Wednesday, July 9, 2014

அவன் அவள் மற்றும் மணற்குன்று



ஜப்பானிய எழுத்தாளரான கோபோ ஏப் எழுதிய'' மணற்குன்று பெண் ''உலகம் முழுவதும் பிரபலமான செவ்வியல்தன்மையுள்ள நாவல் .தற்போது அதன் தமிழ் பதிப்பை எதிர் வெளியீடு பதிப்பித்துள்ளது .தொடர்ந்து உலகமொழிகளில் உள்ள செவ்வியல் நாவல்களை தரமாக வெளியிட்டு வருகிறது.இப்பதிப்பகம்.அவ்வகையில் '' மணற்குன்று பெண் ''தமிழில் மிக முக்கிய வரவாகும்.இதன் மொழிப்பெயர்ப்பை எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான ஜி.விஜயபத்மா செய்துள்ளார்.

தற்சமயம் தமிழில் வெளிவரும் சில நாவல்களுக்கே தமிழ்-தமிழ் மொழிப்பெயர்ப்பு வேண்டியிருக்கிறது.ஆனால் ஜப்பானிய நாவலான மணற்குன்று பெண்ணை அதன் கவித்துவம் குறையாமல் சரளமான மொழிநடையில் மொழிப்பெயர்த்து உள்ளார்.மிகுந்த உயிரோட்டத்துடன் மொழிநடை உள்ளதால் எவ்வித தங்கு தடையின்றி நாவலை படிக்க முடிகிறது.இத்தகைய மொழியாக்கம் செய்துள்ள விஜயபத்மா பாராட்டிற்கு உரியவர்.

நாவலாசிரியர் கோபோ ஏப் அடிப்படையில் மருத்துவப்பட்டதாரி.நாவல் ,திரைப்படம் ,நாடகம் ,இசை ,புகைப்படம் என்று பன்முகத்தளத்தில் இயங்கியவர். 1962ல் வெளியான இந்நாவல் 'ஹிரோஷி தோரிகாஹா' எனும் ஜப்பானிய திரைப்பட இயக்குனரால் படமாக எடுக்கப்பட்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை பெற்றுள்ளது.20 மொழிகளுக்கும் மேல் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவல் பென்சில்வேனிய பல்கலைகழகத்தின் ஜப்பானிய மொழி ஆராய்ச்சித்துறைக்கான பேராசிரியர் 'ஈடேல் சாண்டர்ஸ்' சால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ஜப்பானின் மிகப்பின்தங்கிய கடற்கரையோரம் மணற்குன்றுகள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு பூச்சியியல் ஆய்வாளன் புதுவிதமான பூச்சிகள் கிடைக்கும் என ஆர்வத்துடன் செல்கிறான்.அந்த கிராமம் அளிக்கும் வியப்பில் களத்தை மறந்து கடைசி பேருந்தை தவறவிடுகிறான் .அந்த கிராமத்திலேயே இரவு தங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.அங்கு இருக்கும் முதியவன் ஒருவனின் உதவியால்ஒரு பெரிய மணற்குன்றுக்கு கிழே உள்ள வீட்டில் தங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.ஒரு இரவைக் கழித்துவிட்டு அந்த கிராமத்தில் இருந்து சென்று விடுவதுதான் ஆய்வாளனின் திட்டம். காலத்தின் விளையாட்டு வேறு மாதிரி இருக்கிறது.அவன் தங்க வைக்கப்படும் மணற்குன்றுக்கு அடியில் உள்ள வீட்டிலேயே நிரந்தரமாக சிறைவைத்து விடுகிறார்கள் அந்த கிராமவாசிகள் .அவனால் அங்கிருந்து வெளியேற முடியாதபடி கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு சூழ்நிலைக்கைதியாக இருக்க நேருகிறது.அன்றாடம் அவன் மணல் தூர் வாரும் பணியை செய்யவேண்டும்.அப்போது தான் அவனுக்கு உணவும் ,தண்ணீரும் வழங்கப்படும்.வேலை செய்யவில்லை எனில் தண்ணிர் கூட தராமல் அவனை கொடுமைப்படுத்துவார்கள்.அவன் தங்கவைக்கப்பட்டு இருக்கும் வீட்டில் ஏற்கனவே முப்பது வயது மதிக்கத்தக்க விதவைப்பெண் ஒருத்தியும் ஏற்கனவே வாழ்ந்துவருகிறாள்.கணவனையும் ,தனது ஒரே மகளையும் ஒரு மணல் புயலில் இழந்தவள் அவள்.அவள் வாழ்கையில் இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிர்கதியான நிலையில் இருக்கிறாள். மணற்குன்றுகளை தூர் வாரும் பணிகளையும் ,அவள் குடியிருக்கும் வீட்டில் அன்றாடம் படியும் மணற்துகள்களையும் அகற்றுவதிலும் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வாழ்கிறாள்.

அவனும் அவளும் இனி அந்த சிறிய வீட்டினுள் தான் வாழ்ந்தாக வேண்டும்.அவனுக்கு அவள் செய்யும் அன்பான பணிவிடைகளும் ,அருமையான இயற்கை சமையலும் திருப்தியடையச் செய்கிறது.இருப்பினும் அவன் தன்னை முற்றிலும் சுகந்திரம் இழந்தவனாக உணர்கிறான். பலமுறை தப்பிக்க முயல்கிறான்..ஆனால் அந்த கிராமத்தின் சூழலியல் மாறுபடும்,பரந்து கிடக்கும் மணற்குன்றுகளும் ,உக்கிரமான வெயிலும் அவனது முயற்சிகளை நிலைகுலையச் செய்கிறது.ஒரு வெம்மையான நாளில் அவனுக்கும் அவளுக்கும் உள்ள ஈர்ப்பு இறுகி உடல்ரீதியான பங்களிப்பை அவனுக்கு அளிக்கிறாள்.ஆனாலும் அவன் தொடர்ந்து தப்பிப்பதற்கு காரணத்தைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறான். எளிய சிரிப்புடன் ஒரு நாள் அவனிடம் சொல்கிறாள்.''இங்கிருந்து யாராலும் தப்பிக்க முடியாது,
தப்பித்து யாராலும் போகவும் முடியவில்லை ''என இது அவனை மேலும் அமைதியிழக்கச் செய்கிறது.நாவலின் இறுதியில் அவள் கர்ப்பம் அடைகிறாள்..அவன் அவளுடனே வாழ முடிவு செய்ய ,கிராமவாசிகள் அவளை பிரசவத்திற்கு அருகே உள்ள ஒரு நகரத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள்.தனிமையில் அவனை நினைத்து அவன் ஏங்குவதோடு நாவல் முடிகிறது.

மணற்குன்றுகள் நிறைந்த கிராமத்தை ,இயற்கையின் சீற்றத்தை ,சுழற்றி அடிக்கும் மணல்துகள்களை ,மாறுபடும் காலநிலை மாற்றத்தை மிகுந்த துல்லியத்துடன் சித்தரிக்கிறார் கோபோ ஏப்.இருத்தல் சார்ந்த பல கேள்விகளையும் ,ஆண் பெண் உறவின் உச்சபட்ச நுட்பங்களையும் ,சூழலுக்கு ஏற்ப மாறும் மனிதமனகளையும் வெகுநுட்பமாக முன்வைக்கிறார் ஏப்.

கோபோ ஏப்பின் மொழி எளிமையோடு அடர்த்தியான மௌனங்களை கொண்டிருக்கிறது .மணல் குறித்து அவர் விவரிக்கும் இடங்கள் அசாத்தியமான கவித்துவ மொழியை கொண்டிருக்கிறது.பெண் எவ்வளவு பொறுமைசாலியாக இருந்தாலும் ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் அவள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறாள்,காலம்காலமாக யாருக்காவது அடிமையாக வாழவேண்டிய நிலை போன்றவற்றை இந்நாவலில் வரும் பல கூர்மையான உரையாடல்கள் தீவிரமாக எடுத்துரைக்கின்றன. ஜப்பானில் வாழ்ந்த இந்த பெண் மட்டுமல்ல ,உலகம் முழுவதும் பின்தங்கிய பகுதிகளில் பெண்கள் இப்படித்தான் ஒரு அடிமைத்தளத்தில் கிடந்தது உழல்கிறார்கள்.
அவ்வகையில் இந்நாவல் பல தீர்க்கமான கேள்விகளை நம்முள் எழுப்புகிறது.இதில் வரும் சம்பவங்கள் நம் மனத்தை கனக்கச் செய்து இருத்தலியல் குறித்து ஆழ்ந்த சிந்தனைகளை தூண்டுகிறது.

''மணற்குன்று பெண் ''தீவிர இலக்கிய வாசகர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய முக்கியமான செவ்வியல் நாவல் ஆகும்.

மணற்குன்று பெண்

பக்:351 | விலை:220/-

வெளியீடு:எதிர் வெளியீடு.

கோபோ ஏப்

தமிழில்: ஜி.விஜயபத்மா
பக்:351 | விலை:220/-

வெளியீடு:எதிர் வெளியீடு.
நன்றி தீராநதி ஜூலை 2014

Tuesday, July 1, 2014

அதிகாரத்திற்கு எதிராக செலுத்தப்படும் அழுத்துவிசை



நவீனக்கவிதைகளில் தற்போது பல்வேறு விதமான வடிவச்சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.இத்தகைய தற்கால நவீன கவிதைகளின் நல்ல கூறுகளை உள்வாங்கி அதை தனது கவிதைகளில் புதிதாய் வெளிப்படுத்தும் கவிஞர்களில் முக்கியமானவர் நரன்.வெற்றிகரமான கவிஞர்களின் கவிதைகளைப் ''போலச்செய்தல் ''குவிந்து கிடக்கும்  இலக்கியச் சூழலில் நரனின் புதிய வடிவக்கவிதைகள் வரவேற்கத்தக்கவை.இவரது முதல் தொகுப்பான ''உப்புநீர் முதலை ''தொகுப்பிலும் இத்தகைய புதியவடிவக் கவிதைகளின் மூலம் தனித்த குரலாக தெரிந்தவர் .தற்போது நரனின் ''ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் ''இரண்டாவது தொகுப்பாக வந்திருக்கிறது.
நரனுடைய கவிதைகளின் முக்கிய அம்சமாக கருதுவது உரைநடைக்கு வெகு அருகாமையில் இலகுவான மொழியில் அதேநேரம் கவிதைகளின் கவித்துவ நேர்த்தி குறையாமல் கவிதைகளை எழுதுகிறார்.தொகுப்பின் முதல் கவிதையான ''சிறிய தோட்டா ''கவிதையே அவரது நேர்த்தியை சொல்லிவிடுகிறது.

''கடைசி மாவில் ஒரு குட்டி தோசை
குழந்தைகளுக்கென
தைத்து மிஞ்சிய சிறு துணியில் குட்டி கீழாடை அவளுக்கு
உள்நாட்டு போரின் போது
அரசின் ஆயுதத் தொழிற்சாலைகளில்
மிஞ்சிய கடைசி உலோகத்தை வீணாக்காமல் ஒரு சிறிய தோட்டா
குழந்தையின் உடலுக்கென''

வளரும் நாடுகளின் ஆயுதப்போட்டியை ,போரின் போது அப்பாவிக்குழந்தைகள் கொல்லப்படுவதன் வலிமிகு உணர்வை இந்தக்கவிதையில் நுட்பமாக முன்வைக்கிறார்.இவரது கவிதையின் பாடுபொருட்கள் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது ,நிலங்கள் தவறான முறையில் கையகப்படுத்தப் படுவது ,கனிமவளங்கள் திருட்டுப்போவது ,கார்ப்பரேட்களின் ஆதிக்கததிற்க்கு எதிரான குரல் ,கருத்துரிமையை சிதைக்கும் காரணிகள் என பின் காலனிய நாடுகளில் வளர்ச்சி என்ற பெயரில் செய்யப்படும் அத்தனை அபத்தங்களையும் பகடி செய்வதாக அமைந்திருக்கிறது.

சூழலியல் சார்ந்து மிகுந்த அக்கறை கொண்டவாராக தெரிகிறார்  நரன்.'' மஞ்சள்நிற கோதுமை''  என்ற கவிதையில்

''இவ்விகார குழந்தையை
நேற்று அணுக்கழிவாகக் கூடத்தான் கண்டேன்.
இனிப்பு பாலைத்தான் இன்று தயிராய் அருந்தினீர் புளிப்பு மனிதரே
போபாலில் ஓராயிரம் மண்டைஓட்டை அடுக்கி வைத்தீரே
விருந்து ஓடும்.தென்கோடிக்கரைக்கு சாக்குப்பையோடு.''


சூழலியல் சார்ந்த பயத்தையும் அவரது அக்கறையை வலுவாக இக்கவிதை வெளிப்படுத்துகிறது.இன்னொரு கவிதையான ''பக்க விளைவுகள் '' கருத்து சுகந்திரம்  அரசு இயந்திரத்தால் நசுக்கப்படுவதை மிகவும் பகடி செய்யும் கவிதையாக இருக்கிறது.
''இந்நிலத்திற்கும் அதன் மேல் வாழும் மக்களுக்கும்
வழங்கவென சில ஆன்டி  பயாடிக் மாத்திரைகள்
பேச்சுரிமைக்கும் எழுத்துரிமைக்கும் கருத்துரிமைக்கும்

எதிராய் வேலை செய்யுமாம்
ஆலோசனையும் மாத்திரையும் ஆரம்ப சுகாதார மையங்களில்
இலவசமாக அரசு வழங்குகிறது ''

என்று ஆரம்பிக்கும் கவிதை ''பக்க விளைவுகள் நிச்சயம் இருக்கத்தான் செய்யுமாம் ''என பகடியுடன் முடிகிறது.பின் நவீனத்துவ கவிதைகளுக்கு இருக்கும் பொதுவான கூரான பகடியை (satire),அதிகாரமையங்களை கேள்விக்குள்ளாக்க பயன்படுத்துகிறார்  நரன் .இவ்வகை பகடியின் உச்சமாக ''2 பாயிண்ட் தீவிரம் ''கவிதை அமைந்திருக்கிறது.இக்கவிதையில் வரும் திரு.எம் அடையாளச்சிக்கலினால் அல்லல்படும் நபராகவே இருக்கிறார்.என்னவாவது செய்து புகழ் பெற வேண்டும் எனநினைக்கும் பொதுப்புத்தியினரின் அடையாளச்சிக்கலை பகடி செய்வதாக கவிதை உள்ளது.

''விற்பனைப் பிரதிநிதி நண்பனொருவன்
தன் கழுத்து டையினாலேயே கழுதை இறுக்கி
சுய கொலை செய்து பிரபலமானதை
செய்திதாள்களில் படித்த நாள் முதல்

தானும் டை அணிய பழகிக் கொண்டிருக்கிறார்.''

என்ற வரிகளில்
பொதுப்புத்தியினரின்''போலச்செய்தல் ''அடையாளச் சிக்கல் தீவிரமாக வெளிப்படுகிறது.ஓவியங்களை விவரிப்பது போலவும்,சில கவிதைகள் தொகுப்பில் உள்ளன.இவ்வகையில் முக்கிய கவிதையாக ''பசியோடிருக்கும் கரையான்கள் ''இருக்கிறது.

''அங்கே பாருங்கள் ,சில கரையான்கள் அவள் உதட்டிலிருந்து
அழுகையை மட்டும்தனியே பிரித்துப் போய்
உண்டு கொண்டிருக்கின்றன ''

இவ்வரிகளில் இருப்பது ஓவிய விவரிப்பு முறை கவித்துவ கட்டமைப்புக்களே ,இவ்வகைகட்டமைப்புகளை தொகுப்பில் பலவேறு இடங்களில் சிறப்பாய் பயன்படுத்தி  இருக்கிறார் நரன். அதே போல ''லீ கூப்பர் ஷூ ''என்னும் படிமத்தை கார்ப்பரேட்களின் ஆதிக்கததிற்க்கு எதிரான குரலாக பயன்படுத்தி இருக்கிறார் தொகுப்பில் சில இடங்களில்.உலகமய மாதலின் விளைவாக நடைபெறும் கார்ப்பரேட்  நிறுவனங்களின் தொழிலாளர்களை கிட்டத்தட்ட அடிமை முறையில் வேலை வாங்கி விட்டு அதை நல்லதொரு வாழ்க்கை வாழ்வதாக அரசு நம்பிக்கை தருவதையே ''இங்கே ''என்னும் கவிதை கலைத்துப் போட்டு மறு பரிசிலனை செய்ய சொல்கிறது.ஆற்று மணலும் மலைகளும் டெண்டர் விடப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு  வருவதற்கு எதிரான அரசியலை ''காதை மூடிக் கொள் '' கவிதை முன் வைக்கிறது.

இம்மலையை டெண்டர் எடுத்த குவாரிக்காரன் .
ஜெலட்டின் குச்சி ;கரி மருந்து ; அழுத்த்துவிசை
காதை மூடிக்கொள் .
பலத்த ஓசை பொடி பொடிந்து …………
மூனறாம் நூற்றாண்டு சமண படுக்கையது .
புடைப்பு சிற்பத்தின் கையில் கூம்பு தாமரையை
சுமந்து நிற்க்கும் ரூப சுந்தரி
கை தனியாய் ;மலர் தனியாய் ;மார்பு தனியாய் - யெல்லாம்
இந்நூற்றாண்டின் ஜெலட்டின் குண்டு வெடித்து .
குவாரி லாரிகளில் எற்றப்பட்டு
அவள் பிருஷ்டமும் ,மார்பும் சமதாளமாக்கப்பட்டு வழவழப்பாக்கப்படும் .
இந்நகரெங்கிலும் வீற்றிருக்கும் அரசு பூங்காக்களின்
கற்பெஞ்சுகளில்
ஜோடிஜோடியாய் வந்தமர்கின்றன. புடைத்த பிருஷ்டங்கள்.

தனித்துவமான மொழி கட்டமைப்பு,அபூர்வமான பகடிகள் ,புதிய பாடுப் பொருட்கள்  ,என நரனின் ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் தொகுப்பு சிறப்பாக வந்துள்ளது.கொம்பு பதிப்பகம்,புத்தகத்தை அழகான முறையில் பொருத்தமான ஓவியங்களுடன் கொண்டுவந்து  இருக்கிறது.கவிதைகளின் உள்ளடக்கத்தை இவ் ஓவியங்கள் இன்னும் ஒருபடி தீவிரப்படுத்துகின்றன.

நன்றி தீராநதி ஜூலை 2014

வெளியிடு

கொம்பு பதிப்பகம்,
எண் 11.பப்ளிக் ஆபிஸ் ரோடு ,
தேவி திரையரங்கு அருகில்,நாகப்பட்டினம் 611001
போன் 9952326742
விலை ரூபாய் 60