Saturday, February 20, 2010

சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ புத்தக விமர்சனம்


வெறும் கதை சொல்லல் மட்டும் நாவல் அல்ல. தமிழ் நாவல்களில் பல புதுவகையான உத்திகள் கையாளப்பட்டன. அதில் நான் லீனியரும் ஒன்று. கை போன போக்கில், எழுதிச் செல்வது, முன் மாதிரியான முடிவுகள் எதுவும் வைத்துக்கொள்ளாமலே, ஊடே ஆசிரியரின் மனமொழி இவற்றில் வெளிப்படும்.

பெரும்பாலும் நான் லீனியர் முறையில் எழுதப்படும் கதைகள் தமிழில் கவனத்தைப் பெறுவதில்லை. காரணம் இந்த எழுத்து முறையை கையாள்பவருக்கு அதீத மொழிநுட்பமும், சரளமான மொழிநடையும் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் ஆசிரியர் இதைத்தான் சொல்ல வருகிறார் என்பதே புரியாமல் போய் விட வாய்ப்புகள் அதிகம்.

சுதேசமித்திரனின் “ஆஸ்பத்திரி” நான்-லீனியர் முறைப்படி எழுதப்பட்டுள்ௗ நாவல் என்றாலும் அந்த முறைமைக்குள் மட்டும் முற்றிலும் அடக்கிவிட முடியாத நாவல். இரு மகன்கள் மற்றும் அவர்களது அப்பாவின் மரணம் நிகழும் ஆஸ்பத்திரியையும் மையமாக கொண்டு, முன், பின்னாக சம்பவங்களைக் கோர்த்து “ஆஸ்பத்திரி” என்ற ஸ்தாபனத்தின் மீதான தனது விமர்சனங்கௗயும், ஆற்றாமைகளையும் முன் வைக்கிறார்.

“கொலை செய்வதற்கு எனப் பிரேத்யேகமான சில இடங்கள் உண்டு” என்ற வாசகத்துடன் இந்நாவல் ஆரம்பமாகிறது.

அப்பா உயிருக்காக போராடிக் கொண்டிருந்த போது, நாங்கள் வீட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா இரவு மேட்ச் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தோம். ஸ்ரீகாந்த் பேட் செய்து கொண்டிருந்தார் எனவும் நாவலின் ஆரம்பத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த ஒருவரி கதை நடைபெறுவது கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்பதைக் குறிப்பால் உணர்த்திவிடுகிறது.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ வசதிகள் இந்த அளவு எல்லா மருத்துவ மனைகளிலும் பரவலாக்கப்படவில்லை. முக்கியமாக, சென்னையில் இரு பெரும் மருத்துவமனைகள் அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தது என்பதையும் நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். அந்த இரு மருத்துவமனைகளில் வசூலிக்கும் கட்டணங்கள் நடுத்தர வர்க்கத்தினரின் தரத்தை விட மிக அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லாமல், சொத்துக்களை விற்று, அங்கு மருத்துவம் பார்த்தவர்களையும் நானே கண்டிருக்கிறேன். அங்கு ஒரு நாளைக்கு ஐ.சி.யூ.வில் இருக்க வசூலிக்கப்படும் கட்டணம், இன்று சென்னையில் சாப்ட்வேர் இஞ்சினியராக இருப்பவரின் ஒரு மாதச் சம்பளம் ஆகும்.

நடுத்தர வர்க்கத்தினரின் தரவை மட்டுமே பெரும்பாலும் நம்பி நடைபெறும் இம்மருத்துவமனைகளில் அவர்கள் மருந்துக்குக் கூட மதிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். அதை பல்வேறு இடங்களில் நாவலில் சுவாரசியமாக பதிவு செய்துள்ளார் சுதேசமித்தரன். பணக்காரராக இருப்பின் வெளிநாடுகளிலும், ஏழையாக இருப்பின் அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவம் பார்த்துக் கொள்வது சகஜம். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. இதற்கு இந்நாவலில் தகுந்த காரணத்தையும் விளக்கியுள்ளார்.

சுதேசமித்திரனின் முந்தைய நாவலான “காக்டெய்லை” விட பல படிகள் உயர்ந்து நிற்கக் கூடியது ஆஸ்பத்திரி. மெல்லிய அங்கதமும், சுவாரஸ்யமான எழுத்தின் வேகத்தோடும் சேர்த்து சிறந்த கதை ஒன்றையும் சொல்லி விடுகிறார். நான்-லீனியரில் கதை சொல்வது கடினம், ஆனால் அதையும் இஇதில் செய்து காட்டியிருக்கிறார்.

உண்மைகள் உறவாடும் எழுத்துக்களில், நான்-லீனியரின் தனிக்குரலாக சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ நாவலை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

வௌயீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 144
விலை : ரூ.80/-


-----------------------------------------------------------------------------

1 comment:

  1. அவசியம் படிக்க வேண்டும்.

    பகிர்விற்கு நன்றி மகேந்திரன்.

    ReplyDelete