மதுரை புத்தகத் திருவிழாவிற்குப் போவது என்பது உண்மையில் ஊர்த்திருவிழாவிற்கு போவது போன்ற உற்சாகம் தரும் எண்ணமாகவே கடந்த 4-5 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. அழகிரி மற்றும் பூப்புனித விழா கட்- அவுட்டுகள் மதுரையின் நிலக்காட்சியின் ஒரு பகுதியாக மாறிவிட்ட போதும். நுண்மையான கலை இலக்கியச் செயல்பாடுகள் கொண்ட வாசகர்கள், எழுத்தாளர்களின் கேந்திரமாக மதுரை வளர்ந்து வருவதும் அதன் வசீகரங்களில் ஒன்று. கழுத்திலும் கையிலும் ஏராளமான நகை அணிந்த ஆண்களுடன் நவநாகரிக யுவதிகளின் நகரமாகவும் மதுரை மாறிக் கொண்டிருக்கிறது. நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் ‘பாரிÕல் அமர்ந்திருந்தபோது அங்கு பெண்களே இல்லையே என்று நண்பரிடம் கேட்டேன். நண்பர் சொன்னார், ‘இதன் நவநாகரிக மாற்றங்கள் ஒரு தோற்றம் மட்டுமே. ஆணாதிக்க சாதிய சமூகப் பண்பாட்டின் மூர்க்கம் கொஞ்சம்கூட குறையாத ஊர் இது’ என்று.
புத்தகக் கண்காட்சிகள் எத்தனை எத்தனை வினோதமான வாசகர்களை, மனிதர்களைக் கொண்டுவருகிறது என்பது பார்த்து தீராத வினோதம். ஒருவர் Òஎனக்கு பழனி பாரதி ரொம்ப ‘க்ளோஸ்’ என்று என்னிடமும், ‘மனுஷ்ய புத்திரன் எனக்கு ரொம்ப க்ளோஸ்’ என்று பழனி பாரதியிடமும் வந்து மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார். நானும் சாருவும் உயிர்மை ஸ்டாலில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது ஒரு அம்மா வந்தார்.
சாருவிடம் ‘நீங்கள் சாருநிவேதிதா தானே.”
‘ஆமா. . .’
‘சார். . . உங்க ஓ. . . பக்கங்கள் சூப்பர்!’
‘அது நான் இல்லை. ஞானி.’
‘ஓ. . . அப்ப ஞானபானு ஸ்டால்ல இருந்த அவர்தான் நீங்கன்னு நினைச்சுட்டேன்.’’
அந்த அம்மா என் பக்கம் திரும்பி ‘மனுஷ்ய புத்திரன் சார் வணக்கம்’ என்றார். சரியான பேர் சொன்னதால் நான் சாருவை நோக்கி ‘உங்களைவிட நான்தான் பாப்புலர்’ என்றேன். அந்த அம்மா அதைக் கவனிக்காமல் அடுத்த கேள்வியைக் கேட்டார். ‘ஆனா, உங்க ஒரிஜினல் நேம் நம்பிராஜன் தானே?’ முத்துக்கிருஷ்ணன் சொன்னார், ‘நவீன எழுத்தாளர்களுக்கு கிடைக்கத் துவங்கியிருக்கும் திடீர் பாப்புலாரிட்டி நிறையப் பேரை பதற்றமடைய வைத்திருக்கிறது. நானும் எழுதணும்னா என்ன செய்யணும்னு நிறையப் பேர் கேட்கிறாங்க. . . நம்மளையெலாம் பார்த்தவுடன் இவனே எழுத்தாளன் ஆயிட்டான், நாம ஆக முடியாதா என்று யோசிக்கிறாங்க’ என்றார் விசனத்துடன்.
மதுரை புத்தகக் கண்காட்சியின் ஆர்வமூட்டும் நிகழ்ச்சிகளில் ஒன்று கவிதை வாசிப்பு. தேவேந்திர பூபதி தலைமையில் நடைபெறும் அந்த நிகழ்வு ‘நவீன கவிதை மொழிக்கு ஆற்றி வரும் பங்களிப்பு’ குறித்து ஏற்கனவே ஒருமுறை எழுதியிருக்கிறேன். தமுக்கம் மைதானத்தில் நானும் தேவதச்சனும் சமயவேலும் கொட்டுகிற மழையில் டீ குடித்தபடி பேசிக்கொண்டிருந்தபோது நாங்கள் நின்றிருந்த கூரை ஒழுகி தேநீர் கோப்பையில் மழை பெய்ய ஆரம்பித்தது (ஜென்). வேறு வழியில்லாமல் கவிதை வாசிப்பு அரங்கிற்குள் ஒதுங்கினோம். ஆனால் அப்படி ஒதுங்கியபோது மழையைப் பார்க்காமல் மேடையைப் பார்ப்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தோம். அப்போது தான் மேடையில் சிறப்புரையாற்றிவிட்டு இறங்கி வந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். பிரியத்துடன் வந்து பேசிவிட்டு அவசரமாக விமானத்தைப் பிடிக்க விரைந்தார் (அந்த அவசரத்திலும் உயிர்மை நூல் வெளியீட்டு விழா தொடர்பாக பத்திரிகைகளில் வெளி வந்த ஒரு புகைப்படத்தைப் பற்றி அங்கதம் மிகுந்த ஒரு வாக்கியத்தைச் சொல்லி விட்டுச் சென்றார்). கவிதை வாசிப்பில் ஒருவர் தனது சொந்தக் கவிதை, பிடித்த தமிழ்க் கவிஞர் கவிதை, பிடித்த பிறமொழிக் கவிஞர்கள் கவிதை என்று வாசிக்க வேண்டும். உமா மகேஸ்வரி வந்தார், என் கவிதையை வாசித்தார். சக்தி ஜோதி வந்தார், என் கவிதையை வாசித்தார். இந்திரா பிரியதர்ஷினி வந்தார், ‘மூத்த கவிஞர் மனுஷ்ய புத்திரனுக்கு வணக்கங்கள்’ என்றார். அருகில் இருந்த சமயவேல் ‘போன வருஷமும் இதுதான் நடந்தது’ என்றார். விடுவாரா பூபதி, Ôஎங்கள் மூத்த முன்னோடி கவிஞர்கள் தேவதச்சன், சமயவேல், மனுஷ்ய புத்திரன் என்று சொல்லி மூன்று பேரின் கவிதைகளையும் வாசித்தார். ஒருகணம் நரைகூடி கிழப்பருவமெய்தி கொடுங் கூற்றுக்கிரையென பின்மாயும் உணர்வில் துவண்டேன். தேவதச்சன் அருகில் இருந்து நான் திடீரென அடைந்த முதுமையை வெகுவாக ரசித்துக்கொண்டிருந்தார். லக்ஷ்மி மணிவண்ணன் கவிதை வாசித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வந்து அருகில் அமர்ந்துகொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் இணக்கமான ஒரு மன நிலையில் இருந்த தருணம் அது.
கைலாஷ் சிவன் ததும்பிக்கொண்டிருந்தார். ‘டேய். . . பிரமிள் பேரைச் சொல்லுங்கடா. . . அவன ஏண்டா மறைக்கப் பார்க்கிறீங்க’ என்று இடையிடையே சப்தமிட்டுக் கொண்டிருந்தார். கூட்டம் அதைக் கவனிக்காத மாதிரி பாவனை செய்தபடி கவிதைகளில் கவனம் செலுத்த முயன்றது. சுகிர்தராணி கவிதை வாசிக்கத் தொடங்கியபோது, கைலாஷ் சிவனின் குரல் அதிகரித்தது. தன்னுடைய செருப்புகளைக் கழற்றி மேடையை நோக்கி நடந்து செல்லும் பாதையில் எறிந்தார். எனக்குப் பதற்றம் அதிகரித்தது. நான் அருகில் இருந்ததால் என்னுடைய தூண்டுதல் என்று நினைக்க அதிகம் வாய்ப்பிருந்ததால் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடலாம் என்று பார்த்தால் வெளியே ஒரே மழை. நாங்கள் அமர்ந்திருந்த வரிசையில் கடைசியில் இருந்த கவிஞர் சின்னச்சாமியின் (துணை ஆணையர், சட்டம், ஒழுங்கு, மதுரை மாநகர்) முகத்தை பரிதாபமாகப் பார்த்தேன். அவர் எல்லா எழுத்தாளர்களிடமும் பிரியமும் இணக்கமும் கொண்ட அருமையான மனிதர். யூனிஃபார்மில் காவலர் புடைசூழ பயமுறுத்தும் தோரணையில் இருந்தாலும் குதூகலமான மனநிலையில் இருந்தார். கைலாஷ் சிவனைச் சமாதானப்படுத்த முயன்றார். கைலாஷ், பிரமிள் பெயரை யாரும் சொல்லாதது பற்றி டெபுடி கமிஷனரிடம் தொடர்ந்து புகார் செய்துகொண்டேயிருந்தார். சின்னச்சாமி மேலேயே அவர் தடுமாறி விழுந்தபோது காவலர்கள் பதற்றத்துடன் ஓடி வருவதும் சின்னச்சாமி அவர்களைப் போகச் சொல்லிவிட்டு கைலாஷை சமாதானப்படுத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கூட்டம் முடிந்ததும் சின்னச்சாமியிடம், ‘என்ன சார், போலீஸ் பாதுகாப்புடன் புரட்டஸ்டா” என்றேன். ‘இவனோட லெவல் தெரியாம அளவுக்கு மீறி வாங்கிக் கொடுக்கிறானுங்கள்ல.. அவனுங்கள உள்ள போடணும்’ என்றார் சிரிப்பு மாறாமல்.
மதுரை புத்தகக் கண்காட்சியை ஒட்டி ஆண்டுதோறும் உயிர்மை ஏற்பாடு செய்து வரும் கூட்டங்களின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஹோட்டல் சுப்ரீமில் எஸ். ராமகிருஷ்ணனின் ஐந்து நூல்களின் வெளியீட்டுக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். செகாவின் மீது பனி பெய்கிறது, காண் என்றது இயற்கை, குறத்தி முடுக்கின் கனவுகள், இருள் இனிது ஒளி இனிது ஆகிய கட்டுரைத் தொகுப்புகளும் அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது என்ற புதிய சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டன. பிரபஞ்சன், சாரு நிவேதிதா, பாரதி கிருஷ்ணகுமார், கலாப்ரியா, அருணன் ஆகியோர் நூல்களைப் பற்றி சிறப்புரை ஆற்றினர். அருணன் ஆய்வாளருக்கு உரிய பாங்கில் தன் கருத்துகளை முன்வைத்தார். கலாப்ரியா எஸ்.ராமகிருஷ்ணனின் கவித்துவம் மிகுந்த வரிகளைச் சுட்டிக்காட்டிப் பேசினார். பாரதி கிருஷ்ணகுமார் பேசியபோது 2 நிமிடங்களுக்கு ஒருமுறை அரங்கம் அதிர்ந்துகொண்டிருந்தது. அவை வெறுமனே நகைச்சுவை துணுக்குகளால் அல்ல. மிக நுட்பமான வாசிப்பிலிருந்து பெருகும் இன்பத்தை அவர் தனது பேச்சு முழுக்க வாசகர்களிடம் பரவச் செய்தார். பிரபஞ்சன் ஒரு எழுத்தாளனின் கதையைச் சொல்லும்போது அவனுக்கே அதைப் புதிதாகத் தோன்றச் செய்வார். அன்றும் அவரது பேச்சு அத்தனை புத்துணர்ச்சி மிகுந்ததாக இருந்தது. சாரு நிவேதிதா பேசத் தொடங்கிய முதல் கணமே பார்வையாளர்களிடம் மிக நெருக்கமான உறவை உருவாக்கிக் கொள்பவர். அதற்குப் பிறகு அது பேச்சு அல்ல, மனப்பூர்வமான அந்தரங்கமான ஒரு உரையாடல். எஸ். ராம கிருஷ்ணன் ஆன்டன் செகாவைப் பற்றி அன்று நிகழ்த்திய சிறப்புரை அவரது மிகச் சிறந்த பேச்சுகளில் ஒன்று. செகாவின் நூற்றி ஐம்பதாம் ஆண்டில் மதுரை என்ற ஊரில் அவரைப் பற்றிய பேச்சை மன நெகிழ்ச்சியுடன் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் கேட்டுக்கொண்டிருந்த காட்சி இலக்கியத்தின் எல்லையற்ற நிலப்பரப்பினை ஒருகணம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
மதுரைக் கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டம் என்னை மட்டுமல்ல, கூட்டத்திலிருந்த ஒவ்வொருவரையுமே வியப்பிலாழ்த்தியது. ஏராளமானோர் நின்றுகொண்டும் அரங்கிற்குள் நுழைய இடமில்லாமலும் வெளியிலும் இருந்தார்கள். தொலைதூரங்களில் இருந்தெல்லாம் வாசகர்கள் வந்திருந்தார்கள். எம்.எஸ். நாகர்கோயிலில் இருந்து வந்திருந்தார். சுரேஷ்குமார இந்திரஜித் சொன்னார், ‘இவர்களில் 90 சதவிகிதம் பேரை மதுரையில் நடக்கும் எந்தக் கூட்டத்திலும் நான் பார்த்ததில்லை. எவ்வளவு இளைஞர்கள், புதிய முகங்கள்... ஒரு புதிய வாசகப் பரப்பு இது.’’ என்று. இந்தக் கூட்டம் நடத்தியதன் மிகப்பெரிய அங்கீகாரமாக, பாராட்டாக இதையே நினைக்கிறேன்.
இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து சென்னையில் இன்னொரு கூட்டத்தை உயிர்மை ஏற்பாடு செய்திருந்தது. செப்டம்பர் 18 ஷாஜியின் இசையின் தனிமை நூல் குறித்து ஒரு விமர்சன அரங்கினை நடத்தினோம். மதுரைக் கூட்டம் பற்றி சுரேஷ்குமார இந்திரஜித் கூறிய வாசகத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டிக்கொள்ளும் விதமாக ஃபிலிம் சேம்பர் அரங்கம் நிரம்பி வழிந்தது.
கூட்டத்திற்கு முன்னதாகப் பல்வேறு விதமான யூகங்களைக் கிளப்பும் பதிவுகளை அக்கூட்டத்திற்குப் பேச அழைக்கப்பட்டிருந்த ஜெயமோகன் தனது வலைப்பதிவில் எழுதி வந்தார். உயிர்மை கூட்டத்தில் தான் ஏன் பங்கேற்கிறேன் என்று அவர் எழுதிய விளக்கம் மிகவும் சுவாரசியமானது. உலகெங்கும் உள்ள தனது கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்ப்பை சமாதானப்படுத்தி Òகவலைப்படாதீர்கள்... இது ஷாஜியின் நட்புக்காக... மனுஷ்ய புத்திரனுக்கு இனி என் வாழ்க்கையில் இடமில்லை’’ என்று வாக்குறுதி அளித்துக்கொண்டிருந்தார் (அருண்மொழி நங்கைக்கு அடுத்த படியாக எனக்கும் ஜெயமோகன் வாழ்க்கையில் இடமிருந்தது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது). ஜெயமோகனின் பார்வதிபுரம் இல்லத்தின் முன்பும் நாகர்கோவில் ஜங்ஷனிலும் ஜெயமோகன் உயிர்மை கூட்டத்திற்குப் போகக்கூடாது என்று அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஜெயமோகன் விமானம் மூலமாக சென்னை வரவேண்டியதாயிற்று. ஜெயமோகன் விளக்கங்களால் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் சமாதானம் அடைந்திருப்பார்களோ இல்லையோ, உயிர்மையின் எழுத்தாளர்களை அகோரப் பசியுடன் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் அவரது புதிய பதிப்பாளர் சிறிய நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார். மேலும் மதுரைப் புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகன் என்னிடம் கை குலுக்கியதையெல்லாம் தனது நல்லியல்பின் அடையாளம் என்று வேறு எழுதியிருந்தார் (கடவுளே, அவருக்குத்தான் ஒவ்வொரு நாளும் அவரைப் பற்றிய எவ்வளவு பெருமைகளை அவர் மனதில் பூக்கச் செய்கிறாய் நீ?). சாரு நிவேதிதா அவருடைய புத்தகத்தைக் கிழித்ததற்கு நான் காரணமாக இருக்கமாட்டேன் என்பது ஜெயமோகனுக்கு நன்கு தெரியும். ஜெயமோகனின் தொண்டர்களைப்போல ஜெயமோகன் முட்டாள் அல்ல. ஆனாலும் தொண்டர்களை உற்சாகப்படுத்த ஏதாவது ஒரு கற்பனை எதிரி வேண்டுமே. மேலும் அவர் என்னுடன் உறவை முறித்துக்கொள்வதாகத் திரும்பத் திரும்ப அறிவிப்பது அந்த முடிவின் மீதான அவரது தடுமாற்றத்தையே காட்டுகிறது. அந்த முடிவை நானும் அவரு மாகச் சேர்ந்துதான் எடுக்க முடியும் என்பது அவருக்குத் தெரியும். வாழ்க்கையில் இடம் பெற்ற ஒருவரை எப்படி ஒரு தரப்பாக டைவர்ஸ் செய்யமுடியும்? இதற்கு முன்பும் அவர் பல முறை உறவை முறித்துக்கொண்டிருக்கிறார். நான் அதைப் பொருட்படுத்தியதே இல்லை. இப்போதும் பொருட்படுத்தவில்லை (அவரும் கொஞ்ச நாளில் அதை மறந்துவிடுவார். இப்போது அதை நினைவில் வைத்திருக்கும்படி அவரது தொண்டர்களால் வற்புறுத்தப்படுவதால் சங்கடப்படுகிறார். தொண்டர்கள் விஷயத்தில் ரஜினி எப்படி நடந்துகொள்கிறாரோ அதே விவேகத்துடன் ஜெயமோகனும் நடந்துகொள்வது நல்லது).
மேலும் ஜெயமோகன் ‘நான் இளையராஜாவைப் பற்றி பேசப்போகிறேன்’ என்று வேறு தன் வலைப்பதிவில் அறிவித்தார். நான் ஜெயமோகனின் தீவிர ரசிகன் என்பதால் அவரது கூற்றுக்கு வலுசேர்க்கும் விதமாக நவீன இலக்கிய உலகின் கொள்கைப் பரப்புச் செயலாளர் நண்பர் விஜய மகேந்திரனுக்கு போன் செய்தேன். ‘விஜய்... ஒரு முக்கியமான விஷயம்... நாளைக் கூட்டத்தில் ஒரு பெரிய ரகளை நடக்கப்போவதாகத் தகவல். . . இளையராஜா ரசிகர்கள் ஜெயமோகன் தலைமையில் நாளை ஷாஜியை கேரோ செய்யப் போகிறார்களாம்... இதற்கான பிளான் ஊட்டிக் கூட்டத்திலேயே தயார் செய்யப்பட்டு விட்டதாம். அனேகமாக ஷாஜிக்கும் எனக்கும் அடி விழலாம் என்று தோன்றுகிறது. எனவே நான் கூட்டத்திற்கு வரமாட்டேன். எனவே எனக்குப் பதில் சாருவை வரவேற்புரை நிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவரும் கேரளாவில் இருந்து விமானத்தைப் பிடித்து வந்துகொண்டிருக்கிறார்’ என்றேன் பதற்றமான குரலில்.
நான் நினைத்தது நடந்தது. அடுத்த 1 மணி நேரத்தில் தொடர்ச்சியாகத் தொலை பேசி அழைப்புகள் வர ஆரம்பித்தன. Ôநாளைக்குக் கூட்டத்தில் ஏதோ பிரச்சினையாமே’ என்று தொடர்ந்து விசாரிப்புகள். ஷாஜியே லைனில் வந்தார்.
‘என்ன சார்... ஏதோ கேள்விப்பட்டேன்.’
‘ஆமா ஷாஜி, ரொம்ப பதற்றமா இருக்கு.’
‘சார், போலீஸ் புரடக்ஷன் கேட்கலாமா?’
‘கேட்கலாம்.. ஆனா என்னன்னு கேட்குறது?’
‘இந்த மாதிரி இளையராஜா பிரச்சினைன்னு...’
‘ஷாஜி, இளையராஜா பத்தி நீங்க எழுதின கட்டுரை..ஜெயமோகன் கூட்டம் பற்றி எழுதியிருக்கும் கட்டுரைகள் என எல்லாத்தையும் போலீஸ்கிட்ட எப்படி எக்ஸ்ப்ளெய்ன் பண்றது? அவனுங்க கடுப்பாகி நம்ம மேலயே ஆக்ஷன் எடுக்க வாய்ப்பிருக்கு.’’
‘சார் இந்த கனிமொழி, தமிழச்சி கிட்டயெலாம் ஏதாவது சொல்லி ஏற்பாடு பண்ண முடியாதா?’
‘அதெல்லாம் சரி வராது ஷாஜி. எனக்கு நிறைய டாக்டர் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. எல்லோரையும் கூட்டத்துக்கு வரச் சொல்லிடலாம். நமக்கு என்ன நடந்தாலும் அவங்க உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சுடுவாங்க.’
ஷாஜி போனை வைத்துவிட்டார்.
கூட்டம் மலேசியா வாசுதேவனுக்கு சிறப்புரை செய்யும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அவரை முதல்முறையாக நேரில் பார்க்கிறேன். அவர் பாடிக் கேட்டு என் இளமைக் காலத்தை நிறைத்த எண்ணற்ற பாடல்கள் அந்தக் காலகட்ட நினைவுகளுடன் நெஞ்சில் அலைமோதின. மேடையில் ஜெயமோகன் எனக்குப் பக்கத்தில் தான் அமரவேண்டியிருந்தது. எனக்கு அவரது பெருந்தன்மைக்கு கிடைக்கும் இன்னொரு சந்தர்ப்பம் பற்றி எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது (விதி வலியது என்பதையும், இந்த உறவை முறிக்கும் விவகாரம் எல்லாம் ரொம்ப சிக்கலானது என்பதையும் அவரது தொண்டர்கள் இன்னொரு முறை உணர்ந்துகொண்டிருப்பார்கள்).
பிரபஞ்சன் தனது உரையை ஆரம்பித்தார், ‘தமிழனுக்கு எப்போதும் தொழுவதற்கு ஒரு கால் வேண்டும்.’ கூட்டத்திலிருந்து பெரும் கரகோஷம் எழுந்தது. ஒரு விமர்சகனின் பரிசீலனைகள் நமது கலையனுபவம் குறித்த பொதுவான முடிவுகளை எவ்வாறு மாற்றக்கூடியது என்பதை நௌஷாத் அலி, மதன்மோகன் என்ற தனது அனுபவங்கள் வழியே விவரித்தார். கலை விமர்சனங்களின் வழியே உருவாகி வளர்கிறது என்பதையும் வெறுமனே தொழுபவர்கள் கலைக்கு வெளியே இருப்பவர்கள் என்பதையும் தனக்கே உரித்தான மிக கம்பீரமான குரலில் அவர் அந்த அரங்கத்தில் பரவச் செய்தார். இதயத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட அந்தப் பேச்சு கூட்டத்தின் மொத்த பாதையையும் தீர்மானித்தது. அடுத்துப் பேச வந்த ஜெயமோகன், மலேசியா வாசுதேவனின் கால்களை தொட்டு வணங்குவதாகக் கூறி தனது உரையை ஆரம்பித்தார். வெகுசன கலையை மதிப்பிடுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி ஒரு கோட்பாட்டுரீதியான தரப்பினை முன்வைத்து விரிவாகப் பேசிய ஜெயமோகன் மக்களின் உணர்வுகளின் வழியாகத்தான் அக்கலைஞர்களை மதிப்பிட வேண்டும் என்றார். (இளையராஜாவுக்குப் பொருந்தும் இதே விதி வெகுஜன கலைஞர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கும் பொருந்தும்.) இறுதியில் ஷாஜி முன் முடிவுகளற்று தனது கட்டுரைகளை எழுத வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் பேச்சினிடையே, ‘இளையராஜா... இளையராஜா’ என்று பெயர் மட்டும் தொடர்பில்லாமல் அடிக்கடி வந்து போனது. எதற்காக அந்தப் பெயர் சொல்லப்படுகிறது என்று யாருக்கும் புரியவில்லை. (கூட்டம் முடிந்ததும் ஒரு வாசகர் சொன்னார்: இளையராஜாவுக்கு ஜெயமோகன் எவ்வளவு சிறந்த எழுத்தாளர் என்று எப்படித் தெரியாதோ அதேபோல ஜெயமோகனுக்கும் இளையராஜா எந்த காரணங்களுக்காக அற்புதமான இசையமைப்பாளர் என்பதும் தெரியாது. இந்தக் கூட்டணியின் பலமே இதுதான்).
அடுத்துப் பேசிய எஸ்.ராமகிருஷ்ணன், “எனக்கு இசைபற்றி எதுவும் தெரியாது. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் பாட்டு மட்டும்தான்” என்று தொடங்கி ஒரு சாமான்ய மனிதனின் வாழ்க்கையை இசை எப்படி இட்டு நிரப்புகிறது என்பதையும் இசை நமக்கு உருவாக்கும் உணர்ச்சிகளையும் மனச்சித்திரங்களையும் பற்றி ஒரு துல்லியமான படிமத்தை தனது பேச்சின் வழியாக உருவாக்கினார்
முத்தாய்ப்பாக இயக்குனர் மணிரத்னம் உரையாற்றினார். இன்று இணையம் எல்லோரும் விமர்சகர்களாகும் ஒரு சூழலையும் வாய்ப்பையும் அளித்திருக்கிறது. இந்தச் சூழலில் கலையைக் கறாராக மதிப்பிடக் கூடிய ஷாஜி போன்ற விமர்சகர்களின் பணி மிகவும் முக்கியமானது என்றார்.
ஷாஜி தனது ஏற்புரையில் இசை தொடர்பான தனது செயல்பாடுகள், அணுகுமுறைகள் குறித்து விரிவாகப் பேசினார்.
கூட்டம் முடிந்து வெளியே வந்தேன். முதன் முதலாக ஷாஜியின் குழந்தையைப் பார்த்தேன். சட்டெனத் தூக்கி அணைத்துக் கொண்டபோது அத்தனை களைப்பும் நீங்கியதுபோல இருந்தது.