உங்கள் பாதத்தில் வலி ஏற்படுகிறது. அந்த வலி நீங்கள் காலையில் படுக்கையை விட்டு எழுந்து பாதத்தை நிலத்தில் வைக்கும் போது கடுமையாக இருக்கிறது. தொடர்ந்து நடக்கும்போது வலி குறைந்து விடுகிறது. இத்தகைய வலிக்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முக்கிய காரணம் பிளான்டர் பியடிஸ் (Planter Fascitiis) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் நோய்தான். எம்மவர்கள் இதனைப் பொதுவாகக் குதிவாதம் என்பார்கள். ஆனால் இது தவறான அர்த்தத்தைக் கொடுக்கும் பெயராகும். வாதம் என்பது மூட்டுகளில் ஏற்படும் நோய். ஆனால் இது மூட்டுக்களில் ஏற்படும் நோயல்ல. எனவே உண்மையில் வாதம் அல்ல. பாதத்தின் அடிப்பகுதில் உள்ள சவ்வுகளின் அழற்சியாலேயே இந்நோய் ஏற்படுகிறது. மூட்டுகளில் அல்ல.
அத்துடன் பக்க வாதம் என்றும் பாரிச வாதம் என்று சொல்லப்படும் நோய்க்கும் இதற்கும் எத்தகைய தொடர்பும் கிடையாதுஎன்பதும் குறிப்படத்தக்கது.
எனவே இது ஆபத்தான நோயல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். சில்லறைத் துன்பங்களைக் கொடுக்கும் நோய் மட்டுமே. .
இந் நோயின் அறிகுறிகள் என்ன என்பதை முதலில் தெளிந்து கொள்ளுங்கள்.
இந்நோயின் முக்கிய அறிகுறி உங்கள் பாதத்தின் குதிப்பகுதியில் ஏற்படும் வலிதான். சிலவேளைகளில் அப்பகுதி சிவக்கலாம், வீங்கலாம், அல்லது சூடாக இருப்பதையும் நீங்கள் உணரக் கூடும். இவை அழற்சியின் அறிகுறிகளாகும். உங்கள் பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள தடித்த உள்ளங்காலுக்குரிய சவ்வுப் பகுதியில் ஏற்படும் அழற்சியால்தான் இந்நோய் ஏற்படுகிறது.
குதிவாதத்தினால் ஏற்படும் வலியானது முன்பே சொல்லியது போல முக்கியமாக அதிகாலையில் நீங்கள் படுக்கை விட்டு எழுந்து முதல் அடி வைக்கும்போது மிக அதிகமாக இருக்கும். சில அடிகள் நடக்க வலி தானே குறைந்து விடும். ஆனால் கவனியாது விட்டால் நாட் செல்லச் செல்ல வலி நாள் முழுவதும் உங்களுக்குத் துன்பம் தரக் கூடும்.
குதிவாதம் ஏற்படக் காரணம் என்ன?
குதிவாதம் ஏற்படக் காரணங்கள் பலவாகவோ அன்றி ஒன்றோடு ஒன்று தொடர்புடைய வெவ்வேறாகவோ இருக்கலாம். உங்கள் குதிப் பகுதியிலும் காலின் கெண்டைப் பகுதியிலும் உள்ள தசைகளின் இறுக்கம் காரணமாக இருக்கலாம், மாறாக பாதப்பகுதியின் தளர்ச்சியும் காரணமாகலாம், அல்லது நீங்கள் செய்யும் உடற்பயிற்சியைத் தவறாகச் செய்வதும் காரணமாகலாம் , அல்லது உங்கள் பாதத்தின் இயற்கையான வளைவுப் பகுதிக்கு நீங்கள் கொடுக்கும் அதிகரித்த வேலைப் பளுவாகவும் இருக்கலாம். உதாரணமாக மிக நீண்ட தூரம் ஓடுதல், அதி வேகமாக ஓடுதல், அடிக்கடி ஓடுதல் போன்ற பயிற்சிகளைக் கூறலாம்.
பொருத்தமற்ற அதாவது அளவற்ற காலணியை நீங்கள் உபயோகிப்பதும் குதிவாதத்திற்குக் காரணமாகலாம். அல்லது உங்கள் தொழில் காரணமாவோ அல்லது பொழுது போக்குப் பழக்கம் காரணமாகவோ, நீங்கள் குதிக்காலுக்குரிய சவ்வுக்கு அதிக வேலை கொடுத்து ஊறு விளைவிப்பதாலும் இருக்கலாம்.
.
எப்படி சிகிச்சையளிக்கப்படுகிறது?
உங்கள் வைத்தியர் உங்களுக்கு ஆலோசனை, பயிற்ச்சி முறைகள், மாத்திரைகள், ஊசி ஏற்றுதல் போன்ற பல்வேறு வகையான சிகிச்சைகளில் ஒன்றையோ அல்லது சிலவற்றைச் சேர்த்தோ அளிக்கக் கூடும். அவர் உங்களுக்கு அளிக்கும் சிகிச்சை உங்கள் குதிவாதம் ஏற்படுவதற்கான காரணத்தை அகற்றுவதாக இருக்க வேண்டும். அத்துடன் அதன் வேதனையைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும் அத்துடன் சிகிச்சையானது உங்கள் பாதத்தில் ஏற்பட்ட அழற்சியைத் தணிக்கவும் வேண்டும்.
முதலாவதாக உங்கள் பாதணியில் கவனம் செலுத்துங்கள். உங்கள் உள்ளங்காலுக்குரிய சவ்வுக்கு ஏற்பட்டுள்ள அதிக வேலைப்பளுவைக் கொடுக்காத, அதன் வேதனையைக் குறைப்பதற்கு ஏற்ற காலணிகளை நீங்கள் தேர்ந்து அணிய வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலணி உங்கள் உள்ளங்காலின் இயற்கையான வளைவுக்கு இசைந்து ஒத்தாசை வழங்குவதான அமைப்புடையதாக இருக்க வேண்டும். அத்துடன் உங்கள் பாதணியின் அளவு உங்களுக்கு மினவும் பொருத்தமுள்ளதாக இருக்க வேண்டும்.
குதிவாதநோய் ஏற்பட்டுள்ள விளையாட்டு வீரர்களும்,மற்றும் துடிதுடிப்பான வாழ்க்கை முறை கொண்டவர்களும் தமது பாதங்களுக்கு மேலதிக வேலை கொடுப்பதைக் குறைக்க வேண்டும். அதாவது பாய்தல், ஓடுதல், துள்ளல் போன்றவற்றைச் செய்யும் நேரத்தைக் குறைக்க வேண்டும். உங்கள் பாத வளைவுக்கு ஏற்ற விசேட பாதணிகளும் சிலவேளை தேவைப்படலாம்.
காலையில் படுக்கையை விட்டு எழுந்து நடமாட ஆரம்பிக்க முன்னரே பயிற்சிகளை ஆரம்பியுங்கள். எழுந்தவுடன் உங்கள் பாதத்தை குறுக்குவாட்டாக அழுத்தித் தேய்த்து மஸாஜ் செய்தால் எழுந்து நடக்கும் போது வலி குறைவாக இருக்கும்.
அடுத்தது தசைகளைப் பலப்படுத்தும் பயிற்சிகளை நீங்கள் செய்ய வேண்டும். இவை உங்கள் நோயைத் தணிப்பதில் நல்ல பலனைக் கொடுக்கும்.
முழங்காலுக்குக் கீழ் இருக்கும் கெண்டைக்கால் தசைகளுக்கான இழுவல் பயிற்சிகளும் குதிக்கால் வலிக்கு உதவும். மேலே காட்டிய படங்களில் உள்ளபடி இரண்டு விதமாக செய்யுங்கள். சுவரை உங்கள் கைகளால் தள்ளுவது போன்றவையே இப் பயிற்சிகள். முதலாவது படத்தில் காட்டியபடி உங்கள் இரு கைகளையும் மடிக்காது நேராக வைத்துக் கொண்டு சுவரைத் தள்ளுங்கள். தள்ளுபோது முன்னிருக்கும் கால் சற்று மடிந்திருக்க பின்னிருக்கும் காலிலின் குதிப் பகுதியில் பாரம் தங்குமாறு செய்யுங்கள். அடுத்த தடவை கால்களை மாற்றி வைத்துச் செய்யுங்கள். .
பாதத்தின் தசைநார்களுக்குக் கொடுக்கும் பயிற்சிகளில் துவாயைச் சுருட்டல், மார்பிள் அல்லது நாணயங்களை கால் விரல்களால் பொறுக்கல், மற்றும் காற் பெருவிரல் தட்டல் பயிற்சிகள் சுலபமானவை. பயிற்சிகளின் பெயர்களைக் கேட்டவுடன் பயந்துவிடாதீர்கள். மிகவும் சுலபமானவை. தொடர்ந்து செய்ய நல்ல பலனையும் கொடுக்கும்.
துவாயைச் சுருட்டல் பயிற்சி - ஒரு துவாயை தரையில் விரியுங்கள். படத்தில் காட்டியபடி உங்கள் பாதத்தை அதன் ஒரு ஓரத்தில் வைத்தபடி அருகே ஒரு நாற்காலியில் உட்காருங்கள். துணியை உங்கள் கால்விரல் நுனிகளால் பற்றி உங்கள் பக்கமாக சுருட்டிச் சுருட்டி இழுங்கள். பல முறை இவ்வாறு செய்யுங்கள்.
இன்னுமொரு பயிற்சி கால் விரல்களால் மார்பிள்களை பொறுக்குவதாகும். சில மார்பிள்களை, அல்லது சில நாணயங்களை அல்லது சோடா மூடிகளை நிலத்தில் போட்டு வையுங்கள். அருகில் உயரம் குறைந்த ஒரு கோப்பையை வையுங்கள். உங்கள் குதிக்கால் நிலத்தில் படும்படி உட்கார்ந்து கொண்டு மார்பிள்களை உங்கள் கால் விரல்களால் பொறுக்கி எடுத்து அருகில் ஏற்கனவே வைத்த கோப்பைக்கள் போடுங்கள். நாணயங்களை இவ்வாறு பொறுக்கிப் போடுவது இன்னும் நல்ல பயிற்சியாகும்.
இது ஒரு நுணுக்கமான ஆனால் சிறந்த பயிற்சியாகும். உங்கள் பாதத்தின் குதிப் பகுதி தரையில் திடமாக இருக்கும்படி வைத்தபடி கால் விரல்களை மட்டும் மேலே உயர்த்துங்கள். இப்பொழுது நான்கு விரல்கள் உயர்ந்தபடி நிற்க பெருவிரலால் மாத்திரம் தரையைத் தட்டுங்கள். இனி மறுபுறமாகச் செய்யுங்கள். அதாவது பெருவிரல் உயர்ந்து நிற்க மற்ற நான்கு விரல்களால் தரையைத் தட்டுங்கள்.
இவ்வாறு பலமுறை செய்ய வேண்டும். ஒரு தவணையில் பத்து முறையாவது செய்யுங்கள். படிப்படியாக ஒவ்வொரு தவணையிலும் ஜம்பது முறையாவது செய்யும்படி பயிற்சியை அதிகரியுங்கள்.
குதியில் ஏற்பட்ட அழற்சியைத் தணிக்க ஐஸ் மஸாஸ் சிலருக்கு உதவக் கூடும். ஒரு சிறிய பேப்பர் கோப்பையில் நீரை வைத்து குளிர்சாதனப் பெட்டி மூலம் ஐஸ் ஆக்குங்கள். கோப்பையிலிருந்து ஐஸ் வெளியே தெரியும் பகுதியை பாதத்தின் வலிக்கும் இடத்தின் மேல் வைத்து அழுத்துங்கள். மிதமான அழுத்தத்துடன் சுற்றுவட்டமாக 5 முதல் 10 நிமிடங்களுக்கு அழுத்துங்கள். இதுவும் குதிவாதத்தின் வலியைத் தணிக்க உதவும்.
ஆழம் குறைந்த பேசினுக்குள் ஐஸ் கலந்த நீரினுள் பாதத்தை 5 முதல் 10 நிமிடங்களுக்கு வைத்திருப்பதையும் மேலை நாட்டு வைத்தியர்கள் சிபார்சு செய்கிறார்கள். ஆயினும் எம்மவர்கள் குறைந்த சூடுள்ள நீரில் பாதத்தை வைத்திருப்பது கூடிய சுகத்தைக் கொடுப்பதாக உணர்கிறார்கள்.
வலியையும் அழற்சியையும் தணிக்கும் வலிநிவாரண மாத்திரைகளும் உங்களுக்கு நிச்சயம் உதவும். வைத்தியரின் ஆலோசனையுடன் குறிப்பிட்ட காலத்திற்கு அத்தகைய மாத்திரைகள நீங்கள் உட்கொள்ள சுகம் தெரியும்.
சில வேளை ஹைட்ரோகோட்டிசோன் ஊசி மருந்தை வலி அதிகமுள்ள இடத்தில் உங்கள் வைத்தியர் போடவும் கூடும்.
உங்களுக்கு ஏற்ற சிகிச்சை முறையை வைத்தியரின் ஆலோசனையுடன் தீர்மானியுங்கள். மனந்தளராமல் தொடர்ந்து செய்யுங்கள் சுகம் கிடைக்கும்.
நன்றி சுஜாதா சுபன்
நல்ல பதிவு.
ReplyDelete