Wednesday, January 20, 2010
ஒரு கதையும், ஒவ்வொரு கதையும் எம்.ஜி சுரேஷ்
ஒரு கதையும், ஒவ்வொரு கதையும்
எம்.ஜி.சுரேஷ்
m.g.சுரேஷ் தமிழின்
தனித்துவமான எழுத்தாளர்.அவருடைய புதிய சிறுகதை தொகுப்பு ''அவந்திகாவின் தற்கொலைக்கு ஆறு காரணங்கள்''.அடையாளம் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.அதில் எனக்கு
பிடித்த சிறுகதை
ஒன்றை அவர் அனுமதி பெற்று இங்கு
வெளியிட்டு உள்ளேன்.இக்கதை முதல்
முதலில் இங்குதான் பிரசுரம் ஆகிறது.m .g .சுரேஷ் அவர்களுக்கு நன்றி.
கதை எழுதுவது என் தொழில்களில் ஒன்று. சினிமா கதை விவாதங்களில் கலந்து கொள்வது; ஆங்கில, தெலுங்கு இந்திப் படங்களுக்கு டப்பிங் வசனம் எழுதுவது; பெண்கள் அந்த மூன்று தினங்களில் அணியும் சமாச்சாரங்களைப் புகழ்ந்து விளம்பர வாசகங்கள் எழுதுவது ஆகியன எனது பிற தொழில்கள். பண நெருக்கடி வரும் சமயங்களில் பெரிய பதிப்பகங்களுக்குப் போய் அவர்கள் வெளியிடும் புத்தகங்களுக்குப்(உடலுறவில் பெண்டாட்டியைத் திருப்தி செய்வது எப்படி?, ஜோசியம் கற்றுக் கொள்ளுங்கள், வாஸ்து பார்ப்பது எப்படி?) பிழை திருத்தித் தருவதும் உண்டு. எது எப்படி இருந்தாலும் அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளன். எழுத்தாளன் என்பது ஓல்ட் ஃபேஷன். இப்போதெல்லாம் எழுத்தாளனைக் கதை சொல்லி என்கிறார்கள். அதன்படி பார்த்தால், நான் ஒரு கதை சொல்லி.(வாயால் கதை சொல்பவர்களைத்தான் கதைசொல்லி என்று சொல்ல வேண்டும். கையால் எழுதுபவர்களை கதை எழுதி என்றுதான் சொல்ல வேண்டும் என்பார் நண்பர் ரம்ஜான்.(அவர் பெயர் ஜான் மட்டுமே. ரம் பிரியர் என்பதால், அவருக்கு நாங்கள் வைத்த செல்லப் பெயர் ரம்ஜான்.) எனவே, கம்ப்யூட்டரில் கதை எழுதும் என்னை – கதை சொல்லி அல்லது கதை எழுதி – இந்த இரண்டில், ஒரு வேளை கதை தட்டியோ? -எந்த வகைமைக்குள் சேர்க்க வேண்டும் என்கிற பிரச்சனையை நண்பர் ரம்ஜானுக்கும் வாசகர்களுக்கும் விட்டு விடுகிறேன். அந்தப் பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது கதைக்கு வருவோம்.
என்னுடைய கணிணியில் கதையை எழுத (தட்ட?) ஆரம்பிக்கிறேன்.
*
அவசர அவசரமாக, பாத்ரூம் போவதற்காக காரிடாரைக் கடந்த என் இடது புறத் தோளில் கெல்லி ஹூ இடித்துக் கொண்டு ஸாரி சொன்னாள். நானும் பதிலுக்குப் ஸாரி என்றேன். பிடித்தமான விஷயத்துக்கு ஸாரி சொல்வதில் எனக்கு உடன்பாடில்லைதான். ஆனாலும், வேறு வழியில்லை. ஒரு பெண் மேல் இடித்த பிறகு ஸாரி சொல்ல வேண்டும் என்பது பண்பாடு. எனவே எனது பண்பாட்டுக் கடமையை நிறைவேற்றினேன். இதுவே வேறு ஒரு சந்தர்ப்பம் என்றால் அவள் என் மேல் இடித்ததற்கு பரவசப் பட்டு அதே நினைவில் மூழ்கி மிதப்பேன். துரதிருஷ்டவசமாக இன்றைக்கு நான் அத்தகைய மன நிலையில் இல்லை. கைத்துப் போன மன நிலையில் இருந்தேன். அப்படிப்பட்ட மன நிலையிலும் அப்போதுதான் கவனித்தேன். அவள் மட்டும் என் மேல் இடிக்கவில்லை; கூடவே சேர்ந்து அவள் வாசனையும்தான். அந்தப் பெயர் தெரியாத வாசனைத் திரவியம் முகர்பவர்களை மயக்க வைப்பதாக இருந்தது. வழக்கமாக என்னை மயக்கும் அந்த மணம் இன்று எரிச்சலூட்டுவதாக இருந்தது. அந்த எரிச்சலையும் மீறி அவளது பளிங்கு போன்ற சருமம் என்னை மயக்கவே செய்தது. சதா துடைத்துத் துடைத்து வைக்கப்படும் செலுலாய்ட் பொம்மையைப் போல் பளிச்சிடும் கெல்லி இனிமையாக நறுமணம் வீசுவாள். இவள் மட்டுமல்ல, சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான சீனத்து இளம் பெண்கள் இனிய நறுமணம் வீசுபவர்களாக இருக்கிறார்கள். அதிருக்கட்டும்; நான் கெல்லி மேல் இடிப்பது தினமும் ஒரு தடவையாவது நடந்து விடுகிறது. ஒன்று நான் அவள் மேல் இடித்து விடுவேன்; அல்லது அவள் என் மேல் இடித்து விடுவாள். இது ஒரு வரம் போல (சாபமோ?) நடக்கிறது. இதற்கான காரணங்களாக சிலவற்றை என்னால் சொல்ல முடியும்.
1. அவளது இருக்கையும் எனது இருக்கையும் ஒரே வரிசையில் அடுத்தடுத்து இருப்பது.
2. அவள் மேல் இடிக்க மாட்டோமா என்று என் மனத்தின் ஆழத்தில் புதைந்திருக்கும் ‘இத்’ தூண்டுதல் தருவது.
3. சக ஆண்கள் மேல் இடித்து விடுவோமோ என்ற அச்சமின்றி சுதந்திரமாக வளைய வரும் சீனப் பெண்களுக்கேயுரிய இயல்பான தன்மையுடன் அவள் திரிவது.
மேற்கண்ட காரணங்களில் ஏதோ ஒன்றோ அல்லது எல்லாமுமோ சேர்ந்து இம்மாதிரி நிகழ்ந்து விடுகிறது.
‘என்ன சுகு, இன்றைக்கு முழுவதும் உன்னைப் பார்க்கவே முடியவில்லை? ரொம்ப பிஸியா? என்று கேட்டாள் கெல்லி.
‘அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை”
‘என்ன இது, சுவாரஸ்யமில்லாமல் பேசுகிறாய்?
‘இனி வாழ்க்கையில் சுவாரஸ்யத்துக்கு என்ன இருக்கிறது?
அவள் முகம் மாறியது. ‘ஏன் என்ன ஆச்சு? நேற்று கூட நன்றாகத்தானே இருந்தாய்? என்றாள்.
‘உண்மைதான்; நேற்று மாலை ஏழு மணி வரை நன்றாகத்தான் இருந்தேன்...’
‘அப்புறம்?
‘அப்புறம் என் மன நிம்மதியை இழந்து விட்டேன்’
ஒரு கணம் யோசித்து விட்டு அவள் கலவரமில்லாமல், அமைதியாக என்னிடம் கேட்டாள்.
‘நீ நேற்று எஸ்பிளனேட் வந்திருந்தாயா?
‘ஆமாம்’ என்று தலையாட்டினேன்.
‘ஓ தட் ஈஸ் தி ரீஸன்’
அவள் எவ்வித முகபாவமுமின்றி அமைதியாக நின்றாள்.
கெல்லி விஷேசமான பெண். வழக்கமான சீனப் பெண்களைப் போலன்றி இவள் நல்ல மூக்கும், விரிந்த பெரிய கண்களும் கொண்டவள். சதைப் பிடிப்பான உடல் வாகு கொண்டவள் என்பது கூடுதல் போனஸ். ஒரு வேளை கெல்லியின் மீதான் எனது ஈர்ப்புக்கு இவை காரணங்களாக இருக்கலாம். ஈர்க்குச்சி போன்ற பெண்கள் எனக்குள் தூண்டுதல் நிகழ்த்துவதில்லை.
கெமிகல் டெக்னாலஜியில் பி.டெக். தேறி, இண்டர்வியூக்கள் எனப்படும் பரமபதத்து ஏணிகளில் ஏறி, நியமன உத்தரவு மறுக்கப்படும் பாம்புகளில் இறங்கி, ஒரு வழியாக ஸ்பிக்னோலி எனப்படும் கம்பெனியில் சேர்ந்து இரண்டு வருடம் குப்பை கொட்டிவிட்டு, ஒரு நம்ப முடியாத தினத்தில் ஒரு சிங்கப்பூர் கம்பெனியில் வேலை வாய்த்து இங்கே வந்து சேர்ந்தேன். கெமிகல் எஞ்சினீயர் என்ற பதவி, அதன் பின்னொட்டாக ஃப்ளாட், கார், செல்ஃபோன் போன்ற வசதிகள், கிரடிட் கார்ட், டாப் கார்ட் போன்ற பல வண்ண அட்டைகள் என்னைக் கண்டடைந்தன.
இதற்கு முன் நான் வேலை செய்த கம்பெனியில் ஒரு வித ரசாயனப் பூச்சு திரவத்தைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள் என்றால் இங்கே இந்தக் கம்பெனியில் வேறு விதமான ரசாயனப் பூச்சு
திரவத்தைத் தயார் செய்கிறார்கள். பழைய கம்பெனியில், அமிலம் சேமிக்கப்படும் ராட்சத டேங்குகளில், அமிலம் அரிக்காமலிருப்பதற்காக
உபயோகப்படுத்தப் படும் திரவத்தைத் தயார் செய்தார்கள். இப்போது நான் பணிபுரியும் ஹூ அண்ட் கோ நிறுவனத்தில்(இந்த ஹூவுக்கும் கெல்லி ஹூவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இந்த ஒற்றுமை தற்செயலானதே.) கணிணியில் பயன்படுத்தப்படும் குறுந்தகடுகளில் பூசப்படும் திரவத்தைத் தயார் செய்கிறார்கள். இதெல்லாம் கொட்டாவி வரவைக்கும் செய்திகள். தவிரவும், இவை கதையை விட்டு விலகிப் போகும் விஷயங்கள். எனவே, நாம் இவற்றிலிருந்து தப்பித்து, கதைக்குள் பிரவேசிப்பது நல்லது என்று படுகிறது.
முதலில் கெல்லியைப் பற்றி. என்னுடைய கம்பெனியில் பலர் வேலை செய்கிறார்கள்; பொறியியலாளர்கள்; தொழிலாளர்கள், மேஸ்திரிகள் என்று. கெல்லியும் அவர்களில் ஒருத்தி. எங்கள் கம்பெனி ஜி.எம்.முக்கு அந்தரங்க உதவியாளராக இருக்கிறாள். அவருக்கு வரும் தொலைபேசிகளுக்குப் பதில் சொல்வது; கடிதங்களுக்குப் பதில் போடுவது; ஜி.எம்.முக்குக் காபி குடிக்க வேண்டும் போல் தோன்றினாலும், தோன்றாவிட்டாலும் காபி போட்டுக் கொடுப்பது போன்றவை அவள் வேலைகள். இது தவிர, மலேஷியன் ஏர்-லைன்ஸ் விளம்பரத்தில் வரும் விமானப் பணிப்பெண் போல மயக்கும் புன்னகை புரிவாள். இது அவளுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளில் ஒன்றா என்று எனக்குத் தெரியாது.
அவளை முதன் முதலில் நான் பார்த்தபோது இதே மயக்கும் புன்னகையுடன்தான் என்னை அவள் எதிர் கொண்டாள். அப்போது பணியில் சேரும் நிமித்தம் ஹூ அண்ட் கோவுக்கு வந்திருந்தேன். நெற்றியில் வியர்வைத்துளிகள்; கையில் நியமன உத்தரவு; மனம் நிறைய பதற்றம் என்று வரவேற்பறையில் உட்கார்ந்திருந்த என்னைத் தற்செயலாகப் பார்த்தபடி நடந்தாள். அப்போது அவள் உதடுகள் புன்னகைத்தபடி இருந்தன. அது எனக்கான புன்னகையா அல்லது வேறு யாருக்கோ செலவழித்தது போக எஞ்சிய புன்னகையின் மிச்சமா என்று என்னால் அனுமானிக்க முடியவில்லை. அந்த நொடியில் நான் அவள் வயப்பட்டேன். அது ஒரு வகை ஈர்ப்பு. அதற்குப் பெயரிட முடியாது. ஒரு பெண்ணை வெறியுடன் சுவரில் வைத்து அழுத்தி, அவள் வியர்வைப் பிசுபிசுப்பை உணர்ந்தபடி இயங்குவதற்கு எதிரானது. முடிவு என்னவோ அதுதான் என்றாலும் இந்த ஆரம்பம் வித்தியாசமானது. இந்த வஸ்துக்குத்தான் புனிதம், மேன்மை, லொட்டு, லொஸ்கு என்றெல்லாம் லேபிள் ஒட்டி ஜல்லியடிக்கிறார்கள். இது மனிதக் காதல் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது என்று சொல்லி பயமுறுத்துகிறார்கள். நிற்க. முதலில் வலது புறத்திலிருந்து இடது புறமாகப் போன கெல்லி, பின்பு இடது புறத்திலிருந்து வலது புறமாகப் போகும் போது என்னைப் பார்த்தாள். என்னருகே வந்து பிரேத்தியேக மாகச் சிரித்தாள். நான் ஏன் அங்கே வந்திருக்கிறேன், எனக்கு என்ன வேண்டும் என்று விசாரித்தாள். நான் பதில் சொன்னதும், ‘ஓ யூ ஆர் அவர் நியூ எஞ்சினீயர்; வெல்கம்’ என்றாள். ப்ரூஸ் லீயின் படங்களில் வரும் குங்ஃபூ ஆசானைப் போல் தோற்றமளித்த ஒரு சீனரை ஜி.எம் என்று அறிமுகப் படுத்தினாள். அவர் சீனமொழி உச்சரிப்பில் ஆங்கிலம் பேசினார். சுகுமார் என்ற என் பெயரை சூ-கூ-மார் என்று சீன பாணியில் உச்சரித்தார். நைஸ் நேம் என்று பாராட்டவும் செய்தார். அறிமுகம் முடிந்ததும் கெல்லி என்னை எனது கேபினுக்கு அழைத்துப் போனாள். அது விமானத்தில் இருக்கும் பைலட்டின் கேபின் போல் இருந்தது. ஏகப்பட்ட மீட்டர்கள், வண்ண வண்ண பல்புகள், பல தினுசுகளில் பட்டன்கள் என்று தடபுடலாக இருந்தது.கொஞ்ச நேரம் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிடிபட ஆரம்பித்தது. அதற்குள் ஒரு வாரம் ஆகி இருந்தது. அந்த ஒரு வார காலத்தில் நானும் கெல்லியும் காஃபி ஷாப், விவோ சிடி, லிட்டில் இந்தியா போன்ற பிராந்தியங்களில் சுற்றித் திரியும் அளவுக்கு நண்பர்களாகி விட்டோம். மாசி லாமெக், மீன் உருண்டை போன்ற சீன உணவு வகைகளை எனக்கு அறிமுகப் படுத்திவளும் அவளே. எல்லாம் நல்லபடியாகத்தான் நடந்து கொண்டிருந்தது, அந்த மோசமான தினம் வரும் வரையில். அந்த மோசமான தினத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. கெல்லி மிகக் கவர்ச்சிகரமான உடையில் இருந்தாள். புது லிப்ஸ்டிக் அவள் உதடுகளை அடிக்கோடிட்டுக் காட்டி வசீகரித்தது. நான் பலவீனம் அடைந்த தருணங்களில் அதுவும் ஒன்று. அந்தத் தருணத்தில் நான் அவளைக் காதலிப்பதாகச் சொன்னேன். அதற்கு அவள் எந்த எதிர் வினையும் காட்டவில்லை. புன்னகை மட்டுமே புரிந்தாள். எனக்கு என்னமோ போல் இருந்தது. அவளுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்றும் கேட்டேன். அதற்கு அவள் பதிலேதும் சொல்லவில்லை.எனக்கு ஏதாவது விடை கிடைக்கவேண்டும் போல் இருந்தது. ஆம்/இல்லை; உண்டு/கிடையாது; இப்படி ஏதாவது.ஆனால், அவள் அதைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. வெளியே தூறிக் கொண்டிருந்த மழையைப் பார்த்து விட்டு, ‘இது எப்போது நிற்கும் என்று தெரியவில்லையே’ என்று மட்டும் சொன்னாள். இது எனது கேள்விக்கான பதில் இல்லை என்பது எனக்கும் தெரியும் அவளுக்கும் தெரியும்.
*
வாசலில் யாரோ காலிங் பெல்லை அழுத்துகிறார்கள். எனவே, கதை இந்த இடத்தில் அறுபடுகிறது. இதுவரை தட்டச்சு செய்தவற்றை கண்ட்ரோல்+எஸ் பட்டன்களை அழுத்தி சேவ் செய்து விட்டு, வாசலை நோக்கி எழுந்து போகிறேன். வாசலில் நிற்பது யாராக இருக்கும்? யோசித்தபடி போகிறேன். சட்டென்று பிடிபடவில்லை. கதவைத் திறந்தால் வாசலில் கூரியர் பையன் நிற்கிறான். இரண்டு கவர்களை நீட்டுகிறான். ஒன்று சன்னமான கவர். ஒரு பிரபல வாரப் பத்திரிகையிலிருந்து வந்திருந்தது. கதை கட்டுரை ஏதேனும் கோரி வந்த கடிதமாக இருக்கலாம். அல்லது ஏற்கெனெவே பிரசுரமான எழுத்துக்கான சன்மானமாக இருக்கலாம். அடுத்தது ஒரு கால் கிலோ எடை மதிக்கத்தக்க பொருள்; அனேகமாக ஒரு புத்தகமாக இருக்கலாம். என்னுடைய மதிப்புரை கோரி அனுப்பப்பட்டிருக்கலாம். கூரியர் பையன் நீட்டிய காகிதத்தில் கையெழுத்திட்டு அனுப்பி விட்டு கவர்களைப் பிரித்தபடி உள்ளே நடந்தேன். சன்னமான கவரில் ஐநூறு ரூபாய்க்கான செக்கும், கால் கிலோ எடை மதிக்கத்தக்க கவரில் ஒரு புத்தகமும் இருந்தன. அது ஒரு கவிதைப் புத்தகம். கவிதை நூறு கிராமும், இளம் பெண்களின் அரை நிர்வாணப் படங்கள் நூற்றைம்பது கிராமும் இருந்தன. ‘என் எச்சிலில் உன் வாசனை’ என்று தலைப்பிடப்பட்டிருந்தது. லேசாகப் புரட்டிப் பார்த்தேன். காம ஜுரத்தில் பிதற்றப்பட்ட வரிகளாக அவை இருந்தன.
‘ கண்ணே, உன் ஞாபகங்களாய்
எனது உள்ளாடைகளில்
உலக வரைபடங்கள்’
‘கொழுந்து விட்டு எரியும் அடுப்பல்லவா
நீ – அதில் நுழைந்து தகிக்கத் துடிக்கும்
விறகல்லவா நான்?’
என்ற ரீதியில் கவிதைகள் எழுதப் பட்டிருந்தன. இந்தக் கவிஞர் யாராவது ஒரு பெண்ணிடம் உடலுறவு கொள்ள முடிந்திருந்தால், இவ்வளவு கவிதைகளை எழுதி இருக்க மாட்டாரோ என்று தோன்றியது. செக்கையும், கவிதைத் தொகுப்பையும் டேபிளின் மேல் வைத்தேன். டேபிள் மீதிருந்த ஜக்கிலிருந்து ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தேன். பின்பு விட்ட இடத்திலிருந்து கதையைத் தொடர கணிணியை நோக்கி நகர்ந்தேன்.
*
கெல்லியின் தாத்தா சாங் ஹூ சீனாவில் பிறந்து வ்ளர்ந்தவர். கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளரான அவர் சியாங் கே ஷேக்கின் அபிமானி. மா சே துங் ஆட்சிக்கு வந்த போது , கம்யூனிஸத்தின் நெருக்கடி தாங்காமல் சீனாவை விட்டு ஓடியவர்களுள் அவரும் ஒருவர். தைவானுக்குள் நுழைந்து, அங்கிருந்து மெள்ள நகர்ந்து, மலேசியாவுக்குள் ஊடுருவி, மலேசியாவில் கொஞ்சகாலம் குப்பை கொட்டி விட்டு அங்கிருந்து சிஙப்பூர் வந்து சேர்ந்தவர். சிங்கப்பூரில்தான் சாங் ஹூவின் மகன் வாங் ஹூ பிறந்தார். இவர்தான் கெல்லியின் அப்பா. இவர் திடீரென்று ஒரு நாள் லூசி லியூ என்ற கிறிஸ்தவப் பெண்ணை மணக்கும் பொருட்டு அந்த மதத்துக்கு மாறித் தன் பெயரை ஜான் ஹூ என்று மாற்றிக் கொண்டார். ஜான் ஹூவுக்கும் லூசி லியூவுக்கும் பிறந்தவள் தான் கெல்லி ஹு. கெல்லி ஹூவின் தாத்தாவை இப்போதும் பூன் லே பகுதிகளில் பார்க்க முடியும். சென்ற நூற்றாண்டின் நினைவுகளைச் சுமந்து செல்லும் ஆவியைப் போல் அவர் நடமாடிக் கொண்டிருப்பார். எண்பது வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அவர், சீனாவில் கம்யூனிஸம் மட்டும் வராமல் இருந்து, தான் இப்போதும் அங்கேயே இருக்க நேர்ந்திருந்தால் தன் நிலைமையே வேறு; இங்கு இருப்பது போல் மாதச் சம்பளத்துக்கு வேலைக்குப் போக வேண்டியதில்லை. சகல வசதிகளுடன் ஒரு பெரிய பண்ணையாராக இருந்திருப்பேன் என்று அடிக்கடி புலம்புவார். சிங்கப்பூர் அரசுத் துறையில் பணியாற்றிய பின் ஓய்வு பெற்ற அவர், தற்போது ஒரு காஃபி ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார். ஜான் ஹூ படித்து வளர்ந்தது எல்லாம் சிங்கப்பூரில்தான். உலகப்புகழ் பெற்ற சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. படித்து விட்டு யோகோகவா என்ற ஜப்பானிய கம்பெனியில் பெரிய அதிகாரியாக வேலை பார்த்தவர். நல்ல சம்பளத்துடன் இருந்த அவர், ஒரு கெட்ட நாளில் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு சுய தொழில் செய்ய ஆரம்பித்து, இருப்பதை எல்லாம் இழந்து தற்போது வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர். தனக்குச் சொந்தமான டயோட்டா காரை டாக்ஸியாக மாற்றிக் கொண்டு பகுதி நேர டாக்ஸி டிரைவராகவும் இருந்து வருகிறார்.வாரா வாரம் ம்லேசியாவில் இருக்கும் ஜெண்டிங்குக்குப் போய் சூதாடி விட்டு வருவார். இழந்த செல்வத்தை மீட்கும் முயற்சி. நல்ல வேலையில் இருந்த கணவன் திடீரென்று அதைத் தொலைத்து விட்டுத் திண்டாடுவதில் மனைவி லூசி லியூவுக்கு உடன்பாடில்லை. போதாக் குறைக்கு வாரா வாரம் சூதாட்டம் வேறு. எனவே, அவனிடம் கோபித்துக் கொண்டு போய் அவள் எங்கோ தனியே வசிக்கிறாள். ‘அவள் எங்கே போகப் போகிறாள். பணம் வரட்டும்; என்னிடம் வந்து விடுவாள்’ என்பார் ஜான் ஹூ.
கெல்லி இரண்டு விதமான வாழ்க்கையைப் பார்த்தவள். அவள் பிறந்த போது சிங்கப்பூரில் வசதியானவர்கள் வாழும் பகுதியில் அவர்கள் குடும்பம் இருந்தது. நான்கு அறைகள் கொண்ட குடியிருப்பில் அவர்கள் குடும்பம் இருந்தது. அவள் குடியிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒவ்வொரு ஃப்ளாட்வாசிக்கும் ஒரு கார் இருந்தது.அவளுக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. எப்போதும் அவள் தன் பள்ளிக்குக் காரில்தான் போவாள். பின்னர் திடீரென்று குடும்பம் பொருளாதார இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. அப்போது அவள் கல்லூரியில் படிக்கும் தருணத்தில் இருந்தாள். குடும்பம் பொருளாதார வசதியை இழந்து விட்ட்தால் அவள் தனக்குப் பிடித்த எம்.பி.ஏ பொன்ற கோர்ஸ்களில் சேர்ந்து படிக்க முடியாமல் பி.ஏ. வரலாறுதான் படிக்க முடிந்தது. காரிலேயே சுற்றித் திரிந்த அவளுக்கு பஸ்ஸிலும், சைக்கிளிலும் அலைவது சலிப்பூட்டுவதாக இருந்தது. படித்து முடித்ததும் ஓரிரு கம்பெனிகளில் வேலை பார்த்தாள். கடைசியாக, இங்கே வந்து சேர்ந்திருக்கிறாள். அவளுக்குத் தான் பார்க்கும் வேலையில் திருப்தி இல்லை. அந்த வருமானம் அவளது வாழ்க்கை முறைக்குப் போதுமானதாக இல்லை. எனவே வேறு பார்ட் டைம் வேலைக்கும் போகிறாள்.
*
மன்னிக்கவும். மீண்டும் காலிங் பெல். இந்தத் தடவை யாராக இருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. யோசித்தபடியே போய்க் கதவைத் திறந்தால், வாசலில் சாமிநாதன் நின்றிருந்தார். ‘வாங்க சாமிநாதன்’ என்றேன். ‘நான் ஒண்ணும் டிஸ்டர்ப் பண்ணிடலியே?’ என்றார் சாமிநாதன். ‘இல்லையே’ என்று பொய் சொன்னேன். ‘ஏதாவது எழுதிக் கொண்டிருந்தீர்களா?’
‘ஆமாம்’
‘என்ன?’
‘ஒரு சிறுகதை எழுதிக் கொண்டிருந்தேன்’ சாமிநாதன் என்னிடம் கேட்காமலேயே உள்ளே நுழைந்தார். இயல்பாக வந்து சேரில் உட்கார்ந்து கொண்டார். என் மனம் கெல்லியைப் பற்றிய யோசனையில் இருந்தது.
‘நாவல் எழுத வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்களே; அது என்ன ஆயிற்று?’
‘எழுத வேண்டும்’
சாமிநாதன் ஒரு திரைப்பட உதவி இயக்குனர். தீவிர இலக்கியம் படிக்கும், உலகத் திரைப்படங்கள் பார்க்கும் உதவி இயக்குனர். அவ்வப்போது என்னைப் பார்க்க வருவார். சமீபத்தில் அவர் பார்த்த திரைப்படங்கள் பற்றியும், படித்த கதைகள் பற்றியும் என்னிடம் ஆவலுடன் பகிர்ந்து கொள்வார். மற்ற சமயங்கள் என்றால் பரவாயில்லை. இப்போது எழுதிக் கொண்டிருக்கும் போது அவர் வந்ததில் எனக்கு உடன்பாடு இல்லைதான். என்றாலும் என்ன செய்வது நண்பராகி விட்டாரே. எழுத்து வேலைகளுக்கு மத்தியில் இது போன்ற தொந்தரவுகள் வரத்தான் செய்கின்றன. என்ன செய்வது. கொஞ்ச நேரம் அவருடன் தற்போதைய தமிழ் சினிமா பற்றியும், உலக சினிமா பற்றியும் பேசினேன். கிச்சனில் போய் டீ தயாரித்துக் கொடுத்தேன். ஒரு வழியாக அவர் முகம் கோணாதபடி பேசி அனுப்புவதற்குள் ஒரு மணி நேரம் ஆகி விட்டது. திரும்பவும் கணிணி முன் வந்து உட்கார்ந்த போது சோர்வு தட்டியது.
*
உண்மையில் கெல்லிக்கு என் மேல் பிரியம் இருந்தது என்னவோ வாஸ்தவம். ஆனாலும் எதனாலோ போக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். ஒரு வேளை நான் ஒரு இந்தியன் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது கிறிஸ்தவன் இல்லை என்பதும் மற்றொரு காரணமாக இருக்கலாம். கெல்லி இதையெல்லாம் பொருட்படுத்தக் கூடியவள் இல்லை என்பது அவளிடம் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். அவளது வாழ்க்கைத் துணையை அவளே தேர்ந்து எடுக்கும் சுதந்திரம் அவளுக்கு இருந்தது. சிங்கப்பூர் பெண்ணியம் போற்றும் நாடு. பெண்களிடம் வாலாட்டுபவர்கள் ஒரு வழி ஆகி விடுவார்கள். இதனால் தான் சிஙப்பூரில் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குக் கூட ஒரு இளம் பெண்ணால் தன்னந்தனியே சாலையில் நடந்து போக முடியும். கெல்லிக்கு உண்மையில் என்னைப் பிடிக்காதிருந்தால், நான் அவளைப் போட்டுத் தொணப்புவதற்கு இன்னேரம் என்னை சிங்கப்பூர் சிறைக்கு அனுப்பி இருக்க முடியும். ஒரு நாள் அவளை ஒரு மூலையில் மடக்கினேன். நான் அவளைக் காதலிப்பதாகவும் என்னை அவளுக்கு மணக்கச் சம்மதம்தானா என்று சொல்லுமாறும் வற்புறுத்தினேன். அவள் சிரித்து மழுப்பினாள்.
‘பீ சீரியஸ்; சிரித்து மழுப்பாதே’ என்றேன். ‘ப்ளீஸ் கொஞ்சம் பொறுங்களேன்; யோசிக்க எனக்கு டைம் வேண்டும்’ என்றாள். இப்படி அவள் யோசிக்க டைம் கேட்பது மூன்றாவது தடவை என்பதை அவளுக்கு நினைவூட்டினேன். ‘பரவாயில்லை; இன்னொரு தடவைதான் டைம் கொடுங்களேன்’ என்று கொஞ்சலாகச் சொன்னாள்.
அதன் பிறகு அவளிடம் நான் இது பற்றிப் பேசுவதை விட்டு விட்டேன்.
இனி அவளாக இது பற்றிப் பேசினால் ஒழிய இது தொடர்பாக எதுவும் பேச வேண்டாம் என்பது என் தீர்மானம். அதன் பிறகு நாங்கள் அலுவலக நேரம் போக மீதி நேரங்களில் சிங்கப்பூரைச் சுற்றினோம்.
பஸ்ஸில், ரயிலில், டாக்ஸிகளில் இருவர் உடல்களும் உரச உரசப் பயணித்தோம். சமயங்களில் அவளுக்குப் பார்ட் டைம் வேலை வரும். அதற்குப் போய் விடுவாள். அது போன்ற தருணங்களில் எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போகும். மறு நாள் வந்து புன்னகைப்பாள். ‘நேற்று என்னை ரொம்ப மிஸ் பண்ணினாயா, ரொம்ப ஸாரி’ என்பாள்.
எனக்கு வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்கும். ‘அதனால் என்ன, பரவாயில்லை’ என்பேன்.
ஒரு நாள் அது நிகழ்ந்தது. அன்று கெல்லி பார்ட் டைம் வேலைக்குப் போவதாகச் சொல்லி இருந்தாள். என்வே நான் பொழுதைக் கொல்வதற்காக சிஙப்பூர் ஆற்றங்கரையைப் பார்ப்பதற்காக எஸ்பிளனேட் பகுதிக்குச் சென்றேன். சிங்ப்பூரின் உயரமான கட்டிடங்களைப் பார்த்து பிரமித்தபடி சாலையைக் கடக்க முயன்ற என் பார்வை தற்செயலாக சிக்னலில் நின்றிருந்த டாக்ஸியின் மேல் பட்டது. அந்த டேக்ஸியில் ஒரு நடுத்தர வயது மனிதர் உட்கார்ந்திருந்தார். யாரோ ஒரு பெரிய கனவானாக இருக்கக் கூடும். அவருக்குப் பக்கத்தில் ஒரு சீனத்து இளம் பெண் உட்கார்ந்திருந்தாள். அவள் பார்ப்பதற்கு அசப்பில் கெல்லியைப் போலவே இருந்தாள். கொஞ்சம் உற்றுப் பார்த்த பின்புதான் அவள் கெல்லி என்று எனக்கு உறைத்தது. நல்ல வேளையாக அவள் என்னைப் பார்க்கவில்லை. நான் சாலையைக் கடந்த பின் நடைபாதையில் நின்று கொண்டு கெல்லி இருந்த கார் எங்கே போகிறது என்று பார்த்தேன். அது ஒரு பெரிய நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தது. அவள் என்ன பார்ட் டைம் வேலை பார்க்கிறாள் என்பது எனக்குத் தெளிவாகப் புரிந்தது. நான் ஒரு அடி இல்லாக் கிணற்றில் விழுந்து கொண்டிருந்தேன்.
மறு நாள் அலுவலகத்துக்குப் போனேன். விரக்தியுடன் என் வேலைகளைப் பார்த்தேன். கெல்லி இருந்த திக்கையே திரும்பியும் பார்க்கவில்லை. காலை கழிந்து பிற்பகல் வந்தது. பிற்பகல் கழிந்து மாலையானது. நானும் அவள் இருக்கைக்குப் போகவில்லை; அவளும் என் இருக்கைக்கு வரவில்லை.
அப்போதுதான் இந்தக் கதையின் முதல் பத்தியில் நடந்த இடித்துக் கொண்ட நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு நாங்கள் பேசிக் கொண்ட பதினோரு வசனங்களுக்குப் பிறகு வேறு எதுவும் பேசவில்லை. அப்புறம் கொஞ்ச நாட்கள் பேசாமலே இருந்தோம். அப்புறம் ஒரு நாள் மதிய உணவு நேரத்தில் கெல்லியே வந்து என்னிடம் பேசினாள்.
‘என் மேல் கோபமா?
‘இல்லை’
‘பொய் சொல்கிறாய். கோபம் இல்லாவிட்டால் ஏன் என்னிடம் இத்தனை நாட்கள் பேசாமல் இருந்தாய்?’
நான் என்ன பேசுவது என்று தோன்றாமல் மௌனமாக இருந்தேன்.அவளே தொடர்ந்து பேசினாள்.
‘கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு எஸ்கார்ட் வேலை வாய்ப்புகள் வந்தன. அந்த வேலை எனக்குத் திரில்லிங்காக இருந்தது.
வித விதமான பணக்காரர்களுடன் பழகுவது; பல ஹோட்டல்களில் போய் சாப்பிடுவது; தங்குவது எல்லாமே ஒரு ஜாலியாக இருந்தது. அந்தத் தொடர்புதான் இங்கே எனக்கு இந்த வேலை வாங்கிக் கொடுத்தது. உன்னுடைய நட்பு கிடைத்த பின்பு அந்த வேலையில் இருந்த பழைய ஆர்வம் போய் விட்டது. நான் உன் காதலை ஏற்கத் தயங்கியதற்குக் காரணம், ஒரு வேளை எனது பழைய எஸ்கார்ட் வேலை பற்றித் தெரிய வந்தால் உன்னுடைய எதிர் வினை எப்படி இருக்கும் என்று பயந்ததால்தான். இப்போது தெரிந்து விட்டது. நீ ஒரு ஆணாதிக்கவாதி. பெண்ணை ஒரு உடமையாகக் கருதும் ம்னோபாவம் உனக்கு இருக்கிறது. நல்ல வேளை, உன்னைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனது நல்ல விஷயம். தப்பித்தேன்.
நீ உண்மையில் நல்ல மனிதன் என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? உன் பழைய வாழ்க்கை ஒரு விபத்து. அதை நாம் இருவரும் மறந்து விடுவோம். ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவோம் என்றுதானே சொல்லி இருக்க வேண்டும். அதெல்லாம் உன் புத்திக்குத் தோன்றவில்லையே? உன்னை நல்லவன் என்றல்லவா நினைத்தேன்’ என்று சொல்லும் போது அவள் கண்கள் கலங்கின. அனேகமாக வெடித்து அழுவாள் போல் தோன்றினாள். கீழுதட்டைப் பற்களால் கடித்துத் தன் அழுகையை அடக்கினாள்.
நான் ஒன்றும் புரியாமல் விழித்தபடி நின்றேன்.
*
இந்த இடத்தில் கதையை முடித்தேன். பின்பு கணிணியை ஆஃப் செய்யாமல் கிச்சனுக்குப் போய் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தேன். பின்பு எழுதிய கதையை ரிப்பேர் செய்வதற்காக மீண்டும் கம்ப்யூட்டர் முன்னால் வந்து அமர்ந்த போது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
கடைசிப் பத்தியைக் கணிணி கீழ்க்கண்டபடி மாற்றி எழுதியிருந்தது:
…..பொய் சொல்கிறாய். இல்லாவிட்டால் இத்தனை நாட்கள் என்னிடம் ஏன் பேசாமல் இருந்தாய்?
நான் என்ன பேசுவது என்று தோன்றாமல் மௌனமாக இருந்தேன்.
‘நான் எஸ்கார்ட்டாக வேலை செய்வது உனக்குப் பிடிக்கவில்லைதானே?’
‘ஆமாம’
‘அது எனக்குத் தெரியும்; அதை எப்படி உன்னிடம் சொல்வது என்றுதான் தயங்கிக் கொண்டிருந்தேன். நல்ல வேளை, நீயே நேரில் பார்த்து விட்டாய். இப்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?’
‘எதற்கு சந்தோஷம்? ஒரு வேளை நான் உன்னை விட்டு ஒதுங்கி விட்டால்?’
‘இந்த விஷயம் தெரிந்து நீ என்னை விட்டு ஒதுங்கி விட்டாலும் நல்லதுதான்; ஒதுங்காமல் என்னை ஏற்றுக் கொண்டாலும் நல்லதுதான்; எப்படிப் பார்த்தாலும் நல்ல விஷயம்தான். அதனால்தான் சந்தோஷம் என்று சொன்னேன்’
‘அதிருக்கட்டும்; நான் சொல்வதைக் கேள்;உன்னை இப்போதும் காதலிக்கவே செய்கிறேன். நீ தொடர்ந்து எஸ்கார்ட்டாக இருப்பதும் இல்லாதிருப்பதும் உன் தனிப்பட்ட விஷயம்; அதில் நான் தலையிட மாட்டேன். எனக்கு நீ வேண்டும்; அது போதும்’என்றேன் நான்.
அதைக் கேட்டு அவள் சிரித்தாள். என் கன்னத்தில் முத்தமிட்டாள்.
‘அசடு, ஐ லவ் யூ. உன்னைக் கல்யாணம் செய்து கொண்ட பின் நான் ஏன் இன்னொருத்தனுக்கு எஸ்கார்டாகப் போக வேண்டும். எனக்குத்தான் நீ ஒருத்தன் எஸ்கார்ட்டாக இருக்கப் போகிறாயே?’ என்று சொல்லி விட்டுச் சிரித்தாள். நானும் தான்.
நான் ஒரு கணம் ஆடிப் போனேன். தண்ணீர் குடித்து விட்டு வருவதற்குள் கணிணி கதையை மாற்றி விட்டதே; இதென்ன அதிசயம் என்று ஒரு கணம் வியந்தேன்.
நீங்கள் எழுதிய முடிவு இந்தியப் பெண்களுக்கு ஏற்ற
மாதிரி இருக்கிறது. இந்த முடிவு சிங்கப்பூர் போன்ற
நாகரிக நாட்டுப் பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும்
என்று ஒரு அடிக்குறிப்பு வேறு. சில கணங்கள் மண்டை குழம்பிப்போன எனக்கு சட்டென்று ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.
கொஞ்ச நாட்களுக்கு முன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு புலம் பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அப்போது அவர் அமெரிக்கக் கணிணிகள் இப்போதெல்லாம் கதை, கவிதைகள் எழுதுகின்றன என்றார் பெருமையாக. அதற்கான மென்பொருளை என்னிடம் காட்டினார். என்னுடைய கணிணியில் அதை இன்ஸ்டால் செய்து டெமோ செய்து காட்டினார். கதைக் கரு; கதாபாத்திரங்களின் பெயர்கள்; கதை போக வேண்டிய இலக்கு போன்ற தகவல்களை க்ணிணிக்குக் கொடுத்து விட்டால் போதும். அது கதையை எழுதி முடித்து விடும். அந்த நிகழ்ச்சியை நான் மறந்து விட்டேன். ஆனால் என் கணிணி மட்டும் மறக்காமல் ஞாபகம் வைத்திருந்து சமயம் பார்த்து வேலையைக் காட்டி விட்டது.
இப்போது கணிணியை கதை தட்டி என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் கதைத் திருத்தி என்று கூட சொல்லலாம் போல் தோன்றுகிறது. பரவாயில்லை, அதனுடைய ஐடியா கூட நன்றாகத்தான் இருக்கிறது, இல்லையா?
* * * *
எம்.ஜி சுரேஷ்,
தொலைபேசி எண்:9884187142
Subscribe to:
Post Comments (Atom)
மிக அருமை.. வாழ்த்துக்கள்
ReplyDelete