Monday, December 20, 2010

அடையாளத்தின் புதிய வெளியீடுகள்:

அடையாளத்தின் புதிய வெளியீடுகள்:

எம். ஜி. சுரேஷ் எழுதியவை

  1. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்

இந்த நாவலை வரிசையாகவும் படிக்கலாம்; வரிசை தவறியும் படிக்கலாம். பெட்டிக்குள் பெட்டியாக அடுக்கப்பட்டிருக்கும் சீனப்பெட்டியைப் போல், கதைக்குள் கதையாகப் பல கதைகள் இந்த நாவலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழின் முதல் வகைமை மீறும் (Crossover) நாவலான இது ஏக காலத்தில் சிறுகதைத் தொகுப்பாகவும், நாவலாகவும் இருக்கிறது. தவிரவும், இது வெகுஜனப் பத்திரிகைக் கதையின் சுவாரஸ்யத்தையும், இலக்கியப் பிரதியின் தீவிரத்தன்மையையும் ஒன்றிணைக்கிறது. ஒரு கதையை மூன்று பேர் தொடர்ந்து சொல்லும் புதிய மரபைத் தமிழில் துவக்கி வைத்து, ஆசிரியத்தன்மையைக் (Authorship) கேள்விக்குள்ளாக்குகிறது. திருப்பூர்த் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த நாவலுக்கான விருதைப் பெற்ற இந்த நாவல், இருபதாம் நூற்றாண்டு உலகத்தமிழ் இலக்கிய வரலாற்றில் கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழில் வெளியான பத்து சிறந்த நாவல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

<><><>

2.அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்

இந்த நாவலின் கதாநாயகன் அலெக்ஸாண்டர் புலம் பெயர்ந்தே தன் வாழ்க்கையைக் கழித்தவன். இதனால் இருத்தலின் நிச்சயமின்மை அவன் மனத்தின் சமனிலையை எந்த நேரமும் குலைக்கத் தயாராக இருக்கிறது. விதி அவன் காதுகளைப் பிடித்து இழுத்து எல்லாக் காலங்களுக்கும் கொண்டு போகிறது. அந்தக் காலங்களினூடான பயணத்தில் இவன் தன்னைப் பல அலெக்ஸாண்டர்களாகப் பெருக்கிக் கொள்கிறான். அவனுக்கேற்ப இந்த நாவலும் தன்னை ஏக காலத்தில் ஒரு சரித்திர நாவலாக, சமூக நாவலாக, துப்பறியும் நாவலாக பல வகைமைகளில் தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. மூர்க்கத்தனமான கடந்தகாலத்தின் நீட்சியாக, குரூரமான நிகழ்காலம் கட்டப் பட்டிருக்கிறது. இந்த நிகழ்காலத்தின் நீட்சியாக வரவிருக்கும் எதிர்காலம் எத்தகைய விபரீத சாத்தியங்களை முன் வைக்க இருக்கிறது என்பதையும், எல்லா அலெக்ஸாண்டர்களும் ஒரே அலெக்ஸாண்டரே என்பதையும் இறுதியில் அறிய நேரும் வாசகனை இந்த நாவல் திகைப்பில் ஆழ்த்துகிறது.

<><><>

3.சிலந்தி

துப்பறியும் மர்மக்கதைகள் இலக்கியம் அல்ல என்கிற பொதுப்புத்தியைத் தகர்த்து,மேற்கே தீவிரம் மிகுந்த துப்பறியும் இலக்கியப் பிரதிகளை உருவாக்கிக் காட்டி இருக்கிறார்கள். இந்த நாவலும் அத்தகைய ஒரு முயற்சியே. தத்துவ விசாரணைகளையும், அரசியல் உரையாடல்களையும், உளவியல் ஆய்வுகளையும் கையாண்டு, ஒரு துப்பறியும் நாவல் பிரதியையும் வேறு ஒரு புதிய தளத்துக்கு நகர்த்திச் செல்ல முடியும் என்பதை இந்த நாவல் நிகழ்த்திக் காட்டுகிறது. ஆசிரியனும், வாசகனும் பங்கு பெறும் ஒரு நூதன விளையாட்டாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நாவல் வாசகனை பார்வையாளன் என்ற நிலையிலிருந்து விலக்கி, பங்கு பெறுவோனாக மாற்றிக் காட்டுகிறது.

<><><>

4. யுரேகா என்றொரு நகரம்

சரித்திரத்துக்கு எப்போதுமே ஒரு புனைவின் கவர்ச்சி இருக்கிறது.காரணம் அதில் கலந்திருக்கும் பொய்யின் விகிதம்தான். எல்லாக் காலங்களிலுமே, சரித்திரம் என்பது அந்தந்த அதிகார வர்க்கங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு ருசிகரமான பொய்கள் கலந்து எழுதப்பட்டவையே. அப்படிப்பட்ட ஒரு சுவையான நிகழ்வைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. இதில் ஆதிமனிதன் வடக்கிலிருந்து தெற்கே புலம் பெயர்ந்து வரவில்லை; தெற்கிலிருந்துதான் வடக்கே பரவினான் என்றொரு புதிய கண்டுபிடிப்பு முன் வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து உலக அளவில் ஏற்படும் பரபரப்பும், இந்திய அரசியல் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகளும், இறுதி என்னவாகிறது என்பது குறித்தும் விவரிக்கும் இந்த நாவல் ஒரு புனைவின் (History) புனைவைப் (Lies) பற்றிய, புனைவு(Fiction)எனலாம்.

<><><>

5. 37

அறிவியல் புனைகதையான இந்த நாவலில், தொடக்கத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் உரையாட ஆரம்பிக்கின்றன. தொடர்ந்து, அந்த அறையில் உள்ள புகைப்படம், கணினி சிப்பம், படுக்கையறை போன்ற அஃறிணைப் பொருட்களும், சென் குப்தா, நரேஷ் போன்ற உயர்திணை கதாபாத்திரங்களும் பண்டைய விக்கிரமாதித்தன், மதன காமராஜன் போன்ற கதை மரபில் கதையை மேற்கொண்டு தொடர்கின்றன. அந்த விவரணையில், கனவும், நனவும், உண்மையும், நகல் உண்மையும் இன்னதென்று பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு ஒன்றோடொன்று கலந்து விடுகின்றன. இதனால், இந்த நாவல் பண்டைய வாய்மொழிக்கதை மரபையும், நவீன அறிவியல் புனைகதை மரபையும் ஒன்றிணைத்து ஒரு பலகுரல் பிரதியாகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறது.

<><><>

6. இஸங்கள் ஆயிரம்

இஸங்கள்என்று அறியப்படும் கோட்பாடுகள் பற்றிப் போதிய நூல்கள் தமிழில் இல்லை என்ற குறையைப் போக்கும் விதமாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது. உலகக் கலை இலக்கிய வரலாற்றின் முதல் கோட்பாடான கிளாஸிஸம் முதல் இன்றையத் தேதியில் கடைசி இஸ்மாக வந்திருக்கும் போஸ்ட்-போஸ்ட்மாடர்னிஸம் வரையிலான ஏராளமான கோட்பாடுகள் குறித்து ஒரே கூரையின் கீழ் வைத்து இந்நூல் விவாதிக்கிறது. இஸம்என்றால் என்ன? அது ஏன் முளைக்கிறது என்பது குறித்துத் தீவிரமாக ஆராயும் இந்த நூல், கலை இலக்கியப் பரப்பில் இது வரை வெளி வந்திருக்கும் எல்லா முக்கியமான இஸங்கள் பற்றியும் அவற்றின் சுருக்கமான வரலாறு பற்றியும் எடுத்துரைக்கும் முதல் தமிழ் நூலாக வெளி வந்திருக்கிறது.

<><><>


தமிழவன் எழுதியவை

1. இரட்டைச் சொற்கள்

இத்தொகுப்பில் உள்ள கதைகள் நூதனத் தன்மை வாய்ந்தவை. கதை என்ற நிகழ்ச்சியை மீறிச் சென்று ஒருவித பன்முகத்தன்மையை எய்துபவை. இவை அர்த்தங்களை ஒத்திப் போடுவதன் மூலம் மொழியைக் கடந்து செல்கின்றன. நிகழ்ச்சிகளைக் கதையாக்குதல், உருவகக் கதை சொல்லல், பழைமையை நினைவு கூரல், புதுமையை வரவேற்றல் போன்ற கதைக் கலையின் அனைத்து சாத்தியங்களையும் இவை கையாள்கின்றன. அர்த்தங்களை வெளியேற்றுதல், ஒரு பாத்திரத்தில் தொடங்கி, இரட்டை பாத்திரமாக மாற்றி பின்பு பழைய பாத்திரத்தை மங்கச் செய்யும் உத்தி என்று பலவிதமான கதையாடல்களை இத்தொகுப்பு முன்வைப்பதன் மூலம் நமக்கு புதிய வெளிச்சத்தை அளிக்கிறது.

2. சரித்திரத்தில் படிந்த நிழல்கள்

தமிழில் எழுதப்பட்ட முதல் தொடர் உருவக நாவலான இது, ஒன்றைச் சொல்லி வேறு ஒன்றை உணர்த்துகிறது. இதனாலேயே இது தமிழில் ஒரு புதிய புனைகதை மரபைத் தொடங்கி வைக்கிறது. புனைவு நாடான தொகிமொலா, ராணி பாக்கியத்தாய், அரசன் பச்சைராஜன் போன்ற கதாபாத்திரங்கள் நமது நினைவின் அடுக்குகளில் சஞ்சரிக்கின்றன. ஒரு கற்பனை தேசத்தின் கதை மாந்தர்களாக உலவும் இந்தப் பாத்திரங்கள், நமது நிஜவாழ்வில் இரத்தமும் சதையுமாய் உலவும் உண்மை மனிதர்களை நினைவு படுத்துகின்றன என்பது ஒரு நூதன அம்சம். இந்த அம்சமே வாசகனின் நனவிலி மனத்தைத் தட்டி எழுப்பும் சாகசத்தைச் சாத்தியமாக்குகிறது.

<><><><><

3. ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்

தமிழின் முதல் மேஜிகல் ரியலிஸ நாவலான இது தன்னுள் பல படிம அடுக்குகளைக் கொண்டுள்ளது. மரபான நாவலில் காணப்படும் கதை சொல்லலுக்கு முற்றிலும் மாறான கதை சொல்லலில் இந்த நாவல் இயங்குகிறது. இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் கதை வழி செல்லாமல் படிம வழி செல்கிறார்கள் என்பது முக்கியமானது. ஜானின் உடலில் சிலந்திகள் கூடு கட்டுவது; நிழலோடு சீட்டாடுவது; கிழிந்த சட்டையினரைப் புரட்சிக்குத் தயார் செய்வது; அசையாமல் பச்சையம் பிடித்துக் கிடக்கும் தெய்வமூர்த்தி போன்ற படிமங்களால் இந்த நாவல் வாசகனை ஒரு புதிய தளத்துக்கு அழைத்துச் செல்கிறது.

<><><><><>

4. ஜி.கே.எழுதிய மர்ம நாவல்

இது ஒரு புதுவகை நாவல். வெறும் கேளிக்கைப் பிரதியான மர்ம நாவல் வடிவம், இந்நாவலில் அறிவைத் தேடித் துப்பறிகிற புதினமாக விரிவடைகிறது. அதன் மூலம் ஒரு தீவிரமான இலக்கியப் பிரதியாகிறது. மர்மநாவல் என்ற பாணியில் புனைவைநவீனமாய் எழுதிச் செல்லும் இந்தப் பிரதி காலம் காலமாக வீரதீர சாகசங்களை நிகழ்த்திய குதிரைவீரர்களைப் பகடி செய்கிறது.சுருங்கை என்னும் புனைவு நகரத்தில் நிகழும் இந்தக் கதையில் துப்பறிபவனோடு வரும் அவன் துணைவனின் அசட்டுத்தனம்,கோமாளித்தனம், அவன் எதிர்கொள்ளும் விபரீதங்கள் முதலியன நமக்குப் புதிய அனுபவத்தை தருகின்றன. துப்பறிபவன் போகும்சூரியக்கோயில், கிரந்தக்கோயில், அவன் நடத்தும் தத்துவ விவாதங்கள் என்று விரியும் இந்த நாவல் ஒரு கதையாடலைத்தொடர் உருவகமாக, எள்ளலுடன் விவரிப்பதன் மூலம் நம்மை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது.

<><><><><>

5. அவஸ்தை

யூ. அனந்த மூர்த்தி, கன்னடத்திலிரு ந்து தமிழில்: தமிழவன்

ஒரு மனிதனின் உள்ளங்கையில் இந்த உலகமே வந்து விழத் தயாராக இருக்கிறது. ஆனால் அதை அவன் நிராகரிக்கிறான். இந்த இருத்தலியல் அபத்தம் குறித்து இந்த நாவல் பேசுகிறது. கிருஷ்ணப்ப கௌடா சொல்வது பலிக்கிறது. இதுபோன்ற பல செயல்களால் ஏற்படும் செல்வாக்கு அவனை முதலமைச்சர் ஆகும் அளவுக்கு உயர்த்துகிறது. ஆனால், அவன் முதலமைச்சர் ஆக விரும்புவதில்லை. ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால் திருமணம் செய்துகொள்வதோ வேறு ஒரு பெண்ணுடன். இறுதியில் இணைவதோ முன்னாள் காதலியுடன். கிருஷ்ணப்ப கௌடா ஏககாலத்தில் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையான அரசியல்வாதியாகவும் இருக்கிறான். நேர்மையற்ற மனிதர்களுடன் சமத்காரமாகப் பழகவும் செய்கிறான். நவீன மனிதனின் பிளவு பட்ட சுயத்தையும் அதன் விளைவான அவலத்தையும் இந்த நாவல் விரித்துரைக்கிறது.

<><><><><>

Adaiyaalam,
Publishing Group
1205/1 Karupur Salai
Puthanatham 621 310
Trichy Dist, Tamilnadu, India
Tel: +91 4332 273444, Fax: +91 4334 27055
email:
info@adaiyaalam.net


No comments:

Post a Comment