Friday, July 8, 2016

விஜய் மகேந்திரனின் 'நகரத்திற்கு வெளியே..' சிறுகதைத் தொகுப்பு குறித்து! - பாலு மணிமாறன்



நான் நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உழன்று உழன்று வாழ்ந்தவன். மாநகர வாழ்க்கையும் பரிட்சயம்தான். சிங்கப்பூரிலும் அதி நவீன மாநகரை ஆசியக் கண்டத்தில் பார்க்க இயலாது. ஒரு தலைமுறையில் கிரமத்திலிருந்து மாநகராக மாறிய அதிசயம் இது. இப்போது இங்குதான் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாசம்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு, போன மாதம்தான் நான் பிறந்த கூளையனூருக்குப் போயிருந்தேன். குக்கிராமமாக இருந்த கூளையனூர், சிறுநகர்போல மாறியிருந்தது. உதடு சிவக்க வெத்தலையை மென்றபடி, கன்றுக் குட்டியைப் பிடித்து நின்றபடி, தாவணியை இடுப்பில் இழுத்துச் செருகிக் கொண்டு, 'நாளைக்கு ஜல்லிக்கட்டு, நீ காளையெல்லாம் அடக்க வேணாம், இந்தா, இந்த கண்ணுக்குட்டியை அடக்கு பார்க்கலாம்..' என்று கிண்டலடித்த அத்தை மகள் பவுனம்மாளை 20 வருஷத்துக்கப்புறம் பார்த்தேன். தலையில் நரைகூடி, 'பேரன், பேத்தியெல்லாம் எடுத்தாச்சு தெரியமா...' என்றாள் நாணத்தோடு. பழைய கிண்டல் அப்படியே மீதமிருந்தது. ஆனால், அக்கிராமம் மாறி விட்டது.
சிறு வயதில் இராயப்பன்பட்டி ஹாஸ்டலில் படிப்பு. கால் பரிட்சை, அரைப்பரிட்சை விடுமுறைக்கு, கம்பத்திலிருந்து திருவள்ளுவர் பஸ் பிடித்து வட சென்னையின் எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு வந்து சேருவேன். அப்பா அங்குத்தான் வேலை பார்த்தார். குடும்பமே அங்கிருக்க, எனக்கு ஹாஸ்டல் வாசம். பொழுது விடிந்தும் விடியாத காலையில், பாரிஸ்கார்னரில் இறங்கி, எண்ணூருக்கு பஸ் ஏறிப் பயணிக்க, மெல்ல வெயிலேறி, பஸ் ஜன்னல் வழியே சுல்லெனக் குத்தும். வழி நெடுக மீன் கூடைகள் ஏறி இறங்கியபடி இருக்கும். அந்த மீன் வாசம்தான், நான் குடும்பமடையும் கதையின் பின்னணி இசை. அது 40 வருடத்திற்கு முந்திய சென்னை. அந்த சென்னை மாறி விட்டது.

எப்படிப்பட்ட நகரமும் ஐந்து வருடத்திற்கொருமுறை தன் முகம் மாற்றலைச் செய்கிறது.' இந்த 40 வருடத்தில் சென்னை எட்டு முறையாவது முகம் மாற்றியிருக்கும். ஒவ்வொருமுறையும் வானம் பார்க்கும் விஸ்தாரத்தைக் கட்டிடங்கள் கொண்டு மறைக்கும் விரல் நீட்டி நிற்கிறது நகரம். 'நகரத்திற்குவெளியே...' தொகுப்பில், நகரங்களும் நகரின் வெளிப்புறங்களும் நகரற்ற வெளிகளும் களங்களான கதைகளை எழுதி இருக்கிறார் விஜய் மகேந்திரன்.

சிறுகதைகள் வீட்டுச் சுவரின் சித்திரங்கள் போல. சோபாவில் அமர்ந்து பார்க்கும் வெவ்வேறு தினங்களில் வெவ்வேறு சிந்தனைகளை விதைத்தபடி இருக்கும் சித்திரங்கள். இன்னொரு வகையில், ஒரு தாள லயத்தில் சில எளிய அசைவுகளில் சோவுற்றிருக்கும் மனதை துள்ளச் செய்யும் தேவராட்டம் போன்ற கதைகள் இவை என்று சொல்லலாம். ஒரு வீதியில் தேவராட்டம் ஆடிச் செல்லும் கூட்டத்தில் சில கதாபத்திரங்கள் விலக, சில கதாபாத்திரங்கள் சேர்ந்து கொள்ள, இவர் நடத்தும் கதை நடனம் தொடர்ந்து மனதைத் துள்ளச் செய்கிறது.

ஆண்கள், பெண்கள், இளையர், முதியோர், நகரத்தினர், நகரமற்றோர் என எல்லோரையும் கதாபாத்திரமாக்கி, மனம்நோக்கி, வரைபடம்மாக்கி வைத்திருக்கின்ற இத்தொகுப்பின் கதைகள். முதல் கதை 'சனிப் பெயர்ச்சி'யே அதிர்ச்சி அதிர்வுகளை எதிர்பார இறுதியில் கசிய விடுகிறது. 'விசாரனை' திரைப்படத்தில் பார்த்த போலிஸின் விகாரமுகத்தின் அவுட் ஆஃப் போகஸ் போலச் சிதைந்து செல்லும் முகமொன்றைக் காண்கிறோம். 'கல்லூரி ஆசிரியர் குடித்துவிட்டு போலீஸுடன் தகராறு என்று என்னைப் பற்றி செய்தி வந்திருந்தது' என்ற வரியோடு கதை முடிந்துவிடுகிறது. ஆனால், அதற்கு மேலும் எழுதி இருக்கிறார். முதல் தொகுப்பு. அடுத்த தொகுப்பென்றால் அப்படித்தான் முடித்திருப்பார்.

'இருத்தலின் விதிகள்' கதையாக இருக்க வாய்ப்பில்லை. உண்மையைக் கதை என்று கதை சொன்ன கதைதான். தமிழ் இருத்தலின் விதி பற்றிய குறியீடாகவும் இக்கதையைப் பார்க்கலாம். எவரோ சேமித்த அரிய தமிழ்நூல்கள் வீதிக்கு வருகின்றன. பழைய கடைக்காரன் கேட்கிறான், 'இவ்வளவு படிச்ச அந்தாளு, பிள்ளைகளுக்கு அதன் அருமை தெரியாமலா வளர்த்திருப்பான்!' அப்படித்தான் வளர்த்திருக்கிறான். நாமும் அப்படியே தமிழ் வளர்கிறோம். நம் எழுத்தைத் தமிழில் படிக்க இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தலைமுறை இருக்குமா என்ற தீவிரமான கேள்வியை அழுத்தமாக, பிரச்சார நெடியே இன்றி நம்முன் வைக்கிறது 'இருத்தலின் விதிகள்'
'சிரிப்பு' வேலையற்றவனின் மாய யதார்தவாதம், நப்பாசை, நம்பிக்கை என எப்படியும் கொள்ளலாம். 'ராமநேசன் எனது நண்பன்' விரும்பியதை வெறுக்கும், வெறுத்ததை விரும்பும் மனதின் மாய ஆட்டம்.
'மழை புயல் சின்னம்' காதல் பறவையின் வண்ணமயமான சிறகுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஓர் இறகு போலிருக்கிறது. காதலுக்குத்தான் எத்தனை எத்தனை வண்ணங்கள். ஒரு கணினி, நம் எழுத்துக்குத் தேர்ந்தெடுக்கச் சொல்லிக் காட்டும் வண்ணங்கலவை போல், நாமே தேர்ந்தெடுத்து பூசிக் கொள்ளத் தக்க வண்ணங்களைக் காட்டி நிற்கும் வழக்கம் காதலுக்கு உண்டு. சர்மிளா, சாரதிக்கு எடுத்து வைத்த ஆடைகளை முத்துக்குமாருக்குத் தரும் தருணத்தில் தன் காதலுக்குக்கான வண்ணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். அதை ஊகித்தறிந்தாலும், அவள் தேர்ந்தெடுக்கும்போது, தன் எழுத்தின் வழி, நம் மனதுக்குள் மெல்லிய மழை பொழிய வைக்கும் திறன் விஜய் மகேந்திரனுக்கு வாய்த்திருக்கிறது.
பிரியா, கேத்ரீன், பாக்கியலட்சுமியை வைத்து பின்னப்பட்ட நாகரிக வலை 'நகரத்திற்கு வெளியே'. 'கற்பு என்பது, பெண்களை ஏமாற்ற ஆண்கள் செய்த கற்பனை' என்று கமலஹாசன் 80களில் சொன்னதை ஞாபகப்படுத்திய கதை. காதலுக்கும் காமத்திற்குமான மெல்லிய கோட்டிற்கு அப்புறமும் இப்புறமும் தாண்டித் தாண்டி விளையாடும் நவீன விளையாட்டை, இத்தலைமுறை எந்த மனச்சிக்கலுமற்று கையாள்வதை காண்கையில் பழைய தலைமுறைக்கு கொஞம்ம் அதிர்ச்சியும் அதீத பொறாமையும் எழலாம். 'மலங்க மலங்க விழித்தாள் பாக்கியலட்சுமி' என்ற ஒற்றை வரியில் அந்தக் கதாபாத்திரத்தைச் சொல்லிவிட்ட திறனுக்கு, விஜய்க்கு திருஷ்டி சுற்றலாம். அதற்கு மேல் என்ன சொன்னாலும் அதற்கு மேல் ஒன்றும் சொல்லி விட முடியாது.
'அடைபடும் காற்று' முதிய தலைமுறையின் துயர்களை அதிகத் துயர் தெரியாமல் கொஞ்சம் கவித்துவத்தோடு சொல்ல முயல்கிறது. பிள்ளைகளின் புலம்பெயர்தலும் பெற்றோரின் தனிமையும் அதிகமாகப் போகும் ஒரு தலைமுறையின் பிரதிநிதித்துவக் கதை. வாழ்வின் இயல்பினை இயல்பாகச் சொல்ல முயன்றாலும் எல்லாம் மீறி, கொஞ்சம் கூடிதல் பிரச்சார நெடி. எனினும் பிரச்சாரங்களால் நிறைந்ததுதானே பழைய தலைமுறையின் கடந்த கால வாழ்க்கை?

'ஊர் நலன்' செல்வேந்திரன், கிராமத்துப் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் பேசிப் பழகி இருக்கக்கூடிய கதாபாத்திரம்தான். இராயப்பன்பட்டி ஹாஸ்டலில் என்கூடப் படித்த நண்பன் ஒருவனை இப்படித்தான் அவனுடைய பதின்ம வயதில் ஊர் பெரிய மனுஷனாக சந்தித்தேன். தாத்தா இறந்ததால், வாரிசு அடிப்படையில் அவனுக்கு வந்த வாய்ப்பு. அந்த சந்திப்பில் அவனை 'டேய்' என்று கூப்பிடுவதா, '..ங்க' என்று கூப்பிடுவதா என்ற குழப்பம் நெடுநேரம் நீடித்தது. வீரபாண்டி கோயில் திருவிழாவின் தொடக்கத்தைச் சொல்லும் சடங்குகளில் அவன் காட்டிய பெரிய மனிதத் தனம் ஆச்சரியமாக இருந்தது. அவனா இவன்? செல்வேந்திரனின் ஆட்டம் ஒரு செய்தியாக மட்டுமே நம்முள் தங்கி விடுவது இக்கதையின் வெற்றியா அல்லது தோல்வியா என சொல்லத் தெரியவில்லை.

'காதுகள் உள்ளவன் கேட்கக்கடவன்' கருப்பசாமி பெரியவரைப் போலவே தள்ளாடித் தள்ளாடி நடந்து, கதைக்குத் தீனி போட இயலாது, அவரைப் போலவே பசியோடு காத்திருப்பதுபோலத் தோன்றுவது எனக்கு மட்டும்தானா? ஒரு கம்பீரத்தின் வீழ்ச்சி என்பது ஓர் ஆவேசத் துயரின் பேரொலி என்பதாகி நிற்கும் கந்தசாமி, எளிதில் கடந்துவிட முடியாத முக்கியமான கேள்வியே.

நல்லவர்கள் இருப்பதால், நல்லவர்கள் இன்னும் இருப்பதாக நாம் நம்புவதால்தான் இந்த வாழ்க்கை இன்னும் இனிக்கிறது. ஆசியா மேன்ஷன் அந்த நம்பிக்கையின் சுடரொலி. ஒரு கதைக்குள்தான் எத்தனை கிளைக்கதைகள். ஆசியா மேன்ஷனுக்கே ஒரு கதை இருக்கிறது. கதை சொல்லியாகத் துடிக்கும் கதாநாயகனுக்குக் கிடைத்த 'பாய்' மாதிரி, நமக்கும் ஒரு பாய் கிடைத்தால், நாள்தோறும் வாழ்வில் பிரியாணிதான் என்ற பசியாறலைத் தரும் கதை. கதையின் முடிவு முடிவாகப் படவில்லை. கதையின் நாயகன் அனுதினமும் சந்திக்கும் சம்பவங்களின் சிறு முடிவாக மட்டுமே பார்க்க முடிகிறது. அவனைச் சந்திக்கக் காத்திருக்கும் ஏமாற்றங்களை அவன் சந்திக்கவிட்டால், அவை ஏமாற்றமடைந்து விடாதா?
கிராமம் நகரம் மாநகரம் என்பதெல்லாம் மனம் சார்ந்த சொல்லாடல்கள் என்று சொல்லாமல் சொல்லும் கதைகளின் குவியலே 'நகரத்திற்கு வெளியே..' ஒரு கிராமத்துப் பஞ்சாயத்தில் பட்டென்று தாலியறுத்து, திருமணத்தைத் தீர்க்கும் வாழ்க்கை முறையை சென்னை போன்ற மாநகர வாழ்க்கையே அதிர்ந்துபோய் பார்க்கும் சாத்தியங்கள் உள்ளதை இக்கதைகளின் வழியே சிந்திக்கிறேன். காமம் என்பதும் தீர்விலா சிக்கலாகவே நாகரிக வாழ்வைப் பிடித்தாட்டுகிறது. அதை வாழ்வின் சாதாரண விஷயமாக்கும் சாத்தியங்கள் இருந்தால், வாழ்க்கை இன்னும் எளிதாகும் வாய்ப்புள்ளதென்றும் மனம் கிளர்கின்றன மகேந்திரனின் வரிகள். முதுமை குறித்து பயம் கொள்ளாது அதை வீரியத்தோடு எதிர்கொள்ளும் வழிகளை ஆராயும் அறிவார்ந்த முதியவர்களின் களமாகவும் இந்தக் கதைகள் இருக்கின்றன.
ஒரு பேருந்து பயணத்தில் பக்கத்தில் அமர்ந்து கதை சொல்லியபடி பயணித்து தன் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்ட புது நண்பனைப் போன்ற விஜய் மகேந்திரன், மறுபடியும் எப்போது பார்ப்பது என்று ஏங்க வைக்கிறார். ஆமாம், எப்போது நண்பரே?