Saturday, December 17, 2016

நகரத்தின் உள்ளே நின்று எழுதும் விஜய் மகேந்திரனின் கதைகள்

நகரத்தின் உள்ளே நின்று எழுதும் விஜய் மகேந்திரனின் கதைகள் -  
சு. வேணுகோபால்

அசோகமித்திரன் நல்லதும் கெட்டதும், இழந்ததும் வீழ்ந்ததுமான நகரத்து மனிதர்களின் இயல்புணர்ச்சிகளைச் சற்று விலகி நின்று மென்மையான குரலில் சொன்னார். விஜய் மகேந்திரனின் கதைகளும் நகரத்து மனிதர்களைப் பற்றியதுதான். என்றாலும் நகரத்தின் இண்டு இடுக்குகளில் வாழும் சற்று மூர்க்கமான மனிதர்களின் உலகத்தைக் காட்டுகின்றன.ஒருவகையில் கோபிகிருஷ்ணன் கதை உலகிற்கு அருகிலானது. முக்கியமாக நேற்றைய மனிதர்களையல்ல - இன்றைய மனிதர்களின் முரண்களை, மோதல்களை, ஏமாற்றுத்தனங்களை, ஏமாறுதல்களை புதுசாக சொல்கின்றன.

பார்த்த விதத்திலும்,சொன்ன விதத்திலும் கதைகள் வாசகனின் நன்மதிப்பை பெறுகின்றன.சொல்முறையில் உருவாகிவிடும் 'பிறப்பு' என்ற தகுதி இயல்பாகவே இவரிடம் கூடி வந்திருக்கிறது. எந்தக் கதையும் சிறுகதையாக இவரிடம் ஏமாற்றத்தை தரவில்லை.நம்பிக்கை தருகின்றன. சிறுகதைக்கான பார்வையும் தொனியும் கூட்டிவந்திருக்கின்றன.இத்தொகுப்பு சிறுகதை துறைக்கு வளம் சேர்க்கக்கூடிய நல்ல தொகுப்பு என்ற அளவில் முக்கியத்துவமுடையதாகிறது. இவரின் எழுத்து என்னை கவர்கிறது. பம்மாத்தற்ற, கோணங்கித்தனமற்ற, கணக்கு வழக்கு வித்தையில்லாத, வேற்று ஆரவாரத்தை நிராகரித்த, கிளுகிளுப்பைக் காட்டி இடம் பிடிக்க எண்ணாத உண்மையை மட்டும் பாடியிருக்கிற நேர்மைதான். இதுவே இவரை  இலக்கிய தளத்தில் ஒரு தகுதியான கதைக்காரராக உருவாக்குகிறது. இன்றைய வாழ்க்கையை, இன்றைய மொழியில் இன்றைய மனோநிலையில் சொல்ல வாய்த்திருக்கிறது.

புதிய தலைமுறை இளைஞர்களிடம் குடி என்பது கொண்ட்டாட்டமான பகுதியாக இணைந்து விட்டது. விஜய் மகேந்திரன் குடியை ஒரு கூத்தடிப்பாக மட்டும் காட்டாமல் அதனை சாக்காக வைத்து அச்சூழலில் வெளிப்படும் அற்பத்தனங்களை, சுரண்டல்களை, வஞ்சகங்களை குடுவை நீருக்குள் விழும் விஷத்துளி கலைந்து பரவுவது போல் கதையில்  எழுதிக்காட்ட முடிந்திருக்கிறது. போர்ஹே, காஃப்காவிடமிருந்தெல்லாம் மொழியை இரவல் வாங்கி கதை நெய்யாமல் தன் சுற்றத்தோடும், தன் நண்பர்களோடும் புழங்கும் இளமை மிக்க மொழியை கையாள்கிறார்.வாசிக்க வாசிக்க வாழ்வின் கசப்புகளையும் மகிழ்ச்சிகளையும் தோழமை உணர்வில் நின்று உணரவைக்க முடிகிறது.

ஏதோ ஒரு வகையில் தெரிய நேர்ந்த நண்பர்கள் பற்றி அனுமானங்களை விமர்சனங்களை பெற்றோர்  சொல்கின்றனர். அவர்களின் சொற்களில் நேசம் இருப்பதில்லை. வெறுப்பு துள்ளி விளையாடுகிறது. யார் மீதும் நல்லபிப்பிராயம்  தோன்றாத இன்றைய நவீன மனிதர்களின் வெளிப்பாடுகளை இவர் கதைகளில் காண்கிறோம்.

லௌகீக வாழ்க்கை மீது மோகம் கொண்டோருக்கு கலை என்பது கழிசடை. பொருளியல் நிறைவாலே இனிமைகளையும் மகிழ்ச்சிகளையும் ஏந்த முடியும் என்பதே பெரும்பான்மையோரின் நம்பிக்கை. இவர்களின் பிடியில் சிக்க நேர்ந்த கலைமோகம் கொண்டவர்களின் பாடு நரகம் தான். அவர்களை பொறுத்தவரை பைசாபுரோஜனம் இல்லாத  கலை என்ற கசடு குப்பைக்கு போக வேண்டியவை. அது நிகழ்கிறது. அந்தக் குப்பையைப் பேராவலோடு அணைத்து எடுத்துச் செல்ல புதியவன் ஒருவன் வந்துவிடுகிறான். தமிழ் குடும்பங்களில் நடக்கும் இருவேறு நிலை கொண்ட ஊசல் விளையாட்டின் எரிச்சலையும் மகிழ்வையும் ஒருசேர இவரால் சொல்லமுடிகிறது.

கணிணி புரட்சி இந்திய இளைஞர்களுக்குப் பெரிய நம்பிக்கையைத் தந்தது. வேலை வாய்ப்பை பெரிய அளவில் உருவாக்கித் தந்தது. திடுக்கென பழைய தலைமுறையை புரட்டிப் போட்டது புதிய தலைஒரு முறை. அபரிமிதமான சம்பளம், கேளிக்கை, உல்லாசம் என்ற புதிய பண்பாட்டை இளைஞர்கள் கையில் எடுத்தார்கள். அதே அளவு புதிய கல்வித்துறைகள் குடிசை தொழில் போல முளைத்தன. அதை தேர்ந்து படித்த இளைஞர்களை அக்கல்வி காலை வாரிவிட்டது. ஏமாற்றியது. அப்படி ஏமாற்றப்பட்டு துயரில் உழன்றவர்களின்  உலகை மகேந்திரனின் கதைகள் பேசுகின்றன. அவர்கள் குடும்பத்திலும், நண்பர்களிடத்திலும் அவமானங்களை வாங்கியபடி காலூன்ற முட்டிமோதி தவதாயப்படுகின்ற சித்திரங்கள் தெரிகின்றன. அவர்களில் ஒரு சிலருக்கு வேலை கிடைப்பது ஒரு அபூர்வ மாயத்தன்மையால்  விளைந்ததோ என எண்ணும்படி புனைவை ஆழமாக்குகின்றன.

ஒரு கணம் நம் பார்வையை  வேறு கோணத்தில் நின்று பார்க்கிற போது, புதிய வெளிச்சம் ஒன்று தென்படும். வெறுக்கிற மனிதன் மீது கூட பொருள்படும்படியான ஓர் அம்சம் சிறு பொறியென தோன்றுவதை கவனிக்க முடியும்.அப்படியான கதைதான் ராமநேசன் கதை.

உடலில் படர்ந்திருக்கும் காமத்தின் கொடிகள் பிடி மீறி காதல் என்ற போதையில் ஒரு ஆட்டம் ஆட்டிவிடுகிற போது வேதனையின் அழுத்தத்தைப் பெண்கள் அனுபவிக்கிறார்கள். தப்பிவிடுகிற ஆண்களை அறிந்தும் அப்பெண்கள் அதே வலையைத் திரும்பப் பற்றித் திக்குமுக்காடுகின்றனர். பின் வாழ்வில் சகஜம் கொள்ளவும் நேர்கிறது. காமத்தின் தீண்டலை சொல்லியபடியே அது தரும் துயரத்தின் வலியை எழுத தெரிந்த மனம் விஜய் மகேந்திரனுக்கு வாய்த்திருக்கிறது. ஏமாற்றப்பட்ட உள்ளத்தின் பரிதவிப்பினை காதல் என்ற ஒன்று காணாமல் செய்துவிடக்கூடிய மாயத்தை எளிதாக பிடித்துவிடுகிறார். அங்கு ஒன்றை ஒன்று நிரப்பிக்கொள்ள தவித்தபடியே இருக்கிற உள்ளத்தின் விநோதத்திலிருந்து பின் உருவாகும் வலிமிகுந்த கையறுநிலையைக் காட்டுகிறார்.

சிறுகதை என்பது ஒரு தேர்வு சார்ந்த விஷயம். சொல்லப்படாத ஒரு அம்சத்தை சொல்லப்படாத வேறொரு புதிய கோணத்தில் சொல்கிற அம்சத்தை உயிர்நாடியாகக் கொண்டிருப்பது. இந்த இலக்கிய உணர்வு இவருக்கு வாய்த்திருக்கிறது. உருவாகி வந்த ரவுடியைப் பற்றி  எழுதும் போது  ஒரு முக்கிய புள்ளியாக ஒரு கட்டத்தில் நிரம்பி நிற்கிறான்.அப்பகுதியில் சகலமுமாக நிரம்பி இருந்த ஒருவன் சட்டென உலகத்திலிருந்து இல்லாமல் போகும்போது
அந்த கணம் நிம்மதியை தந்தாலும்கூட அந்த அச்சத்தை இழப்பாகக் காட்டுகிறது. நாளடைவில் பிரித்துக்காட்டியவாறு   அப்படி ஒன்று நிகழாதது போல மேவி மறைந்துவிடுகிறது. கனவு போல தெரிந்தவர் மனங்களில் பழைய நினைவுகள் புதைந்து விடுகிறது. புதியவர்களுக்கு அப்படியான உலகம் ஒன்று இந்த ஊரில் நிகழ்ந்தது என்பது இல்லாமலே வேறு அனுபவங்களில் நிரம்புகிறார்கள். இந்தப்பார்வை இல்லாது போகும்  கணத்தை உணரும் ஒருவனுக்கு இது பொருள்பொதிந்த விழிப்பை ஏற்படுத்துகிறது.

முதல் சிறுகதை தொகுப்பு என்றளவில் மதிப்பிற்குரியதாக வந்திருக்கிறது. ஆனால் இந்த கதைத்தொகுப்பில் தனித்துவமான கொந்தளிப்பை உண்டாக்கக்கூடிய ஒரு கதையைத்தான் விஜய் மகேந்திரன் தந்திருக்கிறார். அப்படி இன்னும் இரண்டு கதைகளை தந்திருந்தால் மிக முக்கியமான தொகுப்பாக மாறியிருக்கும். இக்கதைகளில் இன்னும் கூடுதலான அடர்த்தியும், காணாத ஆழமும் வெளிப்பட்டிருக்கலாம். நிகழ்ந்திருக்க கூடிய அத்தனை சாத்தியங்களும் விஜய் மகேந்திரனிடம் உள்ளன. இவர் முன்னால் உள்ள சவால் இதுதான். இதனை அடுத்த தொகுப்பில்  மகேந்திரன் சாதித்து காட்ட  வேண்டும்.

யாவரும் பதிப்பக வெளியீடு.
விலை 90ரூபாய் 
பக்கங்கள் 96
editor@yaavarum.com 



No comments:

Post a Comment