் கடைகள் பற்றியும் அறிந்து கொண்டேன். அங்கேதான் சம்பத்தின் “இடைவெளி” போன்ற மறுபதிப்புக் காணாத புத்தகங்களை வாங்கினேன். கிடைப்பதற்கரிய, தற்போது பதிப்பில் இல்லாத புத்தகங்களை அங்குதான் காண முடிந்தது. “குட்டி இளவரசன்”, “கரம் சேவ் சகோதரர்கள்”, சார்த்தர் எழுதிய புத்தகங்கள் என்று பல அரிய நூல்கள் மலிவான விலையில் கிடைத்தன.

உயிர்மை நடத்தும் பெரும்பாலான கூட்டங்களுக்கு மனுஷ்யபுத்திரன் அழைப்பு விடுப்பார். இத்தனைக்கும் அப்போது நான் இலக்கிய வாசகன் மட்டுமே, பல நண்பர்களை அறிமுகப்படுத்தினார். நேரம் கிடைக்கும் போது அவர் வீட்டிற்கு செல்வேன். பெரும் வேலைகளுக்கிடையேயும் எனக்காக நேரம் ஒதுக்கி இலக்கியம் குறித்தும், புதியதாய் உயிர்மையில் வரப்போகும் புத்தகங்களை குறித்தும் பேசுவார்.

இப்போதைய சென்னையின் வெறுமைத் தோற்றத்தை நினைத்துப் பார்க்கிறேன். எந்த நண்பரின் வீட்டுக்குள்ளும் நுழையவே முடியவில்லை. அப்படி நுழைந்தாலும் இலக்கியம் குறித்து பேச முடியாது. பொது இடங்களில் சந்திப்பதோடு சரி. ஆனால் மனுஷ்யபுத்திரனும், ராமகிருஷ்ணனும், அவர்கள் வீட்டிற்கு சென்ற போது அமரவைத்து மணிக்கணக்கில் பேசியது எங்ஙனம் என யோசிக்கையில் வியப்பே மேலோங்கியது. இன்று வரைக்கும் இலக்கியம் தேடி வரும் இளைஞர்களுக்கு அவர்களின் வீட்டின் கதவுகள் திறந்தே இருக்கின்றது.

http://www.thangameen.com/

2 comments:

  1. கட்டுரை அருமை விஜய் மகேந்திரன், இணையத்தில் வந்தமைக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. உங்களின் இலக்கிய பயணம் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete