Sunday, November 19, 2017

பிட்டாக இருக்க செய்ய வேண்டியவை!


உடலை ‘ஃபிட்’டாக வைத்திருப்பது என்றால் உடற்பயிற்சிகளை செய்து உடலைக் கட்டமைப்புடன் வைத்துக்கொண்டால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கை சூழல், வேலை பார்க்கும் இடத்தின் சூழல் என்று எல்லாமே உடல் ஃபிட்னஸுக்குள் பங்கு பெறுகிறது என்பதுதான் உண்மை. அதற்காக ஃபிட்னஸ் சென்டர் சென்று உடலை ஃபிட்டாக வைத்திருக்க வேண்டும் என்று கூட அவசியமில்லை. இயற்கையாகவே உடலை பருமனாகாமல் அழகான வடிவமைப்புடன் வைத்திருக்கும் பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம். ஆனால், உடலை எடையைக் குறைக்க மாத்திரை, மருந்து, மூலிகைச்சாறு என்று பல தேவையில்லாத விஷயங்களை தேடிப்போய் பணத்தை தேவையின்றி செலவழிப்பவர்களும் இன்று அதிகமாகி விட்டனர். இயற்கையில் உடலை அழகுடன் ஃபிட்டாக பராமரிக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.
முக்கியமாக பின்பற்ற வேண்டியவை
தினமும் எளிமையான உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்ய வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் அடங்கிய புத்தகங்கள் கிடைக்கிறது. அதில் படம் போட்டு எப்படி செய்ய வேண்டும் என்று விளக்கியிருப்பார்கள். சைக்கிள் ஓட்டுவதையும் வழக்கமாக கொண்டால் இதய நோய்கள் வராது என்கிறார்கள் மருத்துவர்கள். கை, கால் தசைகளும் வலுவுடன் இருக்கும். உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேருவதையும் சைக்கிள் ஓட்டுவது குறைக்கும். எடை குறைப்புக்கு முயல்பவர்கள் தாராளமாக சைக்கிள் ஓட்டும் பயிற்சியை காலை, மாலை என இரு வேளையும் செய்யலாம்.
அடுத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த கொழுப்பு அமிலம் கெட்ட கொழுப்புகளை ரத்தநாளங்களில் சேர விடாது. மீன், மீன் எண்ணெய், முட்டை, செரல்ஸ், சோயா பீன்ஸ், சோயா பால், பிளாக்ஸ் விதைகள் ஆகியவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது போதுமான அளவில் உள்ளது. சாலமன், டூனா ஆகிய மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தேவையான அளவு உள்ளது. இந்த மீன்களை தொடர்ந்து உணவில் சேர்த்து வருபவர்களுக்கு இதய ரத்தநாளங்களில் கெட்ட கொழுப்புகள் அடைப்பை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளும்.
போதிய புரதச்சத்து உடலில் இருந்தால்தான் தசைகள் ஆரோக்கியமாக செயல்படும். கோழி இறைச்சியில் போதுமான புரதம் இருந்தாலும் அதிக மசாலா சேர்த்து எண்ணெய்யில் வறுத்து சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகரித்துவிடும். ஆகவே தந்தூரி, கிரில் முறையில் நேரடியாக சிக்கனை வெப்பத்தில் வாட்டி சமைக்கும் முறையில் தயாரிக்கப்படும் சிக்கனை மட்டும் சாப்பிடுவது நல்லது.
அசைவம் சாப்பிடாதவர்கள் பருப்புகள், பாலக்கீரை, பிராக்கோலி ஆகியவற்றை அவித்து சாப்பிடலாம்
தினமும் இரண்டு கப் கிரீன் டீ அருந்துங்கள். உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்டுகள் சருமத்தில் சுருக்கங்கள் விழாமல் இருக்க செய்யும். மூளையில் உள்ள செல்கள் புத்துணர்ச்சியுடன் இயங்க ஆன்டி ஆக்சிடென்டுகள் அவசியம். ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகமுள்ள வாழைப்பழத்தையும் தினமும் சாப்பிடுவது நல்லது. உடலில் உள்ள கழிவுகளை நீக்கி உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.
காலை உணவை எக்காரணம் கொண்டு தவற விடாதீர்கள். காலை உணவுகளை தவற விடுவதால்தான் நீரிழிவு, உடற்பருமன், புத்துணர்ச்சி இல்லாமை, வீண் எரிச்சல் ஆகிய பிரச்னைகள் எல்லாம் ஏற்படுகின்றன. காலையில் சாண்ட்விச், அவித்த காய்கறிகள், பிரெட் ஆம்லெட், பழங்கள், சோயா பால் என சத்தான உணவுகளை காலைப்பொழுதில் சேர்த்துக்கொண்டால் நல்ல எனர்ஜியுடன் இருக்கலாம். இதனால், தேவையற்ற நோய்கள் வரும் வாய்ப்பும் குறையும்.
சிறு தானிய உணவுகளை முடிந்த மட்டும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கம்பு தோசை, கேழ்வரகு ரொட்டி, குதிரைவாலி சாதம், கொள்ளு துவையல் என உணவில் சேர்த்துக் கொண்டால் வைட்டமின்களும், நார்ச்சத்துக்களும் உங்களுக்குத் தேவையான அளவு கிடைக்கும்.
இரும்புசத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு இரும்பு சத்து அவசியம். அசைவ உணவுகளில் ஆடு, மற்றும் கோழி ஈரலில் இரும்பு சத்து உள்ளது. பாலக் கீரையில், முருங்கைகீரையில், பேரீச்சம் பழத்தில் போதுமான இரும்பு சத்து உள்ளது. உருளைக்கிழங்கை வறுக்காமல் அவித்து சாப்பிட்டால் போதுமான அளவு இரும்பு சத்து கிடைக்கும்.
அன்றாடம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்
சமச்சீரான உணவு உடலுக்கு அவசியம். அதை நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும். ஒரு தட்டில் சிறிதளவு பழங்கள், அவித்த காய்கறிகள், அவித்த சிக்கன் அல்லது மீன் இரண்டு துண்டு, கொஞ்சம் பருப்புகள் என்று எல்லா உணவுகளும் சமஅளவில் இருப்பதுதான் சமச்சீரான உணவாகும். உடலுக்கு எந்த சத்தும் குறைபாடில்லாமல் கிடைக்குமாறு உணவுகளை தயாரிப்பது அவசியம்.
தினமும் உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் அவசியம். உடலில் தேவையற்ற கலோரிகளை குறைப்பதற்கு உடற்பயிற்சிகள் உதவும். உடலை ஃபிட்டாக வைக்கவும், தொப்பையைக் குறைக்கவும் உடற்பயிற்சிகள் உங்களுக்கு உதவும். தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். தண்ணீர், உடலில் சேரும் தேவையற்ற நச்சுக்களை கழிவுகளின் மூலம் வெளியேற்றி விடும். இதனால் உடல் ’டீடாக்ஸ்’ ஆகிறது. தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிக்கக்கூடாது. தேவைப்படும்போது அவ்வப்போது எல்லாம் தண்ணீரை குடிக்க வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை சாறு பிழிந்த மிதமான சூட்டில் தண்ணீரை அருந்தினால் உங்களது செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தும். எலுமிச்சையில் உள்ள ‘வைட்டமின் சி’யானது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். காலையில் எழுந்தவுடன் ஒரு நெல்லிக்காயை சாப்பிடுவதும் நல்லது. வைட்டமின் சி கிடைக்கும். உடலில் உள்ள பித்தத்தையும் குறைக்கும்.
சாப்பாடு சாப்பிடும்முன் இரண்டு தம்ளர்கள் தண்ணீர் குடித்தால் உடல் எடையை குறைக்க உதவும். அலுவலகத்தில் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை பார்க்காதீர்கள். அவ்வப்போது எழுந்து சிறுநடை பயிலுங்கள். போன் பேசும்போது உட்கார்ந்து கொண்டு பேசாமல் நடந்து கொண்டே பேசுங்கள். இதனால் தேவையற்ற கலோரிகள் குறையும்.
உங்கள் டயட் மெனுவில் சத்து குறைந்த உணவுகள் இருந்தால் அதை இரக்கமின்றி தூக்கி விடுங்கள். சத்துகளை அடிப்படையாக கொண்ட டயட் பட்டியலை எழுதி அதை பின்பற்றுங்கள். முக்கியமாக உணவில் நார்ச்சத்துக்களும், புரதமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஊட்டச்சத்து நிபுணரை கேட்டால் அவர்கள் உங்களுக்கான டயட் சார்ட்டை தயாரித்து கொடுப்பார்கள். உங்களுக்கு எந்த சத்து குறைபாடாக இருக்கிறதோ அதை ஈடுசெய்து கொடுத்தால்தான் உடல் ஃபிட்டாக இருக்கும்.
சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். சாப்பிடும் நேரத்தை தள்ளிப் போடக்கூடாது. அது உங்களது உடம்பில் அதிக கொழுப்புகளை தங்க செய்து உடற்பருமனை உருவாக்கும். சின்ன இடைவெளிகளில் ஆரோக்கியமான சிறு உணவுகளை சாப்பிட்டுக் கொள்வது உடலை எப்போதும் எனர்ஜியாக வைக்கும். அவித்த சுண்டல், கொள்ளுப்பயிறு, நிலக்கடலை, சோயாபீன்ஸ் ஆகியவற்றை இதுபோன்ற இடைவேளைகளில் சாப்பிடலாம்.
பிடிக்காத விஷயங்களை ஒருபோதும் செய்யாதீர்கள். நீங்கள் செய்யும் வேலையை விரும்பி செய்யுங்கள். அதில் வரும் சவால்களை சமாளியுங்கள். ஆனால், அந்த டென்ஷனை அலுவலகத்திலேயே விட்டு விடுங்கள். வீட்டுக்குக் கொண்டு போகாதீர்கள். அது உங்கள் உடல்நலம், மனநலம் இரண்டையும் பாதிக்கும்.
மன அழுத்தம், அதிக நொறுக்கு தீனிகளை சாப்பிடச் செய்து பருமனை உருவாக்கும். மன அழுத்தம் தரும் சூழ்நிலைகளை போதிய அளவில் தவிர்ப்பது உடல்நலத்துக்கு நல்லது. மனதை அமைதிப்படுத்த யோகா, தியானம் ஆகிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சிரிப்பு யோகாவை பயிற்சி செய்வதன் மூலம் நாள் முழுவதும் புன்னைகையுடன் வேலை செய்ய முடியும்.
எட்டுமணி நேர நிம்மதியான தூக்கமும் உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். சரியான நேரத்துக்குத் தூங்க செல்ல வேண்டும். பெரியவர்களுக்கு எட்டுமணி நேர தூக்கமும், பதின்பருவத்தினருக்கு 10 மணி நேர தூக்கமும் அவசியம். அப்போதுதான் மூளையில் இருக்கும் செல்களும் புத்துணர்வு அடையும். சரியான தூக்கம் இல்லையென்றால் எந்த வேலையையும் சரியாக செய்ய முடியாமல் சோர்வு இருந்து கொண்டே இருக்கும். எனவே தூக்கம், உடற்பயிற்சி, சத்தான உணவுகள் அனைத்தும் சேர்ந்துதான் உங்களை ஃபிட்டாக வைக்கும்.

- விஜய் மகேந்திரன்

முருங்கை கீரை


பழங்காலத்தில், எந்த கிராமத்துக்குச் சென்றாலும் வீட்டில் ஒரு முருங்கை மரம் அவசியம் இருக்கும். ஆனால், இந்த காலத்தில் ‘வாஸ்துபடி முருங்கை வைக்கக்கூடாது. வீட்டின் முன் முருங்கை இருந்தால் அவ்வீட்டு ஆணுக்குத் தீங்கு நடக்கும்’ என்று வதந்தி பரப்பி முருங்கையை வீட்டில் பார்ப்பது அரிதாகிவிட்டது. ஆனால், நம் முன்னோர் நம்மை விட அறிவியல் அறிவு நிறைந்தவர்கள். ஒவ்வொரு வீட்டிலும் பின்பக்கம் ஒரு முருங்கை மரமேனும் இருக்கும். பொதுவாகவே, மரங்கள் பகலில் நமக்குத் தேவையான ஆக்சிஜனையும், இரவில் நமக்குத் தேவை இல்லாத கார்பன் டை ஆக்சைடையும் வெளியேற்றும். இரவில் யாரும் பின்பக்கம் போகாததால், தோட்டமும் மரங்களும் பின்பக்கமே அமைத்திருந்தனர். முன்பக்கம் நட்பு வளர்க்க திண்ணை அமைத்திருந்தனர்.
ஆனால் இன்றோ, திண்ணையும் இல்லை முருங்கையும் இல்லை, ஆரோக்கியமும் இல்லை…
நாம் அனைவரும் பள்ளி புத்தகங்களில் படித்திருப்போம், 300க்கும் மேற்பட்ட நோய்களை முருங்கை குணப்படுத்தும் என்று. வேரில் இருந்து பூ வரை உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் நமக்குத் தெரியும். அதன் மருத்துவப் பயன்களைப் பற்றியும், உணவில் சேர்த்துக்கொள்ளும் முறையையும் விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் கலாராணி சரவணன். ‘இருக்கவே இடம் இல்லை, குடிக்கவே தண்ணீர் இல்லை என்று பல காரணம் சொல்லுகிறோம். அடுக்குமாடி குடியிருப்பில் பின் பக்கம் ஒரு 2 X 2 இடம் இல்லாமலா போய்விடும்? முருங்கை மரம் ‘சாகா மரம்’ என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆகவே வெயிலோ, மழையோ, தண்ணீர் பஞ்சமோ, முருங்கை அனைத்தையும் தாங்கும். ஏன் ஒடித்தாலுமே நன்கு தழைக்கும்.
முருங்கையின் சில பயன்களை இங்கு குறிப்பிட்டால் முன்பு போல் பல முருங்கை மரம் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.
முருங்கைக்கு பல பயன்கள் உள்ளன. சுருக்கமாக அற்புதமான அழகும் ஆச்சர்யமூட்டும் ஆரோக்கியமும் முருங்கையால் நமக்குக் கிட்டும்.
வேரிலிருந்து ஆரம்பிக்கலாமா?
வேர்: ஆயுர்வேதத்தில் முக்கிய இடம் வகிக்கிறது முருங்கை வேர். வாய் புண்ணுக்கு, முருங்கை வேரை தண்ணீரில் 5 – 7 நிமிடம் கொதிக்க வைத்து அந்த தண்ணீர் வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் சரியாகும்.
2007இல் கொல்கத்தாவில் நடத்திய ஆய்வு ஒன்றில் முருங்கை வேரில் கருப்பைப் புற்றுநோயை குணப்படுத்தும் மூலக்கூறு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இதுபோல் பல ஆய்வுகள் வெளிநாடுகளிலும் முன்னரே செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சூடானில் 2010இன் ஆய்வுப்படி ரத்தப் புற்றுநோய்க்கும் முருங்கை வேர் நல்ல பயன் அளிப்பதாக கண்டு பிடித்துள்ளனர். இது தவிர, மலேரியா, ரத்தக் கொதிப்பு, வயிற்று உபாதைகள், ஆஸ்துமா, சர்க்கரை நோய், மகப்பேறு சமயத்தில் வெளியேறாத நஞ்சுக்கொடி அகற்றவும் முருங்கை வேர் பயன்படுத்தப்படுவதாக அதே ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் வேரைப் பொடித்து குப்பியில் அடைத்து விற்கவும் செய்கிறார்கள்.
விதை: முருங்கை விதையில் இருந்து எண்ணெய் எடுக்கலாம். முருங்கை விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யில் முஃபா (MUFA) எனப்படும் கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால் அது உடலுக்கு, குறிப்பாக ஈரலுக்கு மிக நல்லது. மேலும், இதில் ஒமேகா 3 அமிலம் அதிகம் இருக்கிறது. ஆகவே, செல் உடையும் நோய்கள் (cell degeneration) வராமல் தடுக்கும். அப்படி தடுப்பதால் நம் உடலில் பல வியாதிகள் வராமல் தடுக்கப்படுகிறது.
குடிநீரில் தொற்றுக்கிருமிகளை நீக்கி சுத்தப்படுத்த முருங்கை விதை பயன்படுவதாக இந்தியாவில் 2012இன் ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
முருங்கை இலையில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதாக கூறுவது தவறு. ஆகவே வலுவான எலும்புக்கு அனைவருக்கும் தேவை. மேலும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ அதிகம் தேவை. இவை இரண்டும் முருங்கை இலையில் அதிகம் உண்டு. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலைச் சரி செய்யும். பூ மற்றும் இலையில் நோய் எதிர்ப்புசக்தி (antibiotic effect) உள்ளது.
இக்கீரையைப் பொரியல் செய்து அடுப்புலிருந்து இறக்கும்போது ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறி எடுத்து தயார் செய்த பொரியலை தினமும் ஒருவேளை பகலுணவில் தொடர்ந்து 40 நாட்கள் சேர்த்து வந்தால் உடல் வலிமை பெறும். கண் தொடர்பான நோய்கள் நீங்கும். உடலுக்கு அழகும், பலமும் கொடுக்கும். முருங்கை கீரையை நெய் விட்டு வதக்கிக் சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.
முருங்கை இலையை கொண்டு மிளகு ரசம் வைத்து சாப்பிட்டால் வந்தால் நாளடைவில் உடல் வலி, கை கால் அசதியும் யாவும் நீங்கும்.
ஆண்களுக்கு முருங்கைக் கீரையை நெய்யில் பொரியல் செய்து உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் ஆண்மை பிரச்னை பெருமளவு குறையும்.
தாது விருத்தியும் உண்டாகும். இதை உணவுடன் 40 நாட்கள் சாப்பிட்டால் இல்லற வாழ்க்கை இன்பமாகும். தினமும் உணவில் சேர்த்து வந்தால் ரத்த சோகையைத் தடுக்கலாம். இக்கீரை ரத்த விருத்திக்கு மிகவும் பயன்படுகிறது. பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் இக்கீரையை உணவுடன் சேர்த்து வந்தால் பால் நன்றாக சுரக்கும். இக்கீரை சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் மணமாகாத பெண்களுக்கு வயிற்றுநோயும் அடி வயிற்று வலியும் நீங்கும். எள்ளும் முருங்கைக் கீரையையும் சேர்த்து அவித்து உண்பதால் பித்த வாயுவால் ஏற்படும் மார்பு வலி நீங்கும்.

-விஜய் மகேந்திரன்

பேச்சிலர் பிரெட் ஆம்லெட்!



குடும்பத்துடன் இருப்பவர்களுக்கே காலை உணவு சாப்பிட முடியாமல் அலுவலகம் ஓடுவது வாடிக்கையான செயல். இதில் அறைவாசிகளாக தங்கி ஹோட்டலில் சாப்பிடும் இளைஞர்களின் நிலையை பற்றி விளக்க வேண்டியதில்லை. அலுவலகம் கிளம்பும் முன் இன்றும் அதே பொங்கல் அல்லது உப்புமாவா? என்று சலிப்பவர்கள் சில எளிய பொருட்களை வைத்தே காலை உணவை அவர்களே செய்து சாப்பிட்டுவிட்டு அலுவலகத்துக்கு ஆரோக்கியமாக செல்லலாம். இப்படி பேச்சிலர் சமையல் செய்பவர்களுக்கு பெரிதும் உதவுவது பிரெட். பிரெட்டை வைத்து மட்டும் 78 விதமான உணவுகளை செய்யலாம் என்கிறது சமையல் கலை புத்தகம். அதில் மிக எளிமையானது பிரெட் ஆம்லெட். கடையில் 30 ரூபாய்க்கு விற்கப்படும் பிரெட் ஆம்லெட்டை எளிய முறையில் இருக்கும் பொருட்களை கொண்டே தயாரிக்கலாம்.
செய்யும் முறை:
தோசைக்கல்லில் ஒரு டீஸ்பூன் வெண்ணையை விட்டு லேசாக உருக்கவும். அதில் கொஞ்சம் வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி போட்டு மிதமான சூட்டில் தாளிக்கவும். அதில் தேவையான அளவு உப்பை தூவவும். ஒரு கிண்ணத்தில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றவும். அதில் தாளித்த வெங்காயம், பச்சைமிளகாய் கலவையை ஊற்றவும். நன்றாக கலக்கிய பின்பு, அதில் சிறிதாக நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகளை போட்டு நன்கு கலக்கவும். ஒரு டீஸ்பூன் உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய் பொடி ஆகியவற்றையும் போட்டு கலக்கவும். அதில் பிரெட் துண்டுகளை தோய்த்து எடுக்கவும். தோசைக்கல்லில் ஒரு ஸ்பூன் வெண்ணையை வெட்டி எடுத்து மறுபடியும் போடுங்கள். உருகும் போது முட்டையில் தோய்த்த பிரெட்டுகளை ஒவ்வொன்றாக அதன் மீது போட்டு இரு பகுதிகளும் நன்றாக வெந்தவுடன் எடுங்கள். சுவையான கொத்தமல்லி பட்டர் பிரெட் ஆம்லெட் ரெடி. இந்த பிரட் ஆம்லெட் வைட்டமின், புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகிய முக்கிய சத்துக்கள் நிறைந்த உணவாகும். இதை புதினா சட்னிக்கு தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். உங்கள் காலை வேளையை சுறுசுறுப்பு நிறைந்ததாக மாற்றும்.
சரி இந்த பொருட்களில் பாதி உங்கள் அறையில் இல்லை என்றால் எளிதான முறையில் பிரெட் ஆம்லெட் செய்யும் இன்னொரு முறை. மூன்று முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி கலக்கவும். தேவையான அளவு மஞ்சள்பொடி, மிளகுப்பொடி, உப்பு ஆகியவற்றை முட்டை கலவையில் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.பிரெட் துண்டுகளின் முனைகளை சீவி முட்டை கலவையில் முழுதாக தோய்த்து எடுக்க வேண்டும்.பிறகு சூடான தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் சுவையான பிரெட் ஆம்லெட் ரெடி. இதனுடன் தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னி தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வெகு எளிதாக செய்து சாப்பிட ஏற்ற டிஷ். இப்படி எளிமையான உணவுகளை வீட்டிலேயே தயார் செய்து சத்தாக சாப்பிடுங்கள்!
- விஜய் மகேந்திரன்

Monday, November 13, 2017

’ஐரீஷ் ஸ்டுவ்’


காலை உணவை சரியாக சாப்பிடாமல் போவதால் தான் பல நோய்கள் வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சத்தான உணவுகளை காலையில் சாப்பிடாமல் போவது, சாப்பாடு சாப்பிடும் நேரத்தை தள்ளி போடுவது ஆகியவை இளமையிலேயே நீரிழிவு பிரச்சனையை உண்டாக்குகிறது. இதை தவிர்க்க காலை உணவை சத்தாகவும் சுவையாகவும் சாப்பிட சொல்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
அயர்லாந்து நாடு இங்கிலாந்தின் லண்டனுக்கு அருகே அமைந்துள்ளது. இயற்கையாக தாவரங்களை வளர்த்து காய்கறிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள ஒரு நாடு. அவர்களுக்கு தக்காளி மட்டும் ஸ்பெய்ன் நாட்டில் இருந்து வருகிறது. இயற்கையாக பண்ணைமுறையில் வளர்க்கப்பட்ட ஆடுகளும், கோழிகளும் இங்கே பிரபலம். ஐரிஷ் கோட், ஐரிஷ் சிக்கன் என உலக அளவில் பிராண்டுகளாக மதிக்கப்படுகின்றன. இத்தனை புகழ் உடைய அயர்லாந்து நாட்டில் பல வகை உணவுகள் பிரபலமாக இருந்தாலும், அவர்களுக்கான காலை உணவில் மிகவும் விரும்பி உண்ணப்படுவது ஐரீஷ் ஸ்டுவ்( Irish Stew). இதை செய்வதும் எளிது. புரதம், வைட்டமின், தாதுச்சத்துக்கள் நிறைந்த உணவாகும்.
எப்படி செய்வது?
இதை செய்வதற்கு கொஞ்சம் எலும்புடன் சேர்த்த மட்டன் துண்டுகளை வேக வைக்க வேண்டும். அதனுடன் உருளைக்கிழங்குகளை பெரிய துண்டுகளாக நறுக்கி போட வேண்டும். கேரட்டையும் சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு சூப்பாக வரும் வரை வேக வைக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து தயார் செய்தால் ஐரீஷ் ஸ்டுவ் ரெடி. இந்த உணவு சூப்பாகவும் இருக்கும். மட்டனும் இருக்கும். காய்கறிகளும் இருக்கும். இப்படி எல்லாம் கலந்த கலவையை காலையில் ஒரு கிண்ணம் சாப்பிட்டு கிளம்பினால் அந்த காலை வேளையை மிகவும் எனர்ஜியாக கழிக்கலாம். இந்த உணவை தான் அயர்லாந்து நாட்டில் வீட்டிலும், உணவகங்களிலும் காலை உணவாக விரும்பி சாப்பிடுகிறார்கள். மட்டனுக்கு பதிலாக சிக்கன் போட்டு இதை தயாரிக்க முடியும். சைவ உணவுப்பிரியர்கள் மட்டனுக்கு பதிலாக காளான் போட்டு தயாரித்து சாப்பிட்டு மகிழலாம்.

- விஜய் மகேந்திரன்

முடக்கத்தான் ஆம்லெட்


முடக்கத்தான் கீரை உடலுக்கு நல்ல பலன்களை தரக்கூடியது. முக்கியமாக கை, கால் வலி, வாதங்களை நீக்கக்கூடியது. உடல் சோர்வாக இருந்தாலும் இந்த கீரையை அவித்து சாப்பிட்டால் உடல் புத்துணர்ச்சி பெறும். சூப்பாக இந்த கீரையை குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். வாய்வு பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த கீரை அருமருந்தாக வைக்கிறது. இந்த கீரை கிடைக்க பெறாத இடத்தில் இருப்பவர்கள் கவலைப்பட தேவையில்லை. முடக்கத்தான் பொடி இப்போது நாட்டு மருந்து கடைகளில், சூப்பர் மார்கெட்டுகளில் கிடைக்கிறது. அதை வாங்கி தினமும் இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நல்ல பயன்களை பெறலாம். இந்த முடக்கத்தான் பொடியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஆம்லெட் நல்ல எனர்ஜி தரும் உணவு. இளைஞர்கள் கிடைக்கும் பொருட்களை வைத்து பேச்சிலர் சமையல் போல வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.
இரண்டு முட்டையை எடுத்து கொள்ளவும். உடைத்து பாத்திரத்தில் ஊற்றவும். இரண்டு சிறிய ஸ்பூன் மிளகுதூள், ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு டீஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கலக்கிக்கொள்ளவும். அதன் பிறகு முடக்கத்தான் பொடி இரண்டு ஸ்பூன் போட்டு கலக்கவும். கரைய கொஞ்சம் நேரமாகும். ஆகவே நன்றாக கலக்கவும். அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லைப் போடவும். இரண்டு ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றி கொஞ்சம் காய வைக்கவும். பிறகு முட்டை கலவையை ஊற்றி இரண்டு நிமிடம் கழித்து வெந்தவுடன் பதமாக ஆம்லெட்டாக எடுத்து தட்டில் போடவும். இப்போது முடக்கத்தான் ஆம்லெட் ரெடி. இதை காலை உணவாக சாப்பிட்டால் கை, கால் வலி, உடல் சோர்வு எல்லாம் போய் சுறுசுறுப்பான மனநிலைக்கு வருவீர்கள்! முட்டை சிலருக்கு வாய்வு பிரச்னையை ஏற்படுத்தும் என்பார்கள். ஆனால், முடக்கத்தான் பொடியும், மிளகு பொடியும் அந்த பிரச்னையை நீக்கி செரிமானத்தையும் அதிகப்படுத்தும்.
- விஜய் மகேந்திரன்

ஆட்டுக்கால் சூப்பும் , அரைடவுசர் பையனும்...


இன்று அசைவ உணவுகளை மையமாக வைத்து சர்ச்சைகள் செய்வது சமூக வலைதளங்களில் அதிகமாகிவிட்டது. நான் சொல்லும் சம்பவம் நடந்தது எட்டு வருடங்களுக்கு முன்பாக. ஒரு தனியார் மருத்துவமனையில் பிஸியோதெரபிஸ்ட் ஆக நான் வேலை பார்த்து வந்தேன். அணு தினமும் ஏதாவது வலியைச் சுமந்து வருபவர்களைப் பார்க்க வேண்டும். கழுத்து வலி, முதுகு வலி உள்ளவர்கள் அதிக அளவில் வருவார்கள். பொதுவாக மூட்டு தேய்மானம் வயதானவர்களுக்குத்தான் வரும். அவர்களுக்கு கால்சியம், இதர தாது சத்துக்கள் மிக குறைவாக இருக்கும். மூட்டுகளில் சிறிய மின் காந்த அலைகளை (shortwave diathermy) வைத்து வலியை குறைத்து அனுப்புவோம்.
அன்று நான் பார்த்த பையனுக்கு வயது 12 தான். இரண்டு மூட்டுகளிலும் எலும்பு தேய்மானம் இருந்தது. அம்மாவை விசாரித்தபோது அவன் சத்தான உணவுகளை சாப்பிடுவது இல்லை என்று ஒப்புக்கொண்டார். வெறும் பருப்பு சாதமும், தயிர் சாதமும் சாப்பிடுவான். காய்கறிகள் கூட பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. நான், அந்த பையனின் அம்மாவிடம், “அவனுடைய இப்போதைய மூட்டு வலியை தற்காலிகமாக குறைத்து அனுப்பலாம். சில மூட்டு பயிற்சிகள் சொல்லியும் தருகிறேன். ஆனால், நிரந்தரமாக இந்த பிரச்னையை நீக்க வேண்டும் என்றால் உணவு முறையை மாற்றி நல்ல சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். கால்சியம் சத்தை அதிகப்படுத்த வேண்டும். முருங்கை கீரை, பால், மீன், முட்டை இவற்றில் கால்சியம் அதிகமுள்ளது” என்றேன். அவர்கள் சைவ உணவு மட்டும் சாப்பிடும் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். நியாயப்படி கீரை மட்டும்தான் அவர்களால் கொடுக்க முடியும். ஆனால், பையன் நடக்கவோ அல்லது படியேறவோ மிகவும் சிரமப்பட்டான்.
“எங்க மதுரையில இப்படி பையன் வீக்கா இருந்தா, ஆட்டுக்கால் சூப்போ அல்லது குழம்போ வைத்து கொடுப்பார்கள். உடம்பு வலியெல்லாம் பறந்து போயிரும்” என்று பேச்சு வாக்கில் சொன்னேன். அந்தம்மா அதை பிடித்துக் கொண்டார்கள். “ஆட்டுக்கால் சூப் சாப்பிட்டால் இது சரியாயிடும்னா வேலைக்காரம்மாவை செய்யச் சொல்லி கொடுக்கிறேன். இது ஒரு மெடிசின் மாதிரிதானே” என்றார்.
“கால்சியம், சில தாதுக்கள், வைட்டமின் என முக்கிய சத்துக்கள் ஆட்டுக்கால் சூப்பில் உண்டு. அதை குடித்தால் மட்டும் போதாது. நான் கொடுக்கும் பயிற்சிகளையும் வீட்டில் செய்து வர வேண்டும்” என்றேன். அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். சாப்பிட வேண்டிய உணவுகளை ஒரு லிஸ்ட் எழுதியும் கொடுத்தேன்.
ஒரு மாதம் கழித்து பையன் அம்மாவுடன் வந்திருந்தான். நல்ல சுறுசுறுப்பாக இருந்தான். பரிசோதனை செய்தபோது மூட்டு வலி பெருமளவு அவனுக்கு குறைந்து இருந்தது. படிகள் ஏறி, இறங்க சொல்லி பார்த்தேன். எந்த பிரச்னையும் இல்லை. அவனது அம்மா, “நீங்க சொன்ன ஆட்டுக்கால் சூப் நல்லாவே வேலை செய்யுது. ரொம்ப நன்றி” என்றார். “நான் சொன்னாலும் உங்க பையனுக்கு சரியாகணும்னு எடுத்த உங்க முடிவுதான் முக்கிய காரணம்” என்றேன்.
“என்ன சஞ்சய் இப்ப ஓகேவா?” என்றேன். “சார், வஜ்ஜிரம் ஃபிஷ் வறுவல் டேஸ்டா இருக்கும்னு ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்க. சாப்பிட ஆசையா இருக்கு” என்றான். “பையன் புல் நான்-வெஜ்ஜாக மாறிவிடுவான் போல” என்றேன். உடனே அவங்க அம்மா, “சார் வளர்கிற பையன் சாப்பிடட்டும். நல்ல நான்-வெஜ் ரெஸ்டாரண்ட் கூட்டி போகத்தான் அவனுக்கு ஆள் இல்லை. நானும், என் வீட்டுக்காரரும் கூட போக முடியாது. தப்பா நினைக்கலைன்னா நீங்க கூட்டிப்போய் அறிமுகப்படுத்துங்க. சண்டே கார் அனுப்பிடறேன். எந்த ரெஸ்டராண்ட், எவ்வளவு செலவுனாலும் சரி” என்று சொல்லி விட்டார். ஒவ்வொரு ஞாயிறும் மதியம் 12 மணிக்கு என் வீட்டு முன் காரும், பையனும் வந்து விடுவர். தலப்பாக்கட்டி, வேலு மிலிட்டரி என்று ஆரம்பித்து எல்லா சிறந்த அசைவ உணவகங்களுக்கும் அவனை டூர் கூட்டிப் போக வேண்டும். இது மூன்று வாரம் தொடர்ந்தது. பையன் இப்ப அமெரிக்காவில் கல்லூரி படித்து வருகிறான் . “சுறா புட்டெல்லாம் இங்கே டேஸ்டா இல்லை” என்று போனவாரம் போனில் அலுத்துக் கொண்டான். ஆகவே, ‘உணவே மருந்து’ என்பதை உணர்ந்தால் போதும். சைவம், அசைவம் எல்லாம் அவரவர் மனதில்தான் இருக்கிறது.

- விஜய் மகேந்திரன்

Monday, November 6, 2017

மீரா கதிரவனின் படத்தை ஏன் பார்க்க வேண்டும்?

மீரா கதிரவன் எனது வாழ்நாளில் ஒன்றாகி போன நண்பர்! அசலான படைப்பாளி! அவருக்கும் எனக்குமான நட்பை விவரிக்க ஒரு தனி கட்டுரை ஒன்றை தான் நான் எழுத வேண்டும். 2005 டிசம்பரில் ஒருநாள் இயக்குநர் லோஹிததாஸ் முன்னிலையில் மீராவை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் எழுத்தாளர் ஜெயமோகன். அவர் எனக்கு செய்த நல்ல விடயங்களில் அது முக்கியமானது. மீரா அப்போது நெசப்பாக்கத்தில் இருந்தார். எனது முதல் கதை எழுத அவர்தான் தூண்டினார். 'சிரிப்பு' என்ற கதை கணையாழியில் வந்த போது நண்பனாக மிகவும் சந்தோஷப்பட்டார். நிறைய இலக்கிய படைப்பாளிகளை புத்தகத்திலும் , நேரிலும் அறிமுகப் படுத்தியவர் அவரே...காலக்குறி,கணையாழி, கல்கி போன்ற இதழ்களில் நல்ல சிறுகதைகளை அவர் எழுதியுள்ளார். இப்போதைய பல நண்பர்கள் அவரது எழுத்தாளர் முகத்தை அறிய மாட்டார்கள் என்பதால் இந்த தகவல்.

அவர் அறைக்கு சென்ற நாட்களில் அவரே சமைத்து பரிமாறுவார். ஒருநாள் சிக்கன் எடுத்து சமைத்தார். அற்புதமான சுவையான குழம்பு இன்னும் நினைவில் உள்ளது. தன்னை காண வந்த நண்பர்கள் சாப்பிடாமல் போகக்கூடாது என நினைப்பார் . ' அவள் பெயர் தமிழரசி' பிறகு 'விழித்திரு' படத்தை முறையான தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் அவரே தயாரித்து இயக்கினார். அதன் பொருட்டு அவர் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அருமையான திரைக்கதை பிரதி. அவர் திறமையின் பால் நம்பிக்கை கொண்ட நடிகர்கள் அவருக்கு கை கொடுத்து உதவினார்கள். கிருஷ்ணா, விதார்த்,வெங்கட்பிரபு, தன்ஷிகா, ராகுல், எரிகா என்னும் பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் பக்க பலமாக அமைந்தது. படத்தை வெளியீட்டிற்கு சில மாதங்கள் முன்பே அவரின் அழைப்பின் பெயரில் சிறப்புக் காட்சியில் பார்த்துவிட்டாலும், நேற்று ஐநாக்ஸ் திரையரங்கில் ஒளிப்பதிவாள நண்பர் சிவசுந்தருடன் போய் பார்த்தேன். முற்றிலும் புதிதாக இருந்தது. ரசிகர்களின் கைதட்டலும், சிரிப்பும் ஆங்காங்கே வந்து கொண்டேயிருந்தது.

'விழித்திரு' படம் மொத்தத்தில் அதிகார வர்க்கத்துக்கு எதிரான படம். அடித்தள மக்களுக்கு சாதகமான படம். முத்துக்குமார் (கிருஷ்ணா) என்னும் அப்பாவி இளைஞனை போலீஸ் எவ்வாறு செய்யாத குற்றத்தில் சிக்க வைக்க பாடுபடுகிறது என்பதை மிக விரிவாக பேசியிருக்கிறது. ஊழல் அரசியல்வாதிகளும், காவல்துறையும் ஒன்றிணைந்து எப்படி எல்லாம் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்பதை பல்வேறு காட்சிகளில் ஆவணப்படுத்தியிருக்கிறார் மீரா. இந்த ஓரிரவில் நடக்கும் கதையில் திருடர்களாக வந்தாலும் அறத்துடன் செயல்படும் விதார்த், தன்ஷிகா பல இடங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்கள். பணக்கார பையனாக வரும் ராகுல் பாஸ்கரன், எரிகாவிடம் சிக்கிக்கொண்டு படாதபாடு படுகிறார். அதுவும் தனது பர்ஸை தொலைத்துவிட்டு, பிச்சைக்காரர் ஒருவரிடம் ஒரு ரூபாய் வாங்கி போன் செய்யும் காட்சியில் திரையரங்கை சிரிப்பால் அதிரவைக்கிறார். அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. வெங்கட்பிரபு கண் தெரியாத டப்பிங் கலைஞராக வந்து, அவரது மகள் சாராவை தொலைத்துவிட்டு தேடும் காட்சிகளில் மனதை கனக்க செய்கிறார். இந்த நான்கு கிளைமேக்சில் ஒன்றாக சேரும் இடம் அருமையாக வந்திருக்கிறது. அதுவே உண்மையான திரைக்கதையின் வெற்றி. படத்தின் இறுதிக்காட்சி கடந்த வருடங்களில் நடந்த பல உண்மை சம்பவங்களை நினைவூட்டுகிறது.

முதலில் இத்தனை நடிகர்களை கொண்டு படம் முழுக்க இரவில் படமாக்கியிருக்கும் திறமைக்கே மீரா கதிரவனை பாராட்டவேண்டும். அவ்வளவு எளிதான காரியமல்ல. படம் எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வு கூட ஏற்படாமல் விறுவிறுப்புடன் செல்கிறது. நடித்த நடிகர்கள் அனைவரும் ஒரு காட்சியில் வருபவர் கூட கதையை உணர்ந்து கவனமாக நடித்துள்ளது படத்திற்கு பெரிய பலம். தன்ஷிகா நடித்த சிறந்த படங்களில் 'விழித்திரு' கண்டிப்பாக இடம் பெறும். திறமையாக நடித்துள்ளார். வெங்கட்பிரபுவை இந்த மாதிரி இதுவரை சீரியசான கதாபாத்திரத்தில் பார்த்து இருக்க மாட்டோம். அச்சு மற்றும் சத்யன் மகாலிங்கத்தின் பின்னணி இசையும் படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது. மீரா கதிரவன் போன்ற படைப்பு திறமையுள்ள இயக்குநர்களை வெற்றியடைய செய்வதன் மூலமாகவே சிறந்த தமிழ் படங்களை பெற முடியும். 'விழித்திரு' படத்தை இந்தி, தெலுங்கு என்று எந்த மொழியில் எடுத்தாலும் பெரிய வெற்றி பெறும். அத்தனை சாதகமான விஷயங்களை தன்னுள் கொண்டுள்ளது. எனவே குடும்ப உறுப்பினர்களுடன் சென்று இந்த படத்தை பாருங்கள். நல்ல சினிமா பற்றிய விவாதத்தை முன்னெடுங்கள் நண்பர்களே...

- விஜய் மகேந்திரன்

Monday, May 8, 2017

ரஜினி கதாபாத்திரமாக வாழ்ந்த 'மூன்று முடிச்சு'





இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் பாண்டியன் கதாபாத்திரத்தில் சிவாஜிராவ் கெய்க்வாடை ரஜினிகாந்தாக அறிமுகப்படுத்தினார். ரஜினிகாந்த் அவர் மேஜர் சந்திரகாந்த் படத்தில் முக்கிய கதாபாத்திரத்துக்கு வைத்த பெயர். அந்த பெயரை தான் ரஜினிக்கு வைத்தார். ரஜினிகாந்த்தை ஒரு படத்தில் அறிமுகப்படுத்தியதோடு பாலச்சந்தர் விட்டுவிடவில்லை. தொடர்ந்து ரஜினி தன்னை நிரூபிக்கும் படியான கதாபாத்திரங்களைக் கொடுத்து செத்துக்கினார். அபூர்வ ராகங்களில் ரஜினி அறிமுகமானார் அவரது கதாபாத்திரம் படத்தின் முக்கிய திருப்புமுனைகளில் ஒன்று. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் பழைய மனைவியான ஸ்ரீவித்யாவை காணவருவார். கமல்ஹாசன் அவரை தனது பைக்கில் உட்கார வைத்து அழைத்து சென்று விவாதிப்பார். நிறைய காட்சிகள் இந்தப்படத்தில் ரஜினிக்கு கிடையாது.ரஜினியின் நடிப்பு திறமையை காட்ட முதல் படத்தில் பெரிய வாய்ப்புகள் இல்லை. ரஜினியின் இரண்டாவது படம் கன்னடத்தில் புட்டண்ணா கனகல் இயக்கிய கதா சங்கமம். மூன்றாவது படம் தெலுங்கில் அவள் ஒரு தொடர்கதையை பாலச்சந்தரே ரீமேக் செய்த 'அந்துலேணி கதா'. இந்த படத்தில் ஜெய் கணேஷ் தமிழில் செய்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்தார். நான்காவது படம் தான் மூன்று முடிச்சு. கமல்ஹாசன் அப்போதே பெரிய ஸ்டார். அவர் கெஸ்ட் ரோல் செய்தால் படத்தின் வியாபாரத்திற்கு உதவும் என்றும் , பாலச்சந்தரின் படங்களில் அவர் வரிசையாக நடித்து வந்ததால் இதில் பாலச்சந்தர் கமலை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தார் எனவும் சொல்பவர்கள் உண்டு. ஆனால் இந்த படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி என மூன்று ஐகான்கள்களை தவிர வேறு யாரையும் யோசிக்கக் கூட முடியாது. இந்த கதையை பல வருடங்கள் கழித்து இந்தி , பெங்காலி போன்ற அரைகுறையாக திருடப்பட்டு படமாக்கப்பட்டது. இவர்களில் பத்தில் ஒரு பங்கு நடிப்பைக் கூட வட இந்திய நடிகர்களால் நடிக்க முடியவில்லை. அந்த படங்களும் தோல்வியுற்றன. பல மொழிகளில் அதிகம் ரைட்ஸ் வாங்காமல் உல்டா செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படங்களில் ' மூன்று முடிச்சு' படமும் ஒன்று. இந்த படத்தை கதையைக்கொண்டு பின்னால் ஒரு தொலைக்காட்சி சீரியல் கூட எடுத்தார்கள்.



கமலும், ஸ்ரீதேவியும் காதலர்கள் ஆனால் இந்த விஷயம் ரஜினிக்கு பிடிக்காது. ரஜினி ஸ்ரீதேவியின் அழகை கண்டு அடைய மட்டுமே நினைப்பார். இருவரையும் பிரிக்க எல்லா நாடகங்களும் நடத்துவார். ரஜினியின் குணம் பற்றி கமலுக்கு என்ன சொல்லியும் நம்பமாட்டார். படத்தின் முக்கிய கட்டத்தில் கமலையும், ஸ்ரீதேவியையும் வைத்து படகை ஒட்டிக்கொண்டு போகும் தான் கமலை வேண்டுமென்றே தள்ளிவிடுவார். காப்பாற்ற முயற்சிக்க மாட்டார். கமல் மூழ்கிய பின் மெதுவாக பாடிக்கொண்டே துடுப்பை ஓட்டுவார். அந்த காட்சியில் படம் பார்த்துக்கொண்டிருப்பவர்களின் மொத்த வெறுப்பும் ரஜினி மீது விழும் படி நடித்திருப்பார். அடுத்து ஸ்ரீதேவியின் நிலை என்ன? என்ற பதைபதைப்பை தனது ரியாக்சன் மூலம் உருவாக்கி இருப்பார் ரஜினி. போலீஸ் கேட்கும் போது எனக்கு நீச்சலே தெரியாது என்று பொய்யாக சாதிப்பார். இரண்டாம் பாதியில் எந்த பெண்ணை அடைய நினைக்கிறாரோ அவளே அவரது அப்பாவை கல்யாணம் செய்து கொண்டு சித்தியாக வந்துவிட இருவருக்கும் போராட்டம் நடக்கிறது. ரஜினி இறுதியில் என்னாவாக ஆகிறார் என்பது தான் படத்தின் கிளைமேக்ஸ். மிக பெரிய வெற்றியை அடைந்து ரஜினியின் நடிப்புக்கு முதன்முதலில் கைததட்டல்களை பெற்றுக்கொடுத்த படம் இது. படம் முழுக்க எதிர்நாயகனாக நடித்தாலும் அவர் மீது தான் கதை பயணிக்கிறது. ரஜினியின் முழுத்திறமையை காட்டி நடிக்க பாலச்சந்தர் கொடுத்த வாய்ப்பு இது. ரஜினியின் சிகரெட் தூக்கி போட்டு பிடிக்கும் ஸ்டைலை உதவியாளர் ஒருவர் பாலச்சந்தரிடம் சொல்ல அதை படத்திலும் செய்யச் சொல்லி பயன்படுத்தியிருக்கிறார். பாலச்சந்தரின் முன் சிகரெட் குடித்து நடிக்க முதலில் ரஜினி , தயங்க அந்த கதாபாத்திரத்துக்கு தேவை என சொல்லி பாலச்சந்தர் நடிப்பை வாங்கியிருக்கிறார். இவர் தூக்கி போட்டு பிடிக்கும் சிகரெட் ஸ்டைலை படமாக்க சிறப்பான ஹை ஸ்பீட் கேமராவை பயன்படுத்தியாக பாலச்சந்தரே ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார்.



ஆரம்ப காலப் படங்களில் ரஜினியின் மீது ஸ்டைல் இமேஜ் விழ இந்தப்படம் பெரும் காரணமாக அமைந்தது.. ரஜினியின் கதாபாத்திரம் மூலம் எதிர்பாராத திருப்பத்தால் திரைக்கதையில் வித்தியாசம் காட்டினார் பாலச்சந்தர். ரஜினியின் உண்மையான முகம் வெளிப்படும்போது கதை வேறு தளத்தில் பயணிக்கும். மூன்று முடிச்சு 'ஓ சீதா கதா' என்று கே.விஸ்வநாத் தெலுங்கில் இயக்கிய படத்தை முறையாக ரைட்ஸ் வாங்கி எடுத்தாலும் மூன்று முடிச்சின் திரைக்கதை பாலச்சந்தரின் பாணியில் நிறைய புதுமைகள் புகுத்தப்பட்டே எடுக்கப்பட்டது. இதே படம் மலையாளத்திலும் ரீமேக் ஆனது. அதில் ரஜினி நடித்த வில்லன் கதாபாத்திரத்தை கமல் ஏற்று நடித்தார்.



இந்த படத்தில் கமல், ரஜினி தங்கியிருக்கும் மொட்டைமாடியும் அதை சுற்றியுள்ள கட்டிடங்களும் இப்போது எல்டாம்ஸ் ரோடில் இருக்கும் அவரது சொந்த வீட்டில் எடுக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பின் இடைவேளைகளில் ரஜினியும் , கமலும் நிறைய பேசிக்கொள்வார்களாம். அப்போது ஒரு நாள் கமலிடம் பின்னால் படங்களில் பயன்படுத்திய தனது ஸ்டைல்களை செய்து காட்டியிருக்கிறார் ரஜினி. இதை எல்லாம் நடிக்கப்போகும் படங்களில் செய்யப்போகிறேன் என்று ரஜினி சொல்லியிருக்கிறார். கமல் அதற்கு சொன்னாராம் ஒரே வகையான ஸ்டைலை எல்லா படத்திலும் பயன்படுத்த வேண்டாம் என அறிவுரை கூறியிருக்கிறார். அதன் பிறகு ரஜினி ஒவ்வொரு படத்திற்கும் ஒரு ஸ்டைலை பிடித்து கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கிறார். 'ஆடு புலி ஆட்டம்' படத்தில் 'இது ரஜினி ஸ்டைல்' என்ற பஞ்ச் வசனத்தை அடிக்கடி சொல்லுவார். அன்று அவருடன் நடித்துக் கொண்டிருந்த நடிகர்கள் ஒரே மாதிரி நாடகத்தனமாக வசனம் பேசிக்கொண்டிருந்த கால கட்டத்தில் ரஜினி தனது நடிப்பில் புகுத்திய புதுமைகள் தனித்துவமானவை. இவை எல்லாவற்றுக்கும் மூன்றுமுடிச்சு படம் ஒரு தொடக்கப் புள்ளி. இன்று வரைக்கும் கிளாசிக் வரிசையில் இருக்கும் படமும் கூட.


ரஜினி கீழ் வீட்டில் குடியிருக்கும் கேரளப் பணிப்பெண்ணை உறவு கொண்டு கைவிட்டு விடுவார். அவர் ஒரு பெண்பித்தர் என்பதை மிக சிறிய அசைவுகளின் மூலம் நடிப்பில் சொல்லிவிடுவார்.
இப்படத்தில் நடிக்க கமல்ஹாசனுக்கு 30ஆயிரம் ரூபாயும்,ஸ்ரீதேவி அப்போது தான் அறிமுகம் என்றாலும் குழந்தை நட்சத்திரமாக முன்பே நடித்த நடிகை என்பதால் 5 ஆயிரம் சம்பளமும் ரஜினிக்கு 2ஆயிரம் சம்பளமும் கொடுத்தார்கள் என ஸ்ரீதேவி நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். ரஜினிக்கு அப்போது ஒரு லட்சியம் கமல் போல ஸ்டார் ஆக வேண்டும் என்பதாக இருந்திருக்கிறது. ஸ்ரீதேவியின் அம்மாவிடம் 'ஏம்மா ஒரு நாள் நானும் இவர் மாதிரி முப்பதாயிரம் சம்பளம் வாங்குகிற ஸ்டார் ஆகணும், என்னால் முடியுமா? என்று கேட்பாராம். உங்களால் கண்டிப்பாக முடியும், பெரிய ஸ்டாராக வருவீங்க பாருங்க என்று ஸ்ரீதேவியின் அம்மா உற்சாகம் கொடுப்பாராம். சொன்ன மாதிரியே சாதித்து காட்டினார் ரஜினி என்று ஸ்ரீதேவி சொல்லியிருக்கிறார். கருப்பு வெள்ளை படங்களில் கருப்பாக இருந்தாலும் கலையான முகமாக ரஜினியை தமிழ் மக்கள் ஆரம்ப படங்களிலேயே ஏற்றுக்கொண்டார்கள். ரஜினியின் இளம் வயது படங்கள் கருப்பு வெள்ளையில் தான் பாதி எடுக்கப்பட்டவை என்றாலும் முக்கால்வாசி படங்கள் மறக்க முடியாத படங்களாக திகழ்கின்றன. அவர்கள், ஆடு புலி ஆட்டம், தப்புத்தாளங்கள், புவனா ஒரு கேள்விக்குறி ஆகியவைகளை முக்கிய படங்களாக சொல்லலாம்.



ரஜினியும் ஸ்ரீதேவியும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். படத்தின் இடைவேளைக்கு மேல் ரஜினி ஸ்ரீதேவியின் மீது கோபப்படவும் முடியாமல், தான் காதலித்த பெண்ணே தன்னை பழிவாங்க அப்பாவை மணந்து சித்தியாகிவிட அவரை மதிக்கவும் முடியாமல் இயலாமையை நிறைய இடங்களில் நடித்திருப்பார். இந்த படத்தை இன்று பார்ப்பவர்களுக்கு கூட ரஜினியின் அபார நடிப்பு புரியும். இது ரஜினியின் ஆரம்ப கால படங்களில் ஒன்று. அவருக்கு மூன்று முடிச்சு நான்காவது படம் தான். படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாக தமிழில் நடித்த முதல் படம். ரஜினியின் தனிதத்துவ ஸ்டைல் ஆரம்பித்த படம். சிகரெட்டை பல வித்தியாசமாக சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கும் ஸ்டைலை இந்த படத்தில் தான் முதன் முதலில் செய்தார். பிற்காலத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக மாற அவருக்கு இருந்த தகுதிகளை இந்த படத்தை பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். இந்த படத்தின் பின்னால் ரஜினி எதிர்நாயகனாக வந்த படங்களில் இதில் செய்துள்ள விஷயங்களை சற்று விரிவு படுத்தி செய்திருப்பதை அறிய முடியும். மூன்று முடிச்சு அந்த விதத்தில் ரஜினிக்கு பலவகைகளில் முக்கியமான டிரெண்ட் செட்டர் படம்.
- விஜய் மகேந்திரன்

Thursday, January 5, 2017

ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு பயணம்




'ஏ.ஆர்.ரஹ்மான் : இந்திய திரையிசையின் நவீன அடையாளம்' புத்தகம் புத்தகக்கண்காட்சிக்கு வருகிறது. மின்னம்பலம்.காமில் தொடராக எழுதியதன் புத்தக வடிவம்.

லியோ காபிக்கான விளம்பர இசையும், கார்டன் சேலைகளுக்கான விளம்பர இசையும் சிறு வயதில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. அதில் பாரம்பரிய இசையும், மேற்கத்திய இசையும் கலந்து நவீன வடிவத்தில் வெளிப்பட்டிருக்கும். அதற்கு இசையமைப்பது யார்? என, எனக்குத் தெரிந்தவர்களிடம் விசாரித்தபோது ‘திலீப்’ என்ற பெயரைச் சொன்னார்கள். முக்கிய விளம்பரங்களில் ரசிக்கத்தகுந்த இசை வந்தால் அது, இவருடையதாக இருக்கும் என்றார்கள். அப்போது, தூர்தர்ஷனில் ‘நேஷனல் யூனைட்டி ஆப் கான்சர்ட்ஸ்’ என்ற இசைபற்றிய நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஒளிபரப்பாகும். இதன் தலைப்பு இசையும், அந்த நிகழ்ச்சி முடிந்தபின் போடும் ரோலிங் டைட்டில் இசையும் கேட்பதற்கே அந்த நிகழ்ச்சியை முழுவதும் பார்ப்பேன். இப்படி,ஆங்காங்கே  ரசித்துக்கொண்டிருந்த திலீப் என்ற இளம் இசையமைப்பாளர்தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் பெயர் மாற்றத்தோடு ‘ரோஜா’ படத்துக்கு இசையமைத்திருக்கிறார் என்ற செய்தியைப் படித்தபோது நானும் நண்பர்களும் சந்தோஷமடைந்தோம். நண்பர் கல்யாண்குமார், ரஹ்மானை எடுத்த முதல் நேர்காணலை (அதுதான் ரஹ்மான் பத்திரிகையுலகுக்கு அளித்த முதல் நேர்காணல்)‘இந்தியா டுடே’யில் படித்திருக்கிறேன். அந்த நேர்காணலில், ‘தமிழ் இசையை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல ஆசை’ இருப்பதாகத் தெரிவித்திருப்பார். சொன்னதுபோலவே, இன்று உலகம் முழுவதும் கொண்டு சென்றுவிட்டார்.


முதல் படத்திலேயே அவ்வளவு பெயர், புகழ், தேசிய விருது எல்லாம் கிடைத்தாலும், அதுகுறித்த பெருமையை  பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அவர் மேற்கொண்ட நிதானமான இசைப் பயணம், இசையை விரும்பும் இளைஞர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியதாகும். ரோஜா வரும்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்றுமுதல் அவர், ஏதாவது பத்திரிகைக்கு பேட்டியளித்தால் வாங்கிவிடுவேன். எந்த தொலைக்காட்சியில் பேசினாலும் தவறவிடாமல் பார்ப்பேன். அவருடைய இசையும் ஆளுமையும் அந்தளவு எனக்குள் ஆதிக்கம் செலுத்தியிருந்தது. என்னையறியாமலே அவர் பற்றிய பல தகவல்களை சேர்த்துவைத்திருந்திருக்கிறேன் என்பதை இதை எழுதும்போது உணர்ந்தேன்.


சிறு வயதில் அப்பாவை இழந்து, படிப்பைத் துறந்து, குடும்பப் பொறுப்புகளுக்கென சிந்தசைசர் போன்ற எலெக்டரானிக் இசைக்கருவிகளை சுமந்து ரிக்கார்டிங் ஸ்டுடியோக்களுக்கு அலைந்த  பத்து வயது சிறுபையனின் சித்திரம், ரஹ்மான்  பல்வேறு உயரங்களை அடையும்போதெல்லாம் என் நினைவுக்கு வரும். அந்தவிதத்தில், இளைஞர்களுக்கான பெரிய ஊக்கசக்தியாக அவர் விளங்குகிறார். எந்தத் துறையிலும் இருக்கக்கூடிய இளைஞர்கள், ரஹ்மானை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டவர்கள் அவர்கள் துறையில் முன்னேறுவதை கண்ணால் கண்டிருக்கிறேன்.

அவர் படங்களின் கேசட் வரும்போதெல்லாம் கடைகளுக்கு ஓடிச்சென்று வாங்கி அதை ஆர்வமாகக் கேட்டு ரசிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன். இப்படி, ஒரு ரசிகனாக அவரது பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன், அவரைப்பற்றி இப்படி ஒரு தொடர் எழுதமுடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ரஹ்மானை ஒரே ஒருமுறை நேரில் பார்த்தும் இருக்கிறேன். 'விண்ணைத்தாண்டி வருவாயா'படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொட்டுவிடும் தூரத்தில் அவர் நின்றிருந்தார். அப்போது, அவர் ஆஸ்கார் வாங்கிய புதிது. அவரைச் சுற்றியிருந்த செக்யூரிட்டிகளால், அவரைப் பார்த்தும் பேச முடியாமல்போனது.


பின்பு, ரஹ்மான் பற்றி ஒரு கட்டுரை எழுத முயற்சி செய்துகொண்டிருந்தேன். ஏனோ, அந்த விஷயம் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. மின்னம்பலம்.காமில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் ரஹ்மான் பற்றி ஒரு சிறப்புக் கட்டுரை எழுதுவதாக ஒத்துக்கொண்டு எழுத ஆரம்பித்தேன். அந்தக் கட்டுரை முடியாமல் நீண்டபடியிருந்தது. இரண்டாவது பகுதியை அடுத்த நாள் எழுதினேன். அப்படியும் முடியவில்லை.

பிரசுரமாகியிருந்த அந்த இரண்டு பகுதிகளுக்கும், பல இடங்களிலிருந்து வந்த வரவேற்பு எங்களை வியப்படையச் செய்தது. நண்பர் அரவிந்த் யுவராஜ், முதல் பகுதி வந்த நாளன்றே எனக்கு போன் செய்து, இதை தொடராக எழுதுங்கள் என்றார். உங்களால் முடியும் என நம்பிக்கையும் கொடுத்தார். நண்பர்கள் விநாயகமுருகன், ஜீவ கரிகாலன், விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் எனப் பலரும்,ரஹ்மான் தொடரை விரிவாக எழுதச் சொன்னார்கள். என்னால் முடியுமா? என்று உள்ளுக்குள் குரல் கேட்டாலும் பொருட்படுத்தாமல் எழுத ஆரம்பித்தேன். ரஹ்மான் குறித்து தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் வந்திருக்கின்றன. முடிந்தளவு தெரியாத விஷயங்களை, அபூர்வ நிகழ்வுகளை அதிகம் எழுத வேண்டும் என முடிவு செய்தேன். எழுதினேன். கடலில் ஒரு கைப்பிடியளவு எடுத்த நீர் மட்டுமே இந்தப் புத்தகம். அவர் வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களையும் எழுதுவது இந்தத் தொடரின் நோக்கமல்ல. இதை ஏன் விட்டுவீட்டீர்கள் எனக் கேட்பவர்களுக்கு இந்த விளக்கம்.


இந்த தொடர் எழுதிக்கொண்டிருக்கும் போது  இசை பற்றிய எந்த சந்தேகங்கள் வந்தாலும், ஏதாவது தகவல் என்றாலும் போன் செய்து  இசையமைப்பாளர் சி. சத்யா அவர்களை கேட்பேன். சரியான விஷயங்களை சொல்லி தெளிவு படுத்துவார். அவரும் இந்த தொடரை  தொடர்ந்து படித்து 'நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க' என்று அவரது பல இசைப்பணிகளிடையே எனக்கும் நேரம் ஒதுக்கியுள்ளார். அவருக்கு இந்த புத்தகம் வரும் வேளையில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வருடங்களை உறுதிப்படுத்திக்கொள்ள, சில தகவல்களை சேர்ப்பதற்கு நண்பர் அரவிந்த் யுவராஜ் உடனான உரையாடல் மிகவும் கைகொடுத்தது. காமராஜ் திரைப்படத்தின் இயக்குநர் அ.பாலகிருஷ்ணன் ரஹ்மானின் ஆங்கில சுயசரிதை புத்தகத்தை கொடுத்து உதவினார். அவர் கொடுத்த புத்தகத்தை ஓர் இரவே முழித்த படித்த பின் ரஹ்மான் பற்றிய தொடரை எழுதியே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது. அவருக்கும் நன்றி.


புதன்கிழமை தோறும் மின்னம்பலம்.காமின் காலைப் பதிப்பில் ரஹ்மான் தொடர் வெளிவந்தது. வெளிவந்த சில மணிகளில் படித்துவிட்டு வாசகர்களிடமிருந்து உற்சாக அழைப்புகள் வரும். எங்கேயாவது பார்க்கும் நண்பர்கள் ரஹ்மான் தொடர்பற்றி பேசாமல் இருக்கமாட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

மின்னம்பலம்.காமில் என்னை இணைத்த மின்னம்பலம்.காமின் இணை ஆசிரியர் டி.அருள் எழிலனுக்கு அன்பான நன்றி. ரஹ்மான் தொடருக்கு பொருத்தமான படங்களைத் தேர்வுசெய்து இணைத்த கலை பகுதியின் இணை ஆசிரியர் சிவா, ரஹ்மான் தொடரை எழுதும்போது என்னுடன் விவாதித்தும், அதற்கான மெய்ப்பு பார்த்தும், தொடர்களை சரி செய்து, எளிதாக வாசகர்கள் படிக்கும்வண்ணம் செய்த ஸ்ரீஷங்கர் ஆகிய இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. இந்தத் தொடரை முழு சுதந்திரத்தோடு மின்னம்பலம்.காமில் எழுத அனுமதித்ததோடல்லாமல், சிறப்பாக புத்தகமாகவும் கொண்டுவரும் மின்னம்பலம் குழுமத்தின் தலைவரும், ஆசிரியருமான திரு. அ.காமராஜ் அவர்களுக்கு என் பிரத்யேக நன்றி.

என்றும் அன்புடன்

விஜய் மகேந்திரன்

மிகுந்த மகிழ்ச்சியுடன் இதை பகிர்கிறேன் .சென்னை புத்தக கண்காட்சியில் ஸ்டால் எண் 81 மின்னம்பலம்.காமில் 'ஏ.ஆர்.ரஹ்மான் - நவீன இந்திய திரையிசையின் அடையாளம்' புத்தகம் கிடைக்கும்.
சென்னை புத்தக கண்காட்சி
சனவரி 6 - 19, 2017
செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகம்
(பச்சையப்பா கல்லாரி எதிரில்)
பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை,
அமைந்தகரை (செனாய் நகர்),
சென்னை 600030